தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு ஈ.வெ.ரா. பெரியாரின் புதிய கண்டுபிடிப்பு!
கலைமகள் செய்தியாளர்: தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்று நீங்கள் குறிப்பிட்டீர்களே?
பெரியார் : ஆமாம் சொன்னேன். என்ன தப்பு? ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போட்டுக்கிட்டுத் தமிழிலே திட்டறானே.. எப்படித் திட்டறான்? அவன் அம்மா, அக்கா, பொண்டாட்டி -எல்லாரையும்ல இழுக்கிறான்
( இந்த இடத்தில் சில நடைமுறைத் தமிழ் வசவுகளை உதாரணத்துக்குக் குறிப்பிடுகிறார் – திரு பெரியார். அவற்றை நான் எழுதாமலே வாசகர்கள் புரிந்து கொள்ளக் கூடுமே? -செய்தியாளர்)
அதே மாதிரி சண்டை வந்து இங்கிலீஷ்லே திட்டினா. .“ஃபூல்”னு திட்டலாம், “இடியட்”னு திட்டலாம். தமிழிலே திட்ற மாதிரி கேவலமாகத் திட்டறதுண்டா? அதுவும் கிராமங்கள்ல பெண்பிள்ளைகள் சண்டை போட்டுக்கிறதைக் கேட்டா நான் சொல்றது புரியும்”.
என்று பெரியார் கூறும்போது அருகிலுள்ள திரு.என்.எஸ். சம்பந்தம் , ஏன் அய்யா! இங்கே சென்னையிலே மட்டும் என்ன வாழுது? அதை விட, மோசமாயிருக்கு!” என்கிறார்.
பெரியார் தலையாட்டியவாறே, ‘உம் அப்படியா? அப்போ நான் சொன்னதிலே என்ன தப்பு? இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ்மேலே அன்பா மாறித்து. அதுதான் உண்மை. குழந்தைகளெல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேசவேணும்.
(1972 டிசம்பரில் ‘கலைமகள் ‘இதழ் சார்பாக பாணனுக்கு கொடுத்த நேர்காணல் ஈ.வெ.ரா. சிந்தனைகள் இரண்டாவது பாகம் பக்கம் 2566)
ஈ.வெ.ரா. பெரியாருக்கு முட்டு கொடுக்கும் பலரும் தமிழில் புராண, இதிகாசங்கள் படைக்கப்பட்டதாலே பெரியார் தமிழை, ‘காட்டுமிராண்டி மொழி’ என்று கூறியதாக விளக்கம் தருகிறார்கள். ஆனால் உண்மை இதுவல்ல என்பதை ஈ.வெ.ரா. பெரியார் சாவதற்கு முன்னர் அளித்த மேற்படி பேட்டி உறுதிப்படுத்துகிறது.
உலகில் உள்ள மொழிகளில் எந்தெந்த மொழிகளில் கெட்ட வார்த்தைகள் இல்லை என்று ஈ.வெ.ரா. பெரியார் பட்டியல் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். தமிழன் வீட்டு மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா. பெரியாரே வாதிடும் ஆங்கில மொழியில் இல்லாத கெட்ட வார்த்தைகளா?
ஆனால், தமிழில் அம்மாவை, அக்காவை, மனைவியை இழுத்துத் திட்டறதனாலே, தமிழைக் ‘காட்டுமிராண்டி மொழி’ என்பதாக புதிய விளக்கம் கொடுக்கிறார்.
ஆங்கிலத்தில் கூட பாஸ்டர்டு ( விபச்சாரி மகன்) என்று திட்டுகிறார்கள். பெண்ணை தேவடியாள் என்று திட்டுவதற்கு மேலை நாடுகளில் loose woman, harlot, bicycle போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இதற்காக ஆங்கிலத்தை காட்டுமிராண்டி மொழி என்று ஈ.வெ.ரா. பெரியார் கூறுவாரா?
இந்தி மேலே இருந்த வெறுப்புதான் தமிழ் மீது அன்பாக மாறியது என்று ஈ.வெ.ரா. பெரியார் கூறியதை பார்க்கும் போது தமிழ்மொழியை இந்தி அழித்துவிடும் என்பதால் அவர் இந்தியை எதிர்க்கவில்லை என்பது உறுதியாகிறது.
ஆகாத மொழி தமிழ்மொழி
அதை அழிப்பதுதான் எமது வழி
– என்று ஈ.வெ.ரா. பெரியார் தாம் முடிவு எடுத்ததை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தானே! அதை விடுத்து தமிழில் நொட்டை வார்த்தைகள் இருப்பதாகக் கூறி புதிதாக ஒரு கண்டுபிடிப்பை கூறுவது இங்குள்ள தமிழர்களை ஏமாற்றும் மோசடியன்றோ?