New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் இலக்கணம் - கலைஞர் மு.கருணாநிதி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தமிழ் இலக்கணம் - கலைஞர் மு.கருணாநிதி
Permalink  
 


தமிழ் இலக்கணம் - கலைஞர் மு.கருணாநிதி

  http://tamiljheeva.blogspot.com/2011/08/blog-post.html

ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும்.

இலக்கியமும் இலக்கணமும்

இலக்கியம் தாய்; இலக்கணம் சேய். இலக்கியம் தேமாங்கனி; இலக்கணம் தீஞ்சுவைச்சாறு. இலக்கியம் பெருவிளக்கு; இலக்கணம் அதன் ஒளி. இலக்கியம் எள்; இலக்கணம் எண்ணெய். இந்த உறவு முறையை-பிணைப்பு முறையை நம் முன்னோர் நன்கு அறிந்து தெளிந்திருந்தனர். இதனாலேயே,

`இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே

எள்ளினுள் எண்ணெய் எடுப்பது போல

இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்.'

எனக் கூறிப் போந்தனர். எனவே, இலக்கியப் பெருந் தருவின் நிழலில் எழுந்து நிற்பதே இலக்கணம் என்பது பெறப்படும். இலக்கியமும் இலக்கணமும் வேறுபட்ட நிலையுடையன அல்ல; ஒருவழிப்பட்ட ஒற்றுமையுடையனவே ஆகும்.

இலக்கணத் தோற்றம்:

இலக்கியம் பலவாய்ப் பல்கிப் பெருகி வளரத் தலைப்படும் காலத்தில் மொழியினை ஒழுங்கு படுத்த எண்ணும் மூதறிவாளர் கண்ட முறையே இலக்கணமாகும். இவர்கள், தாம் வாழும் காலத்திற்கும் அதற்கு முன்பும் உள்ள மொழி வழக்கு அனைத்தையும் அறிந்து வகைப்படுத்திக் கூற முயல்வார்கள். இம்முயற்சியின் விளைவே இலக்கணத் தோற்றம் எனலாம். தொல்காப்பியர் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி இலக்கணம் வகுத்தார் எனச் சிறப்புப் பாயிரம் செப்புகின்றது. பாணினிமுனிவர், வேதம் முதலிய வடமொழி நூல்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றின் சாரத்தைப் பிழிந்து பாணினியமாக வடித்துக் கொடுத்தார் என்று கூறுவர். எனவே நூல்கள் பல எழுந்த பின்பே நூல்களின் பண்பு நுவலும் இலக்கணங்களும் தோன்றியிருத்தல் வேண்டும். இதுகாறும் கூறியவற்றைக்கொண்டு இலக்கியங்களின் மொழியமைப்பைக் கொண்டு மட்டும் இலக்கணம் தோன்றியது என முடிவு கட்டி விடுதல் கூடாது. இலக்கணத் தோற்றும், இலக்கியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதன்று. வழக்கு மொழியின் வாழ்வையும் வளத்தையும் மதித்து அதனையும் தழுவி ஒழுகும் உயர்வுடையது. இதனால்தான், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், `வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித்' தொல்காப்பியம் தொகுக்கப் பெற்றது என அந்நூலின் இயல்பினை எடுத்துரைக்கின்றது. இலக்கணப் புலவர்கள் இலக்கிய அமைப்பினை மட்டும் தழுவி, உலக வழக்கினை உதறித் தள்ளிவிட வேண்டும் என்ற உள்ளம் படைத்தவர்கள் அல்லர். அவர்களது பரந்த நோக்கமெல்லாம் மொழி ஒரு திறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதே. இதனால், அவர்கள், தம் காலங் கடந்த புலமையை ஒரு கட்டுக்குள் அடக்கிக் கொண்டு வாழாமல், இரு வேறு வழக்கின் இயல்பினையும் அறிந்து ஏற்பன ஏற்றுத் தள்ளுவன தள்ளி இலக்கணப் படைப்புக்களை ஈந்துள்ளார்கள்.

இலக்கணம் - சொல்லாராய்ச்சி

இலக்கணம் என்னும் சொல், லக்ஷணம் என்னும் வடமொழிச் சொல்லின் சிதைவு என்பர். ஆனால் வடமொழியில் நாம் கருதும் இலக்கணத்தை லக்ஷணம் என்று சொல்வதில்லை. வியாகரணம், சப்த சாஸ்திரம் என்று கூறுவார்கள். இதனால் இலக்கணம் என்னும் சொல், லக்ஷணம் என்பதன் சிதைவு என்பது பொருந்தாது. இலக்கு என்னும் தமிழ்ச்சொல், அணம் என்னும் விகுதிபெற்று இலக்கணம் என ஆயிற்று என்று கோடலே பொருந்தும். இச்சொல் சிறந்த தமிழ்ச்சொல்லே; இலக்கணம் என்ற சொல்லினை முதன் முதல் வழங்கியவர் தொல்காப்பியனாரே ஆவர். இவர், இச்சொல்லினை, `பல பொருளை உய்த்துணர்ந்து அவற்றின் இயல்பினை உள்ளவாறு அறிவித்தற்குக் காட்டப்படும் வரையறை' என்ற பொருளிலேயே ஆட்சி செய்துள்ளார். சிலர், புலம் என்னும் சொல், தமிழ் இலக்கணத்தைக் குறிக்கும் என்பர். இதற்குச்சான்றாகப் `புலம் தொகுத்தோனே போக்கறுபனுவல்' என்னும் பனம்பாரனார் கூற்றைக் காட்டுவர். வேறு சிலர், இயல் என்பது இலக்கணத்தினைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பர்.

இலக்கணத்தால் ஏற்படும் நன்மை

இலக்கணத்தை ஏன் படிக்க வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மை என்ன? என்று இன்று சிலர் கேட்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்ற விடையினை அளிக்க வேண்டியது நம் பொறுப்பாகும்.

1.இலக்கணத்தால் என்ன நன்மை என்பதற்கு ஆறுமுக நாவலர் அவர்கள், பிழையறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம் என அழகாக விடை கூறியுள்ளார்கள். மனிதன், தன் எண்ணத்தினை வெளிப்படுத்தப் பயன்படும் கருவிகளுள் எழுத்தும் பேச்சும் தலைசிறந்தன. இவ்விரண்டுமின்றேல் வாழ்வேது? வளர்ச்சியேது? இத்தகைய வாழ்வோடு இணைந்த பேச்சினையும் எழுத்தினையும் ஒழுங்குபடுத்தித் தரும் சாதனமாக இலக்கணம் இலங்குகின்றது.

2.எழுத உதவுவதோடு படிக்கவும், உதவுவது இலக்கணமாகும். இலக்கண அறிவு இன்றேல் ஒரு நூலையும் நாம் படித்தல் இயலாது. இந்த முடிபு, தமிழினைத் தாய் மொழியாகக் கொண்ட நமக்கு அவ்வளவு எளிதில் புலப்படாது. ஏனெனில், தமிழ், வழக்கில் இருக்கும் வளமான மொழி. ஆனால் வடமொழி, இலத்தீன், கீரீக் முதலியவற்றில் உள்ள நூல்களை உணர வேண்டுமாயின், இலக்கண அறிவு மிகமிக இன்றியமையாததாகும். அப்பொழுதுதான், அம்மொழிகளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

3.பொருளினைத் தெளிவாக அறிந்து கொள்ளுதற்கு உரியதும் இலக்கணம் ஆகும். இம்முறையில் இலக்கணம் செய்யுள் வழக்குக்கு மட்டுமன்று; பேச்சு வழக்குக்கும் இன்றியமையாதது என்பதனை அறிதல் வேண்டும். உதாரணமாக ஒன்றனைக் காண்போம். வாழைபழம் என்பதற்கும் வாழைப் பழம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. வாழைபழம் என்பது, வாழையும் பழமும் என உம்மைத் தொகையாகப் பொருள்படும். வாழைப்பழம் என்பது வாழையினது பழம் என வேற்றுமைத் தொகையாகப் பொருள்படும். இந்த வேறுபாட்டுணர்ச்சியை அறிந்து கொள்ள இலக்கணம் உதவுகின்றது; நன்மை செய்கின்றது.

4.மொழியினைக் கட்டிக்காத்துச் செம்மொழியாக்கும் பேராற்றலும் இலக்கணத்திற்கு உண்டு. ஒரு மொழி, பல்வேறு கிளை மொழிகளாகப் பிரிந்து போய்விடாமல், ஒருமொழி என்ற கூட்டுக்குள் நிறுத்திவைக்க இலக்கணம் முயல்கிறது. இப்பணியில் இலக்கணம் மன்னவனைப் போல ஆட்சி செய்கிறது. தமிழைப் பேசுவோர் எங்கிருந்தாலும், எவ்வாறு பேசினாலும் எழுத்துலகில் ஒன்றுபட்டு நிற்கக் காண்கிறோம். பேச்சு மொழி புரியாவிடினும் எழுத்து மொழி இனிமை தரப் பார்க்கிறோம். இதற்குக் காரணம், எழுத்து மொழியில் ஏற்பட்ட ஒற்றுமையேயாகும். இவ்வொற்றுமை இலக்கணத்தால் விளைந்தது எனலாம். இலக்கணம் மட்டும் இல்லாதிருக்குமானால், இன்றிருக்கும் பேச்சுத்தமிழ், எத்துணையோ கிளைமொழிகளாகத் தனித்தனி புரிந்து விடும். இந்தப் பிரிவைத் தடுத்து, ஒற்றுமையை நிலை நிறுத்துவது இலக்கணமாகும். இக்கொள்கையினைச் சில மொழி நூலார்கள் ஒப்பமாட்டார்கள். பேச்சுத் தமிழுக்கும் இலக்கணம் கண்டு அதனையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் `பேச்சுத் தமிழ்க் காதல்' எத்தகையது என்பது புரியவில்லை. தமிழில், எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் இடைவெளி கொண்டவனாய், இருவேறு மொழிகள் போன்றனவாய்ச் செல்லவில்லை. பெரும்பாலும் ஒற்றுமைப்பட்டே செல்கின்றன. மேலும் பேச்சுத் தமிழ், சார்ந்திருக்கும் இடத்தால் வேறுபாடு சிறிது அடைந்துள்ளது. இப்பேச்சுத் தமிழினை அப்படியே எழுதுதல் வேண்டும் என எண்ணி எழுதியவர்கள் ஏற்றம் பெறவில்லை; வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பேச்சுத் தமிழை வளர்த்து அதனால் பல கிளை மொழிகள் உருவாக மொழியியலார்கள் வழி வகுத்துக் கொடுத்து விடுதல் கூடாது.

இலக்கணம் சட்டமா?

இலக்கணம் மொழியின் சட்டம்; அதன்படி நடக்க இயலாது எனக் கருதிச் சிலர் அஞ்சுகின்றனர். மற்றும் சிலர், இலக்கணம் சட்டமே; அது வாழ்வின் உயிர்நாடி எனக்கருதி அடிமையாகின்றனர். முன்னவர் மொழியறியாதவர்; பின்னவர் வாழ்வறியாதவர். இலக்கணத்தினைக் கண்டு அஞ்ச வேண்டியதும் இல்லை. இலக்கணத்திற்கு அடிமையாக வேண்டியதும் இல்லை. இலக்கணம் மொழியின் பிரிவு; கலங்கரை விளக்கம்; சட்டமன்று. சட்டம் இவ்வாறு நட, இன்றேல் குற்றம் என ஆணையிடும். இலக்கணம் ஆணையிடாது. இவ்வாறு செல்லுதல் மரபு; இதனை விலகியும் தேவை வரும்போதும் செல்லலாம் எனத் துணை நிற்கும்.

இலக்கணத்தை அரசியல் சட்டம் போல ஆக்குவோர் மொழியின் நிலையறியாதவரே ஆவர். இவர்களால் ஏதும் செய்ய இயலாது; எழுதவும் இயலாது. சிறந்த இலக்கணப் புலவன் எழுத்தாளனாக முடியாது என்று இயம்புவார்கள். இது முற்றிலும் உண்மை. இலக்கணத்தை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு சட்டம் என எண்ணிக் கொண்டு பேசவும் எழுதவும் முற்படுவோர், பேசவும் முடியாது; எழுதவும் முடியாது. அவ்வாறு இலக்கண அளவுகோலைக் கொண்டு எழுதவும் பேசவும் துணிந்து விடுவார்களேயானால், அவர்கள் பேசும் பேச்சில், எழுதும் எழுத்தில் உயிர் இருக்காது; அமைப்பு இருக்கும்; அழகு இருக்காது. இதனால்தான், `காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று' எனச் சொல்லி வைத்தார்கள். யாப்பிலக்கணத்தை வைத்துக் கொண்டு, ஒருவன் கவிதையாக்கத் தொடங்கினால் அக்கவிதை, கவிதையாகாது. எலும்புச் சட்டகமாய் விடும்.

இலக்கணம் வேண்டாம் எனச் சொல்லுவோர் எழுத்திலும், பேச்சிலும் அவர்களையறியாமலே இலக்கணம் அமைந்துள்ளது. எழுத்திற்கும் பேச்சிற்கும் ஏற்ற அமைப்பு முறை இன்றேல், வனப்பிருக்காது. ஆற்று வெள்ளம், கரைக்கு உட்பட்டுச் செல்லுமானால் கவின்பெறும்; இன்றேல் தாறுமாறாக ஓடிச் சென்று வறண்டொழியும். இலக்கணம் வெள்ளத்திற்கு இடும் கரை; கரை வேண்டாம் எனச் சொல்வோர் வளம் வேண்டாம் எனச் சொல்லுபவர் ஆவார். இவர்களே இலக்கணம் வேண்டாம் எனச் சொல்லி உள்ளம் சாம்புபவர்கள். இவர்கள் இலக்கணம் சட்டமன்று; அமைதி நெறி என உணர்ந்தால் இவ்வாறு கூற மாட்டார்கள்.

இலக்கணம் என்றும் ஒரே இயல்பினதாய் இருக்க வேண்டும் என எண்ணி இறுமாந்தவர்கள் அல்லர் நம் முன்னோர். மொழியின் வாழ்வும் கால வெள்ளத்தின் போக்கும் அறிந்தவர்கள்; மொழி உயிருள்ளது; வளரும்; மாறும் எனக் கண்டவர்கள். இதனால் இலக்கணம் செய்யும்போது, புறனடை அமைத்துப் போந்தார்கள். நன்னூலார், `பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' எனக் கூறுவார். இத்தகைய இலக்கணம் நம்முன்னோர் அறிந்து தெளிந்து அமைத்த மொழியமைப்பு என்றும் யாவரும் ஏற்றிப் போற்றும் இயல்பில் அமைந்தது ஆகும்.

 



-- Edited by Admin on Friday 23rd of August 2019 02:18:10 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: மு.கருணாநிதி
Permalink  
 


தமிழ் இலக்கணம்

தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பாகுபாடு களையுடையது. முத்தமிழ், எனப் போற்றும் பெருமையுடையது. `முத்தும் முத்தமிழும் தந்து முந்துமோ வானுலகம்?' என இறுமாப்போடு கேட்பார் கம்பர். இம்முத்தமிழுக்கும் இலக்கணம் கண்டனர் நம்முன்னோர். கிடைக்காத அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணமும் அமைத்தனர். ஆயினும் இயற்றமிழ் இலக்கணமே, இலக்கணம் என்னும் பெயருக்குத் தனியுரிமை பூண்டதாய் விளங்குகின்றது.

இயற்றமிழ் இலக்கணம்

செய்யுளும் உரைநடையும் ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். இப்பிரிவில் இலக்கியமும் அடங்கும். இலக்கணமும் அடங்கும். செந்தமிழால் இயன்ற செய்யுள்களும் உரைநடையும், கொடுந்தமிழால் அமைந்த செய்யுள்களும் உரைநடையும் இயற்றமிழே ஆகும். இத்தமிழின் இலக்கணத்தையே தமிழ் மக்கள் பெரிதும் வளர்த்துள்ளனர். தமிழின் உயிர்க் கிழவன் தொல்காப்பியன் இத்தமிழுக்கே இலக்கணம் கண்டான். இலக்கணப் பிரிவு தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்று பிரிவில் இலக்கணங்களைக் கூறியுள்ளார். இம்மூன்றினையும் மூன்று இலக்கணம் எனக் கொள்வோம். தொல்காப்பியப் பொருளதிகாரம் மிக விரிவுடையது. இப்பகுதியில், பொருள், உவமை, யாப்பு என்பன பற்றியும் கூறுகின்றார். இம்மூன்றினையும் பொருளிலக்கணம், அணியிலக்கணம், யாப்பிலக்கணம் என மூன்று தனி இலக்கணங்களாகக் கொண்டால் எழுத்தும், சொல்லும் இயையத் தொல்காப்பியம் ஐந்திலக்கண நூல் ஆகும். ஐந்திலக்கணமாவன: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன. தொல்காப்பியம் ஐந்திலக்கணமாகக் கருதப்படுவதும் உண்டு என்பது, பேராசிரியர், `யாப்பதிகாரம் எனச் செய்யுளியலைப் பிறர் கூறுவர்' என்ற காட்டுதலாலும், சேனாவரையர் `உவமையியலை அணியியல்' எனச் சுட்டுதலாலும் பெறப்படும். இவ் ஐந்திலக்கணத்துள் ஒரு பகுதியான பொருளை அகப் பொருள், புறப்பொருள் என இரண்டாகக் கொண்டால் ஆறு இலக்கணம் என்று கூடக் கூறலாம். பிற்காலத்தில் வளர்ந்த பாட்டியலைச் செய்யுளின் ஒழிபு எனக் கொண்டு, செய்யுளிலக்கணம், பாட்டியலிலக்கணம் என இரண்டாகப் பிரித்து, ஏழு இலக்கணம் என்று கொள்வது, பெரிதும் தவறாகிவிடாது. இன்று தமிழில் ஏழு இலக்கணங்களும் காணப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியைத் தனித்தனியாகக் காண்போம். தொல்காப்பியருக்கு மூன்று இலக்கணமாகக் கொள்வதே உடன்பாடு என்றும் ஐந்திலக்கணமும் உடன்பாடு அன்று என்றும் கூறுவர்.

ஐந்திலக்கண நூல்கள்

தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன ஐந்திலக்கண நூல்களாகும். இவற்றுள் தொல்காப்பியத்தை ஐந்திலக்கணம் எனக் கூறுதல் மரபன்று. ஆயினும் ஐந்திலக்கணமும் இதன்கண் உண்டு. வீரசோழியம் பொருளை இரண்டு கூறாகக் கொண்டு இலக்கணமும் புறப்பொருள் இலக்கணமும் உணர்த்துகின்றது. இலக்கண விளக்கம் அகப்பொருள், புறப்பொருள், பாட்டியல் இவற்றின் இலக்கணமும் கூறுகின்றது. தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் என்பன பாட்டியல் இலக்கணமும் கூறுகின்றன. சாமிநாதம் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூல் முழுதும் வெளிவரவில்லை. தமிழ் நெறி விளக்கம் என்னும் நூலும் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூலில் அகப்பொருள் பகுதியே கிடைத்துள்ளது. பிற பகுதிகள் கிடைக்கவில்லை. நன்னூலும் ஐந்திலக்கண நூல் என்று கூறுவர். தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் என்னும் நூலும் ஐந்திலக்கணம் உணர்த்துவது என்பர். இனி ஒவ்வோர் இலக்கணப் பிரிவு பற்றியும் காண்போம்.

எழுத்தும் சொல்லும்

தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் ஆய்ந்தார்; பொருளும் ஆய்ந்தார். ஆனால் பின் வந்தோர் எழுத்தும் சொல்லுமே சிறப்பாகக் கருதத் தக்கன என எண்ணினர். இந்நிலையில் எழுத்தும் சொல்லும் பற்றி மட்டும் இலக்கணங்கள் தோன்றின. கி.பி. 12-ம் நூற்றாண்டளவில் எழுத்தும் சொல்லும் உணர்த்தும் நேமிநாதம் தோன்றியது. நன்னூல் கி.பி. 13-ம் நூற்றாண்டில் எழுந்தது. இந்நன்னூல் ஐந்திலக்கணமும் உணர்த்துவது எனக் கொண்டாலும், எழுத்தும் சொல்லுமே நிலைத்தன.

எழுத்தும் சொல்லும் இலக்கணமேயாயினும் சொல்லிலக்கணமே இலக்கணம் எனக் கருதினர். வடமொழி வாணர்கள் சொல்லிலக்கணத்தையே வியாகரணம் எனக் கொண்டனர். வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் சொல்லக்கணத்தையே பெரிதும் ஆராய்ந்தன. கி.பி. 17-ம் நூற்றாண்டில் எழுந்த பிரயோக விவேகமும், இலக்கணக் கொத்தும் சொல்லிலக்கணம் பற்றியே விரிவாக விளக்கின.

எழுத்தும் சொல்லும் உணர்த்தும் நூல்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன.

அகப்பொருள் இலக்கணம்

பொருளதிகாரம் கிடைக்காததால் எழுந்த இலக்கண நூலே இறையனார் களவியல் என அந்நூல் உரை கூறுகின்றது. இறையனார் களவியல் தோன்றிய காலத்தில் எழுத்தும் சொல்லும், யாப்பும் கிடைத்தன. பொருள் கிடைக்கவில்லை; ஆதலால் இறையனார் களவியல் காண வேண்டிய நிலைமை ஏற்பட்டது என அறிகிறோம். இக்காலத்தில் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நான்கு வகையாக ஆராயப்பட்டது என்று தோன்றுகிறது.

மேலும் பொருள் என்பது அகப்பொருளே என்பதும் நாம் அறியவேண்டும். பொருளதிகாரம் வல்லாரைக் காணோம் என்று வருந்தியவர்கள் இறையனார் களவியல் கண்டனம் என அகப்பொருள் இலக்கணத்தையே பொருளாகக் கருதினர். இறையனார் களவியல் தோன்றிய காலமுதலே அகப்பொருள் தனியாக வளரத் தொடங்கியது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் நம்பியகப் பொருள் தோன்றியது. இந்நூலுக்கு முற்பட்டது எனக் கருதப்படும் திருக்கோவையாரில் அகப்பொருள் துறைகள் அமைந்த சூத்திரங்களும், துறைகளை விளக்கும் கொளுக்களும் காணப்படுகின்றன. இவை, யாரால் இயற்றப்பட்டன என்று புலனாகவில்லை.

பின்வந்த பழனிக்கோவையிலும் இவ்வமைப்பு காணப்படுகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மாறனகப்பொருள் தோன்றியது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற இலக்கண விளக்கம், தொல்காப்பியத்தினையும் நம்பியகப் பொருளையும் பின்பற்றி அகப்பொருள் இலக்கணம் வகுக்கின்றது. முத்துவீரியம், தொன்னூல் விளக்கம் என்பனவும் அகப்பொருள் இலக்கணத்தினைக் கூறின. இறையனார் களவியலை ஒட்டிக் களவியற்காரிகை என்னும் நூலும் இயற்றப் பெற்றது. பரிமேலழகர் முதலியோருக்கு முற்பட்ட இந்நூல், அகப்பொருள் இலக்கணம் உணர்த்துகின்றது.

தொல்காப்பியர், அகப்பொருள் இலக்கணத்தினை வகுக்கும்போது, ஒவ்வொரு பாடலும் ஒன்றற்கொன்று தொடர்பின்றித் தனித்தனி நாடக பாத்திரங்களின் கூற்றாக அமைந்த நிலைக்கே இலக்கணம் கூறுகின்றார். இதனால் தொல்காப்பியத்தில் கூற்று உண்டேயன்றித் துறையில்லை என அறியலாம். பின் வந்தோர் நாடக பாத்திரம் பேசுதல்போல அமைந்த நிலையினின்றும் வேறுபட்டுத், துறைகளாகப் பகுத்து, ஒரு தொடர்கதை போல இலக்கணம் கண்டார்கள். இதனால் பல கோவை இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்தன.

அகப்பொருள் இலக்கணம் கூறும் நூல்கள்: தொல்காப்பியம், இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம், வீரசோழியம், நம்பியகப்பொருள், களவியற்காரிகை, மாறனகப் பொருள், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன. இவையன்றித் திருக்கோவையார், பழனிக்கோவை ஆகிய நூல்களில் உள்ள நூற்பாக்களும் அகப்பொருள் இலக்கணம் கூறுகின்றன.

புறப்பொருள் இலக்கணம்

தொல்காப்பியம் புறத்திணையியல், புறப்பொருள் இலக்கணம் பற்றிப் பேசுகின்றது. இதன்பின் பன்னிருபடலம் எழுந்தது. பன்னிரு படலத்தின் வழிநூலாகப் புறப்பொருள் வெண்பாமாலை கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் பின் தனியாகப் புறப்பொருள் நூல்கள் தோன்றவில்லை. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் என்பன ஓரளவு புறப்பொருளைப் பற்றிய இலக்கணம் கூறுகின்றன. வீரசோழிய உரைகாரர் மேற்கோளாகக் காட்டும் புறப்பொருள் பற்றிய நூற்பாக்கள் தனி நூலைச் சார்ந்தனவா? அவர் பாடியனவா? என்பது தெரியவில்லை.

புறப்பொருள் இலக்கணத்தைப் பொறுத்தமட்டில் புறப்பொருள் வெண்பாமாலையே சிறப்புற்று விளங்குகின்றது. வேறு புறப்பொருள் இலக்கண நூல்கள் தோன்றாமைக்கு உரிய காரணம் விளங்கவில்லை. ஒரு வேளை, காதல் பாடல்களும் - ஆன்மீக இலக்கியங்களும் போதும் என நினைத்தார்களோ, என்னவோ? அறியோம். புறப்பொருள் இலக்கியங்களும் மிகுதியாகத் தோன்றவில்லை என்பதனை இங்கு நாம் சிந்தித்தல் வேண்டும். பொதுவாக மனிதனை விலங்காகவும் மனித இதயத்தைக் கல்லாகவும் ஆக்கக்கூடிய போர் முறைகளில் கவிஞர்களுடைய உள்ளம் யாப்பிலக்கணம்

தொல்காப்பியம் செய்யுளியல் மிக விரிவுடையது. இவர் காலத்திலேயே பலர் யாப்புப் பற்றித் தனியாக ஆராய்ந்திருக்க வேண்டும். தொல்காப்பியர் பல இடங்களில் `யாப்பறி புலவர்' எனச் சுட்டுதல் இதற்குச் சான்றாகும். தொல்காப்பியரோடு ஒரு சாலை மாணவர் எனக் கூறும் காக்கைப்பாடினியார் யாப்பிலக்கணம் செய்ததாக அறிகிறோம். காக்கைப்பாடினியார் என்னும் பெயருடையார் இருவர், சிறுகாக்கைப்பாடினியம், பொருங்காக்கைப்பாடினியம் என்னும் இரண்டு நூல்கள் இயற்றினர். இவர்கள் பல்லவர் காலத்தினர் என்பர். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கலமும். யாப்பருங்கலக் காரிகையும் தோன்றின. இந்நூலுரைகளால் பல யாப்பிலக்கண நூல்களை அறிகிறோம். அவற்றை நூலின் இறுதியில் உள்ள பட்டியலில் காண்க

 பாவிற்கு இலக்கணம் கூறுதற்குப் பதிலாக அப்பாவின் வகைகளுக்கு எடுத்துக் காட்டும் விளக்கமும் அளிக்கச் சில நூல்கள் தோன்றின. மாறன் பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, பல்சந்தப் பரிமளம், திருவலங்கற்றிரட்டு என்பன இத்தகைய நூல்கள். விருத்தப்பாவியல் என்ற நூல், சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தது. இது, வசனத்தில், விருத்தத்தை வடமொழி மரபு பற்றி ஆராயத் தொடங்கியது. வண்ணங்களின் இலக்கணம் கூறும் நூலினைத் தண்டபாணி சுவாமிகள் `வண்ணத்தியல்பு' என்னும் பெயருடன் செய்தார். இந்நூல் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

செய்யுள் இலக்கணம் கூறும் நூல்கள்:- தொல்காப்பியம், யாப்பருங்கலம், காரிகை, வீரசோழியம், பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், திருவலங்கற்றிரட்டு, பல்சந்தப் பரிமளம், விருத்தப்பாவியல், வண்ணத்தியல்பு முதலியன.

அணியிலக்கணம்தொல்காப்பியர் உவம இயலில் உவமைக்கே முதலிடம் கொடுத்தார். இவ்வுவமையின் வேறுபாடுகளே ஏனைய அணிகள் என்பது அவர் கருத்து. பிற்காலத்தில் அணியிலக்கண ஆராய்ச்சி விரிந்தது. வடமொழியின் பயனால், இவ்வாராய்ச்சி பரந்துபட்டது. வடமொழிக்காவ்யாதர்சத்தை அடியொற்றித் தமிழில் தண்டியாசிரியர் அணிநூல் செய்தார். அவருக்கு முன் அணியியல் என்னும் பெயரால் நூல் ஒன்றும் இருந்தது. வீரசோழிய ஆசிரியர் 35 அணிகள் பற்றி விளக்குகின்றார். தண்டியலங்காரமும் 35 அணிகள் பற்றிக் கூறுகின்றது. ஆனால் வீரசோழியமும் தண்டியலங்காரமும் கூறும் அணிகளில், சில வேறுபாடுகள் உள்ளன. இலக்கண விளக்க நூலாசிரியர், தண்டியாசிரியரைப் பின்பற்றி 35 அணிகளே கொண்டார். மாறனலங்காரம் 64 அணிகளைப் பற்றிக் கூறுகின்றது. வடமொழிச் சந்திராலோகத்தையும் அதன் உரையான குவலயானந்தத்தையும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தமிழில் மொழி பெயர்த்தனர். இவை 100 அணிகள் பற்றிப் பேசுகின்றன. முத்துவீரியம் 58 அணிகள் பற்றிக் கூறுகின்றது.

அணியிலக்கணம் கூறும் நூல்கள்:-தொல்காப்பியம், வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சந்திராலோகம், குவலயானந்தம் என்பன.

பாட்டியல்

யாப்பிலக்கணத்துள் பாட்டியல் அடங்கும். இப்பாட்டியல் ஆராய்ச்சியினை யாப்பின் ஒழிபியல் என்று கூடக் கூறலாம். இவ்வாராய்ச்சியினை இரண்டு கூறாகப் பகுத்து விளக்கம் கண்டனர். முதற்பகுதியில் பாட்டுக்கும் பாடப்படுவோனுக்கும் உரிய பத்துப் பொருத்தங்கள் ஆராயப்பெறும். இப்பொருத்தங்கள் சோதிட நூலார் கூறும் மணப் பொருத்தங்கள்போல, இலக்கண நூலார் கூறும் இலக்கியப் பொருத்தங்களாகும். அவை: மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உணவு, வருணம், நாள், கதி, கணம் என்னும் பொருத்தங்கள். இவற்றோடு நாழிகைப் பொருத்தம், பெயர்ப்பொருத்தம், புட்பொருத்தம் என்பனவற்றையும் சிலர் சேர்த்துக் கூறுவர். இப்பொருத்தங்கள் பாட்டுக்கும் பாடப்படுவோனுக்கும் உரியது என்பதனை,

`விரித்த பாமகட்கும் வேட்கும் இறைக்கும்

பொருத்தம் ஈ.ரைந்து போற்றல் வேண்டும்'

என்பதனால் உணரலாம். இப்பொருத்தங்கள் ஒன்றப் பாடினால் பாடப்பெறுவோர் நன்மையடைவர். இன்றேல் அவர்கள் செல்வம் இழப்பர்; நோய் அடைவர்; சுற்றத் தொடர்பு நீங்குவர்; இறப்பும் எய்துவர். அவர்களுக்குச் சந்ததி ஏற்படாது. கடவுளைப் பாடும் போதும் பொருத்தங்கள் இல்லாமல் பாடினால், பாடுவோர் துன்பம் அடைவர் எனப் பாட்டியல் நூல்கள் பகர்கின்றன.

பொருத்தங்களின் வீழ்ச்சி

பத்துப் பொருத்தங்களுள் மங்கலப் பொருத்தம், சொற்பொருத்தம் என்னும் இரண்டும் சொல் நோக்கியன. கணப்பொருத்தம் சீர்நோக்கியது; ஏனைய பொருத்தங்கள் எழுத்து நோக்கியன. இப்பொருத்தங்களைப் பற்றித் தொல்காப்பியர் ஏதும் கூறவில்லை. வெண்பாப் பாட்டியல் தோன்றிய கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குச் சற்று முன்பே இம்முறை ஏற்படத் தொடங்கியிருத்தல் வேண்டும். யாப்பருங்கல விருத்தியில், ஆனந்தக் குற்றம் என்பது அறுவகைப்படும் என விளக்கப்பட்டுள்ளது. இதனால் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே இவ்வாராய்ச்சி தோன்றிவிட்டது என்னலாம். இக்கொள்கை வடநூல் மரபினைத் தழுவி எழுந்தது என்பர். இக்கொள்கையினைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் ஏற்கவில்லை. அவர்களுக்கு இக்கொள்கை உடன்பாடும் அன்று. நச்சினார்க்கினியர், பத்துப்பாட்டுரையில், `நூற்குற்றம் கூறுகின்ற பத்து வகைக் குற்றத்தே, தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்னும் குற்றத்தைப் பின்னுள்ளோர், ஆனந்தக் குற்றம் என்பதோர் குற்றம் என்ற நூல் செய்ததன்றி, அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் இக்குற்றம் கூறாமையில், சான்றோர் செய்யுட்கு இக்குற்றம் உண்டாயினும் கொள்ளார் என மறுக்க' என்பர். பேராசிரியர், இம்மரபினைப் பிற்காலத்துத் தோன்றிய வழக்கு எனச்சொல்லி பாட்டியல் மரபு என்னும் நூலினை எடுத்துக்காட்டி, இந்நூல் நின்று பயனின்மை என்னும் குற்றத்திற்கு, மேற்கோளாக அமைவது என்பர். இவற்றால் பொருத்தம், குற்றம் முதலிய வேண்டாத அமைப்புக்களை அக்காலத்திலேயே அறிஞர்கள் எதிர்த்தனர் என்பது போதரும். இக்காலத்தில் இம்மரபு முற்றிலும் அழிந்து விட்டது என்று கூடக் கூறலாம்.

பாட்டியல் சாதி

மனித குலத்தில் சாதிப் பிரிவினையைப் பார்த்தவர்கள், பாவகையிலும் சாதியை நாட்டத் தயங்கவில்லை. இன்ன குலத்தவரை இன்னபாவினால்தான் பாடவேண்டும் என வரையறுத்தனர். வேதியன், வேந்தன், வணிகன், வேளாளன் என்ற நான்கு குலங்களையும் முறையே வெண்பா, அகவல், கலி, வஞ்சி என்ற நான்கு வகைப்பாக்களாலும் பாடவேண்டும் என்று கூறினர். `சாதிகள் இல்லையடி பாப்பா' என மனித சாதியையே தகர்த்தெறியும் போதும், பாட்டுச் சாதி எவ்வளவு நாள் நிலைத்து நிற்கும்? அழிந்தொழிந்தது நகைப்புக்கு இடனாகியது.

பிரபந்த இலக்கணம்

பொருத்தங்கள் அல்லாத மற்றொரு வகைப்பிரிவு, பிரபந்தங்களின் அமைப்பினைப் பற்றிக் கூறுவதாகும். தொல்காப்பியர், ஓரளவு குறிப்பாகச் சுட்டிச் சென்ற இலக்கியப் பாகுபாடுகளைக் கால வளர்ச்சியில் விரித்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பணியில் பாட்டியல் நூல்கள் தொல்காப்பியர் காலத்தில், 42, செய்யுள் வகைகள் இருந்தன. அவர் காலத்தில் பரந்துபட்ட அளவில் பல்வேறு வகைத் தனி இலக்கியங்கள் இல்லை. ஆயினும், அத்தகைய இலக்கியங்கள் காலப்போக்கில் தோன்றுதல் கூடும் என்பதனை அறிந்தே விருந்து என்னும் வனப்பினை அமைத்துள்ளார். பிற்காலத்தில் பல புதிய இலக்கிய வகைகள் பழமையின் அடிப்படையில் தோன்றின. இதற்கு ஏற்பப் பாட்டியல் நூல்கள், அதன் அமைப்பையும் ஒழுங்கையும் ஆராய முற்பட்டன.

பாட்டியல் நூல்கள்

இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பாட்டியல் நூல்கள் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், இலக்கண விளக்கத்துள் அமைந்த இலக்கண விளக்கப் பாட்டியல் என்பன. மேலும் முத்துவீரியத்துள்ளும், தொன்னூல் விளக்கத்திலும் பாட்டியலைக் காண்கிறோம். பிரபந்ததீபிகை என்னும் நூலும் பாட்டியலே ஆகும். இவையன்றி வாருணப் பாட்டியல், தத்தாத்திரேயப் பாட்டியல், பண்டாரப் பாட்டியல், அகத்தியர் பாட்டியல், மாமூலர் பாட்டியல், பாட்டியல் மரபு, பிரபந்ததீபம், பிரபந்தத்திரட்டு முதலிய நூல்கள் பற்றியும் சில சில குறிப்புக்கள் கிடைத்துள்ளன. பன்னிருபாட்டியல் முதலிய நூல்கள் பற்றிய செய்திகளை, அவ்வந்நூல் பற்றிய தலைப்பில் காண்க. அங்கு ஒவ்வொரு நூலின் சிறப்பியல்புகளையும், அமையும் முறைகளையும் குறித்துள்ளேன்.

பாட்டியல் கூறும் பிரபந்தங்கள்

பன்னிரு பாட்டியலில் 65 இலக்கியங்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுந்த வெண்பாப் பாட்டியலில் 56 இலக்கியங்களைப் பற்றிய இலக்கணம் உள்ளது. கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நவநீதப் பாட்டியலில் ஏறத்தாழ 97 இலக்கிய வகை பற்றிய விளக்கம் அமைந்துள்ளது. இவற்றை நோக்கும் போது கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை இலக்கிய வகையில் வரையறை எதுவும் ஏற்படவில்லை என்பது புலனாகின்றது. இலக்கிய உலகில் காணப்பட்ட இலக்கியங்களுக்கு எல்லாம் பாட்டியல் ஆசிரியர்கள் இலக்கணம் அமைத்தனர். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஒருவாறு இவ் இலக்கியங்களுக்கு வரையறை ஏற்பட்டது என்று நினைக்க இடமுண்டு. கி.பி. 1635-இல் வாழ்ந்தவனாகக் கருதப்படும் சிவந்தெழுந்த பல்லவராயன் மீது பாடப்பெற்ற உலாவில்,

`தொண்ணூற்றாறு

கோலப்ர பந்தங்கள் கொண்டபிரான்'

என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இலக்கியங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பிரித்துக் காணும் மரபு ஏற்பட்டது என அறியலாம். கி.பி. 1732-இல் வீரமாமுனிவரால் இயற்றப் பெற்ற தொன்னூல் விளக்கத்திலும் சதுரகராதியிலும் 96 பிரபந்த வகைகள் காணப்படுகின்றன.. இவ்வகராதிக்கு முற்பட்டது எனக் கூறும் பிரபந்த மரபியல் என்னும் நூலில்,

`பிள்ளைக் கவிமுதல் புராண மீறாத்

தொண்ணூற் றாறுஎனும் தொகையதாம்'

என்று 96 வகைப் பிரபந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன, ஆனால் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் எழுந்த இலக்கண விளக்கப் பாட்டியலிலும் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த சிதம்பரப் பாட்டியலிலும் 96 என்ற வரையறை காணப்படவில்லை. இலக்கண விளக்கப் பாட்டியல் 68 இலக்கியப் பிரிவுகளையும், சிதம்பரப் பாட்டியல் 62 இலக்கியப் பிரிவுகளையும் குறிப்பிடுகின்றன. பிரபந்த தீபிகையில் 97 பிரபந்தங்கள் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் நோக்கும்போது, கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை 96 இலக்கியம் என்ற வரையறை ஏற்படவில்லை என்பதும், கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சிவந்தெழுந்த பல்லவராயன் காலத்தில் 96 என்ற பகுப்பு ஏற்பட்டது என்பதும் இவ்வரையறையைச் சிலர் தழுவினர், சிலர் தழுவ வில்லை என்பதும் புலனாம். மேலும் 96 வகைப் பிரபந்தங்களுக்கும் அடங்காமல் அம்மானை, அலங்காரம், வண்ணம், வில்பாட்டு, புலம்பல், தென்பாங்கு, சிந்து, சீட்டுக் கவி என்பன ஆதியாக எண்பதுக்கு மேற்பட்ட புதிய இலக்கியங்கள் உள்ளன. இதனை நோக்கும்போது வளர்ந்து வரும் சமுதாயத்தில் இலக்கிய ஆக்கம் இவ்வளவுதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது என்பது விளங்கும்.

நன்றி - கலைஞர் மு.கருணாநிதி

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மாறும் இலக்கணம்

 
 
31981.jpg



இலக்கியங்களுக்குப் பின்பே இலக்கணந் தோன்றும் என்பதைப் பலரும் அறிவர். இலக்கண ஆசிரியர்,  கற்றறிந்தோரின் மொழிவழக்குகளை ஆராய்ந்து,  அவற்றை வகைப்படுத்தித் தேவையானவற்றுக்குப் பெயர் சூட்டிவிதிகளை உருவாக்கி நூலியற்றுவார். அந்த விதிகளைப் பின்பற்றிப் படைப்புகள் பிறக்கும்.
 
  ஒரு மொழியின்,  முதல் இலக்கண ஆசிரியரின் பணி மிகக் கடினம்அவருக்கு முன்னோடி இல்லாமையால்.
 
  நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியம் இலக்கண நூல்களுள் முந்தியதுஇது சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டது என்பது ஆய்வாளர் கருத்து. அதற்குப் பின்னர்த் தோன்றிய முக்கிய நூல் வீரசோழியம் (11 ஆம் நூ.) நிலைத்து நிற்கவில்லைஅடுத்து வந்த நன்னூல்பவணந்தியால் (13 ஆம் நூ.) இயற்றப்பட்டுத் தனக்குப் பிந்தைய
 
 1 --நேமிநாதம் (12)
 2-- இலக்கண விளக்கம் (17)
 3 -- தொன்னூல் விளக்கம் (17)
 4 -- இலக்கணக் கொத்து (17)
 5-- பிரயோக விவேகம் (17)
 6 -- முத்துவீரியம் (19)
 
  ஆகிய எல்லா நூல்களையும் புறந்தள்ளிக் காலத்தையும் வென்று இன்றுவரை ஆதிக்கஞ் செலுத்துகிறது.
 
nannool.jpg
 
தமிழறிஞர் தொன்றுதொட்டுப் போற்றிவருவன தொல்காப்பியமும் நன்னூலுமே. இவ்விரண்டுக்குமிடையே பன்னூறாண்டு கழிந்த நிலையில்,  வேறுபாடுகள் இருப்பது இயல்புதானே?
 
  காட்டுகள்:
 
  1 -- குற்றியலிகரம்குற்றியலுகரம்ஆய்தம் எனச் சார்பெழுத்து மூன்று என்று தொல்காப்பியர் கூறியிருக்கப் பவணந்தி ஏழு கூட்டிப் பத்தென்றார்.
 
 2 -- அவர் சொன்ன சாரியைகள் அக்குஇக்குவற்றுஅவற்றை இவர் அகுஅற்று என மாற்றியதோடு இற்று என்ற ஒன்றனைப் புதியதாய்ச் சேர்த்தார்.
 
 3 -- தொல்காப்பியத்தில் இல்லாத கிறுகின்று,  ஆநின்று என்ற மூன்று நிகழ்கால இடைநிலைகளை நன்னூல் சொல்லுகிறது.
 
  பவணந்தியார் காலத்துத் தமிழுக்கு இலக்கணமாய்த் திகழ்வது நன்னூல்;  அதற்குப் பின்பு எழுநூறு ஆண்டுகள் ஓடிவிட்டனவே! அதன் விதிகள் நூற்றுக்குநூறு இப்போது எவ்வாறு பொருந்தும்?
 
  1 -- தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் அம்ஆம்எம்ஏம்ஓம்கும்டும்தும்றும் என நன்னூல் ஒன்பதைப் பட்டியலிடுகிறதுஅவற்றுள் ஓம் ஒன்றே உயிர்பிழைத்துள்ளதுகாட்டு: வந்தோம்செய்வோம்.
 
  2 --  ஆநின்று இடைநிலை மாண்டுவிட்டது.
 
  3 -- உ என முச்சுட்டைச் சொன்னார் பவணந்திஇப்போது உ பயன்படுவதில்லை.
 
 4 -- வினையெச்ச விகுதிகளின் வாய்பாடு 12 கூறப்பட்டுள்ளனஅவற்றுள் செய்து செய என்ற இரண்டு மட்டுமே இப்போது உண்டுசெய்தால்,  செய்திருந்தால்செய்துவிட்டால் முதலிய புது வினையெச்ச வடிவங்கள் தோன்றியிருக்கின்றன.
 
 5 --  யார் என்பது உயர்திணைக்குரியதுஅதை மாணிக்கவாசகர் ஆர் என  மாற்றியதுடன், 'என் உள்ளம் ஆர்?' என அஃறிணைக்குப் பயன்படுத்தினார்.
 
  6 --  ஆறாம் வேற்றுமைப் பொருள்உடைமைஆதலால் எனது வீடுஅவளது குடை என்றெழுதுவது போல் எனது மனைவி என்று எழுதுதல் கூடாதுமனைவி உடைமையல்லவே! ஆனால் பாரதிதாசன், "வலியோர் சிலர்" எனத் தொடங்கும் பாட்டில்உலகாள உனது தாய்..." என்றார்வேறு பல அறிஞரும் இவ்வாறு எழுதுவதால்ஆறாம் வேற்றுமைக்கு முறைப்பொருளும் உண்டு என்று கொள்ளவேண்டும்.
 
 7 --பொதுப் பெயர்க்குப் பின் வல்லினம் மிகக்கூடாது என்பது விதிதாய் கைதங்கை தலைதம்பி கால் என்பன சரி;  ஆனால்குமரகுருபரர்தமது நீதிநெறி விளக்கத்தில், ( பா 32 ), தாய்க் கொலை என்றெழுதியிருக்கிறார்தாய்ப் பறவைதாய்ப் பசு என்னும் வழக்குகளும் உண்டு.
 
 8 -- "இப்படிச் செய்எப்படிக்கேட்டாய்?" என விதி கூறுகிறது நன்னூல்ஆறுமுக நாவலர், (19ஆம் நூ.) இலக்கணச் சுருக்கம் என்ற நூலில், " சுட்டு வினாக்களையடுத்த படிமுன் உறழ்ச்சி" என்று புது விதி வகுத்துள்ளார்அதனால்இப்படி செய்இப்படிச் செய்எப்படி கேட்டாய்எப்படிக் கேட்டாய்என இருவிதமாகவும் எழுதலாம்.
 
 9 -- மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்பது ஒரு பழம்புலவரின் பெயர்அது போல்'மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம்என்றுதான் எழுதவேண்டும்தமிழண்ணல்மதுரை காமராஜர் என க் போடாமல் எழுதச் சொல்லுகிறார். (நூல்: உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்).
 மாற்றங்கள் ஏற்படும் என்பதனைப் பவணந்தி எண்ணிப் பார்த்து,
 
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல ...
 
 என்றார்.
 
  நம் காலத் தமிழ்க்கான இலக்கண நூல், 'இக்காலத் தமிழ் இலக்கணம்என்னுந் தலைப்புடன் 2002 இல் பிரசுரமாயிற்று;  அதனை இயற்றியவர் இன்றைய இலக்கண ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவராகிய முனைவர் த. பொற்கோ. அதன் முன்னுரையில், ( பக். 2) "இன்றைய இலக்கியத் தமிழுக்கு நன்னூலும் தொல்காப்பியமும் போதுமானவையாக அமையவில்லைஆகவே இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவை" என்று அவர் எழுதியிருப்பது ஏற்கத்தக்கது.
 
  பழைய இலக்கண நூல்களிலிருந்து விலகிப் புது முறையில் எழுதியுள்ள அதன் 264 ஆம் பக்கத்தில் புது விதி வகுத்துள்ளார். 'இக்காலத் தமிழில் அல்ல என்பது ஐம்பால் மூவிடப் பொது வினையாக மாறிவிட்டது என்று சொல்லவேண்டும்" என்று தெரிவித்து,  அவனல்லஅவளல்லஅவையல்ல என்று காட்டுகள் தருகிறார். ஆகவே,  நானல்லேன்நீயல்லைநாமல்லோம் என்றெல்லாம் பழைய விதிப்படி எழுதத் தேவையில்லை.
 
  123 ஆம் பக்கத்தில், " சந்தி இலக்கணத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதுஇதை உணர்ந்து இன்றைய மொழிநிலைக்கு ஏற்ப ஒரு சந்தி இலக்கணத்தை நாம் இங்கே விளக்கவேண்டியுள்ளது" என்று கூறிப் புதிய விதிகளை விவரித்துள்ளார்:
 
  எடுத்துக்காட்டாக,
 
1 -- அஃறிணைக்கே உரியவாயிருந்த பலசில என்பவை இக்காலத்தில் உயர்திணையிலும் பயன்படுகின்றன எனச் சொல்லி,  சில மாணவர்கள் இங்கு வந்தார்கள் என்று காட்டு தந்துள்ளார். (பக்.343).
 
 2 --பத்துபேர் (130) , சாக்குபோக்கு (131) , பத்து பத்தாக, (156) , பாட்டுதான் (156 ) என்றெல்லாம் வன்றொடர்க் குற்றியலுகரங்களுக்கு முன் ஒற்று மிகாமல் எழுதலாம் எனப் புதுவிதி கூறியிருக்கிறார்;  இதைப் பின்பற்றி,  நான் பத்து தகவல்கள் என்று என் பதிவு ஒன்றனுக்குத் தலைப்பிட்டேன்.
 
  கஃறீதுமுஃடீது,  வாட்டடங்கண்முட்டாட்டாமரை முதலான கடினமான புணர்ச்சிகள்,  உயிரளபெடைஒற்றளபெடைகுற்றியலிகரம்மகரக்குறுக்கம் முதலிய சார்பெழுத்துகள்,ஆகியவற்றைத் தமிழானது கைகழுவிவிட்டு எளிமைக் கோலம் பூண்டு பொலிவடைந்திருக்கிறது;  ஆனால்மேலும் எளிதாக்கலாம் என  நினைத்து,  இலக்கணத்தை அறவே புறக்கணிப்பது மொழியைச் சீர்குலைக்கும். புதிய இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு பள்ளிப் பாடத்திட்டத்தைச் சீரமைப்பது அரசின் கடமைஇதனால் மாணவர்கள் நலன் பெறுவார்கள். புத்திலக்கணத்தைத் தழுவுவோம்காலத்தோடு ஒட்ட ஒழுகுவோம்.
 
                                                           ------------------------------------------------

 (படங்கள் உதவி - இணையம்)
 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இலக்கிய வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search

இலக்கிய வரலாறு என்பது, வாசிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ அல்லது கவனிப்பவர்களுக்கோ பொழுதுபோக்காக, அறிவூட்டத்தக்கதாக அல்லது கல்விப் பெறுமானம் கொண்டதாக அமையும் எழுத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது. இது உரை நடைவடிவிலோ கவிதை வடிவிலோ அமையலாம். அத்துடன், இவற்றுள் அடங்கியுள்ளவற்றைப் பயனாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பயன்படும் இலக்கிய நுட்பங்களின் வளர்ச்சியையும் இது குறிக்கும். எல்லா எழுத்துக்களுமே இலக்கியம் ஆவதில்லை. தரவுகளின்தொகுப்புக்கள் போன்ற எழுத்து வடிவங்கள் இலக்கியமாகக் கணிக்கப்படுவதில்லை.

இலக்கியத்தின் தோற்றம்[தொகு]

 
கில்கமிஷ் காவியம் எழுதப்பட்ட கற்பலகை

இலக்கியம், எழுத்து என்னும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன எனினும் இரண்டும் ஒன்றல்ல. பண்டைச் சுமேரியர்களின் தொடக்ககால எழுத்துக்களோ, பண்டைக்கால எகிப்தியர் படவெழுத்து முறையில் எழுதியவையோ பழங்காலச் சீனர்களின் பதிவுகளோ இலக்கியம் என்ற வரையறைக்குள் அடங்கா. எழுத்து மூலமாகப் பதிவு செய்தல் எப்பொழுது இலக்கியமாக மாறியது என்பது குறித்து அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இலக்கியம் என்பதற்கான வரைவிலக்கணமும் பெருமளவுக்குத் தற்சார்பு உடையதாகவே இருந்து வருகிறது.

பல்வேறு சமுதாயங்களிடையேயான தூரம் அவர்களின் பண்பாடுகள் தனித்தனியாக வளர்வதற்குக் காரணமாக இருந்தபடியால், இலக்கியமும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஒரே வேகத்தில் வளரவில்லை. வேண்டுமென்றே அழிக்கப்பட்டதனாலும், தற்செயல் நிகழ்வுகளால் அழிந்ததாலும், அவ்விலக்கியங்களை உருவாக்கிய பண்பாடுகள் முற்றாகவே இல்லாமல் போனதாலும், கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக எழுந்த இலக்கியங்கள் பல இன்று கிடைப்பதில்லை. இது, முழுமையான உலக இலக்கிய வரலாற்றை உருவாக்குவதில் உள்ள முக்கியமான பிரச்சினையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, கிமு முதலாம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியா நூலகம் தீயினால் அழிந்தபோது, பல முக்கியமான நூல்கள் முற்றுமுழுதாகவே தீக்கு இரையாகிவிட்டதாக நம்பப்படுகிறது. இது தவிர பல்வேறு சமய சார்பான நிறுவனங்களும், உலகியல் சார்ந்த நிறுவனங்களும், சில நூல்களையும், நூலாசிரியர்களையும் ஒடுக்கி விடுவதாலும், பல இலக்கியங்கள் மறைக்கப்பட்டு இலக்கிய வரலாற்றில் தெளிவின்மை ஏற்படுகிறது.

முன்னோடி இலக்கியங்கள்[தொகு]

இலக்கியத்தின் முன்னோடிகள் என்ற அளவில் சில தொடக்ககால நூல்களை எடுத்துக்காட்டலாம். கிமு 2000 ஆண்டுக்காலத்தைச் சேர்ந்த கில்காமேசு காப்பியம், கிமு 1250 அளவில் எழுதப்பட்ட எகிப்தின் இறந்தோர் நூல் என்பன இவற்றுள் அடங்குகின்றன. "இறந்தோர் நூல்" கிமு 18 ஆம் நூற்றாண்டளவில் தோன்றி இருக்கக்கூடும் என்ற கருத்தும் உண்டு. வாசித்தறிய முடியாதிருந்த பண்டைய எகிப்து மொழியில் எழுதப்பட்டு இருந்ததால், தொடக்ககால ஆய்வுகளில் பண்டைக்கால எகிப்தின் இலக்கியங்கள் உள்ளடங்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் ரொசேத்தாக் கல்லைக் கண்டுபிடித்து பண்டை எகிப்து மொழியை வாசித்தறிந்து மேல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்த பின்னரே எகிப்திய இலக்கியங்களைப் பற்றி அறிய முடிந்தது.

பண்டைக் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பல நீண்டகாலம் வாய்வழியாகவே பயிலப்பட்டு வந்துள்ளதும், அவை தோன்றிய காலத்தை அறிந்து கொள்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு வாய்வழியாகவே கையளிக்கப்பட்டு வந்த, இந்து சமயத்தின் வேதங்களில் ஒன்றான ரிக் வேதம், பிற்காலத்திலேயே எழுதப்பட்டது. எனினும், இந்நூலின் முக்கிய பகுதிகள் கிமு இரண்டாம் ஆயிரவாண்டுக் காலப்பகுதியில் தோன்றியிருக்கலாம் என்று வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். ஓமர் எழுதிய இலியட், ஒடிசி ஆகிய இலக்கியங்கள் கிமு 8 ஆம் நூண்டாண்டைச் சேர்ந்தவை. எனினும் இவையும் வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில் இருந்தே வாய்வழியாகப் பயின்று வந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.

தமிழிலும் இன்று அறியவந்துள்ள மிகப் பழைய நூலான தொல்காப்பியம் இலக்கண நூல் ஆகும். இது கிறித்தவ ஆண்டுகளின் தொடக்கத்துக்குச் சில நூற்றாண்டுகள் முன்பின்னாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இலக்கியங்கள் தோன்றி நிலை பெற்ற பின்பே இலக்கண நூல் தோன்றியிருக்கும் ஆதலால், தமிழிலும் கிறித்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்காலத்தில் கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டவையே.

அண்மைக்காலத்தில் தோன்றிய இலக்கிய வடிவங்களின் தோற்றம் குறித்தும் தெளிவின்மை நிலவுவதைக் காண முடியும். எடுத்துக்காட்டாக, உலகின் முதல் புதின இலக்கியம் எது என்பதிலும் சர்ச்சை நிலவுகின்றது.

பழங்கால இலக்கியங்கள்[தொகு]

சீனா[தொகு]

இராணுவ உத்திகளைப் பற்றி கூறும் சுன் சூ எழுதிய ‘’போர் கலை’’ புத்தகமே இக்காலம் வரை அனைவராலும் பயன்படுத்தபடும் பழங்கால சீன இலக்கியம் ஆகும். மேலும் கன்பியூசியஸ் மற்றும் லா ஒசி ஆகியோர் நேரடியாகவும், புத்தகங்கள் மூலமும் மக்களுக்கு முதுமொழிகள் மற்றும் பழமொழிகளை வழங்கினர்.

கிரேக்கம்[தொகு]

பண்டைய கிரேக்க சமூகம் இலக்கியங்களில் சில குறிப்பிடதக்க வளர்ச்சியை ஏற்படுத்திய சமூகம் ஆகும். இன்று வரை காவிய கிரேக்க கவிதையான இலியட் மற்றும் ஒடிஸியே மேற்கத்திய இலக்கியங்கள் தோன்றியதற்கு முன்னோடியாக கருதப்படுகிறது. போர் மற்றும் சமாதானம், மரியாதை, இழிவு, காதல், வெறுப்பு ஆகிய அனைத்திற்கும் இவ்விலக்கியம் முன்னோடியாக கருதப்படுகிறது. பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரின் கருதுக்களும் மிக முக்கிய கிரேக்க இலக்கியமாக கருதப்படுகின்றது.

லத்தின்[தொகு]

கிரேக்கத்தைப் போன்றே லத்தினும் மிகப்பழமையான இலக்கிய வரலாற்றைக் கொண்டது ஆகும். ரோமானியப் பேரரசின் எழுத்தாளர்களே இவ்வகை இலக்கியங்களை எழுதியவர்கள். பிளாட்டஸ் எழுதிய இருபது நகைச்சுவை நாடகங்களும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும்[1].

இந்தியா[தொகு]

இந்தியர்கள் சுருதி மற்றும் சிமிதி ஆகிய வழிகளின் மூலம் தங்களின் பிள்ளைகளுக்கு தத்துவங்கள் மற்றும் இறையியல் இலக்கியங்களைக் கற்றுக்கொடுத்து வந்துள்ளனர். சுருதி என்பது வாய்வழிக் கல்வியாகவும், சிமிதி என்பது அனுபவ கல்வியாகவும் கருதப்படுகின்றது. வேதங்களும் இது போலவே கற்கப்பட்டுவந்துள்ளன. இந்தியாவின் புராணக்கதைகளே எழுதப்பட்ட தத்துவங்களாகக் கருதப்படுகின்றது. இவை அனைத்தும் பழங்கால சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த மொழியாகும். மேலும் வழக்கொழிந்த மொழியான பாளியில் எழுதப்பட்ட புத்த மதம் சார்ந்த நூல்களும் இந்தியாவின் பழங்கால இலக்கியங்களாகும்[2].

இடைக்கால இலக்கியங்கள்[தொகு]

இடைக்கால இலக்கியங்களில் முக்கிய இடங்கள் வகிப்பவை பெருசிய இலக்கியங்கள், ஒட்டமன் இலக்கியங்கள், அரேபிய இலக்கியங்கள், யூத இலக்கியங்கள் ஆகியன முக்கிய இடங்கள் வகிக்கின்றன. கிரேக்கம், லத்தின் போல் அல்லாமல் இந்தியா, சீனா ஆகிய பழம் இலக்கியங்கள் உருவாகிய நாடுகளிலும் இலக்கியங்கள் குறிப்பிட்தக்க வளர்ச்சியை எட்டியது.

நவீனகால இலக்கியங்கள்[தொகு]

நவீன கால இலக்கியங்கள் என்பது பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வரும் இலக்கியங்கள் ஆகும். நவீன இலக்கியங்களுக்கு சில விருதுகளும் தரப்படுகின்றன. அவை சிறந்த நவீனகால இலக்கியங்களாகவும் கருதப்படுகின்றன. 1965 ல் இருந்து வழங்கப்படும் நெபுலா விருது, 1971 ல் இருந்து வழங்கப்படும் பிரிட்டிஷ் பேண்டஸி விருது மற்றும் 1971 ல் இருந்து வழங்கப்படும் மைதோபோயிக் விருதுகள் சிறந்த நவீனகால இலக்கியங்களுக்கு உண்டான விருதுகளாகக் கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1.  Shipley, Joseph Twadell. Dictionary of world literature: criticism, forms, technique. Taylor & Francis, 1964. p. 109. Web. 15 October 2011.
  2.  Narang, Satya Pal. 2003. An Analysis of the Prākṛta of Bhāśā-sama of the Bhaṭṭi-kāvya (Canto XII). In: Prof. Mahapatra G.N., Vanijyotih: Felicitation Volume, Utkal University, *Bhuvaneshwar.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: தமிழ் இலக்கணம் - கலைஞர் மு.கருணாநிதி
Permalink  
 


https://en.wikipedia.org/wiki/History_of_English_grammars#targetText=The%20history%20of%20English%20grammars,introduced%20in%20the%20nineteenth%20century.

The first English grammar, Pamphlet for Grammar by William Bullokar, written with the seeming goal of demonstrating that English was quite as rule-bound as Latin, was published in 1586.[1] Bullokar's grammar was faithfully modeled on William Lily's Latin grammar, Rudimenta Grammatices (1534).[2] Lily's grammar was being used in schools in England at that time, having been "prescribed" for them in 1542 by Henry VIII.[1] Although Bullokar wrote his grammar in English and used a "reformed spelling system" of his own invention, many English grammars, for much of the century after Bullokar's effort, were to be written in Latin; this was especially so for books whose authors were aiming to be scholarly.[1]Christopher Cooper's Grammatica Linguæ Anglicanæ (1685) was the last English grammar written in Latin.[3]

The yoke of Latin grammar writing bore down oppressively on much of the early history of English grammars. Any attempt by one author to assert an independent grammatical rule for English was quickly followed by equal avowals by others of truth of the corresponding Latin-based equivalent.[4] Even as late as the early nineteenth century, Lindley Murray, the author of one of the most widely used grammars of the day, was having to cite "grammatical authorities" to bolster the claim that grammatical cases in English are different from those in Ancient Greek or Latin.[4]



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 https://en.wikipedia.org/wiki/Dictionary

The first purely English alphabetical dictionary was A Table Alphabeticall, written by English schoolteacher Robert Cawdrey in 1604. The only surviving copy is found at the Bodleian Library in Oxford. This dictionary, and the many imitators which followed it, was seen as unreliable and nowhere near definitive. Philip Stanhope, 4th Earl of Chesterfield was still lamenting in 1754, 150 years after Cawdrey's publication, that it is "a sort of disgrace to our nation, that hitherto we have had no… standard of our language; our dictionaries at present being more properly what our neighbors the Dutch and the Germans call theirs, word-books, than dictionaries in the superior sense of that title." [16]



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard