அவைதிகம் என்பதற்கு வைதிகம் அல்லாதது என்று பொருள், வைதிகம் என்றால் வேதங்கள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளான உப நிடதங்கள்.
புராணங்கள், மந்திர தந்திரங்கள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உண்மை என சாதிப்பது. அவைதிகம் என்பது இவற்றை யெல்லாம் நிராகரிப்பது. சுருங்கச் சொன்னால் நாத்திகம் என்பதே அவைதிகம் எனப்படும். இதற்கு சான்றாகச் சிலர் அளித்துள்ள விளக்கங் களைக் காணலாம். தத்துவ ஆய்வறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா “இந்திய நாத்திகம்” என்ற நூலில் இவ்வாறு விளக்கம் தருகிறார், “உலகாயதம்” துவேகம் ஆகியவற்றின் பொருண்மைநாத்திகவாதமேஆகும்.இவற்றோடு சாங்கியம், புத்தம். சமணம். மீமாம்சம். நியாய வைசேசிகம் ஆகியவையும் கீழ்காண்பவற்றை மையக் கருத்துக்களாக கொண்டிருந்தன.
வேத வேள்விகளையும் வருணா சிரமங் களையும் பல கடவுள் வழிபாட்டையும் மறுத்தன.
உபநிடதங்கள் உரைக்கும் ஒரு கடவுளுண்மை வாதத்தையும் உடன் படவில்லை.
வேதங்கள் விளம்பும் இயற்கைச் சக்தி களுக்கும் உபநிடதங்கள் உரைக்கும் பரம்பொருளுக்கும் பதிலாக அண்ட அமைப்பியல் நியதிகளை வரை யறுத்தன.
இயற்கை இறந்த ஆற்றல்களைப் புறக் கணித்தன.
அண்டத்தில்இயற்கைவிதியின்ஆட்சியை மதித்தன.
உடன்பாட்டு முறையில் நோக்கினால் அவைதிக அல்லது நாத்திக தத்துவங்கள் அமைப்பியல் நியதிகளை வ ரையறுத்தன; அண்டத்தின் இயற்கை விதியின் ஆட்சியை மதித்தன. செயற்கையாக முன் வைக்கப்பட்ட கடவுள், இயற்கை கடந்த ஆற்றல் இன்ன பிறவற்றை அவை ஏற்க மறுத்தன என்கிறார் சட்டோபத்யாயா.
நாத்திகம்குறித்ததந்தைபெரியாரின்கருத்தும் இங்கு ஒப்பு நோக்க தக்கது.
“இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுளை இல்லை யென்பவன் என்றாக்கிவிட்டார்கள்” தர்க்கரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன் தான் என்கிறார் பெரியார்.
தனது கருத்துக்கு ஆதரவாக அவர் பவுத்தம் புத்தம் என்ற சொற்களுக்கான விளக்கத்தை முன்வைக்கிறார்.
“சொந்த புத்தியைக் கொண்டு வேத சாஸ் திரங்களைத் தர்க்கம் செய்பவன் நாத்திகன் அப்படிப்பட்ட புத்தியை உபயோகப்படுத்து கிறவன் புத்தன்.
“அபிதான சிந்தாமணி” என்சைக்கிலோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் “புத்தியைக் கொண்டு -அறிவைக் கொண்டு பார்ப்பவர்கள்;கண்மூடித்தனமாக நம்பாதவர்கள் என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள்”
(பெரியார் களஞ்சியம் – தொகுதி 4 பக்கம் : 236)
இந்திய தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் முனைவர் சோ.நாகந்தசாமிஅவர்கள் நாத்திகம் என்பதற்கு அளித்துள்ள சில விளக்கங்களையும் காணல் தகும்.
“பாணினி இலக்கண விதிக்கு (வீஸ் – 460) பதஞ்சலி செய்த மாபாடியத்திற்கு விளக்கவுரை எழுதிய சாயாதித்தர் ஆத்திகர் – பரத்தை உடன் பட்டவர்;
நாத்திகர் – அதனை நம்பாதவர்” என்று விளக்கம் கூறினார்.
“மனு. நாத்திகரை விளக்கும் பொழுது வேதக் கொள்கைளை நிந்தனை புரிபவர் என்று குறித்துள்ளார்.
“சுக்கிர நீதியில் கற்பதற்குரிய கலைகளில் “நாத்திகமும்சாத்திரமும்(அழுத்தம்.மூலநூலில் உள்ளது ) ஒன்றாக எண்ணப்பட்டது.
இச்சாத்திரம் சுபாவ வாதத்தைக் கூறு வதுடன் தருக்க வாதங்களை வலிமையாகக் கொண்டது. வேதங்களையும் கடவுளையும் மறுத்துரைப்பது” (அழுத்தம் கட்டுரையாளருடையது )
இந்த விளக்கங்கள் வழி நாம் ஒரு முடிவுக்கு வரலாம் பொதுவாக நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு என்று சொல்லப்பட்டாலும் வேத மறுப்பு மேலுலக மறுப்பு. சடங்கு மறுப்பு போன்ற வற்றையும் உள்ளடக்கியதாகும். இந்தப் புரிதலை அடியற்றி செவ்வியல் இலக்கியங்களில் நாத்திக அல்லது அவைதிக மரபுகள் பதிவாகியிருப்பதைக் கண்டுகாட்ட முற்படுவதே கட்டுரையின் நோக்கமாகும்.
நந்றிணை. குறுந்தொகை. ஐங்குறுநூறு. பதிற்றுப்பத்து. பரிபாடல். கலித்தொகை. அகநானுறு. புறநானுறு என எட்டுத் தொகை நூல்களும். திருமுருகாற்றுப்படை. முல்லைப் பாட்டு. நெடுநல்வாடை. குறிஞ்சிப்பாட்டு. பட்டினப் பாலை. மலைபடுகடாஅம் எனப் பத்துப்பாட்டு நூல்களும் செவ்வியல் இலக்கியங்கள் எனப்படுபவை. காலப் பழமை கருதிஇவற்றோடு சிலப்பதிகாரம்.மணிமேகலை. சீவக சிந்தாமணி. வளையாபதி. குண்டலகேசி, எனும் ஐம்பெருங் காப்பியங்களையும் நீலகேசி. சூடாமணி. யசோதார காவியம். நாக குமார காவியம். உதயணகுமார காவியம் என்ற ஐஞ்சிறுங் காப்பியங்களையும் இணைத்துக் கொள்ளலாம் இவற்றுக்கெல்லாம் ஆதி நூலாக விளங்குவது தமிழுக்கான இலக்கணத்தை மொழியியல் வாழ்வியல் அடிப்படையில் கூறும் தொல் காப்பியம் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட இவ்விலக்கண நூல் உலகத்து உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்கிற அடிப்படை வைதிகமரபை ஏற்கவில்லை. மாறாக உயிர்களின் பரிணாம வளர்ச்சி என்கிற அறிவியலுக்கு முன்னுரைஎழுதியுள்ளது. ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரையிலான வகைப்பாட்டினைத் தொல்காப்பியம் எடுத் துரைக்கிறது.
“ஒன்றறிவதுவே உற்றறிவதுமே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு முக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
சேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினனே (தொல், பொருள். மரபியல் நூற்பா 27) பொதுவான உயிர் வகைமைகளைக் கூறி நிறுத்தலாம்.
“புல்லும் மரனும் ஓரறிவினவே”
‘‘நத்தும் முரளும் ஈரறிவினவே”
‘‘சிதலும் எறும்பும் மூவறிவினவே”
‘‘நண்டும் தும்பியும் நான்கறிவினவே”
‘‘மாவும் மாக்களும் ஐயறிவினவே”
‘‘மக்கள் தாமே ஆறறிவுயிரே”
(தொல். பொருள் மரபியல் நூற்பாக்கள் 28 -33)
என்று விளக்கம் தருகிறது. ஒருசெல் தாவரங்களிலிருந்தே பரிணாம வளர்ச்சி துவங்குகிறது. இதன் இறுதி வடிவமே மனிதன் என்று அறிவியல் கூறுவதன் முன்னோட்டம் போலவே தொல்காப்பிய நூற்பாக்கள் அமைந்துள்ளன. உலகின் உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை என்ற ஒற்றை வரியோடு நின்றிருந்தால் தொல்காப்பியம் வைதிகத்தின் வழிப்பட்டதாகி இருக்கும்” அதிலிருந்து விலகி நிற்பதால் தமிழர்களின் அவைதிக மரபுக்குத் தொல்காப்பியம் வழி திறந்திருக்கிறது எனலாம்”
அது மட்டுமல்ல. உலகத்தைப் படைத்து கடவுள் அல்லஎன்பதானகருத்தையும் தொல்காப்பியம் முன்வைக்கிறது.
“நிலம். தீ. நீர், வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆகலின்” (தொல். பொருள் மரபியல் நூற்பாக்கள் 635) தொல் காப்பியத்தைப் பின்பற்றுவது போன்ற கருத்துக்கள் புறநானூறு தொகை நூலிலும் காணப்படுகின்றன. மன்னனைப் புகழ்ந்து பாடுவதென்றபெயரால்தங்களின்கோட்பாட்டு சார்புநிலையைப்புலவர்கள்சொல்வார்கள்.இவ் வகையில் உறையூர் முதுக்கண்ணன் சாத்தான் சோழன் நலங்கிள்ளியின் குணநலன்களைக் கூறுவதுபோல உலகின் ஐம்பூதத்தியற்கையைப் பதிவுசெய்கிறார்.
“மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
ஒளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல”
(புறநானுறு -2)
மன்னனின்குணங்கள் இருந்ததாகக்கூறுகிறார் புலவர்.
ஆரம்பத்தில் உலகாயதர் என்றும் பின்னர் சாருவாகர் என்றும் அறியப்பட்ட ஆதிச் சிந்தனையாளர்களில் ஒருபிரிவினர் முன்வைத்த இயற்பண்பு (ஸ்வாபம்) வாதத்தை இந்தப்பாடலில் காணமுடிகிறது. இப்புலவரின் இன்னொரு பாடலும் வானியலை அளந்து கூறுவதாக இருக்கிறது.
“செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தோர் போல என்றும்
இனைத்து உன்போரும் உளரே
(புறநானூறு -30)
ஞாயிறு எனும் சூரியனின்பயணம், அதனைச் சூழ்ந்தமண்டலம், (பிறகோள்கள்) காற்றின்திசை,. காற்றேஇல்லாத ஆகாயம் என இவற்றையெல்லாம் நேரில் சென்று அளந்தது போல கணித்துச் சொல்வோரும் உள்ளனர் என்பது இப்பாடலின் கருத்தாகும். ஞாயிற்றின் மண்டிலம் என்ற அறிவியல் முன்னோட்டத்தை மேம்படுத்த மறந்ததாலும் – வைதிகக் கருத்தாளர்கள் மறைத்ததாலும் நவக் கிரங்ககளைச் சுற்றிவந்து பூசனை செய்யும் கருத்து திணிக்கப்பட்டது. பூமியிலிருந்து மேற் செல்லச் செல்ல குறிப்பிட்ட தூரத்திற்குப்பின் சுவாசிக்கத் தேவையான காற்று கிடைப்பதில்லை புவியீர்ப்பு விசை இல்லையாகிறது என்ற இன்றைய ஆய்வுகளுக்குக் கட்டியம் கூறுவதுபோல இருக்கும் தொடர் “வறிது நிலைஇயகாயமும்”என்பதாகும்.அனைத்துக்கும் மேலாக இவற்றையெல்லாம் நேரில் சென்று அளந்ததுபோல் கணித்துச் சொல்வோரும் உள்ளனர் என்று சொல்லியிருப்பது புலவரின் காலத்தோடு ஒப்பு நோக்கி மதிக்கத்தக்கதாகும்.
ஆகாயத்தில் பரலோகம் இருக்கிறது. சொர்க்கம் இருக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். தேவேந்திரனும் முப்பெருங்கடவுளரும் தேவியரும் இருக்கிறார்கள் என்றெல்லாம் இன்றும் சொல்லி நம்பவைத்துக் கொண்டிருக்கும் வைதிகப் புராண மரபை அன்றே உடைத்தெறிந்திருக்கிறார் முதுகண்ணன் சாத்தனார். இவரது பெயரைக் கொண்டே இவர் புத்தமதச் சார்பாளர் என்று கொள்ள இடமுண்டு புத்தமதம் உள்ளிட்டநாத்திகசமயங்கள் அண்ட அமைப்பியல் நியதிகளை வரையறுத்தன. அண்டத்தில் இயற்கையின் ஆட்சியை மதித்தன என்ற சட்டோபாத்யாயாவின் நிர்ணயிப்பையும் இதுபோன்ற கருத்துக்கள் மெய்ப்பிக்கின்றன.
மழைக்கு ஓர்கடவுளைக் படைத்தது வைதீகம். மழை என்பது இயற்கையின் கொடை அதனைப் பெறும்போது பாதுகாத்து வைத்துக்கொள்ள மனிதர்களான நாம் முயற்சிசெய்ய வேண்டும். திட்டமிட வேண்டும். ஆனால் வருண பகவானுக்கு மழைவேண்டி யாகம் வளர்க்கும் அவலத்தை இன்றும் நாம் காண்கிறோம்”ஆனால் சங்ககாலப் புலவரான குடபுலவியனார்.
“நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்” (புறநானூறு – 18)
என்ற உணவின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறார் மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்,அதாவதுஇயற்கையில்கிடைத்ததை உண்டு வாய்பப்பு கிடைத்தவரை வாழ்ந்த காலத்திலிருந்து மாறி, உணவு உற்பத்தி சேமிப்பு என்ற கால கட்டத்திற்கு வந்துசேர்ந்த காலம் சங்ககாலம் என்பதை அறியமுடிகிறது. உணவு உற்பத்திற்குஉயர்தேவையாகஇருப்பதுதண்ணீர். அந்தத் தண்ணீரைப் பாதுகாப்பது மன்னனின் கடமை என்று அறிவுறுத்துகிற நிலையில் இருக்கிறார் புலவர்.