New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 35. ஜம்பத்துக்கு நாத்திகம்!


Guru

Status: Offline
Posts: 24459
Date:
35. ஜம்பத்துக்கு நாத்திகம்!
Permalink  
 


போகப் போகத் தெரியும் – 35

September 23, 2009
சுப்பு rss_icon16.jpg

 

ஜம்பத்துக்கு நாத்திகம்!

ingersoll01இண்டர்மீடியட்டில் படித்தபோது ஒரு நிகழ்ச்சி. திரு. கா. நமச்சிவாயர் நாற்பது, நாற்பத்தைந்து நிமிடங்களுக்குமேல் பாடம் நடத்தமாட்டார். கடைசிப் பத்துப் பதினைந்து நிமிடங்களைப் பொதுக் கேள்விகளுக்காக ஒதுக்குவது அவரது வழக்கம். நாங்கள் கேட்டும் பொதுக்கேள்விகளுக்கு அவரும் திறமையாகப் பதில் சொல்லுவார். அந்த அளவுக்கு உலக விவகாரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தோம். எங்கள் நமச்சிவாய முதலியார் ஆழ்ந்த சைவர். சந்தனப்பொட்டு இல்லாமல் வரமாட்டார். கிருத்திகை தோறும் விடுமுறை எடுத்துக்கொண்டுவிட்டு திருத்தணி சென்றுவிட்டு வருவார்.

ஒருநாள் திரு. எம். ராமசாமி நாயுடு கேள்வி நேரத்தில் இங்கர்சால் என்ற அமெரிக்க நாத்திகர் நாத்திகத்திற்கு ஆதரவாகச் சொன்ன சில வாசகங்களை வகுப்பிலே சொல்லி “இந்த வாதம் உண்மை அல்லவா? அதை மறுக்க முடியுமா?” என்று கோபமூட்டுவதற்காகவே கடுமையாகக் கேட்டார்.

திரு. நமச்சிவாய முதலியார் மாணவர்களை ‘அம்மா’ என்றுதான் அழைப்பார். ‘நீ உட்கார் அம்மா’ என்று சொல்லிவிட்டு அவர் சொன்னார். இது இங்கர்சால் என்ற அமெரிக்கனின் வாதம். நீ நாலைந்து வாசகங்களைத்தான் சொன்னாய் என்று கூறி இங்கர்சால் சொன்ன நாத்திகவாதம் முழுவதையும் சொல்லிவிட்டு “இது பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. இந்த வாரக் குடியரசில் சுருக்கம் மொழிபெயர்ப்பாக வந்திருக்கிறது. அதை மட்டும் படித்துவிட்டு நீ கேட்டாய். முழுவதையும் எடுத்துப்படி. சிந்தித்துப்பார். நாத்திகம் சரி என்று பட்டால் ஏற்றுக்கொள். ஜம்பத்துக்காக நாத்திகனாக இருக்காதே” என்றார்.

— நெ. து சுந்தரவடிவேலு வாழ்க்கை வரலாறு.

இங்கர்சால் எழுத்துக்களை இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிட்டு நாத்திகம் பேசுவது அன்றைய பேஷன். அதைத்தான் கல்வியாளர் சுந்தரவடிவேலு சுட்டிக் காட்டியிருக்கிறார்.

vivekananda5வேதாந்தச் சிங்கமான சுவாமி விவேகானந்தர் அமெரிக்கப் பயணத்தில் இருந்தபோது, இங்கர்சால் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்ற தகவலை இந்நாட்டு இங்கர்சால்களும் அவருடைய இளவல்களும் அறிவார்களா?

அகலமும், ஆழமும் இல்லாத புலமையை வைத்துக்கொண்டே இவர்கள் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டுவிட்டார்கள்.

நாம் திராவிட இயக்க வரலாற்றுக்கு வருவோம்.

சுயமரியாதை இயக்கத்திற்கு பிராமணரல்லாதாரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கவில்லை. பிராமணரல்லாதாரில் தேசிய உணர்வு உள்ளவர்கள் சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்தனர்.

காங்கிரஸ் உறுப்பினராக இருந்த கே. பக்தவத்சலம் (60களில் தமிழக முதல்வர்) கடவுள் மறுப்பு, சமய மறுப்பு நடவடிக்கைகளை கண்டித்தார்.

சுயமரியாதை இயக்கத்தவர் மீது சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கை அவசியம் என்று ‘தேசபந்து’ என்ற தேசியத் தமிழ் நாளேடு எழுதியது.

டாக்டர். பி. வரதராஜுலுவின் “ தமிழ்நாடு” நாளிதழும் பகுத்தறிவுக் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தது.

வட ஆற்காடு, செங்கற்பட்டு, திருநெல்வேலி, தஞ்சாவூர், மாவட்டங்களைச் சேர்ந்த சைவ வேளாளர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

திருநெல்வேலியில் சச்சிதானந்தம் தலைமையில் 30 & 31-3-1929 இல் சைவப் பெரியார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் வேதாந்த போதகாசிரியர் கோ. வடிவேலு செட்டியார் முயற்சியால் நடந்த சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆஸ்திக சங்க மாநாட்டிலும் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.மு. ஆறுமுகம் ‘சுயமரியாதைக்கு ஒரு சூட்டுக்கோல்’ என்ற பிரசுரத்தை வெளியிட்டார்.

சைவ சித்தாந்தக்கழகத்தின் தலைவர் திருவரங்கம் “கடவுளை நிந்திக்கும் கயவர்” என்று கட்டுரை எழுதினார்.

மறைமலையடிகள் தலைமையில் 1929 மே மாதத்தில் திருப்பாதிரிப்புலியூரில் சைவர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திரு.வி.க கலந்துகொண்டார். நமது சமயக் குறவர்களையும் நூல்களையும் பல்வேறு வழிகளிலும் தூற்றிவரும் வகுப்பினரால நடத்தப்படும் பத்திரிக்கைகளையும் இயக்கத்தையும் சைவ சமயிகள் எவ்வகையிலும் ஆதரிக்கக் கூடாது என்ற தீர்மானம் இந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டது. சிவசண்முக மெய்ஞான சிவாசாரிய சுவாமிகள் இம்மாநாட்டை நடத்தி வைத்தார்கள்.

இருந்தாலும், நாட்டின் பொருளாதார வலிமை பிராமணர்களிடம் உள்ளது, காங்கிரஸில் பிராமணர்களின் ஆதிக்கம் உள்ளது என்ற பொய்யுரையை சுயமரியாதைக்காரர்கள் தொடர்ந்து பரப்பி வந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி. ராமமூர்த்தி பதில் தருகிறார்.

“பஞ்சாபில் கதர் என்ற புரட்சி இயக்கத்தை நடத்திய பாய் பரமானந்த் பிராமணரல்ல. குஜராத்தைச் சேர்ந்த சர்தார் வல்லபாய் படேலும், அவரது சகோதரர் வித்தல்பாய் படேலும் பிராமணர்கள் அல்ல. காங்கிரஸ் பொருளாளரான சிவபிரசாத் குப்தா, பாபு பகவான் தாஸ், சம்பூர்ணானந்த், புருஷோத்தம் தாஸ் டாண்டன், பாபு ராஜேந்திர பிரசாத், சித்தரஞ்சன் தாஸ், சென் குப்தா ஆகிய பிராமணரல்லாதார் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர். லால் பகதூர் சாஸ்திரி பிராமணர் அல்ல. சாஸ்திரி என்பது அவர் காசி வித்யாபீடத்தில் படித்துப் பெற்ற பட்டம். சேத் கோவிந்த தாஸ், போலா பஸ்வான், மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரும் பிராமணர்கள் அல்ல. காங்கிரசை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மகாத்மா காந்தியும் பிராமணர் அல்ல. ”
– The freedom struggle and Dravidian Movement, Page 16 & 17.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் மட்டும் அரசியலிலும், அரசுப் பணியிலும் பிராமணர்கள் முண்ணனியில் இருந்தனர். வடக்கு கனரா பகுதியிலும் பெல்லாரியிலும் பிராமணத் தலைமை இல்லை. மலபாரிலும், கர்நாடகாவிலும் ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் கொங்கணிகள் தலைமைதான் இருந்தது. தமிழ்நாட்டிலும் பெரும்பான்மையான நில உடைமை பிராமணரல்லாதோரிடமே இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் நெடும்பலம் சாமியப்பா முதலியார், ஏ.டி. பன்னீர் செல்வம், மதுரை மாவட்டத்தில் ட்பிள்யூ. பி. சவுந்திர பாண்டியன், பி.டி. ராஜன், ஆகிய நில உடைமையாளர்கள் பிராமணரல்லாதவர்கள். பி.டி. தியாகராஜ செட்டியார், வி.வி. ராமசாமி நாடார், ராஜா.சர். அண்ணாமலை செட்டியார் போன்ற வர்த்தகப் பெருந்தலைகளும் பிராமணரல்லாதவர்களே. ஆந்திரத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பை சொந்தமாகக் கொண்ட பொப்பிலி அரசர், பனகல் அரசர், பெர்ஹாம்பூர் ஜமீன்தார், வெள்ளிங்கிரி அரசர், பீதாபுரம் ஜமீன்தார், வெங்கடகிரி அரசர், ஆகியோர் பிராமணரல்லாதவர்கள். தமிழகத்தில் சிவகங்கை அரசர் மற்றும் ராமநாதபுரம் அரசர் ஆகியோர் பிராமணரல்லாதவர்களே. சாத்தூர் மற்றும் ராமபட்டினம் ஜமீன்தார்களும் பிராமணரல்லாதவர்களே. யார் வசதி வாய்ப்பு உடையவர்கள், யார் வாய்ப்புக்காக ஆங்கிலேயரை ஆதரிக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

அழகு தமிழில் பேசினாலும், ஆங்கிலத்தில் நீட்டி முழக்கினாலும் சுயமரியாதை இயக்கம் மற்றும் நீதிக்கட்சியின் வாதங்களை வெகுஜனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

‘முத்தையா செட்டியாரின் பங்களாவுக்கு உள்ளே போனால் வெளியே வருவதே பெரும்பாடாக இருக்கிறது’ என்று அண்ணாத்துறையே ஒருமுறை அலுத்துக்கொண்டார்.

நீதிக்கட்சியின் முன்னனித் தலைவரான பனகல் அரசர் 1928 டிசம்பர் 16-இல் மறைந்தார்.

1929 இல் நெல்லூரில் நடைபெற்ற மாநாட்டில் பி. டி. ராஜனுக்கும், டாக்டர். சுப்பாராயன் ஆதரவாளர்களுக்கும் இடையே இருந்த பிளவு வெளிப்பட்டது. சமரச முயற்சியாக பி. முனியசாமி நாயுடு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1930 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. நீதிக்கட்சித் தலைவரான பி. முனியசாமி நாயுடு முதலமைச்சரானார்.

தஞ்சையில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டில் உள்கட்சி மோதலும், உரசலும் அதிகமாக இருந்தன. கட்சித்தலைவராக பொப்பிலி அரசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1932 இல் நீதிக்கட்சி சட்டமன்ற உறுபினர்கள் குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டனர். உட்பூசல் அதிகமாகியது.

பி. முனுசாமி நாயுடு பதவி விலகி பொப்பிலி அரசர் முதலமைச்சரானார்.

1930 முதல் 1934 வரை தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்கள்மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்தது நீதிக்க்கட்சியின் அமைச்சரவை. கொடிகாத்த குமரன் திருப்பூரில் உயிரைவிட்டது நீதிக்கட்சி ஆட்சியில் என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும்.

இந்தக்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மேற்கோள் மேடை:

நூற்றுக்கு அரை சதவீதம் கூட இல்லாத இசைவேளாளர்கள் முதலமைச்சராக இருக்கலாம். ஒரு சதவீதம்கூட இல்லாத சமுதயத்தினர் அமைச்சர்களாக இருக்கலாம். மூன்று சதவீத பிராமணர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவி இல்லை என்றால் அதுதான் சமூக நீதியா?

— முரசொலி அடியார் / நீரோட்டம் / 24. 05. 1980__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard