பாவாணரின் வேண்டுகோளும்- புறக்கணித்த ஈ.வெ.ரா.பெரியாரும்!
இன்றைக்கு தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல பெருகி விட்டன. இதற்கு முன்னோடியாக பெரியாரைத் தான் குறிப்பிட்டாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி தருவதாகக் கூறிக் கொண்டு கல்வி நிறுவனங்களை தொடங்கியவர் ஈ.வெ.ரா.பெரியார். இதன் காரணமாக கல்வி நிறுவனங்களில் வருமானவரி ஏய்ப்பு செய்து வருவதாக குத்தூசி குருசாமி அவர்கள் பெரியார் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியதும் உண்டு.
பாவாணரைப் பொருத்தமட்டில், அவரின் விருப்பம் என்பது தமிழாய்வு நோக்கில் சென்னையில் ஒரு தமிழ்க் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதாகும். அது அவரின் கனவும் கூட!
அப்போது பெரியார் ஆங்கிலக் கல்வி நிறுவனம் நடத்துவதற்கு பணம் அளித்த செய்தியை அறிந்து வைத்திருந்தார். பெரியாரிடம் தான் கொண்டிருந்த நட்பு காரணமாக தனது விருப்பத்தை கடிதமொன்றில் வரைந்தார். 1969 ஆம் ஆண்டு சேலத்தில் ஒரு திருமண விழாவில் பெரியாரை சந்தித்து அக்கடிதத்தை அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட பெரியாரிடமிருந்து பதில் வருமென்று எதிர் பார்த்தார். வரவில்லை. பாவாணரின் நம்பிக்கை பொய்த்துப் போனது.
அதன் பிறகு பெரியாருக்கு எழுதிய கடித விவரத்தையும், அதற்கு மறுமொழியில்லை என்று குறிப்பெழுதியும் வெளியிட்டார். அது பின்வருமாறு:
தமிழ்நாட்டுத் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அவர்கட்கு ஞா.தேவநேயன் எழுதுவது, வேண்டுகோள்.
அன்பார்ந்த ஐயா, வணக்கம்.
தாங்கள் இதுவரை அரை நூற்றாண்டாகத் குமுகாயத் சமுதாய துறையிலும் மதத்துறையிலும் தமிழ்நாட்டிற்கு செய்து வந்த அரும்பெருந்தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின் மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே.
ஆசிரியப் பயிற்சிக் கலைக்கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவீனிர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.
ஆதலால், தாங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்ததற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்வி நிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகிறேன். …..
அன்பன்
ஞா.தேவநேயன்
குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு 2000 ஆடவை கங ஆம் பக்கத்தில் 25.06.1969 அன்று இதன் சுருக்கம் வேலூர் நகரசபைத் தலைவர் திரு.மா.பா.சாரதி அவர்களின் தம்பி மகன் திரு.அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.
(நூல்: பாவாணர் வரலாறு)
(நமது குறிப்பு: தமிழ்ப்புலவர்களின் வறுமையை ஏகடியம் செய்து அவர்களை தமிழை வைத்து பிழைப்பவர்கள் என்று ஈ.வெ.ரா.பெரியார் எப்போதும் சிறுமைப் படுத்துவதுண்டு. ஆனால் தமிழ்ப்புலவர்களுக்கு இருந்த வறுமை பெரியாருக்கு எப்போதும் இருந்ததில்லை. பெரியார் பெரும் சொத்துகளை சேர்த்துக் கொண்டு செல்வந்தராக இருந்து மறைந்தவர். கல்வி வள்ளலாக தன்னை அறிவித்தும் கொண்டவர். ஆனால் தமிழுக்கு ஏதும் செய்தாரென்று பார்த்தால் ஒன்றுமில்லை. அதற்குக் காரணம் ஆங்கிலமொழி மீது அவர் கொண்டிருந்த தீராக் காதல் தான் இதற்கு அடிப்படையாகும். பாவாணரின் கடிதமும் இதனையே மெய்ப்பிக்கிறது!)