New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க இலக்கியத்தில் மணிகள் ச. பாரதி


Guru

Status: Offline
Posts: 24624
Date:
சங்க இலக்கியத்தில் மணிகள் ச. பாரதி
Permalink  
 


சங்க இலக்கியத்தில் மணிகள்

ச. பாரதி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
காந்திகிராமக் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.

archaelogycartoon.png

முன்னுரை

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழகத்தின் வரலாற்றையும் மக்களின் வாழ்வியலையும் அறியப் பயன்படும் சிறந்த களஞ்சியமாகத் திகழ்கின்றன. சங்க இலக்கிய ஆய்வுகள் சமூகவியல், அரசியல், தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல், பண்பாடு, பொருளியல், அறிவியல் என விரிந்த தளத்தில் செய்யப்பட்டுள்ளன. இவ்வாய்வு சங்க இலக்கியத்தில் காணப்படும் மணிகள் குறித்த தொழில்களையும், தொழில்நுட்பத்தையும், பொருளுற்பத்தியையும் களமாகக் கொள்கிறது. அவ்வகையில் பண்டைய தமிழகத்தின் மணிகள் தொழில்களையும், இத்தொழில்களின் வாயிலாக அக்காலச் சமுதாயத்தில் ஏற்ப்பட்ட வேலைப் பிரிவினையையும் இலக்கிய ஆதாரங்களோடும், அகழாய்வின் வாயிலாகக் கிட்டிய பொருட்களைக் கொண்டும் இவ்வாய்வு மேற்கொள்ளப்படும்.

மூலப்பொருள் சேகரிப்பு

மலைபடு வளங்களைச் சேகரிப்பதையே பொருளாதார நடவடிக்கையாகக் கொண்டிருந்த நிலப்பகுதி குறிஞ்சி ஆகும். குறிஞ்சி நிலத்தின் உற்பத்திமுறை இயற்கை சார்ந்ததாகவே காணப்படுகின்றது. இவ்வித மலையிலிருந்து பழந்தமிழர் விலைமதிக்ககூடிய யானைத் தந்தத்தினைச் கருவியாகக் கொண்டு பொன்னைத் தோண்டி எடுத்துள்ளனர். பொன்னை தோண்டும் போதே பழந்தமிழரின் அணிகலன்களிலும் ஆபரணங்களிலும் அளவிடற்கரிய இடத்தினை வகித்த மணிகளை கண்டு எடுத்துள்ளனர். இதனை,

“செறிமடை அம்பின், வில்வில் கானவன் 
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன், 
கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப, 
வைந்நுதி வால்மருப்பு ஓடிய உக்க 
தெண்நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு 
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு 
சாந்தம் பொறைமரம் ஆக, நறைநார்” (அகம். 282: 2-4)

எனும் பாடல் குறிக்கிறது. 

இத்தகைய மணிகளைத் தேடி வேட்டுவர் திரிந்தமையை,

“வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக்
கட்சிக் காணாக் கடமா நல்லேறு 
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்...” (புறம். 202: 1-3)

எனும் பாடல் விளக்குகிறது.

இவ்வித மணிகளின் மூலப்பொருட்களைத் தொகுப்போர்களாக முல்லை நிலப்பகுதியைச் சேர்ந்த பூழியர் எனும் பிரிவினர் திகழ்ந்தமையை பதிற்றுப்பத்து (21: 20-23)ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மேலும் மேற்குக் கடற்கரையிலமைந்திருந்த குட்டநாட்டில் வாழ்ந்த குட்டுவார் எனும் பெயர் கொண்டோர் திருமணிகளைத் தொகுக்கும் தொழிலில் ஈடுபட்டமையைக் குறுந்தொகை (163: 1-2) ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மணிகள் தொழிலால் குட்டுவர் பொருள்வளம் கொழிக்கும் வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். அதனால் தான் தாலமி குட்டநாடு பற்றி குறிப்பிட்டுள்ளார். அந்த மணிகளை யவனர்கள் வாங்கிச் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறுவர். மேலும் பாரம் என்றொரு நகரமும் நன்னன் ஆட்சிக்குட்பட்டிருந்தது.(அகம். 152: 12-13) இந்நாடு கொண்கானம் மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்தது. அந்நாடு கடற்கரையில் அமைந்திருந்தாலும் அங்கு மணிகள் வெட்டி எடுத்துள்ளனர். இச்செய்தி ஆய்வுக்குரியது. எனின் குறிஞ்சி, முல்லை ஆகிய இரு நிலங்களிலும் மணியின் மூலப்பொருள்கள் கண்டறியப்பட்டு அவை உள்நாட்டு நுகர்வின் வாயிலாக மருத நிலத்தில் தொழிற்கூடங்கள் அமைத்துப் பல்வேறு நுகர்வுப் பொருள்களாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் உழவர்கள் நிலத்தை உழும்போது மணிகள் கிடைத்துள்ளன எனும் செய்தி சங்க காலத்தில் வேட்டுவரும், கோவலர்களும், வேளாண்மை செய்வோரும் மணிகளின் மூலப்பொருள் சேகரிப்பில் ஈடுபடுவோராகவும் இருந்தமையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. எனவே பல நாடுகளுக்கிடையில் வணிகம் தோன்றப் பெரும்பாலமாக அமைந்த மணிகள் மலைப்பாங்கான சூழல்கள் முழுதும் நிறைந்து காணப்பட்டுள்ளன. இவை பண்டமாற்றின் மூலம் அணிகலன்களாக மாற்றிய போதும் மூலப்பொருள் சேகரிக்கும் மலைவாள் மக்களும் காட்டுவாழ் மக்களும் எவ்வித தொழில்நுட்ப அறிவும் கொண்டிருக்கவில்லை எனலாம்.


இடப்பெயர்வும் நுகர்வும்

சங்க இலக்கியத்தில் இம்மணிகளைத் திருமணி எனப் பதிற்றுப்பத்து (6: 8, 19: 20)குறிப்பிடுகிறது. சங்ககாலத்தில் குயினர் என்பவர்கள் மணிகளைத் துளையிடுபவர்களாகவும், தையற்காரர்களாகவும், மணிகளைப் பதிக்கும் தொழில் புரிந்தோராகவும் காணப்படுகின்றனர். மணிகளின் மூலப்பொருள்களை மலைகளுக்கு அடியில் இருந்து எடுத்த மக்கள் அவற்றைச் சிறுசிறு கட்டிகளாக உடைத்துத் தம் தொழில்நுட்பத்திறனால் அணிகலன்களாக மாற்றியுள்ளனர். இதற்கு பழந்தமிழரிடையே நடைபெற்ற உள்நாட்டு நுகர்வும், அயல்நாட்டு வாணிபமும் பெறும் சான்றாகும். இவற்றை மெய்ப்பிக்கும் வகையில் பட்டினப்பாலை வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பெற்ற மணிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும் மதுரை நகரில் ஒன்பது வகையான மணிகளும், மணிகளைத் துளையிடுவோர் கடைத்தெருவும் மற்றும் பல பொருட்கள் விற்பனை செய்யும் தெருவும், ஒரே இடத்தில் அமைந்திருந்தது. அயல்நாட்டுப் பொருள்களுக்குப் பல்வேறு மணிகளும், பொன்னும், முத்தும், பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்ட செய்தியை,

“மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் 
பல்வேறு திருமணி முத்தமொடுபொன் கொண்டு 
சிறந்த தேயத்துப் பண்ணியம் பகர்தரும்” (மதுரை. 504-506) 

என்று பாடலடிகள் கூறுகின்றன. அவ்வாறே பல்வேறு தொழில்கள் புரிகின்ற வணிகர்கள் அனைவரும் ஒரே குடியிருப்புக்களில் வாழ்ந்தனர் என சிலம்பு (14: 126-167) ஆம் பாடல் அறுபத்து நான்கு கலைகளில் வல்லவர்களான மகளிர் பலர் வாழும் வீதியும் மதுரையில் இருந்தது என்று குறிப்பிடுகிறது. பின் பன்னிரண்டு குற்றங்களும் இன்றி, நுண்ணிய வேலைப்பாட்டுடன் நால்வகை நிறமும் ஒளியும் பொருந்திய வைரமணி வகைகள் விற்கும் வீதியும் மதுரை நகரில் இருந்தன, பதுமை நிறைந்த மாணிக்க மணிகள், பொன்னிறமான புட்பராக மணிகளும், நீலமணிகளும், மஞ்சளும் சிவப்பு கலந்த கோமேதக மணிகளும், ஒன்பது வகைப்பட்டப் பிறப்பும் ஐந்து வகை அழகினையும் சடையமணிகள் விற்கும் வீதிகளும் பல இருந்துள்ளன. எனின் இவை மணிகள் தொழில் செய்வோர் ஓர் இடத்திலேயே நிலையான குடியிருப்பினை ஏற்படுத்தியமையை அறியமுடிகிறது. மேலும் பாகிஸ்தானில் கிடைக்கும் சால்சிடோனி, கார்னீலியன், ஆகேட் போன்ற அரியவகை மணிகள், அணிகலன்கள் கிடைத்துள்ளன. பண்டமாற்று முறையில் இந்த அணிகலன்கள் இங்கு வந்துள்ளன என்பர் அமர்நாத் மற்றும் ராமகிருஷ்ணன். (ஆவணம் இதழ். 8 பக்கம். 80.). மற்றொரு சான்றாக, முசிறித் துறைமுகத்தில் கிடைக்கின்ற கண்ணாடி மணிகளும் பொருந்தலில் கிடைக்கின்ற கண்ணாடி மணிகளும் ஒன்றாக இருக்கின்றன என்கிறார் இராஜன். (தொல்லியல் நோக்கில் சங்ககாலம். பக்கம். 20). அவ்வாறே மணிகளின் ஒருவகையான கார்னீலியன் மணிகளின் மூலப்பொருள்கள் குஜராத் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. எனினும், காங்கேயம், மணிக்கொல்லை, பாசிக் கொல்லை போன்ற பகுதிகளில் இவை விளைகின்றன. இதற்கான சான்றாக அரச்சலூர் கல்வெட்டில் மலைய் வண்ணக்கன் மணிய் வண்ணக்கன் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றுள் மலைய் வண்ணக்கள் என்பதை மகாதேவன் மலை சார்ந்த குடியினைச் சார்ந்தவன் என்று கருதுகின்றார். மணிய் வண்ணக்கன்என்பதை மணிகளைப் பரிசோதிக்கும் தொழிலை மேற்கொண்டவன் என்பார் ஸ்ரீதர் (தமிழ்-பிராமி கல்வெட்டுகள். 616-617). எனவே இவற்றில் குறிப்பிடும் வண்ணக்கன் என்போர் மணிகள் குறித்த மரபுவழித் தொழிலாளர்களாக இருக்கலாம். மேலும், அரச்சலூர்க் கல்வெட்டில் உள்ள மலைய் வண்ணக்கன் என்போர். குறிஞ்சி நிலமான மலைப்பகுதியில் மணிகளின் மூலப்பொருட்களை கண்டறிந்த குறவர்களாக இருக்கலாம். இது குறித்து ஏராளமான சங்க இலக்கியப் பாடல்கள் காணப்படுகின்றன.


வண்ணக்கன்

சங்க இலக்கியப் பாடல்களில் பல புலவர்களின் பெயரில் வண்ணக்கன் என்னும் சொல் காணப்படுகிறது வண்ணக்கன் (அகம். 365, குறு. 81, 159, 278, 314, 366: நற். 299: புறம். 198)

1. புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் (நற். 294) 

2. வண்ணக்கன் சொருமருங்குமரனார் (நற். 287)

3. வண்ணக்கன் பேயன் (பெருங்கதை) 

4. விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்(நற். 298)

5. வடமவண்ணக்கன் ட்தாமோதரனார் (குறு. 85: புறம்.172)

6. வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்

7. வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் (புறம் 125: அகம் 305:372)

8. வடமவண்ணக்கன் வேரி சாத்தனார் (குறு. 278)

9. வடமவண்ணக்கன் பெரிய சாத்தனார் (புறம். 98) 

(தமிழ்லேக்சிகன். பக்கம். 734)

வண்ணக்கன் என்ற சொல்லுக்கு மணிக்கல் வெட்டுபவர், மணி செதுக்குபவர், மணிக்கல் மெருகு கொடுப்பவர் என்றும் கல்லின் மீது செதுக்கப்பட்ட எழுத்துக்களைப் பொறிப்பதற்குரியவர், கல்வெட்டுக்குரியவர் என்றும் அகராதி விளக்கங்கள் தரப்பட்டுள்ளன (தமிழ்ப்பேரகராதி பக்கம். 573). மேலும், வண்ணக்கன் என்போர் நாணய பரிசோதகர்கள், நோட்டக்காரர்கள் என்று நற்றிணையில் குற்பிடப்படுகின்றனர். நோட்டக்காரர்கள் பொதுவில் பொன், மணிகள், நாணயங்கள் ஆகியவற்றின் தகுதியறிந்து விலைமதிப்பீடு செய்யக் கூடியவர்கள். மேலும் இச்சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வடமவண்ணக்கன் தாமோதரனார், வடமவண்ணக்கன் போரி சாத்தனார் போன்றோர் வடநாட்டைச் சார்ந்தவர்களாவும் காணப்படுகின்றனர். இவர்களுள் பேரி சாத்தனார், பெருந்சாத்தனார். வேரி சாத்தனார், பெரிய சாத்தனார் ஆகிய பெயர்கள் ஒருவரையே குறிப்பிடுகின்றன. எனவே, இவர்கள் வட நாட்டில் இருந்து வந்த வணிகர்களாவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், இருந்திருக்கலாம். இதற்கான தொல்லியல் சான்று நாம் முன்னர் குறிப்பிட்டபடி குஜராத்தில் மூலப்பொருட்களை எடுத்து வந்து நம்நாட்டில் அதை அணிகலன்களாக மாற்றியமையே, பேரி சாத்தனார் பாடலொன்றில் வண்ணக்கன் என்பதன் பாடவேறுபாடாக வண்ணத்தன் என்கிற சொல் இடம் பெறுகிறது. மேலும் விற்றூற்று வண்ணக்கன், வண்ணக்கன் சொருமருங்குமரனார், புதுக்கயத்து வண்ணக்கன் போன்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் மற்றுமொரு பிரிவினராக வண்ணக்கன் கம்மார் காணப்படுகின்றனர். இவர்கள் வர்ணவேலை செய்வோர் எனத் தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சங்ககாலச் சமூகத்தில் தொழில்நுட்ப ரீதியான வேலைப்பிரிவினை மிகுந்திருந்தமைக்கான சான்றுகள் ஆகும். மேற்கண்ட இச்சான்றுகளே சங்ககாலத்தில் மணிகளின் உற்பத்திப் பெருக்கத்தினையும் அவை உள்நாட்டு நுகர்வின் வாயிலாக வளர்ச்சியடைந்தமையினையும் குறிக்கின்றன.


மணிகளின் தொழில்நுட்பம்

பழந்தமிழர்கள் மலை மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் கண்டறியப்பட்ட மணிகளின் மூலப்பொருள்களை சிறுசிறு கட்டிகளாகச் சுத்தியல் கொண்டு உடைத்தெடுத்து சிறு துணுக்குகளாகவும் அல்லது சில்லுகளாகவும் மாற்றுகின்றனர். அதிலிருந்து மிகச் சிறிய மணிகள் செய்யுமளவிற்கு கட்டிகளாகப் பிரித்தெடுக்கப்படுகின்றனர். இத்தகைய சில்லுகளில் பல அதன் ஒழுங்கற்ற வடிவம், கனம் அடிப்படையில் பயனற்றவையாக ஒதுக்கப்படுகின்றன. நேர்த்தியான சில்லுகளிலிருந்து மட்டுமே மணிகள் தேவையான வடிவ அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கரடுமுரடான மணிகள் சங்ககாலத்தில் ஒரு பானையில் இடப்பட்டு அப்பானையின் வாய் இதே வகைக் கல்லாலே இறுக மூடப்பட்டுச் சூட்டடுப்பில் வைக்கப்படுகிறது. பானையின் வாய் மணிகளின் மூலப்பொருளான கால்சிட்னி கல் மூலம் இறுக்கமாக மூடப்படுவதற்குக் காரணம், பானைக்குள் இருக்கும் சூடு பானையின் வாயிலுள்ள இடைவெளியினால் வெளிச் சென்றுவிடாமல் தடுத்து நிறுத்திப் பானையினுள் ஒரே சீரான வேற்று வண்ணம் கிடைக்க வழிவகுக்கிறது. சில நேரம் முதல் கட்டத்தில் உள்ள மணிகள் கொண்ட பல பானைகள் ஒரே நேரத்தில் இதுபோல வரிசையாக வைக்கப்பட்டு மந்தமான சூட்டில் வைக்கப்படுகின்றன. பொருந்தல் அகழாய்வில் பாசிகள் செய்யப் பயன்படும் உலைகள் காணப்படுகின்றன என்பர் இராஜன் (தொல்லியல் நோக்கில் சங்ககாலம். பக்கம். 59). இன்றையக் காலகட்டத்தில் சில்லுகளாக உடைத்தெடுக்கப்பட்ட மணிகளை வயிரத்தினாலான வட்ட வடிவமான குறடு போன்ற கருவியில் தேய்ப்பர் பின்னர் இரும்பினால் ஆன குச்சி போன்ற வடிவம் கொண்ட ஒரு கருவியின் துணைகொண்டு அதில் அரக்கினைத் தேய்ப்பர். அவ்வரக்கில் சில்லுகளாக உடைத்தெடுக்கப் பெற்ற மணிகளை வைத்து கல்லினால்ஆன அடுப்பில் வைத்து மெருகேற்றுவர். சில நேரங்களில் முற்றிலும் முடிவுபெறாத மணிகளும் இதேபோல வண்ண மாற்றத்திற்காக அடுப்பில் வைக்கப்படுகின்றன. மந்தமான சூட்டின் வாயிலாகவே வேற்று வண்ணம் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பர் காமாட்சி (சங்க காலம். தொல்பொருள் ஆய்வகம். பக்கம். 117). இவை மஞ்சள், இளஞ்சிவப்புப் போன்ற நிறங்களில் காணப்படுகின்றன. இத்தகைய கற்கள், கண்ணாடி மணிகள் பட்டணம் அகழாய்வில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. கண்ணாடி மணிகள் சிவப்பு, பச்சை, நீல நிறங்களில் வட்டம், அறுகோணம், இரு கூம்பு வடிவங்களில் காணப்படுகின்றன. இங்குக் கிடைத்த கல்மணிகள் கார்னீலியன், வரியுள்ள அகேட், பளிங்குக் கற்களால் செய்யப்பட்டவை என்கின்றனர் செல்வகுமார் மற்றும் ராஜன். (ஆவணம் இதழ். பக்கம். 113). இம்மணிகள் நன்றாகத் தேய்க்கப்பட்டு வழவழப்புக் கொடுப்பதற்குத் துளைகள் இடப்பட்டுள்ளன. மணிகளின் இரண்டு பக்கங்களிலிருந்தும் துளைகள் இடப்பட்டிருக்கின்றன. இதனால் சில மணிகளில் நேராகச் சந்திக்காமல் இரண்டு பக்கத் துளைகளும் வெவ்வேறு கோணத்தில் நிற்கும். இவ்வாறு மணிகளைச் சரியாகத் தெரிவு செய்வோர் வண்ணக்கன் குயினர், என்றும் அம்மணிகளுக்குத் துளையிடுவோரைத் திருமணிக்குயினர், என்றும், அரக்கு குறுந்தம் கொண்டு இறுதியில் மணிகளுக்கு மெருகேற்றும் தொழிலைச் செய்வோர், சிறுகாரோடர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

குயினர்

சங்ககாலத்தில் குயினர், என்பவர்கள் மணிகளைத் துளையிடுபவர்களாகவும், தையற்காரர்களாகவும், மணிகளைப் பதிக்கும் தொழில் புரிந்தோராகவும் காணப்படுகின்றனர். இவர்கள் குயிற்றுநர் என்றும் சங்க இலக்கியத்தில் அழைக்கப்படுகின்றனர்.


மணிகளின் வடிவங்கள்

தமிழகத்தில் ஏராளமான மணிகளும், சூதுபவளக் கற்களும், அறுத்த நிலையிலும், துளையிடத் தயார் நிலையிலும், மெருகேற்றிய நிலையிலும் என பல்வேறு நிலைகளில் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. எனின் பல்வேறு விதமான மணிகள் தயாரிக்கும் தொழிற் கூடங்கள் சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டும். இதற்குக் கொடுமணல் அகழாய்வு சிறந்த சான்றாகக் காணப்படுகின்றன. கொடுமணலில் கிடைத்துள்ள மணிகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை;

1. வட்ட வடிவம் 

2. பீப்பாய் வடிவம் 

3. இருகூம்பு வடிவம் 

4. கோள வடிவம் 

இவ்வகை மணிகளில் மிகுதியானவை வெள்ளைநிற அலங்காரக் கோடுகளைக் கொண்டுள்ளன. வட்ட வடிவமான முதல்வகை மணிகள் பொதுவாக 8 மி.மீ. சுற்றளவு கொண்டவையாகவும், சிறிய மணிகள் 5 மி.மீ. சுற்றளவும், பெரிய மணிகள் 12 மி.மீ. சுற்றளவும் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இம்மணிகளின் தடிமன் 2.3 மி.மீ. அளவுடையனவாக உள்ளன. இவ்வகை மணிகள் இருபுற விளிம்புகளிலும் எளிமையான, வெள்ளை நிற அலங்காரக் கோடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் கல்லறை ஒன்றில் கிடைக்கப் பெற்ற மணிகளின் மேல்பரப்பில் வெள்ளை நிறத்தில் பலவகையான வடிவங்கள், அதாவது சிலுவை, வட்டத்தினுள் சிலுவை, சதுரத்திற்குள் சதுரம், வட்டமான புள்ளிகளுக்கு நடுவில் இரு செங்குத்துக் கோடுகள், புள்ளிகள் கொண்ட வட்டத்தின் நடுவில் ஒரு புள்ளி, விளிம்பிலுள்ள வட்டமான புள்ளிகளுக்கு நடுவில் ஒரு புள்ளி, விளிம்பிலுள்ள வட்டமான புள்ளிகளுக்கு நடுவில் இரு படுக்கைக் கோடுகள் மற்றும் சாய்சதுர வடிவம் போன்றவை காணப்படுகின்றன. பீப்பாய் வடிவம் கொண்ட மணிகள் அலங்காரக் கோடுகள் அற்றதாக உள்ளன. இரு கூம்பு வடிவமுடைய மணிகள் வெள்ளைநிறக் கோடுகளால் வரையப்பட்ட ஏதாவது ஒரு அலங்கார வடிவத்தைக் கொண்டுள்ளன. சில மணிகள் குறுக்குமறுக்குக் கோடுகளைப் பெற்றிருக்க, சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான மணிகள் அலையலையான மூன்று கோடுகளை ஓரங்களிலும் நடுவிலும் கொண்டு காணப்படுகின்றன. சில மணிகள் ஒரே மாதிரியான மூன்று சம கோடுகளைக் கொண்டதாக உள்ளன. ஒரு மணியில் மட்டும் இரண்டு சமகோடுகளுக்கு நடுவில் ஓர் அலைகோடு காணப்படுகிறது. நான்காம் வகை மணிகளில் வெள்ளைநிறக் கோடுகள் காணப்படவில்லை என்பார் இராஜன்(தொல்லியல் நோக்கில் சங்ககாலம். பக்கம். 20). இவை அணைத்தும் பண்டைய தமிழர்கள் மூலப்பொருட்களை அணிகலன்களாக மாற்றும் போது ஏற்படுகின்ற கழிவின் வடிவங்களை காட்சிப்படுத்துகின்றன. ஏனெனில் அனைத்து விதமான கற்களையும் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்ற இயலாது. இன்றும் கரூர், காங்கேயம், கொடுமணல், ஊஞ்சலூர் போன்ற பகுதிகளில் பல்வேறுவித வடிவங்களைக் கொண்ட மணிகற்கள் காணப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கார்னீலியன் (சூதுபவளம்) கல்மணிகள் பல வடிவங்களில் நிறையக் கிடைத்துள்ளன. ஆனால் இதுவரை உருவப் பொறிப்புடன் கிடைக்கவில்லை. அண்மையில் ஒரு வட்டமான கார்னீலியன் கல்மணி அமராவதி ஆற்றுப்படுகையில் கிடைத்துள்ளது. எடை 500 மி.கிராம். வட்டவடிவின் நடுவே அழகான மீன் சின்னம் குழிவாக, முத்திரை முறையில் காணப்படுகிறது. மீனின் இரண்டு பக்கங்களிலும் ஒரு பிறை உள்ளது. இந்தக் கல்மணியில் துளை எதுவும் இல்லை. இந்தக் கல்மணி சங்ககால மக்கள் பயன்படுத்திய மோதிரத்தில் இருந்துதான் விழுந்திருக்க வேண்டும் என்பார் ஆறுமுக சீதாராமன். (தமிழகத் தொல்லியல் சான்றுகள். தொகுதி- 5 பக்கம். 6)

 


__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

மணிகளினாலான பொருட்கள்

இவ்வித மணிகளைச் சங்ககால மக்கள் உண்கலன்களில் பதித்துள்ளனர். இதனை மணிசெய் மண்டை (புறம். 105: 5) எனும் பாடலடிகள் குறிப்பிடுகின்றன. மேலும் தோலினாலான ஆடைகளிலும் மணிகளை வைத்துத் தைத்து அழகு செய்துள்ளனர். பின்னர் பொன்னால் ஆன அணிகலன்களிலும் காதணி, கழுத்தணி, விரலணி எனப் பலவகைகளில் மணிகளை இணைத்துத் தொழில்களை மேம்படுத்தினர். இவை மட்டுமல்லாது மணிகள் நாணயங்களாகவும், இரும்பு, செம்பு போன்ற உலோகங்களுடனும் இணைத்துப் புலங்கு பொருட்களாகவும், ஆடம்பரப் பொருட்களாகவும் செய்யப்பட்டன. எனவே இவ்வித மணிகளின் மூலப்பொருட்களானது மணிகள் செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது, இரும்பு, தோல், பொன், செம்பு, கண்ணாடி போன்ற பொருட்கள் செய்வோருக்கும் பயன்பட்டுள்ளன. அரிக்க மேட்டில் மணிகள் செய்யும் தொழிற்கூடங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இப்பகுதியில் சிறுசிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு மெருகேற்றி மணியாக்கியமையினையும், சங்கு அணிகலன்கள் செய்தமையினையும். சங்ககால நாணயங்கள் அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள் கண்டறியப்பட்டுள்ளன.

மணிகளின் வகைகள்

அரிக்க மேட்டுப்பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதால், பண்டையக் காலத்தில் மணிகளை உருக்கிக் காய்ச்சித் துளையிட்டுத் தூய்மை செய்யும் தொழிற் கூடங்கள் இப்பகுதியில் உருவாகியுள்ளன. இப்பகுதியில் மேலும் நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்புமணி மிகுதியாகக் கிடைத்துள்ளன. தங்கக் காசுகளும், செப்புக்காசுகளும் இப்பகுதியில் இருந்துதான் அதிக அளவில் கிடைத்துள்ளன. நீலகிரியிலிருந்து இளஞ்சிவப்பு, நீலக்கல், அழகன் குளத்திற்குக் கொண்டு வரப்பெற்று அழகு மணிக்கற்களாகப் பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பெற்றுள்ளன. மேலும் அப்பகுதியில் கார்னீலியன் மணிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பூனைக்கண் மணிகள், மணி உருக்கும் சட்டங்கள், கோமேதகக்கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், நீலக்கல், வைரம், மாணிக்கம், சிவப்புக்கல் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.


கடல்நீலப் பச்சை

கொங்கு நாட்டில் காங்கயம் பகுதியில் இன்றும் கடல்நீலப் பச்சைக்கல் வெட்டியெடுக்கப்படுகின்றது. சங்க காலத்தில் இக்கல் அதிக அளவில் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன. தட்சசீல அகழாய்வில் கொங்கு நாட்டு கடல்நீலப் பச்சைக்கல் கண்டறியப்பட்டுள்ளன. இக்கற்கள் இடைக்காலத்திலும் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன. திருமுருகன் பூண்டியில் உள்ள கல்வெட்டு ஒன்றில் மீன்படுகனையும், தேன்படுவரையும் மான்படுகாடும் பொன்படு குட்டமும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழகத்தில் ஓர் ஊரைத் தானமாகத் தரும் போது மீன்படுகனையும், தேன்படுவரையும், மான்படுகாடும் என்று வாய்ப்பாடாக அமைந்த வாசகம் காணப்படும். ஆனால் திருமுருகன் பூண்டிக் கல்வெட்டில் பொன்படு குடம் என்று சேர்த்து கூறப்பெறுகின்றது. அவ்வாசகம் கடல்நிறப் பச்சைக்கல் வெட்டியெடுக்கப் பெற்ற சுரங்கத்தையே குறிக்கிறது. தானமாக அளிக்கப்பெற்ற ஊரும் காங்கயம் பகுதியைச் சேர்ந்த ஊராகும். இன்று காங்கயம் பகுதியில் பச்சைச் சந்திர காந்தக்கல் என்று அழைக்கப்படுகிறது. (பாபு, நேர்ப்பேச்சு) மேலும் கொங்கு நாட்டு அகழாய்வில் கடல்நீலப் பச்சைக்கல் தோண்டியெடுக்கப்பெற்றுள்ளது. ஆனைமலை, கொடுமணல், கரூர், திருகாம்புலியூர், அழகரை முதலிய ஊர்களில் அக்கல் கண்டெடுக்கப் பெற்றது. கடல் நீலப்பச்சைக்கல் முசிறி தொண்டி வழியாக மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன.

கோமேதகம்

சங்ககாலத்தில் புன்னாடு என்னும் ஊரில் கோமேதகக் கற்கள் கிடைத்துள்ளன. கோமேதகம் நீலநிறமுடைய மணிக்கற்களாகக் காணப்படுகிறது. இவை சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக பிளினி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கிடைத்த கற்களில் சிறந்தவை வைடூரியமும், கோமேதக நீலநிறமுடைய மணிக்கற்களுமே ஆகும். ஆந்திரத்தில் பட்டிப்பு ரோலு தூபியில் கோமேதக அணிகள் அகப்பட்டுள்ளன என்பர் சாமி (சங்க நூல்களில் மணிகள். பக்கம். 10). இலக்கியத்தில் மணிகள் என்று சிறப்பாக அழைக்கப்படுபவற்றுள் கோமேதகமும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் விளைந்த மணிக்கற்களைத் தவிரத் தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்குப் பலவகை மணிக்கற்கள் கொண்டுவரப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தொண்டி, முசிறி ஆகிய துறைமுகங்களிலிருந்து பலவகை மணிகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டதாக பெரிப்புளுஸ நூல் கூறுகிறது. இந்த மணிகளில் பல தமிழ்நாட்டில் கிடைக்காதவையாகும். இவை பெரும்பாலும் ஈழநாட்டிலிருந்து கொணரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டவையாகக் கருதலாம் என்கிறார் சாமி (சங்க நூல்களில் மணிகள். பக்கம். 10). கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாடியூர் என்ற ஊரில் உயர்ந்த மணிக்கற்கள் கிடைத்ததை உரோமர் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டுள்ளனர். இங்கு ஒருவகைக் கோமேதகக் கல் கிடைத்தது என்று தெரிகின்றது. பிளினி என்ற மேல்நாட்டு ஆசிரியர், கோமேதகம் இந்தியாவில் கிடைப்பதாக எழுதியுள்ளார்.

சிவப்புக்கல்

மணிக்கற்களில் சிவப்புக்கல் வகை உயர்ந்த விலையைக் கொண்டது. அக்கல்லும் கொங்கு நாட்டில் பெருமளவில் கிடைத்துள்ளது. அக்கற்களை மணிகளைச் செய்து விற்றனர். திருக்காம்புலியூர், அழகரை, கரூர், உறையூர், அழகன்குளம், அரிக்கமேடு, கொடுமணல் முதலிய ஊர்களில் சிவப்புக்கல் மணிகள் கிடைத்துள்ளன. இம்மணிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஊதாநிறக்கல்

கொங்குநாட்டிலும், தமிழகத்திலும் ஊதாநிறக்கல் அதிகளவில் கிடைத்துள்ளன. அக்கற்கள் சிந்துவெளி நகரங்களிலிருந்து மெசபடோமியோ முதலிய மேற்காசிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப் பெற்றுள்ளன. சிந்துவெளி வேளிர்கள் ஊதாநிறக் கல்லைப் பொருளியல் வளம் மிக்கதாக் கருதினர். தமிழ்நாட்டில் அக்கற்கள் கொடுமணலில் உற்பத்தி சிறிதளவே கிடைத்துள்ளன. உறையூர், கரூர் முதலிய இடங்களிலும் ஊதாநிறக்கல் கிடைத்துள்ளது (கொடுமணல் அகழாய்வு. பக்கம். 96)இன்றும் காங்கேயம் பகுதிகளில் தொழிற்பட்டறைகளில் இவை காணப்படுகின்றன.

மாணிக்கம்

மாணிக்கம் சுரங்கங்களில் இருந்தும் மலைப்பகுதிகளில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும் மணி வகைகளில் ஒன்றாகும். மாணிக்கம் தமிழ்நாட்டில் மிக அரிதாகவே கிடைப்பதாக மேலைநாட்டு ஆசிரியர்கள் கூறுவர். எனினும் சங்ககாலத்தில் மாணிக்கத்தின் பயன்பாடு இருந்துள்ளது. சங்கில் மாணிக்கக்கல் பொருந்தியிருந்ததை, 

“ஞாயிற் றன்ன வாய்மணி மிடைந்த
மதிஉற ழார மாரிபிற் புரள” (புறம். 362: 1)

எனப் பாடல் குறிக்கிறது. மாணிக்கத்தை அரசர்கள் விரும்பி முடியிலும் அணிகளிலும் அணிந்து வந்துள்ளனர் (அகம். 32). சங்ககாலத்தில் மாணிக்கம் குருந்தம் என்று குறிப்பிடப்படுகிறது. கொல்லிமலையில் மாணிக்கம் கிடைத்ததாகக் கூறுவர். மேலைநாட்டு ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அரிதாகச் சேலம் பகுதியில் மாணிக்கம் கிடைப்பதாகக் கூறுவர் (சங்க நூல்களில் மணிகள். பக்கம். 33). மாணிக்கக் கல்லின் (சிகப்பு) முகப்பில் இடது பக்கம் நோக்கி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மன்னன் உருவம் காணப்படுகிறது. மன்னாரின் தலைமுடி விரிந்த கோலத்தில் உள்ளது. கிடைத்த இடம் கரூர், குத்துவிளக்கு ஒன்று உள்ளது. மன்னரின் பின்னால் மரம் ஒன்று உள்ளது. செங்கோல் காணப்படுகிறது. மன்னரின் இருக்கையின் முன்னால் மாணிக்கக் கல்லில் முகத்தையும், தலையையும் பார்த்தால் இராஜராஜன் காசில் உள்ள தலையைப் போன்று காணப்படுகிறது (தமிழகத் தொல்லியல் சான்றுகள். தொகுதி. 5. பக்க்ம். 5).


நீலக்கல்

பண்டைத் தமிழகத்தில் சேலத்திலும், மலையாளத்திலும் காவிரிப் படுகையிலும் நீலக்கற்கள் கிடைத்துள்ளன. ஈழநாட்டில் பெருமளவு கிடைத்த உயர்ந்த நீலமணிகள் அக்காலத்தில் தமிழ்நாட்டுத் துறைமுகங்களான முசிறி, தொண்டி வழியாகவே மேல்நாடுகளுக்கு ஏற்றுமதியானதாகப் பெரிப்புளுஸ் நூலில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. தாலமி, காஸ்மோஸ் ஆகிய ஆசிரியர்களும் அக்காலத்தில் ஈழத்திலேயே சிறந்த நீலமணி நிறையக் கிடைத்ததைக் குறிப்பிட்டுள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளான பர்மா, சியாம் ஆகிய நாடுகளில் கிடைத்த நீலமணிகளும் தமிழ்நாட்டு மேற்கத்தியத் துறைமுகங்கள் வழியாகவே கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதைக் குறித்து கிரேக்க, உரோம ஆசிரியர்கள் எழுதியுள்ளனார். நீலக்கற்களை மேல்நாட்டார் நகைகளுக்குப் பயன்படுத்தினர். உரோம அரசர்கள் நீலமணியை மோதிரங்களில் அணிந்து வந்தனர் (சங்க நூல்களில் மணிகள். பக்கம். 27). இந்நீலக்கல் ஏற்றுமதிக்காகவே பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டது. கொங்கு நாட்டுக் கல்மணிகள் மிகவும் புகழ்பெற்று விளங்கின. கொங்கு நாட்டில் கொடுமணல் என்னும் பேரூர் கல்மணிகள் உற்பத்தி செய்யும் பெரும் களமாக விளங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மணிகள் அயல்நாட்டினரால் பெரிதும் போற்றப்பட்டு அணியப்பெற்றன. இவ்வித அணிகலன்கள் கொடுமணலில் நடந்த அகழாய்வின் போது ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீலமணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக்கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக்கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. சேரநாட்டைச் சார்ந்த இந்தத் தொழில் நகரம் சோழ நாட்டு காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்பு கொண்டிருந்தது.

பளிங்கு

சங்க இலக்கியத்தில் பளிங்கைப் பற்றிப் பல செய்திகள் காணப்படுகின்றன. பளிங்கு பழங்காலத்தில் காவிரி ஆறு பாயும் பள்ளத்தாக்கில் கிடைத்ததாகக் கூறியுள்ளனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பளிங்கு கிடைத்தமையை,

“களிறுபொரக் கரைந்த கயவாங்க் குண்டுகரை
ஒளிறுவான் பளிங்கொடு செம்பொன் மின்னுங்
கருங்கற் கான்யாற்று அருஞ்சுழி வழங்குங்” (நற் 292: 5-7) 

என்பதாகப் பாடல்கள் குறிக்கின்றது. பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி (குறிஞ்சி. 57-58, மலை. 515-518) லும் இச்செய்தி வருகிறது. பளிங்கைக் காசாகப் பயன்படுத்திய செய்தியும் உள்ளது. உருண்டையான பளிங்குக் கற்கள் காசாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இக்காசுகளைத் துளையிட்டு நூலில் கோர்த்து வைத்துள்ளனர். இவ்வாறு நூலில் கோர்த்த பளிங்குக் காசுகள் நூல்பந்து உதிர்ந்த போது கோடைக்காலத்தில் உதிர்ந்து குவிந்த நெல்லின் பசுங்காய் போல இருந்தன. பளிங்கு ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் பாறைகளிலும் கிடைத்துள்ளது. இதனை,

“கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்
வான் பளிங்கு விரைஇய செம் பரல் முரம்பின்” (பதிற்.66:17-18) 

“களிறுபொரக் கரைந்த கயவாங் குண்டு கரை
ஒளிறுவான் பளிங்கொடு செம்பொன் மின்னும்
கருங்கற் கான்யாற் றருஞ்சுழி வழங்கும்” (அகம். 5) 

என்று பாடல்கள் குறித்துள்ளன. தமிழ்ப்பல்கலை வளாகத்தில் அகழாய்வு செய்தபோது அகழாய்வுக்குழி 10-4 இல் பளிங்குக்கல்லால் ஆன கற்கருவிகளும், செதில்களும் காணப்படுகின்றன.

படிகக்கல்

படிக்கல் கொங்கு நாட்டில் பெருமளவில் கிடைத்துள்ளது. கொடுமணலில் கார்னீலியன் கல்லுக்கு அடுத்தபடி எண்ணிக்கையில் அதிகமாகக் கிடைத்தது படிக்கல்லே ஆகும். இன்றும் இவை காங்கேயம், கரூர் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. இதனை வெங்கச்சங்கல் என்று பாபு (கல்பட்டறை) குறிப்பிடுகிறார். இவை சங்க காலத்தில் இவை கரூர், ஆனைமலை, அழகரை, திருக்காம்புலியூர் முதலிய ஊர்களில் கண்டறியப்பட்டுள்ளன.

அயல்நாட்டு வாணிகம்

இலக்கியத்தில் மணிகள் என்று சிறப்பாக அழைக்கப்படுபனவற்றுள் கோமேதகமும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் விளைந்த மணிக்கற்களைத் தவிரத் தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்குப் பலவகை மணிக்கற்கள் கொண்டுவரப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தொண்டி, முசிறி ஆகிய துறைமுகங்களிலிருந்து பலவகை மணிகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டதாக பெரிப்புளுஸின் நூல் கூறுகிறது. இந்த மணிகளில் பல தமிழ்நாட்டில் கிடைக்காதவையாகும். இவை பெரும்பாலும் ஈழநாட்டிலிருந்து கொணரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டவையாகக் கருதலாம் என்கிறார் (சங்க நூல்களில் மணிகள். பக்கம். 10). அவ்வகையில் வடநாட்டில் இருந்து வந்த மணிகள் குறித்த செய்திகளை பட்டினப்பாலை குறிக்கிறது. மேலும், குஜராத் மற்றும் மகாராட்டிர மாநிலத்திலே மட்டும் கிடைக்கும் சூதுபவளங்கள் குறித்து தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில்தான் நிறைய மணிகள் கிடைத்தன என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாடியூர் என்ற ஊரில் உயர்ந்த மணிக்கற்கள் கிடைத்ததை ரோமர் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டுள்ளனர். இங்கு ஒருவகைக் கோமேதகக் கல் கிடைத்தது என்று தெரிகின்றது. பிளினி என்ற மேல்நாட்டு ஆசிரியர், கோமேதகம் இந்தியாவில் கிடைப்பதாக எழுதியுள்ளார். இந்த நீலநிறக் கற்கள் சுரங்கத்தில் இருந்து எடுத்ததாகப் பிளினி கூறியுள்ளார் என்பர் (சங்க நூல்களில் மணிகள். பக்கம். 11). கோமேதகம் இந்தியாவில் கிடைத்துள்ளது எனலாம். இங்கிருந்தே ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. எனினும் இதற்கான இலக்கியச் சான்றுகள் இல்லை. அவ்வாறே அயல்நாடுகளிலிருந்தும் சூதுபவளத்தினாலான மணிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூதுபவளத்தினாலான மணிகள் கிடைத்துள்ளன. (தமிழ் விக்கிப்பீடியா: கீழடி அகழ்வாய்வு) இவை மணிகள் உற்பத்தியில் பழங்காலத்தமிழரின் பொருளாதாரநிலை மேம்பட்டமையையும், பண்டைய துறைமுகங்களுகம், வணிக மையங்களும் உருவாகிவிட்டமையை எடுத்துரைக்கின்றன.


தற்காலத்தில் கல்மணிகள்

இன்றைய காலகட்டத்தின் நிலாக் கல், பளிங்குக்கல், அமிதிஸ்ட், கிரிஸ்டல், அக்குவாமெரின், (பச்சைகல்) சூரிய காந்தக்கல், பிளாக் ஸ்டார், அவிஞ்ரின், ஐயோலிட், காக்காநிலம், கோகோலிட், நீலக்கல், ரூபி, (மாணிக்கம்) கார்லெட், செவ்வந்திக்கல், வெள்ளைச் சந்திரகாந்தக்கல், ஆரூர் என பலவகைகளிலும் வண்ணங்களிலும் காணப்படுகின்றன.

இவற்றுள் ஆரூர் கருப்புக்கல் ஆகிய இரண்டும் சீனாவிற்கு மூலப்பொருட்களாக கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அணிகலன்களாகப் பெறப்படுகின்றன. லேப்ரோடெட் வெளிநாட்டு இறக்குமதியாக உள்ளன. இவ்வாறு மணிகள் சங்காலத்தைப் போலவே இன்றும் உள்நாடு மற்றும் அயல்நாட்டு வாணிகத்தில் புகழ்பெற்று காணப்படுகின்றன. மேலும் இன்று தமிழகத்தில் மணிகள் செய்யும் தொழிற்கூடங்களின் எண்ணிக்கை 50 ஆகும். இவற்றின் மதிப்பானது தற்காலத்தில் குறையத் துவங்கியுள்ளது.

முடிவுரை

சங்க காலத்தில் பல்வேறுவிதமான உற்பத்தி முறைகளுக்குப் பின் கைத்தொழில்கள் நன்கு ஏற்றம் பெற்றிருந்தன. அவற்றுள் மணிகள் தொழிலுக்கும் மணிகளினால் தயாரிக்கப்படும் அணிகலன்களுக்கும், பிற பொருட்களுக்கும் நல்ல தேவைகள் இருந்தன. இவற்றில் முக்கிய காரணம் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிபத்தில் சங்ககால மக்கள் அதிக அளவில் லாபத்தை ஈடுபட்டமையே ஆகும். இவற்றிற்காக சான்றுகளாக, சங்ககாலத் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளும் அதனைச் சுற்றி வணிகக் குடியிருப்புப் பகுதிகளும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. இவ்விதம் பல்வேறுவிதமான பொருட்களுடன் (பொன்-மணி, செம்பு-மணி, தோல்-மணி, சுடுமண்-மணி, இரும்பு-மணி) உற்பத்தி செய்யப்படும் மணிகளின் ஒவ்வொரு பொருட்களும் அதற்கே உரிய சிறப்பினைப் பெறுகின்றன. உதாரணமாக கொடுமணல், பந்தர், காங்கேயம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மணிகளுக்கு மேலை நாடுகளில் ஏற்படும் தேவையே உபரிஉற்பத்தியின் துவக்கக் காலம் எனலாம். உள்நாடு மற்றும் அயல்நாடு வர்த்தகம் சங்ககாலத்தில் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தமையைக் கிரேக்க, ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தந்து வலுவூட்டுகின்றன.

துணை நூல்கள் / இணையதளங்கள் பட்டியல்

1. அளகுடி, தமிழகத் தொல்லியல் சான்றுகள். தொகுதி- IV, ஆறுமுக சீதாராமன், தனலெட்சுமி பதிப்பகம், தஞ்சாவூர். (2008)

2. ஆவணம். (தொல்லியல்) இதழகள் 1 -27, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (2017)

3. சங்க காலம். 2001. தொல்பொருள் ஆய்வகம், காமாட்சி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (2017).

4. கீழடி அகழாய்வு. (தமிழ் விக்கிப்பீடியா, 2014: இணையம்) . 

5. எல்.பி., சங்க நூல்களில் மணிகள், சாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. (1980)

6. தமிழப் பல்கலை வளாகத்தில் ஆய்வு. (2008: இணைய தளம்). (www.tamiluniversity.org) 

7. கொடுமணல் அகழாய்வு சிறு வெளியீடு, துளசிராமன், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (1988)

8. காங்கேயம்: (கள ஆய்வு) கல்பட்டறை, பாபு. வி, கள ஆய்வு மேற்கொண்டபோது. (2017)

9. தொல்லியல் நேக்கில் சங்ககாலம், ராஜன். கா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. (2010)

*****

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p186.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard