பெரியார் இராசாசிக்கு அந்தரங்க காதலரா? அரசியல் காதலரா?
இராசாசியும் பெரியாரும் அரசியலில் இருதுருவங்கள் என்று சொல்வதுண்டு. தனது சொந்த காரியங்களுக்கு மட்டுமே பெரியார் இராசாசியிடம் நட்பு பாராட்டினார் என்பாருமுண்டு. இரண்டுமே முழு உண்மையல்ல. பார்ப்பனர் என்றாலே பிறவியிலே சூழ்ச்சி மிக்கவர் என்று கூறியவர் பெரியார். பிறகு எப்படி பார்ப்பனராகிய இராசாசி மட்டும் விதிவிலக்காக முடியும். அவர் மணியம்மை திருமணம் உள்ளிட்ட சொந்த காரியங்களுக்கு மட்டுமல்லாது அரசியலிலும் நம்பிக்கைக்குரிய நபராக இராசாசியை கருதினார்.
1938இல் இந்தியை திணித்த இராசாசி பதவி விலகினார். அவரோடு சேர்ந்து நீதிக்கட்சி சார்பில் கூட்டணி மந்திரிசபை அமைத்திடவும் ஒப்புக் கொண்டவர் தான் பெரியார். 1947இல் திராவிட நாடு பிரிவினையை ஆதரிப்பதாக இராசாசி கூறிவிட்ட படியால் தொண்டர்களைக் காட்டிலும் அவரை முழுமையாக நம்பியிருப்பதாகவும் திடீரென்று ‘விடுதலை’ ஏட்டில் எழுதியவரும் பெரியார் தான்.
அதே போல் தட்சணப் பிரதேசத்தை இராசாசி ஆதரிப்பதால் ம.பொ.சி.யும் அதனை எதிர்க்கத் தயங்குவதாக குற்றம் சாட்டிப் பேசிய பெரியார் அப்போதே இராசாசியோடு கை கோர்க்கவும் தயங்கவில்லை. அதனை விவரிப்பதே பின்வரும் கட்டுரையாகும்.
10.10.1955இல் தமிழக தெற்கெல்லை தொடர்பாக அமைக்கப்பட்ட பசல்அலி ஆணையம் தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அவ்வாணையம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, கொச்சி சித்தூர் பகுதிகளை தமிழகத்தோடு சேர்க்க மறுப்பு தெரிவித்ததோடு, ‘தமிழ்நாடு’ என்னும் பெயரை ஏற்க மறுத்து சென்னை ராஜ்யம் எனும் பெயரில் புதிய தமிழ் மாநிலம் அமைத்திடவும் பரிந்துரை செய்தது.
அப்போது இதற்கு எதிராக தமிழகத்தில் எந்த கட்சியும் தனது எதிர்ப்பைக் காட்ட முன்வரவில்லை. நேசமணியும், ம.பொ.சி.யும் மட்டுமே கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழகத்தில் ம.பொ.சி. ஒருவர் மட்டுமே தன்னந்தனியாகப் போராடினார். தமிழரசுக் கழகம் சார்பில் தொடர்வண்டி மறியல், அமைச்சர்களுக்கு கறுப்புக்கொடி, குடியரசு நாள் புறக்கணிப்பு என்று தொடர் போராட்டங்கள் மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழக எல்லைகளை மீட்க அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட முன் வந்தார்.
இந்தக் கூட்டணியில் பெரியார் தவிர மற்ற கட்சியினர் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தனர். இதற்கிடையில், நேரு அரசு மொழிவழி மாகாணம் அமைவதை தடுத்திட தென் மாநிலங்கள் இணைந்த “தட்சிண பிரதேசம்” அறிவிப்பை வெளியிட்டார்.
ஏற்கெனவே தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்திற்கே சொந்தம் என்று “தினத்தந்தி” (11.10.1955) ஏட்டிற்கு பேட்டி கொடுத்த பெரியார் திடீரென்று தட்சண பிரதேசத்தை எதிர்த்து அறிக்கை விட்டது ம.பொ.சி.யை வியப்பில் ஆழ்த்தியது.
பெரியாரை நேரில் சந்தித்து தமிழக எல்லை மீட்புக்கு நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். பெரியாரோ தமிழக எல்லை மீட்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ்நாடு பெயர் மாற்றம், மாநிலத்திற்கு அதிக அதிகாரம், தட்சிணப் பிரதேச எதிர்ப்பு என்று ஐந்து கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும், அக்கூட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனை போட்டார்.
மற்ற கட்சிகள் பெரியாரின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து விட்டன. இதனை ம.பொ.சி. எடுத்துக் கூறியும் பெரியார் பிடிவாதமாக கூட்டத்திற்கு வர மறுத்தார்.
27.1.1956இல் அனைத்துக் கட்சி கூட்டம் ஜி.உமாபதி என்பவரது வீட்டில் நடந்தது. அண்ணா, இரா.நெடுஞ்செழியன், ம.பொ.சி. தி.க.சண்முகம், ஜி.உமாபதி, சின்ன அண்ணா மலை, ப.ஜீவானந்தம், மணலி கந்த சாமி, கே.விநாயகம், பி.டி.ராசன், பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் பி.டி.ராசன் தலைவராகவும், ம.பொ.சி. அமைப்புச் செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்தோடு தமிழக எல்லை காப்பு, தமிழ்நாடு பெயரிடுதல், தட்சண பிரதேச எதிர்ப்பு ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.20இல் முழு கடையடைப்பு நடத்தப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது.
கருத்து வேறுபாட்டால் சிதறிக் கிடந்த தமிழக கட்சிகள் முதன்முறையாக தமிழகத்தில் ஒன்று கூடியது இதுதான் முதல் தடவையாகும். பெரியாரின் பாஷையில் சொன்னால் இது பிராமணரல்லாதார் நடத்திய ஒன்றுபட்ட கூட்டமாகும்.
இந்தக் கூட்டம் நடைபெற்ற மறுநாளே 28.1.1956இல் ஒரு கூட்டம் சென்னை நுங்கம் பாக்கம் சுப்பையாபிள்ளை என்பவரது வீட்டில் நடந்தது. இராசாசி இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். பெரியார் ம.பொ.சி.யிடம் வலியுறுத்திய ஐந்து கோரிக்கைகளில் ஒன்றான மத்திய அரசின் இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்ப்பது இக்கூட்டத்தின் நோக்கமாகும்.
இதில் பெரியார் எந்தவித நிபந்தனையும் இராசாசிக்கு விதிக்காமல் கலந்து கொண்டார். இதில் இராசாசி, அண்ணா, ம.பொ.சி., நெடுஞ்செழியன், திருப்புகழ் மணி கிருஷ்ணசாமி ஐயர், கே.எஸ். ராமசாமி சாஸ்திரி, வெங்கட்ராம ஐயர் ஆகியோர் பங்கெடுத்தனர். பெரியார் பாஷையில் சொன்னால் சூத்திரர்களைக் காட்டிலும் பிராமணர்களே கூட்டத்தில் நிரம்பியிருந்தனர்.
எப்போதும் தனது கருத்துக்கு மாறுபாடு கொண்ட தலைவர்களை கடுஞ்சொற்களால் ஏசுவது பெரியாரின் வழக்கம். அங்கு தனது பிராமண எதிரிகளை வைத்துக் கொண்டே இராசாசியை என் அன்பிற்குரிய ஆச்சாரியார் என்றும், நண்பர் என்றும், தலைவர் என்றே சொல்லலாம் என்றும் புகழ்ந்து தள்ளினார்.
அக்கூட்டத்திலாவது ம.பொ.சி.யிடம் நிபந்தனை விதித்த ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பெரியார் பேசியிருக்கலாம். அதை விடுத்து, தமிழ்நாட்டில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக மாற வேண்டும் என்றும், ஆங்கிலமே கல்லூரிகளில் பாட மொழியாக இருக்க வேண்டும் என்றும் பேசினார். இதற்கு ம.பொ.சி. தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்க இராசாசியோ இருவரையும் அமைதிப்படுத்தினார். கூட்ட முடிவில் 1965க்கு பின்னரும் மத்தியில் ஆங்கிலம் தொடர வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது.
பெரியாருக்கும் இராசாசிக்குமான உறவு என்பது ம.பொ.சி., அண்ணாவைக் காட்டிலும் ஆழமானது என்பதே உண்மையாகும்.