இந்தி எதிர்ப்பை சமாளிக்க வாய்ப்பூட்டு போடச் சொன்ன பெரியார்!
“தென்மொழி” ஏடு கண்டனம்!
1965ஆம் ஆண்டு இந்திமொழி எதிர்ப்புப் போரில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் “தென்மொழி ” ஏடு மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியது. இதன் காரணமாக பேராயக்கட்சியின் ஒடுக்குமுறையை கடுமையாக எதிர் கொண்டது. அப்போது பேராயக்கட்சியின் ஒடுக்குமுறையை ஆதரித்தும், ஒடுக்குவதற்கான வழிமுறைகளை பேராயக்கட்சிக்கு அறிவுறுத்தியும் பெரியார் தனது “விடுதலை” ஏட்டில் எழுதிக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்டித்து “தென்மொழி” ஏடு பெரியாருக்கு தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வந்தது. “மொழி ஞாயிறு” தேவநேயப் பாவாணர் அவ்வேட்டின் சிறப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் மற்றவர்களின் கருத்துகளை மதிக்கும் சிறந்த பண்பாளர் என்றும், அவரைப் போன்ற சனநாயகவாதி எவரும் இல்லையென்றும் தற்போது வரையிலும் புளங்காகிதம் கொண்டு பேசிவருகின்றனர் பெரியாரியவாதிகள் . அது உண்மையல்ல, என்பதை எடுத்துரைக்கும் வகையில் “வாய்ப்பூட்டு சட்டம் ” கொண்டு வரச் சொன்ன பெரியாரை தென்மொழி ஏடு அன்றே தோலுரித்தது. அது பின்வருமாறு:
இந்தி எதிர்ப்பு நடவடிக்கைகளைச் சமாளிக்க நாடெங்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் கொணர்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப் பற்றி யாரையும் பேசவிடல் கூடாது. எல்லாச் செய்தித்தாள்களையும் தடை செய்தல் வேண்டும். -ஈ.வெ.ரா.
பதில்: கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்னும் பகுத்தறிவாளரின் (Rationalist) கூற்றா இது. இந்திக்குப் பாடை தூக்கியாக இருந்த இவரே , இந்திக்குப் பல்லக்குத் தூக்கியாக இப்பொழுது இருக்கின்றாரே என்பதால் நமக்கு வருத்தமோ, இழப்போ துளியும் இல்லை. ஆனால் கருத்துக்கும் பகுத்தறிவுக்கும் மதிப்பளிக்க வேண்டிய இவரா, கருத்துகளுக்கும், செய்தித்தாள்களுக்கும் தடை போடச் சொல்கின்றார் என்பதே நம் வியப்பிற்குரியது! இவரின் நிலை இரங்கத்தக்கது. கொள்கை நிலையில் இவர்க்கு அரசியலில் தான் வீழ்ச்சி என்றிருந்தோம்; இப்பொழுது அறிவிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பெரியவர்க்கு , இனி இவர்
செல்லாக்காசு,
அணைந்த தீப்பந்தம்;
சப்பிய பனங்கொட்டை ;
துப்பிய வெற்றிலைத் தாம்பூலம்;
பிழிந்த கருப்பஞ் சாறு;
வெடித்த வாணவெடி,
இனி இவரால் தமிழர்க்கு கேடில்லை. பிறர்க்கும் பயனில்லை; இவர் கருத்துப் பற்றி எவரும் கவலை வேண்டுவதில்லை.
(“அரசியல் பட்டடை” என்னும் தலைப்பில் “சம்மட்டி” பெயரில் தென்மொழி ஏட்டில் வெளிவந்தது. பக்கம்12, மீனம் -பங்குனி தி.பி.1996, மார்ச்1965)