பெரியார் மாணவர்களை கொளுத்தச் சொன்னது உண்மையே!
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார் எதிர்த்தது உண்மைதான். ஆனால் பெரியார் ஒருபோதும் மாணவர்களை கொளுத்தும் படி கூறவே கிடையாது. 1953இல் அன்றைய முதல்வர் இராசாசி குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த போது , திராவிடர் கழகத் தோழர்கள் மண்ணெண்ணையும் , தீப்பெட்டியும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் , இராசாசி அத்திட்டத்தைப் திரும்பப் பெறாவிட்டால் நான் அறிவிக்கும் போது அக்கிரகாரத்தை கொளுத்த வேண்டும் என்று பெரியார் கூறினார். இந்தச் செய்திதான் உண்மை தவிர, மாணவர்களை கொளுத்தும்படி கூறியதாக தமிழ்த்தேசியவாதிகளால் பரப்பப்படும் தகவல்கள் பெரியாரை களங்கப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும் என்று பெரியாரியவாதிகள் திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர்.
தமிழ்த்தேசியவாதிகளின் கூற்றுக்கு தற்போது சான்று கிடைத்துள்ளது. பெரியாரியவாதிகள் போற்றிப் புகழும் பெருஞ்சித்திரனாரின் ” தென்மொழி” (ஏப்ரல் 1965) ஏட்டிலே இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.
1965இல் இந்தி மொழி எதிர்ப்புப் போருக்கு ஆதரவாக பெருஞ்சித்திரனாரின் “தென்மொழி” ஏடு ஈடுபட்டு பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்தது. பெரியாரும் அடக்குமுறை ஏவிய காங்கிரசு அரசுக்கு ஆலோசகராக செயல்பட்டதோடு தமிழ்மொழியை பழித்தும் இழித்தும் பேசி வந்தார்.
பெரியாரின் தமிழ்மொழி எதிர்ப்பை “தென்மொழி” ஏடு தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தது. அதில் ஒன்று தான் மாணவர்களை கொளுத்தும் படியும், கத்தியால் குத்தும்படியும் தயாராக இருக்குமாறு தனது தொண்டர்களுக்கு பெரியார் விடுத்த அறிக்கையாகும்.
1965ஆம் ஆண்டு இந்திமொழி எதிர்ப்புப் போராட்டங்களை பெரியாரின் “விடுதலை” ஏடு காலித்தனம் என்று எழுதி வந்தது. பெரியாரின் கட்டுரைகளை காலவரிசைப்படியும், தலைப்புவாரிப்படியும் தொகுத்து வெளியிடும் பெரியாரிய இயக்கங்களோ, மற்ற பதிப்பகங்களோ 1965ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் பெரியார் பேசியதையும் எழுதியதையும் திட்டமிட்டே மறைத்து வருகின்றன.
நமக்கு ஆனந்தவிகடனில் வெளிவந்த பெரியாரின் பேட்டியும், அறிஞர் கோ.கேசவன் எழுதிய மொழிப்போர் குறித்த நூல்களில் மட்டுமே சில தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த வரிசையில் தென்மொழி ஏடு மூலம் கிடைத்த தகவல் தான் பெரியார் மாணவர்களை கொளுத்தும்படி கூறியதாகும்.
இனிமேலாவது பெரியாரியவாதிகள் ஒரு தகவலை மறுக்கும் முன்பு பெரியார் மீது கொண்ட பக்தி காரணமாக மறுத்திடாமல் உண்மை வரலாற்றின் அடிப்படையில் சான்றுகளோடு மறுக்குமாறு வேண்டுகிறோம்.