New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெறுப்புடன் உரையாடுதல்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
வெறுப்புடன் உரையாடுதல்
Permalink  
 


வெறுப்புடன் உரையாடுதல்


 
Save
Share104
 

images

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம்.

தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. அதில் வாசகர்களின் விமர்சனங்களும் பிரசுரிக்கப்பட்டது. நானும் சில கருத்துகளை எழுதி இருந்தேன். அதில் என்னை திட்டியும், அறிவுரை கூறியும் பலபேர் எழுதி இருந்தனர். இந்திய தேசியம் அதில் கேள்விக்கு இலக்காகி விமர்சிக்கபட்டிருந்தது. அஹிம்சை ஒரு போதும் விடுதலை போராட்டங்களில் வெல்லமுடியாது என்று பலர் விவாதித்தனர். காந்தியை ஒரு பம்மாத்துகாரர் என்றும் சிலர் வாதிட்டனர். விவாதம் செய்தவர்கள் நேதாஜியை போற்றி, அவர் வழி வந்தவர்தான் பிரபாகரன் என்றனர். நான் நேதாஜி பற்றி குறைவான மதிப்பீடுகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் அவருடைய சித்தாந்தம் இந்திய விடுதலையில் வெற்றி பெறவில்லை எனபது குறித்து எனக்கு வேறு கருத்து இல்லை.

நான் தங்களுடைய காந்தியம் குறித்த பதிவுகளை ஓரளவு படித்திருக்கிறேன். நீங்கள் காந்திய வழிகளில் நம்பிக்கை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. உங்களை தவிர வேறு யாரும் என் குழப்பங்களை தீர்க்க முடியாது என்று எண்ணுகிறேன். காந்திய வழி இந்திய விடுதலையில் எப்படி வெற்றி பெற்றது?, ஆயுதம் ஏந்திய மற்றவர்களால் ஏன் வெற்றிபெற முடியவில்லை?. வெற்றி பெறுவதற்கு ஆயுதபலமும் செல்வமும் போதுமான அளவு இருந்திருந்தால் நேதாஜி இந்திய விடுதலையை சாதித்திருக்க முடியுமா?. அப்படியானால் காந்திய வழி பலவீனர்களின் கொள்கையா?. இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட கோடானு கோடி மக்களின் அஹிம்சை சார்ந்த முயற்சிகளால் நாம் விடுதலை அடையவில்லையா?. மக்களின் மனோபலத்தைவிட ஆயுதங்களின் பலம் பெரிதா?

இப்போது இணையதளங்களில் வெளிவரும் பல பத்திரிகைகள் உமிழும் இந்திய வெறுப்பு மிக அச்சமூட்டுகிறது. இன்றைய இளைய சமுகம் இணையதளங்களை பரவலாக பயன்படுத்தும் பட்சத்தில் இத்தகைய தவறுதலான வழிகாட்டுதல்கள் இந்திய தேசியத்தின் மைய கருத்தையே அசைத்துவிட வாய்ப்பிருப்பதாக படுகிறது. இந்திய தேசியத்தின் மேன்மையை பரப்பும் அறிவியக்கம் வலுவானதாக இருக்கிறதா?.

தங்கள் கருத்துகள் என் குழப்பங்களை தீர்க்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன்

குருமூர்த்தி பழனிவேல்

நைஜீரியா

 

 

i

 

அன்புள்ள பழனிவேல்,

உங்கள்மேல் கொட்டப்பட்ட வெறுப்பு மிக இயல்பானது. காந்தியக் கோட்பாடென்பது எப்போதுமே வெறுப்புக்கு எதிரான ஒன்று. ஆகவே எப்போதுமே வெறுப்புதான் அதை எதிர்கொள்கிறது. காந்தி அவர் வாழ்ந்த காலத்திலேயே உச்சகட்ட வெறுப்பு, அவதூறு ஆகியவற்றின் நடுவிலேயே வாழ்ந்தார். அவற்றுடன்தான் அவர் மீண்டும் மீண்டும் உரையாடிக் கொண்டிருந்தார்.

வெறுப்பு எரியும் மனங்களைப் பொறுத்தவரை உண்மையில் அவர்களுக்கென கோட்பாடோ, கொள்கையோ, ஏன் இலட்சியமோ கூட ஏதுமில்லை. அவற்றின் தன்னியல்பால் அவை வெறுப்பைக் கக்குகின்றன. அவ்வெறுப்பைக் கக்குவதற்கான ஒரு காரணமாக ஏதேனும் அரசியலை சமூகநோக்கத்தைக் கண்டுகொள்கின்றன. அந்த நோக்கத்தை உச்சகட்ட அறம் சார்ந்ததாக, சமூகக் கோபம் சார்ந்ததாக முன்வைக்கின்றன. அந்தநோக்கத்தைக் கொண்டு தங்கள் அதிகார வெறியை, மானுடவெறுப்பை நியாயப்படுத்துகின்றன. ஆனால் உள்ளூர உள்ள சக்தி என்பது அப்பட்டமான வெறுப்பு மட்டுமே

இதற்கான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான். எந்த இலட்சியத்துக்காக இவர்கள் அவ்வெறுப்பைக் கக்குவதாகச் சொல்கிறார்களோ அந்த லட்சியங்களையே தங்கள் வெறுப்பின் பொருட்டு காலில்போட்டு மிதிப்பார்கள். மக்களுக்காக ஆயுதமேந்துபவர்கள் மக்களையே கொன்றுகுவிப்பார்கள். உதாரணமாக, முன்பு மாவோ அதை சீனத்தில் செய்தார் என்பது நாற்பது வருடம் மறுக்கப்பட்டு இன்று அவர்களாலேயே ஒத்துக்கொள்ளப்பட்ட வரலாறு. நேற்று ஆந்திராவிலும் இன்று வடஇந்தியக் கிராமங்களிலும் மாவோயிஸ்டுகள் அதையே இப்போது செய்கிறார்கள்.

வன்முறை மற்றும் ஆயுதமேந்திய போராட்டங்களில் இருக்கும் ‘மனக்கிளர்ச்சி’ வேறு வகையான சமூகப்போராட்டங்களில் இல்லை. பொதுவாக இவற்றைப் பற்றியெல்லாம் ஆரம்பத்தில் பேசுபவர்கள் தனிவாழ்வில் எந்த வன்முறையையும் எதிர்கொள்ள முடியாத அறிவுஜீவிகளாக இருப்பார்கள். அவர்களின் எளிய அன்றாட அலுப்பை அகற்றும் ஒரு சிந்தனையாக அது இருக்கிறது. தங்களை அதிதீவிரமானவர்களாக சமரசமற்றவர்களாக உருவகித்துக்கொள்ள அது உதவுகிறது. இந்தப்பாவனைக்காக, இது உருவாக்கும் அகங்கார திருப்திக்காக அவர்கள் பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவார்கள். அவர்களை பலியிடுவார்கள்.

வன்முறை சார்ந்த உணர்வுகளும் எண்ணங்களும் மிக எளிதாக தூண்டிவிடப்படத்தக்கவை. ஆகவே இரண்டாம் தர அறிவுஜீவிகளும் சுயநல அரசியல்வாதிகளும் அதை உடனடியாகக் கையிலெடுக்கிறார்கள். மனிதர்கள் நடுவே மிக மிக எளிதாக பிரிவினையை உருவாக்கலாம். எந்த சமூகத்திலும். மிகச்சிறப்பாக இதை ஹிட்லர் அவரது சுயசரிதையில் விளக்குகிறார். ஒரு மேடையில் ஒருவன் உண்மையிலேயே எதிர்மறையாக உணர்ச்சிவசப்பட்டால் போதுமானது அந்த உணர்ச்சிகளை அவனால் அவனைச் சூழ்ந்திருக்கும் கூட்டத்துக்கு கொடுத்து விட முடியும். அது நியாயமான உணர்ச்சிதானா, அதன் மூலம் உண்மையான பலன்கள் இருக்குமா என்றெல்லாம் அம்மக்கள் எண்ண மாட்டார்கள். அதுவே மனித இயல்பு.

அத்தகைய ‘உண்மையான’ எதிர்மறை உணர்ச்சியை எப்படி அடைவது? பேசுபவன் தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான வெறுப்பை வளர்த்துக் கொண்டாலே போதுமானது. அந்த வெறுப்பு அவனில் இருந்து ஒரு சக்தியாக வெளிப்படும். அதுவே ·பாசிசத்தின் ஆற்றல். வெறுப்பு என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் ஆயுதம் என்பதை நவீன அரசியல் கற்றுக்கொண்டது. அவ்வெறுப்பை உருவாக்க மதம், இனம், இனக்குழு அடையாளம் என எதையும் பயன்படுத்த முடியும் என்று அது அறிந்தது. உலகம் முழுக்க இன்று பெருகும் குருதி என்பது அந்த அறிதலில் இருந்து வந்ததுதான். காந்தியம் அந்த வெறுப்பரசியலுக்கு எதிரான மானுட அறத்தின் குரல்.

***

காந்திய வழியிலான போராட்டத்தின் மூன்று அடிப்படை விதிகள்தான் அதை நூற்றாண்டின் இன்றியமையாத முறையாக ஆக்குகின்றன.

ஒன்று, ஒரு போராட்டம் அந்த போராட்டத்தை நடத்தும் மக்களுக்குக் கற்பிப்பதாக, அவர்களை மேம்படுத்துவதாக அமையவேண்டும். எந்த ஒரு சமூகமும் பற்பல கூறுகளினால் ஆனதாகவே இருக்கும். அந்தகூறுகளுக்குள் உக்கிரமன உள்முரண்பாடுகள் இருக்கும். அவர்கள் ஒரு பொது இலக்குக்காக மேற்கொள்ளும் போராட்டமானது அவர்களுக்குள் பரஸ்பர விவாதத்தையும் உரையாடலையும் உருவாக்க வேண்டும். அவர்களின் முரண்பாடுகள் நடுவே இயல்பான சமநிலையை உருவாக்க வேண்டும்.

காந்திய வழியிலான போராட்டத்தின் இயல்பு என்பது மக்களை மீண்டும் மீண்டும் ஒன்று திரட்டுவதுதான். அப்போது அவர்கள் நடுவே உள்ள முரண்பாடுகள்தான் மேலெழுந்து வரும். அம்முரண்பாடுகள் நடுவே ஒய்யாமல் சமரசம் செய்துகொண்டே இருக்கும் அது. அந்தச் சமரசம் வழியாக ஒரு பொதுத்திட்டத்தை ஒரு பொதுக்கனவை அம்மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யும். அதுவே அந்தப் போராட்டத்தின் அடிப்படை வலிமையாகவும் இருக்கும் இது நீண்டகால அளவில் நிகழும் ஒரு செயல்பாடாகும். ஆகவேதான் காந்திய இயக்கம் மிக நிதானமான சீரான படிப்படியான போராட்டத்தை முன்வைக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்திய சமூகத்தின் அத்தனை உள்முரண்பாடுகளும் ஒரு பொது இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு மெல்ல மெல்ல சமரசப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். தன்னுடைய ஆன்மபலத்தை முழுக்க காந்தி இந்த சமரசத்துக்கே செலவிட்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் சமரசம் செய்திருக்கிறார். அவர் வரும்வரை உயர்மட்டம் சார்ந்து நடந்து வந்த போராட்டத்தை அடித்தளம் வரை கொண்டு சென்றிருக்கிறார். சமூகத்தின் அத்தனை தரப்புகளையும் போராட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்

பல வருடங்களுக்கு முன்பு மூத்த கம்யூனிஸ்டுத்தலைவரான சி.அச்சுதமேனன் என்னிடம் சொன்னார். சுதந்திரப் போராட்டம் வழியாக காந்தி இந்திய சமூகத்தை அரசியலுக்குக் கொண்டு வந்தார். இந்தியாவின் கோடானுகோடி அடித்தள மக்களுக்கு அரசியல் பங்கேற்பு என்னும் அதிகாரம் அவர்களுக்கிருப்பதை உணர்த்தினார். அந்த அடித்தளம் மீதுதான் இந்தியாவில் இடதுசாரி அமைப்புகள் உருவாக்கப்பட்டன என்று. இந்திய தலித் இயக்கமும் அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டதே. அதை அம்பேத்காரும் உணர்ந்திருந்தார்.

ஆக, காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் என்பது உண்மையில் அந்த அரசியல் விழிப்பு இயல்பாகவே கொண்டு வந்த அடுத்த கட்டம் மட்டுமே. இந்தியாவின் பெரும்பாலான மக்கள் அரசியலதிகாரத்துக்குத் தொடர்பில்லாமல் தங்கள் மூலைகளில் முடங்கி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காந்தி அவர்களுக்கு அரசியலை வழங்கிவிட்டார். அதன்பின் அவர்கள் அதிகாரமின்றி அமைய முடியாது. அதன் பின் அவர்களை ஜமீன்தார்களும் குறுநிலமன்னர்களும் அவர்கள் மேல் அமர்ந்து பிரிட்டிஷாரும் ஆள முடியாது.

அதாவது தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தங்களை அடக்கும் சக்தியை எதிர்கொள்ளும் போராட்டம் அது. தங்கள் குறைகளைக் களைவதன் மூலம் தங்கள் அடிமைத்தனத்தை வெல்லும் போராட்டம். அதுவே காந்திய வழியிலான போராட்டத்தின் முதல் அடிப்படையாகும்

இரண்டாவதாக, பிழைகளைக் களைவதற்கான வழிமுறைகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் இயல்பு காந்தியப் போராட்டத்துக்கு உண்டு. ஒரு போராட்ட நிலைபாடு தவறாக இருப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. மானுடப்பிழைகள். தத்துவப்பிழைகள். வரலாற்றுப்புரிதலின் பிழைகள். ஒருபோதும் பின்னால் போக முடியாத ஒரு போராட்டத்தின் இழப்புகள் சாதாரணமானவை அல்ல.

ஏனென்றால் சமூகப்போராட்டங்கள் கோடானுகோடி மக்களைச் சார்ந்தவை. அம்மக்களின் பல்லாயிரமாண்டு கால வாழ்க்கை. அவர்களின் வரலாறு, பண்பாடு என நூற்றுக்கணக்கான நுண்கூறுகள் அப்போராட்டத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றை அனைத்தையும் புரிந்துகொண்டு அப்பழுக்கற்ற ஒரு போராட்டவழியை உருவாக்குவதென்பது முற்றிலும் இயலாத ஒன்று. ஆகவே முற்றிலும் சரியான ஒரு பாதையும் இருக்கப் போவதில்லை

காந்தி தன் போராட்டத்தை பலமுறை பின்னுக்கிழுத்திருக்கிறார். தான் உத்தேசித்த போராட்டம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றோ, அல்லது தான் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்றோ எண்ணிய கணமே அவர் பின்னகர்ந்திருக்கிறார். மறுபரிசீலனை செய்திருக்கிறார். மீண்டும் புதிய வழியில் தொடங்கியிருக்கிறார். காந்திய வழியிலான போராட்டத்துக்கு மட்டுமே இந்த வாய்ப்பு இருக்கிறது

மூன்றாவதாக, வரலாற்றிலும் சமூகச் செயல்பாடுகளிலும் இறுதித்தீர்வு என்ற ஒன்று இல்லை என்ற புரிதல் காந்திய வழிகளின் அடிப்படை தரிசனமாகும். இறுதியான வழி ஒன்றை கண்டடைந்து விட்டேன், அதைத்தவிர வேறெதையுமே ஒத்துக்கொள்ள மாட்டேன் என்ற நிலை ஒரு அபத்தமான அகங்காரமே அன்றி சமூகத்தையோ வரலாற்றையோ புரிந்து கொண்ட ஒன்றல்ல. காந்தி முரணியக்கத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர். எந்த விசைக்கும் இணையான எதிர்விசை உண்டு. அந்த எதிர்விசையுடனான முரண்பாடும் சமரசமும் அடங்கியதே போராட்டம். எந்தப்போராட்டமும் எப்போதும் எதிர்தரப்புடனான பேச்சுவார்த்தைக்குத் தயராக இருந்தாக வேண்டும்.

காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் என்பது ஆங்கில அரசை வேருடன், வேரடி மண்ணுடன், ஒழித்துக்கட்டுவதற்கான ஒன்றாக இருக்கவில்லை. அது பிரிட்டிஷ் ஆதிக்கத்துடனான ஒரு நீண்ட உரையாடலாகவே இருந்தது என்பது இன்று வியப்பளிக்கிறது. எப்போதும் அவர் பிரிட்டிஷாருடன் பேச தயாராக இருந்தார். தன் தரப்பை அவர்களுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தார். அடைந்தார், அடைந்தவற்றை தக்கவைத்துக் கொண்டு மேலும் பேசினார். பிரிட்டிஷார் தன் எதிரிகள் என அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்களை அசுரர்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிக்கவில்லை. அவர்களுக்காகவும் சேர்த்தே தான் போராடுவதாக அவர் சொன்னார்.

அதனால்தான் பிரிட்டிஷாரை இந்திய அதிகாரத்திலிருந்து அகற்ற அவரால் முடிந்தபோதும் பிரிட்டிஷ் ஜனநாயகத்தையும் பிரிட்டிஷ் நீதிநிர்வாகத்தையும் பிரிட்டிஷ் இதழியலையும் அவரால் வைத்துக்கொள்ள முடிந்தது. இன்றும் இந்திய நாகரீகத்தின் செல்வங்களாக அவை நீடிக்கின்றன. யாருக்கு எதிராக அவர் போராடினாரோ அவர்களுக்கும் அவர் தலைவராக இருந்தார்.

நான்காவதாக காந்தியப்போராட்டம் என்பது ஒருமுனைகொண்ட ஒன்றாக இருப்பதில்லை. ஏற்கனவே சொன்னதுபோல அது ஒரு மாபெரும் சமூக உருவாக்கமாகவும் இருக்கிறது. ஒரு அடிமைத்தனத்துக்கு எதிராக போராடும்போது அந்த அடிமைத்தனத்துக்குக் காரணமாக அமையும் பலநூறு விஷயங்களை கண்டடைந்து ஒவ்வொன்றாக அவர் விலக்கினார். அந்த முனைகளில் எல்லாம் அவர் போராட்டத்தைக் கொண்டு சென்றார். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய காந்தி கிராமம் கிராமமாகச் சென்று கக்கூசில் மலம் கழிப்பதைப்பற்றி பிரச்சாரம் செய்தார். கிராமப் பொருளாதாரத்தை மீட்டமைக்க முயன்றார். மதச்சீர்திருத்தம் செய்ய போராடினார்.

 

 

இந்தியாவைச் சுற்றியிருக்கும் எந்தநாட்டிலும் இல்லாத வலுவான ஜனநாயகம் இந்தியாவில் இருக்கிறது. அதன் குறைகளும் போதாமைகளும் எத்தகையதாயினும் அதை சாதாரணமாகக் கூட நாம் பிறநாடுகளுடன் ஒப்பிட முடிவதில்லை. இந்த ஜனநாயக விழுமியங்கள் சுதந்திரப் போராட்டம் மூலமே இங்கே உருவாகியது. அது காந்தியப் போராட்டமாக இருந்ததே ஒரே காரணம்.

 __________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

காந்திய வழிமுறைகளை நிராகரிப்பவர்கள் கடந்த உலக வரலாற்றில் எத்தனை ஆயுதபோராட்டங்கள் வெற்றிபெற்றன என்று சொல்ல வேண்டும். கொஞ்சம் வரலாற்றுப் பிரக்ஞையுடன் திரும்பிப் பார்ப்பவர்கள் சென்ற நூறு வருடங்களில் உலகத்தில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் ஆயுதப்போராட்டம் நிகழ்ந்ததோ அங்குள்ள மக்களுக்கு அழிவையன்றி வேறெதையுமே- ஆம், எதையுமே– அவை அளிக்கவில்லை என்பதையே காண்பார்கள்.

அவற்றின் அழிவுத்தன்மைக்குக் காரணங்கள் என்ன என்று நோக்கினோமென்றால் அவையெல்லாமே காந்திய வழிமுறைகளின் சிறப்பியல்பாக நாம் சுட்டும் விஷயங்கள் இல்லாமைதான் என்பதையே காண்கிறோம். பிரம்மாண்டமாக எழுந்து அரைநூற்றாண்டுக்காலம் பல்வேறு சிந்தனையாளர்களால் மீண்டும் மீண்டும் பேசப்பட்ட ருஷ்ய, சீன புரட்சிகள். அம்மக்களுக்கு அவை அளித்தது என்ன? பேரழிவையும், அடிமைத்தனத்தையும் மட்டும்தானே? அப்பட்டமாக வரலாறு இவ்விஷயத்தை திறந்து வைத்திருக்கிறது இன்று. இருந்தும் நேற்றுவரை அவற்றை நியாயப்படுத்தியவர்கள் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் காந்தியை குறைகூற வருகிறார்கள்.

ருஷ்ய, சீனப்புரட்சிகள் முதல் இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் நடந்துவரும் இனக்குழுச் சண்டைகள் வரை அனைத்திலும் நாம் காணும் பொது அம்சம் ஒன்றுதான். அவை தங்கள் உள்முரண்பாடுகளுக்கே ஆயுதங்களை முதலில் பயன்படுத்தின. தங்களுக்குள் கொன்று கொண்டு அழிந்தன. சந்தேகங்கள், துரோகங்கள், பேதங்கள் அவற்றின் விளைவான படுகொலைகள். ஆயுதம் எடுத்த எந்த ஒரு அமைப்பும் தன்னைச் சார்ந்தவர்களையே அதிகமும் கொன்றிருக்கிறது. ருஷ்ய வரலாறானாலும் சரி, சீன வரலாறானாலும் சரி, எந்த ஒரு உலக ஆயுதப்போராட்ட வரலாறானாலும் சரி. ஒரு விதிவிலக்கு கூட உலகத்தில் இன்று வரை கிடையாது.

ஏனென்றால் முரண்பாடுகளை சமரசப்படுத்திக் கொண்டு ஒன்று திரட்டிக் கொண்டு முன்னகரும் வாய்ப்பை வன்முறை முற்றாகவே தவிர்த்துவிடுகிறது. உரையாடலையே இல்லாமல் செய்துவிடுகிறது. ஆயுதமேந்திய சமூகம் அந்த உரையாடலின்மை காரணமாகவே இறுகி விடுகிறது. அச்சமும் அவநம்பிக்கையும் கொண்டதாக ஆகிவிடுகிறது. ஆகவே அதன் உள்முரண்பாடுகள் மெல்ல பெருகுகின்றன. அழிவை உருவாக்குகின்றன.

இன்று ருஷ்ய, சீன பரிசோதனைகளைப் பற்றிப் பேசும்போது சர்வ சாதாரணமாக அவை ‘கம்யூனிச அமலாக்கத்தில் நிகழ்ந்த சிறிய பிழைகளும் பின்னடைவுகளும்’ என சொல்லுபவர்களைக் காண்கிறோம். கோடானுகோடி மக்கள் புழுப்பூச்சிகளைப் போல செத்தொழிந்தார்கள் என்பதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. ஆயுதப்போராட்டம் ஒவ்வொரு கணமும் பின்பக்கம் பாலங்களை எரித்தபடியேதான் முன்னகர்கிறது. அழிவை மட்டுமே நம்பி அது இயங்குகிறது. அதன் தவறுகளின் விலை மிகமிக அதிகம். எப்போதும் ஏழை எளிய மக்களே அந்த விலையை கொடுக்கிறார்கள். தங்கள் உயிரால். குளக்குகளை ஒழித்ததும் கலாச்சாரப் புரட்சியும் தவறுகள் என ஸ்டாலினிஸ்டுகளும் மாவோயிஸ்டுகளும் சொல்லலாம். செத்தொழிந்த மனிதர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

ஆயுதப் போராட்டம் என்பது எப்போதுமே இறுக்கமான விவாதத்துக்கு இடமே இல்லாத இறுதிமுடிவு ஒன்றை எடுத்த பின்னர் தான் முன்னகர்கிறது. ஆனால் எந்த மேதாவியும் எந்நிலையிலும் வரலாறு சார்ந்தும் சமூகம் சார்ந்தும் அப்படி ஒரு முடிவை எடுத்துவிட முடியாது. ஐம்பதுவருட வரலாற்றை ஒருவன் திரும்பிப் பார்த்தாலே போதும் எத்தனை நம்பமுடியாத திருப்பங்கள். எத்தனை அற்புதமான சாத்தியக்கூறுகள். எத்தனை புதிய விசைகள்… அந்த எல்லையை உணர்ந்த ஒரு போராட்டம் எப்போதும் தன் மறுவிசையையும் கணக்கில் கொண்டதாகவே இருக்கும். எப்போதுமே அது ஓர் உரையாடலாகவே இருக்கும்.

காந்திய வழிமுறை விவாதத்தை அனுமதிக்கிறது என்பதனாலேயே அதைப் பற்றிய எல்லா கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. சுபாஷ் சந்திர போஸின் போராட்டத்தைப்பற்றி இன்றுகூட நம்மிடையே சீரான பதிவுகள் இல்லை. சுபாஷ் ஆயுதமேந்திய போராட்டத்துக்குப் போகவில்லை. அவரை அன்றைய உலக சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. அவரது இயக்கத்துக்குள் உக்கிரமான வடக்கு தெற்கு பாகுபாடுகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அவரது ஆயுதப்போராட்டம் என்பது ஒரு பெரும் கேலிக்கூத்தாகவே கடைசியில் முடிந்தது. ஜப்பானியர்களின் எடுபிடிகளாகவே அவரது படைகள் இருந்தன. அதிகார பூர்வ ஆவணங்களின் படி ஐ.என்.ஏ எத்தனை போர்முனைகளில் நேரடியாக போர் செய்தது? ஒரே ஒரு போர்முனையில்தான்!

அனைத்தையும்விட முக்கியமான ஒன்று உண்டு. எந்த மக்களுக்காக சுபாஷ் ஆயுதமேந்தினாரோ அந்த மக்களின் ரத்தத்தின் மேல் நடந்துசென்றார் அவர். சயாம் மரண ரயில் பாதைத் திட்டத்தில் பல லட்சம் எளிய தமிழர்கள் இந்தியர்கள் செத்தழிவதை அவர் மீண்டும் மீண்டும் கண்டார். அந்த மானுட அழிவைப் பற்றி அவரது மனசாட்சி மௌனமாகியது. அந்த தகவல் காந்திக்கு தெரிந்திருக்குமென்றால் காந்தி அந்த மௌனத்தை கொண்டிருப்பாரா?

**

இந்நூற்றாண்டின் உலக அரசியலைப் பார்த்தால் நாம் காண்பது அர்த்தமில்லாது நடத்தப்படும் போராட்டங்களின் பேரழிவை. இவை பெரும்பாலும் சில அறிவுஜீவிகளினால் ஆரம்பத்தில் உருவாக்கப்படுகின்றன. பல்வேறு அதிகார சக்திகளினால் வளர்க்கப்படுகின்றன. பின்னர் அகங்காரங்களால், அதிகார விருப்புகளால், அதன் பொருட்டு உருவாக்கப்படும் வெறுப்புகளால், ஒன்றில் இருந்து ஒன்றாகத் தொடரும் வன்முறைகளால் நீடிக்கின்றன.

இந்தக்கணம் ஆப்ரிக்காவில் குறைந்தது பதினைந்து நாடுகள் உள்நாட்டுப்போர்களால் முழு நிர்மூலமாகியிருக்கின்றன. காங்கோ, சோமாலியா, எதியோப்பியா, சியரா லியோன், ரவாண்டா என மானுட ரத்தம் ஆறாக ஓடிய நாடுகளின் பட்டியலை நாம் போட முடியும். இந்த உள்நாட்டுப் போர்களுக்கான காரணம் என்ன? கேட்டால் மிக எளிதான பதிலே வரும், இனக்குழுக்கள் நடுவிலான அவநம்பிக்கை. அந்த அவநம்பிக்கை எப்படி வந்தது? ஆயுதத்தால்தான். அந்த ஆயுதத்தை இரு தரப்புக்கும் தயாரித்து வழங்கும் நாடுகளிடம்தான் நாம் நியாயம் கோரி கூக்குரலிடுகிறோம்.

நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்து கொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப் போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்க்க முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள்.

ஆப்ரிக்கா உள்நாட்டுப் போர்களால் அழியத்தான் வேண்டுமா? இனக்குழுக்கள் எல்லாம் தனிநாடுகளாக பிரியும் உரிமைக்காக அடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் செத்தொழியத்தான் வேண்டுமா? அந்த அவநம்பிக்கைகளைக் களைய வழிகளே இல்லையா என்ன? அந்த வழிகளை கண்டடையவே முடியாதா? ஐரீஷ் விடுதலைப்போரும் ஸ்பானிய உள்நாட்டுப்போரும் எல்லாம் என்ன ஆயின? அவையெல்லாம் சமரசபட்டு இன்று ஐரோப்பாவே ஒரே நாடாக அமையும் அளவுக்கு அவர்கள் செல்ல முடியும் என்றால் நாம் ஏன் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்நாட்டுப்போர்களை உருவாக்கிக் கொண்டு அழியவேண்டும்?

கண்ணெதிரே ஒரு மாபெரும் முன்னுதாரணம் உள்ளது. அந்த உதாரணம் ஆப்ரிக்காவுக்கு மட்டுமல்ல உலகுக்கேதான். பிரம்மாண்டமான ஓர் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல யாருக்காவது ஏதாவது ‘நியாயங்கள்’ இருந்தது என்றால் அது நெல்சன் மண்டேலாவுக்கு மட்டுமே. கொடுமையான நிற அடக்குமுறை. ஈடிணையற்ற சுரண்டல். மீண்டும் மீண்டும் ஆயுதப்போராட்டத்துக்கான கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அவரது கட்சியிலிருந்தே வன்முறை விரும்பிகள் பிரிந்து சென்று கொண்டே இருந்தார்கள்.

ஆனால் அவர் காந்தியில் இருந்து கற்றுக்கொண்டிருந்தார். தன் மக்களுக்கு அவர் அளித்தது தங்களை மேம்படுத்திக்கொள்ளும் போராட்டத்தை. அதன்பொருட்டு அவர் தன்னை சிறையிலடைத்துக்கொண்டார். இந்நூற்றாண்டின் மாபெரும் காந்திய போராட்டம், மாபெரும் சத்யாக்ரகம் என்று ரோபன் தீவில் மண்டேலா இருந்த இருபத்தேழு வருடத்து சிறைவாசத்தையே சொல்வேன். அவரது சொந்த மக்களை அது அரசியலியக்கத்துக்குக் கொண்டுவந்தது. அவர்களிடையே அது உரையாடலை உருவாக்கியது.

அதைவிட அவரது எதிரிகளின் மனசாட்சியுடன் அது உரையாடலை திறந்தது. மண்டேலாவின் போராட்டத்தில் ஒருகட்டத்தில் உலகமெங்குமிருந்த வெள்ளைய நாடுகள் ஆவேசத்துடன் பங்கெடுத்துக்கொண்டதை நாம் அறிவோம். தென்ஆப்ரிக்கா பெற்ற சுதந்திரம் என்பது படிப்படியாக நடந்த அந்த உரையாடலின் விளைவே. அது ஆப்ரிக்கர்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல, வெள்ளையர்கள் உட்பட அங்கிருந்த அனைவருக்குமான சுதந்திரம். வன்முறை இல்லாமல் நிகழ்ந்த விடுதலை. நம் கண்ணெதிரே நிகழ்ந்த வரலாறு அது.

மண்டேலாவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவர் திரும்பத் திரும்ப சமரசம் செய்து கொண்டிருந்தார் என்பதையே காண்கிறோம். மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தார். ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் பல்வேறு குழுக்களுடன். பல்வேறு உபதேசிய அமைப்புகளுடன். ஜுலுக்களுடன். வெள்ளையருடன். அவரது வரலாற்றாசிரியர்கள் அவரை ஒரு ‘மாபெரும் சமரசநிபுணர்’ என்று சொல்கிறார்கள்:

ஈழத்தில் ரத்தம் ஓடிக்கொண்டிருந்தபோது காங்கோ சிதைந்து விழுந்து கொண்டிருந்தபோது அதே நேரத்தில் அமைதியான தேர்தல் வழியாக ஆப்ரிக்காவில் ஆட்சிக் கைமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்ததை நாம் தொலைக்காட்சியில் கண்டோம். நாம் கற்றுக்கொள்ளத் தயங்கும் பாடங்கள் அங்கே அரங்கேறின.

நெல்சண் மண்டேலா ஆயுதமெடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இன்னொரு ரவாண்டா. இன்னொரு காங்கோ. ஆனால் இன்னும் நான்கு மடங்கு பெரியது. மானுடம் கண்ட மாபெரும் உதிரவெள்ளம் அங்கே ஓடியிருக்கும். ஆப்ரிக்காவின் முதல் பல இன தேர்தல்கள் முடிந்து நெல்சன் மண்டேலா பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளை நான் தொலைக்காட்சியில் கண்டதை நினைவுறுகிறேன். ஜூலு மக்கள் தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகக்கூடும் என்ற அச்சத்தால் தெருக்களில் ஆயுதங்களுடன் திரண்டார்கள். அந்த அச்சம் எவரால் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவர்களின் வெறிக்கூச்சல்களை தொலைக்காட்சியில் கண்டு நான் அதிர்ந்து இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். ஆப்ரிக்க நாடுகளின் வரலாற்றை வைத்துப்பார்த்தால் ஒரு மாபெரும் ரத்தக்களரி ஆரம்பமாகிறதென்றே எண்ணினேன்.

 

 

ஆனால் தன் காந்திய ஆயுதத்தால் அந்த நெருக்கடியை வென்றார் மண்டேலா. ஜூலு தலைவர்களுடன் திறந்த மனத்துடன் அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக்கொண்டார். தன் தியாகம் மூலம் இணையற்ற பொறுமை மூலம் அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை பொன்னாக மாற்றினார். போர்களின் இருள் சூழ்ந்த ஆப்ரிக்கக் கண்டத்தில் தென்னாப்ரிக்கா மட்டும் ஜனநாயகத்துடன் எஞ்சுவது அதனாலேயே.

காந்திய வழிமுறைகளின் நிரந்தர வெற்றிக்கும் சமகால முக்கியத்துவத்துக்கும் நம் கண்ணெதிரில் உள்ள சான்று இது. ஆயுதவழிமுறைகளின் நிச்சயமான தோல்விக்கும் அவை உருவாக்கும் பேரழிவுக்கும் சான்றுகள் என ஆயுதம் ஏந்திய எல்லா போராட்டங்களையும் சொல்லலாம். ஆனாலும் நாம் வெறுப்பாளர்களின் வசைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்களின் வெறுப்புதான் ஆயுதத்தை நாடுகிறது. அந்த வெறுப்புடன் ஓயாது உரையாடுவோம். கைகுலுக்க எப்போதும் கரங்களை நீட்டிக்கொண்டே இருப்போம்.

 மறுபிரசுரம்/முதற்பிரசுரம் May 26, 2009__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard