பண்டைத் தமிழரின் நீதிமுறை தமிழர்கள் உருவாக்கிய நீதி முறை (Jurisprudence)  ஆகும்.  தமிழர்களுக்கென்று தனித்த நீதிமுறை இருந்து வந்துள்ளது என்பது சங்க இலக்கியங்கள், சிலப்பதி காரம் முதலியவற்றால் அறிந்து கொள்ள முடிகிறது.  பழமையான இந்திய நீதிமுறை பற்றி ஆய்வு செய்தவர்கள் தமிழர்களின் நீதிமுறை பற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.  சிலப்பதி காரம் வழக்குரை காதையில் விவரிக்கப்பட்டுள்ள தமிழரின் பழமையான நீதிமுறை பற்றிய ஒரு சுருக்கமான ஆய்வு இக்கட்டுரை.

silapadikaram 600சிலம்பு பற்றிய ஆய்வுகள்

பல்வேறு கோணங்களில் சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன.  1892ம் ஆண்டு உ.வே.சாமிநாதையர் உரையுடன் சிலப்பதி காரத்தை முழுமையாக பதிப்பித்த பிறகு 1904ம் ஆண்டு வி.கனகசபை பிள்ளை The Tamils Eighteen Hundreed Years Age என்ற நூலை வெளியிட்டது முதல் சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுகள் முனைப்பு பெற்றன.  பின் அரசியல் இயக்கமாகவே வளர்ச்சி பெற்றது.

சிலம்பு மொழிபெயர்ப்பு

சிலப்பதிகாரம் பற்றி 1900ம் ஆண்டு பிரஞ்சு மொழியில் பேராசியர் Julien Vinsion என்பவர் எழுதியும் 16, 17, 18 காண்டங்களை மொழி பெயர்த்தும் உள்ளார்.  1939ல் வரலாற்று பேராசிரியர் வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் ஆங்கிலத்தில் உரை நடையில் சிலப்பதிகாரத்தை முழுமையாக மொழி பெயர்த்து ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியீடாக வந்துள்ளது.  சிலப்பதிகாரம் பற்றி வெளி உலகம் அறிந்து கொண்டது.

இந்திய சட்டம் நீதிமுறை பற்றிய ஆய்வு

20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தியர் களுக்கு தனித்த சட்ட நீதி வரலாறு உண்டு என்பதை நிறுவும் முயற்சியாக பல ஆய்வு நூல்கள் வெளிவந்தன.  எஸ்.வி. விஸ்வநாதாவின் International law in Ancient India (1925) Julius JollyÆ‹ The Hindu las and custom (1928) S. tujh¢rhÇÆ‹ The Hindu Judicia Sysyte (1945) ஆகியவை குறிப்பிடத்தக்கன.  இவைகளில் தமிழர்களின் சட்ட நீதிமுறை பற்றிய செய்திகள் இடம் பெறவில்லை.  பண்டைத் தமிழரின் நீதிமுறை பற்றி தமிழக வரலாறு எழுதியோர் ஒரு சிலர் சிறு குறிப்பு வரைந் துள்ளனர்.  தனித்த முழுமையான ஆய்வு வெளி வந்ததாக தெரியவில்லை.

சங்க காலத்தில் நீதிமன்றம்

பண்டைத் தமிழகத்தில் நீதி வழங்குவதற்கு தனியா அவைகள் (நீதிமன்றங்கள்) இருந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

“சிறந்த கொள்கை அறங்கூறவையம்”

என்று மதுரை காஞ்சிபுரம் (492)

“மறங்கெழு சோழ ருறந்தை யவைத்

தறம் நின்று நிலையிற்று”

என்று புறநானூறும் (39) குறிப்பிடுகின்றன.

தகுதியானவர்களை நீதிமன்றத்தில் நீதி வழங்க நியமிக்க வேண்டியது அரசன் கடமை என்பதை

“அறனிலை திரியா வன்பின் வையத்துத்

திறனிலொருவனை நாட்டி முறைதிரிந்து

மெலிகோல் செய்தே னாகுக”

என்று புறநானூறு (71) குறிப்பிடுகிறது.

அறங்கூறு அவையத்தில் நடுவர்களாக பார்ப் பனர்கள் இருந்தனர் என்று வரலாற்று பேராசியர் வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் தனது “Studies in Tamil Literature and History”  (பக்.218) நாளில் குறிப்பிடுவதை மறுத்து பேராசியர் சு. வித்தியானந்தன் தனது தமிழர் சால்வு நூலில் (பக். 64) “இவ்வாறு கொள் வதற்கு சங்க நூல்களில் சான்று இல்லை” என்று குறிப்பிடுகிறார்.  சங்க காலத்தில் சிறந்த நீதி வழங்க நீதிமன்றங்கள் இருந்தன என்பது தெளிவாகிறது.

வாழ்வுரிமை (Right to life)

1948ம் ஆண்டில் ஐ.நா.வின் உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் 21 மற்றும்  22 உருவாக்கப்பட்டு உள்ளது.  சட்ட வழிமுறை (Procedure established by Law)  அல்லாமல் ஒருவரது வாழ்வுரிமை பறிக்கப்படக்கூடாது என்று கூறப் பட்டுள்ளது.  கோவலன் கள்வன் என்பது அவன் மீது குற்றச்சாட்டு சுமத்தி விசாரணை செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப் பட்டிருக்க வேண்டும்.  இந்த உண்மையை வலியுறுத்தி கூறுகிறது சிலம்பு.

இயற்கை நீதி (Natural Justice)

இந்த கோட்டு குற்றம் சாட்டப்படுபவர் தன் தரப்பு கருத்தை தெரிவிக்க வாய்ப்பு கொடுக்கப் பட வேண்டும்.  அவரது பதிலை கேட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். என்று கூறுகிறது. இதனை Audi Alteram Parterm என்று லத்தீன் மொழியில் சட்டத்துறையில் கூறுவர்.  இந்த இயற்கைக்கு மாறாக பொற்கொல்லன் குற்றச்சாட்டை மட்டும் வைத்துக் கொண்டு கோவலன் பதிலை கேட்காமலேயே நீதி வழங்கப் பட்டு விட்டது.  இது தவறு என்று உணர்த்துவதன் மூலம் இயற்கை நீதி கோட்பாடு வலியுறுத்தப் படுகிறது.

குற்றச்சாட்டு சாட்சியத்தின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்

குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப் பட்டவர் நிரபராதி என்றே கருதவேண்டும்.  குற்றச்சாட்டு சாட்சியத்தின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி (Beyong reasonable doubt) நிரூபிக்கப்பட வேண்டும்.  ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பது இன்றைய சட்டமுறைமை.  இந்த கருத்தை சிலப்பதிகாரம் வலியுறுத்துகிறது. கோவலன் கையில் சிலம்பு இருந்தது மட்டுமே சாட்சியம் ஆகாது.  அது அரசியின் சிலம்பு என்பது நிரூபிக்கப் பட வேண்டும். அதன் பிறகுதான் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கொள்ள முடியும்.  தண்டனை வழங்கிய பிறகே கோவலன் நிரபராதி என்று நிரூபிக்கப் படுகிறது. ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டதால் அரசன் தானே கள்வன் என்று கூறி உயிர் விடுகின்றான்.

குற்றத்தை சாட்டுபவரே நிரூபிக்க வேண்டும்

இந்த கோட்பாடு Aglo Sazon Jurisprudence அடிப்படையில் உருவாக்கப்பட்டு இன்று பெரும் பாலும் நடைமுறையில் உள்ளது.  ஒரு சில வழக்குகள் விதிவிலக்கு. ஆனால் Frech Juris prudenceஇல் குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்.  சிலப்பதிகாரத்தில் பொற் கொல்லன் கோவலன் கள்வன் என்பதை நிரூபிக்க வில்லை.  ஆனால் கோவலன் நிரபராதி என்று கண்ணகி நிரூபிக்கிறாள்.

சாட்சியம் தான் வழக்கிற்கு முக்கியம்

பெரும்பாலும் குற்ற வழக்குகளில் சம்பவத்தை காண்கிறவர் அளிக்கும் சாட்சியம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும்.  சாட்சியம் இல்லாமல் எந்த விஷயமும் நிரூபிக்கப்பட்டதாக ஏற்ற முடியாது. சிலப்பதிகாரத்தில் முத்தும், மாணிக்கமுமே சாட்சியம்.  கண்ணகி சிலம்பில் மாணிக்கம் இருந்தது.  கோவலன் கள்வன் அல்லன் என்று நிரூபிக்கப்பட்டது.

சிலம்பில் நீதிமுறை

சிலப்பதிகாரம் காட்டும் நீதிமுறை பண்டைத் தமிழரின் உயர்ந்த நீதி நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.  இதனை தெளிவாக குறிப்பிடுகிறார் புகழ்பெற்ற வரலாற்று பேராசிரியர் A.L.Basham அவர் தனது The Wonder that was India நூலில் (பக்.472) சிலம்பு காட்டும் நீதிமுறை பற்றி Their (Tamils) stern respect for Justice என்று குறிப்பிடு கிறார்.

இந்திர விழவூரெடுத்த காதையில் பாவை மன்றம் பற்றி குறிப்பிடப்படுகிறது.  அரசனும் அறங்கூறு அவயமும் நீதிமுறை கோடினால் பாவை கண்ணீர் விட்டு அழும் என்று குறிப்பிட்டு உள்ளது (வரிகள் 135-138) பொய்சாட்சி சொல் பவரை பூதம் புடைத்துண்ணும் என்றும் (வரி 131) குறிப்பிட்டுள்ளது.

சிலப்பதிகாரம் நூலின் 20-வது காதையாக அமைந்துள்ளது “வழக்குரை காதை” மொத்தம் 81 வரிகள் கொண்டது இந்த பகுதி.  49 வரிகளில் கண்ணகி அரசனை காண்பது வரையான விபரம் குறிப்பிடப்படுகிறது.  50-வது வரி மிக முக்கியமான ஒன்று “தேரா மன்னா!” என்று கண்ணகி அரசனை நோக்கி தன் முதல் வார்த்தைகளை கூறுவது கவனிக்கத்தக்கது.  “தேரா மன்னா” என்பதன் பொருள் ஆராய்ந்து உண்மையை அறியாமல் என் கணவனை கொலை செய்துவிட்டாயே! என்று கண்ணகி குற்றம் சாட்டுகிறாள்.  “தேர்தல்’ என்பது சட்ட முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையாகும்.

67-ம் வரியிலிருந்து 78-ம் வரையான 12 வரி களில் உச்சபட்ச காட்சி (Climax)  நடந்து முடிந்து விடுகிறது.

கண்ணகி தன் கால் சிலம்பில் மாணிக்கம் உள்ளது என்கிறாள்.  அரசன், அரசியின் சிலம்பில் முத்து உள்ளது என்கிறான்.  கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பு கண்ணகி முன் கொண்டு வைக்கப்படுகிறது.  கண்ணகி அந்த சிலம்பை எடுத்து அடித்து உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்க கற்கள் அரசன் முகத்தில் படுகிறது.  அரசன் உண்மை தெரிந்தவுடன் நான் அரசன் அல்ல! நானே கள்வன் என்று கூறி மயங்கி வீழ்ந்து உயிர் விடுகிறான். இந்த காட்சியை,

“என் காற் பொற் சிலம்பு மணியுடையரியே, எனத்

தேம்மொழி உரைத்தது செவ்வை நன்மொழி

யாமுடை சிலம்பு முத்துடை யரியே

தருகென தந்து தான் முன் வைப்பக்

கண்ணகி அணிமணிக்காற்சிலம்புடைப்ப

மன்னவன் வாய்முதற் தெறித்தது மணியே, மணிகண்டு

தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன்

பொன்செய் கொல்லன் தன் சொற்கேட்ட

யானோ அரசன்! யானே கள்வன்

மன்பதை காக்கும் தென்புலங் காவல்

என் முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள் என

மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே”

என்று இளங்கோவடிகள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியுள்ளார்.

“யானோ அரசன்! யானே கள்வன்” என்பதை “I am not the King! I am the Robber” என்று ஆங்கிலப் பேராசிரியர் கா. செல்லப்பன் தன் Ph.D.,  பட்ட ஆய்வு நூலான Shakespeare and Ilango as Tragedians என்பதில் மொழிபெயர்த்துள்ளார்.  தமிழரின் பழமையான குற்றவியல் நீதிமுறை இங்கே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது அறியத்தக்கது.

முடிவுரை

பண்டைத் தமிழரின் நீதிமுறை பற்றிய விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.  தமிழர் களுக்கென்று தனித்த நீதிமுறை இருந்துள்ளது. இதனை சட்ட கல்வியின் பாடத்திட்டத்திலும் சேர்க்க வேண்டும்.  வரலாற்றில் உரிய முறையில் பதிவு செய்திடல் வேண்டும்