New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திராவிட நாடு: வரலாற்றைத் திரிக்கும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திராவிட நாடு: வரலாற்றைத் திரிக்கும்
Permalink  
 


திராவிட நாடு: வரலாற்றைத் திரிக்கும் ‘இந்து’ ஏட்டிற்கு மறுப்பு!

திராவிட நாடு: வரலாற்றைத் திரிக்கும் ‘இந்து’ ஏட்டிற்கு மறுப்பு!

திராவிட நாடு : வரலாற்றைத் திரிக்கும்
‘இந்து’ ஏட்டிற்கு மறுப்பு!

இன்றைய தி இந்து தமிழ் ஏட்டில் (20.3.2018) திராவிட நாடு கோரிக்கை ஏன் எழுந்தது? எதனால் கைவிடப்படடது? என்பதை விளக்கி கோ. ஒளிவண்ணன் (பதிப்பாளர்) என்பவர் கட்டுரை எழுதியுள்ளார். அதில் திராவிடநாடு கோரிக்கை எழுப்பப்பட்டதை சரியான வரலாற்றுக் காரணங்களோடு விளக்க வில்லை. தென் மாநில மக்களின் உரிமைக்காகதான் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டதாக கூறும் கட்டுரையாசிரியர் அது ஏன் சாத்தியப்படவில்லை என்பதை தெளிவுபட கூற வில்லை. மொழிவழி மாகாணங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திசை திருப்பவே திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது என்பதை விளக்குவதே நமது மறுப்பின் நோக்கமாகும்.

//1937இல் சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான அரசு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிய போது பெரியார் தலைமையிலான நீதிக்கட்சி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தைக் கையிலெடுத்தது//

இது தவறு. அப்போது பெரியார் தலைமையில் நீதிக்கட்சி இருக்க வில்லை. அப்போது அவர் சுயமரியாதை இயக்கத் தலைவர் தான். இந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்ற போது நீதிக் கட்சித் தலைவராக இருந்தவர் ஆந்திராகிய பொப்பிலி அரசர். அப்போது அவர் வெளி நாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தார்.

பொப்பிலி அரசர் சென்னை மாகாணத்திற்கு திரும்பிய பிறகு உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழர் பகுதிகளில் நடந்ததே தவிர, ஆந்திரப் பகுதிகளில் நடைபெறவே இல்லை. அதன் காரணமாக நீதிக்கட்சியின் தலைமை இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த முன் வர வில்லை.

11.9.1938இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் சென்னை கடற்கரையில் எழுப்பப்பட்டது. (இதை பெரியார் எழுப்பினரா, இல்லையா என்பது தனி விவாதம்!) அதன் பிறகு, சுயமரியாதை இயக்கத் தலைவராக இருந்த பெரியார் 5.12.1938இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசோடு போட்டியிட்டு தோல்வி கண்ட நீதிக்கட்சியை பொப்பிலி அரசருக்குப் பிறகு, தலைமையேற்று நடத்த யாரும் முன் வரவில்லை. இதன் காரணமாக சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாடு சிறையில் இருந்த பெரியாரை 29.12.1938இல் தலைவராக தேர்ந்தெடுத்தது. சுயமரியாதை இயக்கத் தலைவராக சிறை சென்ற பெரியார் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்ட போது, நீதிக்கட்சி தலைவராக வெளியே வந்தார். இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு நீதிக்கட்சி தான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை தந்ததைப் போல எழுதுவது பித்தலாட்டமாகும்.

//அப்போதைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கி இருந்தமையால், 1940இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ மாற்றம் கண்டது. இந்தியா பிரிட்டிஷாரிடம் விடுதலை அடைந்தாலும், நாடு ஆதிக்கச் சாதியினர், பணமுதலைகளின் கைகளில் சென்று விடும், வடவர்கள் தென்னாட்டு மக்களைச் சுரண்டி விடுவார்கள் என்ற அச்ச உணர்வுதான் .//

அப்போதைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகளும் உள்ளடங்கி இருந்ததால் திராவிட நாடு திராவிடருக்கே என்று மாற்றப்பட்டதாக வரலாற்றையே மடை மாற்றுகிறார் கட்டுரையாளர்.

ஆந்திரர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று ஒப்புக் கொண்டதில்லை. மொழிவழி மாநிலங்களாக தங்கள் மொழி பேசும் தாயகப்பகுதிகளை பிரிக்க வேண்டும் என்று தான் மூன்று இனத்தவரும் போராடி வந்தனர்.1916 முதலே ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து விசால ஆந்திரம் கேட்டு வந்த நிலையில், 1937இல் தமிழர்களும் இந்தி எதிர்ப்பைப் போரை வாய்ப்பாகப் பயன்படுத்தி மொழிவழி மாகாணம் பிரிக்க வேண்டும் என்று பல்வேறு மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றினர். இது தெரிந்தும், நீதிக்கட்சியின் திருவாரூர் மாநாட்டில் ஒரு சில தெலுங்கர்களின் நிர்பந்தத்திற்காக திராவிட நாடு என்று மடை மாற்றப்பட்டது.

அது மட்டுமல்ல, திராவிட நாடு என்பது பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் தனிநாடாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானம் பின்வருமாறு:
“திராவிடர்களுடைய கலை நாகரிகம் பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின் தேசமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் மேற்பார்வையின் கீழ் ஒரு தனி நாடாக பிரிக்க வேண்டும்.”

வடவர்களின் பொருளியல் சுரண்டலை வீழ்த்துவதில் தவறில்லை. ஆனால், பிரித்தானியரிடம் முழு விடுதலை கோராமல் அவர்களின் அரசியல் ஆதிக்கம், பொருளியல் சுரண்டலை ஏற்றுக் கொண்டு போராடுவது என்பது கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்கு பயந்து தீயில் குதிப்பதைப் போல் அல்லவா இருக்கிறது இந்தத் தீர்மானம். இதைக் கட்டுரையாளர் எங்கும் சுட்ட வில்லை.

// பெரியார், ஊ.பு.அ. செளந்தர பாண்டியன், முத்தையா, சாமியப்பன், ஆகியோர் 1942இல் கிரிப்ஸ் குழுவின் முன்பாக திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினர். ஆனால், அத்தகைய கோரிக்கையைச் சட்ட மன்றத்தில் தீர்மானமாகவோ, அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாகவோ எழுப்ப முடியும் என்று கிரிப்ஸ் குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்தது//

30.3.1942இல் நீதிக்கட்சி குழுவினர் கிரிப்ஸ் தூதுக் குழுவை சந்தித்தது உண்மைதான். திராவிடநாடு கோரிக்கையை நிராகரித்ததும் உண்மைதான். அது நிராகரிக்கப்பட்டதற்கு மற்றொரு காரணம் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், அடங்கிய திராவிட நாட்டின் மொத்த நிலப்பரப்புக்கும் பேராளர்கள் (பிரதிநிதிகள்) இல்லை என்பதாகும். இக்குழுவில் பிறமொழி பேசும் பகுதியினர் யாரும் இடம் பெறாததால் கிரிப்ஸ் குழு நிராகரித்தது என்பதை கட்டுரையாளர் மூடி மறைத்து விட்டார்.

//1947இல் நாடு விடுதலையாகி பாகிஸ்தான் பிரிந்து சென்ற போது ஜின்னா அவருக்கிருந்த பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில், திராவிடஸ்தான் கோரிக்கையைப் பற்றி சிந்திக்காததில் வியப்பேதுமில்லை//

திராவிடஸ்தான் கோரிக்கையைப் பற்றி ஜின்னா சிந்திக்காததில் வியப்பேதுமில்லை என்பது தவறானது. திராவிட நாடு கோரிக்கை என்பது சாத்தியமற்றது என்று ஜின்னாவிற்கு தெரிந்த காரணத்தால்தான் ஜின்னா அழுத்தம் கொடுக்க வில்லை. 1940இல் நடந்த திருவாரூர் மாநாட்டு தீர்மானங்களை பெரியார் மும்பை சென்று கொடுத்தும் ஜின்னா அதனை புறக்கணித்ததைப் பற்றி பெரியாரே ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965) சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்: “இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு….
கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?

பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க”.

இதையெல்லாம் சொல்ல மறந்தோ, மறைத்தோ எழுதும் கட்டுரையாளர் இறுதியாக அவரின் “திராவிட நாடு” விருப்பத்தை பின் வருமாறு கூறுகிறார்;

“இன்றைய சூழலில் திராவிட நாடு முழக்கம் மத்திய அரசிடமிருந்து இழந்த உரிமைகளை மீட்பதற்குப் பயன்படுத்தும் உத்தி மட்டுமே”

ஆந்திராவோ, கர்நாடகவோ, தங்கள் மொழி இன நலன்களுக்காக தில்லி அரசை எதிர்த்து குரல் கொடுப்பதை நாம் ஆதரிப்பதில் தவறில்லை. நாமும் தமிழ்த் தேசிய இன அடையாளத்தோடு அந்தந்த மாநிலங்கள் பின்பற்றும் வழியிலேயே தில்லிக்கு எதிராக குரல் கொடுப்போம்.

எப்போதும் கர்நாடகத்திலிருந்தோ, ஆந்திரத்திலிருந்தோ, கேரளத்திடமிருந்தோ திராவிட நாடு முழக்கம் வந்ததில்லை. நேற்றும் வந்ததில்லை! இன்றும் வரவில்லை! நாளையும் வரப்போவதில்லை! ஏனெனில், திராவிட நாடு என்பது செத்த பிணத்திற்கு ஒப்பானதாகும். அதை உயிர்ப்பிக்க எண்ணுவதுதான் தமிழர்களை ஏய்க்கும் உத்தியாக இருக்க முடியும்.

திராவிட நாடு கோரிக்கையை இந்து ஆதரிப்பதற்கு காரணமுண்டு. தமிழ்த் தேசியத்தை தமிழர்கள் கையிலெடுக்கக் கூடாது. அது ஆரியத்துவ இந்தியாவை வீழ்த்தும் நிலைக்கு செல்லும். எனவே, ஆரியத்துவ இந்தியாவை காப்பாற்ற திராவிடத்தை முன் நிறுத்தினால் தான் தமிழ்த்தேசியத்தை வீழ்த்த முடியும் என்று இந்து ஏடு கருதுகிறது. அதன் தொடர்ச்சியான வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த கட்டுரையாகும். தமிழர்கள் ஒருபோதும் இந்துவின் நயவஞ்சக ‘திராவிட’ வலையில் விழக்கூடாது!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard