பழங்குடிகளாக வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தை வடக்கிலிருந்து குடியேறிய பிராமணரே பண்பாட்டு வளர்ச்சியைப் பெற வைத்தனர் என மார்க்சிய வரலாற்றறிஞர் உள்ளிட்ட அனைத்து வட இந்திய அறிஞர்களும் கருதுகின்றனர். முறையான மண வாழ்க்கை இல்லாத தமிழர் வடவரின் எண்வகை மணமுறைகளையே கடைப்பிடித்தனர் என்பது இவ்வறிஞர்களின் கருத்தாக உள்ளது. உண்மையில் வட ஆரிய சமூகமே அக வாழ்வில் மிகவும் பின் தங்கியிருந்ததை கிடைக்கும் இலக்கியத் தரவுகள் நிறுவுகின்றன. முதலில் பழந்தமிழர் ஆரியருடைய எண் வகை மணமுறைகளைக் கடைப்பிடித்தனரா என்று பார்ப்போம். வடவரின் எண்வகை மண முறைகளை மனு தர்ம சாஸ்திரம் கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றது. 1. பிரம்ம:வேத வித்தனாகவும், நல்லொழுக்கமுடைய வனாகவும் இருக்கும் பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து அவனைப் புத்தாடை அணிவித்து ஆடையணிகளால் அழகு செய்த பெண்ணை அவனுக்குத் தானம் செய்வது பிரம்ம விவாகம். 2. தைவதம் (தெய்வ மணம்) :யக்ஞத் தீயின் முன்னிருந்து யாகம் நடத்தி வைக்கும் புரோகிதனுக்கு அலங்காரத்துடன் தனது பெண்ணை கொடுப்பது தெய்வ மணம். 3. ஆரிஷம் : தான் செய்யவேண்டிய யாகாதி தர்மத்துக்காக வரனிடத்தில் நின்றும் ஒரு ரிஷபம், ஒரு பசு அல்லது இரண்டு ரிஷபம் இரண்டு பசு இவைகளைப் பெற்றுக் கொண்டு கலியாணஞ் செய்து கொடுப்பதை ஆரிஷ விவாகமென்பர். 4. பிரஜாபத்யம் :பிரம்மச்சாரியை அழைத்துப் பூசித்துப் பெண்ணைத் தரும்போது நீவிர் இருவருமாய் அறங்களைப் புரிந்து வாழ்வீராக என்று வாழ்த்திக் கொடுத்தல் பிரஜாபத்யம். 5. ஆசுரம் : பெற்றவன் குறிக்கும் பொருளைக் கொடுத்துப் பெண்ணை வாங்கி அணிகள் பூட்டி மணப்பது ஆசுரம் எனப்படும். 6. காந்தவரும் :ஆண் – பெண் இருவரும் தம்மில் மனம் கலந்து தாங்களாகவே கூடி சுகித்தல் காந்தவரும். 7. இராக்ஷசம் : அவளது உறவினர்களை அடித்துக் கொன்றும் பிளந்தும், ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தன் வலிமையால் கவர்ந்து சென்று மணப்பது இராக்ஷசம். 8. பைசாசம் : தூக்கத்திலும், குடிபோதையிலும், பித்தங் கொண்டும் இருக்கும் பெண்ணைக் கலப்பது மிகவும் தாழ்ந்த பைசாச மணமாகும்.
மேலே விவரித்த மணமுறைகளில் பிராமணணுக்குப் பிரம்ம முதல் காந்தருவம் வரையான ஆறும், சத்ரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையான நான்கும், ஏனையோருக்கு ஆசுரம், காந்தவரும், பைசாசம் ஆகிய முன்றும் ஏற்புடையது. இவற்றில் பிராமணனுக்கு பிரம்ம முதல் பிரஜாபத்யம் வரையான நான்கும், க்ஷத்ரியனுக்கு இராக்ஷசமும், மற்ற இரு வருணத்தவர்க்கு ஆசுரமும் சிறந்த மணமுறை என மனு தர்ம சாஸ்திர நூல் கூறுகிறது.
தமிழரின் மணமுறைகள் முற்றிலும் வேறுபட்டது. கடைச் சங்க காலத் தொடக்கத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியம், திருமண முறைகளை களவு, கற்பு என இரண்டாகப் பிரிக்கின்றது. கற்பு மணம் என்பது பேற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கும் இன்றைய முறையை ஒத்தது. களவு என்பது இருமனம் ஒப்பி காதலித்த தலைவனும், தலைவியும் பெற்றோரும் உறவினரும் அறியாமல் உறவு கொண்டு, தங்கள் களவு வெளிபட்டபின் பெற்றோரின் சம்மதத்துடன் மணம் செய்து கொள்வது களவு மணம் ஆகும். தமிழரின் களவு மணம் வட ஆரியரின் எண்வகை திருமண முறைகளில் காந்தர்வத்துடன் ஒப்புமையுடையது என கீழ்கண்ட சூத்திரத்தில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
மறையோராகிய வட ஆரியரின் எட்டு வகை மண வகைகளான (மன்றல் எட்டனுள்), பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகியவற்றில் காந்தர்வம் களவு மணத்துடன் ஒப்பானது என்று மேற்கண்ட சூத்திரம் பொருள்படும். தமிழ் யாழோர் (யாழ்ப்பாணர்) வட மொழியில் காந்தருவர் என அழைக்கப்பட்டனர். காந்தருவரையே “ துறையமை நல்யாழ் துணைமையோர்” என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஒரு ஒழுக்க நெறிக்குள் அமைந்த (துறையமை) நல்ல யாழினை தூணையாகக் கொண்டோரின் மணமுறை காந்தருவத்தை ஒத்தது என இதற்குப் பொருள் கூறலாம்.
இந்த எண் வகை மண வகைகளில் காந்தருவம் தவிர்த்த பிற ஏழையும் தமிழ் மரபு மணமுறைகளாக அங்கீகரிக்கவில்லை என்பதை கீழ்கண்ட சூத்திரத்தில் தொல்காப்பியர் தெளிவுப் படுத்துகிறார்.
முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே - (தொல்: பொருள்; 105)
இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர், “ முன் நின்ற அசுரமும், இராக்கதமும், பைசாசமும் கைக்கிளை என்றதற்கு சிறந்திலவேனுங் கைக்கிளை எனச் சுட்டப்படும்; பின்னர் நின்ற பிரமம், பரசாபத்தியம், ஆரிடம், தெய்வதம், என்னும் நான்கினையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெரும் எனவும் கூறப்படும் என்றவாறு. ” என உரை கூறுகின்றார்.
தமிழ் இலக்கண மரபுப்படி கைக்கிளை, பெருந்திணை என்பது கீழோராகிய அடியோர், வினைவலருக்குரியது. எவரும் செய்ய முன்வராத தொழில்களை அடி தொழில் என்றனர். இத்தகைய அடிதொழில் செய்வோரை அடியோர் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பிற சேவைத் தொழிலை மேற்கொள்பவர்களை வினைவலர் என்றனர். வடவரின் காந்தர்வம் தவிர்த்த பிற ஏழு மணமுறைகள் தமிழ் மரபுப்படி கீழ் மக்களாகிய அடியோர், வினவலருக்குரிய கைக்கிளை, பெருந்திணையில் சேர்த்து தொல்காப்பியம் இலக்கணப்படுத்தியுள்ளது. தமிழ் மரபுப்படி கைக்கிளை என்பது ஒருதலைக் காமமாகும். பொருந்தாக் காமமும் காமம் மிகுபடலும் பெருந்திணையாகும்.
அசுரத்தில் பெண்ணை அவள் பெற்றோரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி மணம் முடிக்கும் முறையாகும். இங்கு மணமகனின் விருப்பம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவதால் ஒருதலைக் காமமாயிற்று. இராக்கதத்தில் ஆண்மகன் பெண்ணின் பெற்றோர் சம்மதமில்லாமல் அவளைக் கவர்ந்து செல்வதால் இதுவும் ஒருதலைக் காமமாயிற்று. குடி போதையிலோ, பித்தங் கொண்டோ சுயநினைவின்றி இருக்கும் பெண்ணுடன் கூடும் பைசாசமும் தெளிவாக ஒருதலைக் காமமாகிறது.
தொல்காப்பியர் வடவரின் பிரமம், பரசாபத்தியம், ஆரிடம், தெய்வதம் ஆகிய மணமுறைகளை பெருந்திணை என்கிறார். இந்த நான்கு மணமுறைகளிலும் பெண்ணின் தந்தை தானாக முன் வந்து தன் மகளை பிராமணனுக்கோ, பிற செல்வந்தனுக்கோ தானம் கொடுக்கின்றான். இதில் மணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இரு சாராரின் விருப்பமும் தேவைப்படுவதில்லை. பெண்களை கோயிலுக்குப் நேர்ந்து பொட்டுக் கட்டும் வழக்கத்தின் முந்து வடிவமாக இதைக் கருதலாம். இந்த மணமுறைகளை பொருந்தாக் காமத்தில் சேர்த்து பெருந்திணைக்குரியது என தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கின்றார்.
வடவரின் காந்தருவம் கூட தமிழ் மரபின் களவு மணத்துடன் அப்படியே ஒப்புமையுடையது அல்ல. காந்தர்வம் என்பது தகுந்த வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் மணம் ஒப்பினால் தங்களுக்குள் உறவு கொண்டு தாங்களாகவே கணவன் மனைவியாக இணைந்து வாழ்வது. இதில் பெற்றோர் ஒப்புதலோ அல்லது கரணம் என அழைக்கப்படும் மணவினைச் சடங்குகளோத் தேவைப்படுவதில்லை. இது முற்றிலும் தமிழ் பண்பாட்டுக்குப் புறம்பானது. இந்த வேறுபாட்டை சுட்டிக் காட்டும் நச்சினர்க்கினியர், தொல்காப்பியரும் இதைக் கோடிட்டுக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார்.
என களவியல், முதல் சூத்திரத்திற்கான உரையில் இதனை நச்சினார்க்கினியர் விளக்குவார். தமிழ் மரபில் “கற்பின்றி களவே அமையாது” எனக் கூறும் நச்சினார்க்கினியர் காந்தர்வத்திற்கு கற்புத் தேவையில்லை என்கிறார். நச்சினார்க்கினியர் கற்பு என எதைக் குறிப்பிடுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். தொல்காப்பியர் கற்பு மணத்தின் இலக்கணத்தைக் கற்பியல் முதல் சூத்திரத்தில் குறிப்பிடுகிறார்.
கொளற்குரிய தகுதியுடைய தலவனுக்கு கொடைக்குரிய தகுதியுடைய மரபினர் பெண் கொடுக்கக் மணம் முடிப்பதே கற்பு என இதன் பொருளாகும். திருமனத்திற்குப் பின்பே மனமக்கள் உறவு கொள்ள வேண்டும் என்றும் ஒரு விதியை தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இது மிக எளிமையான பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் இன்றைய திருமனம் போன்றது தான். ஆனால் காந்தருவமும் களவும் பெற்றோருக்குத் தெரியாமல் ஆணும் பெண்ணும் காதலித்து இணை சேர்வது என்று பார்த்தோம்.
மேற்கண்ட சூத்திரத்தில் திருமணம் (கரணம்) முடிந்த பின்பே உறவு கொள்ள வேண்டும் என்பதையும் இந்தத் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வேண்டும் என்பதையும் கற்பின் இரு விதிகளாக தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். கற்பின்றி களவு அமையாது என நச்சினார்க்கினியர் கூறுகிறார். அதாவது காதலர்கள் பெற்றோர் ஒப்புதலுடன் மணம் முடிக்க வேண்டும் என்கிறார். கற்பியல் இரண்டாம் சூத்திரத்திலேயே தொல்காப்பியர் இதற்கு வழிவகை செய்கின்றார்.
திருமணத்தில் முடிந்த களவும் கற்பாகக் கருதப்படும் என்று இச்சூத்திரம் குறிப்பிடுகிறது. களவில் பெற்றோர் கொடுத்து கொள்வது இல்லை என்பதால் கொடுப்போரின்றியும் கரணம் உண்டு என்கிறார். களவு வெளிப்பட்டு பெற்றோர் ஒப்புதலுடன் கரணத்தில் முடிந்த களவையும் கற்பாகவே தொல்காப்பியர் அங்கீகரிக்கின்றார். இன்று பெற்றோருக்குத் தெரியாமல் காதலித்து விட்டு பின்னர் பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்வதை சங்க காலத்தில் களவு என்றனர். பெற்றோர் ஒப்புதலுடன் திருமணத்தில் முடியாத காதலை களவு என்று கூட தமிழ் மரபு ஏற்கவில்லை. இன்றைய உலகளாவிய நடைமுறையை சங்க காலத்திலேயே தமிழ்ச் சமூகம் நடைமுறைப்படுத்தியது எனலாம்.
வட மரபின் காந்தருவ மணத்தில் திருமணச் சடங்குத் தேவையில்லை. அந்த வகையில் வடவரின் காந்தருவமும் பெற்றோர் ஒப்புதலுடன் திருமணத்தில் முடியாதபோது தமிழ் மரபுப்படி கீழோருக்குரியதாகவேக் கருதப்படும். அதனால் தான் தமிழரின் களவு மணத்தை காந்தருவத்துடன் ஒப்பிடும் தொல்காப்பியர் துறையமை நல்யாழ் துணைமையோர் இயல்பு எனக் குறிப்பிடுகின்றார். அதாவது ஒரு ஒழுக்க நெறிக்குள் அமைந்த (துறையமைந்த) காந்தருவரின் (நல்யாழ் துணைமையோர்) மணமுறையே களவு மணத்துடன் ஒப்பானது எனக் கூறுவதன் மூலம் ஒழுக்க நெறியற்ற காந்தருவத்தைக் களவாகக் கூட ஏற்க முடியாது என்பதை தொல்காப்பியர் கோடிட்டு காட்டியுள்ளதாக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
வட ஆரியரின் எண்வகை மணங்களும் இனக்குழு சமூகத்தின் எச்சமாகவே உள்ளன. பெண்ணிற்கு விலை கொடுத்து மணம் செய்யும் அசுர முறை இனக்குழு சமூகத்தின் இயல்பான நடைமுறையாகும். இன்று உலகம் முழுவதும் வாழ்கின்ற பல பழங்குடிகளிடம் ஆண் மகன் பெண்ணின் வீட்டில் சில ஆண்டுகள் தங்கியிருந்து தன்னுடைய உடல் உழைப்பை பெண்ணிற்கான விலையாகக் கொடுக்கும் வழக்கம் உள்ளதைக் காணமுடிகிறது. பெண்ணை கவர்ந்து செல்லும் இராக்கத முறை பண்டைய வேட்டை சமூகங்களில் காணப்பட்ட ஒரு வழக்கமாகும். வேட்டை சமூகத்திற்குரிய இந்த மணமுறைகளை வட ஆரிய சமூகம் கடைபிடித்து வந்தது என்பதே உண்மை. கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் வட ஆரிய சமூகம் முறையான மணவாழ்க்கையை மேற்கொண்டதால் இவ்வாறு இனக்குழு சமூகத்தின் பண்பாட்டு எச்சங்கள் அவர்களிடம் நீடித்ததைக் காணமுடிகிறது.(ஆரிய இனக்குழுக்கள் இந்தியாவிற்குக் குடியேறும் வரை பண்பாட்டு வளர்ச்சியற்ற இனக்குழு வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தனர் என்பதை நாம் விரிவாகப் பார்க்க உள்ளோம்.) நிலபிரபுத்துவ சமூகத்துக்குரிய அரசியல் வாழ்விற்கு தமிழ் மணமுறை வட ஆரியரின் எண்வகை மணமுறைகளை விட எவ்வாறு சிறந்தது என்பதை இனி பார்ப்போம்./