‘தமிழர் உரிமைப் போராளி’ ம.பொ.சிவஞானம் நினைவு நாள்
3.10.1995
“திராவிடர்” பிறந்த வரலாறு
{ திராவிடம் அல்லது திராவிடர் என்ற சொல்லை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் தான் முதன்முதலாக பயன்படுத்தினர் என்றும், பெரியாரோ, அண்ணாவோ இதற்கு காரணம் அல்லவென்றும் திராவிட இயக்கத்தினர் கூறி வருகின்றனர் . இதுஉண்மை என்ற போதிலும் , தாழ்த்தப்பட்ட மக்களுடைய தலைவர்கள் தமிழரல்லாத மாற்று இனத்தவரையும் சேர்த்து “திராவிடம்” என்ற சொல்லை ஒருபோதும் குறிப்பிட்டது இல்லை.
அவர்கள் தங்களை இழிவிலிருந்து விடுவித்துக் கொள்ளவே திராவிடர் என்ற சொல்லைக் கையாண்டனர், அதிலும் சென்னை மாகாணத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட தமிழர்கள் திராவிடர் என்று தாங்கள் அழைக்கப்படுவதை ஏற்கவில்லை என்பதை ம.பொ.சி தெளிவாக பின்வரும் கட்டுரையில் விளக்குகிறார்;]
திராவிடர் என்பது மொழி அல்லது இன ஆராய்ச்சியாளர் தென்னிந்தியரைக் குறிப்பிடும் பொதுச் சொல்லாகவே பயன்படுத்தப் பட்டு வந்தது. அத்துறையிலும் முதன் முதலாக அந்தச் சொல்லைப் பயன்படுத்தியோர் அந்நியரான ஆங்கிலயேராகவே இருந்தனர். அவர்களும், ‘ஆரியர்’, ‘திராவிடர்’ என்ற இனப்பாகுபாடு இன்று நாட்டில் நடைமுறையில் இல்லையென்பதை எடுத்துக் காட்டி தென்னியந்தியரை எச்சரிக்கத் தவறவில்லை.
“சென்னை மாகாணத்தில் உள்ளவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றோ, அன்றி, வங்காளத்தில் உள்ளவர்களெல்லாம் மங்கோலியத் திராவிடர்கள் என்றோ நூல் பிடித்ததுபோல் பிரித்துக் கூறிவிடத் துணிதல் அறியாமையேயாகும்.
“ஆரியர், திராவிடர் என்பன போன்ற இனப்பிரிவு வகை ஆராய்ச்சிக் கருவியாகக் கொண்ட பொதுவான அளவுகோலே யாகும்.”
இது, கிரீயர்ஸன் என்ற ஆராய்ச்சி வல்லுநர் “மொழி ஆராய்ச்சி” நூலில் கூறியிருப்பதாகும். இவ்வாறு அறிஞர்களெல்லாம் எச்சரித்தும், திராவிடர் என்னுஞ் சொல் தமிழர் என்னும் இனப்பெயருக்கு எதிராகத் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டது. இந்தத் திராவிட மாயை தமிழரைத்தான் அதிகமாக பீடித்திருந்தது. ஆந்திரத்திலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ எந்த ஒரு அமைப்பும் திராவிடர் என்ற பெயரைத் தாங்கிக் கொள்ள வில்லை.
ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக் காலத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதித் திராவிடர்கள் எனப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, சுத்தத் தமிழர்களான அவர்களிடந்தான் அந்தப் பெயர் நிலைத்து விட்டது. ஆனால், ஆந்திராவிலுள்ள தாழ்த்தப்பட்டோர் நிலை வேறு. அவர்கள் ஆதி ஆந்திரர் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆம்; ஆந்திரர் என்ற இனப்பெயருக்கு எதிராக அவர்கள் ‘திராவிடர்’ என்ற சொல்லை ஏற்கவில்லை.
தமிழ்நாட்டில் ‘திராவிடர்’ என்ற சொல்லை நீண்ட நெடுங்காலமாக வற்புறுத்தி வந்தவர்களே பின்னர் அதைச் சந்தடியின்றிக் கைவிட்டனர். தற்போது, தமிழர் -மலையாளி என்ற இனப்பிரிவுகளைப் போர்க் கருவிகளாகப் பயன்படுத்தவும் முன்வந்து விட்டனர். ஆனால், சுமார் அரை நூற்றாண்டு காலம் திராவிடர் அல்லது பிராமணர் அல்லாதார் என்ற சொற்ளைத் தமிழர் என்ற பெயருக்கு மாற்றாகப் பயன்படுத்தியதால் தமிழினத்தாருக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவது அவ்வளவு எளிதாக இல்லை என்பதைப் பார்க்கிறோம்.
1916-ல் ஜஸ்டிஸ் கட்சி பிறந்த போது, அதனுடன் சேர்ந்து தமிழ்- தெலுங்கு- ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனியே மூன்று நாளிதழ்கள் பிறந்தன. அவற்றின் பெயர்களைப் பார்ப்போம்:
தமிழ் – ‘திராவிடன்’
தெலுங்கு – ‘ஆந்திர பிரகாசிகா’
ஆங்கிலம் – ‘ஜஸ்டிஸ்’
இந்த மூன்று நாளேடுகளிலே தெலுங்கு மொழி ஏடு ‘ஆந்திர’ என்ற இனப்பெயரைப் பெற்றிருக்க, தமிழ் ஏடு மட்டும் தமிழ்- தமிழர்- தமிழகம் என்ற பெயர்களை மறைக்கும் திரையாகத் ‘திராவிடன்’ என்ற பெயரைப் பெற்றதனை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
இதே காலத்தில் ஆந்திர காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து பிறந்த மற்றொரு தெலுங்கு நாளேடு கூட ‘ஆந்திர பத்திரிகா’ என்று பெயர் பெற்றது. வேறு தேசியப் பெயர் எதனையும் பெறவில்லை. எங்கிருந்தாலும் ஆந்திரர் ஆந்திரர்தானே!
அன்று சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக இருந்து, பின்னர் 1956ஆல் கேரளத்தில் இணைக்கப்பட்ட மலபார் மாவட்டத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள் “கேரள சஞ்சாரி”, “கேரளோதயம்”, “மலையாளி” என்ற பெயர்களைப் பெற்றன. ஆம்; கேரளப் பிரதேசத்தில் வாழும் மலையாள மொழியினர் “திராவிடர்” என்ற பெயரை ஏற்காமல், தங்கள் மாநிலத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் பத்திரிகைகளை நடத்தினர் என்பது இதனால் புலப்படுகின்றது.
இலக்கிய வாட்டாரத்தினரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த “திராவிடர் ” என்னும் சொல்லுக்கு அரசியல் வண்ணம் பூசப்பட்ட வரலாற்றை இங்கு சுருக்கமாகவேனும் விவரிக்க வேண்டியது அவசியமாகிறது ,
தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி 1890ல் தமிழ் நாட்டளவில் “பறையர் மகாஜன சபா” என்னும் பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பெற்றது, “பறையர்” என்னும் சொல் தமிழ்நாட்டில் மிகவும் இழிந்த பொருளைக் கொண்டுவிட்டதால், 1910ஆம் ஆண்டுக்குப் பின்னர் “பறையர் மகாஜன சபை ” யின் பெயர் “ஆதித்திராவிடர் மகாஜனசபை” என்று மாற்றப்பெற்றது.
“திராவிடர் ” என்னும் சொல்லை தென்னிந்தியர் அனைவரையுமே குறிக்கும் பொதுப் பெயராக இன ஆராய்ச்சியாளர் பயன்படுத்தி வந்ததால் , தென்னிந்தியாவின் பழங்குடி மக்கள் என்பதனைக் குறிக்கும் வகையில் “ஆதி ” என்னும் அடைமொழியும் திராவிடர் என்பதற்கு முன் சேர்த்துக் கொள்ளப்பட்டது .
இந்த மகாசபை 1918ல் சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையிலே, மக்கள் கணக்கெடுப்பிலும். மற்றும் அரசு தஸ்தாவேஜூகளிலும் “பறையர் ” பஞ்சமர்” என்னும் பெயர்களுக்குப் பதிலாக “ஆதிதிராவிடர்” என்னும் பெயர் சேர்க்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பெற்றது.
ஆனால், அப்போதைய சென்சஸ் அதிகாரி ஈட்ஸ் என்பவர் இதனை ஏற்கவில்லை . ஆந்தித்திலும், கன்னடத்திலும் “ஆதித்திராவிடர்” என்னும் பெயரை ஏற்க தாழ்த்தப்பட்டோரில் எவரும் முன்வராத நிலையை இந்த அதிகாரி சுட்டிக் காட்டினார் . ஆனால் ஆதிதிராவிடர் மகாசபை பெயர் மாற்றக் கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது . தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியிலே பொதுக் கூட்டங்கள் போட்டு , தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது. ஜஸ்டிஸ் கட்சியினரும் அந்த மகாசபைக்குஉதவியாக இருந்தனர் .
அக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரானடாக்டர் சி.நடேச முதலியார் ஆதித்திராவிட மகாஜன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சென்னை மாநகாராட்சிக் கூட்டம் ஒன்றிலே முன்மொழிந்து, அது நிறைவேறுமாறு செய்தார் . 1921ஆம் ஆண்டுக்குரிய சென்சஸ் தயாரிக்கப்பட்ட போது , தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15025 பேர் தங்களை ஆதித்திராவிடர்கள் எறு சொல்லிக்கொண்டு , அது குடிமதிப்பீட்டுக் கணக்கேட்டில் ஏறும்படி செய்தனர் .
1921ஆம்ஆண்டு குடிமதிப்பு கணக்கெடுப்பின்படி சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிகை 63,70,074 ஆகும்.
இவர்களில் சுமார் பதினையாயிரம் பேர்தான் ஆதித்திராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர், இது தமிழகத் தாழ்த்தப்பட்டோரும் திராவிடர் என்னும் பெயரை விரும்பவில்லை என்பதைப் புலப்படுத்துகிறது. சென்னை மாகாணத்தின் இதர பகுதிகளில் தங்களை ஆதித்திராவிடர் என்று பதிவு செய்துகொள்ள எவரும் முன்வரவில்லை.
1922ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஆதித்திராவிடர் என்னும் பெயரை அதிகாரப்பூர்வமாக ஏற்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று ஜஸ்டிஸ் கட்சியினரால் பிரரேபிக்கப்பட்டு நிறைவேற்றி வைக்கப்பட்டது, அதே ஆண்டில் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு “பஞ்மர்” அல்லது “பறையர்” என்பதற்குப் பதிலாக “ஆதித்திராவிடர்” என்னும் பெயர் அங்கீகரிக்கப் பட்டுள்ளதாக அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் இந்தப் பெயர் மாற்றம் தமிழ் மாவட்டங்களில் தான் அமுலில்இருக்குமென்றும் அரசு தெளிவுபடுத்தியது.
மற்றபடி, தெலுங்கு மாவட்டங்களில் “ஆதி ஆந்திரர்” என்றும், கன்னட மாவட்டங்களில் “ஆதி கன்னடர்” என்றும் வழங்கி வரும் என்பதாகவும் அரசு உறுதி கூறியது. ஆம், அந்தப் பிரதேசங்களில் மொழிப்பற்றும் இனப்பற்றும் உடைய தாழ்த்தப்பட்ட மக்கள் “திராவிடர் ” என்னும் பொதுப் பெயரை ஏற்க உறுதியாக மறுத்து விட்டனர். இந்த இனப்பற்றும் மொழிப்பற்றும் தமிழ் நாட்டினருக்கும் இருந்திருக்குமானால் இங்குள்ள தாழ்த்தப்பட்டோருக்கு “ஆதித்தமிழர்” என்ற பெயர் அன்றே தரப்பட்டிருக்கும்.
ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய நாள் தொட்டே தமிழர் என்னும் தன்மானப் பெயரைஅழிக்கும் திரையாக – இல்லை , செயலாகவே “திராவிடர் ” என்னும் போலிப் பெயரைப் பயன்படுத்தி வந்தனர் தமிழரிலே ஒரு சாரார். நல்ல வேளையாக 1956-க்குப் பின் மனமாற்றமடைந்து தமிழ் வழங்கும் நிலப்பரப்பின் மீது “திராவிட நாடு” என்னும் பெயரைத் திணிக்க முயலாமல், “தமிழ் நாடு ” என்னும் முயற்சியிலே மன நிறைவோடு பங்கு கொண்டனர்.
தமிழர் என்பதனை மறைக்கும் திரையாக – மறுக்கும் சொல்லாகத் திராவிடம் என்பது 1916 முதல் 1966 வரை சரியாக அரை நூற்றாண்டுக் காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது .இன்னமும் தமிழரிடையே செல்வாக்குப் பெற்றுள்ள இருவேறு கழகங்களின் பெயரிலே திராவிடம் ஒட்டிக் கொண்டிருக்கக் காண்கிறோம் .
திராவிடர் என்பது தென்னிந்தியர்- அவார்களிலும் பிராமணரல்லாதார் அனைவருக்குமான பொதுப்பெயர் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுவிட்ட பிறமொழியினருக்கும் சுத்தத் தமிழருக்குமான பொதுப்பெயராகவே அது பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால்தான் தமிழரல்லாதார் தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் தலைமை பெற முடிந்தது,
நன்றி:
ம.பொ.சி. எழுதிய “தமிழ்நாட்டில் பிறமொழியினர்”.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.