New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 39: அண்ணாத்துரையின் தோல்வி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
39: அண்ணாத்துரையின் தோல்வி
Permalink  
 


போகப் போகத் தெரியும் – 39: அண்ணாத்துரையின் தோல்வி

October 30, 2009
சுப்பு rss_icon16.jpg

 

vai.mu.kothainaayagiதமிழ் எழுத்துலகில் பலரைக் கவர்ந்த மகாத்மா காந்தி, அந்தப் பெண்மணியையும் கவரத் தவறவில்லை. அவரும் ஒரு எழுத்தாளராக பரிணமித்துக் கொண்டிருந்த தருணம் அது. காந்தி மேல் மிகுந்த மரியாதை அவருக்கு. காந்தியை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.

அந்தப் பெண்மணியின் எண்ணம் ஈடேற ஒரு வாய்ப்புக் கிடைத்தது. மகாத்மா சென்னை வந்திருக்கிறாராம்… பரபரப்படைந்தார் அந்தப் பெண்மணி. தன் தோழி அம்புஜம்மாளை அழைத்துக் கொண்டார். புறப்பட்டுவிட்டார். சாதாரணமாக அல்ல. சர்வாலங்கார பூஷிதையாக. காந்தி என்ன சாமானிய ஆளா? அகில உலகப் பிரமுகர் அவர். அவரைப் போய் பிச்சைக்காரியைப் போல் சென்று பார்க்கலாகுமோ? காதுகளில் மாட்டல்கள், ஜிமிக்கிகள், மூக்கில் மூக்குத்தி, கழுத்தில் அட்டிகைகள், கைகளில் பூச்சூடல் காணும் பெண்போல தங்க வளையல்கள், இடுப்பில் ஒட்டியாணம், மேகலை, கால்களில் கொலுசு; தன்னிடம் இருப்பதிலேயே விலை உயர்ந்த பட்டுப் புடவையை அணிந்து கொண்டார் அவர்…

அந்தப் பெண்மணியை ஏற இறங்கப் பார்த்தார் மகாத்மா. அவர் பொக்கை வாயில் ஒரு மெல்லிய புன்னகை… “பாரத அன்னையே அடிமை விலங்கு பூண்டிருக்கிறாள். இந்நிலையில் ஆடம்பரமான அணிமணிகள் நமக்குத் தேவைதானா?” பெண்மணி அங்கேயே ஓர் ஓரமாக கால் ஓய்ந்து உட்கார்ந்து விட்டார். காந்தியைப் பார்க்க யார் யாரோ வந்தார்கள் போனார்கள். யாரும் அவர் கண்ணில் படவில்லை. காந்தி மட்டும்தான் ஒரு ஜோதியாக அவர் உள்ளத்தில் சுடர்வீசிக் கொண்டிருந்தார்…

வீட்டுக்குச் சென்றவர் தன் அறையின் உள்புறம் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார். வியப்புடன் வெளியே காத்திருந்தார் கணவர் பார்த்தசாரதி.

அறைக்கதவு திறந்தபோது ஓர் அதிசயம் நேர்ந்திருந்தது. பட்டுப்புடவை மறைந்து ஓர் எளிய கதராடை அந்தப் பெண்மணியின் உடலைச் சுற்றிக்கொண்டிருந்தது. ஆடம்பர அணிகலன்கள் மாயமாய் மறைந்திருந்தன. மூக்குத்தி, தாலி, இரண்டே இரண்டு வளையல்கள் என இந்து மதச் சம்பிரதாயபடி தாம் திருமணமாகி கணவருடன் வாழ்பவர் என்பதற்கான அணிகலன்களை மட்டுமே அவர் அணிந்திருந்தார்.
— பக்.3,4/ கோதைநாயகியின் இலக்கியப் பாதை/ திருப்பூர் கிருஷ்ணன்/வானதி பதிப்பகம்.

அந்தப் பெண்மணி அன்று முதல் கதரைத்தான் அணிந்தார். அவர் பெயர் வை.மு.கோதைநாயகி. திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள வைணவத் தலம் திருக்கோளூர். அந்தத் தலத்தில் வாழம் திருமாலின் பெயர் ‘வைத்தமாநிதி.’ இந்த இறைவன்தான் கோதைநாயகியின் குலதெய்வம். கோதைநாயகியின் சொந்த ஊர் முடும்பை என்ற தலம். வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி, வை.மு.கோ. என்று சுருக்கமாக அழைக்கப்பட்டார். தமிழில் 115 நாவல்கள் எழுதிய அவர் காங்கிரஸ் மேடைகளில் பாரதியார் பாடல்களைப் பாடி சுதந்திர உணர்ச்சியை வளர்த்தார். வைமுகோ எழுதிய தொடக்க கால நாவல்களில் வைதேகி, பத்மசுந்தரம், செண்பக விஜயம், ராஜாமணி, ராஜமோஹன் போன்றவை துப்பறியும் கதைகள். பிறகு துப்பறியும் கதைகளை ஒதுக்கிவிட்டு அவர் சமூக நாவல்களை எழுதினார். சமூக நாவல்களில் காந்தியத்தின் தூக்கல் இருந்தது.

1932இல் சென்னையில் நடந்த காங்கிரஸ் ஊர்வலத்தில் பங்கெடுத்ததற்காக கோதைநாயகி கைது செய்யப்பட்டு வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த காலத்திலும், ‘சோதனையின் கொடுமை’, ‘உத்தமசீலன்’ ஆகிய நாவல்களை அவர் எழுதினார்.

1934இல் நடைபெற்ற ஜில்லா போர்டு தேர்தலில் கோதைநாயகி நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரசாரம் செய்தார். கோதை நாயகியோடு உடனிருந்த பெண்கள் கோஷ்டியில் கே.பி. சுந்தராம்பாளும் ஒருவர்.

விடுதலை வேள்வியில் தமிழகத்தின் பங்கு பற்றியும் நாவிதர் முதல் புரோகிதர் வரை நெசவாளி முதல் ஆசார வைணவப் பெண்மணி வரை அந்தத் தீயில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதையும் பார்த்தோம்.

தமிழ்நாடே புடம்போட்ட தங்கம் போல சுடர்விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது, ஈ.வே.ரா என்ன செய்தார் என்பதையும் நீதிக் கட்சியின் நிலமையையும் பார்க்கலாமா?

முதலில் நீதிக்கட்சி.

1934இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சிக்குக் கிடைத்த தோல்வி பற்றி இரா. நெடுஞ்செழியன் எழுதுகிறார்.

”நீதிக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் என்பவர்கள் பலரும், கட்சி வளர்ச்சியைப் பற்றியோ, கொள்கைகள், குறிக்கோள்கள் பரவவேண்டிய இன்றியாமை பற்றியோ திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியோ, பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும், பற்றையும், பரிவையும் பெறுவதைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தத்தமது பதவி உயர்வு பற்றியும், ஆட்சி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பெறுவதைப் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், நீதிக்கட்சியானது கவனிப்பாரற்று, கூனிக்குறுகி, செல்வாக்கு குறைந்து காணப்பட்டது. பொதுமக்களிடம் அது கொண்டிருந்த பிடிப்பு, ஆதரவு, அரவணைப்பு ஆகியவை நாளுக்குள் நாள் தளர்ந்துபோய்க் கொண்டிருந்தன.”
— பக்.283/”திராவிட இயக்க வரலாறு”

சரித்திரத்தின் புழுதிகளில் ஒதுக்கித் தள்ளப்பட்டது நீதிக்கட்சி. பட்டாடைகளும் சரிகைத் தலைப்பாகைகளும் விடுதலை ஆவேசத்தில் பஞ்சாய்ப் பறந்தன. ஜமீன்தார்களும் மிராசுதார்களும் தமிழர் எழுச்சியின் முன் மண்டியிட்டார்கள். இந்தத் தோல்வியின் இன்னொரு பரிமாணம் விசேஷமானது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட சி.என். அண்ணாத்துரை சென்னை மாநகராட்சித் தேர்தலில் (1935) பெத்தநாயக்கன் பேட்டையில் நீதிக்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். வெற்றி பெற்றவர் காங்கிரஸ் வேட்பாளர் ம.சுப்பிரமணியன். காங்கிரஸின் தேசியக் கொடியைக் கேலி செய்து அண்ணாத்துரை பேசிய ஆவேசப் பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி இது.

இந்த நிலையில் ஈ.வெ.ரா என்ன செய்தார்?

1934 ஜூலை மாதத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. இந்த நேரத்தில் தன்னுடைய சமதர்மக் கட்சியின் திட்டத்தை ஈ.வெ.ரா நீதிகட்சிக்கு அனுப்பினார். அந்தச் செயல் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி நீதிக்கட்சியை அவர் கேட்டுக் கொண்டார்.

சமூகச் சுரண்டலையே அடிப்படையாகக் கொண்ட நீதிக்கட்சி சமதர்மத்தை ஏற்றுக் கொள்ளுமா? செருப்பு அப்படியே இருக்க, அதற்கு ஏற்றபடி கால் வெட்டப்பட்டது என்பது சரித்திர உண்மை. நீதிக்கட்சிக்கு செளகரியப்படும்படியாக ஈ.வெ.ரா தன்னுடைய திட்டத்தை மாற்றியமைத்துவிட்டார்.

சுயமரியாதை மேடைதோறும் சோஷலிசம் பேசிவந்த ஈ.வெ.ரா திருத்துறைப் பூண்டி மாநாட்டில் சோஷலிசத்தைக் கைகழுவிட்டார். அதை அவரே சொல்லக் கேட்போமா?

”நான் ரஷியாவுக்குப் போவதற்கு முன்பே பொது உடமைத் தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசிவந்தது உண்மைதான். ரஷியாவில் இருந்து வந்தவுடன் அதை இன்னும் தீவிரமாகப் பிரசாரம் செய்ததும் உண்மைதான். ஆனால் சர்க்கார், பொதுஉடைமைக் கொள்கைகள் சட்ட விரோதமானவை என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையும் அடக்கி ஒடுக்கி ஒழித்துவிடவேண்டும் என்று கருதியிருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு எனக்கும் புத்திசாலித்தனமாக சில காரியம் செய்ய வேண்டியதாக ஏற்பட்டுவிட்டது.”
-23.03.1936, பட்டுக்கோட்டை

தென்னிந்தியாவில் பொதுஉடைமை இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சிங்காரவேலர் இதைக் கண்டித்து ”சுயமரியாதை இயக்கம் அவமரியாதை இயக்கமாகிவிட்டது” என்று சொல்லிவிட்டார்.

ஜீவாவும், ராகவனும், நீலாவதியும், வல்லத்தரசும் ஈ.வெ.ராவிடமிருந்து விலகி தனி அமைப்பை ஏற்படுத்துகிறார்கள்.

ப. ஜீவானந்தம், சாத்தான் குளம் அ. இராகவன், புதுக்கோட்டை முத்துசாமி, வல்லத்தரசு ஆகியோர் 14.04.1936இல் திருச்சி தென்னூரில் கூடி ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’யின் ஆரம்பக் கூட்டத்தைக் கூட்டினார்கள்.

இது குறித்த விவரங்கள் அமிழ்தம் பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிவு இதழ்க் கட்டுரைகள் என்ற நூலில் கொடுக்கப்பட்டடுள்ளன. நம்முடைய வாசகர்களுக்காக அதிலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன். சுயமரியாதை இயக்கத்தின் வீட்சி பற்றிய விஷயம் என்பதால் கருத்தின் நீட்சி பற்றி வாசகர்கள் களைப்படையக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

”சுயமரியாதை இயக்கத்தின் சரித்திரத்தை சிறிது மேலெழுந்தவாரியாக நோக்கினும் ஏறல், இறங்கல், எடுத்தல், படுத்தல், சீர்திருத்தம், புரட்சி, செக்குமாடு சுற்றல், அரைத்த மாவை அரைத்தல் இந்த மாதிரியான காணக்கிடைக்காத திருவிளையாடல்கள் நடைபெற்றிருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

இந்திய அரசாங்கம் ”கம்யூனிசம்” சட்ட விரோதமென்று பிரகடனம் செய்யவும், விஞ்ஞான ரீதியாகக் கொள்கை நிர்ணயம் பெறாத அனேகரைக் கொண்ட சுயமரியாதை இயக்கத்தார், சமதர்மம் என்றும் பொதுஉடைமை என்றும் சொல்வதை நிறுத்தி, மனித ஜீவாபிமானப் பிரசாரம் என்றும், மனித சமூகச் சீர்திருத்தப் பிரசாரம் என்றும் வழவழக்க ஆரம்பித்தனர்.

ஈ.வெ.ரா.பகிரங்கமாக ஜஸ்டிஸ் கட்சியின் அங்கத்தினர்களையும் ஒரு கட்சியுமற்ற வரதராஜூலுவையும் ஆதரிக்கத் தொடங்கினார்.

சமதர்மத்தின் ஜீவநாடியாக முதலாளி-தொழிலாளி என்ற வகுப்புப்போர் உணர்ச்சிக்கு ரஜா கொடுத்துவிட்டு, பழைய பிராமணர்-பிராமணரல்லாதார் என்கிற ஜாதிப்போர் உணர்ச்சியை, போட்டுக்கொண்டே ஜஸ்டிஸ் வேஷத்திற்குத் தக்கவாறு கிளப்பிவிட்டு, மூன்று வருஷகாலமாக தமிழ் நாட்டுப் பொதுமக்களிடம் பரவிவந்த சமதர்ம உணர்ச்சியை மறைக்கவும், மறக்கவும், மறுக்கவும் ஆன நிலைமையை உண்டு பண்ணி நாட்டில் பிற்போக்குணர்ச்சி தலைவிரித்தாட உதவினர்.

மாகாண சுயமரியாதைச் சங்கம் செத்தவிடம் புல் முளைத்துப் போயிற்று. மாகாண மாநாடு கூட்டி கிட்டத்தட்ட அரைடஜன் வருடங்களாயின..

ஜஸ்டிஸ் கட்சியானது, ராஜ்ஜியத்தினுள் எதையும் சாதிக்கும் அளவுக்கு பலாத்காரத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் சர்க்காரேயல்ல, அல்லது சர்க்காரை ஆட்டி அசைக்கத் தகுந்த அளவுக்குப் பொதுஜனச் செல்வாக்கைப் பெறுவதற்குரிய புரட்சி லட்சியத்தோடு போர்க்குணம் நிறைந்த கட்சியுமல்ல. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ”போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக்குங்கோ ஆயிரம்” என்று கூறத்தக்க ராஜவிஸ்வாசமும் அரசாங்கம் கொடுப்பது எவ்வளவு அற்பமாயினும் தட்டாமல் வாங்கித் திருப்தியடையத் தகுந்த பலவீனமும் கொண்ட பூர்ஷூவாக் கட்சியே ஜஸ்டிஸ் கட்சியாகும்.

ஜஸ்டிஸ் கட்சியின் அவசியத்தை வலியுறுத்த வேண்டி ஜஸ்டிஸ் கட்சிப் பாதுகாவலர்கள் காட்டும் ஒரு தனி மாபெருங் காரணம் வகுப்புவாரி பிரதிநிதித்துவமாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பிராமணரல்லாத மகளிருக்கு சர்வரோக நிவாரணியாம். சமதர்மத்தின் மேல் ஜாதிவாரிப் பிரதிநிதித்துவமானது கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்து மாதிரி அழியாதவாறு பொறிக்கப்படுமாம். இதற்கு மிஞ்சின பொய்யும் மோசடியும் சரித்திரம் கண்டதில்லை, காணப்போவதுமல்ல என்று கூடச் சொல்லலாம்.”

சுயமரியாதை இயக்கத்தின் இன்னொரு பல்டியையும் சொன்னால்தான் இந்தப் பகுதி நிறைவடையும்.

ஹிந்து ஆலயங்களில் நுழைவதற்கு தாழ்த்தப்பட்டோருக்கு உரிமை உண்டு என்ற கொள்கையோடு நடத்தப்பட்டது ஆலய நுழைவுப் போராட்டம். இதைக் காந்தியவாதிகளே முன்னின்று நடத்தினர். வைக்கத்தில் ஆலயம் இருந்த தெருவில் நுழைவதற்கான போராட்டத்தில் அந்தச் சமயத்தில் காங்கிரசில் இருந்த ஈ.வெ.ராவும் சிறை சென்றார். அதற்குப் பிறகு காங்கிரஸ் பிராமணர்களின் கோட்டையாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டிவிட்டு தேசிய இயக்கத்தில் இருந்து அவர் வெளியேறினார். அரசாங்கத்தின் அடிப்பொடியான நீதிக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்.

’அடடா, இதெல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லும் வாசகர்கள் ஒரு நிமிடம் பொறுமையாக இருக்கவேண்டும்.

1935ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் நின்றார். அவரை எதிர்த்து சனாதனக் கட்சியின் சார்பாக நின்றார் ராஜாபகதூர் எம்.கே. கிருஷ்ணமாசாரி. தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழையக்கூடாது என்பது சனாதனக் கட்சியின் கொள்கை.

இந்தத் தொகுதியில் ஈ.வெ.ரா. சனாதனக் கட்சி வேட்பாளர் ராஜாபகதூர் எம்.கே.கிருஷ்ணமாசாரியை ஆதரித்தார். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அமோக வெற்றி பெற்றார்.

அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழையக் கூடாது என்று சொன்னவரை ஈ.வெ.ரா ஆதரித்தார். நுழைய வேண்டும் என்று சொன்னவரை எதிர்த்தார் என்பதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

மேற்கோள் மேடை:

sujathaகால்டுவெல் ‘தமிழ் மொழி தன் மாட்டுள்ள வடசொற்கள் முழுவதையும் நீக்கிவிட்டுத் தக்க தமிழ்ச் சொற்களைப் பெய்து கொள்ளலாம். அவ்வாறு நீக்குவதால் அதன் தூய்மை மற்றும் செம்மைப் பண்பும் உயர்ந்துஒளிரும்’. என்று தன் ஒப்பிலக்கணத்தில் கூறியிருக்கிறார். ஒப்பிலக்கணத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அவர் தமிழ் உரைநடைக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

கர்த்தருடைய இந்தப் போஜனத்தைச் சேர்ந்தவர்களும் அதற்கு ஆயத்தமாகிறவர்களும் தங்களை சோதித்தறிந்து செபத்தியானம் செய்து சேரவேண்டிய ஒழுங்கிருக்க கிறிஸ்தவர்களில் அநேகர் வேத வசனத்தை நன்றாய் அறியாதவர்களாயும் தேவ பக்தியில் தேறாதவர்களாயும் இருப்பதினாலே.. தருணத்திலும் வாசிக்கத்தக்க செபத்தியானங்களுள்ள புஸ்துகங்கள் அவர்களுக்கு அவசியம் தேவையாயிருக்கிறது.

கேள்விக்குப்பதில் – அனைத்தும் வடசொற்களே!

– கணையாழியின் கடைசிப் பக்கங்கள்/சுஜாதா.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Venkat Swaminathan on October 31, 2009 at 6:52 pm

எத்தனையோ சாதாரணமாக வெளிவரும் சாத்தியமில்லாத் செய்திகளைத் தந்திருக்கிறீர்கள். பிராமணர் கூடாரமாகவிட்டதாக அவர் கூறும் காங்கிரஸை எதிர்த்தது சரி. ஆனால் அது தான் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைக்காக் குறல் கொடுத்தது. ஆனால் இதற்கு நேர் எதிரான கொள்கைகளும் செய்ல்பாடுகளையும் கொண்ட எம்.கே கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்தது ஏன்? அவரும் ஒரு ’பார்ப்பனர்’ அதிலும் ச்னாதனக் கட்சிக்காரர். ஈ.வே.ராவுக்கு ஆத்திரம் வந்தால் கண் மண் தெரியாமல், என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் தன் கொள்கை என்ன என்ற பிரக்ஞையே இல்லாமல் செயபடுகிறவர் என்பது தெரிகிறது. இவர் எப்படி பகுத்தறிவுப் பகலவன் ஆனார்? இந்த விவரங்கள் வீரமணியிடமிருந்து வெளிப்படுமா என்ன? நீங்கள் இதையெல்லாம் வெளிக்கொணராவிட்டால், இவையெல்லாம் மக்கிப் போன பத்திரிகைத் தாள்களேடேயே சரித்திரத்திலிருந்து மறைந்தும் போகும்.

கிட்டத் தட்ட இரண்டு மாதங்கள் கழித்து இங்கு எட்டிப் பார்க்கிறேன்.பழைய பாக்கி நிறைய குவிந்து கொண்டே போகிறது.

Rishi on November 1, 2009 at 10:18 am

அண்ணாதுரையின் மீது கொண்ட கோபம் காரணமாக பொதுத் தேர்தலில் அவருக்கு எதிராக நின்ற ஸ்ரீனிவாச (அய்யங்கார்)ஐயும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்திருக்கிறார் ஈ.வே.ரா.. இது பற்றி திரு. மலர்மன்னன் திண்ணையில் எழுதியதைப் படித்ததாக ஞாபகம்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

அரவிந்தன் நீலகண்டன் on November 1, 2009 at 7:47 pm

//ஈ.வே.ராவுக்கு ஆத்திரம் வந்தால் கண் மண் தெரியாமல், என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் தன் கொள்கை என்ன என்ற பிரக்ஞையே இல்லாமல் செயபடுகிறவர் என்பது தெரிகிறது.//
இல்லை எனக்கு அப்படி தோன்றவில்லை. ஈவெராவுக்கு இரண்டு கொள்கைகள் இருந்தன. ஆத்மார்த்தமான கொள்கைகள். ஒன்று பிரிட்டிஷாரை ஆதரிப்பது இரண்டு தலித்துகள் அபிராமண-நிலவுடைமை சாதிகளுக்கு சமமாக வருவதை எதிர்த்தல். இந்த இரண்டு கொள்கைகளின் அடிப்படையில் பாருங்கள் அவர் அவரது கொள்கைவழித்தான் நடந்திருக்கிறார் என்பது புரியும். என்ன அந்த கொள்கை மனித்தனம் சற்றுமில்லாத அரக்கத்தனமான கீழ்த்தரமான ஆபாசமான கொள்கை.
ஈவேரா தமிழ்நாட்டுக்கு வந்த சாபக்கேடு.
ஈவேராவை பெரியார் என்று சொல்பவன் முட்டாள்.
ஈவேராவை பகுத்தறிவுவாதி என பிரச்சாரம் செய்பவன் அயோக்கியன்.
ஈவேராவை சுயமரியாதைக்காரன் என்று புகழ்பவன் அக்கிரமக்காரன்.

வாழ்க சுப்புவின் தொண்டு.
திறக்கட்டும் தமிழரின் கண்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard