‘மணம்’ என்றால் ‘கூடுதல்’ என்பது பொருள். இதன் வேர்ச்சொல் ‘மண்’ என்றும், மண்ணுதல் என்பது கழுவுதல், தொங்குதல், கலத்தல், கூடுதல், அழகு பெறுதல், மணத்தல், இணைதல் என பல பொருளும் வழங்கப் பெறுவதாக சொற்பொருள் அகராதிகள் விளக்கம் தருகின்றன. அடிப்படையில் கலத்தல் கூடுதல், போன்ற சொற்கள் யாவும் ‘இணைதல்’ என்ற பொதுத்தன்மையான சொல் விளக்கத்தையே பெறுகின்றன. ஆக, இணைதல் என்பதன் அடிப்படையிலேயே ‘மணம்’ என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, “செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்” (தொல். நூ.) என்ற கருத்திற்கு ஏற்ப காரணத்தின் அடிப்படையில் காரணப் பெயராக இச்சொல்லைக் கொள்ளலாம். மங்கல நிகழ்வாதலின் ‘திரு’ எனும் அடையைச் சேர்த்து ‘திருமணம்’ என்றனர் எனக் கருதலாம்.
‘மண்ணைப் போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வலிமை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட ‘திரு’ என்ற அடைகொடுத்து அழைப்பது தமிழர் மரபாதலின் இல்லற வாழ்வில் அடிப்படையாக அமையும் ‘மணம்’இ திருமணம் என்று அழைக்கப்படுவதாக விக்கி பீடியாவில் திருமணம் என்ற பகுதியின் சொல் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்திருமணத்தை கரணம், வரைவு கடாதல், கற்புமணம், வதுவைச் சடங்கு, மன்றல், உடன்போக்கு மணம் என்ற சொற்களால் பண்டையோர் அழைத்துள்ளனர்.
“கற்பெனப்படுவது கரணமொடு புணர” (தொல். பொருள். நூ. 140)
‘கற்பு’ என்று சொல்லப்படுவதே திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்க்கையே என்கிறார் தொல்காப்பியர். மன்றல் - கூடி நிகழ்த்தும் நிகழ்வு; வதுவை சடங்கு - சடங்கு முறையுடன் கூடிய திருமணம்; வரைவு கடாதல் - பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்தல்; உடன்போக்கு - பெற்றோர் ஒப்புதலின்றி ஆண், பெண் இருவரும் காதல் புரிந்து செய்து கொள்ளும் திருமணம் என்ற வகையில் குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய சொல் வழக்கில் உள்ள ‘கல்யாணம்’ எனும் சொல் சங்க காலத்தில் இல்லை. அதற்கு பின் நீதி இலக்கியத்தில் ஒன்றான ஆசாரக் கோவையிலும், நாலடியாரிலும் ‘கல்யாணம்’ என்ற சொல் வழங்கப்பட்டிருக்கிறது.
‘கடி மணம்’ என்ற சொல் இருக்கின்றது. இதில், ‘கடி - நீக்குதல்; காப்பு என்பர். கடி - உரிச்சொல் ஆகும். இங்கு கன்னித்தன்மை நீங்கி கற்பு வாழ்வு மேற்கொள்ளும் நிலையிலும் ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் ‘கடி’ என்ற சொல் திருமணத்தைக் குறித்தது என்பர்.
‘மணம்’ என்பதற்கு விக்கி பீடியாவில்
“திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது.
மணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம.; மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும் வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களுக்கிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவித பிணைப்பு ஆகும்” என்று விளக்கிச் செல்கிறது.
தொன்றுதொட்டு குடும்பத் தோற்றத்திலிருந்து குடும்பத்தில் நிகழும் பெரிய மங்கல நிகழ்வாக திருமணத்தை தமிழர்கள் கருதினர். சமூக வளர்ச்சிக்கான அடிப்படைக் காரணியாகவும் திருமணத்தை கருதுகின்றனர். திருமணம் என்பது ஆண், பெண் இருவரிடையே ஏற்படும் நிலைத்த உறவையே குறிப்பதாகும் என்று லோவியும், குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதற்காக செய்யப்படும் ஒப்பந்தமே என பாலினேவ்ஸ்கியும், “தகராறுக்கு இடமில்லாத வகையில் தந்தையை உறுதிப்படுத்தி குழந்தைகளை உற்பத்தி செய்வதே அதன் வெளிப்படையான நோக்கமாக இருந்தது. இவ்வாறு, தந்தையை உறுதிப்படுத்துவது ஏன் அவசியமாயிற்று என்றால் இந்த குழந்தைகளே பிற்காலத்தில் தந்தையின் வாரிசுகளாக, அவருடைய சொத்தைப் பெற வேண்டியிருந்ததே காரணம்” என்கிறார் பிரெடரிக் எங்கெல்ஸ்.
பண்டைத் தமிழகம்
நீதி இலக்கிய காலத்தில் (கி.பி. 2-க்குப் பிறகு) இல்லறத்தை ‘அறம்’ என்றே கூறினர். திருவள்ளுவர்,
‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ என்ற சொல்லிற்கு சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியில் ‘இல்வாழ்க்கை, கிருகஸ்த தர்மம்’ என்ற விளக்கம் உள்ளது.
தொல்காப்பியத்தில் ‘திருமணம்’ கட்டமைப்பை உருவாக்குவதற்குரிய காரணமாக,
“பொய்யும் வழுவும் தோன்றியப் பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல். பொருள் நூ. 143)
என்று பொய்யான செயல்களும், தவறான அணுகுமுறைகளும் தோன்றிய பின்னர் ஆன்றோர் ‘திருமணம்’ என்ற கட்டமைப்பைத் தோற்றுவித்தனர் என்பார்.
பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பெண் வீட்டார் பெண் கொடுக்க ஆண் வீட்டார் பெற்று கொள்ளும் திருமண முறையும் பொருள் கொடுத்தும் திறமையின் அடிப்படையிலும், போர் நிகழ்த்தியும், காதல் நிகழ்விற்கு பின்னரும் என பல வகையில் திருமணம் நிகழ்ந்திருக்கின்றது.
பெற்றோர் கொடுப்பக் கொள்வதுவே
இயல்பு மணம், பலரறி மணம் என்று கூறப்படும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒத்த குலத்தை சார்ந்தும், பொருளியல் அடிப்படையில் சமநிலையில் இருக்கின்ற குடும்பத்திற்குள் நிகழும் இன்றைய திருமணம் போலவே பண்டைத் திருமணமும் நிகழ்ந்திருக்கிறது. இதனை தொல்காப்பியர்,
“கற்பெனப் படுவ கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
(தொல். பொருள் நூ. 140) என்கிறார்.
“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலையான” (தொல். பொருள் நூ. 141) என்றும், கற்பு மணம் - பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட மணம்; உடன்போக்கு - பெற்றோர் இசைவில்லாது ஆண், பெண் இருவரும் தாமே மணம் புரிந்து கொள்ளுதல் ஆகிய இரு முறைகளிலேயே திருமணம் நிகழ்ந்திருக்கின்றது.
“மேலோர்க்கு புணர்ந்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல். பொருள் நூ. 142) ‘மேலோர்’ எனும் உயர்குடியினருக்குரிய திருமணமுறை கீழோர்க்கும் நிகழ்வதுண்டு என்று குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது.
“மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்” (தொல். பொருள் நூ. 142)
என்ற அடிக்கு உரையாசிரியர்கள் 8 வகை திருமணம் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. 1. பிரமம் 2. பிரசாபத்தியம் 3. ஆரிடம் 4. தெய்வம் 5. அசுரம் 6. இராக்கதம் 7. காந்தருவம் 8. பைசாசம் என்பனவென்பர். அதனைப் பற்றி தொல்காப்பியர் தனித்தனியாக விளக்கவில்லை. (சமூக இலக்கிய மானுடவியல் அடிப்படையில் திருமணம், பா. பிரபு, பதிவுகள்.காம்)
‘மகட்பாற் காஞ்சி’ என்கின்ற திருமண நிகழ்வும் போர் புரிந்து வெற்றி பெற்று பெண்ணை திருமணம் செய்து கொள்ளல், திருமணம் பெண்ணுக்காக போர்புரிதல். ‘மடலேறுவேன்’ என்று ஆண் தான் விரும்பிய பெண்ணை அடையாளப்படுத்தி திருமணம் செய்திருக்கலாம் என கருத இடமுண்டு. இதனைப் பற்றியும் தொல்காப்பியத்தில் தெளிவான கருத்து இல்லை. சங்க இலக்கியங்களில் சில பாடல்கள் மூலம் ‘மகட்பாற் காஞ்சி’ நிகழ்வை புரிந்துகொள்ள முடிகிறது.
கலித்தொகை முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் முறையை காண முடிகின்றது. அதாவது, காளையை அடக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் முறை ‘காடும,; காட்டைச் சார்ந்த ‘முல்லை’ நிலப்பகுதியில் நிகழ்ந்திருந்ததை அறிகின்றோம்.
திருமண ஒப்பந்த முறை
பண்டைத் தமிழகத்தில் திருமண ஒப்பந்த முறை வரையறையோடு நிகழ்ந்திருக்கின்றது.
“பெற்றோர் இசைவுடன் நடக்கும் திருமணத்துக்கு முன்பாக, திருமண உறுதிப்பாட்டு நிகழ்வு நடைபெறும். இரு வீட்டாரும் உறவினர்களும் ஊர்ப் பெரியோர்கள் முன்பு, இன்னார் பெண்ணை இவருடைய பிள்ளை மணப்பது என ஓலையில் எழுதி பெரியோர்கள் சான்று கையொப்பம் இடுவார்கள். இந்த நிகழ்வை ‘ஒலை எடுத்தல்’ என்று கூறுவர். நிச்சயதார்த்தம் என்ற சமற்கிருதச் சொல்லை நில் + செய் ஸ்ரீ நிற்செய் ஸ்ரீ பலவானும் சிந்தித்து முடிவு செய்தல்; தார் என்பது நீரைக் குறிப்பது; தார் - தாரை, நீர்த்தாரை மழைத்தாரை என விரியும். நீர்வார்த்துப் பெண்ணைக் கொடையாக கொடுப்பது ஆரிய மரபு ஆகும்.” (தொல் தமிழர் வரலாறு, ம.சோ. விக்டர். ப. 6) என்று ம.சோ. விக்டர் குறிப்பிடுகின்றார்.
பரிசம்
தமிழில் ‘பரிசம’; என்பர். பெண்ணுக்கு மணமகன் பரிசளிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு தமிழ்மக்கள் மத்தியில் காணப்படுகிறது. குறிப்பாக ‘பரிசு’ என்பது ஓர் ‘அன்பளிப்பு பொருள்’ ஆகும். ‘அம்’ சாரியை சேர்ந்து ‘பரிசு + அம் ஸ்ரீ பரிசம்’ என்றாயிற்று. பெரும் பொருள் என்பதே அச்சொல்லின் பொருள். அதாவது பெண் வீட்டாரின் பெரும் பொருளை மாப்பிள்ளை வீட்டார் பெறுவதாகவும் அதனால் அப்பெண் வீட்டிற்கு முலைவிலை சிறுவிலை பரியம், கொடுக்கப்பட்டதாகவும் இலக்கியக் குறிப்பு காணப்படுகின்றது.
“இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தார்
கடுங்கண் கோசர் நியம மாயினும்
உறுமெனக் கொள்குநர் அல்லர்
நறுநுத லரிவை பாசிழை விழையே” (அகநானூறு பா. 90)
என்ற பாடலில், ‘பாசிழை விழை’ என்றும்,
“சிறுவளை விலையென பெருந்தேர் பண்ணியெம்
முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே” (நற்றிணை பா. 300)
என்ற பாடலில், சிறுவளை விலை என்றும் கூறப்படுகின்றது. இதன் மூலம் பரிசாக பொருள் கொடுக்கப்பட்டதை அறிய முடிகிறது. அதாவது, பெண் வீட்டாருக்கும் பெண்ணிற்கு விலையாகவோ அல்லது அடையாளமாகவோ பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
“தட்சிணை தரும் பழக்கம் இயற்கையாகவே எழவில்லை. மற்று மணமகன், மணமகட்குத் தரும் விலை ஒரு மரபு. அது முலைவிலை எனப்பட்டது. இஃது எவ்வளவு என்பதை மன்றம் நிச்சயித்தது. அகம், புறம் கலித்தொகை முதலிய பழைய தொகை நூல்களில் இது பேசப்படுகிறது. இன்றும் தென்னிந்தியாவிலுள்ள சில குலத்தார் இப்பழக்கத்தை மேற்கொண்டனர் என்பர்.” (சங்க கால வாழ்வியல், ந. சுப்பிரமணியன் ப. 391)
திருமண நிகழ்வு முறை
சங்க கால பாடல்கள் சிலவற்றில் திருமணம் பற்றிய கருத்துக் காணப்படுகின்றது.
“நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து கொள்வதும் தமிழர் நடைமுறையில் இருந்தது. நல்லநாள் என்பது. நிலவின் சுழற்சியில் நிலவு குறிப்பிட்ட மீன் கூட்டத்தில் தங்கும் நாள் எனலாம். குறிப்பாக நிலவு, சகட ஓரையில் (கூட்டத்தில்) தங்கும் நாளை நன்னாளாகக் கருதினர். வளர்பிறைக் காலம் ஏற்கப்பட்டது. நன்னாளைக் கணித்துக் கூறிய நிமித்தம் அல்லது வள்ளுவன் வானியல் அறிவு பெற்றிருந்தான். பொதுவாக அவனைப் ‘பார்ப்பான்’ என்றனர். ‘பார்’ என்பது கோளைப் பார்ப்பது என்ற பொருளிலேயே அறியப்பட்டது. அக்காலத்தில் பார்ப்பான் புரோகிதராக இருந்ததில்லை. தமிழர் சமயத்தின் மரபுகளை விளக்கும் ஆசிரியனாகவே இருந்தான். மூப்புடைய பார்ப்பான் திருமணத்தை நடத்தி வைத்தான்” என்பார். (தொல் தமிழர் வரலாறு, ம.சோ. விக்டர், ப. 68)
ஆ. இராமகிருட்டிணன்,
“திருமணச் சடங்குகளை நிகழ்த்த புரோகிதர்கள் ஈடுபட்டதாகச் சங்க இலக்கியக் குறிப்பு இல்லை. ஆனால் சங்க மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம், “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி’ யமைப் பற்றியும், மணமக்கள் தீவலம் வந்தமைப் பற்றியும், தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும். சங்க காலத்திற்குப் பின்னர் இவ்வழக்காறு கால்கொள்ளத் தொடங்கியிருக்கலாம்.” (தமிழர் வரலாறும் தமிழர் பண்பாடும், ஆ. இராமகிருட்டிணன், ப. 73) என்கின்றார்.
“சங்க காலத் திருமண முறைப் பற்றியும், முதல் இரவு பற்றியும், அகநானூற்றின் இருபாடல்கள் (86, 136) விரிவாக விளக்குகின்றன. திருமணம் நடந்த நல்ல நாள் பார்க்கும் வழக்கம் இருந்தது. “தீய கோள்களின் தொடர்பு நீங்கப் பெற்ற நல்ல நாளும், ‘நிலவை உரோகினி அடைந்த நல்ல நேரமும் திருமணத்திற்கு தெரிந்தெடுக்கப்பட்டிருந்தன. பூவும், நெல்லும் சொரிந்த நீரில் மணமகள் நீராடப்பட்ட பின்னர் திருமணம் நடைபெற்றது. இந்நீரை முகந்து கொண்டு வருவதற்கும், அதை வாங்கி மணமகளின் தலையில் ஊற்றுவதற்கும் மங்கல மகளிரும் ஈடுபடுத்தப்பட்டமை காண்கிறோம். திருமண நாளன்று அரிசியும், உளுந்தும் கலந்த பொங்கல் உணவு அனைவருக்கும் அளிக்கப்பட்டது.”
(தமிழர் வரலாறும் தமிழர் பண்பாடும், ஆ. இராமகிருட்டிணன், ப. 72-73)
மேற்கூறிய கருத்தை அகநானூற்றுப் பாடல் விளக்குகின்றது.
“உழுத்தம் பருப்போடு கூட்டி சமைத்த, குழைந்த பொங்கல் எனும் பெருஞ்சோற்றுத் திரளை இடையறாது உணவிட, பந்தலில் வரிசையாக மாலையிட்டு மணல் பரப்பியுள்ளனர் என்றும், திருமண நேரத்தில்,
முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவும், பின்னே தருவனவும் முறையாகத் தந்திட, மகனைப் பெற்ற தூய அணிகளையுடைய மகளிர் நால்வர் கூடி நின்று கற்பிலிருந்து வலுவாறு நன்றாகப் பல பேறுகளைத் தந்து, உன்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தை உடையவளாக ஆகுக” என வாழ்த்துவதாக அப்பாடல் குறிப்பிடுகின்றது.
திருமணத்தில் தாலி
‘தாலி’ மங்கல அணிகளுள் மிக முக்கியப் பொருளென தமிழர்கள் கருதுகின்றனர்.
“மணம் பேசி விட்டாலே திருமணம் முடிந்துவிட்டதாகக் கருதுவது தமிழ்ப் பெண்டிர் பண்பாடு. எனவே, மகட் பேசினோன் இறந்ததும் சங்கிலி தன்னைத் தாலியிழந்தவர்களாகவே கருதிக் கொண்டாள் என்று கருத இடமேற்படுகிறது. எனவே சங்க காலத்திற்கு அருகிய நிலையில் தாலியணியும் வழக்கு இருந்ததோ என கருத இடமுண்டு. தாலி பற்றிக் குறிப்பிடும் முதற் கல்வெட்டு கி.பி. 958-ஆம் ஆண்டுக்குரியது.” (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், பக். 131-132)
என்று கே.கே. பிள்ளை குறிப்பிடுகின்றார். எனவே சங்க காலத்தில் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என அறிய வேண்டியுள்ளது. தேவநேய பாவணரோ இக்கருத்துக்கு மாறாக,
“தாலி அணிதல் ஆரியர் அல்லாத தமிழர் பழக்கம். தமிழ்நாட்டிற்குரிய இப்பழக்கம் பிராமணர்களால் பிற்காலத்தில் தமது சடங்குகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தாலிக்கு இருவகை தத்துவங்கள் இருக்கலாம். சங்கத் தமிழர் தமது சிறார்க்கு ஐம்படைத் தாலி அணிவர். திருமாலின் ஐம்படைகளான சங்கு, சக்கரம், வாள், வில், கதை என்னும் ஆயுதங்கள் பொறித்தது. அவ்வைம்படைத் தாலி, பிற்காலத்தில் சைவர்கள் சிவபெருமானது ஆயுதங்கள் ஐந்தைக் கொண்டு வேறொரு ஐம்படைத் தாலி கூறுவர். இத் ‘தாலி’ குழந்தைகளுக்கு தீங்கு நேரிடாமல் காக்கும் என்று நம்பினர். திருமணத் தாலியும் அத்தகைய காப்பு போலும், மற்று உலகியலால் நோக்கின் தாலியணிந்தவள் மணமானவள் என்று அறிந்துகொள்ளப் பயன்படும் என்பதுமாம.;” (சங்கத் தமிழர் வாழ்வியல், பக். 390)
இதனடிப்படையில், சிலர் தாலி எனும் மரபு தமிழ்மக்களுக்கு உள்ள மரபாக இருந்திருக்கிறது என்றும், சங்க காலத்தில் தாலி அணியும் வழக்கமில்லை என்ற இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
பண்டைக் காலத்தில் இல்லக் கிழத்தி, காமக் கிழத்தி, காமப் பரத்தை, சேரிப் பரத்தை, மாயப் பரத்தை என்ற சொற்கள் காணப்படுகின்றது. அடிப்படையில்,
“ஓர் ஆண் பல பெண்டிரோடும் கூடி வாழுதல் தவறில்லை என்ற கருத்தினைக் கொண்டுள்ளது. இந்நிகழ்வு இன்று வரையும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. பண்டைய காலத்தில் திருமணம் செய்து கொண்ட ஆண், இரண்டாவதாக, வேறொரு பெண்ணை தம் இச்சைக்கு உட்படுத்தி, அவளைத் தம் கட்டுப்பாட்டிற்குள் இருத்துகின்றான். அவளே காமக் கிழத்தி ஆவாள். அதாவது காமம் மட்டுமே பொருளாகக் கொண்டு அவளோடு கூடி வாழ்வான் என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுவர்.”
(இல்லக் கிழத்தி + காமக்கிழத்தி + பரத்தையர் ஸ்ரீ பண்டைச் சமூகம். பா. பிரபு (கட்டுரை ப. 3) (கீற்று.காம் இணைய இதழ்)
அதனடிப்படையில் காமமே பொருளாகக் கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட முறை காணப்படுகின்றது. குறிப்பாக செல்வந்தர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் இச்செயலை செய்திருப்பர் என்று கருத முடிகின்றது.
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்” (குறள். பா. 54)
என்று பெண்ணின் கற்பு சிறப்பை வலியுறுத்தினார்.
“வினையே ஆடவர்க் குயிரே
வானுதல் மனையுறை மகளிர்க்கு
ஆடவர் உயிர் என” (குறுந்தொகை : 135: 1-2)
என்ற பாடலுள் பெண்ணிற்கு ஆடவரே உயிர் எனவும் உரைத்தது. கணவனை தெய்வமாய் எண்ணுதல், வீட்டைப் பராமரித்தலும், சமையல் செய்தலும் பெண்ணின் பணியாய் ஆயின.
அடிப்படையில் பொதுத் தன்மையில் தான் ஆண், பெண்ணின் நிலை சுட்டப்பட்டிருக்கிறதே ஒழிய தனித்தன்மையில் சுட்டப் பெறவில்லை. குறிப்பாக, பெண்ணின் தகுதியில் கற்பெனும் திண்மை, ஆடவரே உயிர் எனும் பழங்கருத்தியலோடு பண்டை சமூகத்தையும் ஒப்பு நோக்க வேண்டியது அவசியமாகிறது. ஓர் வர்க்க அடிப்படையிலான சமூகத்தில் பெண்களை இரு வகையாக பொருளொடு வாழும் மக்கள், பொருளற்று வாழும் விளிம்பு நிலை மக்கள் என எல்லோரும் ஒத்த வாழ்க்கையையே வாழ்ந்திருக்க முடியாது. மேலும், மேலோர்க்குரிய திருமணம், கீழோர்க்கும் நிகழும் என்ற கருத்தும் ஆராய்வதற்குரியது.
துணை நூற்ப்பட்டியல்
1. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர் - 2008.
2. தொல் தமிழர் வரலாறு மா.சோ. விக்டர். யாத்திசைப் பதிப்பகம், 50, அண்ணாநகர், அரியலூர் - 621 713.
3. அகநானூறு, ந.மு. வேங்கடசாமி, சை.சி.நூ. கழகம், சென்னை - 18, 1957.
4. நற்றிணை, ஒளவை துரைசாமி, அருணா பப்ளிகே~ன்ஸ், சென்னை - 17, 1968.
5. தமிழர் வரலாறும், பண்பாடும், ஆ. இராமகிருட்டிணன், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை - 2011.
6. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை - 1974.
7. பண்டைய தமிழ் நாகரீகமும் பண்பாடும், தேவநேயபாவாணர், தமிழ்மண் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை - 1996.
8. Wikipedia (இணையம்)
- முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்