New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 17. மாதச் சம்பளம் ரூ.4333.60 இட்டிலியாக…


Guru

Status: Offline
Posts: 23904
Date:
17. மாதச் சம்பளம் ரூ.4333.60 இட்டிலியாக…
Permalink  
 


போகப் போகத் தெரியும்-17

March 24, 2009
சுப்பு rss_icon16.jpg

 

மாதச் சம்பளம் ரூ.4333.60 இட்டிலியாக…

srinivasa-iyengar-150x150.jpg1920ம் ஆண்டில் திருநெல்வேலி தாமிரவருணி ந்திக்கரையில் தமிழ் மாகாண அரசியல் மாநாடு கூடியது. அப்போதுதான் அட்வகேட்-ஜெனரல் பதவியை உதறியெறிந்து விட்டு வந்திருந்த எஸ். சீனிவாஸய்யங்கார்தலைமையில் இம்மாநாடு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது…

சீனிவாஸவரதய்யங்காரும் பாரதி மருமான் சங்கரனும் மற்றும் இருவரும் மாநாட்டுக்குப் போய்விட்டு, பாரதியைக் காணக் கடையம் சென்றார்கள்.

bharathi_chellammalஇரவு பத்து மணிக்கு பாரதியின் வீட்டை அடைந்தார்கள். செல்லம்மாவும் குழந்தை சகுந்தலாவும் உறங்குகின்றனர்; பாரதி படுக்கையை விரித்து எதிரே ஒரு கைப்பெட்டியின் முன் உட்கார்ந்து ‘சுதேசமித்திரனுக்கு’ ஒரு விலாசம் எழுதிக் கொண்டிருந்தார். அருகே ஒரு முக்காலியில் ஹரிகேன் விளக்கு; பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி. கறுப்புக் கோட்டு, வால்விட்ட தலைப்பாகையுடன்தான் அந்த நேரத்திலும் விளங்குகிறார் பாரதி.

வந்தவர்கள் பாரதியை நமஸ்கரித்தனர்.

அரசியலைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது. “நாடு எப்படியும் முன்னேறப் போகிறது. தீவிரமான தீர்மானங்கள் நிறைவேறியிருக்கின்றன; காந்தியடிகள் வழிகாட்டப் போகிறார்கள். எல்லோரும் சுகமடைய வேண்டும்” என்று பாரதி சொன்னார்….

இரவு 12.30 மணிக்கு எல்லோரும் உறங்கப் போனார்கள். காலையில் நண்பர்களுக்குச் செல்லம்மா சிற்றுண்டி அளித்தார். பாரதி காலைப் பத்திரிக்கை ‘மித்திர’னைப் பார்த்தார். அப்போது உள்ளூர் பிராமணரல்லாத அன்பர்கள் சிலர் வந்து பாரதியாருடன் உரையாடினார்கள். ஆரியர்-திராவிடர் பற்றிய பேச்சு. ‘அன்பர்களே ஆரியர்களுக்கு முன்னால் திராவிடர்கள், அவர்களுக்கு முன்னால் ஆதித் திராவிடர்கள். அதற்குமுன் இருந்தது மிருகங்கள், ஜீவராசிகள். அவை வாழ்ந்த இடத்தை வெட்டித் திருத்தி வீடு கட்டி, பயிர் செய்து நாம் வாழ்கின்றோம். அவை உரிமை கொண்டாடினால் நாம் அனைவரும் அவற்றிடம் விட்டுப் போக வேண்டியதுதான்’ என்று நகைத்தார் கவிஞர்.

– பக். 162 / சித்திர பாரதி / ரா.அ. பத்மநாபன் / காலச்சுவடு வெளியீடு.

இது பாரதியார் வாழ்க்கையின் இறுதிப்பகுதி. சட்டத்தால் முடக்கப்பட்டு, சம்பிரதாயத்தால் ஒதுக்கப்பட்டு, வறுமையால் தாக்கப்பட்ட நிலையில் அப்போது பாரதி இருந்தார். ஆனால் இந்த சமுதாயம் வேறுபாடு இல்லாத வளர்ச்சியடைய வேண்டும்; அறிவுத் தெளிவு, செல்வச் செழிப்பு தார்மீக உணர்வு ஆகியவை இந்த மண்ணில் பெருக வேண்டும் என்ற அவருடைய நிலைப்பாட்டில் மாற்றமுமில்லை. பாரதியின் நிலைமையையும் அவருடைய காலத்தில் தமிழ்நாடு இருந்த அவல நிலையையும் இப்போது பார்க்கலாம்.

1904ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தபோது பாரதியின் பொதுவாழ்க்கை துவங்கியது. அப்போது அவருக்கு வயது 22. பாரதியின் தோற்றம், குணம் மற்றும் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட வரிகளைத் தருகிறேன்:

பாரதிக்கு உத்தம நண்பராக வாய்த்த எஸ். துரைசாமி ஐயர் பாரதியைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்: ‘அவருடைய முகம் மிகவும் வசீகரமாக இருக்கும், எப்போதும் உற்சாகம் நிறைந்திருப்பார். பேச்சில் தெளிவு இருக்கும். எதையும் பளிச்சென்று சொல்லி விடுவார். சூதுவாது தெரியாது. பிறர் பேச்சுத் துணையை ரஸிக்கும் ஸரஸி. நல்ல உணவு அருந்துவதில் விருப்பமுள்ளவர். அவர் உடலோ மிகப் பூஞ்சை. பலமே இல்லாத மெலிந்த தேகம். விளையாட்டாய்த் தள்ளினால்கூட விழுந்து விடுவார்….

சென்னைக்கு வந்த புதிதில் பாரதிக்கு அரசியல் ஈடுபாடே கிடையாது. தேசபக்தித் துடிப்பும் இல்லை. இந்திய சமூகம் திருந்த வேண்டும், விரைவில் திருந்த வேண்டும் என்ற கருத்துக்கொண்ட சமூக சீர்திருத்தவாதியாகவே அவர் விளங்கினார்…

பல ஜாதிகளைச் சேர்ந்த, பல மதங்களைச் சேர்ந்த பாரதி முதலிய இளைஞர்கள், தங்களுள் பிராமணரல்லாத ஒருவரைச் சமைக்கச் செய்து, அந்த உணவை விருந்தாக எல்லோரும் சேர்ந்து உண்டார்கள். டாக்டர் ஜெயராம் நாயுடுதான் சமையல் செய்தார். சென்னையில் இது பரபரப்பை உண்டாக்கியது…

– பக்.26 / சித்திர பாரதி / ரா.அ. பத்மநாபன் / காலச்சுவடு வெளியீடு

Sister Nivedita‘சாதி ஒழிப்பு’ என்ற சிந்தனை ஈ.வே.ரா.வுக்கு ஏற்படாத காலத்திலேயே பாரதியார் சமபந்தியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். சுதேசமித்திரன் நாளிதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்த பாரதி வங்கப் பிரிவினைக் கிளர்ச்சியின் போது அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்குச் சென்றபோது சுவாமி விவேகாநந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியைக் கொல்கத்தாவில் சந்தித்தார்.

நாடெங்கும் தீவிரமாக வளர்ந்து வந்த தேசபக்தியை தமிழர் மனதிலும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்று விரும்பினார் பாரதி. அந்த நோக்கத்தில் உருவானது ‘இந்தியா’ வார இதழ் (1906). எம்.பி. திருமலாச்சாரி என்ற புரட்சி வீரர் இந்த இதழின் காரியாலய நிர்வாகஸ்தராக இருந்தார்.

தமிழ் பத்திரிகைகளில் முதல்முதலாகக் கருத்துப்படம் (Cartoon) வெளிவந்தது இந்தியாவில்தான். அதை உருவாக்கியவர் பாரதிதான்.

‘எலும்பும் தோலுமான இந்தியர்கள் பட்டினி கிடக்க, ஒரு கப்பலில் இந்திய கோதுமையை ஏற்றிச் செல்வதாக’ ஒரு கருத்துப்படம் ‘இந்தியா’வில் வெளியானது.

இந்தக் கருத்துப் படத்துக்காகவும் அரசியல் கட்டுரைகளுக்காகவும் 1908ல் பிரிட்டிஷ் அரசு ‘இந்தியா’ இதழ் மீது நடவடிக்கை எடுத்தது. பாரதி பாண்டிச்சேரிக்குச் சென்றார்.

1908 முதல் 1918 வரை பாரதி, பாண்டிச்சேரியில் தங்கியிருந்தார். அரவிந்தரோடு தொடர்பு, வ.வே.சு. ஐயரோடு நட்பு ஆகியவை அங்கே ஏற்பட்டது. ‘கண்ணன் பாட்டு’, ‘குயில் பாட்டு’, பாஞ்சாலி சபதம்’ போன்ற கவிதைகள் இந்தக் காலத்தில் வெளிவந்தன.

1918ல் பிரிட்டிஷ் இந்தியாவில் நுழைந்த பாரதி கடலூரில் கைது செய்யப்பட்டு 34 நாட்களுக்குப் பின் விடுதலையானார். அங்கிருந்து செல்லம்மாளின் ஊரான கடையத்திற்கு வந்தார்.

கடையத்தில் இருந்தபோதுதான் ஆரிய-திராவிட விவகாரம் குறித்து ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அருமையான கருத்தை பாரதி தெரிவித்தார்.

விவசாயிகளின் துன்பத்தைச் சுட்டிக் காட்ட பாரதி வெளியிட்ட கருத்துப்படம்தான் அவரை பாண்டிச்சேரிக்கு அனுப்பிவைத்தது என்பதைப் பார்த்தோம்.

இனி, அவருடைய காலத்தில் விவசாயம், மற்றும் விவசாயிகளின் நிலைபற்றிப் பார்ப்போம். நீதிக்கட்சி ஆட்சியில் விவசாயிகளின் நிராதரவான நிலை மற்றும் இயந்திரத் தொழிலின் நிலைபற்றிப் பார்ப்போம். தமிழக விவசாயிகள் பட்ட கடன் கொடுமைக்கு 1937ல் ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசால் முடிவு ஏற்பட்டது என்ற நல்ல சேதியை மட்டும் நான் முதலில் சொல்லிவிடுகிறேன்.

தேவ. பேரின்பன் மற்றும் கா.அ. மணிக்குமார் எழுதிய இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொள்வோம். தேவ. பேரின்பன் எழுதியது தமிழகத்தின் பொருளாதார வரலாறு இதை வெளியிட்டது நியு செஞ்சரி புக் ஹவுஸ். மணிக்குமாரின் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் வான்முகிலன். நூலின் பெயர் 1930களில் தமிழகம். இது அலைகள் வெளியீட்டகத்தின் பதிப்பு.

முதலில் தேவ. பேரின்பன்.

1870களில் தமிழக வேளாண்மையில் நெருக்கடி ஏற்பட்டதோடு 1876-78 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது.

பிரிட்டிஷாரின் வரிக் கொடுமை, விவசாயிகளின் கடன் சுமை போன்ற கொடுமைகளோடு வறட்சியும் நோயும் ஏற்படுத்திய பாதிப்புகள் தமிழக மக்களைப் பெரும் துயரத்திற்கு ஆட்படுத்தியது. பசியும் நோயும் வறட்சியும் ஆற்றுப்படுகை அல்லாத மேட்டுநிலத் தமிழகத்தை அதிகமாக வாட்டியது….

1870களில் ரயில்வேக்களின் வளர்ச்சியும், வர்த்தகத்தின் வளர்ச்சியும் வேளாண்மைப் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்களை உருவாக்கியது. ஏகாதிபத்திய காலக்கட்டத்தில் ஐரோப்பிய மூலதனத்திற்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. சர்வதேச மார்க்கெட்டுக்கு பருத்தி, நிலக்கடலை, சர்க்கரை போன்றவை ஏற்றுமதிக்கான சரக்குகளாயின. தமிழக விவசாயத்தில் இந்த அவசியத்துக்கான பயிர் சாகுபடி மாற்றங்கள் ஏற்படத் துவங்கின…

டெல்டா பிரதேசத்து மிராசுகள் நிலத்தை பிறருக்குக் குத்தகைக்கு விட்டு அதில் வரும் வருவாயில் நகர வாழ்வுக்குச் சென்றனர்…

ஆற்றுப்படுகை அல்லாத தமிழகப் பகுதிகளில் பணப்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக (1861) பிரிட்டனுக்கு பருத்திவரவு தடைப்பட்டது. இதனால் இந்தியா பருத்தி உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை காலனி ஆட்சியாளர் ஏற்படுத்தினர்.

கோவையிலும், திருநெல்வேலியிலும் பருத்தி சாகுபடி பரவலாகியது. வட ஆற்காடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டது. தென் ஆற்காடு, தஞ்சை மாவட்டங்களில் கரும்பு பயிரிடப்பட்டது.

1930களில் மேட்டூர் அணை கட்டப்பட்டதோடு காவிரி பாசனப் பகுதி விரிவுபடுத்தப்பட்டது. இதே காலங்களில் கிணற்றுப் பாசனம் விரிவுபடுத்தப்பட்டது…

அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்ததும் (1865) பிரிட்டிஷார் மீண்டும் அமெரிக்காவிடமே பருத்தி வாங்கினார். இந்தியாவில் பயிரிடப்பட்ட பருத்திக்குச் சர்வதேச சந்தையில் இடமில்லாது போனதும் இந்தியாவிலேயே நூற்பாலைகள் தோன்ற ஆரம்பித்தன…

இனி, இந்தியாவின் தொழில்வளர்ச்சி பிரிட்டிஷ் அரசால் எப்படித் தடை செய்யப்பட்டது என்பதையும் அந்தக் கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் நில உடைமை, விவசாயிகளின் கடன்சுமை மற்றும் நீதிக்கட்சியின் ஏழைகளுக்கு எதிர்ப்பான நிலை பற்றியும் கா.அ. மணிக்குமார் சொல்வதைக் கேட்கலாம்.

1908ல் உதகமணடலத்தில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் மதராஸ் வர்த்தக சபையின் பிரதிநிதியாகப் பங்கேற்ற சிம்சன், மாகாணத்தின் தொழில்மயமாக்க தொழில்துறை இயக்குனர் சேட்டர்டன் எடுத்துவந்த முன்முயற்சிகளை ஆட்சேபித்தார்.

பின்னி, ஹார்வே போன்ற ஐரோப்பிய நிறுவனங்களோடும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதியான பொருட்களோடும் போட்டியிட வேண்டிய நிலைமை இந்திய முதலீட்டாளர்களுக்கு இருந்தது.

ஐரோப்பிய வர்த்தகத்தை ஆதரிப்பவர்கள் அரசிடம் முறையிட்டு தமிழகத்தில் தொழில்துறை முன்னேற்றத்தைத் தடை செய்யும்படி கோரிக்கை வைத்தனர். மதராஸ் அரசும் அவர்கள் கேட்டபடி 1910ல் உத்தரவு வழங்கியது.

சென்னை மாகாணத்தில் இருந்த தேயிலை மற்றும் காபி தோட்டங்களும் சில பருத்தி ஆலைகளும், சில இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்களும், அரிசி ஆலைகளும், பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகளும் இங்கிலாந்து வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

1921ம் வருடக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 71 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டனர். சென்னை மாகாணத்தின் சராசரி நில உடைமை அளவு சிறியது. தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிப்பதை இது சாத்தியமற்றதாக்கியது. மூன்று விதமான நில உடைமை முறை மதராஸ் மாகாணத்தில் நடைமுறையில் இருந்தது. 1. ரயத்வாரி, 2.ஜமீன்தாரி, 3. இனாம்.

ரயத்வாரி முறைப்படி ஒவ்வொரு பயிரிடப்பட்ட நிலத்தின் வருவாயையும் அரசாங்கம் கணக்கிட்டது. இந்தக் கணக்கீடு முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டது. நிலத்தில் தனிஉடைமை என்பதை ரயத்வாரி முறை அறிமுகப்படுத்தியது. ரயத்வாரி பகுதியில் பயிரிடுவோர் உழவர் என அழைக்கப்பட்டனர்.

ஜமீன்தாரி முறையில் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஜமீன்தார்கள் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினார்கள். அதற்குப் பதிலாக அவர்களுக்கு பண்ணை மீதான உரிமை அளிக்கப்பட்டது. மாகாணத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்த நில உடைமை முறையின் கீழ் இருந்தது. மாகாணத்தில் 1500 ஜமீன்தார்கள் இருந்தனர். ஜமீன்தாரி முறையில் பயிரிடுவோர் குத்தகைக்காரர் என்று அழைக்கப்பட்டனர்.

முந்தைய அரசாங்கங்களால் அளிக்கப்பட்டவையே இனாம் அல்லது மானிய நிலங்கள். மதரீதியான சேவைகளுக்காகவும் அரசாங்க சேவைகளுக்காகவும் இனாம்கள் அளிக்கப்பட்டன.

விவசாயி நிலவரியை செலுத்திய பிறகு மிஞ்சியது அநேகமாக எதுவுமேயில்லை. சென்னை மாகாணத்தின் முதன்மையான பிரச்னையாக இருந்தது. விவசாயிகளின் கடன்சுமைதான் என்றாலும் அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

இந்தியாவின் விவசாயத்தைப் பற்றி எதுவும் அறிந்திராத ஆங்கிலேய அதிகாரிகள் விவசாயத் துறையில் இருந்தனர். மாகாணத்தின் விவசாய நடைமுறைகள், பயிர்கள் மற்றும் பயிரிடும் காலம் போன்ற அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதிலளிக்க முடியாதவராக சென்னை அரசாங்க விவசாயத் துறைத் தலைவர் இருந்ததைக் கண்டு இந்திய விவசாயத்தின் மீதான ராயல் கமிஷன் திடுக்கிட்டது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தாறு வருடங்களில் தமிழ் நாடு ஏழு வருடங்கள் பஞ்சத்தை அனுபவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மாதம் ரூ. 4333-60 சம்பளம் பெற்றுவந்த சென்னை மாகாண நீதிக்கட்சி அமைச்சர்களைத் தமிழர்கள் வெறுத்தார்கள்.

விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைப்பதற்காக நில வருவாயைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்கிற தீர்மானத்தை தேசியவாதிகள் சட்டசபையில் கொண்டு வந்தனர். எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் அதற்கு ஆதரவாகப் பேசி வாக்களித்த போது நீதிக்கட்சியினர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

ஜமீன்தாரி நில உடைமை முறையை ஒழிப்பதற்கான இயக்கங்களுக்கு சில காங்கிரஸ்காரர்கள் தலைமை ஏற்றனர்.

‘இந்த மாகாணத்தில் பிளேக் நோய் போல நீதிக்கட்சி மக்களை வேதனைப்படுத்தி அவர்களது இதயத்தில் நிரந்தரக் கசப்புணர்வை விதைத்துள்ளது’ என்று விவசாயிகளின் பத்திரிகை எழுதியது.

விவசாயிகளின் நலனில் நீதிக்கட்சி அக்கறை காட்டாததின் காரணம் என்ன? விவசாயிகளின் கடனைப்பற்றி அவர்கள் கவலைப்படாததின் பின்னணி என்ன? என்று கேட்பவர்களுக்கு நீதிக்கட்சியின் தலைவர்கள் பட்டியலைப் படித்துக் காட்டுகிறேன்.

பனகல் அரசர், பொப்பிலி ராஜா, செல்லப்பள்ளி குமார ராஜா, தெலப்ரோல் ஜமீன்தார், வெங்கடகிரி ராஜா, இளவரசநேந்தல் ஜமீன்தார், ஊத்துக்குளி ஜமீன்தார், சிங்கம்பட்டி ஜமீன்தார், தோதப்ப நாயக்கனூர் ஜமீன்தார், குருவிகுளம் ஜமீன்தார், புதுக்கோட்டை ராஜகுமார் ஆகியோர் நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்கள்.

1917ல் நடந்த சென்னை மாகாண நீதிக்கட்சி மாநாட்டுக்கு வந்த பிரபலஸ்தர்கள் இதோ: சர்.பி. தியாகராய செட்டியார் (பிரபல வியாபாரி), சர்.பி.டி. ராஜன் (நிலப்பிரபு), குமாரராஜா முத்தையா செட்டியார் (வட்டித் தொழில்), ராவ்பகதூர் ஆர். வேங்கடரத்னம் நாயுடு, சர்.கே.வி. ரெட்டி, ராவ்சாஹிப் வெங்கடரத்தினம் நாயுடு, ராவ்பகதூர் சூரிய நாராயணமூர்த்தி நாயுடு, சர்.ஏ.பி. பாத்ரோ, மேடை தளவாய் திருமலையப்ப முதலியார் (நிலப்பிரபு), திவான் பகதூர் கோபதி நாராயண செட்டியார், சர்.ஏ. ராமசாமி முதலியார், திவான் பகதூர் சிவஞானம் பிள்ளை, திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டிய நாடார் (நிலப்பிரபு).

இவர்களெல்லாம் வட்டி கொடுக்கும் வாய்ப்பில்லாதவர்கள்; விவசாயிகளின் கண்ணீரையும் கடனையும் பற்றி அறியாத உயரத்தில் வாழ்ந்தவர்கள்; வளைத்துப் போட்ட வயல்கள் போதாது என்று அரசியலில் ஈடுபட்டு மாதம் ரூ.4333-60 அரசுச் சம்பளமாக பெற்றுக் கொண்டவர்கள். ஏழ்மையும் வறுமையும் அவர்கள் பார்த்த நாடகங்களில் மட்டும்தான் இருந்திருக்கும்.

kamarajarஒன்பது வருடங்கள் தமிழக முதல்வராக இருந்தவர் காமராஜர். பிறகு ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். அந்த வீட்டின் படத்தை போஸ்டரில் போட்டு (1971) ‘சோலை நடுவே வாழும் சோஷலிசப் பிதா’ என்று தி.மு.க. கேலி செய்தது. தி.மு.க, சாமானியர்களின் கட்சி என்கிறார் தமிழக முதல்வர். சாமான்யர்களின் முன்னோர்கள் பெற்ற மாதச் சம்பளம்தான் ரூ. 4333-60.

ரூ. 4333-60 மாதச் சம்பளம் பெரிதா என்று சிலர் சந்தேகப்படலாம். கொரியர் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞர் இன்று இதைத்தானே சம்பாதிக்கிறார் என்று கேள்வி எழுப்பலாம்.

ஐயா, இந்தச் சம்பளம் பெறப்பட்டது, 1930 இல் என்பதை நினைவுபடுத்துகிறேன். அப்போது ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் மாதச் சம்பளம் ரூ.12.00; பவுன் விலை ரூ.13.00; எட்டு கிலோ அரிசி விலை ரூ.1.00; 64 இட்லிகளின் விலை ரூ.1.00 என்ற விவரங்களைக் கொடுக்கிறேன்.

மற்றபடி, மாதம் ரூ.4333-60 ஊதியம் பெற்றுக் கொண்ட நீதிக்கட்சி அமைச்சர்கள் எத்தனை இட்லி சாப்பிட்டிருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

மேற்கோள் மேடை:

எகிப்து, கம்போடியா பருத்திப் பயிர் வந்ததன் மூலம் நாட்டின் செல்வநிலை பெரிதும் உயர்ந்திருக்கிறது. மேலும் உயர்வடையக் கூடிய குறிகளும் காணப்படுகின்றன.

– கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் பருத்திப் பயிருக்கு விலை கிடைக்காமல் பரிதவித்த 1917ல் பி.டி. தியாகராயர் ஆற்றிய உரை / பெஜவாடா நீதிக்கட்சி மாநாடு.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard