அறிஞர் அண்ணா நினைவு நாள்
3.2.1969
திராவிடத்தை புதைகுழிக்கு அனுப்ப மறுத்த அறிஞர் அண்ணா!
பெரியாரிடமிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்டவர் அறிஞர் அண்ணா. பெரியாரால் புறந்தள்ளப்பட்ட தமிழ்மொழி, தமிழர் பண்டைய வரலாறு, தமிழ் இலக்கியம் ஆகியவற்றைப் போற்றிப் புகழ்ந்தவர். இதன் காரணமாகவே அவர் உருவாக்கிய தி.மு.க. பட்டி தொட்டியெல்லாம் பரவியது. அவரின் தமிழ் சார்ந்த பங்களிப்புகள் பாராட்டுக்குரியவை. பெரியாரின் முரட்டுத்தனமான எத்தனையோ அணுகுமுறைகளில் மாறுபட்டு விளங்கினார். ஆனால் அவர் பெரியார் பயன்படுத்திய ‘திராவிட’ சொல்லை மட்டும் விட்டு விட மறுத்தார்.
1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை தமிழறிஞர்களோடும் பெரியாரோடும் அண்ணாவும் சேர்ந்து எழுப்பினார். சிறை சென்றார். அப்போது, “தமிழர்நாடு தமிழர்களின் மூல மந்திரமாக இருக்க வேண்டும். தமிழர் நாட்டைத் தனியாகப் பிரிக்க கிளர்ச்சி செய்ய வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மாகாணப்பிரிவினை இயக்கத்துக்கு முதல்படியே. தமிழர் நாடு தனியாகப் பிரிக்கப்பட்டால் தமிழர் மொழியும் இலக்கண இலக்கியங்களும் கலைகளும் நாகரிகமும் விருத்தியடையும்” என்று பேசினார்.
ஆனால் 1939இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று பெரியார் மாற்றிய போது அதனை எதிர்க்க மறுத்தார். அப்போது பெரியார் தெலுங்கர் ஆதிக்கம் நிறைந்த நீதிக்கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1940இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் 28வது தீர்மானம் திராவிடம் குறித்து நிறைவேற்றப்பட்டது. அது வருமாறு: “திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றமடைய திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் பிரிட்டிசு மந்திரியின் மேற்பார்வையில் கீழ் தனிநாடாக பிரிக்கப்பட வேண்டும்”.
தமிழர் நாடு வேண்டுமென்று இரண்டாண்டுகளுக்கு முன்பு முழங்கிய அதே அண்ணாவே இத் தீர்மானத்தை வழி மொழிந்தார். திராவிடர்கள் என்பவர்கள் யார்? திராவிடர்கள் வாழ்விடம் சென்னை மாகாணம் தானா? அல்லது அது மட்டும் தானா? திராவிடர் பற்றி தீர்மானத்தில் எந்த வித விளக்கமும் இல்லை. அண்ணாவிடம் இதற்கான பதிலுமில்லை. காரணம், அப்போது அவர் நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராகி விட்டார் . பின்னர் காஞ்சி புரத்தில் இருந்து ‘திராவிடநாடு’ ஏட்டைத் தொடங்கினார். திராவிடநாடு கோரிக்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர் கி.ஆ.பெ.விசுவநாதம். அவருக்கு எழுதிய கடிதத்தில் அண்ணா குறிப்பிடுகிறார்: ‘திருவாரூரில் திராவிட நாட்டுப் பிரிவினை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதால் அதனை எதிர்ப்பது முறையல்ல. திராவிட நாட்டுப் பிரிவினை என்பது தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல”.
திராவிட நாடு கோரிக்கையின் தொடர்ச்சியாக 1944இல் நீதிக்கட்சியின் பெயர் திராவிடர்கழகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அண்ணாவின் ஒப்புதல் இருந்ததால் ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்று பெயரிட்டு அழைத்தார் பெரியார். 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட அண்ணா திராவிடநாடு கோரிக்கையை அப்போதும் கைவிட வில்லை. 1957, 1962 சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டார். திராவிடநாடு கோரிக்கையின் படி தமிழரல்லாத பகுதிகளில் வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு ஒரு தெலுங்கானோ, மலையாளியோ, கன்னடனோ அவருக்கு கிடைக்க வில்லை. காரணம் தி.மு.க.விற்கு தமிழரல்லாத பகுதிகளில் ஒரு கிளை கூட கிடையாது. 1956இல் மொழிவழி மாகாணம் பிரிக்கப்பட்ட போதே திராவிடநாடு கோரிக்கை செத்த பிணமானது. செத்த பிணம் உயிர் பெறாது என்று உணர்ந்த காரணத்தால் ஈ.வெ.கி.சம்பத் திராவிட நாடு கோரிக்கையை கைவிடச் சொன்னார். அண்ணாவின் பிடிவாதம் கட்சியை விட்டு சம்பத்தை வெளியேற்றியது. சம்பத் ‘தமிழ்த்தேசிய கட்சி’யை தோற்றுவித்தார். 1963இல் தில்லி அரசால் பிரிவினைத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது தான் திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட சம்மதித்தார். காரியச்சாத்தியமற்ற கோரிக்கையை அண்ணா முன்னெடுத்த காரணத்தால் தமிழரின் தாயக நிலங்கள் 70ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தமிழரல்லாத தெலுங்கரிடமும், மலையாளியிடமும், கன்னடரிடமும் பறிபோகக் காரணமானது.
திராவிடம் என்ற சொல் தமிழரல்லாதவர் நலன் காக்க முதலில் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது பார்ப்பன எதிர்ப்புக்கு பயன்படுத்தப்பட்டது. ‘திராவிட’ சொல்லுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. தமிழ் மொழியிலிருந்து பிரிந்த தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை குறிப்பதற்கு கால்டுவெல் என்பவர் வடமொழி இலக்கியங்களிலிருந்து கண்டு பிடித்த சொல் தான் திராவிடமாகும். இதை வைத்துக் கொண்டு தான் அண்ணா திராவிடத்திற்கு தத்துவ விளக்கம் கொடுத்து வந்தார். மொழிவழித் தேசிய இனங்களின் பேரெழுச்சி வெள்ளத்தில் அண்ணாவின் “திராவிடத்தத்துவம்” அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
அண்மையில் எழுந்த தைப்புரட்சியில் ” தமிழன்டா” என்ற முழக்கமே எங்கும் நீக்கமற நிறைந்திருந்ததைக் கண்டோம். இலட்சக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டத்தில் எந்தவொரு திராவிடனையும் காண முடியவில்லை. திராவிட இயக்கங்கள் காலங்காலமாக முணுமுணுக்கும் “அஞ்சாமை திராவிடர் உடைமையடா” பாடல் முழக்கத்தை எந்தவொரு தமிழரும் சீந்துவாரில்லை. மாறாக நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் எழுதிய “தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாடல் முழக்கமே தமிழர்களின் தாரக மந்திரமானது. அண்ணாவை வழி காட்டியாகக் கொண்டு இயங்கக் கூடிய திராவிடக் கட்சிகள் இந்த வரலாற்று உண்மையை உணர வேண்டும். இனியும் திராவிடப் பெயரை தூக்கிச் சுமப்பதை கைவிட வேண்டும்.
என் தேசம் தமிழ்த் தேசம், என் இனம் தமிழ்த் தேசிய இனம், என் மொழி தமிழ்த் தேசிய மொழி என்பது மட்டுமே தமிழர்களுக்கான விடியலைத் தரும்!