New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள் தேமொழி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள் தேமொழி
Permalink  
 


 எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள்

தேமொழி  Jun 15, 2019

siragu enkunaththaan2முன்னுரை:

‘எண்குணத்தான்’ குறிப்பது என்ன?

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.(குறள்: 9)

எண்வகைப்பட்ட குணங்கள் கொண்ட இறைவனின் திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் குறித்த குறள் இது. அவ்வாறு வணங்காத தலையானது சுவையறியா வாய், காணாத கண், நுகரா மூக்கு, கேளாச் செவி, உணர்வற்ற உடல் போன்ற புலனில்லாத பொறிகளுக்கு ஒப்பாகும் என குறள் குறிப்பிடுகிறது. அதாவது மூளை செயல்படாத ஒரு மனித நிலை/தலை. அவ்வாறு வணங்காதாரை அறிவற்ற மனிதர் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு வணங்கப்பட வேண்டியவர் யாரென வள்ளுவர் குறிப்பிட்டார் என்ற கருத்து பேதங்களும் உண்டு. ஆனால், இக்கட்டுரையின் மையக்கருத்து அதுவன்று. எண்குணத்தான் என்ற பொருள் குறித்து மட்டும் அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கம்.

தமிழ் அகரமுதலி எண்குணத்தான் என்பதை எட்டுக் குணங்களையுடைய கடவுள், அருகன், சிவன் எனப் பொருள் விளக்கம் தரும். ஆனால் குறளுக்கு விளக்கவுரை எழுதியோர் எண்குணங்கள் என்பதற்கு பற்பல வகையில் விளக்கம் தர முற்பட்டது தெரிகிறது.

ஆங்கிலத்தில் இக்குறளின் எண்குணத்தான் என்பதற்கு விளக்கம் கொடுக்கும்பொழுதும் “who is possessed of ‘the Eight-fold Excellence,” என்றும் “eight attributes” என்று கொடுப்பதைக் காணலாம்.

வள்ளுவர் குறள் எழுதிய காலத்தில் எண்குணங்கள் எவை என்ற விளக்கமே தேவையற்ற ஒரு நிலை இருந்திருக்கலாம். யாவரும் அறிந்த ஒரு கருத்தாக்கமாகவும் அது இருந்திருக்கலாம். அதனாலேயே அதை அவர் குறளில் வேறெங்கும் விவரிக்க முற்படவில்லை என்றும் நாம் கொள்ளலாம். ஆனால், ‘எண்குணத்தான்’ குறிப்பது என்ன? என்று விளக்க முற்படும் உரையாசிரியர் கருத்துகளுக்குள் அது குறித்த ஒரு தெளிவின்மை வெளிப்படுகிறது.

‘எண்குணத்தான்’ குறித்து உரையாசிரியர்கள் பார்வை:

I.

எண்குணம் என்பவை எவை என விரிவான பொருள் விளக்கம் கூறாமல் தவிர்த்துவிடுதல்:-

‘எட்டுக்குணங்களைக் கொண்டவன் திருவடியை வணங்காத தலை’ என்று பொருள் கொண்டாலும் அந்த எட்டு குணங்கள் எவை என்ற விளக்கம் தராது அமைதல்.

மு.வரதராசனார்: எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவை.

மணக்குடவர்: எட்டுக் குணத்தினையுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.

தொல்லாசிரியர்களில் பரிப்பெருமாளின் விளக்கம் மணக்குடவரை ஒத்துள்ளது. நாம் அறிவதில் காலத்தால் மூத்த உரையாளரும் சமணருமான மணக்குடவர் எட்டு குணங்கள் எவையென விவரித்துக் கூற முற்படாதது கண்டு ஐயமுறுவோரும் உளர்.

இம்முறையில் கூறப்படும் விளக்கங்களில் எண்குண இறைவன் என்றே குறிப்பிட்டு விட்டுக் கடந்துவிடும் ஒரு நிலை காணப்படுகிறது. எண்குணங்கள் எவையெவை என்ற விரிவான விளக்கம் கொடுக்கப்படுவதில்லை. தற்கால உரையாசிரியர்களில் வ. சுப. மாணிக்கம், புலியூர்க் கேசிகன், தச்சாம்பாடி சின்னசாமி நயினார், சிவயோகி சிவக்குமார் போன்ற பலரும் இம்முறையிலேயே உரையெழுதியுள்ளார்கள்.

எட்டு குணங்கள் எவை எனத் தான் சார்ந்த சமய தத்துவ விளக்கம் கொடுக்க முற்படுதல்:-

பரிமேலழகர்:

எண்குணங்களாவன…

1. தன்வயத்தன் ஆதல்

2. தூய உடம்பினன் ஆதல்

3. இயற்கை உணர்வினன் ஆதல்

4. முற்றும் உணர்தல்

5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்

6. பேரருள் உடைமை

7. முடிவு இல் ஆற்றல் உடைமை

8. வரம்பு இல் இன்பம் உடைமை

என இவை.

இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது (இது எந்த சைவ ஆகமத்தில் உள்ளது என அவர் குறிப்பிடவில்லை என்பதையும் இங்குக் கருத்தில் கொள்ளத்தக்கது).

மேலும் அவரே, ‘அணிமா’ வை முதலாக உடையன எனவும் (1. அணிமா, 2. மகிமா, 3. கரிமா, 4. லகிமா, 5. பிராத்தி, 6. பிராகாமியம், 7. ஈசத்துவம், 8. வசித்துவம் ஆகிய தியானத்தால் பெறப்படும் எட்டு சித்திகளும்/அஷ்டமாசித்திகளும்),

‘கடை இலா அறிவை’ முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர் என்றும் கூறுகிறார் (1. கடையிலா அறிவு, 2. கடையிலாக் காட்சி, 3. கடையிலா வீரியம், 4. கடையிலா இன்பம், 5. நாமமின்மை, 6. கோத்திரமின்மை, 7. ஆயுள் இன்மை, 8. அழியா இயல்பு என்ற எட்டு குணங்கள், இது ஒரு சமணக் கோட்பாடு, அடுத்து அது காட்டப்படுகிறது).

பரிமேலழகர் வழியைப் பின்பற்றி தேவநேயப் பாவாணரும், எண் குணங்களாவன-தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலின்பம் என்பன என்று சைவ சமயம் சார்ந்த விளக்கம் அளிக்கிறார்.

பரிதியார்: ‘எட்டுக் குணங்களுடைய சிவன்’ சிவந்த தாளை வணங்காத தலை சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம் என்றவாறு சிவனுடன் தொடர்புப்படுத்திக் குறிப்பிட்டு,

“எட்டு குணத்தான்” எட்டுக் குணமாவன:

1.  அனந்த ஞானம்

2.  அனந்த வீரியம்

3.  அனந்த குணம்

4.  அனந்த தெரிசனம்

5.  நாமமின்மை

6.  கோத்திரமின்மை

7.  அவாவின்மை

8.  அழியாவியல்பு

என்பன எனக்குறிப்பிடுகிறார்.

ஆகவே சைவ சமய உரையாசிரியர் கருத்தில் உருவானவையாக, சிவனின் எண்குணங்களாக இப்பொருள் விளக்க முயற்சி அமைவதைக் காணலாம்.

இருப்பினும் இச்சைவ சமய பரிதியார் சிவனின் குணங்களாகக் கொடுப்பவை சமண சமயத்தின் எட்டு வினைகளை வென்ற குணங்கள் என்பதைச் சமண நூல்கள் தெளிவாகக் காட்டும். குறளுக்கும் பிற்கால நூலான தேவாரம் முதன்முதலில் எண்குணத்தான் என்ற குறிப்பைத் தருகிறது என்பதும் ஆய்வாளர்களால் காட்டப்படுகிறது.

வினைகளை வென்று உயர்ந்த ஆன்மாவையே இறைவனாகக் கொள்கிறது சமணம். சமணம் காட்டும் எட்டு வினைகள் (1. ஞானாவரணீயம், 2. தர்சனாவரணீயம், 3.  மோகனீயம், 4. அந்தராயம், 5. வேதனீயம், 6. ஆயுஷ்யம், 7. நாமம், 8. கோத்திரம் என்ற இந்த எட்டு வினைகளைப் பற்றிச் சமண நூலான சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. முதல் நான்கும் காதி வினைகள் என்றும், அடுத்த நான்கும் அகாதி வினைகள் எனப்படும்). ஆன்மாவின் இயற்கையான, இயல்பான குணங்களை மறைக்கும் இந்த வினைகளை வென்றெடுக்கும் குணங்கள் எண்குணங்கள் என்பது சமண சமய விளக்கம்.

1.  ஞானாவரணீயம் என்ற வினைக் கெடுதலால் கடையிலா அறிவும்

2.  தர்சனாவரணீயம் கெடுதலால் கடையிலா காட்சியும்

3.  மோகனீயம் கெடுதலால் கடையிலா இன்பமும்

4.  அந்தராயம் கெடுதலால் கடையிலா வீரியமும்

5.  வேதனீயம் கெடுதலால் அழியா இயல்பும்

6.  ஆயுஷ்யம் கெடுதலால் ஆயுள் இன்மையும்

7.  நாமம் கெடுதலால் நாமமின்மையும்

8.  கோத்திரம் கெடுதலால் கோத்திரமின்மையும்

இத்தகைய ஆன்மாவிற்கு உயர்வளிக்கும் எட்டு குணங்களும் பரிதியார் மூலம் சமணத்திலிருந்து சைவத்திற்குச் சென்றுவிட்டதை அறியமுடிகிறது. இவை சமண கோட்பாடுஎன்பதைச் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திருநூற்றந்தாதி, சிகாமணிநாதர் அந்தாதி, நேமிநாதர் பதிகம், நீலகேசிச் செய்யுள் போன்ற சமண இலக்கியங்களில் காணலாம்.

III.

நூலில் திருக்குறள் அமைப்பு வைப்புமுறையைப் பின்பற்றியே எட்டு குணங்கள் எவை என்று பொருள் கூற முயலுதல்:-

இன்று நாம் அறியும் பதிப்புகளில் முதல் அதிகாரம் கீழுள்ள வகையில் வணங்குதற்குரிய இறைவனை வரிசைப்படுத்துதலைக் காணலாம்.

1. ஆதிபகவன்

2. வாலறிவன்

3. மலர்மிசை ஏகினான்

4. வேண்டுதல் வேண்டாமை இலான்

5. இருவினையும் சேரா இறைவன்

6. பொறிவாயில் ஐந்தவித்தான்

7. தனக்குவமை இல்லாதான்

8. அறவாழி அந்தணன்

9. எண்குணத்தான்

10. இறைவன்

இவ்வரிசையில் 9ஆம் குறளாக அமைந்துள்ள குறள் ‘எண்குணத்தான்’ குறித்துக் கூறுகிறது. ஆகையினால் எண்குணம் என்பது இக்குறளுக்கு முற்பட்ட எட்டு குறள்கள் காட்டும் இறைவனின் பண்புகள். பத்தாம் குறள் இறைவன் எனப் பொதுவாகச் சொல்லிச் செல்வதன் நோக்கமும் அதுவே என்றும் விளக்கம் கொடுக்கும் முறை உள்ளது. எனவே, 1. ஆதிபகவன், 2. வாலறிவன், 3. மலர்மிசை ஏகினான், 4. வேண்டுதல் வேண்டாமை இலான், 5. இருவினையும் சேரா இறைவன், 6. பொறிவாயில் ஐந்தவித்தான், 7. தனக்குவமை இல்லாதான், 8. அறவாழி அந்தணன் ஆகிய எண் குணங்களே எண்குணத்தானின் எட்டு குணங்கள் என்ற விளக்கம் கொடுக்கப்படுகிறது.

பூரணச்சந்திரன், அ. கு. ஆதித்தர், பொன்.சரவணன் போன்றவர்கள் கொடுக்கும் இவ்விளக்கம் ஏரண முறையில் ஏற்கத்தக்கதாகவும் சிறப்பாகவும் தோன்றக்கூடும். இருப்பினும் இது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், இம்முறை திருக்குறள் அமைப்பும் திருக்குறள் வைப்புமுறையும் பல உரையாசிரியர்கள் நூலில் பலவாறாக வேறுபட்டுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறுகிறது.

திருக்குறள் அமைப்பும் திருக்குறள் வைப்புமுறையும்: ஒரு அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களை வரிசைப்படுத்தும் முறை வைப்பு முறை ஆகும். குறளுக்குக் கிடைக்கும் பழைய உரைகளுள் மணக்குடவர் உரையே காலத்தால் முந்தியது. அதிகாரங்களுக்குள் வரும் குறள்களை வரிசைப்படுத்தி வைப்பதில் மணக்குடவர் நூலில் உள்ள முறை இன்று நாம் படிக்கும் திருக்குறள் பதிப்புகளிலிருந்து வேறுபட்டது. இது குறித்து ஆழ்ந்து நோக்கும்பொழுது திருக்குறளின் 133 அதிகாரங்களின் ஒவ்வோர் அதிகாரத்திலும் உள்ள பத்துப் பாடல்களையும் வரிசைப்படுத்துவதில் மாறுதல்கள் இருப்பதை அறியலாம். திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் ஒவ்வொருவருமே குறள்களையும், அதிகாரங்களையும், இயல்களையும் வரிசைப்படுத்திக்கொள்வதில் மாறுபடுகின்றனர். ஆகவே குறள் வைப்பு வரிசைமுறை கொண்டு பொருள் கொள்ள விழைவது தவறான அணுகுமுறை என்பதை மேலும் விளக்க வேண்டுவதில்லை.

சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், முதல் அதிகாரத்தின் முதல் மூன்று குறள்களின் வரிசை மட்டுமே அனைவர் உரையிலும் மாறாமல் உள்ளன. மற்ற குறள்கள் யாவுமே ஒவ்வொருவர் நூலிலும் வரிசை மாறியுள்ளன. இக்காலத்தில் நாம் கையாளும் திருக்குறள் பதிப்புகள் பரிமேலழகர் வைப்பு முறையைப் பின்பற்றுபவை. அதில் மட்டுமே எண்குணத்தான் குறள் 9ஆவதாக வருகிறது. மணக்குடவர் வரிசையில் எண்குணத்தான் 10 ஆவது குறளாக வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. அப்பொழுது வைப்புமுறை அடிப்படையில் பொருள் கொள்வது உதவாது போகும்.

கோளில் பொறியில் குணமிலவே குறள் வைப்புமுறை வேறுபாடுகள்:

மணக்குடவர் வைப்பு முறை- 10

பரிப்பெருமாள் வைப்பு முறை – 10

பரிதியார் வைப்பு முறை – 8

காலிங்கர் வைப்பு முறை – 5

பரிமேலழகர் வைப்பு முறை – 9

மாறாக, முதல் அதிகாரத்தில் காணப்படும் இறைக்குரியதாகக் கூறப்படும் எட்டு குணங்கள் என்ற பொது நோக்கில் குறிப்பிட்டால் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும் அதைத்தான் வள்ளுவர் மறைமுகமாக எட்டுகுணங்கள் எனக் குறிப்பிட்டாரா என்பது கேள்விக்குரியதுதான்.

IV.

எண்குணங்கள் என்ற பல்வேறுபட்ட பட்டியல்களும் தரும் உரைகள்:-

இறையரசன் தமது உரையில்: 1. அன்பு, 2. அறிவு, 3. பணிவு, 4. ஒழுக்கம், 5. இன்சொல், 6. வீரம், 7. அறம், 8. புகழ் ஆகிய எட்டு எனவும்;

கு. ச. ஆனந்தன் தமது உரையில்: 1. மெய்யுணர்வு, 2 . உலகோர் உள்ளத்தில் இடம் பெற்றமை, 3. ஐம்பொறிகளின் நுகர்வாயில்களை அழித்தமை, 4. அவாவின்மை, 5. பேரா இயற்கை பெற்றமை, 6. தன்னிகரற்ற தன்மை, 7. இறைமை, 8. செந்தண்மையுடன் கூடிய அறம் ஆகிய எட்டு எனவும்;

ஜெகவீர பாண்டியனார் திருக்குறள் குமரேச வெண்பாவில்: 1. தலைமை, 2. தூய்மை, 3. தத்துவ-நிலைமை, 4. அருள், 5. வலிமை, 6. இன்பம், 7. அமலம், 8. தெளிவு ஆகியன எண்குணங்கள் எனவும்;

பிங்கல நிகண்டு: 1. பாவம், 2. இறவு, 3. பற்று, 4. பெயர், 5. உவமை-இன்மை, 6. ஒருவினை, 7. குறையறவு, 8. கோத்திரம்–இல்லாமை ஆகியன எண்குணங்கள் எனவும் குறிப்பிடுவதைக் காணலாம்.

இதுவரை காட்டப்பட்டவை எண்குணங்கள் என்பவை ’8′ என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் கூறப்படும் உரைகள். இவை தவிர்த்து, மாற்றுக் கோணத்தில் எட்டு குணங்கள் எவை என உறுதியாகத் தெரியாத நிலையில் அல்லது சமய விளக்கங்களை ஏற்காத வழியில் சென்று எண் என்பது ‘எண்ணம்’ என்றோ அல்லது ‘எளிய குணம்’ என்றோ பொருள் கூறும் முறைகளை அடுத்து காணலாம்.

V.

எண்குணம் என்பதை எண்ணும் எண்ணம்/சிந்தனை என்று பொருள் வழங்குதல்:-

எண்குணத்தான்- எண்ணப்பட்ட குணங்களையுடையவன் அல்லது சிந்தையில் எண்ணிய குணத்தை உடைய இறைவன் என்ற பொருளும் கூறப்படுகிறது ஒரு சில உரையாசிரியர்களால். மனிதர் தம் உள்ளத்தே எண்ணிய குணம்கொண்ட இறைவனது திருவடியை வணங்காத தலைகள் என்பதை,

சாலமன் பாப்பையா: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுள் என்கிறார்.

இவ்வாறாக எண்ணப்பட்ட குணங்கள் கூறும் முறையானது எண்ணப்பட்ட குணங்களை உடைய இறைவனது தாளினை வணங்கப்பெறாத தலைகள் என்ற ‘காலிங்கர்’ உரை அடிப்படையில் பொருள் கொள்ளும் முறை.

அன்பர்கள் எண்ணும் குணவடிவை ஏற்பவன் என்பதையும், அல்லது எண்ணும் பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் கடவுள் என்பதையும் இவ்விளக்கங்கள் குறிப்பிடுகின்றன.

VI.

எண்குணம் என்ற சொல்லுக்கு பொதுவாக எளிய குணம் என்ற ஒரு விளக்கம் கூறுதல்:-

எண்குணத்தான் என்பது ‘எளிமைக் குணமுடையவன்’ என்று பொருள்தரும் உரைவிளக்கங்களும் காணப்படுகின்றன. திருக்குறளார் வீ. முனிசாமி ‘தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப் போல ‘அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய’ இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான் அல்லவாம்’ என்ற விளக்கம் கூறுகிறார். புலவர் குழந்தை கூறும் ‘எளிமை’ என்ற பொருளும் சற்றொப்ப இந்த உரையை ஒத்தது எனக் கூறலாம்.

மு. கருணாநிதி: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ‘ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை’ வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் என்பதையும் சற்றே ஏறக்குறைய இதே வகைக்குள் இருத்தலாம்.

இம்முறையில் குறளில் “எண்” என்ற சொல் “எளிய பொருள்” எனக் குறிப்பிடப் படுவது குறள் 424 (எண்பொருள வாகச் செலச்சொல்லி), குறள் 548 (எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன்), குறள் 991 (எண்பதத்தால் எய்தல் எளிதென்ப) போன்ற குறள் தரும் பொருளின் அடிப்படையில் ‘அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடையவன் இறைவன்’ என்று உரையாசிரியர்கள் விளக்கவுரை அமைத்துள்ளார்கள் என அறிய முடிகிறது.

‘இவ்வதிகாரத்திற் கூறிய கடவுட் பெயர் எல்லாம் ஒரு சமயத்தார் கூறும் பெயரன்றி, வேறு வேறாகப்பலசமயத்தார் கூறும் பெயராகத் தோன்றா நின்றது’ என்ற பரிப்பெருமாள் குறிப்புரை மூலமும் எண்குணத்தான் என்பவர் ஏதோ ஒரு சமயத்திற்கு மட்டும் உரியவர் என்பதும் ஏற்கத்தக்கக் கருத்தாக உள்ளது.  இறைவனை எட்டு குணங்கள் மட்டும் உள்ளவராகக் காண இயலாது என்ற நோக்கில் இவ்வகை விளக்கங்கள் ஏற்கக்கூடிய கருத்தாக இல்லை என்பதும் மாற்றுக் கோணங்களாக உள்ளன.

சமயக் கடவுளரை வள்ளுவர் குறளில் எங்கும் கூறவில்லை என்பதை வ.உ.சி. தனது திருக்குறள் பாயிர ஆய்வில் குறிப்பிடுகிறார். “இருள் சேர் இருவினையும் சேரா”, “பொறி வாயில் ஐந்தவித்தான்” ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, “துறவியைக் குறிக்கின்றன” என்பது அவரது முடிவான முடிபு. ஆகவே, எண்குணத்தான் என்பதை முழுமுதற் இறைவனுக்குப் பொருத்தமுடியாது எனக் கொள்ளலாம். அருள்முனி சமண தீர்த்தங்கரர் அருகன், சங்கரன், ஈசன், பரமன் என அழைக்கப்படுவதையும் சிலப்பதிகாரம் (புகார்க் காண்டம்: 10.நாடுகாண் காதை) மூலம் நாம் அறியமுடிகிறது. எனவே திருக்குறள் முதல் அதிகாரம் ஒரு நன்னெறி வழிகாட்டியை, துறவியை, ஆசிரியரைக் குறிப்பிடுகிறது என்பதை மறுக்க இயலாது.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது; இதுவரை காணப்பட்ட உரைகளுள் குறிப்பிடப்படாத ஒன்று பௌத்த சமயக் கோணம்.

எண்குணத்தான் பண்புகள் என்பது சமண தீர்த்தங்கரருக்குப் பொருந்துவது போலவே புத்தருக்கும் புத்தரின் போதனைகளுக்கும் பொருந்தும். இருப்பினும் குறளுக்கான புத்த சமய அடிப்படை விளக்கங்கள் எதுவும் நமக்குக் கிடைத்தில. முதல் அதிகாரத்தில் வெளிப்படையாகப் புத்த சமய சாயல்கள் பல தெரிந்தும் குறளுக்குப் புத்த அடிப்படையில் விளக்கம் அளிக்கவோ (சைவ சமயத்தார் போல), உரிமை கொண்டாடவோ முற்பட்ட ஒரு பௌத்த நூல் சென்ற நூற்றாண்டின் அயோத்திதாசர் காலம் வரை இல்லாததற்குக் காரணம் எதுவாக இருக்கலாம் என்பதைத் தற்காலத்தில் நாம் யூகிக்க மட்டுமே முடியும். திருக்குறள் முதல் அதிகாரம் காட்டும் துறவியின் குறிப்புகளான  1. ஆதிபகவன், 2. வாலறிவன், 3. மலர்மிசை ஏகினான், 4. வேண்டுதல் வேண்டாமை இலான், 5. இருவினையும் சேரா இறைவன், 6. பொறிவாயில் ஐந்தவித்தான் , 7. தனக்குவமை இல்லாதான், 8. அறவாழி அந்தணன், 9. எண்குணத்தான், 10. இறைவன் என்பவை புத்தருக்கும் பொருந்தக் கூடியவை.

பௌத்தம் காட்டும் உயர்ந்த வழியில் நடக்கும் குணங்கள்:

1. நன்மொழி (Right Speech), 2. நற்செயல் (Right Conduct), 3. நன்னெறி (Right Livelihood), 4. நன்முயற்சி (Right Effort), 5. நல்லெண்ணம் (Right Mindfulness), 6. நல்லறம் (Right Intention),  7. நல்நோக்கம் (Right View), 8. நல்லறிவு (Right Insight) ஆகியன.

siragu enkunaththaan1இதன் அடிப்படையில்; எண்குணத்தான் என்பதற்கான புத்தசமய விளக்கமாக, பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலைக்கு வழிவகுக்கும் பௌத்த நல்வழிகளான 1. நன்மொழி, 2. நற்செயல், 3. நன்னெறி, 4. நன்முயற்சி, 5. நல்லெண்ணம், 6. நல்லறிவு, 7. நல்நோக்கம், 8. நல்லறம்  என்ற இத்தகைய எட்டு பண்புகளைக் கொண்டவரும், துறவியுமான புத்தர் எண்குணத்தான் என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர். அவரை ஒரு அறவாழி அந்தணனாக, தருமசக்கரத்தைச் சுழற்றும் முத்திரை காட்டுபவராக புத்தரின் சிலை அமைப்புகளும் காட்டும். தர்மசக்கரத்தின் எட்டு ஆரங்களும் இந்த எட்டு பண்புகளையே பௌத்தத்தில் குறிக்கிறது. புத்தர் தாமரை மலரில் நடந்தார், மலர்மிசை ஏகினார் என்ற புத்த தொன்மங்களும் உள்ளன. திருக்குறள் முதல் அதிகாரத்தின் பத்து குறள்கள் காட்டும் பண்புகள், குறிப்பாக எண்குணத்தான் என்பது புத்தரைக் குறிக்கப்படும் ஒரு விளக்கமாகத் தரப்பட்டால், அந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதுடன் மிகப் பொருத்தமாகவும் இருக்கும்.

உதவிய கட்டுரைகள்:

[1] திருவள்ளுவர் திருக்குறள், பாயிர ஆராய்ச்சி, வ. உ. சிதம்பரம் பிள்ளை. தமிழ்ப் பொழில் (6/11&12), பக்கம்: 456-462 (https://books.google.com/books?id=r9vbDgAAQBAJ)

[2] எண்குணத்தான், இரா.பானுகுமார் (https://banukumar_r.blogspot.com/2012/07/blog-post_29.html)

[3] குறள் திறன்- குறள் எண் 0009, முழுப்பணிவுடன் கடவுள் வாழ்த்துக் கூறுக (http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0009.aspx)

[4] திருக்குறளின் முதல் அதிகாரம், பூரணச்சந்திரன் (http://www.poornachandran.com/திருக்குறளின்-முதல்-அதிக/)

[5] எண்குணத்தான், செங்கை பொதுவன் (http://vaiyan.blogspot.com/2015/02/9.html)

[6] எண்குணத்தான், விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org/s/1oc4)

[7] உன்னதமான எண்வகை மார்க்கங்கள், விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org/s/6zqy)

[8] The Noble Eightfold Path (https://en.wikipedia.org/wiki/Noble_Eightfold_Path)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள் தேமொழி
Permalink  
 


ராகுல சாங்கிருத்தியாயன் பார்வையில் ‘ஆரியர் வருகை’

தேமொழி  May 25, 2019

 siragu volka-to-ganges cover

வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற தலைப்பில், ராகுல சாங்கிருத்யாயனால் இந்தியில் ‘வால்கா சே கங்கா’ என்று எழுதப்பட்ட இந்த நூல் மானுடவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் என்ற தகுதி பெற்றது. இந்த வரலாற்றுப் புனைவில் 20 கதைகளில் மனித சமுதாயத்தின் வளர்ச்சி தொகுக்கப்படுகிறது. இந்நூல் 1943 இல் வெளியிடப்பட்டு பின்னர் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ராகுல சாங்கிருத்தியாயன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து எழுதியதற்காக மூன்றாண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சிறையில் உருவான நூல் இது. இந்நூலை எழுதியதற்காக சமயப் பழமைவாதிகளால் வசை பாடப்பட்டார். இருப்பினும் மறு ஆண்டே அடுத்த பதிப்பு வெளிவரும் அளவிற்கு நூல் விற்பனையானது. தமிழில் கண. முத்தையா மொழிபெயர்ப்பில் இந்நூல் முன்னரே 1949ல் வெளிவந்து முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புடையது. நூலின் மொழிபெயர்ப்பும் கண. முத்தையா வால் சிறையில்தான் எழுதப்பட்டது. கால்நூற்றாண்டிற்கும் மேல் இந்திப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் என். ஸ்ரீதரன் சமீபத்தில் இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். அது 2016 இல் கவிதா பப்ளிகேசஷன்ஸ் வெளியீட்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. என். ஸ்ரீதரன் பல குறிப்புகளையும் தேடிக்கொடுத்து வாசிப்பை விரிவாக்க உதவியுள்ளார்.

ராகுல சாங்கிருத்தியாயன், கேதார்நாத் பாண்டே என்ற பெயருடன் உத்தரப்பிரதேச குக்கிராமம் ஒன்றில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். துவக்கப்பள்ளி வரை மட்டுமே முறையான கல்வி கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிட்’ என்ற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழும் அறிந்து கொண்டார். ராகுல சாங்கிருத்தியாயன் இந்துவாகப் பிறந்து இந்து சமயத் தத்துவங்களை அறிந்தவர். ஆரிய சமாஜத்தின் சுவாமி தயானந்த சரஸ்வதியின் மேல் பற்று கொண்டவர். இலங்கையில் புத்த மதத்தைத் தழுவி புத்த பிக்குவாகவும் தீட்சை பெற்று ராகுல சாங்கிருத்தியாயன் என்று மாறியவர். பெளத்த தத்துவங்களிலும் பாலி மொழியிலும் வல்லுநர். கடவுளை மறுத்தவர், இறப்பிற்குப் பின், மறுபிறவி ஆகியவற்றில் சற்றே நம்பிக்கை கொண்டிருந்து பின்னர் அதையும் துறந்து மார்க்சிய கொள்கையில் ஈடுபாடுகொண்ட பொதுவுடமைவாதியாக இறுதியில் மாறியவர். ரஷ்ய லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராகவும், வித்யா லங்கர் இலங்கைப் பல்கலைக்கழகம் இவரைப் பேராசிரியராகவும் பணியாற்றவைத்து தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன. வாழ்நாளின் பெரும்பகுதியைப் பலநாடுகளுக்கும் இந்தியாவில் பல இடங்களுக்கும் பயணம் செய்வதில் கழித்தவர். ‘இந்தி பயண இலக்கியங்களின் தந்தை’யாக அறியப்பட்டு பயணநூலுக்காக சாகித்திய அக்காதமி விருதும் (1958), பத்மபூஷன் (1963) விருதும் பெற்றார். பலமொழிகள் அறிந்திருந்தும், அவரது தாய்மொழி போஜ்புரியாக இருந்தும் இந்தியை மட்டுமே தான் அதிகம் எழுதும் மொழியாக வைத்துக் கொண்டவர். நூற்றுக்கும் மேலான நூல்களை எழுதியவர். அவருக்கு இந்திப் பல்கலைக் கழகங்களில் ஒரு இருக்கைகூட அமைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தோ-ஐரோப்பியச் சமூகத்தினர் அல்லது ஆரியர் என அறியப்படுவோர் இந்தியாவிற்கு வருகை தந்த வரலாறுதான் இந்த நூலின் பொருண்மை. எகிப்திய, மெசபட்டோமிய, சிந்துசமவெளி நாகரிக மக்கள் இந்த ஆரியர் என்ற இனப் பிரிவுக்கும் முன்னரே நன்கு நாகரிகமடைந்தவர். இருப்பினும் இந்தியாவை நோக்கிப் பயணித்த ஆரிய இனத்தின் பரவல் இந்திய வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தை விளக்கும் நோக்கில் இவர்களை மட்டும் முதன்மைப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆரியரின் இப்பயணம் யுரேசிய ஸ்டெப்பி புல்வெளியில், ரஷ்யாவின் தாய் ஆறு என்று அழைக்கப்படும் வால்கா ஆற்றின் கரையில் துவங்கி, இந்தியர்கள் தாய் எனப்போற்றும் கங்கை ஆற்றின் கரையில் நிலை கொள்கிறது. ஐரோப்பியக் கண்டத்திலிருந்து 10,000 கிலோமீட்டர் இடைவெளியைக் கடந்து இந்தியாவில் குடியேறிய இவர்களது வரலாறு தனித்தனியான 20 சிறுகதைகளாக, காலக் கோட்டில் கிமு 6000 முதற்கொண்டு 20 ஆம் நூற்றாண்டுவரை ஒரு 8,000 ஆண்டு காலகட்டத்தை உள்ளடக்கும் வகையில், தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக அமைத்து, கால எந்திரத்தில் பயணிப்பது போலக் காட்சிகளாக நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

காலம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் கதை மாந்தர் உரையாடல் வழியாக ஒரு வரலாற்று நிகழ்வு கதை வடிவில் உருவெடுக்கிறது. வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த மாற்றங்கள் கதைவடிவில் உருவெடுத்துள்ளன எனலாம். ஒவ்வொரு கதையும் அக்கால மக்களின் நடை, உடை, வாழ்வியல்முறை ஆகியவற்றைக் கண்முன் நிறுத்தும் விதமாகவும், சமுதாய, அரசியல், பொருளாதார, பண்பாட்டின் பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் அக்கால வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னிப்பிணைந்தும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் சமூகவியல், மானுடவியல், வரலாறு, புவியியல், இலக்கியம் எனப் பல துறைகளையும் நூலின் கரு தொட்டுச் செல்கிறது. ஒரு தலைமுறை என்பது 22-25 ஆண்டுகள் என்ற அடிப்படையில் இத்தனை தலைமுறைக்கு முன்னர் என ஆசிரியர் கதைகளின் துவக்கத்தில் சில இடங்களில் குறிப்பிடுகிறார். குறிப்பாக முதல் கதை சுமார் 361 தலைமுறைகளுக்கு முன்னர் எனக் குறிப்பிடுகிறார். நூல் இரு பாகங்களாகவும், ஒவ்வொரு பாகமும் 10 அத்தியாயங்களும் கொண்டுள்ளது. இரண்டாம் பாகத்திற்குப் பிறகு இன்றைய இந்தியாவில் நாம் படித்த வரலாற்றுச் செய்திகள் கதைகளாக உருமாறியுள்ளன.

 

முதல் பாகம்

1. நிஷா (கி.மு.6000)

2. திவா (கி.மு.3500)

3. அமிர்தாஸ்வன் (கி.மு.3000)

4. புருகூதன் (கி.மு.2500)

5. புருதானன் (கி.மு.2000)

6. அங்கிரா (கி.மு.1800)

7. சுதாஸ் (கி.மு.1500)

8. பிரவாஹணன் (கி.மு.700)

9. பந்துல மல்லன் (கி.மு.490)

10. நாகதத்தன் (கி.மு.335)

 

இரண்டாம் பாகம்

11. பிரபா (கி.பி.50)

12. சுபர்ண யௌதேயன் (கி.பி.420)

13. துர்முகன் (கி.பி.630)

14. சக்ரபாணி (கி.பி.1200)

15. பாபா நூர்தீன் (கி.பி.1300)

16. சுரையா (கி.பி.1600)

17. ரேக்கா பகத் (கி.பி.1800)

18. மங்கள சிங் (கி.பி.1857)

19. ஸஃப்தர் (கி.பி.1922)

20. சுமேர் (கி.பி.1942)  

 

காந்தியின் 1942ஆம் ஆண்டின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்துடனும் இரண்டாம் உலகப்போர் (1939-1945) நடந்துகொண்டிருக்கும் காலத்தில் நூல் முடிவடைகிறது. நூல் வெளியான காலத்தில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் அச்சு நாடுகள் என்ற ஒரு கூட்டாக ஜப்பானுடன் இணைந்து இன்னமும் போரில் ஈடுபட்டு நேச நாடுகளுடன் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் காலம்.  பெர்ல் ஹார்பர் தாக்குதல் காரணமாக அமெரிக்காவும் போர்க்களத்தில் இறங்கிவிட்ட நேரம் அது. ஆனால், நாகசாகி ஹிரோஷிமா மீது அணுகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இரண்டாம் உலகப் போர் இன்னமும் முடிவுக்கு வராத காலகட்டத்தில் வெளியான வரலாற்றுப் புனைவு நூல்.

நூலின் கருத்துகளிலும், பாத்திரங்களின் உரையாடல்களாக வெளிவரும் கருத்துகளிலும் ராகுல சாங்கிருத்யாயனின் கோணங்கள் வெளிப்படுகின்றன. ஆரியர் வருகையால் வந்த வர்ணாசிரம தர்மம், சாதிப்பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்து அவருக்குள்ள வருத்தம்; புரோகிதர்களும் அரசர்களும் இணைந்து கூட்டாக தங்களுக்குள் ஒருவர் நலனுக்காக ஒருவர் உதவிக்கொண்டு உழைக்கும் எளிய மக்களைச் சுரண்டும் கட்டமைப்பின் மேல் அவருக்குள்ள வெறுப்புவேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் போன்றவற்றின் துணைகொண்டு வைதீக சமயம் எளியோர் மீது ஆதிக்கத்தைக் கட்டமைத்த அறமற்ற செயல்முறை மீது குமுறல், வணிகம் என்ற போர்வையில் நாட்டு மக்களின், நாட்டின் செல்வ வளத்தை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் தன்னலவாதிகளான வணிகர்கள் மீதும், அயல்நாட்டின் வணிக அமைப்புகள் மேலும் கொண்ட கசப்புணர்வு, பெண்களை அடிமைகளாகவும், விடுதலையற்ற நிலையிலும், உடன்கட்டை போன்ற உயிரையும் பறிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்த பெண்ணடிமை அதிகார முறையில் அவர் காட்டிய எதிர்ப்பு எனவும் பல கருத்துக்களை இந்நூல் வழியாக அறிய முடிகிறது.

 

அவ்வாறே ராகுல சாங்கிருத்யாயனின் சமய நல்லிணக்க ஆதரவு எண்ணமும், புத்தரின் கொள்கையில் கொண்ட ஈடுபாடும், பொதுவுடைமை கொள்கைக்கு அவருடைய ஆதரவும் கதாபாத்திரங்கள் வழி தெரிவிக்கப்படுகிறது. காந்தி விடுதலைப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்றதை மதிப்பவராக இருந்தாலும், ஆதிதிராவிடர்களுக்கான தனி வாக்காளர் தொகுதி தேர்தல் இடவொதுக்கீட்டை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்து அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுத்தது, இராட்டையில் நூல் நூற்றல் போன்றவை அறிவியல் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு நிலை என்றும் கருதியதும் வெளிப்படுகிறது. பாகிஸ்தான் தனிநாடு என மக்கள் பிரிய விரும்பினால் அவர்கள் கருத்து மதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்திருக்கிறார் ராகுல சாங்கிருத்தியாயன்.

வரலாற்றைப் பாடமாகப் படிக்காமல், நிகழ்வுகளின் பின்னணியில் கதைகளாகப் படிக்கும் பொழுது வரலாற்றின் தொன்மையும் அதன் தொடர்ச்சியும் தெளிவாகப் புரிகின்றது, போராட்ட நிகழ்வுகளின் காரணங்களும் விளங்குகிறது. இது வரலாறா அல்லது புனைவுக்கதையா என்று வேறுபடுத்திக் காண இயலாத அளவு நூலை எழுதியுள்ள முறை ஆசிரியரின் திறமைக்குச் சான்று. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற எண்ணம் தோன்றாவண்ணம் மொழியாக்கம் செய்தவரும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது இந்தியர் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் படித்திருக்க வேண்டிய நூல். “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என சி.என். அண்ணாதுரை பரிந்துரைத்த நூல். இந்நூலைப் படித்து முடித்த பின்னர், இதனை நாம் இத்தனைக்காலம் படிக்காமல் விட்டுள்ளோமே என்று வருந்தவும் வைத்தது என்பதும் உண்மை. எத்தனைமுறை வேண்டுமானாலும் படிக்கலாம்.

நூல்:

வால்காவிலிருந்து கங்கை வரை

இந்தியில் – ராகுல சாங்கிருத்தியாயன் (1943)

தமிழில் மொழியாக்கம் – என்.ஸ்ரீதரன் (2016)

கவிதா வெளியீடு, முதல் பதிப்பு

Rs. 400



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard