New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்


Guru

Status: Offline
Posts: 23907
Date:
புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்
Permalink  
 


புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்

 புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்     
முனைவர் அ.சு. இளங்கோவன்      ஒட்டன்சத்திரம்.           
 
                தமிழர் வாழ்வியலை அகம் புறம் என்னும் இருபெரும் பிரிவுகளாகக் கண்டனர். இது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பகுப்புக்கும் முன்னதாகும். அகம்,அன்பின் சிறப்புக்களைப் பாடித் தனிமனிதர்களிடையே காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் நெறிப்படுத்தியது. புறம்பொதுவாழ்வையும் மனிதன் உயர்நிலை எய்தும் சிறப்பையும் பாடியது. புறநானூறு தமிழர் பண்பாட்டின் களஞ்சியம். கி.பி. 1600 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பொற்காலம். ஆங்கில வாழ்வியலும் இலக்கியமும் உச்சி எய்தி உலகை வளைக்க வாய்ப்பளித்தன. ஆனால் கி.மு. 300 தொடங்கி கி.பி. 300வரை புறநானூற்றில் தமிழர் பண்பாட்டின் சிறப்புக்கூறுகள் தெற்றென எடுத்துக்காட்டாய்படுகின்றன. 
`இந்தியாவின் தேசியப் பண்பாடு’ என்னும் நூலில் எஸ்.அபிட் ஹூசேன் சிந்து சமவெளிப் பண்பாடும் அதனோடியைந்த திராவிடப் பண்பாடும் இந்திய தேசியப் பண்பாட்டுக்கு முக்கியப் பங்களிப்புச் செய்துள்ளன என அறுதியிட்டுரைக்கிறார். அதன அடிப்படைப் பண்புகள் பல புறநானூறு காட்டும் வாழ்வியலில் உள்ளன. பண்பாடு என்னும் சொல்லுக்குத் `திருந்திய பழக்கவழக்கங்களும் மேலான சுவையும்’ என்ற பொருள் கொள்ளப்படுகிறது. கட்டடங்கள்ஓவியங்கள்கோவில்கள்பண்பாட்டின் நினைவுச் சின்னங்கள் எனலாம். தொகுப்பான அமைப்புக்கள்சட்ட நெறிகள்முறைமைகள் ஆகியன பண்பாட்டுக் கூறுகள் எனலாம். கிரேக்கர்களின் அரசியல்,கல்விஇலக்கியம் மற்றும் ரோமானியர்களின் சட்ட நீதி முறைமைகளும் அவ்வ பண்பாட்டின் முக்கியக் கூறுகள் எனலாம். ஒரு சமூகத்தின் வாழ்வியலைக் கட்டமைத்து உயர்த்தும் மூலாதிரமான மாண்புகள்பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாகும்.
                """"தமிழர் பண்பாட்டை 2500 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும் கவின் கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒருசில நூல்களை மட்டும் தமிழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக் குறிப்பிடுவேன். அவை தொல்காப்பியப் பொருளதிகாரம்குறுந்தொகைபுறநானூறு,திருக்குறள்சிலப்பதிகாரம் என்பன"" எனப் புறநானூற்றைச் சிறப்பித்துக் கூறுகிறார் வணக்கத்திற்குரிய பிதா தனிநாயகம் அடிகள்.
                புறநானூறில் உயர்ந்த உள்ளப் பண்புஅறம்,வள்ளன்மைமனித நேயம்அஞ்சாமைஉட்பகை களைந்து உடன் வாழ் மக்கள் குழுவினருடன் கூட்டிணைவு பேணல் ஆகிய உளம்சார் பண்பாட்டுக் கூறுகளைப் பறக்கவும் சிறக்கவும் காணலாம். அத்துடன்நல்லரசு அமைத்திருத்தல்,நீதிநெறி பாராட்டல்அறிவு போற்றல்உழவும் உழைப்பும் போற்றல், `எல்லோரும் நம்மவரே – எல்லோரும் நல்லவரேஎன்னும் இனிய அன்புணர்வை வளர்த்தல்குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்தல் போன்ற பழகுமுறை மற்றும் ஆளுமைச் சிறப்புக்களையும் காணலாம்.
                                பண்வெனப் படுவது பாடறிக் தொழுகல் (நற்றிணை)
                                பண்புடையார்ப் பட்டுண்டுலகம்         (குறள்)
                எனப் பாடப்பெறும் பண்புசெயலாகச் சிறப்பது பண்பாடு. ஊரடவரசநஹபசiஉரடவரசந  என்பது திருந்தச் செய்யப்படுவது என்றே வரும். பண்ணை பண்படுத்தல் ஆகியனவும் கருதத்தக்க ஒப்புமை கொண்டவை.
 
1.             பரந்த உலக மனப்பான்மை
2.             விருந்தோம்பல்
3.             ஈகை
4.             தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் எனும் கோட்பாடு
5.             என் கடன் பணி செய்து கிடப்பதே
6.             அகத்திணை மரபுபுறத்திணை மரபு
7.             மான மாண்பு
8.             மனத்தூய்மை
9.             விடாது முயலல்
10.           யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் நிகரற்ற மனநிலை
11.           உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் உயர்ந்த இலட்சியம்
என்பன தமிழர் பண்பாட்டின் அரிய சில கோட்பாடுகள் எனத் தனிநாயகம் அடிகளார் கூறுவது சிறப்பானது.
இளம்பெருவழுதியின் புறப்பாடல் தமிழர் வாழ்வின் உயர்சிறப்புக் கூறுகளைப் பட்டியலிடுகிறது.
                                உண்டா லம்மஇவ் வுலகம்! இந்திரர்
                                அமிழ்தம் இயைவ தாயினும்இனிதெனத்
                                தமியர் உண்டலு மிலரே: முனிவலர்:
                                துஞ்சலு மிலர்;பிறர் அஞ்சுவ தஞ்சி;
                                புகழெனின் உயிருங் கொடுக்குவர்பழிஎனின்
                                உலகுடன் வெறினும் கொள்ளலர்அயர்விலர்;
                                அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!
                இந்தப் பாடல் கைப்பிடிக்க முடியாத ஒன்றைக் கூறுவதல்ல. இத்தகு தமிழர் பண்புகளைத்தம் வாழ்வில் கூரேற்றிப் பயன்கொண்டு தமிழர் இனத்துக்குப் பயன்தந்தோர் பலர். 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டிலும் இத்தகு கவிஞர்அறிவாளர்தலைவர்கள்,ஓவியர்சிற்பிகள் பலர் நமக்கு வழிகாட்டியதையும் வழிகாட்டுவதையும் காணலாம். உலகம் என்றே இந்தப் பாடலும் முன்னர்ச் சுட்டுகிறது. அவ்வைக்குஅரிய கருநெல்லிக்கனி தந்த அதியமான்அருளாளர் அப்பர்,மூவேந்தர்பாரிநள்ளிஓரிஆய்களிபேகன்ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதனார் போன்ற பலர் உருக்காட்சிகளாக நம் மனக்கண்முன் தோன்றுகின்றனர்.
                இன்னொரு பெருஞ்சிறப்புப் பெற்ற பாடல் அவ்வையார் பாடியுள்ளார்.
                                நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ
                                அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ
                                எவ்வழி நல்லை ஆடவர்
                                அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம். 117)
                வேளாண்மை சிறந்த நாடுகள் சிறப்புற்றதை ஆற்றங்கரை நாகரிகங்கள் காட்டுகின்றன. மக்கள் அறிவு நலனும் பண்பு நலனுமிருந்தால் தொழிற்புரட்சியால் உயர்ந்ததை பிரிட்டன்பிரான்சுஜெர்மனிஅமெரிக்காரசியா காட்டுகின்றன. நுண்மையால்வாழ்க்கை நெறியாலுயர்ந்ததை ஜப்பான் காட்டுகிறது. பாலை நில நாடுகள் உழைப்பினாலும் உயர்நெறிகளாலும்உலகம் தழுவிய ஒட்பத்தாலும் உயர்ந்து நிற்கின்றன.    அறிவே   ஆற்றல்   (முnடிறடநனபந ளை ஞடிறநச)   என்பதும்    பிறர்   நலம்
கருதும் பணியே தலை என்றும் இன்றும் காணமுடிகிறது.
                குறுகிய மனப்பாங்கு கொடியதென்று உலகம் தழுவிய சிந்தனை கொண்டனர் தமிழர். கடல் சார்ந்த நாவாய்களும் நிலம் கடந்த படைகளும் வானம் அளந்த வானியலும் கொண்டிருந்தனர். செல்வமும் இன்பமும் பெற்றாலும்அவற்றளவிலேயே நின்றுவிடாது வாழ்வின் உயர்நெறியை அவர்கள் உணர்ந்து உலகுக்கு வழங்கினர். தமிழர் பண்பாட்டின் தலைமைக்கூறு `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் உணர்வு. அதனை வழங்கியது புறம்.
                                யாதும் ஊரே யாவரும் கேளிர்
                                தீதும் நன்றும் பிறர்தர வாரா
                                நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
                                சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
                                இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
                                இன்னா தென்றலும் இலமேமினொடு  
                                வானந் தண்துளி தலைஇ ஆனாது
                                கல்பெரு திரங்கும் மலற் பேர்யாற்று
                                நீர்வழிப் படூஉம் புணையேல்ஆருயிர்
                                முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
                                காட்சியிற் றெளிந்தமை ஆகலின்மாட்சியின்
                                பெரியோரை வியத்தலும் இலமே;
                                சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
                என்னும் பாடல் தமிழர் பண்பாட்டின் பிழிவும் தெளிவும் ஆகும்.
வீரம்
                                சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே
                                ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
                                களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே   (புறம். 312)       
என்னும் பொன்முடியார் பாடல் தமிழர்தம் வாழ்வியல் சிறப்புக் கூறாகும். சான்றோன் என்பது இங்கே போர்க்கலை அறிந்த வீரமறவனைக் குறிக்கும்.
                                களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
                                ஈன்ற ஞான்றினும் பெரிதே   (புறம். 277)
 
                                செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
                                வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்த உடீஇ
                                யாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
                                ஒருமகன் அல்லது இல்லோள்
                                செருமுக நோக்கிச் செல்கென விடுமே (புறம். 279)
 
                                படுமகன் கிடைக்கை காணூஉ
                                ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே ( புறம்.273)
போன்ற வரிகள் வீரமே தமிழர் தலைமை மாண்பு என்பதைப் புலப்படுத்தும்.
                                ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
                                சான்றோன் எனக்கேட்ட தாய்
என்னும் குறளின் நாம் வீரமகன் புகழ்கேட்ட அன்னை பற்றியதாகவே கருதல் வேண்டும் என்று உறுதிபடக் குறிப்பிடலாம்.
                அறநெறியை நிலைநாட்ட வீரம் அடிப்படை. நால்வகைப் படையொடும் நன்னெறியொடும் ஞாயிற்றினை வெந்திறலாண்மையுடனும் விளங்கியவர் தமிழர்.
                                கடுஞ்சினத்த கொல்களிறும்
                                கதழ்பறிய கலிமாவும்
                                நெடுங்கொடிய நிமிர்தேரும்
                                நெஞ்சுடைய புகல்மறவரும் என
                                நான்குடன் மாண்டதாயினும் மாண்ட
                                அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
என்கிறார் இலவந்திப் பள்ளித் துஞ்சிய நன்மாற பாண்டியனைப் பாடுகிற மருதன்இளநாகனார்.
 
                                சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
                                அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொரு
                                ஒருங்தகல் படேன் ஆயிற் பொருந்திய
                                என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாமு
                                கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பி
                                குடிபழி தூற்றுங் கோலோனாகுக
என்று வஞ்சினம் கூறுகிறான் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழிய பாண்டியன்.
1.             குடிகளைக் காக்கவே படைநடத்தி வெல்லுதல்
2.             புலவர் இத்தகு ஆற்றலையே புகழுதல்
3.             `வெல்’ என்று தூண்டும் வேல் தமிழர் தலையாய போர்க்கருவி ஆகுதல்
4.             ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணிய வேற்படை கொண்ட முருகன் தமிழரால் வழிபடப் பெறல்
                போன்ற அருஞ்செய்திகள் தமிழர் போர் மரபு,அறஞ்சார்ந்தது. ஓடி ஒளியாதது. வஞ்சகமற்றது எனக் காட்டுகின்றன. எனேவ தமிழர் புறநானூற்றுக் காலகட்டத்தில் யாராலும் வெல்லப்படாத உரிமை அரசர்களாக விளங்கினர். உரோமரும் யவனரும் தமிழர் படையில் இருந்தனர். கடல் கடந்தும் வடக்கிலும் தமிழர் பேராற்றல் செங்கோல் செலுத்தியது. தமிழர் பண்பாடு தாய்லாந்து வரை இன்றும் உண்டு.
 


__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
RE: புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்
Permalink  
 


கொடை
                தமிழர் இயல்புகளிற் சிறந்த ஒன்று கொடைத்திறம்.
                                ஈயென இரத்தல் இழிந்தன்று
                                ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
                                கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று
                                கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று (புறம். 204)
என்கிறார் கழைதின்யானையார். பலன்கருதிச் செய்தல் ஈகை அன்று. மனம் நெகிழ்ந்துபிறர் துயர்துடைத்து மகிழ்வைப் பெருக்குவதே ஈகை.
                                செல்வத்துப் பயனே ஈதல்
                                துய்ப்பேம் எனினே தப்புந பலவே
என்று முழங்குகிறார் நக்கீரர்.
                                இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
                                அறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும்
                                சான்றோர் சென்ற நெறியென
                                ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே          (புறம். 134)
என்று குறியெதிர்ப்பை நோக்காக் கொடைக் கொள்கையை வரையறுத்து அதற்குக் கடையேழு வள்ளல் ஆய் மன்னனை எடுத்துக்காட்டாகக் கூறிப் புகழுகிறார் உறையூர் முடமோசியார். இது மனிதநலக் கொள்கை. நன்மையை நன்மைக்காகவே செய்வதும் ஆகும். டுகைந ஹககசைஅயவiடிவாழ்க்கை எனத் தனிநாயக அடிகளார் கருதுகிறார்.
                                வெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
                                சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
                                ஆதல் நின்னகத்து அடக்கிச்
                                சாதல் நீங்க எமக்கு ஈத்தனனயே
என அவ்வையார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றுகிறார்.
                                படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
                                கடஅ யானைக் கலிமான் பேகன்
                                எத்துணை ஆயினும் ஈதல் நன்றென
                                மறுமை நோக்கின்றோ அன்றே பிறர்
                                வறுமை நோக்கின்று அவன்கை வண்மையே
என்று மயிலுக்குப் போர்வை ஈந்த வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடுகிறார். பேகன் இன்றைய பழனிப் பகுதியை ஆண்ட அரசன். வையாவிபுரிக்குளமும் ஆவியர்குடி மருவி ஆயக்குடியாகவும் இன்றும் அவன் பெயரும் புகழும் விளங்கி நிற்கின்றன. பாரிஓரிகாரி,அதியமான்பேகன்ஆய்நள்ளி ஆகிய எழுவரையும் போன்ற வள்ளல் குமணன் எனப் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார். மூவேந்தர் இவ்வகையில் புகழப்பெறாதது சிந்தனைக்குரியது.
உயர்வுள்ளல்
                பொதுவாக தன்னலமும் இன்ப வேட்கையும் பொருள்வேட்கையும் பிறரை அழித்துத் தாம் உயர்தலும் குறுகிய எண்ணமும் உலகெங்கிலும் உண்டு. அவற்றின் நீண்ட காலத் துயர்களை உயத்துணர்ந்து புலவரும் மன்னரும் உழவரும் வணிகரும் தொழில்வினைஞரும் உயர் பண்புகளை உறுதியாகக் கடைப்பிடித்தல் தமிழர் பண்பாட்டின் சிறப்புக்கூறாகும்.
                                வாழ்தல் வேண்டிய
                                பொய் கூறேன்மெய்கூறுவல்
என்கிறார் மருதன் இளநாகனார்.
                                பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி
                                செய்யா கூறிக் கிளத்தல்
                                எய்யா தாகின்று எஞ்சிறு செந்நாவே
என போலிப் புகழ்ச்சி கூறுவது தன் பண்பன்று என்கிறார் வன்பரணர்.
                                இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது
                                வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
                                எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே
பதுக்கி வைக்காமல்என்னையும் கேட்காமலேயே நீயே எல்லோர்க்கும் கொடு எனத் துணைவிக்கு அறிவுறுத்துகிறார் பரிசில் பெற்று வந்த புலவர் பெருஞ்சித்திரனார்.
                                """"புலிபசித்தன்ன மெலிவில் உள்ளத்து
                                உரனுடையாளார் கேண்மை"" விரும்பி
                                """"எலிமுயன்றனையரை"" விட்டுவிலக     (புறம் - 190)
                                எண்ணுகிறார் சோசதன் நல்லுருத்திரன்.
                                `உற்றுழி உதவியும் உறுவொருள் கொடுத்தும்
                                பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’  (புறம் - 183)
என்று கல்வியின் சிறப்பை அரசராகிய ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் போற்றிப் பாடுகிறார். சிறுகுடி கிழான் பண்ணன் என்னும் வள்ளல் பசிக்கு உணவளிக்கிற பெருந்தொண்டு செய்வதால் தன்னிலும் அவன் சிறந்தவன் என்று பாராட்டுகிறான் சோறுடைத்த சோழநாட்டுப் பெருமன்னன் ஆகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
                தலை கொடுக்க முனைந்த குமணனை அவனது தம்பி இளங்குமணனிடம் விளக்கிக்கூறி குமணனைப் போற்றி உடன்பிறந்தாரை இணைக்கிறார் பெருந்தலைச் சாத்தனார்.
                                """"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
                                தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே
                                . . . . . . . . . . . . . . .
                                வாள் தந்தனனே தலை எனக்கு ஈய . . ."" (புறம் - 165)
என்ற புறப்பாடல் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலின் வரலாறு.
                                பரிசில் வேண்டாம்! நீ உன்
                                மனைவியிடம் சேர்தலே எமக்குப் பரிசில்
என்கிற வேண்டுகோளை வையாவிக்கோல் பெரும்பேகனிடம் மொழிகின்றனர் பரணர் (145),அரிசில்கிழார் (146), பெருங்குன்றூர்கிழார் (147) ஆகியோர்.
                                வடியா நாவின் வல்லாங்கு பாடிப்
                                பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
                                ஓம்பாது உண்டு கூழ்வாது வீசி
                                வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
என்பதில் பெற்றதை மற்றவர்க்குக் கொடுப்போம் என்கிறார் கோவூர் கிழார்.
 சில பண்பாட்டு மரபுகள்
 
                தமிழர் சிவன்முருகன்இந்திரன்தேவி ஆகியோரை வணங்கினர். முக்கட் செல்வன் நகர்முருகனி கோட்டம்,வச்சிரத்தடக்கை நெடியோன் கோவில்அணங்குடைத்தேவி முன்றில் என்று புறநானூறு குறிப்பிடுகிறது. முருகனினவெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில் என்று செந்திலம்பதி புறம் 55ல் சிறப்பித்துக் கூறப்படுகிறது. வேலன் வெறியாடல் சுட்டப்படுகிறது. நடுகல் வழிபாடு செய்யப்பெற்றது.
                                கல்லா இளையர் நீங்க நீங்கான்
                                வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
                                கொல்புறை சிறையின் விலங்கியோன் கல்லே (புறம். 263)
                தெய்வங்களின் பெயர்களைத் தமிழ் மன்னரும் புலவரும் சூட்டிக் கொண்டுள்ளனர்.
                மதுரைப் பேராலவாயர்பிரமனார்தாமப்பல் கண்ணனார்சீத்தலைச் சாத்தனார்சோழன் நல்லுருத்திரன் போன்றோர் காண்க. புலவர்கள் வறியவர்கள் அல்லர். ஆசிரியர்பொன்வாணிகர்கூலவாணிகர்மருத்துவர்கணியர் (சோதிடர்)அமைச்சர்கொல்லர்பாணர்கூத்தர்,சேனைத்தலைவர்உழவர் என்னும் தொழில்களைச் செய்து வாழ்ந்தனர்.
                புலவர்கள் பேரரசர்க்கும் சிற்றரசருக்கும் அறிவுரை கூறிப் சூல்களைக் குறைத்து அமைதிப்படுத்தினர். நம் மொழி தமிழ்நாம் தமிழர் என்னும் உணர்வைப் புலவர் பரப்பினர். புறநானூறு காட்டும் தமிழர் பண்பாட்டில் சமயச் செல்வாக்கு சிறிதே. இயற்கையான இன்ப துன்ப உணர்வுகளைக் கலை ஓவியமாக வடித்துள்ளனர்.
                பெண்கள் அறிவிலும் மறத்திலும் சிறந்துவிளங்கினர். அகப்பாடல்கள் பெரிதும் கற்பனையானவை. புறப்பாடல்கள் உண்மையை அழகுணர்ச்சியுடன் வழங்கியவை.
 


__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

 அறன் வலியுறுத்தல்

                                வாழச் செய்த நல்வினை அல்ல

                                தாழுங் காலைப் புனை பிரிதில்லை     (புறம்.367)

                என்பது இன்றுவரை தருமம் தலைகாக்கும் என்னும் உணர்வாகப் போற்றப்பெறுகிறது.

                                அறத்துறை அம்பி  (புறம். 381)

                என நல்வினை துன்ப ஆற்றைக் கடக்கும் ஓடம் ஆவதனை நன்னாகனார் உணர்த்துகிறார்.

                                நல்லதன் நலனும் தீயதன் தீமையும்

                                இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்     (புறம். 29)

என்று சோழன் நலங்கிள்ளியைப் பாடுகிறபோது உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கூறுகிறார். நன்மைதீமை அறியாரோடு கூடலே தீது என்று கருதுகிறார்.

                                சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

                                அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல  (புறம். 31)

எனக் கோவூர் கிழார் வரையறுக்கிறார். எனவே ஹடட ளை கயசை in டடிஎந யனே றயச என்ற மேலை நாட்டார் கோட்பாடு தமிழர்க்கு ஏற்றதல்ல. """"அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்"" தமிழர் விரும்பிய பண்பாட்டுக் கூறுகள் ஆகும். (புறம். 20)

                                நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

                                உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே

என்று குடபுலவியனார் புறம் 18ல் கூறுவது இன்றும் சிந்தித்துச் செயல்படுத்தப்படுகிறது.

வடலூர்   வள்ளன்மையும்   பள்ளிச்   சிறார்க்கு   நல்லுணவு  வழங்கலும்   நம் பண்பாடு

வழிவழியாகச் சிறப்பதைக் காட்டுகின்றன.

விருந்தோம்பல்

                அரசர்குறுநில மன்னர் போலவே குடிமக்களும் புதிதாக வந்தவரை விருந்தோம்புதலைப் பெரிதும் விரும்பிச் செய்தனர்.

                                """"விருந்து எதிர்வெறுகதில் யானே""        (புறம். 306)

என நடுகற் தெய்வத்தை வேண்டுகிறாள் தலைவி. செல்வம் குறை கையில் பொருள்களை அடகு வைத்தும் விருந்து செய்துள்ளனர்.

                                """"நெருஞை விருந்திற்கு மற்றுத்தன்

                                இரும்புடைப் பழவாள் வைத்தனன்இன்றுஇக்

                                கருங்கோட்டுச் சீறியாழ் பணையம""  (புறம்.316)

""""விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை"" நீங்க வேண்டும் எனப் பாடுகிறார் புலவர் பெருங்குன்றூர் கிழார். விருந்தோம்புவதிற் சிறந்த பண்ணனை மன்னனும் போற்றுகிறான்.

ஆய்வு முடிவுகள்

                """"தென்னகத்தின் திராவிடப் பண்பாடும்,வடமேற்கில் இருந்த ஆரியர்களின்

வேதகாலப் பண்பாடும்அந்நாளில் இருவரும் ஓடைகளாகத் தனித்து இயங்கின. அவ்விரு ஓடைகளும் சங்கமித்து,இந்தியாவின் முதலாவது தேசியப் பண்பாட்டை உருவாக்குகையில் காலம் கனிந்திருந்தது"" என்று ஆய்வு முடிவு கண்டார் அபிட் ஹூசேன் (பக். 50, இந்தியாவின் தேசியப் பண்பாடு).

                சுநீதிகுமார் சட்டர்ஜி, `இந்தியப் பண்பாட்டில் எழுபத்தைந்து விழுக்காடு திராவிடப் பண்பாடுஎன்று ஆய்வு செய்து கூறியுள்ளார் (பக்.27, தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்). இவர்தம் பெயரை நன்னெறி முருகன் என்று தமிழ்ப்படுத்தித் தமிழருடன் இலக்கிய உறவு கொண்டாடுகிற பேரறிஞர் ஆவார்.

                `புறநானூறு’ தமிழர் பண்பாட்டில் அகம் தவிர்த்த சிறப்புக்கூறு களைக் காட்டுகிறது. குறுந்தொகை அகவாழ்வின் சிறப்புக்கூறு களைக்காட்டுகிறது. சிலம்பு நாடகமாகத் தமிழர் வாழ்வியலைப் படம்பிடிக்கிறது. திருக்குறள் தமிழரின் அறநெறியைக் காட்டுகிறது. அகத்திணை புறத்திணை மரபுகள் இலக்கணமாகத் தொல்காப்பியத்தில் வரையறை செய்யப் பெறுகின்றன. இவை ஐந்தும் இணைந்து தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகளை விரிந்த அளவில் காட்டும். புறநானூறு பெருமளவு தமிழரின் புறவாழ்வின் களஞ்சியம். உண்மைகள் மட்டுமே பேசப்பட்ட நேரடி வாழ்வியல் ஆகும்.

                2500 ஆண்டுகளாகத் தமிழர்தம் பண்பாட்டின் மூலாதாரமான பண்புகளை காத்தும் வளர்த்தும் வந்துள்ளனர். சில இனத்தாரின் பண்பாடுகள் தேய்ந்து கலந்து சிதறி மறைந்தபோதும் புறநானூறு தமிழரை ஒளியும் ஆற்றலும் ஈகையும் அளியும் உடையவராக வளர்க்கிறது.

                                """"தமிழன் என்றோர் இனமுண்டு

                                                தனியே அவர்க்கொரு குணமுண்டு

                                அமிழ்தம் அவனுடை மொழியாகும்

                                                அன்பே அவனுடை வழியாகும்

                                மானம் பெரிதென உயிர்விடுவான்

                                                மற்றவர்க்காகத் துயர்படுவான்

                                தானம் வாங்கிடக் கூசிடுவான்

                                                தருவது மேல்எனப் பேசிருவான்""

என நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. தமிழர் பண்பாட்டைப் புறநானூற்றின் வழியில் திட்டமாகவும் தெளிவாகவும் கவிபாடுகிறார். இவ்வியல்புகளே தமிழர் பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாகப் போற்றிக் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என உறுதியாக எண்ணலாம்.

                புறநானூற்றைப் படித்ததாலேயே `தமிழன்’ என்ற இனவுணர்வைப் பெற்றதாக ம.பொ.சி. தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இதற்குத் `தமிழன் ஆனேன்’ என உட்தலைப்பு இட்டுள்ளார்.

                """"புறநானூறு என்னும் பேரிலக்கியம் தமிழினத்தின் பெருமைக்குச் சான்றாகும் . . . தமிழன் என்னும் இனஉணர்வை நான் முதன்முதலாகப் பெற்றது புறநானூற்றைப் படித்த போதுதான் . . . தமிழ் பேசும் மக்கள் தனித்த வரலாறும்தனியான பழக்கவழக்கங்களும்,தனிச்சிறப்புடைய அரசியல் மரபும் படைத்த தனித் தேசிய இனத்தவர் என்ற உண்மையைப் புறநானூற்றைப் படித்தபோதுதான் உணர்ந்தேன்"" என்கிறார் ம.பொ.சிவஞானம்.

                """"திராவிட இயக்கம் தமது அடையாளங்களை செவ்விலக்கியங்களின் மூலமாகக் கட்டமைக்க முனைந்தது. இச்செயல்பாட்டிற்குப் புறநானூறு பெரிதும் உதவியது . . . `புறநானூற்று தமிழன்’ என்று புதிய தொடரே உருவாக்கப்பட்டது. காதலைக் கூறுவதற்குப் பல நூல்கள் இருந்த சூழலில் வீரத்தைக் கூறும் முதன்மை நூலாகப் புறநானூறு புரிந்து கொள்ளப்பட்டது"" என்று பேரா.வீ. அரசு குறிப்பிடுவதும் சிந்தனைக்குரியதே.

                இவ்வாறு தமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகப் புறநானூறு நமக்குக் கை கொடுக்கிறது. கை கொடுக்கும்.

துணைநூற்பட்டியல்

1.             அபிட் ஹூசேன் .எஸ்இந்தியாவின் தேசியப் பண்பாடுநேஷனல் புக் டிரஸ்ட்புதுதில்லி, 1995.

2.             ஆர். மதி சேகரன்புறநானூறு புதிய வடிவில் மரபுக் கவிதைஸ்ரீசெல்வ நிலையம்சென்னை, 2005.

3.             நைசி கரிகாலன் (தொகு.) புறநானூற்று ஆய்வுகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்சென்னை, 2011.

4.             தனிநாயகம் அடிகள் . வண. பிதாதமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை, 2010.

5.             கணேசன் .கு .முனைவர்சங்கத்தமிழ் செம்மொழி இலக்கியம்மணிமொழிப் பதிப்பகம்சேலம், 2009.

 __________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard