New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள் ச.முருகேசன் சங்க இலக்கியம் உணர்த்தும் பகு


Guru

Status: Offline
Posts: 24624
Date:
சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள் ச.முருகேசன் சங்க இலக்கியம் உணர்த்தும் பகு
Permalink  
 


 சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள்

ச.முருகேசன் 

Apr 20, 2019


siragu paguththarivu1

பகுத்தறிவுக் கொள்கை இன்றைய காலத்தில் தோன்றியவை அல்ல, மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே உண்டானவையாகும். பகுத்தறிவு என்ற பெயர்தான் பிற்காலத்தில் வந்ததே தவிர அதன் பொருண்மை அல்லது அதன் பொருள் எனப்படும் பகுத்து ஆராயும் முறை சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இருந்து வருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனை நல் வழிப்படுத்த சில பகுத்தறிவுக் கூறுகள் எடுத்துக் கூறபட்டன. அந்த வழிமுறையில் பகுத்தறிவுக் கொள்கையினை மனிதனுக்கு உணர்த்துவதில், சங்க இலக்கியத்தின் பங்கு என்ன என்பதனை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்குகிறது.

மனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற சிந்தனை சக்தியின் விளைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள் கலந்திருக்கின்றன. இவற்றுள் நல்லது எது தீயது எது என அறியும் நுண்ணியல் ஆற்றலே பகுத்தறிவாகும். எந்த ஒரு கொள்ளைகையையும் கோட்பாட்டையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதோ அல்லது ஏற்காமல் விட்டு விடுவதோ பகுத்தறிவு ஆகும். எந்த ஒன்றின் உண்மைத் தன்மையை அறிவதுதான் பகுத்தறிவு. இது ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதன் மூலமே தெளிவுபடும்.

பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது ஒன்றினைப் பகுத்து அறிதல் எனப் பொருள்படும். சிந்திக்கும் திறன் பெற்ற மனிதன் எந்த ஒரு செயலையும் ஏன் என்று கேள்வி கேட்டு தங்களின் ஐயத்தினைப் போக்கி அது நல்லதா?, கெட்டதா? என்பதனை அறிந்து செயல்பட வேண்டும். மனிதன் ஒரு சமூக விலங்காகக் கூறப்பட்டு (Human is a Social Animal) இருந்தாலும், அவன் சிந்திக்கக் கூடிய சமூக விலங்காவான். இதனை உணர்ந்துதான் தொல்காப்பியர் பிற உயிர்களை விட, மனிதனுக்கு ஆறாவது அறிவு கொடுத்து விளக்கியுள்ளார். மக்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் வேறுபாடு கிடையாது. அனைவரும் ஒத்த சமநிலையினை உடையவர்களே.“சாதி, செல்வம், அதிகாரம் ஆகிய அனைத்திலும் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்பது பெரியாரின் கருத்தாகும்”(பெரியார், குடியரசு இதழ், ஆகஸ்டு, 1929). இக்கருத்தின் முன்னோடியாக சங்க இலக்கியப் பாடல் அமைந்துள்ளது. பெரியாரின் கருத்துக்கு முன்பே சங்க இலக்கியத்தில் பகுத்தறிவு குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் நிகழும் நிகழ்வினை மனிதன் ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காலகட்ட இலக்கியங்களும், சமய பரப்பாளர்களும், சமூக சீர்திருத்தப் பெரியோர்களும் தங்களது கருத்துக்களைக் கூறி வந்தனர். கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகம் வந்த சீர்திருத்தக் கிறித்தவம் கல்வி கற்றல், கணவன் இறந்த பின்பு கைம் பெண்களை மறு திருமணம் செய்ய ஊக்குவித்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு கருத்துக்களைக் கூறி மனிதனை நல்வழிப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.மூட பழக்க வழக்கங்களில் இருந்து தமிழர்களை மீட்டெடுத்ததில் பல்வேறு மதங்களின் பங்களிப்பு இருந்தன என்பதனை அறிய முடிகிறது. இதன் அடிப்படையிலேயே பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் இவற்றை எல்லாம் கடந்து பலர் அறிய பகுத்தறிவுக் கருத்துக்களை மனிதனுக்கு உணர்த்திய மாண்பு பகுத்தறிவுப் பகலவன், தமிழகத்தின் விடி வெள்ளி எனப் பெயர் பெற்ற தந்தை பெரியாரைச் சாரும்.

சுயமரியாதைக் கொள்கை

மனிதன் சுய மரியாதையுடன் அதாவது தன்மானத்துடன் வாழ வேண்டும் என எண்ணினான். மனிதனின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பெரியார் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கினார். இவற்றில் பெண்கள் விடுதலை, ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி, பிற பொது உடமைத் தத்துவங்களும் கூறப்பட்டு உள்ளன. பகுத்தறிவு என்பது பிறர் நினைப்பது போன்று கடவுள் மறுப்புக் கொள்கை மட்டுமல்ல. சமமான கல்வி, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நீதி, பொருளாதார பொது உடமை, எல்லோரையும் மதிக்கும் பண்பு, மூட பழக்கத்தை அகற்றுதல் முதலானவைகளினை உள்ளடக்கியதாகும்.

சாதி மறுப்பு

siragu paguththarivu2

ஆணும் பெண்ணும் யாரை வேண்டும் என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இருத்தல் கூடாது என்பது பொது உடமைக் கொள்கை வாதிகளின் கோட்பாடு. இம்முறை பண்டைக்காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருகின்றது. தமிழர்களின் வரலாறு, பண்பாட்டினை உணர்த்தக் கூடிய தமிழ் இலக்கியங்களில் புலவர்கள் விளக்கியுள்ளனர். இதனை,

            யாயும் ஞாயும் யாராகியரோ

            எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

            யானும் நீயும் எவ்வழி அறிதும்

            செம்புலப் பெயல் நீர் போல

            அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறு. 40)

இப்பாடலில் எந்த சாதி, மதம் என்பதனைக் குறிப்பிடவில்லை. ஒருவரை ஒருவர் முன்பு அறிந்திராதவர்கள் ஏற்படுத்திய திருமணமாக உள்ளது. எந்த வயதில் திருமணம் நடைபெற்றது என்பதனை அறிய முடியவில்லை. சங்க இலக்கியத்தில் திருமணத்திற்கான வயது குறிப்பிடவில்லை. தந்தை பெரியார் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து இருபது வயதில் திருமணம் முடித்துக் கொடுத்தல் வேண்டும் என்கிறார். அது யாராக இருந்தாலும் இருவருக்கும் பிடித்து இருந்தால் போதுமானது. இதே கருத்தினையே இப்பாடலும் முன்வைக்கின்றது. ‘எம்முறைக் கேளிர்’ என்ற பாடலடி உறவினர்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது. அதே போன்று சாதி, மதம் எதனையும் இப்பாடல் குறிப்பிடவில்லை. முன்பு நாம் யார் என்றே தெரியாது. இன்று திருமணம் எனும் புதிய உறவின் மூலம் ஒருவரை ஒருவர் அறிந்து அன்பு செலுத்தப் போகிறோம் என்று விளக்கம் தருகிறது இப்பாடல்.

பொது உடமைக் கொள்கை

உலகத்தில் உள்ள எல்லாப் பொருளும் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அனைவரும் உறவினர்களே. அனைவரும் நட்புடன் இருக்க வேண்டும், யாரும் பகைவர் கிடையாது. எல்லோரும் சகோதரத்துவம் சார்ந்து பழகுதல் வேண்டும். வேற்றுமை என்பதே இருத்தல் கூடாது. தற்காலத்தில் உள்ளது போன்ற எல்லைச் சண்டைகள், சாதி, மதம், இனப் பிரிவினை வாதம் முதலானவை தவிர்க்கப்பட வேண்டும் என்ற மையக் கருத்தினைச் சிவகங்கை மாவட்டத்தைச் (பழைய இராமநாதபுரம் மாவட்டம் தற்பொழுது அதாவது 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு சிவகங்கை மாவட்டம்) சேர்ந்த புலவன்கணியன் பூங்குன்றன் சங்க காலத்திலேயே கூறியுள்ளார். பொது உடமைக் கொள்கை தத்துவம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

            “யாதும் ஊரே யாவரும் கேளிர்

            தீதும் நன்றும் பிறர்தர வாரா

            நோதலும் தணிதலும் அவற்றோரன்ன” (புறம். 192)

எந்த ஊராக இருந்தால் என்ன எல்லாமே நமது ஊர்தான் என்ற பொதுக்கருத்தினை இப்பாடல் உணர்த்துகிறது. அதே போன்று பூமியில் உள்ள அனைவரும் நம்மவர்தான், பகைவர் என்று யாரும் இல்லை. அனைத்து மனிதர்களும் நமது உறவினர்களே என கணியன் பூங்குன்றன் விளக்கியுள்ளார். அன்றைய காலத்தில் போர் புரிந்து தங்களது வீரத்தின் மூலம் நாட்டைக் காத்தனர். பிற நாட்டின் மீது போர் தொடுத்து பகை நாட்டின் பூமியை தனதாக்கினர். அங்கு உள்ள சமூகத்தினரை அடிமையாக வழி நடத்தினர். இதனை அறிந்த புலவர் உலகத்தில் எதுவும் சொந்தமில்லை அனைவரும் நமது உறவினர். ஆதாலால் போர் செய்தலைக் கை விடுங்கள் எனக் கூறுகிறார். போரின் மூலம் மக்களுக்கு வரும் துன்பங்களினையும் எண்ணியதால் ‘யாவரும் கேளிர்’ என்ற சொல்லினைப் பயன்படுத்துகிறார். அனைத்து நாடும், நகரமும் அங்கு குடியிருக்கும் மக்களும் நம் உறவினர்கள் என்று நினைத்தால் போர் வராது எனும் பொது உடமைக் கொள்கையினை சங்க காலத்திலேயே உரைத்துள்ளார். இங்ஙனம் நினைத்தால் எல்லை தாண்டி வருகின்ற மீனவன் சுடப்படுவதில் இருந்து மீட்கப்படுவான். பிற மாநிலத்தில் கல்வி கற்கச் செல்லும் தமிழக மாணவரின் நலன் காக்கப்படும்.‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இனும் இக்கொள்கையின் வழி நடந்தால் மானுட தர்மம் காக்கப்படும்.சமூக நீதி நிலை நாட்டப்படும். மனித மாண்புகள் சிதைந்து போகாத நிலை ஏற்படும்.

நல்லாட்சி நடத்த பகுத்தறிவு

நாட்டை ஆளுகின்ற அரசன் மக்களைத் துன்புறுத்தாமல் சட்டங்கள் இயற்றி வரி வசூல் செய்ய வேண்டும். செங்கோல் வழுவாமல் ஆட்சி செய்தான் மன்னன் என்ற பெயர் சிறக்க வேண்டும். என்பதனை,

            “தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

            வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்

            நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்

            கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

            உண்பது நாழி, உடுப்பது இரண்டே

            பிறவும் இல்லாம் ஓரொக்குமே,

            செல்வத்துப் பயனே ஈதல்,

            துய்ப்பேம் எனினே தப்புந பலவே”(புறம். 189)

அளவுடன் பொருள், சொத்துக்களினை வைத்துக் கொண்டு போதும் என்ற மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்தல் வேண்டும். செல்வத்தின் பயன் என்பது கொடுத்தல் எனப்படும். யாராக இருந்தாலும் உணவும், உடையும் எல்லோருக்கும் ஒன்று தான் அது பொது உடமையானது. அளவுக்கு அதிகமான செல்வம் இருந்தாலும் அவை அனைத்தினையும் அனுபவிக்க முடியாது. ஆதலால் உதவி செய்து வாழ வேண்டும் என உணர்த்துகிறது  இப்பாடல். பொது உடமைக் கொள்கையின் தத்துவம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான். மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற தத்துவார்த்த அடிப்படையினை வைத்துத் தான் பொது உடமைக் கொள்கை தொடங்கப்பட்டது. தற்காலத்தில் இவ்வாறு எண்ணாமல் ஆட்சியாளர்கள் தமக்கு மட்டுமே பொருள் ஈட்டிக் கொண்டு மக்களைத் துண்புறுத்துகின்றனர்.

தன்மானம்

மனிதன் யாராக இருந்தாலும் தமக்கு என்று தன்மானம் இருப்பது வழக்கமான ஒன்று தான். உளவியல் அடிப்படையில் மனிதனை அவனது நிலையில் இருந்து தாழ்த்துகின்ற பொழுது ஏற்படுவதாகும். தன்மானமானது தம்மை இழிவு படுத்துகின்ற போதோ, தமக்கான ஒன்றினை பிறர் எடுத்துக் கொள்ள முயற்சித்தாலோ, தமக்கு உரிய மரியாதை தராமல், தம்மைக் குறைத்து மதிப்பிடுகின்ற பொழுதோ இது வெளிப்படுவதாகும். இதனை,

            குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,

            ஆள் அன்று என்று வாளின் தப்பார்,

            தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

            கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

            மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்

            தாம் இரந்து உண்ணும் அளவை,

            ஈன்மரோ இவ் உலகத்தானே” (புறம். 74)

இப்பாடல் தன்மானச் சிறப்புடன் தமது வீரத்தின் மரபினையும் குறிப்பிடுகின்றது. கணைக்கால் இரும்பொறை சிறையில் இருந்த பொழுது அவன் வெளிப்படுத்திய தன்மான உரையாக இப்பாடல் அமைந்துள்ளது. குழவி இறந்து பிறந்தாலும் அதனைக் குழந்தை என்று எண்ணாமல் அதன் மார்பில் வாள் வைத்து காயம் ஏற்படுத்திய பின்பே புதைப்போம். அந்தக் காயமானது போரில் கலந்து கொண்டு ஏற்பட்ட விழுப்புண்ணாக நாங்கள் எண்ணிக் கொள்வோம். வீரம் என்பது சிறு குழந்தைக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்து இதன் மூலம் வெளிப்படுகிறது. இத்தகைய வீர மரபில் இருந்து வந்த என்னை நாய் போன்று சங்கிலியால் கட்டிப் போட்டு தண்ணீர் குடிக்கச் சொல்கிறீர் இதனை நான் செய்தால் இந்த உலக்கத்தில் உள்ளோர் என்னை மதிப்பார்களா? என வினா தொடுத்து தன்னுடைய தன்மானத்தை வெளிப்படுத்துகிறான்.

இத்தகைய வீரத்தினை உடைய மன்னன் தமது பகைவரிடம் இரந்து (கெஞ்சி) தண்ணீர் குடித்து விட்டானே என்று இந்த உலகத்தினர் இழிச்சொல் சொல்லி தம்மையும் தம் குடியின் வீரத்தினையும் குறைத்து மதிப்பிட்டு விடுவார்களே என்று எண்ணி மறுத்துவிட்டது தெரிகின்றது. தாம் அழிந்தாலும் தம் இனத்தின் வீரம், புகழ் நிலை நிற்க வேண்டும் என்ற கருத்தினை இப்பாடல் உணர்த்துகிறது. சுதந்திரமாக இருக்கும் ஒருவரது உரிமைகளைப் பரித்துக் கொண்டால் வெளிப்படும் எண்ணம்தான் தன்மானம். இதனை இப்பாடலின் வழி தெளிவாக அறிய முடிகிறது. இதனைத் தான் பிற்காலத்தில் சுயமரியாதை என்றனர். சொற்கள் தான் வெவ்வேறானது பொருள் ஒன்றுதான். இப்பாடலில் மன்னனுக்கு உரிய மரியாதை தரப்படாமல் இருப்பதால் அவனது தன்மானச் சிந்தனை வெளிப்படுகிறது.

இனப் பெருமை காத்தலில் பகுத்தறிவு

எந்த ஒரு இனம், குடும்பமாக இருந்தாலும் தமக்கான பெருமையினைக் காத்தல் என்பது சிறப்பானதாகும். தங்களது இனம் அல்லது குடும்பத்திற்குள் சண்டையிட்டால் அதில் வரும் துன்பம் தமக்கானதாகும் என்பதனை உணர்த்துவதற்காகப் பாடப்பட்டவையாகும். சகோதரர்களான நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் போரிட்டனர். இதனை அறிந்த புலவர் கோவூர்கிழார் நேரடியாகச் சென்று இருவரும் ஒரே குடியில் பிறந்தவர்கள் ஏன் சண்டையிடுகிறீர்கள் உங்களில் யார் தோற்றாலும் அது உங்களுக்கே இழிவான செயலாகும் என அறிவுறுத்தியுள்ளார். இதனை,

            “பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு

            ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே,

            இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்” (புறம். 45)

இப்பாடல் சகோதரர் இருவரும் அதிகாரத்திற்காகப் போர்புரிவதனை (சண்டை இடுவதனை) எடுத்துக் காட்டுகின்றது. இவர்கள் இருவரும் அறியாமையால் இச்செயலை செய்ய நினைத்த பொழுது புலவர் அதனைத் தடுத்து நிறுத்தி அவர்களைச் சிந்திக்கும்படிச் செய்கிறார். புலவர் என்பவர் கல்வி கற்ற அறிஞன் மட்டும் கிடையாது அரசர்களுக்கு அவர்கள் தான் சிறந்த அறிவுரை கூறுபவராகவும் இருந்துள்ளனர். சகோதரச் சண்டை என்பது தங்களது இனம், உறவினர் அல்லது குடும்பத்திற்கு வருகின்ற இழிவான ஒன்றாகும் என்பதனை இப்பாடல் உணர்த்துகிறது.

கல்விச் சிந்தனை

siragu paguththarivu3

கல்வியே மனிதனை சிந்திக்கத் தூண்டுகிறது. ஒழுக்கம், நல்லவை, அல்லவை ஆகியவற்றினை அறிந்து கொள்ள கல்வி முக்கியமான ஒன்றாகும். இதனை அறிந்துதான் சங்கப் புலவராக இருந்தாலும், மன்னராக இருந்தாலும் கல்விக்கே முதன்மை இடம் கொடுத்துள்ளனர். மன்னர்கள் கல்வியில் வல்ல புலவர்களை தங்களது அவையில் வைத்திருந்தனர். அவர்கள் சொல்லுவதனைக் கேட்டு அதன் வழி ஆட்சி நடத்தினர். இதனை,

            “உற்றுழி உதைவியும், உறு பொருள் கொடுத்தும்,

            பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே

            பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,

            சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்,

            ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,

            மூத்தோன் வருக என்னாது அவருள்

            அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;

            வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,

            சீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

            மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” (புறம். 184)

என்ற பாடல் உயர்ந்தோர் ஆனாலும், தாழ்ந்தோர் ஆனாலும் கல்வியில் யார் சிறந்து விளங்குகின்றார்களோ அவர்களுக்கே முதன்மை இடம் கொடுக்கப்படும். தாயாக இருந்தாலும் மூத்த மகனை வருக என அழைக்க மாட்டாள், யார் கல்வியில் மேம்பட்டு இருக்கின்றனரோ அவரையே விரும்புவர். என இப்பாடல் விளக்கம் தருகிறது. கல்விதான் உயர்ந்தோர், தாழ்ந்தோர், இனப்பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற கருத்தினை முன் வைப்பதாகும். தற்காலத்தில் கல்விக்கு முதன்மை இடம் கொடுப்பது போன்று சங்க இலக்கிய காலத்திலும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். முறையான கல்வியே சிறந்த மனிதனையும், சமுதாயத்தையும் உருவாக்க உதவும் கருவியாகும். கல்வியின் மகத்துவத்தினை அறிந்ததால்தான் எப்படியாவது கற்க வேண்டும் என்று இப்பாடல் வழியுறுத்துகிறது. இதனால்தான் ஔவையாரும் பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார். கல்வியின் உண்மைத் தன்மையினை அறிந்ததால் இன்றளவும் தரமான கல்வி, சமச்சீர் கல்வி முதலானவற்றிற்கு முதன்மை இடம் கொடுத்து வருகின்றோம். கல்வியே சிறந்த செல்வம் என்றும் அழியாத நிலையினை உடையது என்றும் அறிஞர்கள் கூறி வருகின்றனர்.

முடிவாக பகுத்தறிவுச் சிந்தனை என்பது காலந்தோறும் இருந்து வருகின்ற ஒன்றாகும். கருத்துக்களினைக் கூறும் பாடல்கள் அனைத்தும் பகுத்தறிவு சார்ந்தவைதான். கல்வி, தன்மானம், சாதிய மறுப்பு, பொது உடமை முதலான கருத்துக்களினைச் சங்க இலக்கியப் பாடல்கள் உணர்த்தி நிற்கின்றன. பகுத்தறிவு என்ற சொல் தற்காலத்தில் வழக்கில் வந்ததாகும். சிந்தனை பண்டு தொட்டே இருந்து வருகின்றது என்பதற்கு மேலே உள்ள கருத்துக்களே சான்றாகும். பண்டைத் தமிழன் சிந்தனை மரபில் சிறந்து இருந்தான் என்பதனை இப்பாடல்கள் வழி அறிய முடிகிறது.

பார்வை நூல்கள்

1. பாலசுப்பிரமணியன். கு.வெ.2014,குறுந்தொகை, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

2. பாலசுப்பிரமணியன். கு.வெ     .2014, புறநானூறு, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

3. பெரியார், குடியரசு இதழ், ஆகஸ்டு, 1929. சென்னை, பெரியார் திராவிடக் கழகம்.__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
RE: சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள் ச.முருகேசன் சங்க இலக்கியம் உணர்த்தும் பக
Permalink  
 


 
வேந்தன் அரசு
சங்கப்பாடல்களில் பெண்களை மடந்தை, அரிவை, தெரிவை என்றே குறிப்பிட்டார்கள். மங்கை என்றல்ல என்பதால் பெண்ணுக்கு திருமணம் மடந்தைப்பருவமும் பின்னரும்தான். 

"மடந்தையொடு எம்மிடை நட்பு"
"பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் செறி எயிற்று அரிவை"


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard