New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒலியனியல்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஒலியனியல்
Permalink  
 


5.2 ஒலியனியல்

ஒலியனியலைப் பொறுத்தவரை ஒருசில மாற்றங்களைத் தவிர, தொல்காப்பியர் காலத் தமிழே சங்க காலத்தில் வழங்கியுள்ளது. ஐ, ஒளஎன்னும் கூட்டொலிகள், மொழி முதல் மற்றும் இறுதியில் வரும் எழுத்துகள் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள விதிகளிலிருந்து சங்ககாலத் தமிழ் ஒருசில மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது.

5.2.1 ஐ, ஒள - கூட்டொலிகள்

உயிரொலிகளில் ஐ, ஒள என்னும் இரண்டும் கூட்டொலிகளாகும். தொல்காப்பியர் காலத்தில் ஐகாரம்,  என்றும் அய் என்றும் இரு வகையாக எழுதப்பட்டது. ஆனால் ஒளகாரம் அவர் காலத்தில் ஒள என்று மட்டுமே எழுதப்பட்டது; அவ் என்று எழுதப்படவில்லை.

இதற்கு நேர் மாறாகச் சங்க காலத்தில் ஐகாரம்,  என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது ; அய் என்று எழுதப்படவில்லை. சான்றாகச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் ஐவர், ஐந்து, ஐம்பது போன்ற சொற்கள் அய்வர். அய்ந்து, அய்ம்பது என்றாற் போல எந்த ஓரிடத்திலும் எழுதப்படவில்லை. ஆனால் ஒளகாரமோ சங்ககாலத் தமிழில் ஒளஎன்றும் அவ் என்றும் இரு வகையாக எழுதப்பட்டுள்ளது.

பௌவம் (கடல்) என்ற சொல் பௌவம் என்றும் பவ்வம் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதேபோலக் கௌவை (அலர், பழிச்சொல்) என்ற சொல் கவ்வை என்றும் கௌவை என்றும் எழுதப்பட்டுள்ளது.

நிறையிரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு

(குறிஞ்சிப்பாட்டு : 47)

பவ்வம் மீமிசைப் பால்கதிர் பரப்பி

(பொருநராற்றுப்படை : 135)

பகல்வரின் கவ்வை அஞ்சுதும்

 

(அகநானூறு, 118 :6)

ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிதே

 

(அகநானூறு, 186 :7)

5.2.2 மொழிமுதல் எழுத்துகள்

(1)

சகர மெய் அ, ஐ, ஒள என்னும் மூன்று உயிர்கள் நீங்கலாகப் பிற ஒன்பது உயிர்களோடு சேர்ந்து மட்டுமே மொழிக்கு முதலில் வரும் என்றார் தொல்காப்பியர். ஆனால் சங்க கால இலக்கியங்களில் சகரமெய் அகர உயிரோடு சேர்ந்து ஏறத்தாழ இருபது சொற்களிலும், ஐகார உயிரோடு சேர்ந்து ஒரு சொல்லிலும் முதலாகியுள்ளது. ஒளகாரத்தோடு மட்டு்ம் சேர்ந்து மொழி முதலாகவில்லை.

சகடம்(வண்டி)(நற்றிணை, 4 : 9)
சங்கம்(ஒரு பேரெண் - எண்ணிக்கை)(பரிபாடல், 2 : 13)
சடை(மயிர் முடி)(புறநானூறு, 166 : 1)
சண்பகம்(மலர்)(கலித்தொகை, 150: 21)
சதுக்கம்(நான்கு தெருக்கள் கூடுமிடம்)(திருமுருகாற்றுப்படை,225)
சந்தி(தெருக்கள் கூடுமிடம்)(திருமுருகாற்றுப்படை,225)
சையம்(குடகு மலை)(பரிபாடல், 11: 14)
(2)

ஞகர மெய் ஆ, எ, ஒ ஆகிய மூன்று உயிர்களோடு கூடி மட்டுமே மொழி முதலில் வரும் என்றார் தொல்காப்பியர். சங்ககாலத் தமிழில் இம்மூன்று உயிர்களோடு மட்டும் அல்லாமல், அ, இ என்னும் இரண்டு உயிர்களோடு சேர்ந்தும் ஞகர மெய் மொழி முதலாகியுள்ளது.

ஞமலி(நாய்)(அகநானூறு, 140 : 8)
ஞிமிறு(வண்டு)(அகநானூறு, 124: 15)
(3)

தொல்காப்பியர் காலத்தில் யகர மெய் ஆகார உயிரோடு கூடி மட்டும் மொழி முதலாகியது. சங்க இலக்கியத்தில் சில சொற்களில் அகர உயிரோடும், ஊகார உயிரோடும் கூடி யகர மெய் மொழி முதலாகிறது.

யவனர் (அகநானூறு, 149 : 9)
யூபம்(யாகத் தூண்)(புறநானூறு, 15 : 21)

யவனர் என்ற சொல் தமிழ் நாட்டில் வணிகம் செய்ய வந்த கிரேக்க, உரோம வணிகர்களை ஒரு சேரக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல் அயோனிஸ் (Iaones) என்ற கிரேக்க மொழிச் சொல்லின் திரிபாகும்.

மேற்குறிப்பிட்டவை தவிரத் தொல்காப்பியர் காலத் தமிழுக்கும் சங்ககாலத் தமிழுக்கும் இடையே மொழி முதல் எழுத்து பற்றிய இலக்கணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. இந்தச் சில மாற்றங்களுக்கும் காரணம் தமிழ்நாட்டுக் கிளைமொழிகளிலிருந்தும், பிறநாட்டு மொழிகளிலிருந்தும் சொற்களைக் கடன்வாங்கியமையாக இருக்கலாம் என்று தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் கருதுகிறார்.

5.2.3 மொழி முதல் துணை

தொல்காப்பிய இலக்கணத்தின்படி ர, ல ஆகிய மெய்யெழுத்துகள் மொழிமுதலில் வராதவை. சங்ககாலத் தமிழில் இவ்வெழுத்துகளை முதலாகக் கொண்ட வடமொழிச் சொற்கள் கலந்தன. ஆனால் அவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அ, இ, உ என்னும் எழுத்துகளுள் ஒன்றை மொழி முதலில் துணையாகக் கொண்டே ஏற்றுக்கொள்ளப்பட்டன. சான்றாக ராமன் என்ற வடசொல், இராமன் என்று சங்ககாலத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதே போல ரோகிணி (ஒரு நட்சத்திரத்தின் பெயர்) என்ற சொல் உரோகிணி என்று எழுதப்பட்டுள்ளது.

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை (புறநானூறு, 378: 18) 

உரோகிணி நினைவனள் நோக்கி (நெடுநல்வாடை, 163)

 

5.2.4 மொழி இறுதி எழுத்துகள்

ஒளகாரம் நீங்கலான பதினோர் உயிர்களும், ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு மெய்களும், குற்றியலுகரமும் மொழிக்கு இறுதியில் வரும் என்கிறார் தொல்காப்பியர். இவையாவும் சங்க காலத் தமிழில் மொழிக்கு இறுதியில் வருகின்றன.

தொல்காப்பியர் காலத் தமிழில், சொல்லின் இறுதியில் இரண்டு மெய்கள் மயங்கி (சேர்ந்து) வருவதை ஒரு சொல்லில் மட்டுமே காணமுடியும். அச்சொல் போன்ம் என்பதாகும். ஆனால் சங்க இலக்கியத்தில் தின்ம் (தின்னும்) கொண்ம் (கொள்ளும்) தேய்ம் (தேயும்) சான்ம் (சாலும்) சென்ம்(செல்லும்) போன்ற மெய்ம்மயக்கங்களும் வருகின்றன.

உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்

(கலித்தொகை, 105:38)


இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்

(புறநானூறு,150 : 13)


பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்ம் என

(புறநானூறு, 159 : 29)


அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என

(நற்றிணை, 68 : 2-3)

5.2.5 ஒலி மாற்றங்கள்

தொல்காப்பியர் குறிப்பிடாத ஒலி மாற்றங்கள் சிலவும் சங்ககாலத் தமிழில் காணப்படுகின்றன.

  • மொழி முதல் யகரம் மறைதல்

தொல்காப்பியர் காலத் தமிழில் வழங்கிய யாடு, யாறு, யாமை, யார், யானை, யாண்டு, யாளி, யாழ், யாப்பு போன்ற பல சொற்கள் சங்ககாலத் தமிழிலும் பயில்கின்றன. ஆனால் சங்ககாலத்தில் இச்சொற்களில் சில மொழி முதலில் உள்ள யகர மெய்யை இழந்து ஆகாரத்தை முதலாகக் கொண்ட சொற்களாகவும் வழங்குகின்றன.

யாடுஆடு
யாறுஆறு
யாமைஆமை
யாளிஆளி
யார்ஆர்
யாண்டுஆண்டு

 

யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்

(மதுரைக்காஞ்சி : 359)

ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்

(நெடுநல்வாடை : 30)

கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்

(அகநானூறு, 117 : 16)

வயல் ஆமைப் புழுக்கு உண்டும்

(பட்டினப்பாலை : 64)

 

  • மொழி முதல் சகரம் மறைதல்

சங்ககாலத் தமிழில் சகர மெய்யை முதலாகக் கொண்ட சொற்கள் சிலவும், சகர மெய்யை இழந்து உயிரெழுத்துடன் தொடங்குவனவாக உள்ளன. எடுத்துக்காட்டாகச் சான்றோர் என்ற சொல், முதலில் உள்ள சகர மெய் நீங்கி ஆன்றோர் என வழங்குகிறது. சான்றோர், ஆன்றோர் இரண்டும் ஒரே பொருளைத் தருகின்றன.

சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே (குறுந்தொகை, 102 : 4)அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை (குறுந்தொகை, 184 : 1)

இதே போலச் சங்ககாலத்தில் வேறு சில சொற்களும் முதலில் உள்ள சகர மெய்யை இழந்து வழங்குகின்றன.

சிப்பிஇப்பி(நற்றிணை, 87 : 7, புறநானூறு, 53 : 1)
சிறகுஇறகு(சிறுபாணாற்றுப்படை : 76)

மேலே கூறிய இருவகை ஒலிமாற்றங்களும் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

  • மேலும் சில ஒலி மாற்றங்கள்

(1) இரட்டைத் தகரம் இரட்டைச் சகரமாதல்.

ஆய்த்தி - ஆய்ச்சி (கலித்தொகை, 106: 32)

(2) வகரம் பகரமாதல்.

பிரிவு - பிரிபு (நற்றிணை, 1 : 2)

(3) னகரம் ஞகரமாதல்.

,அன்னை - அஞ்ஞை

(அகநானூறு, 145 : 22)

(4) சகரம் யகரமாதல்.

பசலை - பயலை (கலித்தொகை, 15 : 13)

(5) ஒப்புமையாக்கத்தால் ஒலி மாற்றம்

ஒருவன், ஒருத்தி என்பனவே மரபுச் சொற்கள். ஒருத்தி என்ற சொல்லின் ஒப்புமை நோக்கி ஒருவன் என்ற சொல் ஒருத்தன் என்றாகிறது. பின்னர் அது சுருங்கி ஒத்தன் என்று வழங்குகிறது. பேச்சு மொழியின் செல்வாக்கால் இம்மாற்றம் நிகழ்ந்தது எனலாம்.

எல்லா ! இஃது ஒத்தன் என் பெறான் (கலித்தொகை, 61 : 1)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard