கற்பியல் சூத்திரத்தில் அறிவனையும் சொல்லியிருப்பதைக் காணலாம்.
பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணத்தில்
அறிவனுக்கு என்ன வேலை என்றால்,
மணப்பெண், மணமகன் ஆகியோரது
பிறந்த நாள், நக்ஷத்திரம், ஜாதகம் என்பவற்றின் அடிப்படையில்
அந்தத் திருமணம்,
கடவுள் சித்தத்தினால்
ஊழ்வலியால் ஏற்படுத்தப்பட்ட வாழ்கைதானா,
அது நன்றாக அமையுமா என்று கண்டு சொல்வதுதான்.
களவியலைப் பற்றிச் சொல்லும்போது,
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் எதிர்ப்பட்டு நோக்கி,
தங்கள் மனதைப் பறி கொடுத்து
ஒன்று சேர்வது ஊழ் வலியாலே என்று சொல்லப்படுகிறது.
அவ்விதமாக ஒருவரை ஒருவர் சந்திக்காமல்,
மற்றவர்களால் அந்த மணம் ஏற்படுத்தப்படும் போது,
ஊழ் வலி இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல
அறிவன் தேவை.
இதனால் கற்பியலில்
திருமணத்தை உறுதிப் படுத்த
அறிவன் பெயர் வருகிறது.
இதன் மூலம்,
ஜோதிட ரீதியாக திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பது
பழந்தமிழர் வாழ்வில் இருந்திருக்கிறது
என்று தெரிகிறது.
சீர்திருத்தத் திருமணங்கள்
திராவிட போதை உள்ளவர்களது வழக்கம்.
அறிவன் சொல்கேட்டு திருமணம் நிச்சயிப்பதும்,
அதையும் அவன் சொல்படி நாள் பார்த்துச் செய்வதும்
சங்ககாலத் தமிழர் வழக்கம்.
அந்த அறிவனை ஒரு தனி வகையாகச் சொல்லக் காரணம் என்ன?
அதற்கு அவர்களது இயல்புதான் காரணம்.
ஒவ்வொரு வர்ணமும் ஒவ்வொரு இயல்பின்படி
சொல்லப்பட்டுள்ளது என்பது போல,
சில குறிப்பிட்ட இயல்புகள் தூக்கலாக இருந்தால்
அவன் அறிவன் ஆகிறான்.
அந்த இயல்புகளை,
‘மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” என்கிறது தொல்காப்பியம். (தொ-காப்- பு-இயல்74)
மூவகைக் காலங்களியும் ஆராய்பவன் அறிவன்.
அந்த மூவகைக் காலங்கள் பல வகைப்படும்.
அவை ஒவ்வொன்றையும் பார்ப்போம்.
(1)இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பது ஒரு மூவகை.
இதையே கணியன் பூங்குன்றனாரது பாடலில் காண்கிறோம்.
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று துவங்கும் பாடல்
கணியன் என்னும் அறிவர்,
அதாவது ஜோதிடரால்
எழுதப்பட்டது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – என்னும் இந்த ஒருவரியை மட்டும் மேற்கோளிட்டு, இதுவே பண்டைய தமிழனின் நாகரீகம் என்பர். ஆனால்இந்த வரிகள் எழுதப் பட்ட இடம், பொருள் வேறு. இவை கர்ம வினையின் பாற்பட்டு, ஊழின் கண் அடித்துச் செல்லப்படும் வாழ்கை நிலையைப் புரிந்து கொண்டமையால்ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு. கடந்த காலத்தால் நிகழ் காலம் உண்டாகிறது. கடந்த காலத்தில் செய்யப்பட்ட வினைகள், ஊழ் வினை என்று தொடர்ந்து வந்து, நிகழ் காலத்தில் நன்மையையும், தீமையையும் உண்டாக்குகிறது. ஊழ்வினையைக் கொண்டே ஒருவருக்கு அமையப் போகும் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி சொல்லி விடலாம். இதையே திருப்பிப் போட்டால், நிகழ்காலத்தில் நடக்கும் அனுபவங்களைக் கொண்டு, அதற்குக் காரணமான கடந்த கால ஊழ்வினை என்ன என்று சொல்லி விடலாம். அந்த ஆராய்ச்சிகள் செய்தவர்கள்தான் அறிவர்கள்.
அதை அறிந்த பூங்குன்றனார் தன் பாடலில் முழுக்க முழுக்க ஊழ்வினைக் கருத்தையே எழுதியுள்ளார்.
தீதும், நன்மையும், சாதலும், நோதலும்பிறர் தர வருவதில்லை. அவை கர்ம வினையின்படியே ஏற்படுகின்றன. ஒருவர் பெரியோராக இருத்தலும், அல்லது சிறியோராகஇருத்தலும், முன் பிறவியில் செய்தவினையின் படியேஅவ்வாறு இருக்கின்றனர். எனவே, பெரியோரைப் பார்த்துவியப்பதும் இல்லை, சிறியோரை இகழ்வதும் இல்லை. மற்றவர் யாரும், நம்முடையஇன்ப துன்பங்களுக்குக்காரணமாகாது, நாமே நம் நிலைக்கு காரணம் ஆகையால், எல்லாரும் நமக்கு ஒன்றுதான். அதனால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கர்ம வினைத் தத்துவக் கருத்து கொண்டது இப்புறப் பாடல். இந்தத் தத்துவத்தின் அடிப்படை, ஜோதிடம் தரும் முக்கால அறிவால் ஏற்படுகிறது.
இதே கருத்துதான் சிலப்பதிகாரத்தின் முக்கியக் கருத்துமாகும். “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்று சொல்லும் சிலப்பதிகாரம், கோவலன் கொலயுண்டதற்கு முன் வினையே காரணம் என்று ஒரு கிளைக் கதையையும் சொல்கிறது. சிலப்பதிகாரம் நெடுகிலும், இந்த ஊழ்வினைக் கருத்துதான் ஆங்காங்கே சொல்லப்படுகிறது.
திருவள்ளுவரும்ஊழ் என்னும் தலைப்பில் ஒரு அதிகாரமே அளித்துள்ளார். (அதி -38) அதன் கடைசியில் முத்தாய்ப்பாக, ’ஊழினும் வலிமை வாய்ந்தது எது உள்ளது? (எதுவுமில்லை) அவ்வூழை நீக்க மற்றொரு வழியை ஆராய்ந்தால் அங்கும் அவ்வூழே முன் நிற்கும்’ என்கிறார். இது ‘விதியை மதியால் வெல்ல முடியும் – அதற்கு விதியும் இடம் கொடுத்தால்” என்னும் ஜோதிட அறிவாலும், அனுபவத்தாலும் வரும் அறிவு.
இதையெல்லாம் அறிந்தவன் ’அறிவன்; எனப்பட்டான். வள்ளுவர் என்பதே ஒரு ஜோதிடப் பரம்பரை ஆகும். எப்படி சுபாவத்தால் சொல்லப்பட்ட வர்ணம், பரம்பரையாகத் தொடர்ந்த்தோ, அப்படியே அறிவன் என்னும் சுபாவச் செயலும், பரம்பரையாக வரவேதான் நாளடைவில் அறிவன் என்ற சொல் மறைந்துபோய், வள்ளுவர் என்ற குலம் என அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.
வள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும் காட்டும் ஊழ்வினைக் கருத்துக்கள், அவர்களுக்கும் முன்னால், பல காலம் இருந்து வந்திருக்கிறது. அவர்களுக்கு முற்பட்ட காலத்திலிருந்த நூல்களிலும் அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது என்று யாதும் ஊரே பாடலில் கணியன் பூங்குன்றனார் கூறுகிறார்.
டா. உ.வே.சா. அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பழைய உரையில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது :-
”எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தானே வரினல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றையொப்பத் தாமே வருவன; சாதலும் புதிதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிதென்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்தவிடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான் அமையாது கல்லை யலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை (மிதவை – தெப்பம்) போல அரியவுயிர் ஊழின் வழியே படுமென்பது நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோமாகலான்,நன்மையான் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம்மதித்தலினும் இலேம்.”
இதில் காட்டாற்று வெள்ளத்தில் அடிக்கப்பட்டு வரும் தெப்பம் போல ழ்க்கை இருக்கிறது. ஊழ் வினையால் அவ்வாறு நடக்கிறது. ’ஊழின் வழியே உயிர்ப் படுமென்பது, நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோம்’ என்று சொல்லியுள்ளார். நன்மை எது, தீமை எது என்னும்கூறுபாடுகள் அறிந்தோர் எழுதிய நூல்களில் இருந்து தாம்கற்று அறிந்தோம் என்று பூங்குன்றனார் கூறுகிறார். இதனால் நூல்முகமாகவே ஊழ் வினைக் கருத்தும், அதன் அடிப்படையில் ஜோதிடக் கருத்தும் அவருக்கும் முன்னால் இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது. அது எந்தக் காலம் என்று தேடினால் நச்சினார்க்கினியர் உரையில் ஒரு கருத்து கிடைக்கிறது.
முதல் சங்கத்தில் வழங்கப் பட்டவை பற்றிச் சொல்ல வருகையில் நச்சினார்க்கினியர் அவர்கள்,
“முந்து நூல் அகத்தியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன : எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், பார்ப்பனவியல், சோதிடம், காந்தருவம், கூத்தும் பிரிவுமாம்”
என்று கூறுகையில் சோதிடத்தையும் குறிப்பிட்டுள்ளதால், ஜோதிடம் என்னும் சாஸ்திரம், முதல் சங்கம் ஆரம்பித்தபோதே, 12,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது.
இன்றைக்கு நமது திராவிடப் பகுத்தறிவுப் பகலவர்கள் ஜோதிடத்தைப் பழித்தும், இழித்தும் கூறுவது மட்டுமல்லாமல், அது அறிவுக்கு ஒப்பானது அல்ல என்கிறார்களே, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக முக்காலத்தையும் மூவகைப் பட்ட பிற நுணுக்கங்களையும், வாழையடி வாழையாக, குரு- சிஷ்ய பரம்பரையாக, உள்ளுணர்வு பலத்தாலும், ஊழ்வினை பற்றிய அறிவு கொடுக்கும் ஞானத்தாலும், தெய்வ பலத்தாலும் அறிந்து வந்திருக்கிறார்களே அப்படிப்பட்ட அறிவை, அறிவன் தேறும் அறிவைப் பற்றிப் பேசக்கூட இவர்களுக்கு அருகதை இல்லை..
அந்த அறிவர் சொல்லி வைத்த வாழ்க்கையின் ஆரம்பமானாலும் சரி, வருஷத்தின் ஆரம்பமானலும் சரி, அது பிறர் திணிப்பால் வந்து விடுமா?
ஆதாரமேயில்லாத திராவிட ‘உணர்விலும்’ நாத்திகக் கொள்கையிலும் முழுகிய 500 பேர் சித்திரையில் ஆரம்பிக்கும் வருஷத்தை மாற்றினார்கள் என்கிறார்களே, அவர்கள் அறிவர்களா? அவர்கள் இந்த அறிவர்களுக்கு முன் நிற்க முடியுமா?
ஆனானப்பட்ட தொல்காப்பியத்தையே அதங்கோட்டாசான் ஆராய்ந்து, குற்றம் குறை சொல்லி சரி பார்த்து ’அரில்தப’ அறிந்து ஒத்துக் கொண்டார் என்று நச்சினார்கினியார் தொல்காப்பிய உரையில் கூறியுள்ளார்.
இந்த ஐந்நூறுவர் சொன்னது என்ன என்பதை எந்த சபையில் ஆராய்ந்து சீர்தூக்கினார்கள்?
இவர்களுக்கு அறிவன் சாஸ்திரமான ஜோதிடமும் தெரியாது, அதில் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்துக்கு உட்பட்ட ஒரு விவரத்தை இவர்கள் எப்படி முடிவு செய்யலாம்?
அறிவன் அறிந்த சாஸ்திரத்தை ஆரியத் திணிப்பு என்கிறார்கள். ஆனால் இந்த ஐந்நூறுவர் சொன்ன கருத்தை நம் மீது திணிக்கிறார்கள். இந்த்த் திணிப்பு மட்டும் நியாயமாகுமா?
இவர்கள் சொல்வது போல ஆரியன் திணிக்க முற்பட்டாலும், அதை அறிவர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
அதை அரில்தப உணர்ந்துதானே அறிவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
மேலும் ஆரியன் வந்த்தாக இவர்கள் சொல்லும் காலத்துக்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிவன் வகையினர் இருந்திருக்கின்றனர்.
இந்த அறிவெல்லாம் இல்லாமல், வழிவழியாக வந்த அறிவன் சாஸ்திரத்தையும் இகழ்ந்து, ஊழ்வினை காட்டும் சமயக் கோட்பாட்டையும் ஒதுக்கி விட்டு தங்கள் மனம் போல் அர்த்தம் கண்டுபிடிக்கும் திராவிடவாதிகளைப் பார்க்கும் போது ஊழ் அதிகாரத்தின் 3 ஆம் குறள் தான் நினைவுக்கு வருகிறது. திருவள்ளுவர் இவர்களுக்காகத்தன் அதை எழுதியுள்ளார் போலிருக்கிறது.
’நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.”
நுட்பமான அறிவைத் தரும் பல நூல்களைக் கற்றவனாயினும், அவனிடம் உள்ள உணர்வுக்கு ஏற்பவே அறிவு பெருகும் என்பது இதன் பொருள். திராவிட உணர்வு பொங்கும் இவர்களிடம் ஊழ்வலியை நம்பும் தமிழன் உணர்வு பொங்குமா?