திருவள்ளுவரின் மொழி ஆளுமையில் காணப்படும் புதுமையையும், திருக்குறளில் காணப்படும் புதுமையான இலக்கண அமைப்புகளைப் பற்றியும் இக்கட்டுரை விவாதிக்க முனைகிறது. திருவள்ளுவரின் மொழி ஆளுமையில் காணப்படும் புதுமைகள் காரணமாக உருவான இலக்கண அமைப்புகள் பற்றியும் ஆராய வேண்டியது அவசியமாகும். மொழியை மிகவும் திறமையாகக் கையாண்ட கவிஞர்களில் திருவள்ளுவர் முக்கியமானவர். இவ்வாறு புதுவிதமாக மொழியைக் கையாளும்போது புதுவிதமான நடையை அல்லது மொழி அமைப்பை உருவாக்க வேண்டியதும் அவசியமாகிறது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கு என ஒரு மொழி ஆளுமையை உடைய முதல் கவிஞராகத் திருவள்ளுவர் தோற்றம் தருகிறார். அதற்குமுன் உள்ள கவிஞர்களின் மொழிநடையில் பெரும் வேறுபாடு உள்ளதாகத் தெரியவில்லை. அகம், புறம் என்று இருவிதமான கவிதை வெளிப்பாட்டு நெறியைக் கொண்ட காலத்தில், பொருள் சார்ந்து பெரும்பாலும் ஒரேவிதமான மொழிநடையையே கொண்டிருந்தனர். கவிஞர்களுக்கிடையே மொழிநடையில் வித்தியாசத்தைக் காணமுடியவில்லை. இந்த ஆசிரியரின் நடை இது என்று தனிப்பட்ட முறையில் கூறமுடியாத மொழிநடையே சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. தனிப்பட்ட ஆளுமைகளை இங்கு நம்மால் அடையாளப் படுத்த முடியவில்லை. மொழிநடை என்ற அளவில் மட்டுமல்லாமல் மொழியை அதன் முழு வீச்சில் பயன்படுத்தியவரும் திருவள்ளுவரே. ஆகவே தான் அவர்க்குத் ‘தெய்வமாக்கவி’ என்ற பெயர் கிடைத்தது. தமிழின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகத் திருவள்ளுவரைப் போற்றுவதற்கும் இதுவே காரணம் எனலாம்.
திருவள்ளுவர் அதுவரை இல்லாத ஒரு புதுவிதமான பொருளைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அதன் பயனாகப் புதுவிதமான உணர்த்துமுறையையும் உருவாக்கிக் கொண்டுள்ளார். அறம், பொருள், காமம் என்ற வகைப்பாட்டு முறையை, முதலில் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் திருவள்ளுவரே. அதுவரை, ‘பொருள்’ என்ற சொல் தமிழ்க் கவிதை உலகில் பெற்றிருந்த பொருளிலிருந்து மாறி, அரசு, அமைச்சு, நட்பு முதலான அரசு தொடர்புடைய கருத்துக்களைக் கூறும் ஒரு இயலாக மாற்றம் அடைகிறது. அகப்பொருள்கோட்பாடு ‘காமம்’ என்ற சொல்லின் மூலம் வேறு பார்வையில் வேறுவிதமாக வெளிப்படுத்தப் படுகிறது. அகம்-புறம் என்று அமைந்திருந்த தமிழ்க் கவிதை உலகில் ஒரு மரபு மாற்றத்தை ஏற்படுத்தியவர் திருவள்ளுவரே. அறம் என்ற ஒரு கருத்தியலைக் கொண்டு துறவறம், இல்லறம் என்ற பாகுபாட்டில் அதை அமைத்துள்ளார். தமிழில் அதுவரை இருந்த கவிதை வெளிப்பாட்டு முறைக்கு மாறாகப் புதியதொரு வெளிப்பாட்டு முறையைத் திருவள்ளுவர் உருவாக்கி யுள்ளார். இது இயல்பாக நடந்ததொன்றல்ல. நன்கு திட்டமிட்டே திருவள்ளுவர் இதைச் செய்திருக்கிறார். சங்கக் கவிதைகளுடன் திருக்குறளை ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிப்பாட்டு முறையில் திருவள்ளுவர் செய்துள்ள புதுமைகளை அறியலாம். கவிதையில் சொல்லுக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்துக் கவிதை இயற்றுதல் திருவள்ளுவர் முதற்கொண்டே தமிழ் இலக்கியத்தில் இடம் பெறுகிறது. ஒருசில சொற்களின் மேல் முழுப்பொருள் அழுத்தத்தையும் கொடுத்துப்பொருளை விளக்குவதும், ஒன்றனைச் சிறப்பித்துக் கூற ஒரு சொல்லைப் பிடித்துக் கொள்வதும் திருவள்ளுவரின் வெளிப்பாட்டு முறைகளில் ஒன்று. அவர் சிறப்பான பொருள் அழுத்தத்தில் பயன்படுத்திய சொற்கள் பல தலை, தாள், நேர், அடி, இனிது, இன்னா, பெரியர், சிறியர், பெறின், உடைத்து, அணி, பண்பு, வினை, கடன், அன்பு, அறிவு, நன்று, செல்வம், கடை விடல், துணை, மானம், உடைத்து, உயிர், கெடும், மாட்டு, எச்சம், இல, நெஞ்சு, நகை இப்படிப் பல சொற்களைக் கூறலாம். இவை திருக்குறளில் பரவலாக இடம் பெற்றுள்ள சொற்கள் என்பதால் இவை எல்லாவற்றுக்கும் ஏற்ற எடுத்துக் காட்டுகள் தருவது கட்டுரையை விரிவாக்கி விடும். மேலும் அத்தகைய எடுத்துக்காட்டுகள் தேவையற்றவை என்று கூறலாம். ஏனெனில் திருக்குறள் அந்த அளவுக்கு மக்கள் மயமான இலக்கியமாகிவிட்டது. இவையெல்லாம் திருவள்ளுவரின் முத்திரை பதிந்த சொற்கள். இந்தச் சொற்களைக் கண்டாலே இவை இடம் பெறுவது திருவள்ளுவரின் கவிதைகளில் என்று கூறிவிடலாம். தேற்றேகாரத்தைக் கொடுத்துப் பொருளை அழுத்திச் சொல்லும் விதமும் திருவள்ளுவரின் கவிதை ஆக்கத்தில் குறிப்பாகச் சுட்டிக் காட்டத் தக்க ஒரு முறையாகும். “மக்களே போல்வர் கயவர்” (1071) “அச்சமே கீழ்களது ஆசாரம்” (1075) ”அறத்திற்கே அன்பு சார்பு என்ப”(76) “வறியார்க்கு ஒன்று ஈவதே” (22) முதலிய இடங்களில் தேற்றேகாரம் சிறப்பான முறையின் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காட்டலாம்.
திருவள்ளுவர் தமிழ்க் கவிதை உலகில் தனிப்பட்ட குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஆளுமையாகத் தோற்றம் தருகிறார். தனக்கென ஓர் ஆளுமையைத் தோற்றுவித்துக் கொண்ட கவிஞராகத் திருவள்ளுவரைக் கூறலாம். திருவள்ளுவர், இளங்கோ, கம்பன், பாரதி என்ற தமிழின் தலை சிறந்த படைப்பு, கவிதை ஆளுமைகளில் முதன்மையானவராகத் திகழ்பவர் திருவள்ளுவரே. அவருடைய ஆளுமைத் திறத்தால் தான் அவர் தோற்றுவித்த இலக்கியவகை செழுமையாகத் தமிழில் தொடர்ந்து வந்தது. புதுமையான ஒரு யாப்பை எடுத்துக்கொண்டு அதன் அதிகபட்ச சாத்தியங்களையும் முயற்சி செய்து பார்த்தவர் திருவள்ளுவர். இவர் குறட்பா யாப்பில் எல்லாவிதமான அம்சங்களையும் சோதனைகளையும் செய்து பார்த்திருக்கிறார் என்று சொல்லலாம். விருத்தத்தில் கம்பனும், சந்த விருத்தங்களில் வில்லிபுத்தூராரும் சந்தப் பாக்களில் அருணகிரிநாதரும் எவ்வாறு சோதனை செய்து வெற்றி பெற்றார்களோ அதைத் திருவள்ளுவர் குறள் வெண்பாவை வைத்துக்கொண்டு செய்து காட்டியிருக்கிறார்.
இளங்கோவடிகளும் திருவள்ளுவரும் ஒரே காலகட்டத்தில் செயல்பட்டவர்கள் என்றாலும் இருவரும் வெவ்வேறு தளங்களில் செயல்பட்டதால் வெவ்வேறு விதமான மொழியை உருவாக்கிக் கொண்டுள்ளனர். வெளிப்பாட்டு முறையைத் தோற்றுவித்துக்கொண்டுள்ளனர். இளங்கோவடிகள் தோற்றுவித்த காவிய மரபு திருத்தக்கதேவர் வழியாகக் கம்பனிடம் உச்சம் அடைகிறது. திருவள்ளுவர் நீதிகளைக் கூறுவதற்காக எடுத்துக்கொண்ட வெண்பா யாப்பு, அதன் வீச்சைப் பிற நீதிநூல்களில் அடைகிறது. இளங்கோ தோற்றுவித்த காப்பிய மரபு நீண்ட காலம் தமிழில் நிலவியது. தமிழில் காப்பியங்களுக்கு என்று ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தவர் இளங்கோவடிகளே. இளங்கோவும் திருவள்ளுவரும் எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப யாப்பு,மொழிநடை, வெளிப்பாட்டு முறை ஆகியவற்றை உருவாக்கிக் கொண்ட பெரிய ஆளுமைகளாகக் கானப்படுகின்றனர்.
“திருவள்ளுவரின் மொழி ஆளுமை” என்னும் பொருண்மையில் அமையும் இக்கட்டுரை, திருவள்ளுவர் தமது நூலில் புதிதாகப் பயன்படுத்தியுள்ள இலக்கண அமைப்புகளைக் கண்டறிய முற்படுகிறது. அதே வேளையில் திருவள்ளுவர் தமிழுக்கு அளித்துள்ள வெளிப்பாட்டு முறைகளுக்கு அவரது மொழிப் பயன்பாடு அதாவது திருக்குறளில் அமைந்துள்ள இலக்கண அமைப்புகள் எவ்வாறு உதவுகின்றன என்பதையும் அறிய வேண்டியுள்ளது. மிகவும் செறிவாக அமைக்க வேண்டிய யாப்பைக் கையாண்டுள்ள திருவள்ளுவர், அதனை மிகவும் கவனமுடன் அதன் எல்லா வீச்சுகளையும் காட்டும் வண்ணம் பயன்படுத்தியுள்ளார். மேலும் செறிவு, சுருக்கம் ஆகியவை குறட்பாவின் பண்புகள் என்பதுடன், குறள் வெண்பா, திருவள்ளுவர் எடுத்துக்கொண்ட பொருளை உணர்த்த ஏற்ற யாப்பாகவும் அமைகிறது. செப்பலோசை உடைய வெண்பாவே அறக்கருத்துக்களை எடுத்துச் சொல்லுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது என்பதைத் தமிழ் இலக்கிய வரலாறு நெடுகத் தோன்றியுள்ள அறநூல்கள் காட்டுகின்றன. திருவள்ளுவர் எடுத்துக்கொண்ட பொருள், யாப்பு ஆகிய இரண்டும், அவர் புதுமையான இலக்கண அமைப்புகளைக் கையாள்வதற்குக் காரணமாக அமைந்தன. மேலும், அவரது வடமொழி அறிவும் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதையும் நோக்குதல் வேண்டும்.
திருக்குறளில் அமைந்துள்ள இலக்கண அமைப்புகளை ஆராய வேண்டிய அவசியம் இலக்கண ஆசிரியர்களுக்கும் உரையாசிரியர்களுக்கும் இருந்தது. அதேபோல குறளுக்கு உரையியற்றிய உரையாசிரியர்களுக்கும் இந்த அவசியம் இருந்தது. குறள் உரையாசிரியர்களில் பரிமேலழகர் இந்தப்பணியைச் செவ்வனே செய்துள்ளார். பரிமேலழகர் தேவையில்லாமல் திருக்குறள் உரையில் மிகுதியான இலக்கணக் குறிப்புகளைத் தந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால் திருக்குறளைப் புரிந்து கொள்ளவும் அதற்குப்பொருள் வரையறை செய்யவுமே பரிமேலழகர் அதிக அளவில் இலக்கணக் குறிப்புகளைக் கூறியுள்ளார் என்பதை ஆழ்ந்து நோக்கின் புரிந்து கொள்ளலாம். மேலும் திருக்குறளின் இலக்கண அமைப்பினைப் புரிந்து கொள்ளாவிட்டால் அதற்கு ஏற்ற முறையில் பொருள் கூறுவது இயலாது என்பதையும் பரிமேலழகர் அறிந்திருந்தார். இதற்குப் பரிமேலழகருக்குக் கைகொடுத்தது அவரது வடமொழிப் புலமையே எனலாம். மொழி, பொருள் ஆகிய இரண்டு அடிப்படைகளிலும் திருவள்ளுவரின் வடமொழி அறிவை நன்கு உணர்ந்ததால், பரிமேலழகர் தாமும் அந்த அடிப்படையில் சென்றுள்ளார் எனலாம். பிற்கால இலக்கண உரையாசிரியர்களுக்கு முன்னோடியாகத் திருக்குறளின் இலக்கண அமைப்புகளைப் பரிமேலழகர் எடுத்துக் காட்டியுள்ளார். இலக்கண உரைகளில் திருக்குறலே மிகுதியான அளவில் உதாரணமாம எடுத்துக் காட்டப்படுகிறது. எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகிய இலக்கணப் பகுதிகளுக்குத் திருக்குறள் உதாரணமாகத் தரப்படுவதை அறியலாம். சுருக்கமாக இருப்பதாலும் அழகாக இருப்பதாலும் திருக்குறளை உரையாசிரியர்கள் உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். அணி இலக்கணத்தில் பல அணிகளுக்குத் திருக்குறள் உதாரணமாகக் காட்டப் படுவதை யாவரும் அறிவர்.
திருக்குறளில் இலக்கண அமைப்பில் உள்ள புதுமைகளை நன்கு புரிந்து கொண்டவர்கள் என்ற முறையில் இலக்கண ஆசிரியர்கள் இருவர் முக்கியமானவர்கள். அவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘பிரயோக விவேக’ நூலாசிரியரான சுப்பிரமணிய தீட்சிதரும், ‘இலக்கணக் கொத்து’ நூலாசிரியரான சுவாமிநாத தேசிகரும் ஆவர். இவர்கள் இருவரும் வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஆழமான புலமை பெற்றவர்கள் என்பதை இவர்களது நூல்கள் காட்டுகின்றன. இவர்கள் இருவரும் சமகாலத்தவர் எனினும், சுப்பிரமணிய தீட்சிதர் தமது நூலை முதலில் இயற்றினார், என்பதை இலக்கணக்கொத்து நூலின் பாயிரத்தால் அறிய முடிகிறது. பிரயோக விவேகம் நூலில் சுப்பிரமணிய தீட்சிதர், வடமொழிக்கும் தமிழுக்கும் வடமொழி இலக்கணத்தின் அடிப்படையில் இலக்கணம் கூறுகிறார். இரண்டிற்கும் உள்ள பொதுவான இலக்கணக் கூறுகளையும் தமிழுக்கே சிறப்பாக உள்ள இலக்கணக் கூறுகளையும் தமது நூலில் கூறுகிறார். இலக்கணக்கொத்தில் சுவாமிநாத தேசிகர், தமிழ் நூல்களில் காணப்படும் அரிய இலக்கண விதிகளை மட்டும் தொகுத்துச் சொல்வதாகக் கூறுகிறார். பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய இரண்டு இலக்கண நூல்களுக்கும் நூலாசிரியர்களே உரையையும் இயற்றி யிருப்பதால், உரையில் உள்ள கருத்துக்களும் நூலாசிரியர்களின் கருத்துக்களே ஆகும். திருக்குறளில் அமைந்துள்ள புதுமையான இலக்கண அமைப்புகளை மிகுதியாக எடுத்துக்காட்டியவர் சுப்பிரமணிய தீட்சிதரே. இவரது கருத்துக்களையே பெரும்பாலும் சுவாமிநாத தேசிகர் தமது நூலிலும் எடுத்துக் காட்டுகிறார். ஆனால் இருவருக்கும் பெரிய வேறுபாடு ஒன்று உள்ளது. சுப்பரமணிய தீட்சிதர் தமது விளக்கத்தில் பெரும்பாலும் வடமொழிக் கலைச்சொற்களையே பயன்படுத்துகிறார். சுவாமிநாத தேசிகர் தமிழ்க் கலைச்சொற்களைப்பயன்படுத்துகிறார்.
இலக்கணக் கொத்து நூலில் சுவாமிநாத தேசிகர் திருக்குறளில் பல அபூர்வமான இலக்கண அமைப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். இலக்கண விதிகளைப் பற்றிக் கூறும்போது, பல்கால் பழகினும் தெரியா உளவேல் தொல்காப்பியம் திருவள்ளுவர் கோவையார் மூன்றினும் முழங்கும், (இலக்கணக் கொத்து…7) என்று தமிழ் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள இலக்கண விதிகளின்படி எல்லா நூல்களும் உள்ளன என்று கூற முடியாது. பலமுறை கற்றாலும் தெரியாத இலக்கண அமைப்புகள் தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் ஆகிய மூன்று நூல்களிலும் உள்ளன என்று சுவாமிநாத தேசிகர் கூறுகிறார். மேலும் இந்த மூன்று நூல்களிலும் உள்ள வடமொழி இலக்கண அமைப்புகள், தமிழ் மட்டும் அறிந்தவர்களுக்குப் புலப்படாது என்றும் இவற்றைச் சரியாக அறிய வடமொழி அறிவு அவசியம் என்றும் கூறுகிறார்.
இலக்கணமாவது தொல்காப்பியம் ஒன்றுமே, செய்யுளாவது திருவள்ளுவர் ஒன்றுமே இம்மூன்றனுள் வடமொழி வழக்குப்பற்றிக்கிடந்தன எல்லாம் தமிழர்க்கு ஒளிக்கும் என்பது தோன்ற (ப. 102, 103)
திருக்குறளில் அமைந்துள்ள வடமொழி இலக்கண அமைப்புகள் தொல்காப்பியம் திருவள்ளுவர் ஆதிநூல் வடமொழி நியாயம் வந்தன சிலவே (இலக்கணக் கொத்து-7) தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் ஆகிய இந்த மூன்று நூல்களிலும் வடமொழி அமைப்புகள் சில வந்துள்ளன என்று சுவாமிநாத தேசிகர் கூறுகிறார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
இதில் ‘ஆதி பகவன்’ என்பது இரு சொல்லும் வடமொழியாக அமைந்த பண்புத் தொகை என்று சுவாமிநாத தேசிகர் கூறுகிறார்.
மதிநுட்பம் நூலோடுடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற்பவை -936 என்பதில் அதிநுட்பம் என்பது மிகுதிப் பொருள் தரும் முன்மொழியைப் பெற்ற அவ்வியயீபாவ சமாசன் என்று சுப்பிரமணிய தேசிகர் கூறுகிறார்.
நாண் எனும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் எனும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு – 924
இதில் ‘லஜ்ஜா’ என்னும் வடசொல், சொல் நிலையில் பெண்பாலாக வகுக்கப் படும். அம்முறை பற்றி நாண் எனும் சொல்லையும் பெண்பாலாகக் கொண்டு “நல்லாள்” என்று கூறியுள்ளார். இக்கருத்துக்கள் யாவும் பிரயோக விவேக உரையிலும் கூறப்பட்டுள்ளன. (ப. 88,89) (இங்கு நாண் எனும் நல்லாள் என்று கூறப்படுவது உருவகம் அல்ல. உருவகமாயின் நாண் எனும் நல்லாள் புறங்கொடுப்பாள் என்று இருக்க வேண்டும். இங்கு புறங்கொடுக்கும் என்று அஃறிணையாகக் கூறப்பட்டிருப்பதால் நாண் என்பது சொல்நிலையில் மட்டுமே பெண்பாலாகக் கூறப்பட்டுள்ளது.)
திருக்குறளில் வரும் வடமொழி இலக்கண அமைப்புகள் சில சுட்டிக் காட்டப் பட்டன. இனி திருக்குறளில் உள்ள அரிதான சில இலக்கணக் கூறுகள் எடுத்துக் காட்டப் படுகின்றன.
ஒரே சொல் உடன்பாட்டு வினையாகவும் எதிர்மறை வினையாகவும் வருதல்
பயனில சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்--------196 திருக்குறளில் எனல் என்ற ஒரு வினை, முதலடியில் ‘மகன் எனல்-மகன் என்று சொல்லாதே’ என எதிர்மறையாகவும், இரண்டாம் அடியில், ‘மக்கட் பதடி எனல்-மக்களில் பதர் என்று சொல்லுக’ என உடன்பாடாகவும் வருகிறது.
பிரித்துக் கூட்டல்
ஒரு அடிப்படையில் ஒற்றுமை உடையவற்றைத் தொகுத்துச் சொல்லும்போது அவற்றில் ஒன்றை ஒரு காரணம் பற்றிப் பிரித்துக் காட்டுதல் ஒருவகையாகும். இதைச் சுப்பிரமணிய தீட்சிதர் வடமொழியின் அடிப்படையில் விளக்குகிறார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்-----------50 வையத்தில் வாழ்பவரோடு சேர்த்துச் சொல்லி, பின் பிரித்துத் தெய்வத்துடன் வைத்தல் என்பது பிரித்துக் கூட்டல் என்னும் முறையாகும். இது வடமொழியில் பரவலாக அமைந்துள்ளது.
படைகுடிகூழ் அமைச்சு நட்பு, அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு----381 இவை ஆறும் உடைய மற்றவர்களோடு கூட்டி, பின், ‘அவர்களில் ஏறு’ என்று பிரித்தலால் இது கூட்டிப் பிரித்தல் எனப்படுகிறது.
மூன்றாம் வேற்றுமை உருபு வேறு பொருளில் வருதல் மூன்றாம் வேற்றுமை உருபு கருவி, கருத்தா, உடனிகழ்வு ஆகிய மூன்று பொருளில் வரும் என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. இவை அல்லாத வேறு பொருளிலும் ஒடு உருபு வரும் என்று பிரயோக விவேகத்தில் கூறப்பட்டுள்ளது. அவை வினையின்மை, வேறு வினை, அதனொடு மயங்கல், ஒப்பு, அல் ஒப்பு, ஒப்பு வேறுபாடின்மை(அபேதம்), கொண்டு என்னும் எச்சப் பொருள் முதலியவை என்று கூறப்பட்டுள்ளது. (ப. 90) இவற்றில் வேறுவினை, அதனொடு மயங்கல், ஒப்பு அல் ஒப்பு, ஒப்பு, கொண்டு ஆகிய பொருள்களில் திருக்குறளில் ஒடு உருபு வந்துள்ளது. அவை வந்துள்ள இடங்களையும் உரையாசிரியர்கள் அவற்றுக்குக் கொடுத்துள்ள விளக்கங்களையும் விரிவாக நோக்குதல் வேண்டும்.
அ) வேறுவினை கொடியார் கொடுமை உரைக்கும் தொடியோடு தொல்கவின் வாடிய தோள்---------1235 என்ற குறளில் தொடியொடு தோள் என்று மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஒடு வந்துள்ளது. ஆனால் இங்கு உடனிகழ்வுப் பொருண்மை இல்லை. ஏனெனில் வாடுதல் தோளுக்கு மட்டும் உரிய வினை; தொடிக்கு வாடுதல் இல்லை; நெகிழ்தலே உண்டு. தொடி நெகிழ்ந்தன தோள் வாடின என்றே இக்குறள் பொருள் படுகிறது. இரண்டையும் ஒடு என்ற உருபு கொண்டு கூறப்பட்டிருந்தாலும் இங்கு ஒடு, உடனிகழ்வுப் பொருளில் அல்லாமல் வேறுவினைப் பொருளில் வந்துள்ளது.
ஆ) அதனொடு மயங்கல் பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் – 1121
இதில் ஒடு வேற்றுமை உடனிகழ்வுப் பொருளில் வரவில்லை. பாலையும் தேனையும் பிரிக்க முடியாது. எனவே இது உடனிகழ்வு அன்று. அதனொடு மயங்கல் என்ற பொருளில் வந்துள்ளது. (உடனிகழ்வில் வரும் இரண்டையும் பிரிக்க முடியும். (கலத்தல்)’வாளொடு முன்தோன்றி மூத்த குடி’ என்பதில் வாளையும் அதை ஏந்தியவனையும் பிரிக்க முடியும்.)
இ) ஒப்பு அல் ஒப்பு விலங்கொடு மக்கள் அனையந்-----410 என்ற குறளில் ‘விலங்கொடு மக்கள்’ என ஒடு உருபு உடனிகழ்வுப் பொருளில் அல்லாமல் விலங்கையும் மக்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கூறுவதாக வந்துள்ளதால் இது ‘ஒப்பு அல் ஒப்பு’ ஆகும்.
ஈ) ஒப்பு செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவிற் ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து---- 413 என்ற குறளில் ‘கேள்வி உடையார் தேவரொடு ஒப்பர்’ என்று கூறப் பட்டுள்ளது. எனவே இங்கு ஒப்புப் பொருளில் ஒடு வேற்றுமை வந்துள்ளது.
உ) கொண்டு என்னும் எச்சம் வேலொடு நின்றான் இடுவென்றது போலும்-----552 என்ற குறளில் ‘வேல் கொண்டு நின்றான்’ என்றுபொருள் படுவதால், இங்கு ‘ஒடு’ உருபு ‘கொண்டு’ என்ற எச்சப்பொருளில் வந்துள்ளது. இதுவரை ‘ஒடு’ எனும் வேற்றுமை திருக்குறளில் பழைய இலக்கண நூல்களில் கூறப்பட்டதற்கு மாறாக நான்கு விதமான புதுப் பொருள்களில் வந்துள்ளமை காட்டப் பட்டது.
உருபு மயக்கம்
ஒரு வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் வேறு வேற்றுமை உருபு வருவதை உருபு மயக்கம் என்பர். இதில் உருபு மாறி வந்தாலும் பொருள் மாறாது. எடுத்துக்காட்டாக, காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது --------102 இதில் ‘ஆல்’ என்ற மூன்றாம் வேற்றுமை உருபு ‘காலத்துக்கண் செய்த நன்றி’ என ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது. (ஏழாம் வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் மூன்றாம் வேற்றுமை உருபு வந்துள்ளது.)
தடுமாறு உருபுகள்
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்.--------167 இந்தக் குறளில் ‘உடையானை’ எனவும் ‘தவ்வையை’ எனவும் இரண்டு இடத்திலும் இரண்டாம் வேற்றுமையாகிய ஐ உருபே வந்துள்ளது. ஆனால் இது தொடரில் பொருள்படும்போது, ‘உடையானைத் தவ்வைக்குக் காட்டிவிடும்’ எனவும், ‘உடையானுக்குத் தவ்வையைக் காட்டிவிடும்’ எனவும் என இரண்டாம் வேற்றுமையும் நான்காம் வேற்றுமையும் இடம் மாறி வந்துள்ளன.
முதல்நிலைத் தொழிற் பெயர், முன்னிலை வினைமுற்று ஆதல்.
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை --------1151 இதில் ‘உரை’ என்ற முதல்நிலைத் தொழிற்பெயர், ‘உரைக்க’ என்ற பொருளில் முன்னிலை வினைமுற்றாக வந்துள்ளது.
முதல் நிலை வினை, பலர்பால் வினை முற்றாதல் உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் --------813 குறளில், ‘நேர்’ என்ற சொல், ‘நேர்வர்’ என்ற பொருளில் பலர்பால் வினைமுற்றாக வந்துள்ளது.
தன்வினை பிறவினை
வினைச் சொற்கள், தன்வினையாகவோ, பிறவினையாகவோ வரும். சில இடங்களில் ஒரே சொல் தன்வினையாகவும் பிறவினையாகவும் வருதல் உண்டு. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றாதவர்---------187 என்பதில், ‘தேறாதவர்’ என்ற சொல், ‘தேறாதவர்’ எனவும், ‘தேற்றாதவர்’ எனவும் தன்வினையாகவும், பிறவினையாகவும் இருவகையாகவும் வந்துள்ளது. (இக்குறளில் தேறாதவர் என்று தன்வினைப் பொருளில் வரவேண்டும். ஆனால் இதில் தேற்றாதவர் எனப் பிறவினைப் பொருளில் வந்துள்ளது.) குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உளுற்று இலவர்க்கு.------- 604
இதில் ‘மடிந்து’ என்றுள்ள வினை முதல் நிலை திரிந்து, ‘மடிவித்து’ எனப் பிறவினையாக மாறியுள்ளது என்று இலக்கணக் கொத்து கூறுகிறது. (ப.201) (சோம்பல் குடியை மடிவிக்கும் என்பது பொருள்) நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றி குற்றமும் ஆங்கே தரும் ---------171 என்ற குறளில், ‘குடிபொன்றி’ என்ற முதல் நிலை வினை திரிந்து, ‘குடியைப் பொன்றுவித்து’ எனப் பிறவினையாக வருகிறது.
செயப்பாட்டு வினை
திருக்குறளில் சில இடங்களில் செயப்பாட்டு வினை, செய்வினை போன்று அமைந்துள்ளது. அவற்றைச் செயப்பாட்டு வினையாகக் கொண்டால்தான் பொருள் கொள்ள முடியும். தமிழில் செயப்பாட்டு வினைத் தொடரில் ‘படு’ என்ற சொல் வரும். அத்துடன் ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபும் வரும். இவற்றைக் கொண்டு ‘பொன்னால் செய்யப் பட்ட வளை’ என்பது போலச் செயப்பாட்டு வினை வாக்கியம் அமையும். அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.-----888 என்ற குறளில், ‘பொருத பொன்’ என்று உள்ளது. ‘அரத்தாற் பொரப்பட்ட பொன்’ என்று ‘படு’ என்ற சொல் இல்லாமல், செயப்பாட்டு வினையாக வந்துள்ளது. உட்பகை அற்ற குடி, அரத்தாற் பொரப்பட்ட பொன்போலத் தேயும் என்று இதற்குப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.-----41 இதில் ‘இல்வாழ்வான் எனப்படுவான்’ என்று படு சொல் பெற்று வந்துள்ளது என இலக்கணக் கொத்து கூறியுள்ளது. (ப.209). உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகுவார். -----921 என்ற குறளில் ‘உட்கார் ஒளியிழப்பர்’ என்றே பொருள்படுகிறது. இதில் ‘படு’ சொல் இருந்தும் ‘படு’ பொருள் வரவில்லை என்று இலக்கணக் கொத்து கூறுகிறது. (ப.211)
இதுவரை கூறியவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
திருக்குறளில் புதுமையான மொழி அமைப்புகள் பல காணப்படுகின்றன. இவற்றை இலக்கண விதிகள் எனலாம். ஓர் இலக்கிய ஆசிரியர் என்ற வகையில் புதுமையான இலக்கண அமைப்புகளைக் கொண்டு நூல் இயற்ற அவருக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில், இலக்கிய ஆசிரியராக இருப்பதால், தான் கையாளும் புதுமையான இலக்கண அமைப்புகளை எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்பும் அவருக்கு இல்லை. அவ்வாறு புதுமையான இலக்கண அமைப்புகளைத் திருவள்ளுவர் அமைத்ததற்கான காரணங்களையும் நோக்குதல் வேண்டும். எந்த ஒரு காரணத்தால் அல்லது கட்டாயத்தால் திருவள்ளுவர் இவ்வாறு அமைத்தார் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வகையான அமைப்புகள் இலக்கண ஆசிரியர்களிடமும், இலக்கண உரையாசிரியர்களிடமும், திருக்குறள் உரையாசிரியர்களிடமும் பலவிதமான சிந்தனைகளை உருவாக்கியுள்ளன. இவற்றுக்கு விளக்கம் கூற வேண்டிய தேவை இருநிலைகளில் ஏற்பட்டது. முதலாவதாக, குறளுக்கு அதன் நிலையிலேயே நின்று பொருள் கொள்வது; இவ்வாறு பொருள்கொள்ள முடியாத இடங்களில் இடையே சில சொற்களைப் பெய்து பரிமேலழகர் சில குறள்களுக்கு உரை விளக்கம் தந்துள்ளார். இரண்டாவது இலக்கண அமைப்பில் இவை தமிழ் மொழி அமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளதைக் கண்டு அதற்கு இலக்கணம் கூறுதல். இந்தப் பணியையும் பரிமேலழகர் செய்துள்ளார். பரிமேலழகர் உரையில் இலக்கணக் குறிப்புகள் நிரம்ப இருப்பதாகக் கூறுவதுண்டு. ஏன் பரிமேலழகர் அவ்வாறு இலக்கணக் குறிப்புகளை அதிக அளவில் கூறினார்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டால் இதற்கு விடை கிடைக்கும். திருக்குறளில் உள்ள இலக்கண அமைப்புகளையும் எடுத்து விளக்கினால் மட்டுமே பல குறள்களுக்குச் சரியாகவும் முழுமையாகவும் பொருள் கொள்ள முடியும் என்பதைப் பரிமேலழகர் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார். இதை உணர்ந்து செயல்பட்டதாலேயே அவற்றைப் பரிமேலழகரால் நன்கு விளக்க முடிந்தது.
அரம் பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி----888 என்ற குறளில், ‘அரத்தால் பொரப்பட்ட பொன்போலத் தேயும்’ என்று அரத்தைக் கருவியாக்கி, பொன்னைச் செயப்படு பொருளாக்கினால்தான் சரியாகப் பொருள் கொள்ள முடியும். அவ்வாறு செயப்படு பொருளாக்குவதற்குப் ‘பொரப்பட்ட’ என்று ‘படு’ சொல்லை வருவிக்க வேண்டியுள்ளது. உண்மையில் திருக்குறளில் அமைந்துள்ள இலக்கணங்களை நன்கு விளங்கிக் கொண்டதாலேயே பரிமேலழகரின் உரை சிறந்ததாக அமைந்தது. இலக்கண ஆசிரியர்களை விடவும் இலக்கண உரையாசிரியர்களை விடவும் திருக்குறளில் அமைந்துள்ள இலக்கண முறைகளைப் பரிமேலழகர் நன்கு அறிந்துள்ளார். அவருடைய வடமொழி அறிவும் ஆழ்ந்த இலக்கணப் புலமையும் இதற்குக் கை கொடுத்துள்ளன.
நன்றி: அரிமா நோக்கு. (22-03-2007 அன்று சென்னைப் பல்கலைத் தமிழ் மொழித்துறையில் நடைபெற்ற சொர்ணம்மாள் அறக்கட்டளைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
வடமொழியில் நேராகப் படித்தால் ஒரு பொருளும் தலைகீழாக எழுத்துக்களை மாற்றிப் படித்தால் வேறொரு பொருளும் வரும்படி எழுதினால் அதற்கு விலோமகாவ்யம் என்று பெயர். இப்படிப் பலகாவ்யங்கள் வடமொழியில் உண்டு. ஸூர்ய கவி என்பார் எழுதிய ராமக்ருஷ்ண விலோம காவ்யம் இவ்வகையைச் சேர்ந்தது. இதுல் முதல் ச்லோகத்தைப் பாருங்கள்
தம் பூஸுதாமுக்திமுதாரஹாஸம் வந்தே யதோ பவ்யபவம் தயாஶ்ரீ:| ஶ்ரீயாதவம் பவ்யபதோயதேவம் ஸம்ஹாரதாமுக்திமுதாஸுபூதம்||
முதலிரு பாதங்கள் ராமனைக் குறிக்கும். அதிலிருக்கும் எழுத்துக்களை இறுதி எழுத்திலிருந்து மாற்றிக் கொண்டே வந்தால் அது சொல்லாகி வாக்யமாகி கண்ணனைக் குறிக்கும். இப்படியோர் அபூர்வ காப்பிய அமைப்பு. மிகச் சிறப்பானதாகும்.