New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வட்டாள் நாகராசுவை காப்பாற்றிய கருணாநிதி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வட்டாள் நாகராசுவை காப்பாற்றிய கருணாநிதி
Permalink  
 


வட்டாள் நாகராசுவை காப்பாற்றிய கருணாநிதி

வாட்டாள் நாகராசுவை வழக்கிலிருந்து
விடுவித்து காப்பாற்றிய
கருணாநிதி!

– மொழி ஞாயிறு பாவாணர் குற்றஞ்சாட்டி எழுதிய கட்டுரை!
(1970)

தமிழர்கள் மீது கன்னடர்கள் காட்டும் இனவெறிக் கொள்கை என்பது காவிரி நீர்ச் சிக்கலில் இருந்து தொடங்க வில்லை. அதற்கு முன்பே தமிழர் மீதான தாக்குதலை தொடங்கி விட்டார்கள். 1970இல் கருணாநிதி முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்றார். அப்போது மைசூர் மாநிலத்தில் (1973இல் கர்நாடகம் என்று பெயர் மாற்றப்பட்டது) கன்னட இனவெறியன் வட்டாள் நாகராசு தமிழ்நாட்டோடு இருந்த தளவாடிப் பகுதியை மைசூரோடு இணைக்கும்படி போராடி வந்தான்.

தமிழ்நாட்டிற்குள் வட்டாள் நாகராசு அத்துமீறி நுழைந்ததோடு தமிழர்கள் மீது வன்முறையை ஏவி விட்டான். அன்றைய கருணாநிதி அரசு வட்டாள் நாகராசு மீது கொலை வழக்கு தொடுத்தது.

மைசூர் மாநில முதல்வர் வீரேந்திர பாட்டீல் வேண்டுகோளுக்கும், கன்னட இனவெறியர்களின் அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து வட்டாள் நாகராசுவை கருணாநிதி விடுதலை செய்தார்.

இதுபற்றி மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் “அந்தோ வெங்காலூர்த் தமிழர்படும்பாடு” எனும் தலைப்பில் தென்மொழி ஏட்டில் கட்டுரை எழுதினார். அதில் கருணாநிதி அவர்கள் வட்டாள் நாகராசுவை குற்ற வழக்கிலிருந்து விடுவித்து ஒரு மணமகனை அனுப்புவது போல் கர்நாடகத்திற்கு அனுப்பி வைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் கடுந்தாக்குதலுக்கு உள்ளான போது கருணாநிதி அரசு அந்த மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வரவில்லை என்றும் குற்றஞ் சாட்டினார்.

கருணாநிதி வட்டாள் நாகராசுவை தப்பிக்க விட்டதன் விளைவு இன்றும் வட்டாள் நாகராசு தமிழருக்கு எதிராக திமிரோடு பேசுவதை நிறுத்த வில்லை.

கருணாநிதியால் உருவான காவிரிச் சிக்கலும், அவரால் விடுவிக்கப்பட்ட வட்டாள் நாகராசுவின் தமிழர் மீதான வன்முறையும் இன்றுங்கூட தொடர்ந்தபடிதான் உள்ளது.

அது மட்டுமின்றி, பெ.சுந்தரனார் இயற்றிய “நீராருங் கடலுடுத்த’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் கை வைக்கவும் கருணாநிதி தயங்க வில்லை. அதிலே உள்ள “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே” என்று ஒரு வரி இருக்கிறது. அந்த வரியை கன்னடர்களுக்கு பயந்து கொண்டு நீக்கி விட்டார்.

கருணாநிதியின் தமிழர் துரோக வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வது மிக அவசியம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, கருணாநிதியின் துரோகத்தையும், கன்னட மண்ணில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமையையும் மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் தமது தூய தமிழ்நடையால் வெளிப்படுத்திய கட்டுரை
பின்வருமாறு:

அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு!

“தமிழ் நாகரிகத்தின் தனிநாயகத் தன்மையே ” யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பொன்னெறி மொழியைத் தோற்றுவித்தது. இந்நெறி மொழிப்படியே , தமிழர் வெங்காலூரில் அண்மைக் காலம் வரை அக மகிழ்ந்து வந்தனர். ஆயின் இன்றோ வரலாற்றறிவும் பண்பாட்டியல்பும் இல்லாத சில கன்னடக் கயவரால் அந்நிலைமை கெட்டுள்ளது.

1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலப் பிரிவு ஏற்பட்டதிலிருந்து கடந்த 13 ஆண்டுக்காலமாக , கோவை மாவட்ட க் கோபி வட்டத் தாளவாடிக் கூற்றம் தமிழ்நாட்டின் ஒருபகுதியாக இருந்து வருகின்றது. அதன் குடிவாணர்க்கு வேண்டிய தேவைப் பொருள்களும் வாழ்க்கையேந்துகளும் தரப்பட்டும் ஏற்பாடாகியும் வருகின்றன.

இந்நிலையில், வெங்காலூர்ச் சட்டப் பேரவையைச் சேர்ந்த வாத்தல் நாகராசு என்னும் தான்தோன்றிச் சிறுதலைவர், பெயர் பெறுதற்கும் மறுதேர்தலில் வெற்றியுறுவதற்கும் திட்டமிட்டுக் குறும்புத்தனமாக ஊர் காவலர் தடையுத்தரவை மீறித் தாளவாடி புகுந்து அதைக் கன்னட நாட்டோடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்யுமாறு அங்குள்ள கன்னடியரைத் தூண்டி, சட்டப்படி தகைகக்கப்பட்டுச் சிறையிலிடப்பட்டார்.

உடனே அவரைச் சார்ந்த எதிர்க்கட்சியார் மைசூர் நாட்டுச் சட்டப்பேரவையில் துரும்பைத் தூணாக்கிப் பேராரவாரஞ் செய்தனர். இதைத் தூண்டுதலாகவுந் துணையாகவுங் கொண்டு வாத்தல் நாகராசு என்பவரைத் தலைவராகக் கொண்ட கிளர்ச்சிகாரர் ஆயிரவர், வெங்காலூர்ப் பெருந்தெருக்களூடும், ஆவண (கடைத்தெரு) மறுகு (வீதி), வழியாகவும், தங்கள் தலைவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று கத்திக்கொண்டு சென்று, கன்னடப் பொதுமக்கள் அங்குள்ள களங்கமற்ற தமிழரைத் தாக்குமாறு ஏவாமல் ஏவினர்.

அதன்விளைவாக, மறுநாளே மதுரையினின்று சுற்றுலாச் சென்ற தமிழ் உழவர் கூட்டம் வெங்காலூரில் கன்னடியரால் வன்மையாகத் தாக்கப்பட்டு, ஊர்காவலர் துணையால் உயிர் தப்பி உடனே கன்னடநாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அதன்பின் தொடர்ந்து பலநாள் அங்குள்ள தமிழர் கன்னடக் கயவரின் கொள்ளைக்கும் தீவைப்பிற்கும் குத்திற்கும் வெட்டிற்கும் ஆளாயினர்.

திரு வாத்தல் நாகராசு தகைக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவரை விடுதவை செய்யுமாறு மைசூர் முதலமைச்சர் திரு வீரேந்திர பட்டீல், தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. கருணாநிதியார்க்குத் தொலை வரியடித்தார்.

திரு.கருணாநிதியாரும் வாழ்நாள் தண்டனைக்கேதுவான குற்ற வழக்கை நீக்கித் திரு வாத்தல் நாகராசை மனமகனை அனுப்பி வைப்பது போல் மதிப்பாக இன்னியங்கியிற் கொண்டு போய் அவரில்லஞ் சேர்க்குமாறு, கோவைத் தண்டலாளர்க்கு உடனே உத்தரவிட்டு விட்டார்.

அதன் நிறைவேற்றம் திரு வாத்தல் நாகராசையும் அவரால் ஏவப்பட்ட கன்னடக் குண்டரையும் திருத்துவதற்கு மாறாக, அவர் முன்னிலும் பன்மடங்கு தமிழரை இழிக்கவும் பழிக்கவும் அழிக்கவும் ஒழிக்கவும் தூண்டிவிட்டது.

1970 பிப்ரவரி 4ஆம் நாள் கன்னட நாட்டு முதலமைச்சர் அங்குள்ள தமிழர்க்குக் கன்னடர்க்குப் போன்றே முழுப்பாதுகாப்பும் அளிக்கப் படுமென்றும் , முன்போல் தீங்கு ஒருபோதும் நேராதென்றும் உறுதியளித்தார். ஆயின், அது சொல்லளவின்றிச் செயலளவில்லை. முன்பு வெளிப்படையாக நிகழ்ந்த அட்டூழியங்களெல்லாம் இன்றும், துணையற்ற நிலையிலும் இராக்காலத்தும் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தொலைபேசி நிலைய ஊழியர் இரவில் வேலைக்குச் சென்றாலும் வேலை முடிந்து வீடு திரும்பினாலும் தனித்த நிலையில் கத்திக்குத்து; இராக்காலத்தில் வீட்டில் படுத்திருந்தால் வெளியே தீ வைப்பு; வெளியே படுத்திருந்தால் கத்திக்குத்து; தனிப்பட்ட கடைகளில் இரவும் பகலும் கொள்ளையடிப்பு, திரு பழனி என்பவர் முதலமைச்சர் காப்புறுதி கூறிப் பன்னாட்குப் பின்னரே மண்டையில் வெட்டப்பட்டார். அடியுண்ட பேர், பற்பலர். அவருள் தன்மானமுள்ளவர் தாம் பட்டதை வெளிப்படுத்த வில்லை.

கன்னட நாட்டு முதலமைச்சர் வருகின்ற பொதுத் தேர்தல் விளைவு நோக்கிக் கயவரையுங் குண்டரையும் கட்டுப்படுத்த வியலாத நிலைமையிலிருப்பதாகத் தோன்றுகின்றது.

கன்னடக் கிளர்ச்சியாளர் என்றும், கன்னட சேனை என்றும், கன்னட நாட்டு எல்லைப்புறக் கிளர்ச்சிக் கூட்டம் என்றும், பல்வேறு கன்னட இன மொழி நாட்டு வெறியாளர் அமைப்புகள் இருக்கின்றன. அதனால், இதுவரை கன்னடர் எவருக்கும் எட்டுணைச் சேதமும் விளைந்ததில்லை. ஆயின், தமிழரோ பல்வகையில் அல்லற் பட்டதுடன் , இரவும் பகலும் அமைதியின்றி, அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

அவருள் பெரும்பாலார் தி.மு.க. கட்சியினராயிருந்தும் , அது நோக்கியேனும் இற்றைத் தமிழ் நாட்டரசு அவர்க்குப் பாதுகாப்பு அளிக்க முன் வரவில்லை.

அண்மையில் வெங்காலூர்த் தமிழ்ச் சங்கக் கட்டடத் திறப்பிற்குச் சென்ற ஒரு பெருந்தமிழர் பேராசிரியரும் இச்செய்தி பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

திரு. வாத்தல் நாகராசு தமிழர் சேனையைக் கலைக்குமாறு எச்சரிக்கின்றார். கன்னட சேனை தமிழரை அடங்கி நடக்குமாறு அச்சுறுத்துகின்றது. ஈழத்திலும், கடாரத்திலும், மலையாவிலும் தமிழன் வெளியேற்றப் பட்டதற்கு மேல் வெங்காலூரினின்றும் வெளியேற வேண்டுமோ?

மானங்கெட்ட மழுங்கல் தமிழா! இனியாகிலும் விழித்தெழுந்து இனத்தைக் கா.

-மொழி ஞாயிறு பாவாணர்
(தென்மொழி, சுவடி:7, ஓலை :12 , 1970)
“பாவாணர் பேருரைகள்”
நூலிலிருந்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard