New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ம.பொ.சிவஞானம் “வடக்கெல்லை மீட்பர்”


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ம.பொ.சிவஞானம் “வடக்கெல்லை மீட்பர்”
Permalink  
 


ம.பொ.சிவஞானம்

ம.பொ.சிவஞானம்

“வடக்கெல்லை மீட்பர்”

ம.பொ.சிவஞானம் பிறந்த நாள்

26.6.1906
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் ” என்று தொல்காப்பியப் பாயிரத்துள் பனம்பாரனாரும், “நீலத்திரை கடல் ஓரத்திலே – நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை , வடமாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு ” என்று பாரதியாரும் தமிழகத்தின் எல்லைகள் குறித்து பாடியுள்ளனர். 
தமிழர், ஆந்திரர், கேரளர், கன்னடர் உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போர் வெடித்தது. அப்போது மொழிவழி தமிழ் மாகாணக் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதில் தமிழக எல்லைகள் குறித்துப் பேசப்படவில்லை.
 
 1946இல் மீண்டும் மொழிவழி தமிழ் மாகாணக்  கோரிக்கைக்கு புத்துயிர் தந்ததோடு, குமரி முதல் மாலவன்குன்றம் வரை உள்ள தமிழர் தாயகப் பகுதிகளை மீட்பதைக் குறிக்கோளாகக் கொண்டு போராடியவர் “சிலம்புச் செல்வர்” என்று அழைக்கப்படும் ம.பொ.சி.ஆவார். மயிலாப்பூர் பொன்னுச்சாமி சிவஞானம் என்பதன் சுருக்கப் பெயர் ம.பொ.சி. என்பதாகும்.

ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன் குப்பம் ( சாணான் குப்பம்) பகுதியில் 26.6.1906ஆம் ஆண்டு பொன்னுச்சாமி- சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். ம.பொ.சி. ஐந்தாம் வயதில் சென்னை புரசைவாக்கம் கிறித்துவ மிசினரிப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். இவரின் தந்தையார் கள் இறக்கும் தொழிலும், நெசவுத் தொழிலும் ஈடுபட்டும் குடும்பத்தின் வறுமை அகலவில்லை. இதன் காரணமாக ம.பொ.சி. மூன்றாம் வகுப்பிற்கு மேல் கல்வியைத் தொடர முடியவில்லை.
 
அன்னை சிவகாமி அம்மையார் கல்வி அறிவு பெற்றவர் என்பதால் அவரிடமே ம.பொ.சி. கல்வி பயின்று எழுத்தறிவை வளர்த்துக் கொண்டார். தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற சமயப் பாடல்களை தன் தாயாரிடமிருந்து கற்றுக் கொண்டு இளம்வயதிலே இலக்கிய அறிவிலும் சிறந்தவராகத் திகழ்ந்தார்.
பேராயக்கட்சியின் புகழ்மிக்கத் தலைவர் வரதராஜுலு நாயுடு அவர்கள் நடத்திய “தமிழ்நாடு” இதழில் அச்சுக் கோப்பாளராக ஏழாண்டுகள் பணியாற்றினார். அங்கிருந்தே இந்திய விடுதலை உணர்வைப் பெற்ற ம.பொ.சி. 1927ஆம் ஆண்டு பேராயக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பேராயக்கட்சி நடத்திய உப்பு சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, மதுக்கடை மறியல் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து சிறை சென்றார். 

1937இல் திருவாட்டி இராசேசுவரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 1942 ஆகத்து புரட்சிப் போரில் ஈடுபட்டு ம.பொ.சி.  சென்னை, வேலூர், தஞ்சை , அமராவதி (மகாராட்டிரம்) சிறைகளில் அடைக்கப்பட்டார். அங்கு தரப்பட்ட  தரமில்லாத உணவு  ஒத்துக் கொள்ளாமல்  கடும் வயிற்று வலிக்கு ஆளானார். ( அந்த வயிற்றுவலி தான் அவர் சாகும்வரையிலும் துன்பத்தைத் தந்தது )  உடல் எடை குறைந்து இனி பிழைக்க மாட்டார் என்ற நிலையிலே  6.11.1943இல் விடுவிக்கப்பட்டார். 
ம.பொ.சி. அமராவதிச் சிறையில் இருக்கும் போது சிறைச்சாலையை தமிழ்க் கல்லூரியாக்கி கொண்டார்.  சங்க இலக்கிய நூல்களை வரவழைத்து ஆழ்ந்து கசடற கற்றார். புற நானூற்றை படித்த பிறகே தானொரு் தமிழன் என்னும் இன உணர்வும், தமிழர்கள் தனி தேசிய இனத்தவர் என்ற தெளிவும் அவருக்குப் பிறந்தது. 
பிற்காலத்தில் அவர் நடத்திய எல்லை மீட்புப் போருக்கு சிலப்பதிகாரமே அடித்தளமானது. 
அவர் கூறுகிறார்: தமிழகத்தைத் தமிழரே ஆண்ட காலத்தில் பிறந்த புறநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடமலையாகவும் , தெற்கெல்லை குமரி முனையாகவும் கூறப்படுவதனைப் படித்த போது எனது நெஞ்சம் இறும்பூ தெய்தியது. மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவதென்பது அந்த நாட்டின் தவப்பயனாகும். அந்த எல்லைகளைப் பெண் தெய்வமும் ஆண் தெய்வமும் காவல் புரிந்து வருகின்றன என்ற செய்தியைச் சிலம்பின் மூலம்தான் முதன்முதலாக அறிந்தேன். அந்தத் தெய்வீக எல்லைகளை அன்றைய தமிழகம் இழந்து விட்டது என்பதனை நினைந்து என் நெஞ்சம் வருந்தியது. அவற்றை மீட்க வேண்டுமென்ற ஆர்வமும் என் நெஞ்சத்தில் அரும்பெடுத்தது. ”
தனது இலட்சியக் கனவை வெளிப்படுத்த 1946இல் ‘தமிழ்முரசு’ ஏட்டைத் தொடங்கினார். அதில் “தமிழ் வளர, தமிழர் வாழ , தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டுமென்றும், தமிழருக்கு சுயநிர்ணய உரிமை அளிப்பதன் மூலம் புதிய தமிழகத்தை காண்போம்” என்றும் எழுதினார்.

 
பேராயக்கட்சி புதிய தமிழகக் கோரிக்கைக்கு  ஆதரவளிக்க முன்வராத நிலையில், ம.பொ.சி.  அவர்கள் சென்னை மண்ணடி லிங்கிச்செட்டி தெருவில் 23.11.1946இல் திரு.வி.க. , தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் முன்னிலையில் “தமிழரசு கழகம்” என்னும் பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கினார். 14.1.1947இல் செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில்  நடைபெற்ற  தமிழரசுக் கழக அறிமுகவிழாவில் தைத் திங்கள் முதல்நாளை தமிழர்திருநாளாக கொண்டாடும்படி வேண்டுகோள் விடப்பட்டது.
15.8.1947இல் இந்தியா ஆங்கில ஏகாதிபத்தியத்தியத்திடமிருந்து விடுதலை பெற்றதும், ” போர் முடிய வில்லை, போர் முனை தான் மாறுகிறது” என்று முரசறைந்து விட்டு, மறுநாள் 16.8.1947இல் திருப்பதி நோக்கி பனிரெண்டு தோழர்களோடு புறப்பட்டார். அவருக்கு சிறந்த தமிழறிஞராகிய மங்கலங்கிழார், தளபதி விநாயகம் போன்றோர்  துணை நின்றனர்.

 திருவாலங்காடு, கனகம்மா சத்திரம், திருத்தணி போன்ற ஊர்களில் வட வேங்கட மீட்பின் தேவையை வலியுறுத்தி பொதுக்கூட்டங்களில் உரை நிகழ்த்தினார். இறுதியில் திருப்பதிக்கு சென்ற போது தெலுங்கர்களின் கடும் எதிர்ப்பு காணப்பட்டது. இதனிடையில், வேங்கடத்தை மீட்டெடுப்பதாக அஞ்சாது பேசிவிட்டு  தமிழகம் திரும்பினார். 
சென்னை நகரம் என்பது தொன்று தொட்டு தமிழர்களின் பூமியாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆண்ட தொண்டை மண்டலப்பகுதிக்குக் கட்டுப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தொடர்ந்து படையெடுத்து வந்த தமிழரல்லாதவர்கள்  கையில் சென்னை நகரம் இருந்த போதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்துள்ளனர்.

1912 இல் ஆந்திரா மகாசபை மூலம் விசாலா ஆந்திரா கேட்டுப் போராடிய ஆந்திரர்கள்  ‘மதராஸ் மனதே’ முழக்கத்தையும் கூடவே  எழுப்பினர். அதற்கு எதிராக  ம.பொ.சி. எழுப்பிய “தலையை கொடுத்தேனும் தலைநகர் காப்போம்” என்னும் முழக்கம் தமிழர்களை தட்டியெழுப்பியது.
1952க்குப் பின்னர் ஆந்திரர்கள் சென்னையைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். பொட்டிஸ்ரீராமுலு ் ஆந்திர மாநிலக் கோரிக்கையோடு ‘மதராஸ் மனதே’ என்று  சென்னை மைலாப்பூரில் சாகும் வரை உண்ணாப் போராட்டம் தொடங்கினார். அப்போது நேரில் சந்தித்துப் பேசிய ம.பொ.சி. அவர்கள், “சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை கைவிட்டு ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசு கழகம் ஆந்திரர்களுக்கு துணை நிற்கும்” என்று கூறினார்.

16.12.1952இல் பொட்டி ஸ்ரீராமுலு 58வது நாளில் உயிர் துறந்த போது ஆந்திரத்தில் போராட்டம் வெடித்தது. சென்னையில் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆந்திரர்கள் வெறிகொண்டு தமிழர்களை தலைநகரிலே தாக்கினர். 
ஆந்திரர்கள் போராட்டத்தைக் கண்டு  பிரதமர் நேரு அஞ்சி நடுங்கினார். உடனடியாக தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுமென்று 19.12.1952இல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அப்போது  ஆந்திரப் பிரிவினைக்காக நியமிக்கப்பட்ட இராஜஸ்தான் நீதியரசர் வாஞ்சு அவர்கள்  ஆந்திராவின் இடைக்கால தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். இதனை எதிர்த்து ம.பொ.சி. சென்னை மாநகராட்சி சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, ஆந்திரர்களுக்கு தற்காலிகமாகக் கூட சென்னையை தரக்கூடாது என்று தீர்மானம்  கொண்டு வரச்செய்தார். 1948 முதல் 1955 வரை  ம.பொ.சி. சென்னை மாநகராட்சியில் ஆல்டர் மேன் பதவி வகித்தவர். அவரின் முயற்சியால் சென்னை மாநகராட்சிக் கொடியில் புலி, வில், கயல், எனும் மூவேந்தர் சின்னம் பொறிக்கப்பட்டது இங்கு நினைவு கூறத்தக்கது.
சென்னை மாநகராட்சி தீர்மானமும், அப்போதைய  முதல்வர் இராசாசியின் பதவி விலகல் முடிவும் நேருவுக்கு கடும் நெருக்கடியைத் தந்தது. நேரு சென்னை நகரம் அல்லாத ஆந்திர மாநிலத்தை உருவாக்க சம்மதித்தார்.  25.3.1953இல் சென்னை நீங்கலாக தகராறுக்கு இடமில்லா சித்தூர் மாவட்டம் உள்பட தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
 
ஆனால்,  அதில் தகராறுக்குரிய தமிழ்ப்பகுதிகளான திருத்தணி, புத்தூர், சித்தூர், காளகத்தி, திருப்பதி, பலவனேரி ஆகிய ஆறு வட்டங்கள்  சித்தூர் மாவட்டத்தில்   இணைக்கப்பட்டிருந்தன.
ஆந்திரருக்கு துணைபோகும் நேருவின் அறிவிப்புக்கு எதிராக சித்தூர் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.  சத்தியாகிரகம், பொதுவேலை நிறுத்தம், இரயில் மறியல் என்று தொடர்ந்து  வடக்கெல்லையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.  18.5.1953இல் புத்தூரில் நடந்த வடக்கு எல்லைப்பாதுகாப்புக் குழு  பொதுக்கூட்டத்தில் தெலுங்கர்கள் புகுந்து கற்களை வீசினர். அதில் கலந்து கொண்ட ம.பொ.சி. நல்ல வேளையாக உயிர் தப்பினார்.
அதன் பிறகு 3.7.1953 இல் எல்லை ஆணையம் அமைக்கக் கோரி திருத்தணிகையில் தடையை மீறி அறவழிப் போராட்டம் நடத்தப் போவதாக ம.பொ.சி. அறிவித்தார். முதல்வர் இராசாசி போராட்டத்தை கைவிடும்படி தந்தி அனுப்பினார்.  அதற்கு ம.பொ.சி. எழுதிய கடிதம் பின்வருமாறு:

 “தலைவர்கள் வருவார்கள், போவார்கள். தமிழ்நாடு அப்படி வந்துபோகும் பொருளல்ல, என்றென்றும் நிலைத்திருக்கும் புனித பூமி. தலைவருக்குக் காட்ட வேண்டிய மரியாதைக்காகத் தமிழகத்தின் எல்லைகளைப் பறி கொடுக்க என்னால் இயலாது”

 -என்று பதில் கடிதம் எழுதி விட்டு தடையை மீறினார். இராசாசி அரசால் கைது செய்யப்பட்ட ம.பொ.சி.க்கு நீதிமன்றம் ஆறுவார காலம் சிறைத் தண்டனை வழங்கியது.

போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட நேரு அரசு சித்தூர் மாவட்டம் தகராறுக்குரிய பிரதேசம் என ஒப்புக் கொண்டது. எல்லை ஆணையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் ஓராண்டாகியும்  ஆணையம் அமைக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து ம.பொ.சி. 3.7.1954இல் சித்தூர் தினம் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தார்.

அப்போதைய முதல்வர் காமராசர்  ‘காங்கிரசுகாரர்கள் யாரும் இதில் பங்கேற்கக் கூடாது’ என்று கட்டளையிட்டார். கட்சியின் தடையை மீறி தமிழரசு கழகம் சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

1947க்குப் பிறகு ம.பொ.சி. தமிழகத்திற்கு சுயநிர்ணயம் கோரி வந்ததை கைவிட்டு   மாநில சுயாட்சி கோரிக்கையையே  வலியுறுத்தி வந்தார். இதனை காமராசர் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது பார்வையில் மாநில சுயாட்சி கூட பிரிவினைதான்.   தமிழரசு கழகத்தை முடக்குவதற்கு காமராசர்  முயல்வதாகக் கருதிய  ம.பொ.சி. 8.8.1954இல்  காங்கிரசை விட்டு வெளியேறினார்.
நேரு அரசு வாக்குறுதி அளித்தபடி, எல்லை ஆணையம் அமைக்காமல்  மூன்றாண்டுகளாக இழுத்தடித்து வந்தது. இதனைக் கண்டித்து ம.பொ.சி. தலைமையில் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழு கூடியது. அது மீண்டும் வடக்கெல்லைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டப் போரை தொடங்கப் போவதாக அறிவித்தது. 
1956ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இடைவிடாமல் போராட்டங்கள் நடைபெற்றன. ம.பொ.சி. தளபதி விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணின், கவி கா.மு.செரீப், ஜி.உமாபதி, என்.ஏ.இரஷீத் ஆகியோர் சட்டமன்றம் முன்பு தொடர் மறியல் போராட்டம்  நடத்தியதில் கைது செய்யப்பட்டனர். அதில் ஈடுபட்ட  தமிழரசு கழகத் தோழர்கள் பழனி மாணிக்கம்,  திருவாலங்காடு கோவிந்தசாமி ஆகியோர் வீர மரணமடைந்தனர்.

கடும் போராட்டத்திற்குப் பிறகே நேரு அரசு பணிந்து 1956 டிசம்பர் இறுதியில் படாஸ்கர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்க ஆணையிட்டது. அது சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகளை கண்டறிந்து 1957இல் தீர்ப்பு வழங்கியது. அதன்படி,  திருத்தணி வட்டத்தில் 290 கிராமங்கள், சித்தூரில்  29 கிராமங்கள், புத்தூரில் 320 கிராமங்களும், 417 சதுர மைல் நிலப்பரப்பும் தமிழகத்திற்கு கிடைத்தன.

 2,39,502 மக்களும் தமிழகத்திற்குள் வந்தனர். வள்ளிமலை, திருவாலங்காடு, திருத்தணி, ஓசூர் பகுதிகள் நமக்கு கிடைத்தன. சித்தூர் நகரம், புத்தூர், நகரி, புதுப்பேட்டை, ஏகாம்பரக்குப்பம் பகுதிகள் நாம் இழந்தவைகளாயின. 
 
தெற்கெல்லையில் திருவிதாங்கூர் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய  மார்சல் நேமணி, பெ.சு.மணி ஆகியோருக்கு ம.பொ.சி. துணை நின்றார். அங்கு சென்று பல்வேறு பரப்புரைகளில் ஈடுபட்டார்.
1946 முதல் 1960 வரை தமிழக எல்லைப் போரில் தீவிரம் காட்டினார். பின்னர் ம.பொ.சி.  சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” பெயர் சூட்டக் கோரி தமிழரசுக்கழகச் செயற்குழு கூட்டத்தில் 29.11.1951இல் தீர்மானம் நிறைவேற்றினார்.

1967இல் அன்றைய முதலமைச்சர் அண்ணா அவர்கள் சட்டப்பேரவையில்  “தமிழ்நாடு” பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தார். அது ஆங்கிலத்தில் டமில்நாட் (Tamil Nad) என்று இருந்தது. அதை ஆங்கிலத்திலும் Thamizh Nadu என்று திருத்தம் கொடுத்தார் ம.பொ.சி. இத்திருத்தத்தின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்ட அண்ணா அவர்கள் Tamil Nadu என்று தீர்மானத்தை முன் மொழிந்தார். அத்தீர்மானம் பின்னர் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றது.

 
மூன்றாம் வகுப்புவரை படித்த ம.பொ.சி. எழுதிய நூல்கள் 150க்கும் மேற்பட்டவை. “விடுதலைப் போரில் தமிழகம், புதிய தமிழகம் படைத்த வரலாறு, தமிழும் கலப்படமும், தமிழா?ஆங்கிலமா?, பாரதியாரும் ஆங்கிலமும், தமிழ்நாட்டில் பிற மொழியினர், ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு, ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு , விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழர் திருமணம், எனது போராட்டம், ஒளவை-யார்?, ஆகியவை இவர் எழுதியவை. இவற்றுள் “எனது போராட்டம்” நூல் வரலாற்று காலப் பெட்டகமாகும்.

 

தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் அவர் பேராயக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இச்செயல் முற்றிலும் சந்தர்ப்பவாத அரசியலாகும். இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் “சிலம்புச் செல்வர்” என்றழைக்கப்பட்ட  ம.பொ.சி. 3.10.1995இல் காலமானார். 
ம.பொ.சி. எழுப்பிய தமிழக எல்லைக் காப்பு, தமிழ்நாடு பெயர் மாற்றம், தமிழ் ஆட்சிமொழி, மாநில சுயாட்சி கோரிக்கைகள் எல்லாம் தமிழ்த்தேசிய இனத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகள் தான். ஆனால் இவற்றையெல்லாம் தடுத்துக் கொண்டிருந்த இந்திய தேசியத்தோடும்,  சமசுகிருதம்- இந்திமொழிகளோடும் அவர்  நட்புப் பாராட்டியது தவறான மற்றும் தன்னோக்குவாத  அணுகுமுறையாகும். தமிழீழப் போராட்டத்தை அவர் எதிர்த்தது ஏற்க முடியாத வரலாற்றுத் தவறாகும்.

இருப்பினும்,  தமிழக வடக்கெல்லைப் போரில் அவர் காட்டிய மன உறுதியும், விடாமுயற்சியும்,  தொடர் போராட்டமும் தான் சென்னையையும், திருத்தணியையும் மீட்டுத் தந்தன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

நூல் தரவுகள்:

 1.ம.பொ.சி. எழுதிய “எனது போராட்டம்

2. கவிக்கோ ஞானச்செல்வன் எழுதிய “சிலம்புச் செல்வர் ம.பொ.சி.”

3.கோல்டன் ந.சுப்பிரமணியம் எழுதிய “தமிழக வடக்கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும்”.
நன்றி: 

வரலாறு அறிவோம், கதிர் நிலவன், 

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் (சூன் 16-30, 2017)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard