New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 42 கடன் வசூலில் கடவுளைக் காண்போம்.


Guru

Status: Offline
Posts: 24778
Date:
42 கடன் வசூலில் கடவுளைக் காண்போம்.
Permalink  
 


போகப் போகத் தெரியும் – 42

December 5, 2009
சுப்பு rss_icon16.jpg

 

கடன் வசூலில் கடவுளைக் காண்போம்.

பத்துவயதுப் பாலகன் கண்களைக் கசக்கிக் கொண்டு தந்தைமுன் நிற்கிறான்.

என்ன? என்று அதட்டல் குரலில் கேட்கிறார் தந்தை.

‘கண் தெரியலே – கண்ணாடி போடச் சொல்றாங்க.

சொன்னது யார்?

பையன்களும் டிராயிங் மாஸ்டரும்

அவங்களைப் போய் மாடு மாய்க்கச் சொல். பத்துவயசுப் பையனுக்குக் கண்ணாடியா? பெருமைக்காகப் போடணுமா? போடாப்போ…

பையன் கண்ணீர் ததும்பப் போகிறான்.

சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்கு ஒரு ஜோசியர் வருகிறார். அவரைக்கண்டதும் பெரியவர் மரியாதையோடு வரவேற்கிறார்…

சுவாமிகளே, உங்கள் பையன் ரொம்ப அதிர்ஷ்டசாலி இந்த மாதிரி ஜாதகம் அமைவது விசேஷம். இந்த மாதிரி அமைவது லட்சத்திலே ஒருத்தருக்குத்தானிருக்கும். பெரிய பதவி புகழ் எல்லாம் வந்து சேரும்.

என்ன பதவி வந்திடப்போகுது?

அப்படிச் சொல்லாதீரும்.. நீங்களே சொல்லுங்க பதவியிலே பெரிது எது?

போலீஸ் அதிகாரி … ஜட்ஜ்

பையன் வைஸ்ராய் ……….. உமக்குத் தெரியுமே

இவனுக்கா?

இவனுக்கேதான். உம்புள்ளையை மட்டமாக நினைக்காதீர்.. நிச்சயம் என் ஜோசியத்தின் மீது ஆணையாய் உம் மகன் வைஸ்ராய்.. ஏன் அதற்கு மேலேகூட பதவி வகிப்பான்.

பெரியவருக்கு இந்த ஜோசியர் அப்பகுதியில் பிரபலமானவர். அதோடு தன் தொழிலையே பணயம் வைக்கிறாரே என்று திகைப்பு.

ஆகாரம் ஆச்சா?

இல்லை, இனிமேல்தான்.

அப்போ ஒரு காரியம் பண்ணும். இங்கேயே சாப்பிடும்.

மதியம் மகன் எப்போது வருவான் என்று காத்திருக்கிறார் பெரியவர் வந்ததும் அவனுக்கு சிறிது பலகாரம் கொடுத்துவிட்டு அவரைப் பெங்களூருக்கு அழைத்துச் செல்கிறார். தொரப்பள்ளியிலிருந்து சில மைல்களில் இருப்பது பெங்களூர். அங்கு கண் டாக்டரிடம் பையனைக் காண்பித்து கண்ணாடிக்கு ஏற்பாடு செய்கிறார் பெரியவர். பையனுக்கோ மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.

– பக், 7,8,9 /பீஷ்மர் ராஜாஜி / எஸ். எஸ். மாரிசாமி

rajaji02-249x3001இந்தப் பையன் தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாக ஆனார். ராஜகோபாலாச்சாரி சேலம் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றி செல்வமும் புகழும் சேர்த்துக் கொண்டவர். பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் தலைவராக ஆனார்.

1936ஆம் ஆண்டு மத்திய சட்டமன்றத்திற்கும் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது.

1937 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சென்னை மாகாண கீழ்சபையில் 215 இடங்களில் 167 இடம் காங்கிரஸ்கட்சிக்கு கிடைத்தது; மேல் சபையில் 46 இடங்களில் 27 இடங்களில் காங்கிரசுக்கு கிடைத்தது. ராஜாஜி என்ற அழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜாகோபாலாச்சாரி காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவெங்கும் ஏழு மாகாணங்களில் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்திருந்தது. இருந்தாலும் ‘அன்றாட நிர்வாகத்தில் மாகாண கவர்னர்கள் தலையிடுவதில்லை’ என்று வாக்குறுதி தரப்பட்டால்தான் பதவியேற்பது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சிப் பிரமுகர்களைக் கொண்ட இடைக்கால மந்திரிசபை கவர்னரின் ஆதரவோடு பதவியேற்றது.

ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு, காங்கிரசின் நிபந்தனைக்கு பிரிட்டீஷ் அரசு உட்பட்டது. சென்னை மாகாண பிரதமராக ராஜாஜி பதவியேற்றார். அன்றைய சென்ன மாகாணம் என்பது ஆந்திரா, தமிழ்நாடு, மலபார் ஆகிய பிரதேசங்களைக் கொண்டது.

மாகாண சட்டமன்றங்களில் வெற்றிபெற்றவர்கள் பிரதமர் என்றே அழைக்கப்பட்டார்கள். அதாவது இந்தியாவில் ஏழு பிரதமர்கள் இருந்தனர். பிறகு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தில்லியில் பிரதமர் என்றும் மாகாணங்களில் முதலமைச்சர் என்றும் அழைக்கும் மரபு ஏற்பட்டது.

நிர்வாகச் செலவுகளைக் குறைத்த ராஜாஜி மாதம் ஐயாயிரம் ரூபாயாக இருந்த மந்திரிகளின் ஊதியத்தை மாதம் ஐந்நூறாகக் குறைத்தார். வருடா வருடம் கோடையில் சர்க்கார் காரியாலயங்கள் ஊட்டியில் செயல்படும் பழக்கத்தை ரத்து செய்தார்.

வட்டிக்கு மேல் வட்டி என்று கடன் சுமையில் ஊழ்கியிருந்த லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களை ‘ கடன் நிவாரணச் சட்டம் மூலம்’ காப்பாற்றினார் ராஜாஜி. இந்தச் சட்டத்தை நீதிக்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இருந்த நீதிக் கட்சியினர் ‘கடன் வசூலில் கடவுளைக் கண்டவர்கள்.

விவசாயிகளில் 95 விழுக்காடு பிராமணரல்லாதார். இருந்தாலும் இவர்கள் ஏழைகள் என்பதால் நீதிக்கட்சியினர் இவர்களை ஆதரிக்கவில்லை. பிராமணரான ராஜாஜி பிராமணரல்லாருக்குச் செய்த இந்த உதவி வரலாற்றில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.

பிரதமர் ராஜாஜி தன்னுடைய வேட்டி, சட்டைகளை தினமும் துவைத்துக் கொள்வதை ‘மெயில்’ என்ற ஆங்கில நாளிதழ் புகைப்படமாக வெளியிட்டது. ‘பிரதமர் அற்ப வேலைகளைச் செய்து நேரத்தை வீணடிக்கலாமா?’ என்ற கேள்வியை எழுப்பியது.

மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தேவர் சமூகங்களைச் சேர்ந்தவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி காவல் நிலயங்களில் பதிவு செய்யும் ‘குற்றப் பரம்பரை சட்டம்’ அமலில் இருந்தது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் இனமக்களை காலம் காலமாகக் கொடுமை செய்த இந்த சட்டம் நீதிக்கட்சியின் ஆட்சியில் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. ராஜாஜி பிரதமர் ஆனவுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை ரத்து செய்தார்.

meenakshi_temple1மதுரை மீனாக்ஷி ஆலயமும் பிற ஆலயங்களும் ராஜாஜி ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்குத் திறந்து விடப்பட்டன. அதற்கான அவசரச் சட்டத்தை ராஜாஜி நடைமுறைப்படுத்தினார்.

பதினாறு ஆண்டுகால நீதிக்கட்சி ஆடியில் தாழ்த்தப்பட்டவர் எவரும் அமைச்சராக முடியவில்லை.

ராஜாஜி தலைமையில் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவையில் முதன்முறையாக ஒரு தாழ்த்தப்பட்டவர் – வி. ஐ முனுசாபிப் பிள்ளை அமைச்சரானார்.

தமிழக அரசியலில் 1936-37 ஆம் ஆண்டுத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வலுவையும் நீதிக்கட்சிக்கு அவமானத்தையும் கொடுத்தது.

சேலம் – கோவை, நீலகிரித் தொகுதியில் தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் நிறுத்தப்பட்டார்.

அவரை எதிர்த்து முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவரான டாக்டர் பி. வரதராஜூலு நாயுடு நின்றார். அவினாசிலிங்கம் வெற்றி பெற்றார்.

tschokka-lingamசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட டி. எஸ், சொக்கலிங்கம் வெற்றி பெற்றார்.

இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்ட டி. எஸ். சொக்கலிங்கம் தேசபக்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரர் சிதம்பரம், ஆஷ் கொலை வழக்கில் நீண்டகால சிறை தண்டனை பெற்றவர்.

குற்றால அருவியில் குளிப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு விசேஷ சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்தியது நீதிக்கட்சி ஆட்சி. டி. எஸ். சொக்கலிங்கம் இதை எதிர்த்து சத்தியாகிரகப் போர் நடத்தினார்; வெற்றி கண்டார்.

டி. எஸ். சொக்கலிங்கம் ‘காந்தி’ என்ற காலணா விலை கொண்ட இதழை நடத்தினார். அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார்.

1936-37 தேர்தல்களில் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ‘தினமணி நாளேடும் அதன் ஆசிரியர் டி. எஸ் சொக்கலிங்கமும் ஆற்றிய பங்கு முக்கியமானது.

தேசிய இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்த தினமணியைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

1934 செப்டம்பர் 11 ஆம் தேதி வெளிவந்தது தினமணி நாளிதழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, வாசகர்களுக்கு போட்டி அறிவிக்கப்பட்டு, ‘தினமணி’ என்ற பெயரைக் கூறிய இரு வாசகர்களுக்கு ரூ. 10.00 பகிர்ந்தளிக்கப்பட்டது.

தினமணி இரண்டே மாதத்தில் 20,000 பிரதிகள் விற்பனையாயிற்று. அக்காலத்தில் இருந்த மற்ற தமிழ் நாளிதழ்களான சுதேதமித்திரன், தமிழ்நாடு, ஜெயபாரதி ஆகியவற்றின் மொத்த விற்பனையைவிட இது அதிகம்.

பத்திரிகை உலகில் பல சாதனைகளைப் புரிந்த சதானந்த் துவக்கிய நாளிதழ்கள் தான் இந்தியன் எக்ஸ்பிரசும் தினமணியும். தேசிய இயக்கங்களின் செய்திகளைத் தருவதற்காக ஃப்ரீ ப்ரெஸ் ஆஃப் இந்தியா என்ற செய்தி ஸ்தாபனத்தை உருவாக்கிய இவர் ஒரு தமிழர். ‘தகுதி வாய்ந்த தமிழர்களைப் பாராட்டுவதில்லை’ என்ற திராவிட நெறிப்படி இவரும் மறக்கப்பட்டு விட்டார்.

விளம்பரங்கள் மூலம் வருமானம் இல்லாத நிலையில் தினமணியை பொருளாதார நெருக்கடி சூழ்ந்தது. தினமணியின் நிர்வாகத்தை நடத்தி வந்த கே. சந்தானம், எஸ். வி. ஸ்வாமி ஆகியோர் ராமநாத் கோயங்கா என்ற இளம் வர்த்தகரிடம் கடன் வாங்கினார்கள்.

Ramnath Goenka

Ramnath Goenka

சென்னையின் முக்கிய வர்த்தகப் பிரமுகரான ராமநாத் கோயங்கா சென்னை சட்டசபையில் உறுப்பினராக அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டவர். இருந்தாலும் இவர் தேசியத்தின் பக்கமே இருந்தார். 1928 இல் சென்னை அரசாங்கம் பாரதியார் பாடல்களை தடை செய்தபோது சட்டமன்றத்தில் கோயங்கா அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசினார்.

கடன் பெற்றுக் கொண்ட சதானந்திற்கும் கடன் கொடுத்த கோயங்காவுக்கும் தினமணியின் உரிமை குறித்து தகராறு ஏற்பட்டது. நாளிதழைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 1936 அக் 2 ஆம் நாள் காலையில் சதானந்த் தினமணி எக்ஸ்பிரஸ் அலுவலகங்களின் வாசல் கதவைப் பூட்டிவிட்டார்.

கதவைப் திறப்பதற்காக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பயனில்லை. தொழிலாளர்களும் ஆசிரியர் குழுவில் ஒரு பகுதியினரும் உள்ளே இருந்தார்கள்.

ஜார்ஜ் டவுன் சீஃப் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரேட் தினமணி நிர்வாகத்தில் சதானந் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்டார். காலையில் மூடப்பட்ட கதவுகள் பிற்பகலில் திறக்கப்பட்டன. இருந்தாலும் மாலை மத்திரிகையான தினமணி அன்று வெளிவந்தது.

முதலாளியைப் பற்றிக் கவலைப் படாமல் உள்ளே இருந்தவர்கள் நாளிதழைத் தயாரித்துவிட்டார்கள். உள்ளே இருந்து வந்த டெலிபிரிண்டர் தாள்களை வீதியில் இருந்தபடியே ஆசிரியர் குழுவினர் மொழிபெயர்த்தனர். ஜன்னல் வழியாகப் போடப்பட்ட செய்திகளை உள்ளே இருந்தவர்கள் அச்சுக்கோத்தார்கள். இப்படிப் பல சாகசச் செயல்களின் விளைவாக அன்றைய தினமணி வெளிவந்தது.

பத்திரிகைகள் கருத்துலகில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில் சினிமா என்ற சாதனமும் தன்னுடைய முத்திரையைப் பதித்துவிட்டது.

1936 இல் மதுரை ராயல் டாக்கீசார் தயாரித்த புராணப் படம் ‘பாமா பரிணயம்’ வெளிவந்தது. 1937 இல் வெளிவந்த சிந்தாமணிதான் தமிழின் முதல் சூப்பர் ஹிட் திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் புகழ் பெற்ற தியாகராஜ பாகவதர் அடுத்து வந்த ஆண்டுகளில் தமிழகத்தைத் தன் குரலால் வசப்படுத்தினார். இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலை எழுதியவர் பாபநாசம் சிவன். சிந்தாமணி ஒரு வருடம் ஓடியது. இதில் கிடைத்த வருவாயைக் கொண்டு மதுரை ராயல் டாக்கீசார் மதுரையில் ‘சிந்தாமணி என்ற தியேட்டரைக் கட்டினார்கள். சிந்தமணியின் இயக்குனர் ஒய். வி. ராவ். ஒய். வி. ராவ், நடிகை ருக்மணி ஆகியோரின் வாரிசுதான் பிரபல நடிகை லட்சுமி.

மேற்கோள் மேடை :

ராஜாஜி சுயநல நோக்கம் எதுவும் அற்றவர். தேச நலத்துக்காகச் சகலத்தையும் தியாகம் செய்த உத்தமர். பொதுஜனங்களின் பிரியத்தை இழந்தாலும் பாதகமில்லை என்று மனசாட்சியின்படி நடக்கத் துணிந்தவர். – மகாத்மா காந்தி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard