New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 41. சாவியின் கேள்வி பதில்


Guru

Status: Offline
Posts: 23907
Date:
41. சாவியின் கேள்வி பதில்
Permalink  
 


 போகப் போகத் தெரியும் – 41

November 23, 2009
சுப்பு rss_icon16.jpg

 

சாவியின் கேள்வி பதில்

1936- இல் விருதுநகர் நகராட்சிக்குத் தேர்தல் நடந்தபோது காமராசர் போட்டியிட இயலாத நிலைமை இருந்தது. வயது வந்தவர்கள் எல்லோரும் வாக்களிக்கவும் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்ட காலம் அல்ல. நகராட்சிக்கு வரி கட்டுபவர்கள் மட்டுமே போட்டியிடலாம். காமராசர் பெயரில் எந்த சொத்தும் இல்லாததால் அவர் எவ்வித வரியும் கட்டவில்லை. எனவே போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் தனது பொறுபிலேயே ஒரு ஆடு வாங்கி அதற்கு நகராட்சியில் காமராசர் பெயரில் வரி கட்டினார். இதனால் காமராசர் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தகுதியைப் பெற்றார். வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.

kamarajarகாமராசர் தேர்தலில் ஈடுபடுவது நீதிக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்தது. காமராசர் பிரசாரம் செய்ய முடியாதபடி அவரைக் கடத்திச் சென்றுவிட்டனர். இதனைக் கேள்விப்பட்ட பசும்பொன் தேவர் அவர்கள் உடனடியாக ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். பொதுக்கூட்டத்தில் தேவர் முழங்கியபோது ‘நான் இந்த மேடையில் பேசி முடித்துக் கீழே இறங்குவதற்குள் காமராசரை இங்கு கொண்டுவந்து சேர்க்கவேண்டும், இல்லையென்றால் இந்த ஊரில் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வீடுகளும் கடைகளும் என்ன ஆகும் என்பதற்கு என்னால் உத்திரவாதம் அளிக்கமுடியாது’ என்று எச்சரித்துவிட்டு தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி வேண்டினார். தேவர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போதே காமரசர் திடீர் என்று மேடைக்கு வந்துவிட்டார். தேவரின் எச்சரிக்கைக்கு பயந்து, காமராசரைக் கடத்தியவர்கள் அவரை மேடைக்கு அனுப்பி வைத்து விட்டனர். இந்தத் தேர்தலில் காமராசர் 7வது வார்டில் வெற்றி பெற்றதுடன் காங்கிரஸ் கட்சி நகராட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றியதுடன். காமராசர் நகராட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

– பக். 60, 61 தியாக தீபம் காமராஜர் / ஆ. மு. ராஜேந்திரன் / பரமேஸ்வரி எண்டர்பிரைசஸ்

அன்று கடத்தல், இன்று காசு. காலப்போக்கில் படைபலத்தைவிட பணபலமே சுலபமாக உதவும் என்பதை திராவிட இயக்கங்கள் தெரிந்து கொண்டுவிட்டன. இதற்கு திருமங்கலமே சாட்சி.

அதிகாரம், அடிதடி என்று இவர்கள் தேசிய இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்திய வேளையில் நேரடியாக இவர்களோடு தொடர்பு கொள்ள விரும்பாத சிலர் அங்கங்கே தனிக்கச்சேரி நடத்தினார்கள்.

இவர்களும் திராவிட இனவாதத்தை ஆதரித்தார்கள்; ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழர் மத, திராவிட சமயம் என்று சொல்லி சிவனுக்கு இனபேதம் கற்பித்தார்கள் இந்தத் தமிழறிஞர்கள்.

சிவஞானயோகி என்பவர் குற்றாலத்தில்’ திருவிடர் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். திருவிடர் என்பது திராவிடர்தான். அதாவது திராவிடர் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பதால் அதை மொழிமாற்றம் செய்து கொண்டனர். ‘உலகில் முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் தமிழகம்; அதில் தோன்றிய மருத்துவம் சித்த மருத்துவம் என்னும் தமிழ் மருத்துவம்; ஆதலின் உலக மொழிகளுக்கும் உலக மருத்துவர்களுக்கும் தாயாக விளங்குவது தமிழும் தமிழ் மருத்துவமும் ஆகும்’ என்பது திருவிடர் கழகத்தின் கொள்கை.

ஹிந்து சமயம் வேறு தமிழர் மதம் வேறு என்று பேசி ஈவெராவின் இயக்கத்திற்குத் திரைமறைவில் ஆதரவு கொடுத்த தமிழ் அறிஞர்களின் கொள்கையை தமிழகம் முழுதாக நிராகரித்துவிட்டது.

தமிழர் மதம் குறித்த சில அடிப்படையான கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை.

மேலோட்டமாகச் சித்தர் பாடல்களைப் பார்ப்பவர்களுக்கே அதில் அவ்வையாரின் விநாயகர் அகவலுக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட்டிருப்பது புலப்படும்.

ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாக்காலம் வரும்போதெல்லாம் தவறாது ‘விநாயகர் தமிழ்க் கடவுள் அல்ல’ என்று கருத்து சொல்லும் மு. கருணாநிதியும் அவரது கடைசித் தொண்டனும் விநாயகர் அகவலை என்ன செய்வது என்றோ அவ்வையாரை அந்நியரென்றோ இன்றுவரை சொல்லத் துணியவில்லை.

’உலக மொழிகளுக்குத் தாயாக விளங்குவது தமிழ்’ என்ற கொள்கைக்கு அறிவியல் அடிப்படை எது என்று இந்த பகுத்தறிவுவாதிகள் இதுவரை சொல்லவில்லை.

சித்தர் மரபில் வந்த தாயுமான சுவாமிகள் சரளமாக சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறாரே அது தமிழர் நெறி இல்லையா என்று கேட்டதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான அகத்தியர் இதிகாசங்களில் இருக்கிறாரே, ஆதித்ய ஹ்ருதயம் என்ற தோத்திரத்தை எழுதியிருக்கிறாரே, இது இந்து சமய நம்பிக்கைதானே என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை.

bhogar_siddharஅஷ்டகஜங்கள், அஷ்டதிக்குப் பாலகர்கள், அஷ்டாங்க யோகம், அந்தக் கரணங்கள், அவத்தைகள், ஆதாரங்கள், இந்திரியங்கள், ஏகாந்தம், ஐம்பூதங்கள், ஓம்காரம், கோசங்கள், சக்திகள், சட்சமயங்கள், சீவன்முக்தி, தானம், தசநாடி, திரிகரணம், பஞ்சாக்ஷரம், மண்டலங்கள், யாகம், யோகம், வாயு, வேதாங்கம், ஜீவன்முக்தி ஆகிய சொற்கள் சித்தர் பாடல்களில் நிறைந்துள்ளனவே, இவை இந்து சமய வழக்கத்தில் வந்தவைதானே என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

’தனிப்பட்ட ஆரியக் குழுவினர் இவர் தாமென்று உறுதிப்படுத்திச் சொல்வதற்கு இன்றியமையாத சான்றுகள் கிடைத்திலாமையின் இப்போதுள்ள இந்திய மக்களில் இவர்தாம் ஆரியரென்று பிரித்துக் காட்டுதல் இயலவில்லையென்றும் மேனாட்டாசிரியர்களே சண்டையை ஒளியாமற்சொல்லிவிட்டனர்’ என்று தமிழர் மதத்தின் தலைவரான மறைமலைஅடிகள் சொல்கிறாரே அதற்கு மறுப்பு ஏதும் உண்டா என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

’முட்டை வைப்பேன், முழுக்கோழி தான் வைப்பேன், தட்டுத் தீங்காடில் தாயே தயாபரியே’ என்று சித்தர் மரபில் வந்த இஸ்லாமியரான குணங்குடி மஸ்தான் சாகிபு பாடியிருக்கிறாரே, இது இந்து மதம் இல்லையா என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

தமிழர் மதம், திராவிடர் சமயம் போன்ற தமிழறிஞர்களின் கண்டுபிடிப்புகளில் ஈவெராவுக்கு நாட்டம் இல்லை. அவர் கடவுளை எதிர்த்தது போலவே கவிஞர்களையும் எதிர்த்தார். இதுபற்றி ஈவெரா கூறியது :

’சுமார் 50, 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் புலவர்கள் யாராயிருந்தாலும் ‘பிச்சை’ எடுத்தே தீருவார்கள். புலவரைப் பற்றி என் கருத்து ‘புலவர் என்றால் சொந்தப் புத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் கூறுவேன். நா. கதிரவேற்பிள்ளை என்கிற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வரும்போது ஒரு நிகழ்ச்சியில் ‘புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடம் கண்டேன்’ என்று சொன்னதற்கு ’உன்னிடம் வந்ததே தவறு’ என்று சொல்லி என்னிடம் வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்துவிட்டார்.’

(ஆனைமுத்து தொகுதி 2, பக் 984)

கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் ஈவெராவுக்கு முட்டுக் கொடுத்துப் பார்த்தாலும் ஈவெரா தமிழையோ தமிழ்ப் புலமையையோ மதிக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

திராவிடர் இயக்கங்கள் மற்றும் ஈவெரா தொடர்பான பல உண்மைகளை இந்தத் தொடரில் வெளிப்படுத்தியிருக்கிறோம். இதோ இன்னொன்று:

ஈவெராவின் வாழ்க்கையை விவரிக்கும் புத்தகங்களில் சிருங்கேரி சங்கராசாரியார் ஈவெராவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்ததாகவும் ஈவேரா அதை நாகரீகமாக மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

அந்தக் கடிதத்தின் முக்கிய பகுதிகள்:

எல்லோருக்கும் ‌க்ஷேமம் உண்டாகும்படிக்கும் எல்லோருக்கும் பிரம்மானந்தத்தை அடையச் செய்யவே ஜெகத்குரு பீடம் இருக்கிறது. கர்மகாண்டத்தில் அவரவர்கள் நன்றாய்க் கடமைகளைச் செய்து நடந்து… பிரம்மானந்த சாட்சாத்காரம் அடையச் செய்வதே விரதமாகக் கொண்ட இந்தக் குருபீடமானது சிஷ்யர்களை ஏற்படுத்திச் சதாசாரத்தில் பழக்கி சந்நியாசம் அளிப்பது வழக்கமாயிருக்கிறது. இன்னும் காலதேச வர்த்தமானத்தை யோசித்து சாஸ்திரங்கள் இடங்கொடுத்திருக்கிற வரையிலும் சிஷ்யர்களுக்குச் சில சுதந்திரங்களையும் இந்த ஜகத்குரு சமஸ்தானம் கொடுக்கவேண்டியது அவசியமாகத் தோன்றியிருக்கிறது.

உங்களை நேரில் பார்த்து உற்சாகப்படுத்தி எங்கள் அபிப்ராயங்களையும் உங்களுக்குச் சொல்லி நல்ல சஹாயஞ்செய்து அநுக்கிரகிக்க வேண்டுமென்று தேவதா பிரேரணை உண்டாகியிருப்பதால் விவேகியாகிய நீரும் உங்கள் தர்மபத்தினியும்.. இந்த சமஸ்தானத்திற்கு வந்து ஸ்ரீ சாரதா சந்திர மௌளீதர சுவாமிகள் பிரசாத அநுக்கிரக பெற்று இப்போதிலும் அதிகமான சிரேயசை அடைவீர்கள் என்று நம்பி இந்த ஸ்ரீ முகம் எழுதிவைத்து அனுப்பலாயிற்று.

இந்தக் கடிதம் குடியரசு 02.03.1930 இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஈவெரா பற்றி சாமி சிதம்பரனார் எழுதி திராவிடர் கழகம் வெளியிட்ட புத்தகத்திலும் இது உள்ளது. ஆனைமுத்து தொகுத்த ஈவெரா சிந்தனைகள் நூலிலும் (பக்கம். 1040) இந்தச் செய்தி உள்ளது.

சங்கராசாரியாரின் அழைப்பை ஏற்க மறுத்து ஈவெரா எழுதிய கடிதமும் இந்தப் புத்தகங்களில் உள்ளது.

நமக்கு இந்தக் கடிதம் குறித்து சில சந்தேகங்கள் உண்டு. அவற்றை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகள்

ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகள்

1930 ஆம் ஆண்டில் சிருங்கேரி பீடத்தில் சங்கராசாரியாராக இருந்தவர் ஸ்ரீ சந்திர சேகர பாரதி ஸ்வாமிகள்.

ஆனால் குடிஅரசு வெளியிட்டுள்ள கடிதத்தில் ஸ்ரீ பிரஸ்தா வித்தியானந்த நாத பாரத ஸ்வாமி என்ற பெயர் இருக்கிறது. இவர் யார்? இவர் சிருங்கேரி பீடாதிபதியா?

1930ஆம் ஆண்டில் ‘ஆற்காடென்னும் சடாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகிய புஷ்பவனம் என்னும் புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி ஆசிரமத்தில் இருந்து இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

1930 ஆம் ஆண்டில் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆற்காடு பகுதிக்கே வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தக் கடிதத்தை எழுதியவர் யார் என்ற சந்தேகம் எழுகிறது.

கடிதத்தின் தலைப்பில் ’நிஜ சிருங்கேரி’ என்ற வார்த்தை உள்ளது. இது நம்முடைய சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. சிருங்கேரி மடத்தின் ஸ்ரீ முகத்தில்; ’நிஜ சிருங்கேரி’ என்று எழுதும் வழக்கமில்லை.

ஆக சங்கராசாரியார் கடிதம் பற்றிய உண்மையை வெளியிட வேண்டிய பொறுப்பு ஈவெராவின் சீடர்களுக்கு உண்டு.

ஒன்று, யாரோ ஒருவர் எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு சிருங்கேரி சங்கராசாரியார் கடிதம் எழுதியதாகக் கதை வசனம் தயாரித்திருக்கலாம். அல்லது எழுத்தாளர் சாவியின் பாணியைக் கையாண்டிருக்கலாம்.

அது என்ன சாவியின் பாணி?

வார இதழ்களில் சுவாரசியம் நிறைந்தது கேள்வி பதில் பகுதி. எல்லா இதழ்களிலும் இது உண்டு. மூத்த பத்திரிகையாளரான சாவியிடம் ஒருவர் கேட்டார்.

கேள்வி எழுதுவது கடினமா? அல்லது பதில் எழுதுவது கடினமா?

சாவி எழுதினார். கேள்வியை எழுதிவிடலாம். பதில் எழுதிவிடலாம். ஆனால் சமயத்தில் இரண்டையும் எழுதுகிறோமே அதுதான் கடினம்.

தொடர்ந்து திராவிட இயக்க வரலாற்றை அடுத்த பகுதியிலும் பார்க்கலாம்

மேற்கோள் மேடை :

வடமொழியிலிருந்து எடுத்துத் தமிழான்றோராலே தமிழுருவாக்கி வழங்கப்பட்ட சொற்களை பிறமொழிச் சொற்களெனக் கடிந்தொதுக்குதல் மேற்கொள்ளாது அவை தம்மை ஆக்கத் தமிழ்மொழியாகத் தழுவிக் கொள்வதே முறையாகும்.

– யாழ் நூல் அறிஞர் சுவாமி விபுலானந்தர் தலைமையுரை / தமிழ் மாகாணச் சங்கம் / 1936__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard