New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருத்தொற்றுமையில் குறளும் குறுந்தொகையும் முனைவர் த. மகாலெட்சுமி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கருத்தொற்றுமையில் குறளும் குறுந்தொகையும் முனைவர் த. மகாலெட்சுமி
Permalink  
 


கருத்தொற்றுமையில் குறளும் குறுந்தொகையும்

முனைவர் த. மகாலெட்சுமி
முனைவர் பட்ட மேலாய்வாளர் (யு.ஜி.சி.),
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113

tirukuralkurunthogai.jpg

முன்னுரை

தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்திய இலக்கியங்களுள் தலைமைப் பண்புடையது திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந்நூலை எப்பாலாரும் ஏற்றுப் போற்றுவர். தொன்றுதொட்டு அதன் சொல்லையும் பொருளையும் தமிழுலகம் மட்டுமல்லாது பிறமொழி சார்ந்த அனைவரும் பொன்னே போற்றி வருகின்றனர். சில அறிஞர்கள் குறளுடன் பிற உலக மொழி இலக்கியங்களை ஒப்பிட்டுக் குறளின் மேன்மையான கருத்தினை எடுத்துக்காட்டி மகிழ்கின்றனர். இதில், மானிட உலகிற்கே உரிய பொதுவான வாழ்வியல் உண்மைகள் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. பரந்த உலகில் அனைத்துச் சமய மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரிய பெட்டகமாக இருப்பதால் இந்நூல் உலகப்பொதுமறையாகப் போற்றப்படுகிறது. தமிழ்ச் செவ்விலக்கியங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 41 நூற்களும் தனிச்சிறப்புடையன. இவற்றுள் குறளும் குறுந்தொகையும் அறிவார்ந்த செய்திகளை வெளிப்படுத்தும் பாங்குடையவை. இவ்விரு செவ்விலக்கிய நூல்களுள் இடம்பெற்ற ஒத்தக்கருத்துடைய பாடல்களைச் சுட்டி மேன்மையான மெய்யியல் கருத்துக்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கடவுள் சிந்தனை

மனிதர்கள் தனக்கு மேலான சக்தியே கடவுள் என நம்புகின்றனர். அந்தவகையில் எந்தவொரு செயலைத் தொடங்கும் முன்னும் நன்மைகள் வரவும் தீமைகள் விலகவும் மக்கள் வேண்டி நிற்பர். இறைவனைப் போற்றக்கூடிய அடியார்கள் அவனது அடிகளைத் தொழுதல் மரபு. இதனைப் பின்பற்றும் வள்ளுவர், 

"அகர முதல வெழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு" (குறள்.1)

"நற்றாள் தொழாஅர் எனில்" (குறள்.2:2)

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்"(குறள்.3:1)

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு" (குறள்.4:1)

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்" (குறள்.10)

என்று பாடி மகிழ்வதைக் காணலாம். குறுந்தொகையிலும் கடவுள் வாழ்த்தின் சாயல் இடம் பெற்றதை, 

"தாமரை புரையுங் காமர் திருவடி,
பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின்
நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே" (குறுந். கடவுள் வாழ்த்து)

என்னும் பெருந்தேவனாரின் கூற்றிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.


செய்நன்றி போற்றுதல்

ஒருவரின் தேவையை உணர்ந்து காலத்தில் செய்த உதவி சிறியது என்றாலும் அது உலகத்தில் மிகப்பெரிதாகப் போற்றப்படுதல் வேண்டும். இதனை, 

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது" (குறள்.102)

"மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு" (குறள்.106)

என்ற சொல்லின் கருத்து எடுத்துரைக்கிறது. குறுந்தொகையிலும் ஞாலத்தின் பெரிய நன்றி உணர்வுடைய நட்பை, 

"நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று! 
நீரினும் ஆரள வின்றே! சாரல் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு 
பெருந்தேன் னிழைக்கும் நாட னொடு நட்பே" (குறுந்.3)

என்ற தேவகுலத்தாரின்பாடல் அறிவுறுத்துகிறது.

அகநக நட்பு

நட்பு என்பது ஒருவருடைய முகம் பார்த்து அழகு பார்த்து உண்டாகக் கூடாது. அது உண்மையான நட்பு அன்று. அந்த நட்பு உள்ளத்திலிருந்து வெளிப்படுதல் வேண்டும். வெறும் உதட்டிலிருந்து வரும் நட்பின் வழி துன்பமே நிகழும். இத்தகைய நட்பு வஞ்சகம் நிறைந்ததாக இருக்கக்கூடும். இதனைப் பகுத்தாய்ந்த வள்ளுவர் உண்மையான நட்பை.

"முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்
தகம்நக நட்பது நட்பு" (குறள்.786)

"இடுக்கண் களைவதாம் நட்பு" (குறள்.788)

என்று கூறிச் சுட்டிக்காட்டுகிறார். 

குறுந்தொகையில் அகநக நட்பு மிகச்சிறப்புடன் போற்றப்படுகிறது. இக்கூற்றை,

"யாயும் ஞாயும் யாரா கியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயனீர் போல 
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே" (குறுந்.40)

என்னும் பாடல் மெய்ப்பித்துக் காட்டுகிறது. முன்பின் அறியாத தலைவன் தலைவி அன்பினால் (அகத்தால்) செம்புலப்பெயல் நீர் போல ஒன்று சேர்ந்த செயல் அகநக நட்புக்கு எடுத்துக்காட்டாகும்.


நன்னயம் செய்தல்

ஒருவன் துன்பமே செய்தவனாக இருந்தாலும் அவன் நாணுமாறு நன்மையே செய்தல் வேண்டும். இக்கருத்தை, 

"இன்னாசெய் தாரை ஒறுத்தல்; அவர் நாண
நன்னயம் செய்து விடல்" (குறள்.314)

என்னும் குறளில் காணலாம். இந்தக் குறளை ஒத்துள்ள குறுந்தொகைப் பாடலில் ஓரம்போகியார்,

"யாயா கியளே! விழவு முதலாட்டி
பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை 
கரந்தன ளாகலின் நாணிய வருமே" (குறுந்.10)

என்று கூறுவதைக் காணமுடிகிறது. இக்கூற்று குறளுடன் இயைவது குறிப்பிடத்தக்கது.

தூதின் இலக்கணம்

அறிவு, உருவம் ஆராய்ந்த கல்வி ஆகிய மூன்றும் பொருத்தமுற அமையப்பெற்றவன் தூதனாகச் செல்லலாம் என்று கூறும் வள்ளுவர், 

"அறிவுரு ஆராய்ந்த கல்வி இம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு" (குறள்.684)

என்ற குறளின் வழி வெளிப்படுத்துகிறார். இக்குறளுக்கு விளக்கமாய் அமையும் வகையில் மோசிகீரனார், 

"அன்னாய்! இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னவன் கொல்லோ" (குறுந்.33) 

என்ற குறுந்தொகைப் பாடலில் குறிப்பிடுகிறார். இப்பாணன் இளமை முதிரா மாணாக்கனாக இருக்கிறான். தனக்குப் புதிதாகிய இவ்வேற்றூர் இடத்தும் பெரிய தலைமையுடையவனாக விளங்குகின்றான். இவன் தன்னுடைய ஊர் மன்றத்தே எத்தகைய சிறப்புடையவனோ என்று அவனுடைய திறமையை வியந்து பாராட்டி அவன் மேற்கொண்டு வந்த வினையின்கண் தனக்கு உடன்பாடு உண்டு என்பதை விளக்குகிறார். இவரால் போற்றப்படும் பாணன், குறள் கூறும் தூதின் இலக்கணத்திற்கு இலக்கியமாய் அமைகிறது.


செவ்வியறிந்து நுகர்தல்

அகவாழ்வில் காமத்தைச் செவ்வியறிந்து நுகர்ந்து இன்புறுதல் வேண்டும் என்று அறிவுறுத்தும் வள்ளுவர், 

"மலரினும் மெல்லின் காமம்; சிலரதன்
செவ்வி தலைப்படு வார்" (குறள்: 1289)

என்று நயம்படச் சுட்டுகிறார். இக்கருத்தொற்றுமையால் அமைந்த கபிலரின் குறுந்தொகைப் பாடல்,

"சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கியவள் 
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே" (குறுந்.18:4-5)

என்று அழகாக எடுத்துயம்புகிறது. தோழி கூற்றாக அமைந்த இப்பாடலில் இரவுக் குறியிடத்தே தலைவியைப் புணர்ந்து செல்லும் தலைவனைத் தோழி தனியிடத்தே கண்டு, தலைவியின் துன்பநிலையை உணர்த்தி, விரைவில் அவளைப் பலரறிய மணம் முடித்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதாக, ‘நாடனே! சிறிய பலாக்கொம்பிலே பெரிய பழம் தொங்கினாற் போன்று தலைவியின் உயிராகிய சிறிய கொம்பிலே காமமாகிய பெரும்பழம் கனிந்து தொங்குகிறது. இச்செவ்வியறிந்து நீ அக்கனியை நுகர்ந்து இன்புறக் கடவாய். இல்லையெனில், அக்காம முதிர்ச்சி அவள் உயிருக்கு இறுதியைப் பயக்கும்’ என்று தோழி கூறுவதைக் காணலாம்.


மடமையை இடித்துரைத்தல்

தன்னை சிறிதளவும் நன்று என உணராதவரிடத்தில் வலிந்து சென்று குறையிரந்து நிற்கும் பெரிய மடமையை உடையதாலனின் அக்காம நோய் வெறுக்கத் தக்கதாகும்.

"ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று"(குறள்.967)

"சென்றார்பின் செல்லாப் பெருந்தனகமை, காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று" (குறள்.)

"தன்னை உண்ரார் மாட்டுச் சென்று நிற்றல் மடமை என்பதை, 
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே" (குறுந்.78:4-6)

என்ற குறுந்தொகைப் பாடல் உணர்த்துகிறது. இப்பாடலில் காமத்தால் மெலிந்த தலைவனைப் பார்த்துப் பாங்கன் உயர்குடிப் பிறந்தோய்! இது உனக்குத் தகுந்ததன்று. தன்னை நன்று என உணராதவரிடத்தில் சென்று இரந்து நிற்கச் செய்யும் பெரும் பேதைமையுடைய காமம். ஆதலால் நின்னால் வெறுக்கத் தக்கது’ என்று இடித்துரைப்பதைக் காணலாம். இக்கூற்று மேற்சொன்ன குறளுடன் ஒப்புமைக் கருத்தாக அமைகிறது.

பொருந்தாத கண்கள்

தலைவி ‘என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தான் விரும்பிவனவற்றையே செய்யினும் என்னுடைய கண்கள் காதலனைக் காணாது பொருந்தவில்லை’ என்று கூறும் கூற்று,

"பேணாது பெட்பவே செய்யினும், கொண்கனைக் 
காணா தமையல கண்" (குறள்.1283)

என்ற குறளினால் வெளிப்படுகிறது. குறுந்தொகையால் பரணர் தலைவியின் மனப்பாங்கினை இயல்பாக எடுத்துரைக்கிறார். 

"… … … … … காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே" (குறுந்.60:4-6)

தலைவனுடைய பிரிவினால் துன்பப்படும் தலைவி தோழியை நோக்கி என்னுடைய கூடப்பெறா விடினும் அவரைக் காணப்பெறுதலாயினும் நன்று’ என்று புலம்புகிறாள். இக்கருத்து மேற்சொன்ன குறளின் கருத்துடன் ஒத்துநோக்கி மகிழத்தக்கது.

பிரிவாள் துயருற்ற தலைவி

தலைவனுடைய பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத தலைவி அவன் பிரிந்து சென்று சில காலமே கடந்திருப்பினும் பல காலமாயின என்று எண்ணி வருந்திக் கூறுகிறாள் என்பதை வள்ளுவர், 

"ஒரு நால் எழுநாள்போல் செல்லும், சேன்சென்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு" (குறள்.1269)

என்று நறுக்கெனச் சுட்டுகிறார். இதே கருத்தை வெளிப்படுத்தும் குறுந்தொகைப் பாடல்,

"பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குவவே" (குறுந்.104:4-5)

என்று சுட்டுகிறது. மிகுந்த அன்பு கொண்டு உயிருக்கு உயிரான தலைவனைப் பிரிந்த தலைவியருக்கு அப்பிரிவு மிகக் குறுகியதே ஆயினும் மிக நீண்டதாகத் தோன்றும். இதனால் இவ்வொத்த கருத்தின் வெளிப்பாட்டை எண்ணி வியக்கத்தான் வேண்டும்.


நெடிய இராப்பொழுது

தலைவன் பொருளீட்டுதலின் பொருட்டு பிரிந்த பிரிவைத் தாங்க முடியாதவளாய்த் தலைவி துடிக்கிறாள். அவளுக்குத் தலைவன் இல்லாத இரவு மிக நீண்டதாக உணர்கிறாள். 

"கொடியார் கொடுமையின் தாம்கொடிய, இந்நாள்
நெடிய கழியும் இரா"(குறள்.1169)

குறுந்தொகையில் குறளின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 

"துஞ்சா துறைநரொ டுசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே" (குறுந்.145:4-6)

என்னும் பாடல் அமைந்துள்ளது. தலைவி தோழியிடம் இவ்வூர் இனியாம் இன்புற்று வாழ்வதற்குத் தகுதியுடையதன்று. தலைவன் பிரிவாலே வருந்தும் என்னைத் தேற்றுவதற்கு நினையாது உறங்குகின்ற மக்களும் நீண்ட இரவும் உடையது இவ்வூர் என்று நெடிய இராப்பொழுதின் தன்மையை எடுத்துரைக்கிறாள்.

உறங்காது வருந்துதல்

தலைவியின் பிரிவாற்றாத் துன்பத்தினை எடுத்தியம்பும் வள்ளுவர், 

"மன்னுடயர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை" (குறள்.1168)

என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளார். இச்செய்தியைக் குறுந்தொகையில் மதுரை மருதனிள நாகனார், 

"யாமத் தியங்குதொ றிசைக்கும்
இதுபொழு தாகவும் வாரார் கொல்லோ" (குறுந்.279)

என்று பாடியுள்ளார். பிரிவுத் துன்பம் காலையில் அரும்பி மாலையில் மலர்ந்து இரவில் பெருந்துன்பத்தை விளைவிக்கும் என்னும் ஆன்றோர் வாக்கிற்கு ஏற்ப இத்தலைவியின் கூற்றும் அமைகிறது.

பொய்மையும் வாய்மை

நன்மைக்கருதி சொல்லுகின்ற பொய்யும் வாய்மையாகக் கருதப்படும் என்று தெய்வப்புலவர் கூறுவார். 

"பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்" (குறள்.292)

இக்குறளுக்கு ஏற்ப, கார்ப்பருவம் வந்தும் தலைவன் வாராது இருக்கின்றான். பருங்கண்டு தலைவி வருந்துவாளே என்று எண்ணிய தோழி, ‘மழை பெய்கின்றமையால் இது கார்ப்பருவம் போலும் என்று நீ கருதுகின்றாய். இது கார்ப்பருவம் அன்று. இம்மழை வம்ப மழை. கார்ப்பருவமாக இருப்பின் நம் காதலர் வந்துவிடுவாரல்லவா’ என்று கூறுகிறாள். இதில் தலைவியின் நன்மைக்கருதி கார்ப்பருவம் வந்தும் இன்னும் வரவில்லை என்று கூறுவது பொய்மையும் வாய்மையாகிறது. இதனைக் குறுங்கீரனார்,

"வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின்
வாரா ரோநம் காத லோரே" (குறுந்.382:4-6)


குறும்பரின் முழக்கம்

குறும்பரின் தன்மையைக் கூறும் வள்ளுவர் குறும்பர் முழக்கமிடும் கொல்குறும்பு இல்லாத நாடே நயத்தக்க நாடு என்பார். 

"பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு" (குறள்.735)

பரணர் பாட்டில் வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவனை எண்ணி வருந்தி ஆற்றாளாய தலைவியை நோக்கித் தோழி தலைவர் விரைவில் வருவர் என்று கூறித் தோன்றுகிறாள். இவர்தம் களவொழுக்கத்தினை அறிந்த ஊரார் அலர் தூற்றும் ஆரவாரத்தைச் சொல்லும்பொழுது குறும்பரின் முழக்கத்திற்கு ஒப்பிட்டுக் கூறுகின்றாள். 

"புலிநோக் குறழ்நிலை கண்ட
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே" (குறுந்.328:7-8)

கனவு காணுதல்

தலைவியைப் பிரிந்தவர் கனவிலே தம் துணையைக் கண்டு இன்புறுதலும் பின்னர் கனவு கலைந்து எழுந்தவுடன் பிரிவாற்றாமல் பெருந்துன்பமடைதலும் இயற்கை என்பதை, 

"நனவினான் நல்காக் கொடியார், கனவினான்
என்னெம்மை பீழிப் பது?" (குறள்.1217)

என்ற குறள் உணர்த்துகிறது. இக்குறளுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்த குறுந்தொகைப் பாட்டில், 

"நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல்
இன்துயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே" (குறுந்.147:4-5)

என்ற அடிகள் காணப்படுகின்றன. இதில், தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் சென்ற விடத்திலே துயிலும்பொழுது தலைவியைக் கனவிற்கண்டு, பின்னர் விழித்து ஆற்றாமையால் கனவை நோக்கியே கூறுகின்றான். ‘கனவே! உன்னை உலகத்துக் காதலர்கள் இகழ மாட்டார்களோ? நீ தலைவியைத் தந்ததுபோல இனிய துயிலிருந்து எழுப்பி ஏமாற்றுகின்றியே என்று புலம்புகின்றான்.

இக்கட்டுரை வழி நன்கு ஆழ்ந்து படிக்கும்போது குறுந்தொகையின் கவி இன்பத்தின் ஊடே உடலினில் உயிர் கலந்தாற் போன்று ஊடுருவி கிடக்கும் குறளின் கருத்துக்களை எண்ணி எண்ணி இன்புறலாம் என்ற கருத்து வெளிப்படுகிறது. மேலும் குறுந்தொகை ஓர்அக நூலாக இருப்பதால் திருக்குறளின் காமத்துப்பால் குறளுடன் பொருந்தி பொய்யாமொழியும் கலந்து இனிமைக்கு இனிமையூட்டுவதை நன்கு அறிந்து கொள்ளலாம்.

கருவிநூற்பட்டியல்

1. திருக்குறள், பரிமேலழகர் உரை, ஏ.ரங்கசாமி முதலியார் & சன்ஸ், மதராஸ். (1931)

2. திருக்குறள், பரிமேலழகர் உரை, வடிவேலு செட்டியார் பதிப்பு.(1919)

3. திருக்குறள், மணி விளக்கவுரை, கா.அப்பாதுரை, அலமேலு நிலையம், தேனாம்பேட்டை.(1971)

4. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர்.(1931)

5. குறுந்தொகை, பொ.வே.சோமசுந்தரனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.(1955)

*****

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p220.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard