பிராமணனுக்கு ஓட்டும் தமிழனுக்கு நாமமும் போட்ட பெரியார்!
1957ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் தி.மு.க. ஆதரவோடு முன்னாள் நீதிக்கட்சி பிரமுகர் ஒருவர் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பேராயக்கட்சி சார்பில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்ற பிராமணர் போட்டியிட்டார்.
அப்போது பெரியாரை நேரில் சந்தித்து அந்த நீதிக்கட்சி பிரமுகர் ஆதரவு கேட்டார். அதற்கு பெரியார் உடன்பட வில்லை. பிராமண வகுப்பைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரைத் தவிர வேறு எவரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக பெரியார் தெரிவித்தார்.
நீதிக்கட்சி பிரமுகர் பெரியாரின் பதிலை சற்றும் எதிர்பார்க்க வில்லை. அவர் சாதாரணமானவர் அல்ல. அவரின் பெயர் “சண்டே அப்சர்வர்” பாலசுப்பிரமணியம்.
(படத்தில் நடுவில் அமர்ந்திருப்பவர்)
இவர் பிறப்பால் தமிழர். 1920ஆம் ஆண்டு முதலே நீதிக்கட்சியில் பணியாற்றி வருபவர். ‘திராவிடத் தந்தை’ என்று அழைக்கப்பட்ட சி.நடேசனார் நீதிக்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட போது போர்க்குரல் எழுப்பியவர். அண்ணாவை பெரியார் சந்திப்பதற்கு முன்பாகவே அவரை முதன் முதலில் பொதுவாழ்வுக்கு அழைத்து வந்தவர். 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் இவர் நடத்திய ‘சண்டே அப்சர்வர்’ ஆங்கில ஏட்டின் பங்கு அளப்பரியது.
1940ஆம் ஆண்டு மும்பையில் பெரியார், ஜின்னா, அம்பேத்கர் சந்திப்பின் போது உடன் சென்று, தலைவர்களின் உரையாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
1944ஆம் ஆண்டு நீதிக்கட்சி நடத்திய பெயர் மாற்ற சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் எனும் பெயர் சூட்டப்பட்டது. அதனை ஏற்க மறுத்து கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணல் தங்கோ ஆகிய இருவரோடும் சேர்ந்து தமிழர் கழகம் எனும் பெயர் சூட்டப் போராடியவர்.
நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டவரும், நீதிக்கட்சி வழி வந்தவருமான பாலசுப்பிரமணியம் தனக்கு பெரியார் ஆதரவு தர மறுத்தது கண்டு வெகுண்டெழுந்தார், பெரியாரின் பிராமண எதிர்ப்பின் இரட்டை வேடத்தை அவரிடமே தோலுரித்துப் பேசினார்.
இது குறித்து செ.அருள் செல்வன் எழுதிய “அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம்” எனும் நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு:
“இந்த பாராளுமன்றத் தேர்தலிலும், உடன் சேர்ந்து நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலிலும் பெரியார் முழு வீச்சோடு காங்கிரசின் வெற்றிக்காகவும், தி.மு.கழகம் தோல்வியடைய வேண்டும் என தமிழ்நாடு முழுக்க நேரடியாக களத்தில் இறங்கி மும்முர மேடைப் பிரச்சாரம் செய்து வந்ததோடு, தம் இயக்க இதழ்கள், பத்திரிகைகள் அனைத்திலும் எழுதி வந்தார்.
இந்நிலையில் பி.பா. நேரடியாக பெரியாரிடம் சென்றார். அவரிடம் தான் போட்டியிடும் தென் சென்னை தொகுதியில் மட்டுமாவது காங்கிரசை ஆதரிக்காமல் தம்மை மட்டும் ஆதரித்து அறிவிக்க வேண்டுமென்ற வேண்டுகோளைப் பெரியாரிடம் வைத்தார்.
பெரியார் அதற்கு உடன்பட வில்லை. உடனே பி.பா. பழையவற்றை மறக்காமல் நினைவு கூருங்கள்.
நீங்கள் சுயமரியாதை இயக்கம் நடத்திக் கொண்டு, நாடு முழுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தீர்கள். நான் உதிரியாய் சிதறிக் கிடந்த தொழிற் சங்கங்களை இணைத்து நீதிக்கட்சியுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்பட்ட பின்னர் அல்லது சுயமரியாதை இயக்கத்துடன், நீதிக்கட்சிக்குத் தொடர்பு ஏற்பட்ட பின்னர், இரண்டும் ஒன்றாகக் கலந்தது.
ஏற்கெனவே எங்களால் நன்கு பரவி வேரூன்றிய நீதிக்கட்சியை உங்களிடம் நம்பி இணைத்தோம். நீதிக்கட்சியை உங்களுடைய கைகளில் கொடுத்ததற்கு நான்தான் காரணம். அது மட்டுமா? பொப்பிலி அரசரிடமிருந்த என்னின் நெருக்கமான பழக்கத்தால், ஜஸ்டிஸ் ஆங்கில இதழினையும், டி.ஏ.வி.நாதனையும் உங்களிடம் ஒப்படைவு செய்தேன். நானே ஐஸ்டிஸ் இதழினில் உங்களைத் தீவிரமாக ஆதரித்து எழுதினேன்.
இதையெல்லாம் மறக்காமல், மனதில் நினைவுறுத்தி, என்னை என் தொகுதியில் ஆதரிப்பது தான் நன்றியான செயலாகும். எனவே பார்ப்பன வேட்பாளரான டி.டி.கே.வை ஆதரிக்காமல், தமிழரான என்னை ஆதரிப்பதே ஏற்கத்தக்கது என வாதாடியும் பெரியார் கறாராக மறுத்தே விட்டார்.
உடனே, பி.பா. எழுந்து நின்று, பார்ப்பன ஆதிக்கம், பார்ப்பனிய எதிர்ப்பு என்றெல்லாம் ஊரெங்கும் மேடைகளில் முழங்குகிறீர்களே? அதென்ன இங்கே மட்டும் இரட்டை வேடமா? உங்களின் ஏமாற்று வேலையா? என கடுஞ்சொற்களால் நேரடியாக விமர்சனம் செய்து விட்டு வெளியே வந்தார்.”
அது மட்டுமல்லாது, டி.டி.கிருஷ்ணமாச்சாரி வெற்றியை எளிதாக்கும் வகையில் ஓட்டுகளை பிரிக்கும் தந்திரத்தை கையாண்டார். பி.பா.வை தோற்படிப்பதற்காகவே சுயேட்சை வேட்பாளர் எஸ்.இராமநாதன் என்பவரை களத்தில் இறக்கி, என்ஜின் சின்னத்தில் போட்டியிட வைத்தார்.
தென் சென்னைத் தொகுதியில் பி.பா.விற்கு செல்வாக்கு கூடி வருவதை அறிந்த வேட்பாளர் டி.டி.கே. தன் பங்குக்கு 10 இலட்சம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றார். பணத்திற்கு விலை போகாமல் பி.பா. முன்னை விட தேர்தல் களத்தில் உறுதியாக நின்றார். இருந்த போதிலும் காங்கிரசு கட்சியின் கள்ள ஓட்டும், நல்ல நோட்டும் டி.டி.கே.யை வெற்றி பெற வைத்தது. பி.பா. தோற்றே போனார்.
தேர்தலுக்கு மறுநாள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல பி.பா. இறந்து விட்டதாகவும் வதந்தியை கிளப்பி விட்டார்கள். இது உண்மையென நம்பி பி.பா.வை நேசித்த மக்கள் கூட்டத்தினர் அவரின் வீடு நோக்கி அணி அணியாகத் திரண்டனர்.
பின்னர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பி.பா. மனம் உருகப் பேசினார்:
“நான் இறந்து விட்டால் என் இறுதிஊர்வலத்திற்கு எத்தனையாயிரம் மக்கள் வருவார்கள் என்பதை நான் உயிருடன் இருக்கும் போதே என் இரு கண்களால் கண்டு விட்டேன். என்மீது மக்கள் கொண்ட அன்புக்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்.
“பெரியாரிடம் தன்னை நாடி தமிழர் நலன் காப்போர் எவர் வந்து ஆதரவு கேட்டாலும் அவருக்கு ஆதரவு தருவது தான் பெரியாரின் கொள்கை என்று பெரியாரின் ஊதுகுழலாக செயல்படும் வாலாசா வல்லவன் உள்பட பல பெரியாரியவாதிகள் கூறி வருகின்றனர். இது உண்மையல்ல, என்பதைத் தான் ஒரு தமிழனுக்கு நேர்ந்த அவலம் நமக்கு உணர்த்துகிறது.!