ஆரியருக்கும் - தமிழருக்கும் ஒத்த நாகரிகம்
பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் - அவரது இயக்கத்தோடும் தொடர்ந்த செயல்பூர்வமான தொடர்பை வைத்திருந்தவர்.
இறுதியில் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்து வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் இவரது வரலாறும் - இவர் எழுதிய பல புத்தகங்களும் மறைக்கப்பட்டும் - மறக்கப்பட்டும் வருகிறது. இவரது எழுத்துக்கள் மிக எளிமையானது. இலக்கியம் அறியாதவர்கள் கூட, மிக எளிமையாக இவரது எழுத்தின்பால் கவர்வர். அந்த அளவிற்கு இவரது எழுத்திற்கு வலிமையுள்ளது.
அத்தகைய மூத்த ஆய்வாளரான சாமி சிதம்பரனார் அவர்கள் திராவிட கொள்கை குறித்து எழுதியவற்றை, அதாவது -தொல்காப்பிய தமிழன்- நூல் அறிமுகம் ஒன்றை விசுவாமித்திரர் எழுதி - திண்ணையில் வெளி வந்துள்ளது. திராவிடம் குறித்து சூடு பறக்கும் இணையதளத்தில் உலா வருவதால் இதனை மறு பதிப்பாக இங்கே வெளியிடுகிறேன். நன்றி திண்ணை, விசுவாமித்திரர்.சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்
“தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; பழந்தமிழர் வரலாறு, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதின் நோக்கம்.”
“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”
“இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞானவளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.”
“தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”
“ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”
“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”
சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:
“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”
“இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” - என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.
இந்த நூலில் திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.
1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் - 55,56)
2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)
3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் - 86)
4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் - பக்கம் 92,93)
5. 'பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ' என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் - 94)
6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் - 130)
இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:
“இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.
ஆதலால் இன்று வெளிவரும் மறுமலர்ச்சித் தமிழ்ப்புத்தகங்களிலே பல, மக்களிடம் நேசப் பான்மையை நிலைநிறுத்த உதவுவதில்லை. இதற்கு மாறாக வெறுப்பையும், விரோதப்பான்மை யையுமே வளர்த்து வருகின்றன.
இது தமிழ்வளர்ச்சியா ?
இலக்கிய வளர்ச்சியா ?
தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வழியா ?”
இதே போன்று இவர் சிலப்பதிகாரக் காலத்து தமிழ் நாடு என்ற நுல்லையும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்ற கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்.
நூல் வெளியீடு:
தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார்,
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.