New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Pallankovil Cheppedu பல்லவ மன்னன் சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேடு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Pallankovil Cheppedu பல்லவ மன்னன் சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேடு
Permalink  
 


Pallankovil Cheppedu

 
பல்லவ மன்னன் சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேடு
முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர் 
கல்வெட்டியல் துறை

Dr.MBAVANI
Assistant Proffessor,
Department of Epigraphy and Archaeology,
Tamil University
Thanjavur
செப்பேடு கிடைத்த இடம்: பள்ளன் கோயில் (தஞ்சைமாவட்டம் - திருத்துறைப்பூண்டி வட்டம்) செப்பேட்டிலுள்ள செய்தி வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்ததாக உள்ளது.
அரசன்: சிம்மவர்மன்
வம்சம்: பல்லவர்
காலம்: கி.பி. 6ஆம் நூற்றாண்டு (கி.பி. 550)
எழுத்தமைவு: தமிழ் (எழுத்தமைவு கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக உள்ளது.)
மொழி: முன்பகுதி - சமஸ்கிருதம், பின் பகுதி - தமிழ்
குறிப்பு: இச்செப்பேடில் மொத்தம் 64 வரிகள் உள்ளன.
1 முதல் 26 வரி முடிய சமஸ்கிருதத்தில் கிரந்த எழுத்திலும் 27 முதல் 64வரை தமிழ் எழுத்தில் தமிழ் மொழியும் சமஸ்கிருத எழுத்தும் கலந்து வருகின்றன. சமஸ்கிருதப்பகுதியில் வரும் முதல் 5 வரிகள் மட்டும் இங்கு தமிழ் மொழியில் கொடுக்கப்பட்டுள்ளன.
பல்லவ மன்னன் சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேடு
சமஸ்கிருத பாடம்)
1. ஸ்வர்க்கா3ப1வர்க்3க3 ப்1ரகு3ணாக்3ரம
2. தாஜ்ஜிநெந்த்3ரஹ முநீந்த்3ர தே3வேந்த்3ர ந
3. ப்3ருந்த3வந்த்யஹ ஆஸூத3ம் பூ3ஜநாப [நா]
4. தொம்கி3ரா கீர்வ்வாணேஸ
5. யூர் ப4ரத்3வாஜகஹ தேராண
(தமிழ் பாடம்)
27. கோவிசைய ஸிம்ஹவர்ம்மற்கு யாண்டாறாவது வெண்
28. குன்றக் கொட்டத்துப் பெருநகர நாட்டு நாட்டார்
29. காண்க [\] தந் நாட் அமண் சேர்க்கை பருத்தி
30. க்குன்றில் வஜ்ரநந்திக்குரவர்க்குப் பள்ளிச் சந்தமா
31. கக் கொடுத்தொந் [1] தாங்களும் படாகை நடந்து கல்
32. லுங் கள்ளியுந் நாட்டி அறையொலை செய்து கொ-
33. டுத்து விடுதகவென்று நாட்டிற்க்குத் திருமுகம் விட நாட்டா
34. ருந் திருமுகங்கண்டு தொழுது தலைக்கு வைத்து படா
35. கை நட[ந்]து கல்லுங் கள்ளியு நாட்டி நாட்டார் விடுந்த
36. அறையொலைப் படிக்கெல்லை [1] கீழ்பா
37. லெல்லை எந்த லெரியின் கீழைக்கடற்றி
38. ன் மேற்குமொமைக் கொல்லை எல்லை இன்னு
39. ம் தென்பாலெல்லை வெள்வடுகன் கெணியி
40. ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபாடி
41. எல்லை இன்னும் விலாடன் குற்றெத்தத்தெல்லை
42. இன்னும் மெல்பாலெல்லை மாவெத்தத்து
43. வதியின் கிழக்கும் மும்முலை எத்தத்தெல்லை
44. இன்னு மாறறெல்லை இன்னும் வடபாலெல்லை
45. பெருங்கொல்லையின் றெற்கு இன்னும்
46. பாண்டியன் கயத்தெல்லை இன்னும் முருக்கங்
47. கெணி எல்லை [1] இவ்விசைத்த பெருநான்கெல்லை
48. யகத்து மகப்பட்ட நிலம் நீர் நிலமும்
49. புன்செய்யும் களரும் கன்றுமெய்பாழும் காடும்
50. பீடிகையும் கிடங்குங் கெணியும் மனை
51. யும் மனைப்படப்பும் உடும்பொடி ஆமை தவ
52. ழ்ந்த தெல்லாம் உண்ணில னோழிவின்றி
53. கொவும் பொறியும் மாற்றி குடிநீக்கி இவ்வூர்
54. பெற்ற வஜ்ரநந்திகுரவர்க்கே பள்ளிச்சந்தமாக
55. தாமரிலும் பதினாறரைப்பட்டி நிலங்கொடுத்
56. தொம் [1] இந்நிலத்திற் கெல்லை கீழ்பாலெல்லை
57. புலிகிழார்பட்டியின் மெற்கும் தென்பா
58. லெல்லை முள்ளெறி பாத்தெல்லையின் வடக்கும்
59. மெல்பாலெல்லை பொக்குவாய்ச்செறு
60. வின் கிழக்கும் வடபாலெல்லை பல்லாங்
61. குழிக்காவின் தெற்க்கும் இந்நான்கெல்லை
62. யகத்தும் அகப்பட்ட பூமியும் பருத்திக் குன்றில்
63. வஜ்ரநந்திக் குரவர்க்கெ பள்ளிச் சந்தமாக பரதத்தி
64. சென்றது நரபயனாணத்தியால்
செப்பேட்டின் அமைப்பு :
5 செப்பேடுகள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளன. வளையம் செப்பேட்டின் இடதுபுறம் உள்ளது. வளையத்தின் முடிவில் வட்டவடிவ முத்திரையின் நடுவில் நந்தி முத்திரையும் சுற்றிலும் சிம்மவர்மன் என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன. உச்சியில் குடையின் இருபுறமும் சாமரமும் அதன் கீழ் பூரணகும்பம், மிருதங்கம், ஆசனம், அங்குசம், ஸ்ரீ வத்சம், பிறை, நட்சத்திரம் முதலியனவும் நந்தியின் பின் புறம் பிறை, நட்சத்திரம், நந்தியின் கீழ் அலைக்கோடுகள் ஆகியன உள்ளன. முத்திரையின் முகப்பில் நந்தியின் முகத்திலிருந்து ஆரம்பித்து கடிகாரச்சுற்றிற்கு எதிர் சுற்றில் 'ஸ்ரீ சிம்மவர்மணஹ - பாத்ர - ஸ்கலித - வ்ரித்தீனாம் - சாஸ்த்ரமாநபோம் ' என்றுள்ளது.
செப்பேட்டின் செய்தி :
பொதுவாக கூறும் இடத்து இச்செப்பேடு தற்பொழுது தமிழகத்தின் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பருத்திக்குன்று என்றப் பகுதியில் வாழ்ந்த வஜ்ர நந்தி என்ற சமண முனிவருக்கு சிம்மவர்மன் அமண்சேர்க்கை என்றப் பகுதியைத் தானம் வழங்கியதைப் பற்றிக் கூறுகிறது. அந்த நிலத்திற்குத் தானம் வழங்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த நாட்டார் என்ற நிர்வாகப் பிரிவினருக்கு அரசாணை வழங்கப்படுகிறது. முதல் 26 வரிகளில் உள்ள சமஸ்கிருதப் பகுதி பல்லவரது குலப்பெருமையைப் பற்றிக் கூறுகிறது. அவர்கள் வெற்றிச்சிறப்புகளும் அதில் இடம்பெறுகின்றன. பின்னர் சமஸ்கிருத மற்றும் தமிழ்ப் பகுதியின் செய்தி விரிவாகக் கூறுப்பெற்றுள்ளது.
செப்பேட்டின் துவக்கம் :
வழக்கமான கல்வெட்டின் மங்கலச்சொல்லான ஸ்வஸ்தி ஸ்ரீ என்று துவங்கவில்லை. அதற்குப் பதிலாக “சமஸ்கிருத பகுதி ஸ்வர்க்காபவர்க்கா” என்றும் தமிழ்ப் பகுதி “கோவிசைய” என்றும் துவங்குகிறது (வாகை சூடிய மன்னன்).
சமஸ்கிருதப் பகுதி :
26 வரிகள் வரை உள்ள சமஸ்கிருத பகுதி ஸ்வர்க்கவாழ்வும் (ஸ்வர்க்க), பேரின்பமும் (அபவர்க்க) கிடைக்கப்பெறுவதாக !முனீந்திரர், தேவேந்திரர் போன்றக் கடவுளர்களும் போற்றி வணங்கும் ஜினேந்திரர்கள் என்று புகழ்ந்து பின்னர் பல்லவர்கள் யாருடைய வழித்தோன்றல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிறு உடைப்பாடுகள் இருப்பதால் பொருள் முழுமையும் உணரமுடியவில்லை. அம்புஜனாப (விஷ்ணு) , கீர்வானேஸ (பிரம்மா), சம்யு, பரத்வாஜா, துரோனர் மற்றும் பல்லவ இது போன்ற சில பெயர்கள் மட்டுமே கிடைக்கின்றன. இவ்வாறான பல்லவ வம்சத்தில், பல மன்னர்களும் தலைவணங்கும் சிம்மவர்மன் தோன்றினார் என்றும், இவர் போர்களங்களைக் கண்டவர் என்றும் அவர் சோழர்களை வென்று அவர்களது நிலத்தையும் (சோழாவணி) கைப்பற்றியுள்ளார் என்றும், சோழர்களது செழுமையான பாக்குதோப்பு, கரும்புதோட்டம் , அரிசி வயல், வாழைத்தோப்பு அவற்றை வென்றதாகவும் கூறப்படுகிறது.
பொருள் :
முதலில் அவர்களது குடும்பப் பெருமைக்கூறப்பட்டு, அத்தகைய சிறப்பான குடும்பத்தில் அனைத்து நற்குணங்களையும் பெற்ற, எதிரிகளை வெல்லும் திறம் கொண்ட சிம்மவர்மன் தோன்றியதையும், அவன் மகன் சிம்மவிஷ்ணு, சோழர்களை வென்றதையும் கூறி , ஸ்ரமணாஸ்ரமம் என்ற கிராமம் ஜைனக்கடவுளர்களை வழிப்படுவதற்காக தர்மத்தீர்த்தத்தில் உள்ள வஜ்ஜிரநந்தி என்பவருக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொடை வழங்கும் செயலை நிறைவேற்றுபவன் - நரபயன் என்ற அமைச்சர்; பிரஸஸ்தியை எழுதியவர் - மேதாவி.
தமிழ்ப் பகுதி: பாடப்பொருள்
கோவிஜய சிம்மவர்மனின் 6ஆம் ஆட்சியாண்டில் இந்த அரசு ஆணை (திருமுகம்) வெளியிடப்பட்டுள்ளது. வெண்குன்றக் கோட்டத்தின் ஒருத்துணைப்பிரிவான பெருநகர நாட்டு நாட்டாருக்கு அரசரால் இடப்பட்ட ஆணை. தன்னாட்டு அமண்சேர்க்கை என்ற கிராமத்தை பள்ளிச் சந்தமாக, பருத்திக்குன்றில் வசிக்கும் வஜ்ஜிரநந்தி ஆசிரியர்க்கு (குரவர்க்கு) தானம் கொடுத்துவிட்டோம் இதனை அறை ஓலை செய்து (ஆவணப்படுத்தி - பிரகடனப்படுத்தும்படி) தானம் வழங்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் நடந்து (படாகை) கல்லும் கள்ளியும் நாட்டிக் கொள்க என நாட்டாருக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலத்தைக்கொடுக்கும் பொழுது முன்பிருந்தோரை நீக்கி அரசருக்கு இருந்த உரிமையையும் பொறுப்பையும் மாற்றி தானம் வழங்கியுள்ளனர். அதன் எல்லைகளைக் கூறுகின்றனர். இது மட்டுமின்றி நாட்டாரும் தங்களது தானமாக தாமர் என்ற இடத்திலுள்ள 16 1/2 பட்டி (1 பட்டி = 1200 குழி) நிலத்தைப் பள்ளிச்சந்தமாக வழங்குகின்றனர். அதற்கான எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
நாட்டாரின் நடவடிக்கை :
அரசரின் ஆணையில் கூறியுள்ளபடி நாட்டாரும் அந்த ஓலையைக் கண்டவுடன் தொழுது அதைத் தலைமேற்கொண்டு தானம் வழங்கப்பட்ட எல்லையைச்சுற்றிலும் நடந்து அதை தான நிலமாகப் பிரகடனப்படுத்துகின்றனர். அதன்படி
அரசுக் கொடுத்த நிலத்தின் எல்லையாவன
கிழக்கு எல்லை: ஏந்தல் எரியின் கிழக்கே இருக்கும் காட்டிற்கு மேற்கும், ஓமைக்கொல்லையும் (tooth brush tree garden)
தெற்கு எல்லை: வேள்வடுகன் கேணியின் வடக்கும், அங்குள்ள காடும், நீலபாடி எல்லையும் விலாடனின் குற்றேத்தமும் (small water lift)
மேற்கு எல்லை: பெரிய ஏத்தத்தின் (piccotah) வதியின் கிழக்கு, மும்முலை ஏத்தம் , ஆற்றெல்லை
வடக்கு எல்லை : பெருங்கொல்லைக்கு தெற்கு, பாண்டியன் குளத்து எல்லை, முருக்கங்கொல்லை (jack fruit or white fig)

இவ்வாறான 4 எல்லைகளுக்கும் உட்பட்ட கீழ்க்கண்ட நிலவகைகள் அனைத்தும் உள்ளடங்கியவை.
1. நன் செய் - Wet land
2. புன் செய் - dry land
3. களர் - brackish land
4. கன்றுமேய்பாழ் - grazing pasture
5. காடு - forest
6. பீடிலிகை - hillocks (மேடு)
7. கிடங்கு - ditches
8. கேணி - well
9. மனை - house sites
10. மனைப்படப்பு - house garden
11. உடும்பு ஓடி - iguana runs
12.ஆமைத்தவழ்ந்த - tortoise crawls
நாட்டார் கொடுத்த நிலத்தின் எல்லையாவன
கிழக்கு: புலிக்கிழார் பட்டியின் மேற்கு
தெற்கு: முள்ளேரி பத்துவின் வடக்கு
மேற்கு: போக்குவாய்ச் செறுவின் கிழக்கு
வடக்கு: பல்லாங்குழி காவின் தெற்கு (பூங்கா)

இந்நான்கு எல்லைக்குள்ளும் அகப்பட்ட நிலத்தைப் பரதத்தி கொடுத்தவர் (பிறர் கொடுக்கும் தானத்தை நிறைவேற்றுதல் ) நரபயன் என்ற ஆணத்தி ஆவார்.
கல்வெட்டில் கூறப்பட்டிருக்கும் ஊர்களின் அமைவிடம்
கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் வெண்குன்றக்கோட்டம் என்பது வடாற்காடு மாவட்டம், வந்தவாசி தாலுக்காவிலுள்ள வெண்குன்றத்தைச் சுற்றிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. பெருநகர நாடு என்பது செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுக்காவில் உத்தரமல்லூருக்கு மேற்கே 8மைல் தொலைவில் உள்ளது. உத்தரமல்லூரைச் சுற்றிலுமுள்ள இடம் காலியூர் கோட்டம் எனப்படும். கொடை வழங்கப்பட்ட அமண்சேர்க்கை கிராமம் தற்போதைய “அம்மனம்பாக்கம்” என்பதாக அடையாளப் படுத்தப்படுகிறது. இது வெண்குன்றத்திற்கருகில் உள்ளது. பெருநகரிலிருந்து தூரமாக உள்ளது.
குறிப்பிடத்தக்க சில செய்திகள்
பாண்டியன் கயம்
இதில் எல்லை குறிப்பிடும்போது பாண்டியன் கயம் என்று ஒரு கேணி குறிக்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு முந்தைய காலத்தில் காஞ்சிபுரம் அருகில் 'பாண்டியர்' பெயர் குறிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அறியப்படவில்லை.
பரதத்தி
பரதத்தி என்பது மற்றவருக்குக் கொடுக்கப்பட்ட அல்லது மற்றவரால் வழங்கப்பட்ட கொடை என்பது பொருள். எனவே முன்பு வேறு ஒருவரால் வழங்கப்பட்ட நிலத்திற்குப் பின்பு அரசு வரிநீக்கம் செய்துள்ளது. முன்பு இருந்தோரைக் குடிநீக்கியே இது பள்ளிச்சந்தமாக்கப்பட்டுள்ளது.
கோவும் பொறியும் மாற்றி
அரசருக்குத் தானம் வழங்கப்பட்ட நிலத்தில் எவ்வித உரிமையும் இல்லாமல் (அதாவது வரி போன்றவை விதிக்க இயலாது).
பள்ளிச் சந்தம்:
பள்ளிச்சந்தம் என்பது பொதுவாக இந்துக்கள் அல்லாத சமயத்தினருக்கு வழங்கப்படும் நில தானம் ஆகும். இச்செப்பேட்டில் சமண முனிவருக்கு சழங்கப்பெற்றுள்ளது. பள்ளிச்சந்தம் என்பது உள்ளூர் நிர்வாக அமைப்புக்களான நாடு சபை போன்றவற்றின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இவர்களுக்கு வரிசெலுத்த வேண்டாத அமைப்பு என்பது தெளிவு. சில கிராமங்கள் அரசனுக்குமே வரிகட்ட வேண்டிய அவசியமில்லாததாக சுட்டப்படுகிறது. [தண்டந்தோட்டம் - கோத்தொட்டு உண்ணப்பாலவெல்லாம் உண்ணப்பெறாதாராகவும்]


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard