New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு


Guru

Status: Offline
Posts: 24811
Date:
சங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு
Permalink  
 


சங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு

கணியன் பாலன்

இராஜ்கௌதமன் அவர்களின் சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வுகள் ஆழமாகவும், நுட்பமாகவும், தனித்தன்மையோடும் இருக்கின்றன. தமிழ் அறிவு மரபு பற்றிய அக்கறை கொண்டு இயங்கிவரும் தமிழர்கள் தனது கருத்துகளோடு வினை புரியவேண்டும் என்கிற அவருடைய நூலின் முன்னுரையில் தரப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்கி அவர் சங்ககாலம் பற்றியும், அக்கால வேந்தர்களின் காலம் குறித்தும் கூறியுள்ள சில கருத்துக்களுக்கு வினை ஆற்றியுள்ளேன். “பதிற்றுப் பத்து - ஐங்குறுநூறு, சில அவதானிப்புகள்” என்கிற தனது நூலில் திரு.இராஜ்கௌதமன் கீழ்க்கண்ட 9 விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

rajgouthaman book on pathittrupathuதரை மற்றும் கடல்வழி வணிகம், வேளாண் மற்றும் தொழில்சார்ந்த பொறியியல், அரசாட்சி, நிர்வாகம், நில அளவை, அரண்மனை மாடங்கள், கோட்டைகள் தொடர்பான கட்டிடப்பொறியியல், நெசவு முதலான கைவினைத் தொழில் நுட்பம், உலோகவியல், முத்து, பவளம், அரியகல், பொன், வயிரம், மணி தொடர்பான ஆபரணத்தொழில் நுட்பங்கள் ஆகியவற்றில் வெகுவாக முன்னேற்றம் கண்டிருந்த சங்ககால சமூகத்தில் (கி.மு.300-கி.பி.200) எண்ணும் எழுத்தும் இல்லாமல் இருந்திருக்காது(1).

அரிய கல்மணிகள், கனிமங்கள், பொன் மற்றும் இரும்பு உலோகங்கள், பவளம், முத்து, மரங்கள், மணப்பொருட்கள், உணவுப்பொருட்கள், கால்நடைகள், விலங்கினங்கள், யானைத்தந்தங்கள் முதலியனவும் அவை சார்ந்த தொழில்நுட்பங்களும், உற்பத்திகளும் பெருத்த இலாபம் தரும் தொழில்களுக்கு அடித்தளமிட்டன; அங்காடி வணிகம் முதல் பெருங்கடல் வணிகம் வரை வணிகத் தொழில் வளர்ந்தது. புலவர் மரபிற்கு இந்தப் பரிமாணம் முக்கியமாகப்படவில்லை. வேளாண்மையை விவரித்த அளவிற்குக் கைவினைத் தொழில்நுட்பம், ஆபரணத் தொழில், ஆடைத் தொழில் வணிகம் ஆகியவை பாடல் நெறிக்குள் வரவில்லை(2).

கடல்வழி கலம் செலுத்திக் கீழை ஆசிய நாடுகளோடு, மேற்கே எகிப்து, பாபிலோனியா, உரோம சாம்ராஜ்யங்களோடு வாணிபம் புரிந்த தமிழர் பற்றி அயல் நாட்டார் குறிப்புகளும், ஆவணங்களும்(ஒப்பந்தம்) சான்று பகிர்கின்றன. யவனரோடு நடந்த கடல்வாணிபம் பற்றிய அகச்சான்றுகள் உள்ளன(3), (முசிறி-அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தம்).

காடு, மலை, கடறு(குன்றும் வனமும் சேர்ந்த இடம்) ஆகிய வளமற்ற பகுதி களில் இருந்து கிடைத்த அரிய பண்டங்களின் பொருளாதார மதிப்பும், வாணிகத்தால் கிட்டும் செலாவணி மதிப்பும் பற்றிப்புலவர் மரபும் பின் வந்த பெருநிலவுடைமை சார்ந்த வேளாண் உற்பத்தி முறையும்பெரிதாக எண்ணிப் பார்த்ததில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது(4).

புதிய வேளாண் நாகரிகத்தில் தனி உடைமையைச்சேர்ப்பது ஆணுக்குரிய பெருஞ்சமூகக் கடமையாக, உயிரைப்போன்று இருக்கிறது(5).

கி.மு. 300 முதற்கொண்டே கங்கைச் சமவெளியில் உருவான மகதப் பேரரசில் தோன்றிய சமண-பௌத்த/வைதீக நெறிகளும் தருமங்களும் தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகமாகி வந்துள்ளன(6).

பிராமி கல்வெட்டு வழி அறியலாகும் தமிழகம் சமணமயமான தமிழகம் போலத் தெரியும்(7).

புலவர் மரபால் பாடப்பட்ட வேந்தர்கள் ஒரு பத்துத் தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கூறியுள்ளார்கள்(8).

சங்ககாலத்திலும் அதன்பின்னும் தக்காணத்தின் மையத்திலிருந்த பழம் பெரும் காடுகளில் தொன்மை வாய்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தார் கள் என்று வரலாற்றாசிரியர்கள் ஒருமுகமாகக் கூறியுள்ளார்கள்(9).

நமது விளக்கம்:

முதல் 4 விடயங்களில் சொல்லப்பட்ட, சங்ககாலச் சமுதாயம், பொருள் உற்பத்தியிலும், தொழில் நுட்பத்திலும், உலகளாவிய வணிகத்திலும் ஒரு வளர்ச்சியடைந்த சமுதாயமாக இருந்தது. ஆனால் அவை குறித்தப் புரிதல் புலவர் மரபுக்கு இருக்கவில்லை. ஆதலால் சங்கப் பாடல்களில் அவைகளுக்குரிய இடம் தரப்படவில்லை என்கிற கருத்தில் நாமும் உடன்படுகிறோம். “ஒரு மொழியின் இலக்கியம் செவ்வியல் தரத்தை எட்டியுள்ளது என்றாலே, அக்காலகட்டத்தில் அம்மொழிக்கானச் சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய, ஒரு வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாக இருந்துள்ளது என்பதாகிவிடும். அது போன்றே பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியடையாத ஒரு மொழிச்சமூகம் செவ்வியல் தரமுடைய ஒரு இலக்கியக் காலகட்டத்தைப் படைக்க முடியாது” என்கிற நமது கருத்துப்படி தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தைப் படைத்துள்ள தமிழ்ச் சமூகம் அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய சமூகமாக இருந்துள்ளது என்பதை, “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலில் விரிவாக விளக்கி உள்ளோம். முதல் 4 விடயங்களில் இராஜ்கௌதமன் தமிழ்ச் சமூகத்தின் பொருள் உற்பத்தி, தொழில்நுட்ப வளர்ச்சி, உலகளாவிய கடல்வணிகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளார்.

5ஆவது விடயத்தில் சொல்லப்பட்ட, ‘தனி உடைமைக்கான பொருள் சேர்ப்பது என்கிற வினை ஆடவனுக்கு உயிராக, பெருஞ்சமூகக் கடமையாக ஆகியிருந்தது’ என்பது வேளாண் நாகரிகத்தில் அல்ல, அதனை அடுத்து வளர்ந்த நகர-வணிக நாகரிகத்தில்தான் ஆகியிருந்தது. பொருள் சேர்ப்பது என்கிற வினை தான் ஆடவனுக்கு உயிர் எனில் அதற்கு தனி மனித சுதந்திரமும், தனி மனிதவளர்ச்சியும் ஆதரவு பெறவேண்டும். தமிழக அரசுகள் நகர்மைய அரசுகளாக, நகர-வணிக அரசுகளாக ஆகி, நகர-வணிக நாகரிகத்தை வளர்த்தெடுத்தன. நகர-வணிக நாகரிகம்தான் தனி மனித சுதந்திரத்தையும், தனிமனித வளர்ச்சியையும் வளர்த்தெடுக்கும், ஆதரிக்கும். ஆதிச்சநல்லூர் நகர நாகரிகத்தின் காலம் கி.மு. 2000 எனவும், கி.மு. 1500 வாக்கிலேயே அது ஒரு பெருந்தொழில் நகரமாக இருந்தது எனவும் தற்போதைய அறிவியல் ஆய்வு உறுதிசெய்துள்ளது. ஆகையால் தமிழகத்தில் நகர-வணிக நாகரிகம் கி.மு. 8ஆம் 7ஆம் நூற்றாண்டிலிருந்து நல்ல வளர்ச்சியைப் பெற்றிருந்தது. அதன் விளைவுதான் “பொருள் சேர்ப்பது என்கிற வினை தான் ஆடவனுக்கு உயிர்” என்கிற தமிழ்ச் சமூகத்தின் கருத்து.

ஆறாவது விடயத்தில் சொல்லப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள், கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வடஇந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே நடந்து வந்தன. பேராசிரியர் நா. வானமாமலை, “புத்தர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பூதவாதம் என்கிற பொருள்முதல்வாதக் கருத்துக்கள் நிலவின. அதனைப் படிப்பதற்காக வட இந்தியத் தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர்” எனவும் சமற்கிருத நூற்சான்றுகளைக் கொண்டு உலகாயதம் தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இருந்துவருவதாகத் தத்துவ அறிஞர் தட்சிண நாராயண சாத்திரி அவர்களும், பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்களும் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்(10). புத்தர் வரலாற்றை விளக்கும் ‘அவதான சாதகம்’ என்கிற நூல் புத்தரின் தலைமைச் சீடரான சாரிபுத்தன் தமிழ் நாட்டில் ஐந்திரம் கற்றவன் என்கிறது(11). தமிழ் அறிவு மரபின் தந்தையான தொல்கபிலரின் எண்ணியம் கி.மு. 750வாக்கில் தமிழகத்தில் உருவாகி வடநாட்டில் பரவத்தொடங்கி விட்டது. சங்ககாலத்தின் இறுதியில் வைதீக, சமண பௌத்த மதக்கருத்துக்கள் போன்ற பல கருத்து முதல்வாத மெய்யியல்கள் பரவத் தொடங்கிய போதிலும், தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக கி.மு. 1000 முதல், பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களே இருந்து வந்தன. தமிழகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களின் சில கூறுகளை சமண, பௌத்த மதங்கள் உள்வாங்கிக்கொண்டன. பின்னர் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் சமண, பௌத்த, வைதீக மதங்கள் தமிழகத்தில் பரவின.

ஏழாவது விடயப்படி, சங்ககாலகட்டத்தில், சங்ககாலக் கல்வெட்டுகளில், சமண பௌத்த மதக்கருத்துக்கள் ஆதிக்கம் பெற்றிருந்தன என்ற தோற்றமும், சங்க இலக்கியங்களில், வைதீகக் கருத்துக்கள் ஆதிக்கம் பெற்றிருந்தன என்ற தோற்றமும் ஏற்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் சங்ககாலத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களே ஆதிக்கம் பெற்றிருந்தன. ஆதலால் சங்ககாலக் கல்வெட்டுகளை அல்லது சங்க இலக்கியங்களை வைத்து மட்டும் சங்க காலச் சமூகத்தை, அதன் வரலாற்றைப் புரிந்து கொள்வது என்பது குருடர்கள் யானையைப்பற்றி அறிந்துகொண்டது போலாகிவிடும். சான்றாக, முசிறி அகழாய்வில் கிடைத்த ஒரு இலட்சம் பொருட்களிலும், கீழடி அகழாய்வில் கிடைத்த பல ஆயிரம் பொருட்களிலும் மதம் சமயம் சார்ந்த பொருள் எதுவும் இல்லை. எனவே முசிறி, கீழடி அகழாய்வுகள் சங்க காலத்தில் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களே இருந்தன என்பதை உறுதி செய்கின்றன.

எட்டாம் விடயப்படி தமிழகத்தில் பத்து தலைமுறை வேந்தர்கள் இருந்தனர் என்பது உடன்பாடானது. ஆனால் அவர்களின் கால அளவு என்பது கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டம். முதல் காலகட்டத்தில் குடவாயிற்கீரத்தனார், இரண்டாம் காலகட்டத்தில் மாமூலனார் என்கிற புலவர் வரிசையில் பரணர் நான்காம் காலகட்டம், நக்கீரர் ஏழாம் காலகட்டம், கோவூர் கிழார் பத்தாம்காலகட்டம் என பத்துத்தலைமுறைப் புலவர்கள் இருந்ததுபோலவே பத்துத் தலைமுறை வேந்தர்களும் இருந்துள்ளனர். எனது நூலில் இவை பற்றிய முழுத் தரவுகளும் தரப்பட்டுள்ளன.

ஒன்பதாம் விடயம் ஏற்கத்தக்கது. தக்காணத்தின் மையத்திலிருந்த பழம் பெரும் காடுகளில் வாழ்ந்த தொன்மை வாய்ந்த பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர்தான் களப்பிரர்கள். அவர்கள் வீரயுகக் காலத்துக்கு முந்தைய அநாகரிக நிலையில் வாழ்ந்தவர்கள். அவர்கள் மங்கோலிய செங்கிசுக்கான் போன்று திடீரென்று வலிமைபெற்று புரையோடிப்போயிருந்த, சீர் கெட்டிருந்த தமிழகத்தைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

காலம் பற்றிய சில கருத்துக்கள்:

ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளாக(கி.மு. 300-கி.பி. 200) இனக்குழு நிலையிலிருந்து மூவேந்தரின் வர்க்கபேதமான சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் மாறிவந்துள்ளது(12).

பாணர் மற்றும் புலவர் மரபுகளின் பாடல்கள் பெரிதும் கி.மு. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பாதி வரைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன(13).

சமணர் குகைகளில் காணப்படுகிற பிராமி கல்வெட்டுகளைத்தவிர, கி.மு. 300 முதல் கி.பி. 100 வரையுள்ள சங்ககாலத்தைப்பற்றி அறிய வேறு சாதனங்கள் கிடைக்கவில்லை(14).

பதிற்றுப்பத்துச் சேர வேந்தர்கள் ஏறத்தாழ கி.பி. 30 முதல் கி.பி. 230 ஆண்டுகால எல்லைக்குட்பட்டவர்கள்(15).

இந்த நான்குமே காலம் குறித்த விடயங்களாகும். கி.மு. 300 வாக்கில் இனக்குழு நிலையிலிருந்த தமிழ்ச் சமூகம், 500 ஆண்டுகால வளர்ச்சியில் மூவேந்தர்களின் வர்க்க சமூகமாக மாற்றம் அடைந்தது என்கிறார் இராஜ்கௌதமன். எனது நூலில் தொல்பழங்காலம் என்கிற இரண்டாவது தொகுதியில் அமெரிக்கச் சிவப்பிந்திய இனக்குழு, வட இந்திய ஆரிய இனக்குழு ஆகியவைகள் குறித்தும், இனக்குழு நிலையிலிருந்து நகர அரசுகளாக உருவான கிரேக்க உரோம சமூகங்கள் குறித்தும் அதே வழியில் நகர அரசுகளாக உருவான மூவேந்தர்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.

இறுதியில் சங்ககாலம் என்பது அரசு உருவாகி நிலைபெற்ற காலகட்டம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கி.மு. 1000வாக்கில் வீரயுகம் முடிந்து சேர, சோழ, பாண்டிய அரசுகளின் உருவாக்கம் துவங்கிவிட்டது எனவும், சங்ககாலம் கி.மு. 750 முதல் கி.மு.50 வரை எனவும் சங்கம் மருவிய காலம் கி.மு.50 முதல் கி.பி.250 வரை எனவும் கணிக்கப்பட்டுள்ளது. புத்தர், மகாவீரர் காலத்தைச் சேர்ந்த, பக்குடுக்கை நன்கணியார் அவர்களின் புறம்-194ஆம் பாடலின் காலம் கி.மு. 550. தொல்கபிலரின் காலம் கி.மு. 750. அவரது 6 பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. ஆகவே சங்க இலக்கியத்தின் தொடக்க காலம் கி.மு. 750.

கி.மு. 300 முதல் கி.மு. 100 வரையான சங்ககாலம் குறித்து அறிய சங்க இலக்கியங்கள், மொழியியல், அகழாய்வுத்தரவுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், மெகத்தனிசு, சாணக்கியன் போன்றவரின் குறிப்புகள், எனப் பல சான்றுகள் உள்ளன. பொதுவாகப் பண்டைய கால வரலாற்றை அக்கால எழுத்துக்களில் இருந்து ஒரு விழுக்காடுதான் அறிய முடியும் எனவும், 99 விழுக்காடு வரலாற்றை அகழாய்வுகள் கொண்டுதான் நிரப்ப முடியும் எனவும் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆகவே அகழாய்வுகள் கொண்டுதான் சங்ககால வரலாற்றை முழுமையாக அறிய இயலும். அந்த விதத்தில் திரு இராசன் அவர்களின் ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ போன்ற நூல்களும், கீழடி, முசிறி அகழாய்வுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இரண்டாம் பதிற்றுப்பத்தின் சேர வேந்தன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், அவனது தந்தை உதியன் ஆகிய இருவரும் நந்தர்கள்-மௌரியர்கள் காலத்தில் வாழ்ந்த வரலாற்றுப்பெரும்புலவர் மாமூலனாரால் பாடப்பட்டவர்கள் என்பதால் அவர்களின் காலம் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு. பதிற்றுப்பத்தின் இறுதிக்கால வேந்தனாகக் கருதப்படும் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்த ஆண்டு கி.மு. 163. இவை பற்றிய விரிவான தரவுகள் எனது நூலில் தரப்பட்டுள்ளன, ஆகவே பதிற்றுப்பத்து சேர வேந்தர்களின் காலம் கி.மு. 350 முதல் கி.மு.163 வரை. இதன் அடிப்படையில் பதிற்றுப்பத்தின் முதல் வேந்தனான உதியன் சேரலாதன் காலம் கிட்டத்தட்ட கி.மு.347 முதல் கி.மு.327 வரை என நாம் உறுதி செய்துள்ளோம். ஆனால் இராஜ்கௌதமன் போன்றவர்கள் உதியன்சேரலாதன் காலத்தை கி.பி. 30 என்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டுக்கும் இடையே நான்கு நூற்றாண்டுகள் இடைவெளி உள்ளது. இவர்களின் கருத்துப்படி பதிற்றுப்பத்து, சேர வேந்தர்களின் காலம் கி.பி.30 முதல் கி.பி.230 வரை எனவும் முதல் கரிகாலன் முதலான பல சங்ககால ஆட்சியாளர்களின் காலம் கி.பி.க்குப்பின்தான் எனவும் கூறப்படுகிறது(16).

வரலாற்றில் காலத்தின் முக்கியத்துவம்:

வரலாற்றுப்பொருள் முதல்வாத ஆய்வு என்பதில் காலம் மிக முக்கியத்துவம் வகிக்கிறது. காலத்தை அறிய இயலாதபோது வேறு வழியில்லை. ஆனால் வரலாற்று ஆய்வு என்பது காலம் இல்லாமல் ஆய்வு செய்ய முடியாதது. காலத்தை அறியவும், சமூகத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் நாணயங்கள், கல்வெட்டுகள், இலக்கியத் தரவுகள், வெளிநாட்டு ஆய்வாளர்களின் குறிப்புகள், தொல்லியல், அகழாய்வுத் தரவுகள், மொழியியல்தரவுகள் ஆகியனவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

சங்ககால வேந்தர்கள் வெளியிட்ட, சிறுகோளவடிவ நாணயங்களின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு; சங்ககால வேந்தர்கள் வெளியிட்ட யானைச்சின்ன நாணயங்கள் காலம் கி.மு. 4ஆம் 5ஆம் நூற்றாண்டு; செழிய நாணயங்கள் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு; பெருவழுதி நாணயங்கள் காலம் கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு; தலைவடிவப்பெருவழுதி நாணயங்கள் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதி; மாக்கோதையின் நாணயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதி; குட்டுவன் கோதை நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு எனபன நாணயவியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. சங்ககால ஆட்சியாளர்கள் வெளியிட்ட நாணயங்களின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதல் நூற்றாண்டு வரை வருகின்றது. நாணயங்களின் காலங்கள் மட்டுமல்ல, கல்வெட்டுக் காலங்கள், தொல்லியல் தரவுகள், மொழியியல், இலக்கியத் தரவுகள் எல்லாம் கி.மு.வில் வருகின்றன. ஆனால் நமது ஆய்வாளர்கள் சங்ககால ஆட்சியாளர்களின் காலத்தைக் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை எனக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே சங்ககாலம் என வரும்பொழுது கி.மு. 300 - கி.பி. 250 எனக் கொள்கின்றனர் (இராஜ்கௌதமன் சங்ககாலத்தின் மேல் எல்லையைக் கி.மு. 500 எனக் கொள்கிறார்). நமது ஆய்வுப்படி, சங்ககால வேந்தர்கள் அனைவரும் கி.மு. 50க்கு முன் ஆட்சி செய்தவர்களே. ஆகவே தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல், வரலாற்றியல் போன்ற பலதுறை ஆய்வுகளையும் இணைத்து செய்யப்படும் ஆய்வே முறையான அறிவியல் ஆய்வாக இருக்க முடியும்.

வைதீக மரபு சார்ந்த வரலாறு:

பேராசிரியர் வீ.அரசு அவர்கள் டாங்கே, நா.வானமாமலை போன்றவர்களை வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை உடையவர்கள் என்கிறார்(17). இராஜ்கௌதமன் போன்றவர்களை என்ன சொல்வது? விளிம்புநிலை மக்களின் நிலையில் இருந்து எழுதுவதாகச் சொல்லிக் கொள்கிறார். ஆனால் வைதீக மரபு சார்ந்த வரலாற்றைக் கட்டமைக்கும் பணியைச் செய்து வருகிறார். இவரது நூல்களான “பதிற்றுப்பத்து-ஐங்குறுநூறு, சில அவ தானிப்புகள், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், கலித்தொகை - பரிபாடல் ஒரு விளிம்புநிலை நோக்கு” ஆகிய மூன்றும் வைதீக மரபு சார்ந்த வரலாற்றைக் கட்டமைக்கும் பணியைத்தான் செய்துள்ளன. சாத்திர நெறிப்பட்ட அனைத்தும் வட இந்திய, வைதீக மரபு சார்ந்தன என்கிற ஒரு பெருந்தவறான புரிதல் அவரிடம் உள்ளது. சாத்திர நெறிகள் அனைத்தும் தமிழ் மூலம் கொண்டன என்பதையும் அவைகளில் பெரும்பாலானவை பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் குறித்தப் புரிதல் அவரிடம் இல்லை.

இசைத்தமிழ்தான் இந்தியாவின் ஆதி இசை என்பது குறித்தும் பண்டைய தமிழ்ச் சமூகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைதான் இந்தியாவின் பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கு அடிப்படை என்பது குறித்தும், எண்ணியம், உலகாயதம், சிறப்பியம், நியாயவியல், ஆசிவகம் போன்றவைகள் தமிழ் மண்ணில் தோன்றியவை என்பது குறித்தும் எனது நூலில் எழுதியுள்ளேன். தமிழகத்தின் சமண, பௌத்த மதங்கள் தமிழ்ச் சமூகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனையை அழித்தொழிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன என்பதையும் அவைகளை அழித்தொழிப்பதில் சமண, பௌத்த மதங்களின் பங்கை மணிமேகலை, நீலகேசி ஆகிய இரண்டு நூல்களிலும் காணலாம் என்பதையும் அவைகளின் அழிவு வைதீகத்தை தமிழகத்தில் வளர்த்தெடுத்தது என்பதையும், தமிழ்ச் சமூகத்திற்கு அவை செய்ததாகச் சொல்வதெல்லாம் தமிழ்ச் சமூகத்தின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளின் விளைவுகளாகும் என்பதையும் சொல்லியுள்ளேன்.

பார்வை:

  1. பதிற்றுப்பத்து-ஐங்குறுநூறு, சில அவதானிப்புகள்”, திரு. இராஜ்கௌதமன், விடியல் பதிப்பகம், டிசம்பர்-2010, பக்:11, 12.
  2. ‘’ ‘’ ‘’ பக்: 47.
  3. ‘’ ‘’ ‘’ பக்: 142.
  4. ‘’ ‘’ ‘’ பக்: 47.
  5. ‘’ ‘’ ‘’ பக்: 141.
  6. ‘’ ‘’ ‘’ பக்: 4.
  7. ‘’ ‘’ ‘’ பக்: 11.
  8. ‘’ ‘’ ‘’ பக்: 12.
  9. ‘’ ‘’ ‘’ பக்: 45.
  10. நா. வானமாமலை, ‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’ அலைகள் வெளி யீட்டகம், சூலை-2008, பக்: 136, 137.
  11. தமிழர் இயங்கியல் தொல்காப்பியமும் சரக சம்கிதையும் முனைவர் க. நெடுஞ்செழியன், பாலம், 2009. பக்: 32, 146.

12, 13. “பதிற்றுப்பத்து - ஐங்குறுநூறு, சில அவதானிப்புகள்”, இராஜ்கௌதமன், விடியல் பதிப்பகம், டிசம்பர்-2010, பக்: 4.

  1. ‘’ ‘’ ‘’ பக்: 11

15, 16. “பதிற்றுப்பத்து-ஐங்குறுநூறு, சில அவதானிப்புகள்”, இராஜ்கௌதமன், விடியல் பதிப்பகம், டிசம்பர்-2010, பக்:14.

  1. தமிழர் பண்பாடும் தத்துவமும், நா.வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், வீ. அரசு, அவர்களின் அறிமுக உரை, பக்: 6, சூலை-2008.

சான்றாதார நூல்:

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 766 – 774.

- கணியன் பாலன், ஈரோடு



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard