New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைத் தமிழ்நாட்டில் பிராமணியம்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
பண்டைத் தமிழ்நாட்டில் பிராமணியம்
Permalink  
 


 பண்டைத் தமிழ்நாட்டில் பிராமணியம் 

அத்திவெட்டி வே.சிதம்பரம் 

இந்திய சமூக, அரசியல் வரலாற்றில் பிராமணியம் மிக முக்கியமான இடத்தைப் பெற்று வந்துள்ளது. தமிழக வரலாற்றில் இன்றுவரை பிராமணியம் பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிராமணியத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. பண்டைத் தமிழகத்தில் பிராமணியம் கால் கொள்ளத் தொடங்கியதை சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கியங்களில் பிராமணர்கள், அந்தணர், பார்ப்பனர், முனிவர், நான்மறையாளர், இரு பிறப்பாளர் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பிராமணர்களின் தோற்றம் பற்றி வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் ``ஆரிய வாழ்க்கை முறையைத் தென்னிந்தியாவில் பரப்புவதற்காக ஒரு பேரியக்கம் தொடங்கியது.'' (தென்னிந்திய வரலாறு பக்கம்) என்று கூறி விட்டு மேலும் அவர் ``தென்னிந்தியா ஆரிய மயமாவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகள் ஆயின. அந்த நீண்ட காலத்தில் ஆரிய வாழ்க்கை முறை சிறிது சிறிதாக வேரூன்றியதன் பயனாகத் தென்னிந்தியாவில் ஒரு புதிய பண்பாடு தோன்றி வளர்ந்தது'' (பக். 127) என்று கூறுகிறார். இந்தப் புதிய பண்பாடு ஏன் தோன்றியது? தமிழ்ச்சமூகத்தில் அதற்கான தேவை என்ன? என்பவை ஆய்வுக்குரியவை.

தமிழக வரலாற்றினை ஆய்வு செய்த அறிஞர்கள் பிராமணர்களின் புதிய பண்பாடு பற்றி சில குறிப்புகளை கூறியுள்ளனர். பிரிட்டிஷ் ஆய்வாளர் J.R.Marr ``சங்கத் தொகை நூல்களில் பிராமணர்களின் வழக்கங்கள் புராணக் கடவுள்களின் கதைகள் குறிப்பிடப்படுவதிலிருந்து தமிழ்ச்சமூகத்தில் இந்தோ ஆரியரின் ஊடுருவல் எந்த அளவுக்கு இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. (The Eight Anthologies பக். 457) என்று குறிப்பிடுகிறார்.

அமெரிக்க பேராசிரியர் ழுநடிசபந.டு.ழயசவ ``பிராமணர்கள் நீண்ட காலத்திற்கு முன் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.'' (The Poems of Ancient Tamil 155) என்று கூறுகிறார். ஆனால் பேராசிரியர் கே.கே.பிள்ளை ``பிராமணர்கள் எல்லோரும் ஆரியர்கள் அல்ல, தமிழகத்தில் இருந்த ஒரு பிரிவினர் பிரமாணர்களாக மாறினர் என்பது பிராமணர்களில் `வடமா' என்ற பிரிவு இருப்பதிலிருந்து தெரிகிறது.'' (Aryan Influence in Tamilaham during sangam Ephoch) என்று மாறுபட்ட கருத்தைக் கூறியுள்ளார். ஆனால் George L.Hart பிரமாணர்கள் எல்லோரும் வடநாட்டிலிருந்து வந்தவர்கள்தான். தமிழ்நாட்டில் உள்ளவர் பிராமணராக மாறினர் என்ற கருத்து தவறு என்று மறுக்கிறார். அதற்குக் காரணமாக அவர் கூறுவதாவது:- ``பிராமணர்கள் தமிழ்நாட்டின் பழமையான கருத்தான தெய்வீக புனிதம் (Sacred) என்பதுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து தங்களை விலக்கி வைத்துக் கொண்டனர். அதனால் தாங்கள் களங்கப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டனர்'' (பக். 55) இக்கருத்து மேலும் ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

தமிழக வரலாற்றில் சங்க காலம் என்று அறியப்படுகிற காலம் கி.மு. முதல் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான கால கட்டமாகும். இந்த காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அடிப்படையில், குல மரபுக்குழுச் சமூகமாக (Tribes) இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த குழுச் சமூகத்திலிருந்து அரசு (STATE) என்ற அமைப்பு உருவான காலகட்டத்தைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன என்று பேராசிரியர் க.கைலாசபதி ஒரு கருதுகோளை (HYPOTHESIS) முதலில் வெளியிட்டார். கைலாசபதி கூறுகிறார். ``சான்றோர் இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம் நாகரிக உலகின் நுழைவாயிலிலே நிற்கும் சமுதாயமாகும். கிறிஸ்து சகாப்தம் தொடங்குவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழக வரைப்பிலே நூற்றுக்கணக்கான குலமரபுக்குழுக்கள் (Tribes) சிதறிக் கிடந்தன. நூற்றுக்கணக்கான குலங்களிலிருந்து காலப்போக்கிலே தமிழகத்தில் மூன்று அரசுகள் உருவாகின. முடியுடை வேந்தர் தலை தூக்கினர். தமிழகம் நாகரிக உலகில் நுழைந்தது. அதாவது அரசு தோன்றியது'' (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் பக்கம் 24, 25) பேராசிரியர் கைலாசபதியின் இந்த கருதுகோளை உறுதிப்படுத்துகிறார் பேராசிரியை ரொமிலா தாப்பர் ``For the Tamils this was period of evolution from tribal chief tainships to kingdoms” (A History of India Pg-105).

பேராசிரியர் கைலாசபதி இந்த கருதுகோளை வெளியிட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை விரிவான ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. குழுச்சமூகத்தில் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பது ஏற்படவில்லை. குழுவில் எல்லோரும் சமம். தனிச்சொத்து என்ற எதுவும் அந்தக் காலத்தில் கிடையாது. சமூகத்தில் தனிச்சொத்துடைமை என்பதும் அதன் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பதும் அதன் உச்சமாக `அரசு' என்ற அமைப்பும் உருவானது வரலாற்றின் மிக முக்கிய ஒரு கட்டமாகும். தமிழக வரலாற்றிலும் குழு நிலையிலிருந்த சமூகம் சிதைவடைந்து அரசு அமைப்பு தோற்றம் கொள்ளும்பொழுது சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது என்பதற்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

தமிழக வரலாற்றில் தோன்றிய புதிய அரசும், அதன் அடிப்படையான உயர்குடிமக்களும் தங்களின் புதிய வாழ்க்கை முறையை அங்கீகாரம் செய்ய ஒரு புதிய கோட்பாட்டை எதிர்நோக்கினர். இந்தப் புதிய தேவையை நிறைவு செய்ய தமிழகத்தில் பிராமணர்கள் தங்களின் புதிய பண்பாட்டைப் புகுத்தினர். பிராமணிய பண்பாட்டின் தோற்றத்தை அரசின் தோற்றத்துடன் இணைத்து புதிய கருத்தை உருவாக்கியவர் பேராசிரியர் கோசாம்பி. ``பிராமணியத்தின் வளர்ச்சி என்பது குழு சமுதாயத்தில் அரசனை தலைமையாகக் கொண்ட வர்க்கங்களின் தோற்றத்தைக் குறிப்பதாகும்'' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். (An Introduction to the study of Indian History - 122).

கோசாம்பி பொதுவாக வரைவு செய்த இந்தக் கருத்து தமிழக வரலாற்றிற்கும் பொருந்தி வரும் ஒன்றாகும். தமிழ்ச் சமூகத்தில் அரசு தோன்றுவதற்கான சூழலை முதலில் பார்ப்போம். இது பற்றிய ஓர் அறிமுக ஆய்வினை பேராசிரியர் கா.சிவத்தம்பி செய்துள்ளார். தனது ``Organization of Political Authority in early Tamilnadu'' என்ற கட்டுரையில் தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றி அறிவதற்கு முதற்படியாக அது பற்றிய சொற்களை ஆய்வு செய்து விளக்கியுள்ளார். இக்கட்டுரை அரசின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக ஆய்வு செய்வதற்கான ஒரு நுழைவுவாயிலை அமைத்துத் தந்துள்ளது.

பேராசிரியர் சிவத்தம்பி தனது மேற்கண்ட கட்டுரையில் அரசு உருவாவதற்கு அடிப்படையாக உள்ள காரணங்களைப் பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் முக்கியமானவை. (1) உற்பத்திப் பெருக்கம்- அதன் மூலம் உபரி உருவாக்கம் (2) சமூகத்தில் ஏற்றத் தாழ்வான மக்கள் பிரிவினர் உருவாதல், (3) பண்ட மாற்றுக்குப் பதிலாக வணிகம் வளர்ச்சியடைதல், (4) தனிச்சொத்துடைமை - இவை அரசு உருவாவதற்கு அடிப்படை அமைவனவாகும்.

பேராசிரியர் சிவத்தம்பி தனது Drama in Ancient Tamil Society நூலில் தமிழ்நாட்டில் அரசு உருவாக்கம் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். அதில், தனிச்சொத்துடைமை அடிப்படையில் நிலவுடைமை சமுதாயம் (Fudalism) தோன்றியதால் அரசு தோன்றியது என்ற வாய்பாட்டைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நிலவுடைமை சமுதாயம் தோன்றியது மிகப்பிந்திய காலத்தில் ஆகும். சங்க காலத்தில் நிலவுடைமைச் சமுதாயத்திற்கான சிறு தோற்றமே ஏற்பட்டிருந்ததாகவே கொள்ள முடியும். அரசு தோன்றுவதற்கான முக்கிய அடிப்படைக் காரணிகளில் ஒன்றான உபரி உற்பத்தி என்பதும் கூட பெருஅளவில் ஏற்பட்டு விடவில்லை. உள்நாட்டு வணிகத்தை விட வெளிநாட்டு வணிகத்தின் மூலமே அதிக செல்வம் சேர்ந்தது. இந்த செல்வம் நகரங்களில் புதிய மக்கள் பிரிவை உருவாக்கியது. பாசன வசதி பெற்ற நதிக்கரை பிரதேசங்களில் விவசாயத்தில் உபரிச் செல்வம் ஒரு சிலர் கைகளில் சேர்ந்தது.

தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் நதிக்கரைகளிலேயே உருவாயின. உலகம் பூராவுக்கும் இந்த விதி பொதுவானது ஆகும். பட்டினப் பாலை, மதுரைக்காஞ்சி முதலியவற்றில் நகரங்களில் வாழ்ந்த செல்வந்தர்கள் வாழ்க்கை நிலைமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழ்ந்தோர் பெரும்பாலோர் மிக ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்தனர் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. சமுதாயத்தில் ஏற்பட்ட இந்த ஏற்றத்தாழ்வு அரசு உருவாவதற்கான காரணத்தைத் தந்தது. குழு நிலையில் வாழ்ந்த சமுதாயத்தில் ரத்த உறவுடைய குழு உறுப்பினர் என்ற நிலைக்குப் பதிலாக அரசு உருவான பின் நில எல்லையில் வாழும் நாடு என்ற கருத்து உருவானது. மேலும் தனியான படை என்ற அமைப்பும் உருவானது. குழு சமூகத்தில் தனியான படை கிடையாது. குழு உறுப்பினர் அனைவரும் ஆயுதம் தாங்கிப் போரிட்டனர்.

சங்க இலக்கியத்தில் `படை' என்ற சொல் வரும் இடங்களைக் கூர்ந்து கவனித்தால் `படை' சேர, சோழ, பாண்டிய அரசர்களிடம் மட்டுமே இருந்த உண்மை புலப்படும். மற்றக் குழுத் தலைவர்களான வேளிர், சீறூர் மன்னர்களிடம் படை இருந்ததாக அறிய முடியவில்லை. மேலும் `படைஞர்' என்ற சொல் சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் (பதிற்றுப் பத்து 25) குறிப்பிடப்படுகிறது. `படைஞர்' என்ற சொல் நிரந்தரப் படையின் உறுப்பினர் என்று பொருள் கொண்டதாகக் காணப்படுகிறது. மேலும், குமரிப்படை தழீய கூற்று வினையாடவர் (புறநானூறு 294) என்றும் ``நின் படைகொள் மாக்கள்'' *(புறம் 29) என்றும் படைவீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட படை வீரர்கள் மூவேந்தரின் படை வீரர்களே. நிரந்தரப்படை என்பது அரசு என்ற அமைப்புடன் இணைந்த ஒன்று. இது சங்க காலத்தில் உருவாகத் தொடங்கி விட்டதை அறிய முடிகிறது.

சங்க இலக்கியத்தில் `வேந்தர்' என்ற சொல் சேர, சோழ, பாண்டியர்களை மட்டுமே குறித்தது. மேலும் `வம்வேந்தர்' என்ற சொல் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. இது புதிய `வேந்தர்' என்ற பொருளைக் குறிக்கிறது. வேந்தர்கள் புதிதாக உருவானவர்கள் என்பதையே இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். மேலும் வேந்தர்களுக்கு மட்டும் குடை, முரசு, முடி உரியது என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

புதிதாக உருவான அரசு அதன் தலைமையில் உள்ள அரசன். இதன் நிலைபேற்றை உறுதிப்படுத்த சடங்குகள், வேள்விகள் செய்யப்பட்டன. இத்தகைய வேள்விகளை முன்னின்று நடத்தியவர்கள் பிராமணர்கள். குழுநிலைச் சமுதாயத்தில் பிராமணர்களுக்கு இடம் இல்லை. சங்க இலக்கியத்தில் குழுத் தலைவர்கள் வேள்வி செய்ததாகவோ அல்லது பிராமணர்களைக் கொண்டு வேறு சடங்குகள் செய்ததாகவோ ஒரு குறிப்பும் இல்லை. பெரும்பான்மையான மக்களுக்கும், பிராமணர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. பெரும் அரசர்களாகக் குறிப்பிடப்பட்ட சேர, சோழ, பாண்டியர்களே வேள்வி செய்தனர். அவர்கள் அவைகளிலே பிராமணர்கள் இடம் பெற்றனர்.

பிராமணர்கள் பற்றி சங்க இலக்கியம் கூறுவனவற்றை தொகுத்து நோக்கலாம். சங்க இலக்கியத்தில் பிராமணர்கள் அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். பிராமணன் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. பிராமணர்கள் வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

``அறம்புரி கொள்கை நான்மறை முதல்வன்''- புறம் 93

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை

நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26

அந்தணர் வேதம் ஓதுதலை வண்டுகளின் ரீங்காரத்துடன் ஒப்பிட்டு,

``தாதுண் தும்பி போது முரன்றாங்கு

ஓதல் அந்தணர் வேதம் பாட'' - மதுரை காஞ்சி 655, 656

என்று கூறப்பட்டுள்ளது.

வேதம் அறிந்தமை பிராமணர்களின் தனிச்சிறப்பு. தமிழ்ச்சமூகத்தில் வேறு யாரும் வேதம் அறிந்திருந்ததற்கான குறிப்பு ஏதும் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

``ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்'' - (பதிற்றுப்பத்து 24)

என்று குறிப்பிடப்படுகின்றனர். இதுவும் பிராமணர்களின் தனித்தன்மைச் செய்கைகளாக குறிப்பிடப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மேலும் `பிராமணர்கள் அந்திக்காலத்தே, தீயை வளர்ப்பர், தம் கடமையைச் செய்வர்.

``அந்தி அந்தணர் அயர'' - குறிஞ்சிப்பாட்டு 225

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீவிளக்கிற்றுஞ்சும் - புறம் 2

பிராமணர்கள் வேள்வி நடத்தி வைத்த செயல் சங்க இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

``நெய்மலி ஆவுதி பொங்கப் பன் மாண்

வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன்களம் பவகொல்'' - புறம் 15

``வேத வேள்வி துறை முடித்தூ உம்'' - புறம் 224

``வேள்வி முற்றிய கேள்வி அந்தணர்க்கு

அருங்காலம் நீரோடு சிதறி''

``அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்

ஆவுதி நறும்புகை'' - பட்டினப்பாலை 54, 55

வேள்வி செய்விக்கும் சிறப்பு பிராமணர்களுக்கு மட்டுமே இருந்தது. வேறு யாரும் வேள்வி செய்வித்தாகக் குறிப்பு இல்லை.

பிராமணர்கள் தனியாக வாழ்ந்தனர். அங்கு நாய், கோழி போன்றவை இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. கிளிகளுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தனர் என்ற செய்தி கூறப்படுகிறது.

``பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்

மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது

வளைவாய்க்கிள்ளை மறைவிளி பயிற்று

மறை காப்பாளர் உறை பதி'' - பெரும்பாணாற்றுப்படை 298-301

அந்தக் காலத்திலேயே அக்ரகாரங்கள் தமிழகத்தில் தோன்றி விட்டன என்பதை இது தெரிவிக்கிறது.

பிராமணர்களுக்கும், அரசர்களுக்கும் உள்ள தொடர்பு பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

``பார்ப்பார்க்கல்லாது பணி பறியலையே'' (பதிற்றுப்பத்து 63) என்று சேரவேந்தனை சிறப்பித்து கூறப்படுகிறது. பார்ப்பனருக்கு அரசர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தனர் என்பது இதனால் விளங்கும். மேலும் சோழ அரசன் ஒருவன்,

``நின் முன்னோரெல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர்'' - புறம் 43

என்று குறிப்பிடப்படுகிறான். பார்ப்பனருக்கு எந்த தீங்கும் அரசர்கள் செய்யமாட்டார்கள் என்ற செய்தி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. பாண்டிய அரசனுடைய அவையில் பிராமணர் இருந்தனர் என்பதை

``நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26

என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

பிராமணர்கள் அரசனுக்கு அருகில் இருந்து ஆலோசனை கூறி அவனை வழி நடத்தும் இடத்தில் செல்வாக்குடன் இருந்தனர் என்பது சங்க இலக்கியத்தால் அறியப்படுகிறது. இதனை உறுதி செய்து பேராசிரியர் George L.Hart தனது The Poems of Ancient Tamil என்ற நூலில் ``Brahmins seem to have identified themselves closely with the Kings'' (ஞ-54) என்று கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பிராமணர்களுக்கும் புதிதாக தமிழகத்தில் தோன்றிய அரசுக்குமான நெருங்கிய பிணைப்பை உறுதி செய்யும் ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் காணக் கிடக்கின்றன. பிராமணர்களும் அவர்களின் புதிய பண்பாடும், அரசும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும். தமிழக வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து பல்லவர், சோழர் காலங்களில் தமிழ்ச் சமுதாயம் நிலவுடைமை சமுதாயமாக வளர்ச்சியடைந்த பின் அதன் தத்துவமாக பிராமணியம் முழுமை அடைந்து சமூக ஆதிக்கம் பெற்றதை அறிய முடிகிறது.

சங்க காலத்தில் தொடங்கிய பிராமணிய தத்துவ வளர்ச்சியுடன் சமஸ்கிருத மொழியும் தமிழ்ச்சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. பல்லவ, சோழர் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழி கோவில்களில் தமிழைப் புறந்தள்ளி ஆதிக்கம் பெற்றது. தெய்வங்களின் பெயர்கள் சமஸ்கிருதமாயின. வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் நிலைபெற்றது. ஆனால் சாதாரண பொதுமக்கள் வழிபட்டு வந்த கிராமப்புறத் தெய்வ வழிபாட்டில் பிராமணர், சமஸ்கிருத ஆதிக்கம் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் சமூக ஆதிக்க நிறுவனமாக செயல்பட்டன. கோயில்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தினர். அரசனை தலைமையாகக் கொண்ட பெரும் நிலவுடைமையாளர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது சோழர் கால கல்வெட்டுக்களிலிருந்து நன்கு தெரிய வருகிறது. சமூகத்தின் இந்த ஆளும் வர்க்கங்களுக்கு பிராமணியம் தத்துவமாக விளங்கியது. சமூக ஆதிக்க சக்திகள் பிராமணர்களையும், சமஸ்கிருத மொழியையும் ஊட்டி வளர்த்தனர்.

பிராமணிய தத்துவத்தின் ஆதிக்கம் இன்று வரை வலுவாக ஆதிக்கம் செலுத்தி வருவது தெரிந்ததே. பிராமணிய மதம் தான் இந்து மதம் என்று பெயர் பெற்றது. இந்து மதம் என்பது இஸ்லாம், கிறிஸ்தவம் போல் உருவாக்கப்பட்ட மதம் அல்ல. பல்வேறு வழிபாட்டு முறைகள் மற்றும் கடவுள்கள் இணைத்த ஒரு கூட்டு உருவாக்கம் ஆகும். இதுபற்றிய ஆய்வு இன்னும் ஆழமாகவும், அகலமாகவும் செய்யப்பட வேண்டும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

பார்ப்பனரும் தொன்மங்களும்

- மதிமன்னன்

அருப்புக்கோட்டையில் ஓர் அரசுப் பணியாளர். மார்க்சிய அறிவுடன் சீரிய பகுத்தறிவாளர். தீவிர பெரியாரிஸ்ட். தமிழ்நாடு மின் வாரியத்தில் பணி புரிகிறார். ஏதோ ஓர் அமைப்பின் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப் போவதாகவும் அதில் நான் இந்தியா இவன் மதமா? அவன் மதமா? இந்தியா எவன் மதம்? என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றார். அவர் எனக்கு அறிமுகமானவர் அல்லர். என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார். எங்காவது போய்ப் பேசிச் சிக்கலாகிவிடக் கூடாது என்கிற, வழக்கமான பழக்கத்தில் அருப்புக்கோட்டை கழகத் தோழர் விடுதலை ஆதவனிடம் கேட்டேன். தோழர் மதி.கண்ணன் நல்ல பகுத்தறிவாளர், நீங்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம் என்று கூறியதோடு, கலந்துகொள்ள வேண்டும் எனவும் கூறிவிட்டார். நான் ஒப்புதல் தந்தேன்.

கருத்தரங்கம் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு எதிரில் உள்ள வசதியான அரங்கில். காலையில் நான் உள்பட சிலர், மாலையில் சி.பி.அய். தோழர் மகேந்திரன் உள்பட சிலர். கருத்தரங்கத்திற்கு இரண்டு நாள் முன்னதாக மதி.கண்ணன் பேசினார். என் பேச்சைத் தட்டச்சு செய்து அனுப்ப முடியுமா? எனக் கேட்டார். பேச்சை எழுதுவதோ, எழுதி வைத்துப் படிப்பதோ நான் அறியாதது. நான் விரும்பாததும் கூட. என்றாலும் அவர் கேட்ட மாதிரியே செய்து தந்தேன்.

கருத்தரங்க நேரத்திற்கு முன்னதாகவே என் வழமைப்படி சென்று விட்டேன். அரங்கம் செல்லும் வழியில் நூல்கள் விற்பனைக்கடை விரித்திருந்தார் ஒருவர். நான் ஒரு புத்தகப் புழு. புத்தகங்களை மேய்ந்தேன். என் பெயர் போட்ட ஒரு சிறிய நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. எனக்கே வியப்பு. எடுத்துப் பார்த்தேன். நான் பேசப்போகும் பேச்சு நூலாக உள்ளது. இதற்காகத்தான் மதி.கண்ணன் தட்டச்சு செய்து கேட்டார் என்பது அப்போதுதான் விளங்கியது.

நான் பேசினேன். படித்தேன். முப்பது மணித்துளிகள் பேசினேன். கேள்வி நேரம் என்றார்கள். கேள்விகள் கேட்டார்கள். முதல்    கேள்வியே, பார்ப்பனர் என்று மரியாதை இல்லாமல் குறிக்கிறீர்களே, ஏன்? என்பது. பார்ப்பனர், பார்ப்பான் என்பது மரியாதைக் குறைவான சொல் அன்று, நல்ல தமிழ்ச்சொல், இலக்கியத்தில் ஆளப்பட்டுள்ள தூய தமிழ்ச் சொல் என்பதையெல்லாம் விளக்கினேன். திருக்குறள், சிலப்பதிகாரம், குறுந்தொகை ஆகியவற்றின் வரிகளை எடுத்துக்காட்டிப் பதில் இறுத்தேன். அந்தத் தோழருக்குத் திருப்தி இல்லை போலும், துணைக் கேள்வி எழுப்பினார். இங்கிலீஷ் ஏட்டின் ஆசிரியர் பார்ப்பனர் ஒருவர் பெயரைச் சொல்லி அவர் போன்ற நல்லவர்களே உங்கள் கண்களில் படவில்லையா எனப் படபடத்தார். நான் விளக்கம் கூறிப் பேசினேன். (விவரம் நாகரிகம் கருதித் தவிர்க்கப்பட்டது).

பார்ப்பனர் என்று திராவிடர் கழகத்தினரும் தீவிர பெரியாரியவாதிகளும் மட்டுமே விளிக்கின்றனர். மற்றையோர் பிராமணர் எனப் பயன்படுத்துகின்றனர். பெரியார் சொன்னார், அவரைப் பிராமணன் என்று சொன்னால் நம்மைச் சூத்திரன் என்று ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். அந்தச் சொல்லுக்கு எதிர்ச் சொல் இதுதானே! சூத்திரன் என அழைத்துக் கொண்டால், தாசி மகன் உள்பட ஏழு பெயர்களில் ஒன்றை ஏற்றுக் கொண்டதாகி விடுமே! எனவே தவிர்க்கிறோம். ஆனாலும் அதனை வசைச் சொல் எனக் கருதிச் சிலர் கோபப்பட்டனர். இன்னமும் கோபப்படுகின்றனர். சில நாள்களுக்கு முன் சீரங்கத்தில்கூட 23 பேர் கொண்ட மாபெரும் மக்கள் திரள் முன்பு நின்று பேசிய பேச்சாளர் கூடப் பேசினாராம். சீரங்கம் அல்லவா? பேச்சு தடை இல்லாமல் அவர்கள் பேசலாமே! அதனால்!

ஆனால் உண்மை என்ன?

கற்றோய்த் துடுத்துப் படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப நிற்போர் எனப் பாடுகிறது முல்லைப் பாட்டு.

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பாக்கமும் என விளக்குகிறது தொல்காப்பியம்.

ஆறுவகையான பார்ப்பனர் யார் என்பதை விளக்குகிறது நம்பியகப் பொருள் (பாடல் 213) தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலியென்றீங் கிங்கறுவரும் சாற்றிய களவில் கூற்றிற் குரியர் என்கிறது பாடல் வரிகள்.

ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல் (தனக்காக), வேள்வி செய்தல்(பிறர்க்காக) ஈதல், ஏற்றல் எனும் ஆறு செயல்களைப் புரிவோர் இவர்கள் எனப் பதிற்றுப் பத்து கூறுகிறது.

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
என்று குறுந்தொகை (பாடல் 156) பாடுகிறது.
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
நெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்
என்று ஒலிக்கிறது சிலப்பதிகாரம்.

பார்ப்பினி எனப் பார்ப்பனப் பெண்ணைஅழைப்பதை பாசண்டன் யான் பார்ப்பினி தன்மேல் என்று சிலப்பதிகாரமே காட்டுகிறது.

மாபெரும் பாத்திரம் பார்ப்பினி சாவி

கப்புடைக் கழித்து வருவோன் என்று இரட்டைக் காப்பியத்தில் மற்றொன்றான மணிமேகலை கூறுகிறது.

பார்ப்பார் தவறே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தோர் இளையார் பசுப்பெண்டிர்

என்று ஆசாரக்கோவை பலவீனமானவர்களைப் பட்டியல் போடுகிறது.

பார்ப்பார் மறை ஓதுக என்றும் பார்ப்பனக் குறுமகன் போலத்தாமும் என்றும் அய்ங்குறுநூறு கூறுகிறது.

வேள்விப் பாகம் உண்ட பைங்கப் பார்ப்பான் என்று அவிர்பாகம் உண்ட அய்யரைக் குறிப்பது பரிபாடல்.

திருந்துகேளாய் முழுதிர்தமுது பார்ப்பான் அஞ்சின முதுபார்ப்பான் என்று கலித்தொகை வருணிக்கிறது.
நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்கார் என்று நைச்சியமாகப் பார்ப்பான் பேசியதைப் புறநானூறு (பாடல் 43) காட்டுகிறது.

வேளாப் பார்ப்பான் வாவரந்துமித்த என அகநானூறு பேசுகிறது.

மாலதியும் பார்ப்பானொடு, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, பார்ப்பன வாகை குடியேற்புற என்பனவெல்லாம் சிலம்புப் பரல்கள். படுபொருள் வவ்விய பார்ப்பான் இவன் என இடுசிறை கோட்டத்து இட்டார் என்று கூறுவதும் சிலப்பதிகாரம் தான்!
இலக்கியச் சான்றுகளை இன்னும் ஏராளம் காட்டலாம். என்றாலும், அவாள் திட்டுகிறோம் என்றே நினைத்து நடந்து கொள்கிறார்கள். இதற்காகவே சிலர், பிராமணர் என்று சொல்லாமல் பிராமின் என்று இங்கிலீசில் சொல்லி... அவர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்!

இலக்கிய அறிவும் ஆய்வுப் பட்டறிவும் நிரம்பப் பெற்ற பேராசிரியர்கள் பலரின் கருத்து, சங்ககாலம் தொடங்கி இன்றுவரை பொருள் மாறாமல் நின்று நிலவிடும் சொற்கள் பரதவர் என்பதும் பார்ப்பனர் என்பதும் மட்டுமே என்கின்றனர். கடலோரத்தில் வாழ்ந்துகொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவோர் பரதவர் என்றே இன்றுவரை குறிக்கப் பெறுவதைப் போலவே பார்ப்பனர் என்பதும் ஈராயிரம் ஆண்டாக நிலைபெற்றுள்ளது என்பதே பெருமைக்குரியதாக அல்லவா கருதப்பட வேண்டும்! பார்ப்பனரின் வாதூல கோத்ரம் வாதூளி என்றும் பாரத்வாஜ கோத்ரம் நெடும்பாரதாயன் எனும் பெயராலும் கவுண்டில்ய கோத்ரம் கவுணியன் எனும் பெயராலும் கவுதம கோத்ரம் கோதமன் என்ற பெயராலும் இலக்கியங்களில் காணப்படுகிறதே!

பசுமாடுகளைக் கயிற்றால் பிணைத்து ஓரணியில் கட்டப்பட்ட நிலைக்குக் கோத்ரம் என்று வடமொழியில் கூறுவர். பசுக்களை மேய்த்துக் கொண்டு இங்கே நுழைந்தவர்கள் இன்றளவும் அதையே தங்களுக்கான அடையாளமாக _ இனக் குழுப் பெயர்களாக வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அதைத் தமிழ் இலக்கியம் பொத்தி வைத்துத் தருகிறது. அவை மட்டும் இனிக்கின்றன, பார்ப்பான் மட்டும் கசக்கிறது என்றால்... ஏன் இந்த இரட்டை நிலை?

வேள்வி செய்யாத பார்ப்பனர்களும் இருந்ததை வேளாப் பார்ப்பான் எனும் சொல் பிரித்துக் காட்டுகிறது. இன்றளவும் அண்ணாவிப் பார்ப்பனர்கள் என்ற பெயரில் வேதமே படிக்கக் கூடாத பார்ப்பனர்களும் இருக்கிறார்களே! கந்துவட்டித் தொழில் மட்டுமே செய்யக்கூடிய, செய்ய வேண்டிய கல்லிடைக் குறிச்சிப் பார்ப்பனர்கள் இருக்கிறார்களே! வேளாப் பார்ப்பான் வாள் அரந்துமிய எனும் அகநானூற்று வரிகள் (பாடல் 94) சங்கறுத்துப் பிழைத்த பார்ப்பனர்களைக் குறிப்பிடுகிறதே! சண்டையிடும் அரசர்க்கிடையே தூது சென்ற பார்ப்பனர்களையும், காதல் வயப்பட்ட தலைவன் தலைவியிடையே தூதுபோன பார்ப்பனர்களையும் தூதொய் பார்ப்பான் என்று அகநானூறு (பாடல் 337) அறிமுகப்படுத்துகிறதே! (படிக்க: பண்பாட்டு அசைவுகள் -_ பேரா.தொ.பரமசிவன்)

வேதத்தைப் பார்ப்பதால், பார்ப்பான் என வந்தது எனச் சில பேராசிரியர்களின் கூற்று. பார்ப்பும் பறழும் பறப்பவற்றில் இளமை என்கிறது தொல்காப்பியம். எனவே பார்ப்பார் எனும் சொல்லுக்கு இளையர் என்பதே பொருள் என்கிறார் பேரா. தொ.பரமசிவன்.

அவரே எழுப்புகிறார், பார்ப்பார் யாருக்கு இளையர்? அவருக்கு மூத்தவர் யார்?

விடையை இலக்கியத்தில் தேட இயலாது. கள ஆய்வுதான் விடைகாண துணை செய்யும் என்கிறார், அவரே! தென் மாவட்டங்களில் வழங்கும் சொல்லடையைச் சுட்டிக் காட்டுகிறார்: பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச்சாதி ஆனான் எனும் சொல்லடை ஒரு காலத்தில் பறையர் பெற்றிருந்த சமூக உயர்வுக்கான சான்றாகும் என்கிறார். (அதே நூல் பக்கம் 180) பறை எனும் இசைக்கருவியை இசைத்ததால் பறையர் எனும் பெயரைப் பெற்ற மக்கள் பார்ப்பனர்க்கு மூத்தவராக இருந்த நிலை மாறி, இன்றைக்கு இழி நிலைக்குத் தள்ளப்பட்டது எவ்வாறு?

வரலாறு எங்காவது இதுபற்றிப் பேசுகிறதா? சிறு குறிப்பாவது உள்ளதா? வரலாறு என்பதே, ஆள்வோரின் வரலாறாக, அரசுகளின் வரலாறாக, அரசர்களின் வரலாறாக மட்டும் தானே உள்ளது? சாம்ராஜ்யங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்தான் வரலாறாக உள்ளது என்பதுதான் மேலைநாட்டுப் பேராசிரியர்களின் கருத்து. எல்லாமே வர்க்கப் போராட்டங்களின் வரலாறு எனக் கூறிவிட்டார் கார்ல் மார்க்ஸ்.

அப்படியானால் சாமான்யர்களின் வரலாறு எங்கே தெரியும்? அவர்களின் நினைவுகளில் தங்கி, தேங்கி சடங்குகளாக, கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாகத் தெரிய வருகின்றன. புராண, இதிகாசங்கள் என்பவை யெல்லாமே புனைவுகளாகவும் புளுகுகளாகவும் உள்ளன. தன்னல ஆதிக்கச் சக்திகள் இவற்றை ஆக்ரமித்துத் தங்களின் வக்கிரத்தைத் திணித்துப் புகுத்திப் பரப்பி வெற்றி பெற்றன. அவற்றை வரலாறு என்று மதவாதிகள் கூறிக் கொண்டிருக்கின்றனர் இந்தியாவில்!

இலியது, ஒடிசி போன்ற மேலைநாட்டு இதிகாசங்கள் வரலாறு எனும் அந்தஸ்தைப் பெறவில்லை. அந்நாட்டில் அறிவுள்ளோர் அதிகம். அதனால், நேர்மாறான நிலை இங்கு. ராமன் பெயரால் அரசியலே நடக்கிறது 100 ஆண்டாக. கிருஷ்ணன் ஆண்ட துவாரகா எங்கே என்று கடலுக்குள் போய் ஆய்வு நடத்த குஜராத் அரசு திட்டம் போடுகிறது. சரசுவதி நதி எங்கே என, கோடிக்கணக்கில் கொட்டி வீணாக்கிய வாஜ்பேயி போல! இதிகாசம் என்றால், நடந்த வரலாறு என்று அரும்பத உரை தருகிறது பாபநாசத்துப் பத்தாம் வகுப்புப் பெயில் பார்ப்பனன் சிறீ சிறீ ரவிசங்கர் எனும் பார்ப்பனர்!

மக்கள் சமூகத்தின் கடந்தகால வாழ்வு அனுபவம், முரண்கள், சிந்தனைப் போக்கு, போன்ற பலவற்றைத் தொன்மங்களில்தான் (MYTH) கட்டி வைத்துள்ளது. உலகச் சமுதாயம் முழுமையுமே இம்மாதிரித் தொன்மங்களைக் கொண்டுள்ளது. பிரளயம், உலகம் அழிவு, மீளவும் உயிர்ப்பு ஏற்பட்டமை பற்றிய யூத, கிறித்துவ இனத்தாரின் தொன்மங்கள் போலவே (இந்திய) இந்து இனத்தாரின் தொன்மங்களும் அமைந்துள்ளதை ஒப்பு நோக்கலாம்.

அப்படிப்பட்ட தொன்மங்கள், பார்ப்பனர் (பிரமனின்) படைப்புக் கடவுளின் வாயிலிருந்து வந்ததாகக் கூறும். அத்தோடு நிறுத்தி அந்தச் சமூக உயர்வைக் கூறிப் பெருமைப்படுவதோடு நில்லாமல், பிற சமூகத்தவரைக் கீழ்ப்படியில் நிறுத்திக் கீழானவர்களாக்கும் தீய எண்ணத் தொன்மமாகவும் அமைந்துள்ளது நேர் மாறாக கேரளாவில் உள்ள அடித்தள மக்களின் தொன்மம், பறையர்களை மூத்த பிராமணன் என்று கூறுகிறது.

தமிழ்நாட்டின் தொன்மம் இதுதான்: அண்ணனும் தம்பியுமாக இரு பார்ப்பனர்கள். அண்ணன் கோவில் அர்ச்சகர். கடவுளுக்குப் படையலாகத் தினமும் பொங்கல் செய்வார். பொங்கல் செய்யும்போது அங்கொரு பசுமாடு வந்து நிற்கும். அதன் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் எடுத்து பொங்கலுடன் கலந்து ரத்தப் படையல் நடத்துவார் அர்ச்சகர். பொங்கலைக் கடவுளா தின்கிறது? சும்மா காட்டிவிட்டுத் தன் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவார். தம்பி, தன் மனைவி ஆகியோருடன் அர்ச்சகரும் தின்பார்.

மாடு வருவதையும் ரத்தம் எடுப்பதையும் தூரத்தில் இருந்து பார்த்தவர்கள், தம்பியிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர். உன் அண்ணன் மாட்டை அறுத்து மாட்டுக்கறி உண்டுவிட்டு உங்களுக்கு மட்டும் அரிசிப் பொங்கலைத் தருகிறான் என்று வத்தி வைத்தனர். இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் மூத்தவன் மனைவி. முழுகாமல் இருந்த அவளுக்கு மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. கணவனிடம் கண்டிஷன் போட்டுக் கேட்டாள் மாட்டுக்கறி கொண்டு வரவேண்டும் என்று. மசக்கைக்காரி மனதில் தோன்றும் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பது மரபு. அர்ச்சகர் மாட்டை அறுத்தான். கறி சமைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தான். அண்ணன் மாட்டை அறுத்துக் கறியாக்கிப் பொங்கலில் கலந்து வீட்டுக்கு எடுத்துப் போவதை மறைந்திருந்து தம்பி பார்த்து விட்டான். பொங்கலைச் சாப்பிட மறுத்துவிட்டான். அறுபட்ட பசுமாடும் செத்துவிட்டது.

செய்தி அறிந்த ஊரார் பஞ்சாயத்துக் கூட்டினார்கள். செத்த மாட்டை அர்ச்சகரே அப்புறப்படுத்த வேண்டும், ஊரைவிட்டுப் போய்விட வேண்டும் என்று தீர்ப்பானது.
அண்ணனாகிய அர்ச்சகப் பார்ப்பான் ஊரைவிட்டுப் போகும்போது, ஒருவர் கேட்டாராம், இனிமேல் கோவிலைப் பார்ப்பது யார் என்று! என் தம்பி பார்ப்பான் என்று கூறிவிட்டுப் போய்விட்டானாம்.

வேற்றூருக்கு வந்த அண்ணனுக்கு ஊர்க்காவல் பணியும் ஊர்க்கூட்டத்திற்கு மக்களுக்குச் சேதி தெரிவிக்கும் பணியும் ஒதுக்கித் தரப்பட்டதாம். தன் பணியை எளிதாக்கும் வகையில் பறை ஒன்று செய்து அதனைப் பயன்படுத்தினானாம். அதனால் அவனைப் பறையன் என்று அழைத்தார்களாம். (படிக்க: THE MYTHS OF ORIGIN OF THE INDIAN UNTOUCHABLES - ராபர்ட் டெலீஜ் எழுதியது)

அதுசரி, பார்ப்பனர் மாட்டிறைச்சி உண்பார்களா? உண்டார்கள் என்பதற்கு வேதங்களும், அய்ந்தாம் வேதமான பாரதமும் நிறைய சான்றுகளை வைத்துள்ளன. போதாக்குறைக்கு இந்துமதம் எங்கே போகிறது என்று கேட்டு அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரி பிட்டுப்பிட்டு வைத்துவிட்டார்.

இதோ வரலாற்றுச் சான்று: பார்ப்பனர்கள் பஞ்ச திராவிடர் என்றும் பஞ்சகவுடர் என்றும் இருபெரும் பிரிவினராம். இவர்களில் பஞ்ச திராவிடர்கள் கறி தின்ன மாட்டார்கள். பஞ்ச கவுடர்கள் மீனும் ஊனும் உண்பவர்கள். ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களில் இவர்கள்தாம் நிறைந்திருக்கின்றனர்.

பொதுவாகப் பார்ப்பனர்கள் ஏழு முனிவர்களின் சந்ததியினர் எனும் தொன்மம் இருக்கிறது. அத்ரி, பிருகு, குத்சர், வசிஷ்டர், கவுதமர், தாச்யபர், ஆங்கிரசர் என்போர் முனிவர்கள். வேறு ஒரு தொன்மத்தின்படி குத்சர் இல்லாமல் அகஸ்தியருக்கு இடம் உண்டு. இம்முனிவர்களைச் சேர்ந்த 18 கணங்களும் (CLAN) சுமார் 230 கோத்ரங்களும் உண்டு.

பார்ப்பனர்கள் ஒரே ஜாதியினர் அல்ல. அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் எனும் மூன்று பிரிவினர் மட்டுமல்ல. இவர்களில் மொத்தம் 1886 உள் பிரிவுகள் (SECTS) உள்ளன.

புதுவைப் பல்கலைக்கழக, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ச.பிலவேந்திரன் தொகுத்து வெளியிட்ட சனங்களும் வரலாறும் எனும் நூலில் பல்வேறு தொன்மங்களைப் படித்தறியலாம்.

பனைமரம் தமிழ்நாட்டின் அரச மரம் (STATE TREE). சிறிதளவு நீர் இருந்தாலும் அல்லது நீரே இல்லாமல் போனாலும் பனை வாழும். வளரும். சிறுநீர் கழித்தாலும் அதைக் கொண்டே வாழும் எனப் பனை மரத்தைச் சிறப்பித்துப் பேசுவர். அதனால் தந்தை பெரியார் தம் கழகத்தை /இயக்கத்தைப் பனை மரத்துக்கு ஒப்பிட்டார். அந்தப் பனை மரத்தைப் பார்ப்பனரோடு தொடர்புபடுத்திய தொன்மம் ஒன்றும் உண்டு. குமரி மாவட்ட நாடார் மத்தியில் வழங்கி வருகிறது.

காட்டில் சுனை ஒன்றை உருவாக்கி வலங்கையர்களைக் காளை வளர்த்து வந்ததாம். அச்சுனை நீரை ஒரு பார்ப்பனனும் அவன் மனைவியும் குடித்தனராம். ஆத்திரம் கொண்ட காளி, அத்தம்பதியினரைத் தலைகீழாக நட்டுவிட்டதாம். அவையே ஆண்பனையாகவும் பெண்பனையாகவும் இருக்கின்றனவாம்.

பனை மரம் ஏறும் தொழிலை இழிவான தொழிலாகக் கருதும் உயர்ஜாதி மனோபாவத்தைப் பழிதீர்க்கும் செயலாக இக்கதை கட்டப்பட்டிருக்கலாம். பதநீர் இறக்கப் பனை மரத்தில் ஏறும் ஆண், பார்ப்பனப் பெண் ஒருத்தியைக் கட்டிப் பிடித்துத் தழுவி ஏறுகின்றனர் எனும் நிலையையும் இக்கதையில் பொதிந்து வைத்துள்ளது இத்தொன்மம்.

உயர்வு கற்பித்துக் கொண்டு மற்ற சமூகத்தினரை இழிவு செய்யும்போது, மிதிபடும் புழுகூட கொட்டும் என்பதைப்போல பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் இத்தகைய பழிதீர்க்கும் தொன்மங்களை உருவாக்கி விட்டனரோ!

 

இந்தத் தொன்மங்களும் புராண, இதிகாச அந்தஸ்து பெற்றுவிட்டால், சம்பூகன் கொலை, தாடகை வதம், சூர்ப்பநகை மானபங்கம் போன்றவற்றிற்குப் பழிதீர்க்கும் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு ராமாயணம் போலவே உலகெங்கும் பரப்பப்படலாம் அல்லவா?



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

#இங்கு_ஒருகதை_ரொம்பநாளாக_ஓட்டப்பட்டு_வருகிறது:

பிராமணன் முகத்தில் இருந்து பிறந்தான்; 
சூத்திரன் காலில் இருந்து பிறந்தான்

.....இப்படி சொல்வது இந்து மதம் (புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள்). 
பிராமணன் தலையில் பிறந்தான்; 
சத்திரியன் தோளில் பிறந்தான்; 
வைஷியன் தொடையில் பிறந்தான்; 
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்!

-இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்

#உண்மை_என்ன?

உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது.

சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டிவிடும் போது. சமஸ்கிருதம் அறிந்து அடியேனால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும்.

#புருஷ_சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:

‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” 
- (ரிக் வேதம் 10-90-12)

#ஸ்லோகத்தின்_பொருள்:
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் #முகமானது_ஞானம்_பெருகி_தேஜசாகஇருத்தல் வேண்டும்.

இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு #சத்திரியன் #தோளானது#பிரம்மதேவரின்_தோள்_போல வலிமையானதாக இருத்தல் வேண்டும்.

அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.

வைஷியனானவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல #தீர்க்கமாக_வலிமையான_தொடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.

சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும். மேலும் பல தொழிலில் சிறக்க அவனுக்கு வலிமையான #பாதங்கள்வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.

இதில் #பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?

மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது?

வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை 
– மனு தர்மம்:

பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

“ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே,

தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்).

இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.

இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
ஜன்மனா – பிறப்பால்;
ஜாயதே – பிறந்த அனைவரும்; 
சூத்ர – சூத்திரரே; 
கர்மணா – தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ – இருபிறப்பாளனாக; 
ஜாயதே – பிறப்பாளன் ஆகிறான்.

#நன்றி -திரு.லி.முனீஸ்வர சாஸ்திரிகள்.

— ஆத்திகன் உடன்.


__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

"தமிழனுக்கு கடவுள் இல்லை..."
"வழிபாடு இல்லை.."
"மதம் இல்லை."
"தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்."
இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். இதோ சில உண்மைகள்.

சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.
முத்தமிழ் சங்கங்களும் பொய்யே...

பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...

கண்ணகி இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே...

பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய். அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே...

இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய். அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...

இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே...

இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமத்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே.

மொத்தத்தில் இந்து சமயமும், இந்துக் கடவுள்களும், இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?

உடனே..........
இந்து என்பது அண்மையில் வந்தது.
இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே!

இந்து என்பது எமது எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர். இதில் தமிழரின்..

சூரிய வழிபாடு..
நடுகல் வழிபாடு..
சந்திரன் வழிபாடு..
மர வழிபாடு..
மலை வழிபாடு..
பஞ்ச பூத வழிபாடு..
பேய் வழிபாடு..
குலதெய்வ வழிபாடு..
நாக வழிபாடு..
காளை வழிபாடு..
யக்ஷ வழிபாடு...
சிவ வழிபாடு..
முருக வழிபாடு..
மாயோன் வழிபாடு..
அம்மன் வழிபாடு..
இந்திரன் வழிபாடு..
வருணன் வழிபாடு..
விநாயகர் வழிபாடு..

ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது. மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்!                                                                           
- அப்பர் பெருமான்

 இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர் -                    சிவஞான யோகியார்

என் தம்பி மகனுக்கு நான் உத்தரா என்று பெயர் வைத்தேன். உத்தரா எனும் பெயருக்கும் எனக்கும் என்ன தொடர்பு. உத்தரா எனும் பெயர் பறையர்களோடு தொடர்புடைய பெயரா?

உத்தரா என்பது சாக்கிய பெயர்!

புத்தர் கண்டறிந்த விபஸ்ஸனா தியான முறையை உலகம் முழுக்க மக்கள் மறக்க நேரிடலாம் என்றும் அந்த முறையை வேறு எந்த கலப்பும் இல்லாமல் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றும் சாம்ராட் அசோகர் விரும்பினார். அதற்கு ஒரு குழுவை நியமித்தார். அவர்களை உலகின் பல நாடுகளுக்கு அனுப்பினார்.

உத்தரா, சோனா எனும் இரண்டு சாக்கிய குல அறவனர்களை (சமனர்களை) சாம்ராட் அசோகர் விபஸ்ஸனா தியான முறையை பாதுகாக்க ஸ்வர்ன பூமிக்கு அனுப்பி வைத்தார். இந்த இருவரும் அவர் வழி வந்த அறவோர்களும் கடந்த 2500 வருடங்களாக அந்த தியான முறையை பாதுகாத்து வந்தனர். தற்போது அது உலகம் முழுக்க மீண்டும் பரப்பப்படுகிறது.

விபஸ்ஸனா எனும் வாழ்வியல் கலையை பாதுகாக்க காரணமாக இருந்த உத்தரா எனும் அறவனடிகள் பெயரை அவர் ஞாபகார்த்தமாகவும் நன்றி உணர்வுடனும் என் தம்பி மகனுக்கு அந்த பெயரை வைத்தோம்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard