New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Inscription Structure


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Inscription Structure
Permalink  
 


Inscription Structure

 
 
 
கல்வெட்டு அமைப்பு

Dr.MBAVANI
Assistant Proffessor,
Department of Epigraphy and Archaeology,
Tamil University
Thanjavur

முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர் 
கல்வெட்டியல் துறை
 
கல்வெட்டின் அமைப்பினைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. முகப்புரை (Preamble)
2. குறிப்புரை (Notification)
3. முடிவுரை (Conclusion)
 
முகப்புரை:
 
1. மங்கலத்துவக்கம்: (Invocation)
2. சாசனம் வெளியிடப்பட்ட இடம் 
3. சாசன வெளியீட்டாளரின் பெயர் அவரது விருதுப்பெயர்களும் மரபும்
 
முகப்புரை எப்பொழுதும் ஒரு மங்கலத்துவக்கமாகவே இருக்கும். "சித்தம்", "சித்திரஸ்து", "ஸ்வஸ்தி ஸ்ரீ" இது போன்ற சொற்கள் இடம்பெற்றிருக்கும். துவக்கத்தில் வாகாடகர்கள் மற்றும் பல்லவர்களது கல்வெட்டுக்களில் "சித்தம்" என்பதற்குப் பதிலாக "திருஷ்டம்" என்றே இருக்கும். இதற்கு "பார்வையிடப்பட்டது" என்று பொருள். பிற்காலங்களில் மங்கலச்சொல்லிற்கு பதில் "மங்கலக்குறி" பயன்படுத்தப்பட்டுள்ளது. சில இடைக்காலச் சாசனங்களில் "ஓம்" என்ற சொல்லுடன் "ஓம் நமசிவாய", "ஓம் கணபதயே நமஹ" போன்ற சொற்களும் இடம்பெறுகின்றன. மெல்ல, மெல்ல சொற்கள் விரிவடைந்து ஸ்லோகங்கள் இடம்பெற ஆரம்பித்தன. முந்தைய மேலைகங்கர்களின் சாசனம் ஒன்றில் "சித்தம்" என்பதன் குறியுடன் விஷ்ணுவைப்பற்றிய "ஜிதம் பகவதா கத - கன - ககன் ஆபேன பத்மநாபேன" போன்ற ஸ்லோகங்களும் இடம்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக த்ரைலோக்யமல்லரின் ரேவா செப்பேட்டைக் கூறலாம். இதைத் தொடர்ந்து சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்களைப்பற்றிய மங்கல வாழ்த்துக்கள் இடம்பெறுகின்றன. 
 
சில நேரங்களில் ஒரே மாதிரியான ஸ்லோகங்கள் இடம்பெறும்போதும் தனது மூதாதையர் மரபு வழிகள் குறிப்பிடும் போதும், பின்வரும் அரசர்கள் அதை அப்படியே தனது சாசனத்திற்கும் பயன்படுத்திவிடுவர். ஒரே கடவுளே திரும்ப திரும்பக் குறிப்பிடப்படுவதால் அம்மன்னர்கள் வழிபடும் தெய்வத்தை நாம் அறிய இயலும். இதற்குக் காட்டாக ஒரிசாவின் கங்கப் பேரரசர்களின் கல்வெட்டுக்களைக் கூறலாம். பனவாசி கடம்பர்களின் சாசனங்களின் மங்கலத்துவக்கத்தில் பல்வேறு தெய்வப் பெயர்கள் இடம்பெறுகின்றன.
 
தமிழகத்தில் முதல் முதல் “நமோத்து” என்ற வணக்கச் சொல்லுடன் கல்வெட்டு ஆரம்பிப்பது பறையன்பட்டு வட்டெழுத்துக் கல்வெட்டிலேயே ஆகும். இக்கல்வெட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. பொ.ஆ.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் கல்வெட்டுக்களில் ''கோவிசைய'' என்ற சொல்லே மங்கலத் துவக்கமாக இடம்பெறுகிறது. பெரும்பாலான இடைக்காலக் கல்வெட்டுக்கள் அனைத்திலும் ''ஸ்வஸ்திஸ்ரீ'' என்றச் சொல்லே மங்கலத் துவக்கமாக இடம்பெறுகிறது.
 
அரசன் எங்கிருந்து தானம் வழங்குகின்றான். அல்லது தான சாசனத்தை வெளியிடுகின்றான் என்பது சில கல்வெட்டுக்களில் இடம்பெறும். பொதுவாக தலைநகரிலிருந்தே சாசனங்கள் வெளியிடப்படுகின்றன. சில சாசனங்கள் அரசன் முற்றுகையிட்டிருக்கும் பொழுதும் வெளியிடப்படுகிறது. களச்சூரி மன்னன் கர்ணனின் பனாரஸ் செப்பேடு அவனது கயை புனிதப்பயணத்தின்போது வெளியிடப்பட்டதாகும். சோழ மன்னன் முதலாம் இராஜராஜனின் தஞ்சைப் பெரியக்கோயில் கல்வெட்டில் ராஜராஜன் தஞ்சைப் பெரியக்கோயிலுக்குத் தானம் வழங்கும் பொழுது இருமடிச்சோழனின் உள்ளால் திருமஞ்சனச் சாலையில் இருந்த செய்தியைக் கூறுகிறது.
 
பெயர்:
 
கல்வெட்டுக்களில் மங்கல வாசகத்தைத் தொடர்ந்து அரசரின் பெயர் இடம்பெறும். அரசனின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது மிகச்சிறந்த வரலாற்றுக் குறிப்பாகும். மிகவும் முந்தைய காலச் சாசனங்களில் கொடையாளர் பெயர் விருதுப்பெயருடனோ அல்லது இல்லாமலோ குறிக்கப்பட்டிருக்கும். இதில் தன் பெயருடன் தனது தந்தை, பாட்டனார் இவர்களது பெயரும் இடம் பெறும். சாதவாகனர்கள் தங்களது தாய் வழிப் பெயரினைப் பெற்றுள்ளனர். காட்டாக "கௌதமி புத்ர ஸ்ரீ சதகர்ணி ஸ". இவ்விதம் பெயருடன் ஆரம்பித்து அவர்களது வம்சாவழி விரிவாக விளக்கப்படும். பின்னர் அவர்களது புகழ்பாடும் பிரசஸ்தி இடம்பெறும். இதில் அவர்கள் உதித்த குலமும் கோத்திரத்தின் சிறப்பும் வெளிப்படும்.
 
குலப்பெருமை:
 
மேலை கங்கர்கள், களச்சூரி, ராஷ்டிரக்கூடர்கள், சோழ, சாளுக்கியர்கள், பாரமார்கள், பாலர் போன்றோர்களது சாசனங்களில் கொடை மன்னர்களின் வம்சாவழி மிக விரிவாக விளக்கமாக இடம்பெறும். ஒரிசாவின் கங்கமன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனின் அசன்ஹல் சாசனம் 212 வரிகளைக் கொண்டது. இதில் 165 வரிகள் அவர்களது முன்னோர் பற்றியவை. சில நேரங்களில் இவை கற்பனை கலந்தனவாகவும் உள்ளன. சில அரசுகள் உண்மையான வம்சாவழியைத் துல்லியமாக மாத, தேதியுடன் குறிப்பிடுகின்றன. காட்டாக, கீழை சாளுக்கியர்களின் சாசனங்களைக் கூறலாம்.
கொடை வழங்கப்பட்ட இடத்திலுள்ள கொடைக்குப் பொறுப்புள்ள அதிகாரிகளுக்குச் செய்தி அறிவிக்கப்பட்டிருக்கும். கொடையாளர் நல்ல நிலையில் இருந்து கொடையை வழங்கியுள்ளது கூட குறிப்பிடப்பட்டிருக்கும்
 
குறிப்புரை:
 
குறிப்புரைப் பகுதியில் பின்வரும் செய்திகள் இடம்பெறும்.
1. கொடைபற்றிய குறிப்பு
2. கொடையாளியின் பெயர்
3. கொடை வழங்கப்பட்ட சூழல் 
4. கொடை வழங்கப்பட்டதன் காரணம்
5.கொடையானது நிலமாக இருப்பின் அதன் நான்கெல்லைகள் 
 
தானம் பற்றிய விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இதிலிருந்து பல முக்கிய செய்திகளை நாம் பெற இயலும். நில எல்லை கொடுக்கப்படும்பொழுது அவ்வப்பொழுது வழக்கிலுள்ள நாடு, கூற்றம் , கிராமம், விசயம், புக்தி போன்ற நிலப்பிரிவுகளையும், மா, வேலி, காணி, முந்திரிகை போன்ற நில அளவுகளையும், உலகளந்தான் கோல், இராஜவிபாடன் கோல் போன்ற நிலஅளவுகோல்கள், வரிவகைகள் போன்றவையும், பொன் கொடையாக இருப்பின் பொன்னின் அளவு, காசுக்கொடையாக இருப்பின் காசின் வகைகள், (பொலிசை) வரி பற்றிய செய்திகள், சமூக அமைப்பு, தரநிலை இது போன்ற செய்திகளைஅறிய இயலும்.
 
தானம் ஒருவருக்கு மட்டுமின்றி பல நபர்களுக்கும் வழங்கப்படும். ராஜேந்திர சோழனின் கரந்தை செப்பேட்டில் தானம் பெற்ற 1073 பிராமணர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கொடை பெறுபவரின் பெயர் அவரது தந்தையாரின் பெயர், கோத்திரம் மற்றும் அவர்களை பற்றிய மற்றைய விவரங்களுடன் குறிப்பிடப்பெறும்.
 
கோயிலுக்கு வழங்கப்படும் தானத்தில் தெய்வம் மற்றும் ஆசாரியார்களின் பெயர்கள் இடம்பெறும். தானம் எந்த விழாவிற்காக எதற்காக கொடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் இடம்பெறும். 
 
பிராமணர்களுக்கு மட்டுமின்றி அரசரின் பிறந்த நாளின் போது, போரில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும் கொடை வழங்கப்பட்டுள்ளது.
 
கொடை வழங்கும் பொழுது என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக்கூடாது (உப்புக்காகக் குழித்தோண்டக் கூடாது) என்றும் கூறுவர். அதற்கு வரியிலிருந்து விலக்கு அளித்தும் கொடுப்பர்.
 
கொடுக்கும் கொடை சூரியன் சந்திரன் உள்ளளவும் நிலைத்திருக்கவேண்டும் என்றும் எல்லைகள் தெளிவுறவும் விளக்கப்பட்டிருக்கும். நிலம், நிலத்தின் மேற்பரப்பு, நிலத்தின் தன்மை, நீர்ப் பாசனம் (நீர் நிலம், நன்செய், புன்செய்) எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
முடிவுரை: (Imprecation) ஓம்படைக்கிளவி :
 
கல்வெட்டின் இறுதிப் பகுதியில் தர்மத்திற்குப் பொறுப்பேற்ற அலுவலர்களின் பெயர்களும் (இது என் எழுத்து), ஆதாரப்பூர்வமும் இடம்பெறும். இது சாசனத்தின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. தாமிரப் பட்டயங்களில் அரச முத்திரைகள் இடம்பெறும். தனிப்பட்டயமாக இருப்பின் பட்டயத்தின் மேல் பகுதியின் இடப்புற மூலையிலும், பல சாசனங்கள் இருப்பின் அவற்றைக் கோக்கப்பட்டிருக்கும் வளையத்திலும் முத்திரை இருக்கும். தர்மத்தைக் காத்தோர் அடையும் பலனும், தர்மத்துக்கு இடையூறு (அஹூதம்) செய்வோர் அடையும் கெடுபலனும் கூறப்படுகிறது. இது "ஓம்படைக்கிளவி" என்று அழைக்கப்படுகிறது. ஓம்படை என்பது தர்மத்தை பாதுகாத்திடுமாறு வேண்டுதலாகும். தொல்காப்பியம் இப்பொருளில் "பேஎய் ஒம்பிய புண்ணிய ஓம்படை" என்று கூறுகிறது. துவக்க காலத்தில் "அறம் ஓம்படைகளை காத்தார் செய்தார் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து", "பன்மாஹேஷ்வர ரக்ஷை", "இத்தன்மம் ரக்ஷிப்பார் ஸ்ரீ பாதம் என்றலை மேலன", "ரக்ஷித்தாரடி என் தலைமேலின" என்ற சாதாரண நிலையிலேயே இருந்துள்ளது. இது அறங்காத்தாரின் தனிச்சிறப்பினை வெளிப்படுத்துவதாகும். அறத்தைக் காக்கும் உறுதிமொழியும் அறத்தின் நீடித்த்த் தன்மையினை "கல்லும் காவேரியும் உள்ளமட்டும்" "புல்லும் பூமியும் உள்ள மட்டும்" ஆத்துமணலும் ஆவாரம்பூவும் உள்ளமட்டும்" "சந்திரனும் சூரியனும் உள்ள மட்டும்" போன்ற தொடர்கள் உணர்த்தும். அறச்செயல்கள் தொடர வேண்டின் செய்த அறங்கள் செம்மையாகக் காக்கப்படவேண்டும் என்பதை "ஆயிலைப் பதித்துற வன்னம்மை நாதனறும் வளர்த்து" என்ற கல்வெட்டுப் பாடல் எடுத்துரைக்கிறது. "அரய நல்லறம் முற்றினேஎன் நன்றினுமதனை" என்ற பாடல் மூலம் தானம் செய்தவரைக் காட்டிலும் அதை காத்தவர்க்கு பலன் பத்து மடங்கு கிட்டும் என்பதால் நாடாண்ட மன்னவனே "புரப்பார்களைப் பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே" என்று கூறியிருப்பதால் அறியலாம். சரிவர பாதுக்காக்கப்படாத காரணத்தினால் அச்சுறுத்தும் நிலையில் இத்தர்மத்தைக் காத்தார் புண்ணியம் பெறுவர் என்றும், தர்மத்திற்கு இடையூறு (அஹூதம்) விளைவித்தவர் கங்கைக் கரையில் காறாம்பசுவைக் கொன்ற பாவத்தில் போவர் என்றும் சபிக்கலாயினர்.
 
Dr. M.Bavani 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard