சென்னை மீட்புப் போரில் பெரியாரின் திருவிளையாடல்கள்!
1938 இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் பீறிட்டெழுந்த போது அதை திராவிடநாடு திராவிடருக்கே என்று மடைமாற்றம் செய்தவர் பெரியார். அது போல் 1953இல் சென்னை மீட்புக் கிளர்ச்சியிலும் நடந்து கொண்டவர் தான் பெரியார்.
1947 முதல் ஆந்திரர்கள் விசால ஆந்திரம் கேட்டு மிகத் தீவிரமாக போராடி வந்தனர். அத்தோடு சென்னை நகரையும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினர். 15.12.1952இல் பட்டினிப்போரில் பொட்டி சிறிராமுலுவின் இறப்பிற்குப் பிறகு போராட்டம் சூடு பிடித்தது. 1947 முதல் சென்னை முதல் திருப்பதி வரை கேட்ட ஆந்திரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ம.பொ.சி. ஒருவர் தான். அவர் சென்னை மேயர் செங்கல்வராயனோடு இணைந்து சென்னையை ஆந்திராவோடு இணைப்பதற்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்து பெருமை சேர்த்தவர்.
பெரியாரோ தன்னை சென்னை மீட்பு போரில் எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டவரல்ல. திராவிட நாடு கோரிக்கைக்கு சென்னை மீட்பை தடையாக கருதி வந்தவர். 1947இல் மதராஸ் மனதே, சலோ மதராஸ் என்று சென்னைக்கு ஆந்திரர்கள் படையெடுத்து வந்தனர். அப்போது அதைக் கண்டிக்காமல் கடலூரில் ‘திராவிடர்’ என்ற பெயரில் மாநாடு நடத்தி தென்னிந்தியா வட இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்று அவர் தீர்மானம் போட்டதை இதற்கு குறிப்பாகச் சொல்லாம்.
2.1.1953இல் மேயர் செங்கல்வராயன் வீட்டில் சென்னையை மீட்பதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் அதிசயத்தக்க வகையில் பெரியார் முதன்முதலாக தோன்றினார். அங்கு வந்து ஆந்திரர்களை கண்டிக்க மறுத்ததோடு, “ஆந்திரர்களை தூண்டி விட்டது மத்திய அரசே’ என்று குற்றம் சாட்டிப் பேசினார்.
அதன் பிறகு இராயப் பேட்டை இலட்சுமி புரத்தில் 5.1.1953இல் நடந்த கூட்டத்திலும் தமிழர்களை குழப்பும் வகையில் பேசினார். 7,1.1953, 8.1.1953 ஆகிய இரண்டு நாட்களில் ‘விடுதலை’ ஏட்டில் அவரின் சொற்பொழிவு வெளி வந்துள்ளது. கீழ்க்கண்ட பெரியார் அவர்களின் பேச்சுக்கு நமது எதிர்வினை தரப்பட்டுள்ளது.
பெரியார்: “இரண்டு நாட்களுக்கு முன் மேயர் வீட்டில் நடந்த சர்வ கட்சிக் கூட்டம் என்பதிலும் நான் பேசிய போது இதையே சொல்லியிருக்கிறேன். அதாவது, இந்தப் பிரிவினையில் ஏற்படுகிற தொல்லைகள் எல்லாம் மத்திய அரசாங்கத்தாலும், மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கு உடையவர்களாலும் ஏற்படுகிற தொல்லைகளே தவிர,. வேறு ஆந்திர மக்கள் தொல்லை அல்ல”
எதிர்வினை: ஆந்திர மக்கள் தனி மாகாணம் கேட்பது எப்படி மத்திய அரசுக்குத் தொல்லை யாகும். அது ஆந்திர மக்களின் அடிப்படை உரிமையாகும். சென்னை மாநகரத்தில் பொட்டிசிறிராமுலு விசாலா ஆந்திரம் கோரி பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர் நீத்தார். அவர் தனது கோரிக்கையில் ஆந்திர மக்களின் விருப்பமான சென்னையை (மதராஸ் மனதே) ஆந்திராவோடு இணைக்கும்படி கோரியிருந்தார். அது தமிழர்களுக்கு ஆந்திரர்கள் தந்த தொல்லையாக பெரியாருக்கு தோன்ற வில்லையோ? இது மத்திய அரசை எதிர்ப்பது போல் பேசி ஆந்திர மக்களை தப்பிவிக்கும் நோக்கம் கொண்டதாகும்.
பெரியார்: “இன்று காலையிலுங் கூட டாக்டர் A.கிருஷ்ணசாமி அவர்களிடம். எனக்குச் சென்னை நகரம் முக்கியமல்ல, அன்னியன் ஆதிக்கமற்ற, அன்னியன் சுரண்டலற்ற பூரண சுயேட்சையுள்ள பிரதேசம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதுதான் தேவை என்று சொன்னேன்.”
எதிர்வினை : பெரியார் நடத்திய இட ஒதுக்கீடு, குலக்கல்வி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போராட்டம் எல்லாம் அன்னியன் ஆதிக்கம் செலுத்திய நாட்டில் தான் நடந்தது. அப்போது எல்லாம் அன்னியச் சுரண்டல் பற்றி பேச நேரமில்லையோ? சென்னை நகரம் தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த தமிழர்களின் தாயக நிலம். அவற்றுக்காக கவலைப்படாமல் சிறிய பிரதேசத்தை மீட்பேன் என்பது தலை இழந்த மனிதனின் வெறும் உடலை வைத்து பூசிப்பதற்கு ஒப்பாகும்.
பெரியார்: சென்னை நகரம் தமிழருக்கோ, தமிழ்நாட்டுக்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது, செய்து வருகிறது, அல்லது செய்ய முன் வரும் என்பதற்காக அல்ல என்றும் சொன்னேன்.
எதிர்வினை: சென்னை நகரம் தமிழர்களுக்கு தொண்டு செய்திருக்கிறதோ இல்லையோ, பல கோடி மதிப்புள்ள பெரியார் திடலையும், பெரியார் கல்லறையையும் சேர்த்து காப்பாற்றி கொடுத்திருக்கிறது. இந்த உண்மை ஆசிரியர் வீரமணிக்கு நன்றாகவே தெரியும்.
பெரியார்: ஒரு சமயம் சென்னை போய்விடுமானாலும் நான் ஒன்றும் அதிகமாகக் கவலைப்பட மாட்டேன் என்றும், சென்னை ஒழிந்து போனால் பாக்கி உள்ள தமிழ்நாட்டை என் இஷ்டம் பொல ஆக்கி நாளைக்கே பூரண விடுதலை பெற்ற பிரதேசமாக ஆக்க விளம்பரம் செய்து விட முடியும் என்று சொன்னேன்.
எதிர் வினை: இதன் மூலம் பெரியாருக்கு நீண்ட நாட்களாகவே சென்னையை ஒழிக்கும் கனவுத்திட்டம் இருந்து வந்துள்ளது. தமிழர்களின் தாயக நிலத்தை ஆந்திரர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான பொருளாகும். இதை வெளிப்படையாகச் சொல்லாமல் பாக்கி உள்ள பிரதேசம் என்றும், அதற்கு விளம்பரம் செய்வேன் என்றும் திசை திருப்பும் பேச்சு எதற்கு?
பெரியார்: “இவை ஒருபக்கம் இருந்தாலும் நாம் பிரயத்தனப்படா விட்டால் சென்னை நகரம் ஆந்திரர்களுக்குப் போய் விடுமோ என்கிற கவலை சிறிதும் வேண்டியதில்லை. ஏனெனில் அநேகமாகத் தமிழ்நாட்டு பிராமணர்கள் சென்னையில் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு நாளும் சென்னை ஆந்திராவுடன் சேரவோ, தனி மாகாணமாக ஆக்கவோ சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் இதில் வெற்றி பெற்றே தீருவார்கள். ஆதலால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று இன்று காலையில் சொன்னேன்.
எதிர்வினை: கொஞ்ச நேரத்திற்கு முன்பு, சென்னை நகரம் முக்கியமல்ல என்று பேசியவர் தற்போது பிராமணர்கள் போராடி வருவதால் ஆந்திரர்களுக்கு போய்விடும் என்ற கவலை வேண்டியதில்லை என்கிறார். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல, பிராமணருக்கு எதிரான திசை திருப்பும் நோக்கமே இதிலும் வெளிப்படுகிறது.
இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு பெரியாரை சென்னை மீட்புப் போராளியாக வாலாசா வல்லவன் போன்ற பெரியார் பக்தர்கள் சித்தரிப்பது நகைப்பிற்குரியது!