New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கண்ணகியைப் பெரியார் பழிக்கலாமா? ம.பொ.சி.


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கண்ணகியைப் பெரியார் பழிக்கலாமா? ம.பொ.சி.
Permalink  
 


கண்ணகியைப் பெரியார் பழிக்கலாமா?

img_20180710_56413770204219.jpg?w=1108

கருஞ்சட்டைத் தலைவர் கண்ணகியைப் பழிப்பதா?

– ம.பொ.சி. எழுதிய ஆவேசக்கட்டுரை!

1943இல் திராவிடர் கழகம் கம்ப இராமாயணத்தை ஆரியக் காப்பியம் என்றும், அதில் புகழ்பாடும் இராமன் ஆரிய மன்னன் என்றும் கூறி, தீவிரமாக எதிர்த்து வந்தது. பெரியாரோடு சேர்ந்து, அவரது சீடர் அண்ணாதுரையும் ‘நீதி தேவன் மயக்கம்’ என்ற பெயரில் கம்பனைச் சாடினார். அத்தோடு, இராமாயணத்தை எரிக்கும் முயற்சியிலும் திராவிடர் கழகம் ஈடுபட்டது. அந்த முயற்சிக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின. பின்னர் ஆர்.கே.சண்முகஞ் செட்டியாரின் வேண்டுகோளுக்கு இணங்க கம்ப இராமாயண எரிப்பு முயற்சி கைவிடப்பட்டது.

ஆனால், சிலப்பதிகாரத்தை பொறுத்தவரை அதன் மீது கை வைக்க திராவிடர் கழகத்திற்கு சற்று ஒரு தயக்கம் இருந்தே வந்தது. அதற்குக் காரணம் சிலப்பதிகாரம் தமிழ் மண்ணில் உருவான காப்பியம்; மூவேந்தர்கள் புகழ்பாடும் காவியம்; வட நாட்டு ஆரிய மன்னன் கனக விசயனை தமிழ் மன்னன் சேரன் செங்குட்டுவன் தோற்கடித்து , வெற்றி பெற்ற காதை இதில் உண்டு.

வட நாட்டு ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு சிலப்பதிகாரக் கதையை ஒரு உத்தியாக திராவிடர் கழகம் பயன் படுத்தி வந்தது.

1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விளக்கும் நூல்” தமிழன் தொடுத்த போர்”. இந்நூலை எழுதியவர் மா.இளஞ்செழியன். வெளி வந்த ஆண்டு 1948. திராவிட இயக்கத்தவர்களால் பெருமையாகப் போற்றும் இந்நூலுக்கு பெரியாரும், அண்ணாவும் அணிந்துரை தந்துள்ளனர்.

இந்நூலின் உள்ளே, “தமிழன் தொடுத்த போர்- சேரன் செங்குட்டுவன் பரம்பரை கனகவிசயர் பரம்பரையை வீழ்த்திய காதை” என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதே போல், திராவிடர் கழகத்தின் சார்பில் வெளிவந்த ‘விடுதலை’ ஏடும் சிலப்பதிகாரம் குறித்து உயர்வாகவே பாராட்டி எழுதி வந்தது. அப்போது திராவிடர் கழக இலக்கிய அணி பரப்புரையாளராக இருந்தவர் சி.இலக்குவனார். அவர் ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்பை விளக்கி கூட்டமொன்றில் பேசினார்.

அதிலே, “சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப் படுத்தி பேசும் இலக்கியம்… சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ் நூல் … இராமாயணத்தை போல், பெரிய புராணத்தைப் போல், சீவக சிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மையை உண்டாக்கும் நூலல்ல, இதுதான் அந்த நூலுக்குரிய தனிச் சிறப்பு” என்றும் பேசினார்.

இலக்குவனாரின் உரையை விடுதலை ஏடு ( 15.3.1951) ‘சிலப்பதிகாரத்தின் பெருமை” என்று தலைப்பிட்டு வெளியிட்டது.

ஒரு வாரம் கழித்து, அதே ‘விடுதலை’ ஏட்டில் ( 21.3.1951) தமிழறிஞர் சாமி சிதம்பரனார் அவர்கள் சிலப்பதிகாரத்தின் பெருமையை விளக்கி நீண்ட கட்டுரையை எழுதினார். விடுதலை ஏடு கொடுத்த தலைப்பு இதுதான்;
“சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை? பகுத்தறிவு , ஜனநாயகம், தன்மானமே தமிழர் பண்பு”

சாமி சிதம்பரனார் அதிலே, “கண்ணகி சிறந்த குணமுடையவள். அழகும், அரிய குணங்களும் அவளிடமிருந்தன” என்று கூறி விட்டு, சிலப்பதிகாரம் எழுதப் பட்டதற்கான மூன்று காரணங்களை அருமையாக விளக்குகிறார்:

“சிலப்பதிகாரக் கதையிலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களைப் புகுத்திப் படித்தால், இந்த மூன்று உண்மைகளை மறுக்க முடியாது.

1.தெய்வீகச் சடங்குகளால் பயனில்லை.

2. அறிவின்றி, விசாரணையில்லாமல் நிரபராதிகளுக்குத் தண்டனை அளிக்கும் அரசாங்கம் பொது மக்களால் அழிக்கப்படும்.

3. தமிழன் தன்னை அவமதிக்கும் எவனுக்கும் தலை வணங்க மாட்டான். தன்னை அவமதிப்போரை அடக்கித் தன்மானத்தை காப்பாற்றியே தீர்வான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தமிழன் ஏமாற மாட்டான்.

இந்த உண்மைகளை விளக்கவே எழுதப்பட்டது. இதை மெய்ப்பிக்க நாம் எப்பொழுதும் தயார். எந்த இடத்திலும் வாதிக்கவும் முன் நிற்போம்” என்று அறை கூவல் விடுத்தார்.

அதுவரைக்கும் சிலப்பதிகாரத்தை பாராட்டி வந்த விடுதலை ஏட்டில், பத்து நாட்கள் கழித்து சிலப்பதிகாரம் குறித்து எதிர்மறையான கருத்துகள் வெளியிடப்பட்டது.

30.3.1951இல் காங்கேயத்தில் பேசிய பெரியார் சிலப்பதிகாரத்தை கடுமையாகச் சாடினார். அது பின்வருமாறு:

“சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல் வேறு என்ன ? ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சி அளிக்கிறது! ‘

‘கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பணமூட்டைகளின் திருமணம். ‘

‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா ?

-இப்படி கண்ணகிப் பாத்திரப் படைப்பிற்கு எதிராக திடீரென்று பெரியார் பேசியதற்கு காரணம் சாமி சிதம்பரனாரோ, இலக்குவனரோ காரணம் அல்ல. ம.பொ.சி.தான் முழு முதற் காரணமாவார்.

அப்போது தான் ம.பொ.சி. “சிலப்பதிகார மாநாடு” (24.3.1951) ஒன்றை சிறப்பாக நடத்தி முடித்திருந்தார். தமிழறிஞர்கள் இரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார், ந.சஞ்சீவி ஆகியோர் அந்த மாநாட்டில் பங்கேற்று சிலப்பதிகாரத்தை பாராட்டிப் பேசிய உரையை செய்தி ஊடகங்கள் பரபரப்பாக்கி வெளியிட்டிருந்தன.

இதனைப் பெரியாரால் பொறுக்க முடிய வில்லை. தமது விடுதலை ஏட்டில் சிலப்பதிகாரத்தின் சிறப்பை வெளியிட்டதைக் கூட மறந்து கண்ணகியை வசை பாடத் தொடங்கினார். அன்றிலிருந்து தீவிரமாக கண்ணகி எதிர்ப்பு புராணத்தை பாடத் தொடங்கியவர் தான் பெரியார். தமது இறுதிக்காலம் வரை கண்ணகி எதிர்ப்பை நிறுத்திக் கொள்ள வில்லை.

பெரியாரின் சிலப்பதிகார எதிர்ப்பு பேச்சிற்கு பதிலடி தரும் வகையில் ம.பொ.சி தமது தமிழ் முரசு (ஏப்ரல்-1951) ஏட்டிலே, “கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்” தலைப்பிலே நீண்ட கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரை அன்றைய இலக்கிய உலகில் பெரிதும் வரவேற்கப்பட்டு அனைவராலும் பாராட்டு பெற்றது.

ம.பொ.சி. எழுதிய கட்டுரை :

கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர் ‘ என்ற தலைப்பிட்டு சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் 1951 ஏப்ரல் மாத தமிழ்முரசில் எழுதிய தலையங்கம்:

சிலப்பதிகாரத்திற்குச் சிறப்பு தேடத் தேசியவாதிகள் மாநாடு கூட்டுகிறார்கள் என்ற செய்தி கேட்டவுடனே, திராவிடர்கழக வட்டாரத்தில் கலக்கங் கண்டுவிட்டது.

காங்கிரஸ்காரர்கள் என்றாலே வடமொழிக்கும், வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள், தமிழுக்கும், தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை காலமும் செய்துவந்த பிரச்சாரமெல்லாம் பொய்யாய் – கனவாய் – பழங்கதையாய்ப் போய்விடுமே என்பதுதான் கலக்கத்திற்குக் காரணம். ஆகையால் சிலப்பதிகார மாநாடு நடக்கும் முன்பே சிலம்பின் பெருமையைப் பற்றி ‘விடுதலை ‘ தானே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டது.

திராவிடர் கழகத்தின் இலக்கியப் பிரசாரகரான புலவர் இலக்குவனார் ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்பினைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதை 15-3-51-ல் ‘சிலப்பதிகாரத்தின் பெருமை ‘ என்ற தலைப்பு கொடுத்துப் பிரசுரித்தது விடுதலை.

மீண்டும் 29-3-51 இதழில் சாமிசிதம்பரனாரைக் கொண்டு சிலப்பதிகாரத்தைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதச் செய்து அதையும் பிரசுரித்தது விடுதலை.

இவற்றால் நாம் மருளவில்லை; மகிழ்ந்தோம். சிலம்பைப் பழித்தவர்களும் அதன் சிறப்பை உணர்ந்து பாராட்டுவதென்றால் மகிழத்தானே வேண்டும். மொழித்தொண்டு கட்சிப்பூசல்களுக்கு அப்பாற்பட்டதல்லவா ?

ஆனால் ஈ..வே.ரா. இத்தனைக்கும் எதிர்மாறான போக்கிலே 30-3-51-ல் காங்கேயத்தில் சிலப்பதிகாரத்தைப் பழித்துப் பேசியிருக்கிறார்.

‘உண்மையான திராவிடன் – தமிழ்மகனாக – இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா ? பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக நடத்தப்படுவது என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும் ? ‘ – என்று சிலப்பதிகார மாநாடு நடத்தியவர்களுக்குச் ‘சிறப்புரை ‘ வழங்கியிருக்கிறார் ஈ.வே.ரா.

அவர் கருத்துப்படி, சிலப்பதிகார மாநாடு நடத்துவோர், அந்தக் காவியத்தின் சிறப்புப்பற்றிப் பேசுவோர் அத்தனைபேரும் போலித்தமிழராகின்றனர். இதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பைப் புலவர் பெருமக்களிடம் விட்டு விடுகிறோம்.

‘சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல் வேறு என்ன ? ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சி அளிக்கிறது! ‘ என்கிறார் ஈ.வே.ரா.

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதுபோல் எப்போதோ எதற்காகவோ ‘ஆரியம் ‘ என்ற வெறுப்பேற்பட்டதன் காரணமாக, காண்பதெல்லாம் ஆரியமாகக் காட்சியளிக்கிறது ஈ.வே.ராவுக்கு!

கொடுங்கோலனை எதிர்த்துப் போராடும் கண்ணகியின் புரட்சி ‘ஆரியம்! ‘

அறியாது செய்த பிழைக்கு தனது உயிரையே அர்ப்பணிக்கும் நெடுஞ்செழியனின் தியாகம் ‘ஆரியம்! ‘

அரசன் உயிர்நீத்த அக்கணமே தானும் உயிர்நீத்த கோப்பெருந்தேவியின் அன்பு நிறைந்த காதல் ‘ஆரியம்! ‘

வாய்கொழுத்துப் பேசிய வடவேந்தருடன் போரிட்டுத் தமிழரின் ஆற்றலைப் புலப்படுத்திய செங்குட்டுவனின் செயல் ‘ஆரியம்! ‘

மூன்றாகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகத்தை ஒன்றாகப் பிணைத்துக் காட்டிய இளங்கோவனின் சித்திரம் ‘ஆரியம்! ‘

பரத்தையர் குல மகளுக்குப் பிறந்தும் ஒருவனையே காதலித்து வாழ்ந்து அவன் இறந்தபிறகு வாழ்விற்குரிய இன்பங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட மாதவியின் மனப்பண்பு ‘ஆரியம்! ‘

இத்தனையும் தமிழ்ப்பண்பிற்கு எதிரான ‘ஆரியப் ‘பண்புதான் என்றால் அந்த ஆரியப்பண்பு நீடூழி வாழ்வதாக!

ஈ.வே.ரா. தமிழ்ப்பண்பைப் பற்றி முதலில் யாரிடமேனும் பாடங்கற்றுக் கொள்ளட்டும். அப்புறம் அதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் அவருக்கும் நன்மையுண்டு; நாட்டிற்கும் நன்மையுண்டு.

‘கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பணமூட்டைகளின் திருமணம் ‘ – என்கிறார் ஈ.வே.ரா.

எங்கோ யாரோ செய்து கொண்ட திருமணத்தை நினைப்பில் வைத்துக் கொண்டு, கண்ணகியின் திருமணத்தைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் போலும்! உடைமைக்காக அல்லாமல், கடமைக்காகவும் அல்லாமல், வெறும் உணர்ச்சிக்காக மட்டும் திருமணம் செய்து கொண்ட பெண் அல்லள் கண்ணகி; கண்ணகியின் காதலன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன்தான்.

ஆனால், அவனுடைய பணத்துக்காக தனது இளமையை அடகுவைக்கும் அறிவு கெட்ட நிலை கண்ணகிக்கு இருந்ததில்லை. கண்ணகி பருவம் கடந்து பழுதுபட்டவளும் அல்லள்; கோவலன் எழுபது வயதுக் கிழவனும் அல்லன். இருவரும் இளமை இன்பம் துய்ப்பதற்கான இளம்பருவத்தினர். மகளென இருந்தவளை அவள் விருப்பம் அறியாமலே திருமணப்பதிவுப் பத்திரத்தில் கையொப்பம் பெற்று மனைவியாக்கிக் கொள்ளும் கொடுமையைப் பார்த்திருக்கிறோம். அது போன்ற அடிமைத்தனத்தில் கண்ணகியை வைத்துக் கோவலன் மணம் செய்து கொள்ளவில்லை.

பார்ப்பனப் புரோகிதர், மறைவழிப்படி நடத்தி வைத்ததற்காக, அவர்களுடைய திருமணத்தைப் பழிப்பது ஆராய்ச்சி அறிவன்று; ஆபாசக் கூக்குரல்.

‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா ? ‘ – என்று கம்பீரமாகக்

கேள்வி போடுகிறார் ஈ.வே.ரா.

முதலில் தந்தையாக உறவு கொண்டு, பிறகு அவரையே கணவராகக் காதலிக்கும் பெண் அறிவுக்குப் புறம்பானவள்தான். உணர்ச்சிக்காக அல்லாமல், உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலைமையிலும், உணர்ச்சி அற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானம் அற்றவள்தான்.

இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈவேரா சந்தித்து விட்டார் போலும். அவளை நினைவில் வைத்துக் கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்.

கண்ணகிக்கு அறிவு இருந்ததால்தான் கணவனைப் பிரிந்த காலத்திலும் கற்புநெறி தவறாது வாழ்ந்தாள்.

மனித உணர்ச்சி இருந்ததால்தான், ஆயர்சேரியில் கோவலன் தன்னை இறுதியாகப் பிரியும்போது, அவனது போற்றா ஒழுக்கத்தை எடுத்துக்காட்டிக் கொடுங்கோல் அரசை அழித்தாள்!

அத்தகைய பெண்ணரசியையா பழிப்பது ? அதுவும் மணியம்மையின் காதலரா பழிப்பது ? என்ன துணிச்சல்! புலவர் பெருமக்களே, நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் பரம்பரைதானா நீங்கள் ? ஆம் என்றால் இளங்கோவைப் பழிப்பதைப் பார்த்தும் பொறுத்திருப்பதேன் ? ஒருவேளை தமிழே வீரத்தை விட்டு விலகி விட்டதோ ? அறிவு, பீடத்தை விட்டு அகன்று விட்டதோ ? பதில் கூறுங்கள்.

திராவிடத்தாருக்கு ஒரு நிலையான கொள்கை கிடையாது என்று நாம் கூறினால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது, சில பு..ர..ட்..சி…வீரர்களுக்கு! இதோ பாருங்கள், இலக்கியத்துறையில் இவர்களுக்குள்ள ஞானத்தை!

‘சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்தும் பேரிலக்கியம் ‘ – என்று பேசுகிறார் திராவிடக்கழகத்தின் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார்! அதை ‘சிலப்பதிகாரத்தின் சிறப்பு ‘ என்று தலைப்பு கொடுத்துப் பிரசுரிக்கிறது விடுதலை.

சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ்நூல்… தமிழர் நாகரிகத்தை விளக்கும் நூல்… ராமாயணத்தைப் போல், பெரியபுராணத்தைப் போல், சீவகசிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மையை உண்டாக்கும் நூலல்ல.. இதுதான் இந்த நூலுக்குரிய தனிச்சிறப்பு என்று 21-3-51 ‘விடுதலை ‘யில் எழுதுகிறார் ஈ.வே.ரா.வை நிழல்போல் பின்பற்றிச் செல்லும் சாமிசிதம்பரனார்.

இதை, ‘சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை ? பகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானமே தமிழர்பண்பு ‘ – என்று கொட்டை எழுத்தில் இரண்டு காலம் தலைப்புக் கொடுத்து விடுதலையில் பிரசுரித்திருக்கிறார் அதன் ஆசிரியர். அந்தக் கட்டுரையில் சாமி சிதம்பரனார் மேலும் கூறுவதைப் படியுங்கள்.

‘கண்ணகி சிறந்த குணமுடையவள். அழகும், அரிய குணங்களும் அவளிடமிருந்தன ‘ – என்கிறார் ஈ.வே.ரா.வின் சீடர்.

குருவுக்கு அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் முதலிய நல்ல குணங்கள் அற்றவளாகக் காட்சியளிக்கிறாள் கண்ணகி. சீடருக்கோ அத்தனை குணங்களும் உடையவளாகக் காட்சி அளிக்கிறாள். ஒரே பாத்திரம் – இரு வேறு காட்சிகள். காண்பவர் இருவரும் ஒரே கட்சியினர். அது மட்டுமல்ல – குருவும், சீடரும். இதைக்கண்டு வெட்கப்படுவது மட்டுமல்ல – இவர்களைப் பொதுவாழ்வில் நடமாட விட்டதற்காக வேதனையும் படவேண்டும்.

சிலப்பதிகாரத்தின் கருப்பொருளைப் பற்றிக் கூறும்பொழுது ‘ஆரியநெறியைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்டது ‘ என்கிறார் ஈ.வே.ரா. ‘ஆரம்பம் முதல் இறுதிவரையில் ஆரியந்தானே காட்சியளிக்கிறது ‘ என்றும் ஆத்திரத்தோடு கேட்கிறார்.

அவருக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை. அவரது சீடர் சிதம்பரனாரைக் கொண்டே பதிலளிக்கச் செய்கிறோம். விடுதலையில் தாம் எழுதிய கட்டுரையில் இறுதியில் சீரிய கணக்கோடு கூறுகிறார் சிதம்பரனார்.

‘சிலப்பதிகாரக் கதையிலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களைப் புகுத்திப் படித்தால், இந்த மூன்று உண்மைகளை மறுக்க முடியாது.

1. சடங்குகளால் பயனில்லை.

2. அறிவின்றி விசாரணையில்லாமல் நிரபராதிகளுக்குத் தண்டனை அளிக்கும் அரசாங்கம் பொதுமக்களால் அழிக்கப்படும்.

3. தமிழன் தன்னை அவமதிக்கும் எவனுக்கும் தலை வணங்கமாட்டான். தன்னை அவமதிப்போரை அடக்கித் தன்மானத்தைக் காப்பாற்றியே தீர்வான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தமிழன் ஏமாற மாட்டான்.

இந்த உண்மைகளை விளக்கவே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. இதை மெய்ப்பிக்க நாம் எப்போதும் தயார். எந்த இடத்திலும் வாதிக்கவும் முன்நிற்போம்.

சீடரானவர் குருவுக்கு முரணாய் இப்படி சிலப்பதிகாரம் பயனுள்ள நூல், கழிக்கத் தக்கன சில இருப்பினும் பொதுவாகப் பாராட்ட வேண்டிய நூல் என்று கூறுவது மட்டுமல்ல; அவரது கூற்றை மறுப்போரை வாதுக்கும் அழைக்கிறார்.

ஈ.வே.ரா.வுக்குத் தன்மானமிருப்பின் சாமிசிதம்பரனாரோடு சமருக்குச் செல்லட்டும். இல்லையேல் சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வே.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ‘ என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக நடிப்பது, அதே சமயத்தில் , தமிழின் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வே.ரா.வுக்குத் துதி பாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.

இப்படி முன்னுக்குப்பின் முரணாக, ஒருவருக்கு ஒருவர் எதிர்மாறாகப் பேசும் ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் இருக்கிறதே!

இந்த லட்சணத்தில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்களின் தமிழ்ப்பற்றை நையாண்டி செய்கிறது ‘திராவிடநாடு. ‘ அது மட்டுமல்ல, தாங்கள் என்றென்றும் சிலப்பதிகார பக்தர்கள் போலவும், தேசிய வாதிகள் இப்போதுதான் சிலம்பின் சிறப்பைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறுகிறது.

தமிழ்மொழிக் கலைகளுக்கோ, காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அது மட்டுமல்ல; அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மனத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப் பேசுவதும் அவர்களின் அன்றாட வேலை.

ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கில மாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்.

சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்மாள்,

மிஸஸ் மிராண்டா என்று மேல்நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப் பட்டார்கள். ஆனால் தேசிய எழுச்சியாலும், பாரதியாரின் உழைப்பாலும் மக்களிடையே நாட்டுப்பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது.

ஆகவே தந்தை வாழ்த்தினாலொழிய தாம் வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடத்தார்கள். அதனால் சைமன், ஸ்டாலின், எட்வர்டு, மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலைமுழுக்குப் போட்டுவிட்டு,

நாராயணசாமி நெடுஞ்செழியரானார்.

ராமையா அன்பழகரானார்..

நடராஜர் கூத்தரசரானார்.

ஆம், விலை போகாத பண்டங்களுக்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல! புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர். உள்ளத்தில் உண்மைத் தமிழ்ப்பற்று இல்லாவிடினும், இவர்களது நடிப்பில் மயங்கி, இவர்களும் உண்மையான தமிழ்ப்பற்றுடையவர்கள்தாம் என்று நம்பினர், நம்புகின்றனர் பண்டிதப் பெருமக்களில் பலர்.

ஆனால் என்னதான் திறமையாக வேடம் போட்டாலும், சில சந்தர்ப்பங்களில் வேடம் கலைந்து உண்மை வெளிப்பட்டு விடுகிறது.

சிலப்பதிகாரம் சொல்வதென்ன ?

நாம் திராவிடர் அல்லர் – தமிழர்;

நமது தாயகத்தின் பெயர் திராவிடமன்று – தமிழகம்;

அதன் வடக்கெல்லை விந்தியமன்று, வேங்கடம்;

தமிழ்நாட்டு அந்தணர் ஆரியரல்லர், தமிழர்.

தமிழருடைய பண்பாடும் பழக்க வழக்கங்களும், வேங்கடத்திற்கு வெளி உள்ளவர்கள் பண்பாட்டுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் சற்றே வேறானதாயினும் விரோதமானதல்ல என்பவற்றைத் தெளிவாக வற்புறுத்துகின்றது.

இந்த உண்மைக்கு நேர்மாறான போக்கிலே ‘காலட்சேபம் ‘ நடத்திக் கொண்டிருக்கும் ஈ.வே.ரா. சிலப்பதிகாரத்தை எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.

ஆனால், ஒருகோடி ஈ.வே.ரா.க்கள் புறப்பட்டாலும், தமிழ் மக்களிடையே சிலப்பதிகாரத்திற்குள்ள செல்வாக்கைக் குறைக்க முடியாது!

(நன்றி: தமிழ்முரசு – ஏப்ரல் 1951)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard