பரிபாடல்:
ஆசிரியம், வெண்பா, வஞ்சி, கலிப்பா ஆகிய நான்கு பாக்களைக்கூறும் தொல்காப்பியர் அவற்றையும் வஞ்சி ஆசிரியப்பா நடையுடையது எனவும், கலிப்பா வெண்பா நடையுடையது எனவும் கூறி நான்கையும் முதல் இரண்டினுள் அடக்கிவிடுகிறார். மேலும் மருட்பா, பரிபாடல் என இரண்டைக்கூறுகிறார். ஆசிரியமும் வெண்பாவும் கொண்டு அகப்பொருட் கைக்கிளையாக வருவது மருட்பா எனவும், அதுபோன்றே பரிபாடலும் கலந்து வருவது எனவும் கூறுகிறார். தொல்காப்பியர் கூறும் எண்வகை வனப்பினுள் பரிபாடல் ‘இழைபு’ என்ற வனப்புக்குரியது என்பது மரபாகும். பரிபாடலானது உருக்கமுடைய பரிந்துவரும் பாட்டகும். புகழை ஏற்று வருவது, நெகிழ்ந்து வருவது எனவும் பொருள்படும். பரிபாடல் என்பது இசைப்பாடலாகும். இப்பாடல்கள் இன்பத்தையே பொருளாகக்கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியனவற்றை உரைக்கின்றன. அடியார்க்கு நல்லார் எத்தனையோ பரிபாடல்கள் இருந்து இறந்து போயின எனக்கூறுவதால் சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் பல பரிபாடல்கள் இருந்து அழிந்து போயின எனலாம். 70 பரிபாடல்களில் இன்று 22 பரிபாடல்கள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. இந்த பரிபாடல்களுள் தை நீராடல் குறித்தும், முருகனிடத்துப் பொன்வேண்டாது அருள்வேண்டுவது குறித்தும் பேசுகிற இரண்டு பாடல்கள் சிறப்பானவை.
2000 ஆண்டுகளுக்கு முன்பே பாடலைப்பாடியவர் ஒருவராகவும், அப்பாடலுக்கு இசையமைத்தவர் வேறு ஒருவராகவும் இருந்தனர் என்பதைப் பரிபாடல் நமக்குத் தெரிவிக்கிறது. இது பரிபாடலின் சிறப்பம்சமாகும். இசையில் இது ஒரு வளர்ந்த நிலையாகும். சிலப்பதிகாரத்துக்கு உரைதந்த அடியார்க்கு நல்லார் எத்தனையோ பரிபாடல்கள் இருந்து அழிந்து போயின எனக் கூறுவதாலும், பரிபாடலில் பலவகைகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது என்பதாலும் தமிழகம் பண்டைய காலத்திலேயே இசையில் மிக உயர்ந்த உன்னத நிலையை அடைந்திருந்தது என்பது உறுதியாகிறது.
எண்&பாட்டுவகை இசை - பாடலாசிரியர் - இசை வகுத்தோர்
2 கடவுள்வாழ்த்து பண்ணுப்- கீரந்தையார் - நன்னாகனார்
3 ‘’ -பாலையாழ் கடுவன் இள- பெட்டாகனார்
4 ‘’ ‘’ -வெயினார் ‘’
5 ‘’ “ “ கண்ணனாகனார்
6 அகப்பாட்டு “ ஆ.நல்லந்துவனார் ம.நல்லச்சுதனார்
7 “ “ மையோடக் கோவனார் பித்தாமத்தர்
8 கடவுள்வாழ்த்து “ ஆ.நல்லந்துவனார் ம.நல்லச்சுதனார்
9 “ “ குன்றம் பூதனார் “
10 அகப்பாட்டு “ கரும்பிள்ளை பூதனார் “
11 “ “ ஆ.நல்லந்துவனார் நாகனார்
12 “ “ நல்வழுதியார் நன்னாகனார்
13 கடவுள்வாழ்த்து நோதிறம் நல்லெழுனியார் -இல்லை-
14 அகப்பாட்டு நோதிறம் கேசவனார் கேசவனார்
15 கடவுள்வாழ்த்து “ இளம்பெருவழுதியார் ம.நல்லச்சுதனார்
16 அகப்பாட்டு “ நல்லழிசியார் நல்லச்சுதனார்
17 கடவுள்வாழ்த்து “ “ “
18 “ காந்தாரம் குன்றம் பூதனார் “
19 “ “ நப்பண்ணனார் ம.நல்லச்சுதனார்
20 அகப்பாட்டு “ ஆ.நல்லந்துவனார் நல்லச்சுதனார்
21 கடவுள்வாழ்த்து “ நல்லச்சுதனார் கண்ணகனார்
குறிப்பு:
மேற்கண்ட அட்டவணையில் 20 பரிபாடல்களுக்கான தரவுகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அதில் உள்ள ஆ.நல்லந்துவனார் என்பதில் உள்ள ஆ என்பது ஆசிரியர் ஆகும். ம.நல்லச்சுதனார் என்பதில் உள்ள ம என்பது மருத்துவர் ஆகும். மொத்தம் உள்ள 70 பாடல்களில் திருமால் குறித்து 8 பாடல்களும், செவ்வேள் குறித்து 31 பாடல்களும் ஆகிய இந்த 39 பாடல்களும் கடவுள் வாழ்த்துப்பாடல்களாகும். வையை குறித்து 26 பாடல்களும் மதுரை குறித்து 4 பாடல்களும் காடுகாள் குறித்து 1 பாடலும் ஆகிய 31 பாடல்களும் அகப்பாட்டுகளாகும். பரிபாடலில் திருமால், செவ்வேள் ஆகிய இரு தெய்வங்கள் மட்டுமே பாடப்பட்டுள்ளன. பண்டைய குமரி நிலப்பரப்பில் கந்தன் கோயிலும், திருமால் கோயிலும் மட்டுமே இருந்தன என ஆகமங்கள் கூறுகின்றன. பண்டைய தமிழர்கள் இந்த இரு தெய்வங்களையும் போர் தெய்வமாகவும், காக்கும் தெய்வமாகவும் வணங்கினர்.
பண்ணுப்பாலையாழ் என்பது பாலைப்பண் ஆகும். அது மங்கலப்பண் என சிலப்பதிகாரம் கூறும். நோதிறம் என்பது நொந்ததிறம் ஆகும். அது பாலைப்பண்ணின் திறம் ஐந்தினுள் ஒன்று ஆகும். கலித்தொகை பாடல் 77 இதனை நோய் செய்ததிறம் எனக் குறிப்பிடுகிறது. கேசவனார், நல்லச்சுதனார் ஆகிய இருவரும் பாடலாசிரியராகவும், இசையாசிரியராகவும் இருந்துள்ளனர். ஒருவரே பலரின் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். ஆதலால் இசைப்பாடல் பாடுவதும் அதற்கு இசை அமைப்பதும் மிகுதியாக நடந்திருக்கவேண்டும். பரிபாடலின் பெரும்பாலான பாடல்கள் அழிந்து விட்டன என்பதால் பரிபாடல் போன்ற பல இசைப்பாடல் நூல்கள் அழிந்து விட்டன எனலாம். இவற்றின் காலம் சங்கம் மருவிய காலமாகும். அதாவது கி.மு. 50 முதல் கி.பி 250 வரையான காலமாகும். இப்பரிபாடலுக்கு மிகச் சிறப்பானதோர் உரையை பரிமேலழகர் செய்துள்ளார்.
பரிபாடலில் உள்ள இசைகளின் பெயர்கள் தெரிகின்றனவே ஒழிய தேவாரப்பண்களைப் பாடுவதுபோல் அதனைப்பாட இயலவில்லை. பரிபாடலைப்பாடும் முறை இன்று மறைந்துவிட்டது. இதுவரை அதனை அறிந்து யாரும் பாடவில்லை. அதுபோன்றே பரிபாடல் இலக்கியம் செய்ய யாரும் முயன்றதும் இல்லை. பரிபாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது என்பதும் அவ்விசை மறைந்து போனது என்பதுமே அதன் காரணமாகும். ஆனால் பாப்பாவினம் என்ற நூலில்(16ஆம் நூற்றாண்டு) திருக்குருகைப் பெருமான் கவிராயர் என்பவர் பலவகையான யாப்புகளுக்கு இலக்கணம் கூறியுள்ளார். அதில்பண்டைய பரிபாடல் இலக்கணத்தை மேற்கோள் காட்டி ஐந்து பாடல் செய்துள்ளார். ஆனால் அவைகளுக்கு அவர் இசை கூறவில்லை. இப்பாடல்களில் பெரும்பகுதி கலிப்பாக்களே ஆகும். சங்கம் மருவிய காலத்திற்குப்பின் ஆட்சிக்கு வந்த களப்பிரர் காலத்தில் இசை அடக்கப்பட்டதால் பரிபாடல் போன்ற இசைப்பாடல்கள் அழிந்து போயின. பிற்காலத்தில் பரிபாடல் வழக்கிற்கு வந்தபோது கந்தியாருடை இடைச்செருகல்களும், எழுதினோர் பிழைகளும் சேர்ந்துகொண்டன எனலாம். களப்பிரர் காலத்திற்குப்பின் கந்தியார் தான் பரிபாடலை வெளி உலகிற்கு கொண்டுவந்தவர் ஆவார் எனவும், இந்நூல் களப்பிரர் காலத்திற்கு முந்தைய நூல் எனவும் கூறுகிறார் மு. அருணாசலம் அவர்கள்-(2).
பரிபாடலின் இசையை அறிய முடியாதிருப்பதும், தேவாரப் பண்களைப்பாடுவதுபோல் இன்று பரிபாடலைப்பாடுவது இயலாதிருப்பதும், பாடும்முறை மறைந்து போயிருப்பதும், பரிபாடல்கள் பக்திக்காலத்திற்குப் பலநூற்றாண்டுகளுக்கு முந்தியன என்பதை உறுதிப்படுத்துகின்றன. களப்பிரர்கள் காலத்தில் அரசு நிலை திரிந்து பரிபாடல் போன்ற இசைப்பாடல்கள் பாடுவது அழிந்து போய்விட்டது எனவும் அதன்பின் வந்த கந்தியார்தான் இதனை வெளிக்கொண்டு வந்தார் எனவும் கருதப்படுவதால் இந்நூல் களப்பிரர் காலத்திற்கு முந்திய படைப்பாகும் என உறுதிபடக் கூறலாம். மு. அருணாசலம் அவர்களும் இந்நூல் களப்பிரர் காலத்திற்கு முந்தையது என்றே கருதுகிறார்.
பரிபாடலில் மிடற்றுப்பாடல், வாத்தியம், சுருதியாகப்பயன்பட்ட குழல் ஆகிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. வங்கியம் என்கிற குழல் ஏழு துளை, ஐந்து துளை என இருவகைப்படும். விளம்பித நடையுடைய தாளகதி மென்னடையாகச்செல்லும் என்பது சொல்லப்படுகிறது(10:24-25). பாணி எனும் தாளம் சொல்லப்படுகிறது. குரல், உழை, இளி ஆகியவற்றின் இலக்கணமும் உறவும் சிலப்பதிகாரத்தில் உள்ளதுபோல் கூறப்பட்டுள்ளது. இடமுறையால் குரலுக்கு ஐந்தாவதாக வரும் உழை இளிக்கு கிளையாயிற்று என்பது சொல்லப்பட்டுள்ளது. விளரியாழ், யாமயாழ் முதலியன சொல்லப்படுகிறது. யாமயாழ் என்பது இரவின் முதல் யாமத்தில் இசைப்பதற்குரியது. குழல், முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி(தாளம்) முதலிய இசைக் கருவிகள் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது(12:40-42). நைவளம்(நட்டபாடை) என்ற பண் குறிப்பிடப்படுகிறது. குழலொழியும் மிடற்றுப்பாடலும் குயில் கூவுவதற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை என்பதும் தாள ஒலியும், முழவொலியும் மயில் கூவுவதற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை என்பதும் சொல்லப்படுகிறது(15:42-43).
சிலப்பதிகாரம்:
இதன் காலம் சங்கம் மருவிய காலமாகும். சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் ஒரு பெருங்கருவூலம். தமிழிசைக்கு இன்றுள்ள ஒரே ஆதார நூலாகவும், பெரியதோர் இசைச்சுரங்கமாகவும் பொருட்களஞ்சியமாகவும் இன்றும் விளங்கிவரும் இயல்பு வாய்ந்தது சிலப்பதிகாரம். இப்பகுதிக்கான அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் முழுமையாகக் கிடைத்துள்ளன. நாடகத்தமிழ் என்பது இன்று நாம் கருதுகிற நாடகம் அல்ல. அது நாட்டியம். அரங்கேற்று காதையில் கூத்து ஆடுகிற கூத்தியினுடைய அமைதி, ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, கவிஞன் அமைதி, தண்ணுமையாசிரியன் அமைதி, குழலோன் அமைதி, யாழாசிரியன் அமைதி, அரங்கின் அமைதி, அரங்கிலே புகுந்து ஆடுகிற இயல்பு ஆகிய அனைத்தையும் குறித்தான தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நாட்டியத்திற்கானது என்பன கூத்து ஆடுகிற கூத்தியினுடைய அமைதி, ஆடலாசிரியன் அமைதி, அரங்கின் அமைதி, அரங்கிலே புகுந்து ஆடுகிற இயல்பு ஆகியன ஆகும். பிற அமைதிகள் இசை நூலுக்கான அமைதிகள் ஆகும். சான்றாக இசை நூலுக்கான கவிஞன் அமைதி குறித்து மட்டும் இங்கு காண்போம். அமைதி என்பது இலக்கணம் என்கிற பொருளை உடையதாகும்.
நூலாசிரியர் எட்டு அடிகளால் கவிஞன் அமைதி கூறுகிறார். இசைக்குப் பாடல் மொழி தேவையில்லை, எந்த மொழியிலும் பாடலாம் என்ற கருத்தை நமது தமிழ் இசைமரபு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடலுக்கும் பாடலுக்கும் சாகித்தியம் முக்கியம் என்பதும் கவிஞன் தமிழ் முழுவதும் அறிந்த தன்மையனாதல் வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
“இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்
அறியத் தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி
வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப் பிடித்து
இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்தாங்கு
அசையா மரபி னதுபட வைத்து
மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து
நாத்தொல்லை வில்லா நன்னூற் புலவனும்”
கவிஞனின் அமைதியாக இவைகளை இளங்கோவடிகள் கூறியுள்ளார்(3:37-44). இதில் கவிஞன் தமிழ் முழுதறிந்த தன்மையனாக இருந்தாகவேண்டும் எனவும், வேத்தியல், பொதுவியல் என்கிற இரு திறத்தினை உடைய நாட்டிய நன்னூலை நன்கு அறிந்து அதனைக் கடைப்படிப்பவனாக இருந்தாக வேண்டும் எனவும் கூறுகிறார். வேத்தியல் என்பது அகம் எனவும் பொதுவியல் என்பது புறம் எனவும் சிலரால் சொல்லப்படும். இசைப்புலவன், முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் ஆகிய பதினொரு பாகுபாட்டினையும் அறிந்து, அறிந்தவண்ணம் அவன் தாள நிலையில் எய்துவித்த நிறம் தன்கவியினிடத்தே தோன்றவைக்க வல்லவனாய் இருக்கவேண்டும். மற்றவரால் செய்யப்பட்ட வசையின் அளவறிந்து அவை தோன்றாதபடி வசையின் மொழிகளால் நாடகக் கவி செய்யவல்ல நல்ல நூல்வல்ல புலவனாகவும் அவன் இருந்தாகவேண்டும் என்கிறார் ஆசிரியர்.
சிலப்பதிகாரம் ஒரு இயல்நூல் எனினும் அது இசை, நாட்டியம் குறித்தப் பல விரிவான விளக்கங்களை வழங்குகிறது. ஆகவேதான் அது பண்டையதமிழகத்தின் இசை, நாட்டியம் குறித்த ஒரு “பெருங்கருவூலம்” எனக்கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இசை நாட்டியக் குறிப்புகள் ஒரு பெரு நூலுக்குரிய அளவு உள்ளன எனப்பலர் கருதுகின்றனர். ஆகவே அவை குறித்து இங்கு அதிகம் பேசவில்லை. தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் வரையான இசைத் தரவுகள் அனைத்தும் மு. அருணாசலம் அவர்கள் எழுதிய நூலிலிருந்து எடுக்கப் பட்டவைகளாகும்-(3).
எழுத்தாளர் சுஜாதா, ‘பாரதி, நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை...... இசை, நடனம் போன்றவற்றில் இளங்கோவடிகளின் அறிவு பிரமிக்க வைக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும் இசைக்கருவிகள், யாழ்வகைகள், குழல்வகைகள், தோல்கருவிகள் நூற்றுக்கணக்கானவை. நடனக்கலை பற்றி, நடன அரங்கு அமைப்பு பற்றி, இந்திரவிழா வரிப்பாடல்கள், குரவை ஆட்டங்கள்....ஒரு நூலில் இத்தனை விபரங்கள் உலக இலக்கியம் எதிலும் இல்லை என்று சொல்லலாம்......மேலும் சிலப்பதிகாரம் அதன் காலத்தைக் கடந்த நவீனம், CONTEMPORANEITY, இன்றும் புதிதாக இருக்கும் கதையும், கதை சொல்லும் முறையும்’ என்கிறார்-(4). ஆக, சிலப்பதிகாரம் என்பது ஒரு மிகச்சிறந்தநூல் என்பதில் ஐயம் இல்லை.
எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் இசை பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை நாம் இதுவரை ஓரளவு முழுமையாகப் பார்த்தோம். அவைகளின் மூலம் சங்ககாலத்தில் மிகப் பரந்த அளவில் தமிழ்ச்சமூகம் முழுமையும் இசை, நாட்டியம் முதலியன ஆழமாகவும், விரிந்த அளவிலும் பரவியிருந்தன என்பது உறுதியாகிறது. அன்றே இசை, நாட்டியம் முதலியன நிறைய நூல்களைக் கொண்டிருந்ததோடு அவை ஒரு உன்னத நிலையை, ஒரு சாத்திரத் தன்மையை அடைந்திருந்தன. அக்காலகட்டத்தில் சமற்கிருதத்தில் மட்டுமல்ல பாலி, பிராகிருதம் போன்ற பிற வடமொழிகளிலும் இசை, நாட்டியம் சார்ந்த நூல்கள் எவையும் இருக்கவில்லை.
அந்தப் பண்டைய தமிழ் இசை, நாட்டிய நூல்கள் அனைத்தும் அழிந்து போயின என்பதோடு, கிடைக்கும் ‘பரிபாடல்’ போன்ற இசைப்பாடல்களைக்கொண்டு, அந்த இசைப்பாடல்களைப் படைக்கும் முறைமையும், அதனைப்பாடும் முறைமையும், வண்ணம், தூக்கு, வனப்பு, பண்ணத்தி போன்ற அன்றைய இசைக்கருத்துக்களும் அதன் விளக்கங்களும் இன்று இல்லாது அழிந்து போயின. சான்றாக பரிபாடலில் உள்ள இசைகளின் பெயர்கள் தெரிகின்றனவே ஒழிய தேவாரப்பண்களைப் பாடுவதுபோல் அவைகளைப்பாட இயலவில்லை. பரிபாடலைப்பாடும் முறைமை இன்று முழுமையாக மறைந்துவிட்டது.
இசை, நாட்டிய நூல்கள்:
சிலப்பதிகாரகாலத்தில் நாட்டிய நன்னூல் இருந்தது என்பதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே இசைநூல் இருந்ததாக அகம்-352ஆம் பாடல் தெரிவிக்கிறது. கவிஞன் இசை நூலுக்குரியவன். அவன் நாட்டிய நூலையும் தெரிந்திருக்கவேண்டும் என்பதாக இசை நூல் இலக்கணம் கூறுவதால், இசைநூல் தோன்றிய போதே நாட்டிய நூலும் தோன்றியிருக்க வேண்டும். ஆகவே கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே நாட்டிய நூலும் இருந்திருக்கவேண்டும். பரதர் எழுதிய பரதம் என்கிற நாட்டியத்தமிழ் நூல் இருந்ததாகவும் அது தொன்மையான நூல் எனவும் அது இன்று அழிந்து விட்டதாகவும் சிலப்பதிகாரத்துக்கு உரைதந்த அடியார்க்கு நல்லார் கூறுகிறார். அடியார்க்கு நல்லார் இந்த நூலைத் தொன்மையானது எனக் குறிப்பிடுவதால், இந்த பரதம் என்கிற நாட்டியத்தமிழ் நூல் கி.மு. 3ஆம் நூற்றாண்டு அளவிலேயே இருந்திருக்க வேண்டும் எனலாம். இசை இலக்கணம் குறித்த கட்டுரையில் இந்நூல் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
கூத்து என்பதுதான் நாட்டியம் ஆகும். கூத்து மிகவும் பண்டைய காலத்திலிருந்து தமிழகத்தில் இருந்து வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே கூத்து நூல்தான் நாட்டிய நூல் ஆகும். சிலப்பதிகாரப்படி மாதவி ஒரு கூத்தி ஆவாள். கூத்து என்பதற்கு இன்றைய பொருளில் பார்க்கக் கூடாது. அன்று கூத்து என்கிற நாட்டியம் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தது. அன்று கூத்தி என்கிற நாட்டியக்காரிகள் பெரும் செல்வந்தர்களாகவும், அதிக செல்வாக்கு உடையவர்களாகவும் இருந்தனர். சங்கம் மருவிய காலத்தில் இந்த இசையும் நாட்டியமும் உச்சநிலையை அடைந்தன. கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்த இசையும் நாட்டியமும் இல்லாதொழிந்தன. பொதுமகளிர் நிறுவனங்கள் போன்ற பல்வேறு வகை நிறுவனங்கள் இந்தக் கூத்தையும் இசையையும் வளர்த்து ஓர் உச்சநிலைக்குக் கொண்டு வந்தன. கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்நிறுவனங்களும் அழிந்துபோயின. ஆதலால் அதோடு தொடர்புடைய இசை, நாட்டிய நூல்களும் இல்லாதொழிந்தன.
சங்ககாலத்தில் மிகப் பரவலான அளவில் இசை, நாட்டியம் ஆகியன பொதுமக்களிடத்தில் பரவியிருந்தன என்பதை இயல் நூல்களான சங்க இலக்கியங்களில் தரப்பட்டுள்ள இசைசார்ந்த பலவகையான குறிப்புகள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே அல்லது அதற்கு முன்னரே இசை, நாட்டிய நூல்கள் சங்ககாலத்தில் இருந்துள்ளன என்பதையும் நாம் அறிய முடிகிறது. சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் இருந்த இசை, நாட்டிய நூல்கள் அனைத்தும் அழிந்து போயின.
தமிழ் இசை இலக்கிய வரலாறு:
1.பண்டைக்காலம்(கி.மு. முதல் கி.பி. 600வரை):
கால அடிப்படையில் தமிழ் இசை வரலாற்றை ஏழு பாகங்களாகப் பிரித்து மு. அருணாசலம் அவர்கள் தனது தமிழ் இசை இலக்கிய வரலாறு என்ற பெருநூலில் ஆய்வு செய்துள்ளார்(750 பக்கம்). ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த எல்லா நூல்களையும், இசை குறித்த எல்லா செய்திகளையும் ஆய்வு செய்துள்ளார். தொல்காப்பியம் தொடங்கி களப்பிரர் காலம் வரை பண்டைக்காலம்(கி.மு. முதல் கி.பி. 600வரை) என்கிற தலைப்பில் முதல் காலகட்டத்தை ஆய்வு செய்துள்ளார்-(5). மிகப்பழங்காலம் முதல் களப்பிரர் காலம் வரை என இதனைக்கொள்ளலாம். இதில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம் ஆகியன வருகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தவிர பிறவற்றின் செய்திகளை நாம் ஓரளவு சுருக்கித் தந்துள்ளோம். சிலப்பதிகாரத்தின் சில செய்திகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது.
2.பாசுரகாலம்-1(கி.பி. 600-900):
ஐந்தாம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையார், ஆறாம் நூற்றாண்டு முதலாழ்வார் ஆகியோரின் பாடல்களை பொருத்தம் கருதி இக்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சைவசமயாசாரியர் நால்வரும், ஆழ்வார் அனைவரும் இதில் அடங்குவர். பெரியபுராணம் தவிர்த்த பிற திருமுறைகள் அனைத்தும் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சைவ வைணவ ஆகமங்கள், அபூர்வமாகக்கிடைத்த பஞ்சமரபு, இறையனார் களவியல் உரை, திவாகரம், பிங்கல நிகண்டு, புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி முதலியன ஆய்வு செய்யப்படுகின்றன-(6).
3.பாசுர காலம்-2(கி.பி. 900-1250):
பெரும்காப்பியங்களும் மணிமேகலையும் திருவிசைப்பாவும், பெரியபுராணமும் இதில் ஆய்வு செய்யப்படுகின்றன. இக்காலம் பண்டைய இசைவாணர்கள் பாணர் நிலையிலிருந்து வளர்ந்து மேளக்காரர் என்ற நிலையை அடையும் காலமாகும். பெருங்கதை, கம்ப இராமாயணம் போன்றவைகளும் இதில் ஆய்வு செய்யப்படுகின்றன-(7).
4.அருணகிரி நாதர் காலம்(கி.பி. 1250-1550):
தமிழிசை உலகில் பெருஞ்சிறப்புப்பெற்ற தேவார காலத்தையும், கீர்த்தன காலத்தையும் இணைக்கும் இசைப்பாலமாக இருந்தவர் அருணகிரி நாதர் ஆவார். அவரது காலம் சுமார் கி.பி 1350-1450 க்குள் அடங்கும். அவருக்கு முன் இருந்த நம்பிதிருவிளையாடல் பல இசைச்செய்திகளைச் சொல்லியவர் ஆவார். புதுமையான பல இசை வடிவங்களை உருவாக்கிய சித்தர் காலமும் இக்காலம் தான் ஆகும்-(8).
5.தமிழ் கீர்த்தனைகாலம்(கி.பி. 1550-1800):
இசைத்தமிழுக்கு மூன்று காலங்களைப் பொற்காலம் எனக்கூற முடியும். அவை 1. சிலப்பதிகார காலம், 2.தேவாரகாலம், 3.கீர்த்தனை காலம் ஆகியனவாகும். கீர்த்தனை காலத்தில் முத்துத்தாண்டவர்(கி.பி. 1525-1605) தோன்றி முதன்முதலாகத் தமிழில் புது உருவங்களை அமைக்கிறார். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்பில் கீர்த்தனமாகவும், பதமாகவும் அமைக்கிறார். இவை தமிழுக்கு மட்டுமல்ல இசைக்கே புதியனவாகும். இக்காலப்பகுதி இசைத்தமிழுக்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவிக்கிறது. முத்துத்தாண்டவர் மேளக்காரர் மரபு ஆவார். தமிழிசையான கர்நாடக இசைக்கும் அவர் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவிக்கிறார். இந்த கீர்த்தனைக் காலத்தில் சீகாழி முத்துத்தாண்டவர், பாபநாச முதலியார், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப்பிள்ளை ஆகிய நால்வர் மிகவும் புகழ்பெற்றவர்கள் ஆவர்-(9).
6.தியாகராசர் சுவாமிகள் காலம்(கி.பி. 1800-1920):
தியாகராசர் சுவாமிகள்(1767-1847) தமிழிசையுலகில் இன்னும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கினார். அவர் இணையற்ற ஒரு மகான். அவர் தமிழிசையைத் தனது தாய்மொழியாம் தெலுங்கில் பாடினார். தியாகராசர் சுவாமிகள், சியாம சாத்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவரையும் சேர்த்து மும்மூர்த்திகள் என்பர். இவர்கள் மூன்று பேரும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழிசையில்தான் பாடினார்கள். ஆனால் பாடிய மொழிதான் தெலுங்கு. அதனால் அவர்கள் வழி வந்தவர்கள் தெலுங்கைப் பிடித்துக் கொண்டு தமிழைப் புறக்கணித்தார்கள். தெலுங்கின் ஆட்சி தமிழுக்கும், தமிழிசைக்கும் வீழ்ச்சியாயிற்று. இதன் விளைவாக வளர்ச்சிமிக்க ‘பாவ’ சங்கீதம் செத்தது. அதன் இடத்தில் வறட்டுச் ‘சுரசங்கீதம்’ தான் இன்றுள்ளது. இது தியாகராசர் சுவாமிகளுக்குச்செய்த பெருந்துரோகம் ஆகும்-(10).
7.தற்காலம்(கி.பி. 1920க்குப் பின்):
தமிழிசை தோன்றிய காலம் இதுவாகும். தமிழிசைக்கு வித்திட்ட பாரதியாரோடு இது தொடங்குகிறது. கல்கியும், டி.கே.சி யும் முளைத்த பயிருக்கு நீர் வார்த்தார்கள். தமிழிசைச்சங்கம் அதனைப் பயிராக்கி வளர்த்தது. இன்னும் பாவ சங்கீதம் வளரவில்லை. சிறந்த சங்கீதம் என்பது பொருளோடும் பாவத்தோடும் பின்னிப்பிணைந்துள்ளது. அது இனித்தான் வளர வேண்டும்.
சங்க காலத்தில் கீர்த்தனை வடிவம்:
சங்க இலக்கியத்தொகுப்புகளில் ஆசிரியப்பாக்கள் 6 தொகை நூல்களாகவும் ஒரு பத்துப்பாட்டாகவும் தொகுக்கப்பட்டன. கலிப்பாவும் பரிபாடல்களும் வேறு இரு தனி நூல்களாகத் தொகுக்கப்பட்டன. பிறவகை இசைப்பாக்களும் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். ‘அற்றைத்திங்கள்’ எனத்தொடங்கும் பாரிமகளிர்களுடைய 112ஆம் புறப்பாடலை நாம் அறிவோம். அது ஆசிரியப்பா ஆகும். அவர்கள் வேறுவகை இசைப்பாடலையும் பாடியிருப்பர். அவை எட்டுத்தொகை தொகுப்பில் வரவில்லை. வேறுவகை இசைப்பாடல் தொகுப்பில் வந்திருக்கலாம். அவை அழிந்துவிட்டன.
யாப்பருங்கால விருத்தியுரையில் உள்ள ஒரு பாடல்,
“எந்தை குன்றம் –
மாலை மணங்கமழும் மௌவல் முகைவிரியு -எந்தை குன்றம்
காலை மணிக்குவளை காதலர்போற் கண்விழிக்கும் -எந்தை குன்றம்
நீல மழைமுழங்கி நின்று சிலம்பதிரும் -எந்தை குன்றம்
மாலை மயிலகவ வந்தண்டு வணமே -எந்தை குன்றம்
ஆடு கழைகிழிக்கும் அந்தண் புயலிற்றே -எந்தன் குன்றம்
நீடு கழைமேல் நிலாமதியம் நிற்குமே -எந்தன் குன்றம்
கூடு மழைதவழும் கோடுயர் சந்தமே -எந்தன் குன்றம்”-(11).
என உள்ளது. ‘எந்தையும் எம்குன்றும்’ பாடிய அதே இளம்பெண்கள் உள்ளம் இந்தப் பாடலையும் பாடியுள்ளது. காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு, கி.மு. 3ஆம் நூற்றாண்டு. இந்தப்பாடலில் அனுபல்லவி இல்லை. ஆனால் சரணமும் பல்லவியும் அமைந்துள்ளன. இன்றுகூட பல வித்துவான்கள் பல்லவியும் சரணமும் மட்டுமே அமைக்கிறார்கள். ‘எந்தை குன்றம்’ என்பது இங்கு பல்லவியாகவுள்ளது. ‘மாலை மணங்கமழும் மௌவல் முகைவிரியும்’ என்பது சரணமாகிறது. அதுபோன்று இப்பாடலில் மொத்தம் ஏழு சரணங்கள் அமைந்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வகைப்பாடல் இருந்துள்ளது. அன்று இவ்வகைப் பாடல்களுக்கு தரப்பட்டிருந்த பெயரை அறிய இயலவில்லை. இவ்வகைப்பாடல்களை ஒரு தொகுப்பாகக் கருதும்பொழுது கீர்த்தனை வடிவம் சங்ககாலத்தில் இருந்திருக்கக் கூடும் எனலாம். அவைபோன்ற இசைப்பாடல் தொகுப்புகள் பல அழிந்து விட்டன. அதன்பின் அப்பர் சுவாமிகள், சித்தர்கள், தத்துவராயர் போன்றவர்கள் இதே அமைப்பில் சாகித்தியங்கள் செய்திருக்கிறார்கள். சங்க காலத்தில் அவ்வடிவம் துயரத்தை வெளியிடுவதற்காகப் பயன்பட்டது. அதன்பின் தெய்வத்தின் கீர்த்தியைப் புகழும் கீர்த்தனை வடிவம் பெற்றது. இவைகளின் மூலம் சங்க காலத்தில் ஆசிரியப்பா தவிர வேறுவகை இசைப்பாடல்களும் இருந்துள்ளன என்பது உறுதியாகிறது.
பார்வை:
2.தமிழ் இசை இலக்கிய வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்: 57.
3. “ “ பக்:31-67, 81-85.
4.சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், சுஜாதாவின் முன்னுரை, உயிர்மை, டிசம்பர்-2005.
5. தமிழ் இசை இலக்கிய வரலாறு, மு. அருணாசலம், பதிப்பாசிரியர் உல.பாலசுப்ரமணியன், கடவு பதிப்பகம், அக்டோபர்-2009, பக்: 19-94.
6. “ “ பக்: 95-196.
7. “ “ பக்:197-228.
8. “ “ பக்:229-258.
9. “ “ பக்:259-350.
10. “ “ பக்:351-400.
11. “ “ பக்;192-193.