சிந்துவெளி நாகரிகம், சிந்துவெளி நாகரிக எழுத்துமுறையானது அத்துறைசார்ந்த ஆய்வுலகில் ஒரு புதிரான நிலையிலேயே இருந்துவருகிறது. சிந்துவெளி நாகரிகத்திற்கு உரியனவாகக் கண்டெடுக்கப்பட்ட தடயங்களைக் கொண்டு அந்நாகரிகம் மற்றும் எழுத்துமுறை குறித்த புரிதலை உருவாக்கும் முயற்சிகள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகாலமாக நடைபெற்று வருகின்றன.

சிந்துவெளி நாகரிகத்திற்கு உரியனவாக அடையாளங்காணப்பட்ட குறியீடுகள், பண்பாடு சார்ந்த பல்வேறு ஆய்வுப் புதிர்களைக் கொண்டுள்ளன. 1920இல் சிந்துவெளிக் குறியீடுகள் வெளிக்கொணரப்பட்ட பின்னர் உலகளாவிய நிலையிலுள்ள அறிஞர்கள் இக்குறியீடுகளை வாசித்தறிவதிலும் சிந்துவெளி பண்பாட்டைக் கட்டமைப்பதிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இத்துறையில் இவ்வகை ஆய்வுகள் 1960க்குப் பிறகு முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டன.

சிந்துவெளிக் குறியீடுகள் குறித்து 1960க்குப் பிறகான முனைப்பான ஆய்வுகளால் இந்தியாவில் இருந்த மிகப் பண்டைய நாகரிகம் சிந்துவெளி நாகரிகமே என்றும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்துசமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானது என்பதுமான கருத்துக்கள் அத்துறை சார்ந்த அறிஞர்களால் முன்வைக்கப்படன. இன்னொரு முக்கிய அம்சம் சிந்துவெளிப் பகுதியில் பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் தமிழின் தொன்மையான வடிவமாக இருக்கலாம் என்ற கருத்தையும் கூறிவருகின்றனர். எனினும் உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகால சிந்துவெளி ஆய்வுப் போக்குகளை நோக்கின் கீழ்வரும் சில கருத்துக்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

 • சிந்துவெளி நாகரிகம் வெளிப்படுத்தப்பட்டுக் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழிந்தும் அந்நாகரிகம் குறித்த அடையாளப்படுத்தலில் கருத்து முரண்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.
 • சிந்துவெளிப் பகுதியில் பேசப்பட்ட மொழி திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது என்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது என்றும் இருவேறு கருத்து நிலைகள் தொடர்ந்து இருந்துவருகின்றன.
 • சித்திர வடிவில் உள்ள எழுத்து வடிவங்கள் அறியப்பட்ட எந்தவொரு மொழிக் குடும்பத்து எழுத்து முறையோடும் தொடர்படுத்த முடியாதவாறு உள்ளன.
 • இன்னொருபுறம் இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீடுகள்தான் என்ற முற்றிலும் மாற்றானதொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
 • பெரும்பான்மையான அறிஞர்கள் சிந்துவெளிக் குறியீடுகள் எழுத்து வடிவமே என்றும் எழுதிய முறை வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதப்பட்டுள்ளது என்றும் கருதுகின்றனர்.
  • சிந்துவெளி நாகரிக அழிவிற்குப் பிறகு அங்கிருந்த மக்கள் எந்த திசைநோக்கிச் சென்றனர் என்ற முக்கியமான ஐயப்பாடும் தொடர்ந்து இருந்துவருகிறது.

மேற்குறித்த முரண்களின் ஊடாகச் சிந்துவெளி மக்களின் நாகரிகம், எழுத்துமுறை, வாழ்விடம் குறித்த ஆய்வுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.

பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள சிந்துவெளி ஆய்வுலகில் அத்துறை சார்ந்த இரு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஒரு கட்டுரை எழுதியவர் பின்லாந்து அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்போலா, மற்றொரு கட்டுரை முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதியது. 1960க்குப் பிறகான சிந்துவெளி குறித்த ஆய்வுகளைப் பல்வேறு புதிய அணுகுமுறைகளின்வழி முன்னெடுத்தவர்களுள் இவ்விருவரும் முக்கியமானவர்கள்.

சிந்துவெளி குறித்து அமெரிக்க விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பேரா. பர்போலா ஆங்கிலத்தில் சொற்பொழிவு ஒன்றை (1996) நிகழ்த்தியுள்ளார். இதன் தமிழாக்கத்தைச்  ‘சிந்துவெளி எழுத்து’ எனும் தலைப்பில் தமிழோசை பதிப்பகம் (2009 திசம்பர்) வெளியிட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியில் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையில் (2009) ஐராவதம் மகாதேவன் நிகழ்த்திய அறக்கட்டளை உரையின் தமிழாக்கத்தைச் ‘சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்’ எனும் தலைப்பில் செம்மொழி நிறுவனம் (2010 சனவரி) வெளியிட்டுள்ளது.

சிந்துவெளிப் பண்பாடு/குறியீடுகள்/எழுத்து வடிவங்கள் முதலானவற்றின் கூறுகளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுவரும் இவ்விருவரின் கட்டுரைகள், நூல்கள் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. முதன்முறையாக மேற்கண்ட இரு கட்டுரைகள் தமிழில் வெளிவந்துள்ளது. சிந்துவெளி ஆய்வு வரலாற்றுப் போக்கைப் புரிந்துகொள்ள உதவும் இவ்விரு கட்டுரைகளின் பங்களிப்பு குறித்த அறிமுகத்தை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். சிந்துவெளி ஆய்வு வரலாற்றில் இரு கட்டுரைகளின் பங்களிப்பைத் திறனாய்வு செய்வது அல்ல.

சிந்துவெளி நாகரிகம், எழுத்துமுறை பற்றிய ஆய்வுகளின்வழி பண்டைய நாகரிகத்தை அடையாளப்படுத்தவும் குறியீடுகளை விளக்குவதற்கும் எவ்வகையான அணுகுமுறைகளை இவர்கள் பின்பற்றுகின்றனர் என்பதை இவர்களின் உரைவழி கண்டுணர முயலலாம்.

I

பெரும்பாலான பண்டைய எழுத்துக்களின் புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் சிந்துவெளி எழுத்துமுறையை மட்டும் படித்தறிவதில் தடைகள் ஏற்படுவது குறித்துக் கூறும் பர்போலா, படித்தறியும் முறைகள் குறித்தும் கோட்பாட்டு ரீதியிலான அணுகுமுறையை இவ்வுரையில் முன்வைக்கிறார்.

பொதுவாகச் சிந்துவெளி எழுத்துமுறையைப் படித்தறிவது கடினம் என்று கூறும் பர்போலா, சிந்துவெளி நாகரிகத்திற்குச் சமகாலத்தில் அறியப்பட்ட எழுத்துக்களிலும் மொழிகளிலும் சிந்துவெளி எழுத்திற்குப் பிற மொழி வழியான பெயர்ப்புகள் கிடைக்கப்படாமலிருப்பது அதற்கான முக்கியக் காரணம் என்கிறார். அறியப்படாத எழுத்துக்களுக்கான திறவுகோலைப் பெரும்பாலான நேரங்களில் இத்தகைய பிற மொழி பெயர்ப்புக்களே வழங்குகின்றன என்று கூறும் பர்போலா அத்தகைய பிறமொழித் திறவுகோல் இல்லாத சிக்கலைப் படித்தறிய ஏற்படும் தடைகளில் ஒன்றாகச் சுட்டுகிறார். எகிப்திய சித்திர எழுத்தின் புதிர்களை விடுவித்ததற்குப் பிற மொழிகளில் அமைந்த பெயர்ப்புகள் உதவியதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதேவேளையில், இவ்வகையான பிற மொழி வழியான பெயர்ப்புகள் கிடைக்கபெறாமல் போனதுடன் மற்றுமொரு சிக்கல் இருப்பதாகவும் அவர் கருதுகிறார்.

எகிப்திய ஆப்பு வடிவ எழுத்துக்கான (Cunei form Script) மொழிபெயர்ப்புகள் கிடைக்காத போதிலும், ஹிரோடோஸின் எழுத்துக்களிலிருந்தும் பைபிளிலிருந்தும் தெரியவருகிற பாரசீக மன்னர்களின் பெயர்களும் அவர்களது முன்னோர்களின் பெயர்களும் இதற்குத் தீர்வுகாண உதவின. வரலாற்றை ஆவணப்படுத்திய காலத்திற்கு முன்னதாகவே சிந்துவெளி நாகரிகம் அழிந்து போனதால் இவ்வகையான தகவலும் இல்லாமல் போய்விட்டது. (2009 : 8)

வரலாற்றைப் பதிவுசெய்யும் வழக்கத்திற்கு முன்னமே சிந்துவெளி நாகரிகம் முற்றாக அழிந்து போனதும் அதன் எழுத்து வடிவங்களை வாசித்தறிவதில் ஏற்படும் தடைகளுள் ஒன்றாக உள்ளது என்றும் கூறுகிறார். பின்லாந்தைச் சேர்ந்த பண்டைய ‘உகாரிதிக்’ எழுத்தை அது கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களிலேயே படித்தறிய முடிந்ததற்கும், கிரேக்க மொழி சார்ந்த ‘மைசினிய’ B வரிவடிவ எழுத்து(Mycenean B script) படித்தறியப்பட்டதற்கும் வரலாற்றுத் தொடர்ச்சி முற்றிலும் அறுபடாமல் இருந்ததை முக்கிய காரணமாகக் காட்டுகிறார்.

 படித்தறிவதில் உள்ள தடைகளுக்கு மேற்குறித்த காரணங்கள் முக்கியமானவையாகும். என்றாலும், சிந்துவெளி எழுத்தில் சுமார் நானூற்றுக்கும் அதிகமான வேறுபட்ட குறியீடுகள் உள்ள நிலையில் அவற்றின் சித்திர வடிவக் குறியீடுகளையும் வேறுசில அசைக் குறியீடுகளையும் வேறுபடுத்திக் காட்டுவது கடினமாக இருப்பதாகவும் அவ்வாறு வேறுபடுத்திக்காட்டும் சூழல் இல்லாதபட்சத்தில் அவற்றைப் படித்தறிவதில் சிக்கல் எழுவதாகவும் பர்போலா கூறுகிறார்.

சிந்துவெளிக் குறியீடுகள் அவற்றைப் போலவே தோற்றமளித்த படித்தறியப்பட்ட பிற எழுத்துக்களின் குறியீடுகளோடு ஒப்பிடப்பட்டன எனவும் அவற்றின் ஒலியியல் மதிப்புகள் சிந்துவெளி எழுத்துக்கு மாற்றப்பட்டன எனவும் இந்த அணுகுமுறையே பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது எனவும் கூறும் பர்போலா “எப்படியிருப்பினும் ஒப்புநோக்கும் எழுத்து முறைகள் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே இந்த ஆராய்ச்சிமுறை பயனளிக்கக் கூடியதாக இருக்கும். அதிலுங்கூடத் தவறான புரிதலுக்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன” என்பதையும் தெளிவுபடுத்துகிறார். (2009 : 9)

சிந்துவெளி எழுத்து இதுவரை தெரியவந்த பிற எழுத்துமுறைகளுடன் ஒலி பெயர்ப்பில் எந்த ஒத்த தன்மையையும் கொண்டிருக்காததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சிந்துவெளிக் குறியீடுகளின் ஒலிபெயர்ப்பு நிலைகளில் ஏற்படும் இடர்பாடுகளையும் கடந்து சில குறிப்பிட்ட நிலைகளின்கீழ் சிந்துவெளி எழுத்தைப் படித்தறிவதற்கான சாத்தியக்கூறுகளையும் பர்போலா முன்வைக்கிறார். இதற்காகக் கிடைக்கக்கூடிய எல்லா ஆதாரங்களையும் சேகரிப்பதும் நம்பத்தகுந்த வகையிலும் எளிதில் புரியக்கூடிய வகையிலும் தெளிவாகப் பதிப்பிப்பதுமே அடிப்படையான முதன்மைப் பணியாகக் கருதுகிறார். அந்த வகையில் ‘சிந்துவெளி முத்திரைகள் மற்றும் எழுத்துக் குறியீடுகளின் தொகுப்பு’ (Concordance of Indus Seals and Inscriptions) நூலை அவர் இரு தொகுதிகளாகப் பதிப்பித்திருக்கிறார். இந்த இரு தொகுதிகளைப் பதிப்பித்ததன்வழி சிந்துவெளிக் குறியீடுகளைப் படித்தறிவதற்கான நோக்கத்தைச் சாத்தியப்படுத்தியிருப்பதாகவும் அவர் நம்புகிறார் (2009 : 10).

சிந்துவெளி எழுத்து வடிவம் சித்திர–அசை எழுத்தாக உள்ள நிலையில் அகரவரிசை எழுத்து மற்றும் அசைகள் கொண்ட எழுத்தைப் படித்தறியப் பயன்படும் முறைகள் அதற்குப் பயன்படுவதில்லை என்னும் நிலைப்பாட்டினைப் பர்போலா கொண்டிருக்கிறார். இதனால் சிந்துவெளிக் குறியீடுகளை வாசித்தறிவதற்கு ரீபஸ் (Rebus) முறை அல்லது சித்திரப்புதிர் எழுத்து முறையை அவர் பின்பற்றுகிறார்.

(ரீபஸ் முறை: குறிப்பிட்ட ஓர் ஒலியை அல்லது ஒரு சொல்லைக் குறிக்கும் சித்திரம் கருத்தளவில் அதற்குத் தொடர்பற்ற வேறொரு பொருளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவது ரீபஸ் முறை எனக் குறிக்கப்படுகின்றது. ஒரு சொல்லையோ அல்லது பெயரின் ஒரு பகுதியையோ அறிவிப்பது போன்று சித்திரங்கள் அமைந்திருப்பதும், அந்தச் சித்திரங்களின் மூலம் மறைமுகமாக ஊகித்து அறியத்தக்க விதத்தில், ஒரே ஒலிப்புடைய சொற்கள் என்றும் சிலேடையைப் பயன்படுத்திக்கொள்ளும் முறையே ‘ரீபஸ்’ எனப்படும் (2009 : 10)).

தொடக்கக்காலச் சித்திர–அசை எழுத்துகள் ரீபஸ் முறையைப் பயன்படுத்தி எழுத்து முறையை வாசித்து அறியப்பட்டது என்று பர்போலா தெரிவிக்கிறார். இந்நிலையில், சிந்துவெளி எழுத்து சித்திர எழுத்தாக உள்ளதன் அடிப்படையில் ரீபஸ் முறையைப் பயன்படுத்தி அவற்றைப் படித்தறியும் முயற்சியை அவர் மேற்கொள்கிறார்.

சிந்துவெளி எழுத்திற்கு ஆதாரமாக உள்ள மொழியை அடையாளம் காண அது தொடர்பான குறியீடுகளின் ஒலியியல் மதிப்பைக் கண்டுணர நமக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. இவ்விசயத்தைப் பொருத்தமட்டில், ரீபஸ் என்னும் சித்திரப்புதிர்க் கோட்பாட்டைப் பயன்படுத்தி அவற்றைப் படித்தறிவதைத் தவிர வேறெந்த முறையும் படித்தறியும் முறை என்ற தகுதியைப் பெறாது (2009 : 11) என்ற உறுதியான முடிவை முன்வைக்கும் பர்போலா, சித்திரப்புதிர் எழுத்துக்கள் தொன்மையான மொழியொன்றினை அடையாளங்காண உதவுவதுடன் அதன் எழுத்து வடிவத்தின் சில பகுதிகளைப் படித்தறிவதற்கும் சாத்தியப்படும் என்றும் இதற்குக் கீழ்வரும் சில நிபந்தனைகள் நிறைவு செய்யப்படவேண்டும் என்றும் கூறுகிறார்.

 • குறிப்பிட்ட சித்திர வடிவத்தில் சித்தரிக்கப்படும் பொருளை அடையாளம் காணுதல்
 • ஒரு சித்திர வடிவத்தின் மூலம் சுட்டப்படும் குறிப்பிட்ட புறப்பொருளுக்குரிய சொல்லிலிருந்து வேறுபட்ட அர்த்தத்தைத் தரக்கூடியதாகவும் அதேநேரத்தில் ஒரே ஒலிப்பு உடையதாகவும் விளங்கும் ஒரு சொல்லைக் குறிப்பதற்கு, சித்திர வடிவமானது ரீபஸ் ஆகப் பயன்படுத்தப்பட்டு வருதல்
 • இவ்வாறு தருவிக்கப்படும் அர்த்தம், அதன் பின்னணியிலிருந்து உய்த்துணரத் தக்கதாக இருத்தல்
 • காட்சியாகச் சித்தரிக்கப்பட்டது அதிலிருந்து உய்த்துணரத்தக்க அர்த்தம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ள, பலபொருள் தரும் ஒரு சொல் அந்த எழுத்துடன் வரலாற்று ரீதியாக நெருக்கமாக உள்ள மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் (2009 : 11).

பண்டைய உலகின் எழுத்துமுறைகள் மற்றும் அதைப் படித்தறிய உருவாக்கப்பட்ட அணுகுமுறைகள், சிந்துவெளிக் குறியீடுகளை வாசித்தறிவதைச் சாத்தியமாக்குவதற்குச் செய்யப்படவேண்டிய நோக்கங்கள் குறித்தும், சிந்துவெளிக் குறியீடுகளில் வரையறையுடன் உட்பொதிந்துள்ள அர்த்தங்களை வாசித்து வெளிக்கொணரும் முயற்சியையும் பர்போலா மேற்கொள்கிறார்.