New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் ஊடல் உவகை முனைவர் நா. சுலோசனா


Guru

Status: Offline
Posts: 24769
Date:
திருக்குறளில் ஊடல் உவகை முனைவர் நா. சுலோசனா
Permalink  
 


திருக்குறளில் ஊடல் உவகை

முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர், தமிழ் மொழி (ம) மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113

lovingart.jpg

முன்னுரை

திருக்குறள் ஓர் ஒப்பற்ற உலகப் பொதுமறை என்பதைக் கடந்து திருக்குறள் ஓரு வாழ்வியல் இலக்கணமாகத் திகழ்கிறது. இலக்கண நூலான தொல்காப்பியம், வாழ்வியல் இலக்கியத்தையும், இலக்கிய நூலான திருக்குறள், வாழ்வியல் இலக்கணத்தையும் எடுத்துரைக்கும் உன்னதமான நூல்களாகும் என வ. சுப. மாணிக்கனார் தமிழ்க் காதல் நூலில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றறிவு, அரசியலறிவு, பொருளாதார அறிவு, மருத்துவ அறிவு, வானியல் அறிவு எனப் பல்துறை அறிவை உள்ளடக்கியது திருக்குறள். இத்தகைய அறிவு வளத்தைப் பெற்றிருந்தாலும் வாழ்வியலை எடுத்துரைக்கும் அல்லது ஒட்டுமொத்த வாழ்வியலுக்கும் அடிப்படையான அன்பை வலியுறுத்தும் விதமாகக் காதல் நுணுக்கத்தை ஆராய்ந்து அறிந்தவராகக் காமத்துப்பாலைப் படைத்திருப்பது வியப்புக்குரியது. மேடைப் பேச்சாளருக்குப் பெரிதும் துணையாக இருப்பது திருக்குறள் என்றால் அது மிகையாகாது. சொல்சிக்கனத்திற்குள் ஆழமான பொருளைப் பொதி்ந்து வைத்திருக்கிறது திருக்குறள். ஆகையால்தான் எக்காலத்திற்கும் எவ்வயதினருக்கும் பொருந்தும் விதமாகத் திருக்குறள் விளங்குகிறது.

அதிலும் காமத்துப்பாலில் புலவி, புலவின் நுணுக்கம், ஊடல் உவகை இம்மூன்று அதிகாரமும் எதோ திருவள்ளுவர் அனைத்தையும் கற்பனைத்திறத்துடன் படைத்திருந்தாலும் அதுதான் இனிய வாழ்க்கைக்கு முக்காலும் பொருந்தும் உண்மையாகும். இக்குறள்கள் யாவும் படிப்பவரை மீண்டும் மீண்டும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அன்பின் நுணுக்கத்தை ஆராய்ந்தவராகத் திருவள்ளுவர் திகழ்கிறார்.

ஊடலும் கூடலும் வாழ்வியலுக்கு அடிப்படை. அன்பின் மிகுதியைக் காட்டுவதுதான் ஊடலும் கூடலும். ஊடல் என்றால் பொய்க்கோபம் என்று பொருள். திணை இலக்கியங்களில் மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் ஆகும். பரத்தையரை நாடிச் சென்ற தலைவன், தலைவியின் நினைவு வரும்போது இல்லத்திற்கு வருகிறான். தலைவனின் இச்செயல் கண்டு தலைவி ஊடல் கொள்வதும் பின்பு தலைவன் மீது கொண்ட அன்பின் காரணமாக ஊடலைத் தணித்து கூடல் கொள்வதுமாக இருக்கின்றன மருதத்திணைப் பாடல்கள். பரத்தையரை நாடிச் செல்வது சங்க காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. அதை ஒழுக்கமாகக் கருதியதால் ’பரத்தையர் ஒழுக்கம்’ என்றனர். தலைவியையும் பரத்தையையும் ஒருசேர நிகராகப் பார்க்கும் நிலையில் தலைவனைப் புலவர்கள் படைத்திருக்கின்றனர். இருப்பினும் காலங்காலமாக இச்செயல் தொடர்ந்தாலும் இதை எதிர்த்துப் பேசா மடந்தையாகத்தான் பெண் இருந்திருக்கிறாள், இருக்கிறாள், இருந்து கொண்டிருக்கிறாள். இதுஒரு புறம் இருக்க, தலைவன் எந்தத் தவறையும் செய்யவி்ல்லை என்றாலும் அவன் மீது ஊடல் கொள்வது எதற்காக என்றால் தலைவன், தலைவியின் மீது அன்பு காட்டவேண்டும் என்பதற்காகவும், தலைவி தன்மீது வைத்திருக்கும் அன்பை அவ்வப்போது சோதிப்பதற்கான உத்தியாகவும் தலைவி ஊடல் கொள்கிறாள் என்பதை,

“இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கும் மாறு” (குறள்; 1321)

எனும் குறள் எடுத்துரைக்கிறது. கணவன் கொண்டுள்ள அன்பைப் பரிசோதிப்பதற்காக அவ்வப்போது ஊடல் கொள்வது பெண்களுக்கேயுரிய இயல்பாகும்.


ஊடலின் அளவு

காதலர்களிடையே அல்லது கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறு பிணக்கு ஊடலாகும். (lovers’ tiff) இல்லற வாழ்க்கையில் ஊடல் என்பது வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் சுவையாக்குகிறது. இருப்பினும் ஊடல் என்பது அளவோடு இருக்க வேண்டும். எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்த மருத்துவமாகும்.

“உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள் விடல்” (குறள்; 1302)

”துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று” (குறள்; 1306)

இல்லற வாழ்க்கையில் ஊடல் என்பது உப்பைப் போன்று அளவோடு இருக்க வேண்டும். எப்படி உணவின் சுவைக்கேற்ப அளவோடு உப்பு சேர்க்கப்படுகிறதோ அதைப்போல் இல்லற வாழ்க்கைக்கும் ஊடல் அளவோடு இருக்க வேண்டும். உப்பின் பயன் மிகுந்து விட்டால் உணவு எப்படிப் பயனில்லாமல் போகுமோ, அதைப்போல் ஊடலும் மிகுந்துவிட்டால் காதலும் பயனில்லாமல் போய்விடும். இது நன்கு கனிந்த பழமும் முற்றாத காயும் உண்பதற்கு பயனில்லாமல் போவதுபோல என்கிறார் வள்ளுவர். ஊடலின் அளவு அறிந்து காதலின் பயனைத் துய்க்கவேண்டும்.

“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்” (குறள்; 1330)

காதலுக்கு இன்பம் தருவதே ஊடல்தான். ஊடல் முடிந்தபின் கூடுவதில்தான் ஊடலின் இன்பம் இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர், இதைப் புரிந்து கொள்ளாததின் விளைவுதான் இன்று திருமணமான ஒரு சில திங்கள் அல்லது ஒரு சில ஆண்டுகளிலேயே கருத்து மோதல்கள் உருவாகின்றன. இதனால் குடும்ப நல நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்படுவதையும் பார்க்கமுடிகிறது. இல்லறப் பயன்பாட்டிற்கு எவ்வளவு பயனுள்ள குறளாக இருக்கிறது என்பதை வள்ளுவத்தைப் படித்துணரவேண்டும்.


ஊடலும் கூடலும்: (copulation) புணர்ச்சி

மனைவி ஊடல் கொள்ளும் போது அதை உணர்ந்த கணவன் எப்படி தன் அன்பை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்கு,

“அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்” (குறள்; 1303)

தம்முடன் ஊடல் கொண்டோரின் ஊடலைப் போக்கித் தழுவாமல் விட்டுவிடுவது துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பப்படுத்துவது போலாகும். கெஞ்சலும் கொஞ்சலும் அன்பால் தொடும் பரிசமும் புழுங்கிய பெண்ணுள்ளத்தை காலடியில் விழவைக்கும் மந்திரமாக உள்ளது. இது கிடைக்காத உள்ளம் என்பது,

”ஊடியவரை உண ராமை வாடிய
வள்ளி முதல் அரிந்தற்று” (குறள்; 1304)

ஊடல் கொண்டவரின் ஊடலைப் போக்காது விடுவது தண்ணீர் இல்லாமல் வாடியுள்ள பூங்கொடியை அடியோடு வெட்டுவது போன்றதாகும். எல்லா மனமும் அன்புக்கு ஏங்குகிறது. மனது அன்புக்குக் கட்டுப்படுவதும் அன்பின் வெளிப்பாடுதான் என்பதை எடுத்துரைக்கிறது. 

“கொஞ்சம் அருகிலமர்
தலை கோது
மூக்கில் உரசு
புன்னகை
நான் முத்தமிடுகிறேன்” (தி இந்து, பெண் இன்று, மார்ச்சு, 25, 2018)

உறவை வலுப்படுத்தும் பிணக்காக ஊடல் இருக்கிறது. ஊடலும் கூடலும் தான் புரிதலான இல்லற வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது. குடும்பத்தின் ஆரோக்கியமான போக்குக்கும் கணவன் - மனைவி உறவு பலப்படவும் ஆக்கபூர்வமான குடும்பச் சண்டைகள் தேவை. ஆண்டுக்கணக்கில் நீளும் உறவில் மனதுக்குள் ஆதங்கம் பலவும் சண்டையின்போது மட்டுமே தம்மை வெளிப்படுத்தும். கணவன் - மனைவி உறவைப் பண்படுத்தவும் சண்டையே களம் அமைத்துக் கொடுக்கும். அக்கறை, அன்பு, பாசம், புரிதல் எனப் பலவற்றையும் வளர்ப்பதற்குச் சண்டைக்குப் பிந்தைய சூழல்கள் உதவும்.


தும்மல் (sneeze)

ஒவ்வாமையினால் தும்மல் வருவதுண்டு. அதற்கும் ஆயிரம் கற்பிதங்கள் சொல்லி வைத்திருக்கின்றன தமிழ்ச்சமூகம். அதிலும் நமக்குப் பிடித்தவரை நினைக்கும் போது தும்மல் வரும் எனும் நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருகிறது. தலைவனுக்கு வரும் தும்மலினால் தலைவி, தலைவனை வினாக்களைக் கேட்டு படுத்தும் பாட்டை வள்ளுவர் ”புலவி நுணுக்கம்” எனும் அதிகாரத்தில் ஆராய்ந்துள்ளார். காதலனுடன் ஊடியிருக்கும்போது தும்மினால் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறாள். அடுத்த நிமிடமே யாரை நினைத்துத் தும்மினீர்கள் என்கிறாள். சரியென்று தும்மலை அடக்கினால் யார் மீது வைத்திருக்கும் அன்பு தெரிந்துவிடும் என்று தும்மலை அடக்கினீர்கள் என்று கேள்விகளால் தலைவனைத் தடுமாற வைக்கிறாள். யாரை விடவும் உன்மேல் அதிகமாக காதல் வைத்திருக்கின்றேன் என்றால் உடனே யாரைவிட என்று ஊடல் கொள்கிறாள்.

“உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத் தக்கனள்” (குறள்; 1316)

உன்னை நினைத்தேன் என்றான் தலைவன். உடனே என்னை மறந்ததால் தானே நினைத்தீர்கள் என்று ஊடல் கொள்கிறாள்.

“தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று” (குறள்; 1319)

தலைவியின் ஊடலைத் தணித்து கூடல் கொண்டு மகிழ்வித்தாலும் இப்படித்தான் பிற பெண்களையும் ஊடல் தணித்து மகிழ்ந்திருந்தீரோ எனத் தலைவனை வாட்டி வதைக்கும் தலைவியின் உள்ளத்தைப் பாங்காய் எடுத்துரைத்துள்ளார்.

“நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்” (குறள்; 1203)

தலைவனுக்குத் தும்மல் வரும்போதெல்லாம், தான் தலைவன் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால் ஊடல் கொள்கிறாள். எனக்குத் தும்மல் வருகிறது. ஆனால் அடங்குகிறது. என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினைக்காமல் இருக்கிறாரோ என வருந்துகிறாள். யார் ஒருவரிடத்தில் அதிகமாக அன்பு மிகுகிறதே அங்கு சந்தேகம் வலுக்கிறது. குறளில் வரும் சந்தேகத்திற்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் இந்தச் சந்தேகம் வந்து விட்டால் அது சந்தேகம் கொண்டோரின் உள்ளத்தில் கரையான் புற்றாக வளர்ந்து உள்ளத்தைச் சிதைத்து விடுகிறது. இதனால் இல்லறம் வெறுமையாவதையும் பார்க்கமுடிகிறது.


நிறையை நினைத்தல்

தலைவன் செய்யும் தவறுகளை நினைத்துத் தலைவி, அவன் மீது கோபம் கொள்கிறாள். தலைவன் மேலுள்ள கோபத்தின் காரணமாக அவனைக் கண்டதும் கேள்விகள் கேட்கத் துடிக்கும் மனதையும் படித்தவராகத் திருவள்ளுவர் திகழ்கிறார்.

”நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடிநிற்போம் எனல்” (குறள்; 1260) 

கோபத்தைக் காட்ட எண்ணும் தலைவியின் உள்ளமானது கொழுப்பை நெருப்பில் போட்டால் உருகுவது போல் தலைவன் மீது சண்டை போட வேண்டும் என்று நினைப்பது வீண் எனும் தலைவியின் உளப்பாங்கு பெண்களுக்கே உரிய குணமாகத் திகழ்கிறது. நம் மீது அன்பு கொண்டவர் செய்யும் தவறைக் கண்டு இரங்கும்போது அவர் செயத தவறைவிட தம் மீது கொண்ட அன்பின் காரணமாக அது ’இலை மேல் பட்ட பனித்துளி’ போல் காணாமல் போய்விடுகிறது. இதைத்தான் முன்னோர்கள் குறையைவிட நிறையைக் கண்டு வாழ பழகிக் கொள்ளவேண்டும் என்றார்கள். இது அனைத்து நிலைக்கும் பொருந்தும்.

“கண் உள்ளார் காதலவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (குறள்; 1127)

கண்ணுக்குள்ளே உன்னை வைப்பேன் கண்ணம்மா! எனத் தலைவன் தன் கண்ணுக்குள் தலைவியைப் பாதுகாப்பதாகத் திரையிசைப் பாடலைப் பார்க்கிறோம். ஆனால் இங்கு தலைவி, தலைவனைத் தன் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாப்பதாகக் கருதி கண்களுக்கு மைதீட்டுவதை விட்டுவிட்டாள் என்பதைக் குறள் பதிவு செய்கிறது. கண்ணுக்கு மை அழகு என்றாலும் அதையெல்லாம் எண்ணாமல் தன் அழகைவிட தலைவனுக்கு முதன்மையிடம் கொடுத்திருப்பது புரிதலை உணர்த்துகிறது. கண்ணிமைத்தால் கண்ணுக்குள் இருக்கும் காதலன் மறைந்துவிடுவான் என்று கண்ணை இமைக்காமல் இருந்தாளாம் தலைவி. கண்ணிமைக்காமல் இருக்கமுடியாது. இருப்பினும் அது வள்ளுவரின் மிகுக்கற்பனையைக் காட்டுகிறது.

“நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து” (குறள்; 1128)

தன் நெஞ்சில் காதலர் இருப்பதால் தலைவி சூடான உணவை உண்பதில்லையாம். ஏனென்றால் நெஞ்சில் இருக்கும் காதலரைச் சுட்டுவிடும் என்று அஞ்சி சூடான உணவை உண்பதைத் தவிர்த்தாளாம். ஒருபக்கம் அன்பின் மிகுதியைக் காட்டினாலும் மறுபக்கம் இது இயல்பான வாழ்க்கைக்கு ஒத்துவருமா என்றால் கேள்விக்குறியே. சங்ககாலத்தில் கணவனை இழந்த பெண்கள் தங்களது உணர்வுகளை அடக்குவதற்காக தன்னை ஒப்பனை செய்வதுகொள்வதும் இல்லை. உணர்வுகளைத் தூண்டக்கூடிய சூடான மற்றும் சுவையான உணவுகளை உண்பதுமில்லை. இதைத்தான் கைம்பெண் நோன்பு என்றனர். காதல் அனைத்து நிலை மக்களுக்கும் பொதுவானதே. தந்தை பெரியார் காதல் என்பது இயற்கையானது என்று குறிப்பிடுகிறார். இன்றய சூழலில் காதல் என்றாலே காமம்தான் என்று முடிவு செய்துவிடுகின்றனர். ஆனால் காதல் வேறு, காமம் வேறு. காதல் என்பது அகத்தில் தோன்றும் உணர்வு, காமம் என்பது காதலால் வரும் உணர்வு. 

இருப்பினும் சுடு உணவும், கண் இமைக்காமல் இருப்பதும் சாமான்ய மக்களின் வாழ்வுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது என்றுதான் சொல்லமுடியும். மிகுக்கற்பனையாகக் காமத்துப்பாலைப் படைத்திருக்கிறார் திருவள்ளுவர் என்பதை உணரமுடிகிறது. தலைவன் தலைவியின் அன்பின் ஆழத்தை, காதலின் நுணுக்கத்தை அறிந்தவராக ஓர் உளவியல் வல்லுநராகத் திருக்குறளைப் படைத்திருக்கிறார் எனும் போது வியப்பே மிஞ்சுகிறது. திருக்குறளைப் படித்து வாழ்க்கையில் கடைபிடித்தால் இல்லறம் நல்லறமாவது திண்ணமாகும்.

பயன்பட்ட நூல்கள்

1. தமிழ்க் காதல், வ.சுப.மாணிக்கனார்.

2. திருக்குறள் பரிமேலழகர் உரை 

3. திருக்குறள் உரைக்கொத்து, திருப்பணந்தாள் காசிமடம்.

3. கலித்தொகை, சி.வை.தாமோதரனார் (பதி.ஆ)

4. தி இந்து, மார்ச்சு,25,2018.

5. கிரியா தற்காலத் தமிழகராதி. 

6. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி

(குறிப்பு: நூல், நூலாசிரியர் ஆகியவற்றுடன் பதிப்பகம், ஊர், பதிப்பு, ஆண்டு போன்றவைகளையும் சேர்த்து வழங்கினால், கட்டுரை வாசிப்பாளருக்கும் பிற ஆய்வாளர்களுக்கும் உதவியதாக இருக்கும். - ஆசிரியர்)

*****

logo.jpg
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p193.html


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard