New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு முனைவர் பா. கனிமொழி


Guru

Status: Offline
Posts: 24624
Date:
மானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு முனைவர் பா. கனிமொழி
Permalink  
 


மானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு

முனைவர் பா. கனிமொழி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001.

pathinenkilkanakkunoolkal.jpg

தமிழில் அறநூல்களுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. திருக்குறள் உள்ளிட்ட வாழ்வாங்கு வாழ வேண்டிய அற நெறிகளைக் கூறும் நூல்கள் ஏராளம் தமிழில் உள்ளன. இந்த வகையில் பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் அறநெறிகளைக் கூறுவதோடு சற்று வித்தியாசமாகவும் அமைந்துள்ள ஒரு தொகுப்பு நூல் எனலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று புறம் பற்றியும், ஆறு நூல்கள் அகம் பற்றியும் ஏனைய பதினோரு நூல்கள் அறம் பற்றியும் கூறுவது உற்று நோக்கத் தக்கது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால இலக்கியங்களாக இருந்தாலும், அவை தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கின்றன. அவற்றின் தேவையையும் அவ்விலக்கியத்தின் போக்கினையும் எடுத்துரைப்பதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

சங்கப் பாடல்களில் ஊன் உண்பதும், மது அருந்துவதும், பரத்தையரோடு இன்புற்று இருப்பதும் மிக இயல்பான வாழ்வியல் நடைமுறையாக இருந்துள்ளது. ஆனால் திருக்குறள் போன்ற கீழ்க்கணக்கு நூல்களோ, அவ்வழக்கத்தை மிகவும் கண்டிக்கின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிறமொழியாளரான களப்பிரர் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்து, பாண்டியரை வென்று அவர்கள் நாட்டைக் கைப்பற்றி, அரசாள முற்பட்டனர். அந்நியர் ஆட்சி நாட்டிலே புரட்சியை ஏற்படுத்தித் தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை வீழ்ச்சியுறச் செய்துவிட்டது. இத்தகைய களப்பிரர் படையெடுப்பால் பாண்டியர் தலைநகரில் நிலவிய கடைச்சங்கம் அழிவுற்றது. கி.பி.470 ஆம் ஆண்டில் வச்சிரநந்தி, என்ற சமணமுனிவர் திராவிடச் சங்கம் ஒன்றை நிறுவியுள்ளார். இச்சங்கத்தார் இருண்டகாலத் தமிழ் மக்கள்தம் பண்டை அறவொழுக்கங்களைப் போற்றி அவற்றின் வழியே நல்வாழ்க்கை நடத்தச் சிறுசிறு நீதிநூல்களை எளிய வெண்பாக்களில் எழுதி வெளியிடலாயினர். அவ்வாறு தோன்றிய நீதிநூல்களே பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் என்பர்.

சங்கப்பாடல்களிலிருந்து சங்க காலத்தில் நிகழ்ந்த ஒழுக்கக் கேடுகள் அறியப்படுகின்றன. இதே நிலை நீடிக்காமல் இருக்கவும் இது அறவழியன்று என்பதைச் சுட்டிக் காட்டவுமே பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. சங்க காலத்தில் அறநெறிக்கருத்துக்கள் தோன்றினும் அறத்தை மட்டும் உணர்த்தும் நோக்குடன் எழுந்ததே அறஇலக்கியங்கள் ஆகும்.

சங்ககாலத்திலேயே புத்த, சமணக் கோட்பாடுகள் ஓரளவு தமிழகத்தில் தலைகாட்டியிருந்தன. இருந்தாலும் நாட்டை ஆள்வோர் இக்கோட்பாடுகளை மக்களிடம் புகுத்திய காலம் கி.பி.3 ஆம் நூற்றாண்டாகும். பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் கைப்பற்றிய. களப்பிரர், பெளத்த சமயத்தைத் தென்னகத்தே பரப்ப முயன்றனர். அப்போது பெளத்த சமயக்குரவர் இருபதின்மர் காஞ்சியில் வாழ்ந்திருந்தனராம். இதிலிருந்து தமிழும் தமிழிலக்கியமும் அடைந்த வீழ்ச்சியை அறியமுடிகிறது.

கி.பி.3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பஞ்சமொன்று பாண்டிய நாட்டை வருத்தியதாக வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. இச்செய்தி இறையனாரகப் பொருளுரையிலும் கூறப்படுகிறது. தமிழிலக்கிய வீழ்ச்சிக்கு இயற்கையின் தாக்குதலும் ஒரு காரணமாக இருந்தது என்பதும் ஒரு கருத்து. அக்காலப்பகுதியில் பல்லவர்கள் தொண்டைநாடு, நடுநாடு ஆகியவற்றைக் கைப்பற்றிச் சமண சமயத்தையும், வடமொழியையும் பேணினர். மூவேந்தர் இவ்வழியில் நிலைகொள்ள இயலவில்லை. ஆகையால், கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசு அமையலாயிற்று. களப்பிரர்க்கும், உள்நாட்டு மன்னர்க்கும் போரும், பூசலும் மூண்டன. இதனால் தமிழிலக்கியக் கலை, பண்பாடு போன்ற யாவும் சிதைந்தன. இந்நிலையில் சங்க காலச் செழிப்புமிக்க அரசு மற்றும் மக்களின் வாழ்வானது நலிவுற்றது. தேறல் பருகி இன்ப வாழ்வில் திளைத்த பழைய வாழ்க்கையை விடுத்துச் சமண பெளத்த மதச் செல்வாக்கால் பல்வேறு நோன்பு வாழ்க்கை மேற்கொள்ளப்பட்டது. அற இலக்கியங்கள் பல்கிப் பெருக அதுவேக் காரணமாக இருந்தது. கலை இலக்கிய நோக்கிலும், அரசியல் நோக்கிலும் இக்காலம் இருண்டகாலம் எனக்கூறப்பட்டது.

தமிழில் பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் என்பவை சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய அற இலக்கிய நூல்களாகும். கீழ்க்கணக்கு என்பது தமிழகத்தில் கையாளப்படும் ஒருவகை கணக்கு முறையைக் குறிக்கும். கீழ் என்பது சிறுகணக்கு, கைக்கணக்கு என்று கூறப்படுகின்றது. திருநாவுக்கரசரின் தேவாரம் கீழ்க்கணக்கு என்ற சொல்லாட்சியை கையாண்டதாக, 

“தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று
அமுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே” (தேவாரம் - 5 ஆம் திருமுறை, பா.8 )

என்ற பாடலடிகளால் அறிய முடிகின்றது. 


பதிணென் கீழ்க்கணக்கு என்பது 18 நூல்களை உள்ளடக்கியது என்பதனை,

“நாலடிநான் மணி நாணாற்ப தைத்திணைமுப்
பால்கடுகங் கோலை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு” (மது.ச. விமலானந்தம்,தமிழ் இலக்கிய வரலாறு,ப.73)

என்ற தனிப்பாடல் வழி உணர்த்துகிறது. 

இவற்றில், நாலடி என்பது நாலடியாரையும், நான்மணி என்பது நான்மணிக்கடிகையையும், நானாற்பது என்பது இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகியனவற்றையும், ஐந்திணை என்பது ஐந்திணை எழுபது, ஐந்தினை ஐம்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது ஆகியனவற்றையும், இவற்றோடு திருக்குறள், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி. கைந்நிலை ஆகிய நூல்களைக் கீழ்க்கணக்கு நூல் எனபர். மேலும், சங்க காலத்தில் அற இலக்கியங்களென்று தனியே தோன்றவில்லையெனினும், சங்க இலக்கியப் பாடல்களில் அறச்செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. காதல், வீரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அக மற்றும் புறப்பாடல்கள் அமைந்த சங்க இலக்கியக் கூறுகளில் அறக்கருத்துக்கள் சில நேரிடையாக வெளிப்படுகிறது என்பதனை புறநானூற்று 24, 74, 101, 131, 193, 194, 195 போன்ற பாடல்களும், கலித்தொகை 61, 62 ஆகிய பாடல்களும், பதிற்றுப்பத்து 55, 60 போன்ற பாடல்களும் குறிப்பிடுகின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறத்தை மட்டுமே முதன்மையாகப் பாடின. அவ்வாறு பாடுபொருள்களாக அமைந்தவை அரசியல் சார்ந்தும், இல்வாழ்வு சார்ந்தும், சமூக அமைப்பு சார்ந்தும், போர் நெறி சார்ந்தும், துறவு குறித்த ஒழுகலாறு சார்ந்தும், வாழ்வில் பின்பற்றத்தக்க அல்லது செய்யக்கூடாத கருத்தியல் சார்ந்தும் பல்வேறு அறங்களாக மக்கள் மனதில் என்றும் நிலைநிற்கும் எளிமையான பாக்களாகவும் பாடப்பட்டுள்ளன. எனவேதான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து,

“அடிநிமிர் பில்லாச் செய்யுட்டொகுதி
அறம் பொருளின்பம் அடுக்கியவ்வகைத்
திறம்பட வுரைப்பது கீழ்க்கணக்கு” (மது.ச. விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாறு, ப.73)

என்னும் கருத்தியல் தமிழ் இலக்கிய வரலாறுகளில் முன்னிருத்தப்படுகிறது. ஆகவே குறைந்த அடிகளையுடைய செய்யுள்களை உடையதாய் வெண்பா யாப்பினால் இயன்று அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உறுதிப்பொருள்களையும் கூறுவனவற்றைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். 

பண்டைத் தமிழ் மக்கள் தனி மனிதனையும், சமுதாயத்தையும் போற்றி வளர்க்கும் ஒழுக்க நெறியாக, அறத்தைக் கருதினர். மறுமைப் பேறு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இவ்வுலக வாழ்வில் நலமாக வாழ்வதற்கும், முன்னேற்றம் அடைவதற்கும் அறவாழ்வு இன்றியமையாதது என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். அறவாழ்வை அடைய வேண்டும் என்ற அடிப்படையே அறநூல்கள் தோன்றக் காரணமாக அமைந்திருக்கலாம். புறநானூறு தோன்றிய காலத்தில் சமூகத்தில் வீரன் பெற்ற இடத்தை அறநூல்கள் காலத்தில் துறவி பெற்றான். அறம் என்பது தருமம், புண்ணியம் என்று பேசப்பட்டது. சங்கம் மருவிய காலத்தில், தமிழ் மக்கள் அறக்கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்குச் சிறப்பான காரணம் தன்நயநாட்டமே ஆகும்.


ஒருவருடைய ஆசை, குறிக்கோள், நோக்கம் கருதி முன்னேற சில அறக்கருத்துக்கள் கூறப்பட்டன. சில அறங்கள், ஒழுங்கு, அமைதியை நிலைநாட்டின. அறவாழ்வில் மனிதன் தொடர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக மறுமையின்பம், மோட்சம் முதலிய நீதி அறங்கள் வலியுறுத்தப்பட்டதை அறியமுடிகிறது. ஒவ்வொரு இலக்கியமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுகிறது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டுவதே அறஇலக்கியத்தின் குறிக்கோளாகும். அறநூல்களின் கற்பனைக்கோ, உணர்ச்சிக்கோ முதலிடமில்லை. அறிவுறுத்தும் கருத்திற்கே முதலிடம் தரப்படுகிறது. சமுதாயத்தில் பல தீமைகள் ஏற்பட்ட போது, அச்சீர்கேடுகளை நீக்கும் நோக்கத்துடன் அற இலக்கியங்கள் எழுகின்றன. வேதமதத்தின் உயிர்ப் பலிகளை எதிர்த்துக் கொல்லாமையும், பண்டைய வாழ்வினரின் புலால் உண்ணல், கள்ளுண்ணல் என்பனவற்றை மறுத்து ஊனுண்ணாமை, கள்ளுண்ணாமை என்ற கொள்கையும் தோன்றியிருக்கக் கூடும். சமுதாயத்தில் நிலவி வந்த குறைகளை மதச்சார்புடன் எதிர்த்த, மறுத்த நிலையினைக் காணமுடிகிறது. மதச்சார்பின்றி எல்லாவற்றையும் முறைப்படுத்திக் கூறும் நோக்கத்துடன் அற இலக்கியங்கள் தோன்றின என்பதனையும் உணரமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் அறக்கருத்துக்கள் உணர்த்தப்பட்ட போதிலும், சங்கம் மருவிய காலத்தில் அறநூல்கள் தோன்றியமைக்குக் காரணம் மக்களின் அறம் குறைந்த வாழ்வே ஆகும். அதனை சீர் செய்யும் நோக்கத்துடன் அறம் வலியுறுத்த அறநூல்கள் எழுந்திருக்கக்கூடும். பகைவர் படையெடுப்பு முதலிய அரசியல் குழப்பங்களால் அமைதியிழந்த காலத்தில் ஒழுக்கக் குறைவும்., முறையற்ற செயல்களும் மிகுந்தன. எனவே அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலேயே அற இலக்கியங்கள் தோன்றின என்பர். அற இலக்கியக் காலத்திற்கு முன் உணர்த்தப்பட்ட அறம் தற்போது வலியுறுத்தப்பட்டு முதலிடம் பெற்றுள்ளது. தொல்காப்பியர் காலத்திலும், சங்க காலத்திலும் பெருவாரியாக முதலிடம் பெற்ற அகநெறி, அறநெறிக் காலத்தில் மூன்றாமிடத்தில் வைக்கப்பட்டன.

காலத்தால் முதிர்ந்த தொல்காப்பியத்தை ஒட்டியும், பின்னுமே அறவியல் நூல்கள் உருவாக்கப்பட்டன என்பதையும், நீதிநூற் காலம் கி.பி.500 முதல் கி.பி.850 வரையிலானது என்பதையும் அறிஞர்கள் வாயிலாக நாம் அறியலாம். மக்கள் ஒன்றுகூடி சமுதாயமாக வாழுங்கால், ஒருவரோடு ஒருவர் கலந்து பழகும் போது, தாமும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என எண்ணுகிறார்கள். இதற்கு அவர்கள் என்னென்ன பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். எவ்வாறு சகமனிதர்களோடு பழகவேண்டும் என்பனவற்றையும் அறிந்திருத்தல் மிகத் தேவையான ஒன்று. அவற்றை எடுத்துக் கூறுவனவே ‘நீதி இலக்கியங்கள்’ ஆகும். அவை ‘அற இலக்கியங்கள்’ எனும் பெயராலும் அழைக்கப்படும்.

இந்நூல்கள் சங்க கால நூல்களினின்றும், கூறும் பொருளாலும், அமைந்திருக்கும் நடையாலும் வேறுபட்டிருந்தன. அந்நூல்களையெல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதனை அறிந்து கொள்வதற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை. இருந்தாலும், அவை எந்த நூற்றாண்டில் தோன்றியிருக்கக்கூடும் என்பது உய்த்துணர வேண்டிய நிலையில்தான் உள்ளன. மக்கள் புறநானூற்றுக் கால வாழ்க்கை முறையிலேயே திருப்தியடைந்தவர்களாக இருந்திருந்தாற் புதுமையை ஏற்றிருக்க மாட்டார்கள். தம்முடையவும், தம் முன்னோருடைய வாழ்க்கை முறையில் அதிருப்தி ஏற்பட்டிருக்காவிட்டால் புறநானூறு தோன்றிய தமிழ்நாட்டிலே திருக்குறள் தோன்றியிருக்க முடியாது. பொறியாலும் புலனாலும் கவர்ச்சியுற்று, காதல் வாழ்க்கை, வீர வாழ்க்கையில் ஊக்கம் மேலிட்டு நின்று வாழ்ந்த அவ்வாழ்க்கையிலே துன்பத்தைக் கண்ட மக்கள் கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கையாகவும், ஒழுக்கத்தையும் விரும்பினர். சமண, பௌத்தக் கொள்கைகள் செல்வாக்குப் பெற்ற நிலையில் அறக்கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கலாம். எனவே இக்காலகட்டத்தில் அற இலக்கியங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன எனலாம். 


அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்களும் மக்கள் தமது உலக வாழ்க்கையில் அடைய வேண்டியவை ஆகும். இவற்றில் “வீடு பேறு” மறு பிறவியில் அடையக் கூடியது. இவ்வுலக வாழ்க்கையில் அடைய வேண்டிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் பற்றி எடுத்துரைக்கும் நூல்கள் நீதி / அறநூல்கள் அல்லது கீழ்க்கணக்கு என்று அழைக்கப்படுகின்றன. இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், பன்னிருபாட்டியல் போன்றன இவற்றுக்கான இலக்கணத்தைத் தருகின்றன. தொல்காப்பியம் தரும் இலக்கணம்,

“வனப்பியல் தானே வகுக்குங்காலைச்
சின்மென் மொழியால் தூய பனுவலொடு 
அம்மை தானே அடிநிமிர்பு இன்றே”
இதனுள் வந்துள்ள தூய பனுவலொடு” (தொல். பொருள். செய்: 235)

என்ற அடையுடன் கூடிய பகுதி அறம் பொருள் இன்பமென்னும் மூன்றிற்கும் இலக்கணம் கூற வந்த நூல்களைப் பற்றியதாகும். வனப்பு அடிப்படை சார்ந்த அம்மை பற்றித் தொல்காப்பியர் வகுத்துக் கூறும் பொழுது, சிலவாகிய மெல்லியவாகிய மொழியினால் தொகுக்கப்பெற்ற அடிகள் மிகுதியில்லாமல் வரும் செய்யுட்கள் அம்மையாகும் என்கிறார். தொல்காப்பியர் கூறும் “அம்மை” எனும் வனப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இடம் பெறுகின்றன. இவ்விலக்கணமே தொல்காப்பிய அடிப்படையில் நீதி நூல்களாகும். எனவே நீதி நூல்கள் அடி அளவில் மிகுதிப்படாமல் இருக்க வேண்டும் என்ற வடிவ வரையறை தொல்காப்பிய அடிப்படையில் கிடைத்ததாகும். இது கருதியே அடியளவில் சுருங்கியதாகவே நீதி நூல்களின் பாடல்கள் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதி நூல்களுக்கு உரியதானது. குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர். 

நீதி நூல்கள் வாழ்ககையில் பின்பற்றவேண்டிய உயர்ந்த நெறிகளை சிறந்த முறையில் வகைப்படுத்தி கூறுகின்றன. கல்யறிவு பெறாத மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்கள் தோறும் எளிமையாகவே அமைந்து சிறக்கின்றன. நீதிநூல்கள் ஏற்றதொரு உவமைகளை எடுத்துக்கூறி கருத்துக்களை நன்கு விளக்குகின்றன. மூன்று சொற்கள் அமைந்த ஓரடிப் பாடல்களாகவும் அமைந்து நீதியைப் புகட்டுகின்றன. இவ்வாறு நீதிநூல்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் நிகரற்று விளங்குகின்றன. இவை நாட்டையாளும் வேந்தனுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் உயர்ந்த அறங்களை எடுத்துரைப்பதாகவும் அமைந்துள்ளன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிநூல்கள் பாடும் வகைமை தோன்றியது. முற்கால நீதி நூல்கள் என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வழங்கும் முறைமை ஏற்பட்டது. பிற்காலத்தில் நீதி நூல்கள் தோன்றும் வாய்ப்பும் ஏற்பட்டது. பிற்கால ஒளவையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்றன பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அமைந்துள்ள நீதிநூல்களின் தொடர்நிலை சார்ந்தனவாகும். இவற்றைத் தொடர்ந்து எழுந்த அருங்கலச்செப்பு, முனைப்பாடியார் பாடிய அறநெறிச்சாரம், அதிவீரராம பாண்டியர் பாடிய வெற்றிவேற்கை, குமரகுருபரர் பாடிய நீதி நெறி விளக்கம், சிவப்பிரகாசர் பாடிய நன்னெறி, உலகநாதப் பண்டிதரால் பாடப்பெற்ற உலகநீதி, மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் பாடப்பெற்ற நீதிநூல் பெண்மதி மாலை போன்றனவும் நீதி இலக்கிய வகைமையின் தொடர்ச்சியாக அமைகின்றன. மேலும் புதிய வகைமைகள் தோன்றவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காரணமாக அமைந்தன எனலாம்.

 
முற்கால நீதிநூல்களைப் போலவே அறக்கருத்துகளை வலியுறுத்துவதில் பிற்கால நீதிநூல்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுக்கு ஏற்ற நூற்றுக்கு மேற்பட்ட அறங்களை வகுத்தும் தொகுத்தும், எளிய மொழிநடையிலும் வழங்கியுள்ள பல்வேறு நீதிநூல்கள் சமகாலம் வரை இயற்றப்பட்டு வந்தாலும் பெரிதும் பேசப்படுகின்ற பிற்கால நீதிநூல்கள் சிலவற்றை இங்குக் காணலாம். 

1. ஆத்திச்சூடி

2. கொன்றை வேந்தன்

3. மூதுரை

4. நல்வழி

5. உலகநீதி

6. வெற்றி வேற்கை

7. நன்னெறி

8. நீதிநெறிவிளக்கம்

ஒரு வரியில் அறத்தைச் சொல்லும் மரபு பதினெண்கீழ்க்கணக்கு நூலான முதுமொழிக்காஞ்சியில் துவக்கி வைக்கப்பெற்றது. இம்மரபு ஒளவையாரின் ஆத்திச்சூடி தோன்றுவதற்கும், அதன்பின் பல ஆத்திச் சூடிகள் வருவதற்கும் காரணமாயிருந்தன. பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி, பாரதிதாசனின் ஆத்திச்சூடி, வ.சுப. மாணிக்கத்தால் எழுதப்பெற்ற தமிழ்ச் சூடி, ச.மெய்யப்பன் எழுதிய அறிவியல்சூடி, நா.ரா. நாச்சியப்பன் எழுதிய தமிழ்சூடி, சிற்பி எழுதிய ஆத்திச் சூடி போன்ற பல ஆத்திச்சூடிகள் புதுவகையாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தாக்கத்தால் தமிழச்சூழலில் காலந்தோறும் படைக்கப்பெற்று வருகின்றன.

மேலும், வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும், இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது. இதனை அறிந்துணர நீதி நூல்கள் தொடர்பான ஆய்வு நூல்களையும், ஆய்வேடுகளையும் ஆயவாளர்கள் தொடர்ந்து வாசிப்புத் தளத்தில் தீவிரப்படுத்த வேண்டும்.

மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்கினை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, பல்வேறு துறைகள் இன்று விரிவடைந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆனால், இவற்றின் தாக்கம் நமது சமூகச் சூழலில் மிகக் குறைவானதாகவேக் காணப்படுகின்றன. இருட்டில் கிடக்கும் இச்சமூகத் தேவைகளை நடைமுறை வாழ்வுக்குப் பயன்படச் செய்வது மிக அவசியமாகும். அந்த வகையில், நல்ல அறக்கருத்துக்களையும், நல்ல மருத்துவக் குறிப்புக்களையும், இன்ன பிற மனிதத் தேவைகளையும், வாழ்வியற் சிந்தனைகளையும் தமிழில் தோன்றிய அற இலக்கியங்கள் பல விரிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றில் பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் என்பவை முதன்மையாகக் கருதப்படுகின்றன. 

சங்க இலக்கிய காலத்திற்குப் பின்னர் தோன்றிய அற இலக்கியங்கள் சமூகத்தின் ஒழுங்கற்ற தன்மைகளை நேர்படுத்தும் சிந்தனையைக் கொண்டனவாக அமைந்துள்ளன. அவை அகநூல்கள், புறநூல்கள் என்ற வகையில் மனிதர்களின் இருவிதமான வாழ்வையும் செம்மைப்படுத்தி எப்படி வாழவேண்டுமெனக் காட்சிப்படுத்துகின்றன. ஆக, சங்க இலக்கிய காலத்தில் இருந்த நடைமுறைகள் பல, அதன் பின்னர் தோன்றிய அற இலக்கிய கால அரசியலிலும், சமூகத்திலும் மிக இழுக்காகக் கருதப்பட்டன எனலாம். அற இலக்கியங்கள் பரத்தமை, கள்ளுண்ணாமை, வாய்மை போன்ற பல சமூக நிகழ்வுகளை அவற்றின் இயல்பான நடைமுறையிலிருந்து விலகச்செய்து புதிய சமுதாயத்தின் தேவைக்கு ஏற்ப இயற்றப்பட்டவையாகும். ஏனெனில், பரத்தமை, கள்ளுண்ணுதல் போன்றவை சங்க இலக்கியத்தில் தவறான நடைமுறையாகக் கொள்ளப்படவில்லை. ஆனால், அற இலக்கியத்தில் சமூக இழிவாகக் கூறப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளே சங்க இலக்கிய காலத்திற்கும், அற இலக்கிய காலத்திற்கும் இடையேயான சமூக மாற்றமாக அமைந்துள்ளது.

பார்வை நூல்கள்:

1. இரா.இராசமாணிக்கம், ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்’ (மூலமும் உரையும்), கழக வெளியீடு, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு 1947. 

2. தொல்காப்பியம் (எழுத்து, சொல், பொருளதிகாரம்), உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், கணேசையர் பதிப்பகம், சென்னை 600113, இரண்டாம் பதிப்பு 2007.

3. இரவீந்திரன்.டி.கே, ‘தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்’, விகடன் பிரசுரம், சென்னை - 02, முதற்பதிப்பு - 2016.

4. மயிலை சீனி வேங்கடசாமி, ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’, விடியல் பதிப்பகம், கோவை - 15, மூன்றாம் பதிப்பு 2012. 

5. பரிமேழலகர் (உ.ஆ), ‘திருவள்ளுவர் திருக்குறள்’, கங்கை புத்தகநிலையம், சென்னை, நான்காம் பதிப்பு - 2002.

6. அறவாணன்.க.ப, ‘அற இலக்கியக் களஞ்சியம்’, மணவார் மருதூன்றி பதிப்பகம், சென்னை - 29, முதற்பதிப்பு - 2008.

7. வரதராஜன்.மு, ‘தமிழ் இலக்கிய வரலாறு’, சாகித்திய அகாதெமி, புதுதில்லி - 01, முதற்பதிப்பு - 1972.

*****

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p231.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard