எஸ்.வி.ராஜதுரை வரலாற்றை குடியரசோடு சுருக்கக்கூடாது!
வரலாற்றை வசதிக்கேற்ப வளைக்கக்கூடாது என்ற தலைப்பில் “தி இந்து ” (24.5.2017 ) ஏட்டில் மார்க்சிய- பெரியாரிய ஆய்வாளர் எதிர்வினை ஆற்றியுள்ளார். சில நாட்களுக்கு முன் செ.அருட்செல்வன் என்பவர் ஒரு அதே “தி இந்து” ஏட்டில் கட்டுரையொன்றை எழுதி்யிருந்தார்.
அதில் நீதிக்கட்சியின் ஆங்கிலக் குரலாக ஒலித்தது சண்டே அப்சர்வர் ஏடு என்றும், இவ்வேட்டை நடத்திய பி.பாலசுப்பிரமணியம் என்பவர் அண்ணாவின் அரசியல் ஆசான் என்றும் எழுதியிருந்தார். பெரியார் தான் அண்ணாவிற்கு ஆசானாக இருக்க முடியும் என்பது தான் எஸ்.வி.ஆரின் எதிர்வினை.
அதில் திராவிடர் கழகம் பெயர் மாற்றம் குறித்து பி.பா.அவர்கள் கருத்து மாறுபாடு கொண்டதை குறிப்பிடும் போது குடியரசு ஏட்டைக் காட்டி பதுங்கிக் கொள்வதைத் தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
1944ஆம் ஆண்டு சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பி.பா. அவர்கள் தமிழர் கழகம் என்ற ஆலோசனையை கூறியதாகத் தெரிய வில்லை என்கிறார். அதற்கு ஆதரவாக பெரியார் நடத்திய குடியரசு ஏட்டைக் காட்டி எதுவும் இல்லை என்கிறார்.
பெரியாரை முழுவதும் கரைத்துக் குடித்த எஸ்.வி.ஆர். அவரின் குடியரசு ஏட்டை மட்டும் படித்து விட்டு எழுதக் கூடாது.
பெரியாரை அண்ணாவின் ஆசானாக கூறத் தெரிந்தவருக்கு அண்ணா நடத்திய திராவிட நாடு ஏட்டை படித்து உண்மையை தெளிவு படுத்தியிருக்க வேண்டும்.
“அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் ” என்றொரு நூலை செ.அருட்செல்வன் எழுதியுள்ளார். இந்நூலை ஆனந்தவிகடன் வெளியிட்டுள்ளது. சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம் என்பவர் அண்ணாவோடு வாதிட்ட செய்தியை இந்நூலில் வெளியிட்டுள்ளார்.
சண்டே அப்சர்வர் என்பது ஆங்கில நாளேட்டின் பெயராகும். இதை நீதிக்கட்சி பிரமுகர் பி.பாலசுப்பிர மணியன் என்பவர் நடத்தி வந்தார். பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு, ஆகியவற்றை உள்ளீடாகக் கொண்டது. ஜின்னா, அம்பேத்கர் ஆகியோர் இவ்வேட்டின் தீவிர வாசிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாநாட்டிற்கு முந்தைய நாள் அண்ணாவோடு பி.பாலசுப்பிரமணியம் நடத்திய உரையாடல், அதற்கு அண்ணா அளித்த தவறான மறுமொழி, அதன் மூலம் அண்ணாவின் பாகுபாட்டை வெளிக்காட்டும் இன உணர்ச்சி ஆகியவற்றை அண்ணா எழுதிய ‘திராவிட நாடு’ இதழ் கொண்டே அம்பலப்படுத்தியுள்ளார் அருட்செல்வன்.
இனி அண்ணா ‘திராவிடநாடு’ இதழில் எழுதியுள்ளதை காண்போம்.
“மாநாட்டுக்கு முன்னாள் மாலை சேலம் சென்றேன். ஏற்கெனவே அங்கு தோழர்கள் பாண்டியன், வி.வி.இராமசாமி, சண்டே அப்சர்வர் ஆசிரியர், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் வந்திருந்தனர்…. அது சமயம் நண்பர் பாலசுப்பிரமணியம் சொன்னது ஒன்று தான். அதாவது ஆந்திரர், கேரளர் ஆகியோரின் கருத்து தெரியாமல் எப்படிப் பெயரை மாற்றுவது என்பது தான்.
” ஆந்திர நாடு செல்லக்கூடிய தாங்களும் கேரளம் செல்லக்கூடிய நண்பர் நெட்டோ அவர்களும் இதைச் செய்திருக்க வேண்டும். இனியேனும் செய்யுங்கள், அதை விட்டு தமிழ்நாட்டிலே வேலை செய்யும் எங்களைத் தாக்க இதனையும் சாதகமாக்குகிறீர்களே? சரியா என்று நான் கேட்டேன். புன்னகையைத் தான் ‘சண்டே அப்சர்வர்’ பதிலாகத் தந்தார். நண்பர் நெட்டோ அவர்கள் ‘எனக்கு மலையாளம் மறந்தே போச்சே’ என்றார்!” (க.திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு தொகுதி 2)
மேற்படி அண்ணாவிடம் வாதம் நடந்த போது அண்ணா குறிப்பிடுவது போல் பெயர் மாற்றுவது பற்றி பேச்சு நடந்துள்ளது. பி.பா. அவர்கள் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் எனப் பெயரிட வேண்டுமானால் தமிழர்களையும் சேர்த்து இதர திராவிடர்களான ஆந்திர, கன்னட, கேரள மக்களின் கருத்து தெரியாமல் எப்படி திராவிடர் கழகம் என பெயர் மாற்றுவது? கருத்தும் ஏற்பிசைவும் இன்றி எப்படி பெயரை சூட்ட இயலும்? எனவே தமிழர் கழகம் என்று பெயர் சூட்டுவது தான் ஏற்புடையதாக இருக்கும் என்று ஆணித்தரமாகவே வாதிட்டுள்ளார் என யாராலும் யூகிக்க இயலும்.
அதனால்தான் மேற்படி அண்ணா ஆந்திரா செல்லக் கூடிய தாங்களும் (இங்கு தாங்களும் என அண்ணா பி.பா.வைத்தான் குறிப்பிடுகின்றார். பிறப்பால் தமிழரான பி.பா. நெல்லூரில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை அங்கு முடித்தவர்) அடுத்து கேரளா செல்லும் நண்பர் அவர்களும் (பிறப்பில் மலையாளியான நெட்டோ ஒரு சிறந்த வழக்கறிஞரும் பெரியார் பற்றாளாரும் ஆவார்.) இதைச் செய்திருக்க வேண்டுமல்லவா என எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். இந்த வாக்குவாதம் எப்படிச் சென்றுள்ளது என்பதை நோக்கும் போது, பிறப்பால் தமிழரான நெல்லூரில் வளர்ந்த பி.பா. ஆந்திரா முழுவதும் சென்று கருத்துப்பரப்புரை செய்து ஆந்திரத் திராவிடர்கள் அனைவரின் ஆதரவும் பெற வேண்டுமாம். அதே போல் பிறப்பால் மலையாளியான நெட்டோ தனது பூர்விகமான கேரளம் சென்று கேரளத் திராவிடர்கள் அனைவரின் ஆதரவு பெற வேண்டுமாம். இதைத் தான் அண்ணா எதிர்பார்க்கிறாரா?
அண்ணாவின் வாதத்தில் மற்றொரு விபரீதம் உள்ளது.
/அதை விட்டு, தமிழ்நாட்டிலே வேலை செய்யும் எங்களைத் தாக்க இதனையும் சாதகமாக்குகிறீர்களா? சரியா என்று நான் கேட்டேன். புன்னகையைத்தான் சண்டே அப்சர்வர் பதிலாகத் தந்தார்/
எனக் குறிப்பிடுவதில் ஒரு பெரும் முரண்பாடுள்ளது. ஒரே அமைப்பில் ஒரே கொள்கையின் கீழ் செயல்பட்டு வரும் போது ‘ தமிழ்நாட்டிலே வேலை செய்யும் எங்களையும் தாக்க’ என அண்ணா அவர்களிடமிருந்து தம்மை (பெரியாருடன் சேர்த்து தான்) தனிமைப்படுத்திக் கொண்டு அவர்களை பிரித்து விட ஏன் முயற்சிக்கிறார் என நமக்கு விளங்க வில்லை.
கட்டமைக்கப்பட்டு வரும் ஒரு இயக்கத்தின் முன்னோடிகளிடம் கருத்து வேறுபாடுகள் வருவதும், அதை வாக்குவாதம் மூலம் வெளிப்படுத்தி, பின்னர் ஒருமித்த ஓர் இறுதிக் கருத்துநிலைக்குக் கொண்டு வருவதுதான் இயல்பு. ஆனால் இயல்பு நிலையை மீறி ‘எங்களைத் தாக்க’ எனக்கூறி, அவர்களிடமிருந்து பிரித்துப் பேசுவது, இங்கு அண்ணாவின் நிலை நீதிதேவன் மயக்கம் போல நமக்கு மயக்கம் தருகிறது.
சரி, நானும் உங்களிருவருடன் இணைந்து ஆந்திர, கேரள, மாநிலத்திற்கு வருகை புரிந்து பெயர் மாற்றப் பிரச்சாரத்திற்கான அவர்களின் ஆதரவை நாடுகிறேன் என அண்ணா கூறியிருக்கலாமே? அது ஏற்புடையதாக இருந்திருக்குமே!…
அண்ணா, ‘புண்ணகையைத்தான் பதிலாகத் தந்தார் சண்டே அப்சர்வர்’ எனக் குறிப்பிடுவதில் புன்னகையின் பொருள் வேறு என்றும் நம்மால் யூகிக்க முடிகிறது.
எப்படியோ மேற்படி அண்ணா விவாதத்தின் போது, அனைவரையும் சமாதானப்படுத்தி தற்போது திராவிடர் கழகம் எனப் பெயர் பதிவு செய்து கட்சி நடத்துவோம். பின்னர் ஓராண்டு கழித்து, நாம் நம் செயல்பாட்டை கலந்தாலோசனை செய்து மாற்று நடவடிக்கை எடுப்போம். இப்போது பெரியார் தலைமையில் இயக்கத்தை வளர்த்தெடுப்போம் என சமாதானம் செய்து அவர்களைச் சாதுர்யமாக சமாளித்திருப்பது நமக்குத் தெளிவாகப் புரிகின்றது,” என்கிறார் நூலாசிரியர் அருட் செல்வன்.
இதனடிப்படையிலே பார்க்கும் போது சேலம் நீதிக்கட்சி மாநாட்டிலே கி.ஆ.பெ.வி.யோ, சண்டே அப்சர் பாலசுப்பிர மணியமோ தங்கள் நிலைப்பாட்டை முன்னிறுத்தாமல் கட்சியின் நலன்கருதி கட்சிக் கொள்கையையும் , பெரியாரையும் உயர்த்தியும் பேசியிருக்கலாம்.
இதை வைத்துக் கொண்டு பெரியார் அவர்கள் சண்டே அப்சர் பாலசுப்பிரமணியம், கி.ஆ.பெ.விசுவநாதம், அண்ணல் தங்கோ, செளந்தர பாண்டியனார் ஆகியோரின் மாறுபாடான கருத்துகளை கட்சிக் கூட்டத்திற்குள் விவாதம் நடத்தியதையெல்லாம் மறைத்து விட்டு தன்னை புகழ்ந்து பேசியதை மட்டும் குடியரசு ஏட்டில் வெளியிடுவதில் என்ன அறிவு நாணயம் இருக்க முடியும்,?
பெரியாருடன் மாறுபாடு கொண்ட நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக அருவெறுப்பாக கூட்டத்தில் உள்ள சிலர் (பெரியாரின் தூண்டுதலில்) கூச்சலிட்டதை குடியரசு ஏடு வெளியிடுவது வக்கிரமின்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
திராவிடக் கருத்தியலுக்கு எதிரான தமிழ்த்தேசிய உணர்வு 1944ஆம் ஆண்டு சேலம் நீதிக்கட்சி மாநாட்டுக்கு முன்பு இருந்து வந்துள்ளது. இதை எஸ்.வி.ஆர். சொல்லாவிட்டாலும் நாம் சொல்வோம்.
1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த பெரியாரோ நீதிக்கட்சிக்கு தலைவரானவுடன் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை கை கழுவினார். ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று திசை மாற்றிப் பேசினார். இவருக்கு முன்னால் இருந்த நீதிக்கட்சி தலைவர் பொப்பிலி அரசரிடமிருந்த தெலுங்கு தேசிய உணர்ச்சியைப் போல் பெரியாருக்கு தமிழ்த் தேசிய உணர்ச்சி ஏற்படவில்லை.
நீதிக்கட்சிக்குள் இருந்த சில தெலுங்கர்களின் முடிவுக்கு பெரியார் அடிபணிந்து 1940 இல் நடந்த திருவாரூர் நீதிக்கட்சி மாநாட்டில் திராவிடநாடு தீர்மானத்தை நிறைவேற்றினார். அதன்பிறகு பெரியாரின் சர்வாதிகாரப் போக்கு பிடிக்காமல் பலர் பெரியாரின் தலைமையை மாற்ற விரும்பினர். இதற்கு அண்ணாவும் முழு ஒத்துழைப்பு தந்தார். இக்காலத்தில் தான் நீதிக்கட்சி பொதுச் செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதம் பெரியாரின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக குரல் கொடுத்தார். திராவிட நாடு கொள்கையிலும் மாறுபட்ட நிலையை மேற்கொண்டார். அண்ணாதுரை சென்னையில் நடைபெறவுள்ள நீதிக்கட்சி இளைஞர் மாநாட்டிற்கு அழைத்த போது கி.ஆ.பெ.விசுவநாதம் கலந்து கொள்ள மறுத்தார். கி.பெ.வியை அமைதிப்படுத்த அண்ணா விரும்பினார். அதன்படி அவருக்கு கடிதமொன்றை தீட்டினார். அது வருமாறு:
15.1.1942இல் சென்னையில் ஜஸ்டிஸ் இளைஞர் சங்க மாநாடு நடைபெற உள்ளதால் அம்மாநாட்டிற்கு தாங்கள் தலைமை வகிக்க விரும்புகின்றேன். மறுக்க வேண்டாம். திராவிடநாட்டுப் பிரிவினை பற்றி திருவாரூரில் தீர்மானம் நிறைவேறி இருப்பதால் அதனை தாங்கள் எதிர்ப்பது முறையாகாது. திராவிட நாட்டுப் பிரிவினை என்பது என்பது தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல.”
( இக்கடிதம் வ.மணிமேகலை எழுதிய “முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒரு திறனாய்வு நூலின் பின் இணைப்பில் உள்ளது)
கி.ஆ.பெ.விசுவநாதம் கருத்துக்கு மதிப்பளிக்கத் தயாராக இல்லாத பெரியார் அவர்கள் கட்சியில் செல்வாக்குடன் இருந்த அண்ணாவோடு இணக்கம் கொண்டார். அடுத்த கட்டமாக திராவிட நாடு கோரிக்கையோடு நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றவும் முடிவு செய்தார்.
அப்போது செளந்தர பாண்டியனாருக்கு அண்ணா ஒரு கடிதம் தீட்டினார். அதில் வரக்கூடிய சேலம் (1944) மாநாட்டிற்கு கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களை வர வழைக்க வேண்டும். அதற்கு தாங்கள் நேரில் சென்று அவரை சந்தித்து உண்மை நிலைமைகளை விளக்கி கூறும்படியும் கேட்டுக் கொண்டார். அக்கடிதத்தில் அண்ணாதுரை திராவிடம் குறித்து கி.ஆ.பெ.வி.யின் முரண்பட்ட கருத்தையும் தெரிவித்திருந்தார். அது வருமாறு:
காஞ்சிபுரம் 12.3.1944
அன்புடைய தலைவருக்கு
வணக்கம். தங்கள் கடிதம் கண்டேன். மகிழ்ந்தேன். KAP அவர்கள் வருவது பற்றி மிக்க சந்தோஷமே. மாநாட்டுக்கு முன்பு அவரை வரவழைத்துத் தாங்கள் கட்சியின் இன்றைய நிலையைக் கூறுதல் அவசியம் என்று கருதுகிறேன்… குறிப்பாக அவர் 1. கட்சிக்காக தரப்பட்ட நிதி 2. கட்சியின் பத்திரிகை 3. கட்சித் தலைவரின் ஏகபோக உரிமை 4. அமைப்பு முறை இல்லாமை என்பவைகளையே வற்புறுத்துவார். 5. இவற்றுடன் தமிழ்நாடு தனிநாடாதல் வேண்டும். திராவிடநாடு அல்ல. என்று கூறுவார்…
அதுபோலவே நண்பர் KAP தவிர, மற்றவர்கள் திராவிட நாடு என்ற குறிக்கோளோ, வரலாறு, இனப் பண்பு, முதலியவற்றுக்கு ஏற்றது என்பதையும் திராவிட நாடு என்னும் திராவிட கூட்டாட்சி என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.
(பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் எழுதிய “சுயமரியாதை இயக்கம்” என்னும் நூலின் பின் இணைப்பில் உள்ளது.)
அண்ணா எழுதிய கடிதங்கள், திராவிட நாடு இதழ்கள், செளந்தர பாண்டியனார் நாட்குறிப்பு ஆகியவற்றில் திராவிடக் கருத்தியலுக்கு எதிரான உரையாடல்கள் காணக்கிடைக்கின்றன. எஸ்.வி.ஆர். இவற்றை எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தி எழுதாமல் பெரியாரின் குடியரசை தூக்கி கொண்டாடுவது தவறான முடிவாகும். எனவே எஸ்.வி.ஆர். எழுத்து நேர்மையை முதலில் கடைபிடிக்க முன்வர வேண்டும்.