New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ்த்தேசியத்தை விழுங்கியது திராவிடமே! -சுப.வீரபாண்டியன் ஒப்புதல் வாக்கு மூலம்.


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழ்த்தேசியத்தை விழுங்கியது திராவிடமே! -சுப.வீரபாண்டியன் ஒப்புதல் வாக்கு மூலம்.
Permalink  
 


​தமிழ்த்தேசியத்தை விழுங்கியது திராவிடமே!

​தமிழ்த்தேசியத்தை விழுங்கியது திராவிடமே!

தமிழ்த்தேசியத்தை விழுங்கியது திராவிடமே!

 -சுப.வீரபாண்டியன் ஒப்புதல் வாக்கு மூலம்.

தி.க. தலைவர் வீரமணி  ‘திராவிடர் திருநாள் விழா’ கொண்டாடிய போது தமிழ்த் தேசியர்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இதற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் “திராவிடர் என்ற சொல் இடம் பெற்று விட்டதால் அது தமிழருக்கு எதிரானது என்றும், திராவிடக்கூச்சல் என்றும் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரான சொல்லே அன்றி, தென் இந்தியாவிற்கு மாற்றுச் சொல் அன்று எனப் பல முறை விளக்கிய பின்னும் சொன்னதையே திரும்பத் திரும்பத் சொல்வதற்குத் தான் கூச்சல் என்று பெயர்” என்பதாக விளக்கம் தெரிவித்தார்.

‘நேற்றைய வரலாறு என்பது இன்றைய மக்களின் மறதி’ என்பார்கள். அது சுப.வீ.க்கும் பொருந்தும். திராவிடத்திற்கு எதிராக முதன் முதலில் கூச்சலிட்டவர் சுப.வீ. தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும்.
1994ஆம் ஆண்டில் ‘இனி’ எனும் பெயரில் தோழர் சுப.வீ. அவர்கள் மாத இதழொன்றை நடத்தி வந்தார். அதில், “மண்ணின் மகனே மண்ணை ஆள வா!” எனும் தொடர் கட்டுரை எழுதினார். அது இரண்டொரு கட்டுரைகளில் நின்று போனது. அதில் ஒன்று தான் தமிழ்த் தேசிய உணர்வை விழுங்கியது திராவிடமே என்பதாகும்.

1938ஆம் ஆண்டு மொழிப் போரில் முகிழ்த்த தமிழ்த் தேசிய உணர்வு பின்னடைவுக்கு  தெலுங்கர்களின் தலைமையிலான நீதிக்கட்சியும், சாதி உணர்வை வளர்த்த காங்கிரசுமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுரையின் சுருக்கம் பின்வருமாறு: 

“1937இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கம் மக்கள் முழக்கமாகி மன்றம் ஏறியது உண்மை தான் என்றாலும், ‘தமிழ்த் தேசிய விடுதலை’ உணர்வு, மென் மேலும் வீறு கொள்ளாமல், சற்று முனை மழுங்கத் தொடங்கியது.

 

சி.இராச கோபாலச்சாரி முதலமைச்சராகி, ‘இந்தி’யை கட்டாயப் பாடமாக்கியவுடன் எதிர்ப்புணர்ச்சி பீறிட்டெழுந்தது. ஏ.டி.பன்னீர் செல்வம் மீண்டும் பெரியாருடன் இணைந்து கிளர்ச்சித் திட்டத்தை வகுத்தார். கிளர்ச்சியில் பெரியாருடன் இணைந்து ஈடுபட்டு, கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணா, சாது சண்முகானந்த அடிகள், ஈழத்துச் சிவானந்த அடிகள், சாது அருணகிரியார், மறைமலையடிகள் முதலான பலர் தண்டனையும் அடைந்தனர். கடவுள், மத நம்பிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இன உணர்வு மேலோங்கிய கால கட்டம் அது.
இப்போராட்டத்தில் பங்கேற்ற தாளமுத்து- நடராசன் ஆகிய இரு இளைஞர்கள் சிறையில் பலியானவுடன் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

1939 டிசம்பர் 27இல் வேலூர் டவுன் ஹாலில் கூடிய மாகாணத் தமிழர் மாநாடு ‘தனித்தமிழ்நாடு’ என்கின்ற திட்டத்தை முன் வைத்தது. தமிழ்நாடு தமிழருக்கே என்னும் தலைப்பில் அண்ணா ஆற்றிய உரை இளைஞர்கள் படையையே உருவாக்கி விட்டது எனலாம்.

இத்தனை விரைவாகவும் வீரியத்தோடும் எழுந்த தமிழ்த் தேசிய உணர்வு ஓரிரு ஆண்டுகளிலேயே சற்றுப் பின்னடைவைக் கண்டது… அன்றையச் சூழலில், மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப் பெறாமல் இருந்த சென்னைத் தலை மாகாணத்தில் ஆந்திரர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்தனர். காங்கிரசு எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு மூன்றும் தெலுங்கர் முதலான பிற திராவிட இனத்தவருக்கும் உரியதாக இருந்தமையால், அவர்களையும் அணைத்துக் கொண்டு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் தமிழ்த் தேசிய உணர்வை  திராவிட தேசிய உணர்வு விழுங்கி விட்டது….
நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தெலுங்கர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது என்பதனை ஹ்யூஜின் இர்ஷிக், கிறிஸ்டோபர் ஜான் பேக்கர், குணா முதலான ஆய்வாளர்கள் தத்தம் ஆய்வு நூல்களில் விளக்கமாகக் குறித்துள்ளார்கள். ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்றே குணா கருதுகின்றார்.

நீதிக்கட்சியை தொடங்கிய பி.டி.தியாகராயர், மருத்துவர் டி.எம். நாயர் இருவரும் தமிழரல்லர். பனகல் அரசரும் 1915ஆம் ஆண்டிலேயே ஆந்திர இயக்க மாநாட்டிற்குத் தலைமை தாங்கியுள்ளார்.
நீதிக்கட்சியின் சார்பாகத் தொடங்கப்பெற்ற தமிழ் ஏட்டிற்கு ‘திராவிடன்’ என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால், தெலுங்கு ஏட்டின் பெயர் ‘ஆந்திர பிரகாசிகா’ என்று தான் இருந்தது.
நீதிக்கட்சியின் சார்பில், சென்னை தலை மாகாணத்திற்கு முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும் பலர் (ஏ. சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், கே.வேங்கட ரெட்டி நாயுடு, சித்தூர் வி.முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர், கூர்ம வெங்கட ரெட்டி) தெலுங்கர்களே.

நீதிக்கட்சியின் கூட்டங்கள் தெலுங்குப் பகுதியில் நடைபெற்ற போது தெலுங்கிலும், தமிழ்ப் பகுதியில் நடைபெற்ற போது ஆங்கிலத்திலும் நடைபெற்றன….

மொழிவழித் தேசங்கள் உருவாகாத அன்றையச் சூழலில், தேசிய இன உணர்வை (National race) முன் நிறுத்த முடியாமல், சமூக நீதியில் சரியாக இயங்கினர் என்னும் நிறைவில், ‘திராவிடர்’ என்னும் மரபு இன உணர்வையே (Ethnic race) பெரியார் உட்பட அனைவரும் முன் நிறுத்திய சூழலை நாம் இன்று உணர முடிகிறது. எவ்வாறாயினும், தமிழ்த் தேசிய உணர்வு பின்னடைந்தமைக்கு, திராவிட தேசிய உணர்வு ஒரு முகாமையான காரணம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.” 

(இனி சமூக மாத இதழ், திருவள்ளுவர் ஆண்டு 2025, மடங்கல் -கன்னி, செப்டம்பர் ’94 ) 

இருபது ஆண்டுகளுக்கு முன்பே திராவிட உணர்வு தான் தமிழ்த்தேசிய எழுச்சிக்கு தடையாக இருப்பதாக சுப.வீ. ஒப்புக் கொண்டு எழுதியுள்ளதை இக்கட்டுரை மூலம் அறிய முடிகிறது. 

ஆனால், அவர் இப்போது  திராவிடர் இயக்கத்தை தூக்கிப் பிடிக்கும் முழு சந்தர்ப்பவாதியாக மாறிப் போயுள்ளார்.
தற்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்ற பெயரில் இயக்கமும் நடத்தி வருகிறார். அவற்றின் மூலம் “திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்” என்று கூவியும் வருகிறார். திராவிடத்தால் எழுந்தவருக்கு திராவிடத்தாலே வென்று நிற்க முடியாதா? இதில் ‘தமிழிய’ ஊன்று கோல் எதற்கு? 

சுப.வீ. இனிமேலாவது “திராவிட இயக்கத்தமிழர் பேரவை” யில் இருக்கும் “தமிழரை” துப்பி எறிந்து விட்டு அதற்குப் பதிலாக “திராவிடரை”யே விழுங்கிக் கொள்வது நல்லது. ஏனெனில், திராவிடம் காலங்காலமாக தமிழரை விழுங்கி வருவதை வருங்காலத் தலைமுறையினர்  இனி ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard