New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சித்தர்கள் என்பவர் யார்?


Guru

Status: Offline
Posts: 24778
Date:
சித்தர்கள் என்பவர் யார்?
Permalink  
 


சித்தர்கள் என்பவர் யார்?

 
 
 

பொருளடக்கம்

 [மறை


தமிழ்ச்சித்தர் வம்சம்

கட்டுரையாளர்: திரு. பரந்தாமன்,விருது நகர், தமிழகம் (ஸ்ரீசித்தர் ஞானயோக மையம்)
கட்டுரையைத் தட்டச்சு செய்து வழங்கியவர்: திருமதி.கீதா சாம்பசிவம்

 

சித்தர்கள் என்பவர் யார்?


‘சித்தர்கள்’ என்ற சொல்லின் பொருளைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். ‘சித்தர்கள்’ என்ற சொல் பொதுவானதாகும். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே தேடுகிற அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். இருந்தாலும், வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் என்றும் கூறலாம். நம்நாட்டுச் சித்தர் கணங்களில் உள்ள வெளிநாட்டவர்களான சீனர்கள், அராபியர்களும் சித்தர்கள் எனப்படுகின்றனர். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தூய்மையின் சிகரமாகவும் தெய்வீகத்தன்மையையும் கொண்டவர்கள்.


சித்தன் என்பவன் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்துக் கொண்டு அதன்படி வாழ்தலில் வெற்றிகண்டு சமத்துவத்தையும் சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவன் ஆவான். அந்த மூவகைக் கட்டுப்பாடுகளாவன மூச்சை அடக்குதல் (பிரானாயாமம்), விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வென்று எந்தவித ஆசைகளும் இல்லாத நிலையை அடைதல், இறுதியாக மனதை அடக்குதல் என்பவைகளாகும். சித்தர்கள் எங்கிருந்து எதை உண்டாலும் எப்படித் தோற்றமளித்து எதைச் செய்தாலும் உலகியல் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனை ‘சிவம்’ ஆகிய பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லறவாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் பற்றுகளகன்று ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. “கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள். தெளிந்தவர்கள் சித்தர்கள்.”


மனிதர்களிடத்தே நிலவும் சாதிவேற்றுமைகளையும் ஏற்றதாழ்வுகளையும் கடுமையாகச் சாடிப் புரட்சி செய்தவர்கள் சித்தர்கள். சித்தத்தில் சிவனைக்காணும் வரை உடலைக் காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் காயகல்பம் உண்டவர்கள். மேலும், ஏழைகளின் நோய்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள் எளிய மருந்துகளைக் கண்டறிந்து அவர்களின் துன்பம் தீர்த்தனர். சித்தர்களில் பலர் யோகப்பயிற்சியாலும் சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள் ஆவர். இவர்கள் மனோ சக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். இவர்கள் கண்ட சராசர ரகசியங்களை அறிந்து அவற்றை வெளி உலகிற்கு அளித்தவர்கள்.


சித்தர்கள் யோகசாதனத்தால் பெற்ற பயன்களை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தங்களுக்காக எதுவும் செய்து கொண்டதாக தெரியவில்லை. பதினெண் சித்தர்களுக்கு முன்னே நவநாத சித்தர்கள் என்ற ஆதி தமிழ்ச்சித்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அகத்தியர் வருகைக்குப் பின்பே சித்தர் மார்க்கத்தின் மீது ஆரியவண்ணம் பூச்சப்பட்டு விட்டது. சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும் மிக மிக, எளிமையான இலக்கண நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓலைச்சுவடிகளில் நூல்களாக எழுதியுள்ளார்கள்.


இத்தகைய சிறப்புப் பெற்ற சித்தர்கள், தங்கள் திருமேனியை மறைத்துக் கொண்ட இடமாகக்கருதப்படும் இடங்கள் எல்லாம் தெய்வீக சக்திமிக்க திருக்கோயில்களாகக் கருதப்பட்டு போற்றப்படுகின்றன.


இந்தத்திருத்தலங்கள் பதினெண் சித்தர்களின் சமாதித்தலங்கள் எனப்பின்வரும் பாடல்மூலமாக அறியலாம்:


“ஆதிகாலத்திலே தில்லையில் திருமூலர் 
அழகர் மலை இராமதேவர் 
அனந்தசயனம் கும்பமுனி திருப்பதி 
கொங்கணவர் கமலமுனியாகி 
சோதிரக் கஞ்சட்டமுனி கருவை கருவூரார் 
சுந்தரானந்தர் கூடல் 
சொல்லுமெட்டுக் குடியில் வான்மீகரோடு ஒர் 
நெல்காசியில் நந்திதேவர் 
பாதியரிச் சங்கரன் கோவில் பாம்பாட்டி 
பழனிமலை யோகநாதர், 
பரங்குன்ற மதில், மச்ச முனிபொய்யூர் கோரக்கர் 
பதஞ்சலி இராமேசுவரம் 
சோதி வைத்தீசுவரன்கோயிலில் தன்வந்திரி 
திகழ் மயூரங்குதம்பை 
சித்தருணை யோரிடைக்காடன் சமாதியிற் 
சேர்ந்தன ரெமைக் காக்கவே”
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. அகத்தியர் என்ற பெயரில் மட்டும் 37 பேர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நம் தமிழ் மரபைப் சேர்ந்த அகத்தியர் திருக்குற்றால மலையில் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருந்து திருமாலைச் சிவபெருமானாக அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர். இவரது காலம் கி பி. 13 ஆம் நூற்றாண்டாகும். அகத்தியர் தமிழ்மொழி, தமிழ் இலக்கணங்களைப் பரமசிவனிடத்தில் இருந்தும், முருகப்பெருமானிடத்திலிருந்தும் கற்றுத்தமிழ் மொழியைத் தமிழ் நாட்டில் நன்கு வளர்த்தார். இவர் மார்கழி மாதம் ஆயில்யநட்சத்திரம் 3ம் மாதத்தில் பிறந்ததாகப் போகர் தமது 7000 ஆம் நூலில் கூறுகிறார்.


அகத்தியர் அருளிய நூல்கள்:
அகத்தியர் 21,000 அகத்தியர் 12,000 அகத்தியர் பரிபூரணம் அகத்தியர் ஆயுர்வேதம் அகத்தியர் நயனவிதி அகத்தியர் குணயாடம் அகத்தியர் அமுதக்கலை ஞானம் அகத்தியர் செந்தூரம் 300 அகத்தியர் வைத்திய காவியம் 1500
முதலியவையாகும். இவர் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் சமாதி கொண்டதாகக் கூறப்படுகிறது. இமயமலையில் வசிப்பதாகவும் கூறுவர்.

 

திருமூலர்


திருமூலர் கைலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். இவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சகுனகிரி மலை பல சித்தர்கள் தங்கித் தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது. சதுரகிரி மலையின் விசேஷத் தன்மை பற்றி நந்தீசுவரர் தான் திருமூலருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து ஒரு உருவமாக அமைந்ததால்தான் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்ததாகத் திருமூலரின் சீடரான காலாங்கிநாதர் வருணிக்கிறார். இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார்.


போகர்


இவரை சித்தர்களில் முதன்மையானவர் சீனதேசத்துக்குரியவர் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் வாழ்ந்த காலத்தில் ஜாதி, குலம், மரபு என்ற பிரிவுகள் இல்லாத காலம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். சீனாவில் போகருக்கு “போ-யாங்” என்று பெயருள்ளதாகவும், வா. ஓ. சியூ என்ற பெயரில் சீனாவின் தலைசிறந்த ஞானி என்று கொண்டாடப்படுவதாகப் பேராசிரியர் இராமையா யோகி அவர்கள் தமது போகர் 7000 நூல் மதிப்புரையில் கூறியுள்ளார். போகர் என்ற பெயருக்கு நியாயமான ஒரு காரணம் கற்பிக்க விரும்புபவர் சகலத்துறைகளிலும், துறை போயவர். ஆகையால், போகர் என்ற பெயர் ஏற்பட்டது என்கின்றனர். போ-யாங் என்ற பெயர் போ-யர் என்று மரியாதை நிமித்தம் அழைக்கப்பட்டு போகர் என்று மருவி இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.


அகத்திய முனிவர் போகரை சீனாக்காரர் என்றே அழைக்கிறார். அகத்தியரின் 12000 நாலாம் காண்டத்தில்
“சித்தான சித்துமுனி போகநாதன் சிறந்த பதினெண்பேரில் உயர்ந்த சீலன் கத்தனெனும் காலாங்கி நாதர்சீடன் கனமான சீனபதிக்குகந்த பாலன்” என்கிறார். சீனநாட்டில் போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து போகமுனிவர் சீனநாட்டவராக வாழ்ந்து வந்தார் என்ற செய்தியும் உண்டு. இவரை புத்த சமயத்துறவி என்றும் சீன யாத்ரீகராக நம்நாட்டிற்கு 1600 ஆண்டுகளுக்கு முன் வந்து புத்தகயா, பாடலிபுத்திரம் முதலான இடங்களைத் தரிசிக்கத் தமிழ்நாட்டிற்கு வந்தவர் என்றும் சிலர் கூறுவர். இவர் தென் தமிழ் நாட்டில் பலகாலம் தங்கித் தாம் அறிந்தவற்றைப் பல சீடர்களுக்குக் கற்பித்தும், தாம் அறியாதனவற்றைப் பயின்றும் வந்துள்ளவராகத் தெரிகிறது. போகர் சமாதிநிலையில் பழனியில் இன்றும் இருப்பதாகக் கருதப்படுகிறது.


போகரது சமாதிக்கு இன்னும் புலிப்பாணி சாமியார் என்னும் ஒருவர் வழிவழியாக வழிபாடும் தொண்டும் செய்து வருவது இவரது சீடர்தான் புலிப்பாணி என்பதை உறுதி செய்கிறது. போகர் அருளிய நூல்கள்:
போகர் 12000

  • அகத்தியர் 21,000
  • அகத்தியர் 12,000
  • அகத்தியர் பரிபூரணம்
  • அகத்தியர் ஆயுர்வேதம்
  • அகத்தியர் நயனவிதி
  • அகத்தியர் குணயாடம்
  • அகத்தியர் அமுதக்கலை ஞானம்
  • அகத்தியர் செந்தூரம் 300
  • அகத்தியர் வைத்திய காவியம் 1500


இராம தேவர்


“ஆதியென்ற மணி விளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும் சோதியென்று துய்யவெளி மார்க்கமெல்லாஞ் சுகம் பெறவே மனோன்மணி யென்னைத்தாள் தன்னை நீதியென்ற பரஞ்சோதி ஆயிபாதம் நிற்குணத்தினின்ற நிலையாருங் காணார் வேதியென்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்குவதும் பூசையிது வீண் போகாதே”
மேற்கண்ட பாடலில் உள்ளமாகிய கோவிலில் இறைவனை இருத்தி, அன்றாடம் சித்த சுத்தியுடன் வழிபட்டால் எல்லா சித்திகளும் கைவரப்பெறலாம் என்பது இராம தேவரின் பூசை விதி முறையின் பொதுக்கருத்தாக அமைகிறது. சிந்தையை அடக்கி சும்மா இருப்பது சுகம் என்பர் யோகிகள். ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இராமதேவர் தன்னுடைய பாடல்களில் மனதை அடக்கவும், உள்ளத்தை ஒருநிலைப்படுத்தவும் உலகின் முழுமுதற் பொருளை வணங்கிவழி காட்டுகிறார்.


இராமதேவர் வாழ்ந்தது நாகப்பட்டினத்தில். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார். இராமதேவர் பல சித்தர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இராமதேவன் அரபுமொழியில் 17 மருத்துவ நூல்களை எழுதினார். இராம தேவருக்கு நபிகள் நாயகம் ஒருமுறை காட்சி கொடுத்ததாகக் கூறுகின்றனர். அதன்பின்பு சிலகாலம் சமாதிநிலையில் இருந்தார்.


போகமுனிவர் ஒரு நாள் இராமதேவர் தியானத்திலிருக்கும் போது வந்தார். அப்போது இராமதேவரிடம் “மெக்காவால் யாக்கோபுகளாவும் தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கும் சமாதி அடைய வேண்டிய காலம் இதுவல்ல. இன்னும் ஏராளமான பயனுள்ள காரியங்கள் நீ செய்ய வேண்டியுள்ளன. எனவே, அவற்றையெல்லாம் முடித்த பின்பு சமாதியடைவது நல்லது என்றார். போகரின் உபதேசத்தால் இராமதேவர் பல்வேறு அரிய கற்ப மூலிகைகளை பற்றி அறிந்து, அவற்றை சேகரிக்க தமது ஒப்பற்ற சித்தியால் காடுமலைகளையெல்லாம் சுற்றித்திரிந்தார்.


இராமதேவருக்கு சதுரகிரி மலையில் சித்திகள் பல கைகூடியதால் அங்கிருந்து தவம் செய்தார். அவர் சதுரகிரியில் வைத்திய சாஸ்திர நூல்களை தமிழில் எழுதினார்.


இராமதேவர் எழுதிய நூல்கள்:
வைத்திய காவியம் பரிபாஷை தண்டகம் வைத்திய சூத்திரம் நிகண்டு கலைஞானம் அட்டாங்கயோகம் முப்பு சூத்திரம் சிவயோகம் பட்கணி-பரஞானகேசரி வாத சூத்திரம் யாக்கோபுசவுக்காரம் வைத்திய சிந்தாமணி
சதுரகிரி வனத்தில் இராமதேவர் தங்கியதால் இராமதேவர் வானம் என்ற பெயரும் உண்டு. இவர் மெக்காவில் சமாதி அடைந்தார். அழகர் மலையில் சமாதியடைந்ததாக சில நூல்கள் கூறுகின்றன.


காகபுசுண்டர்


‘இச்சையால் வாழ்வு கொச்சைப்படும்” என்பது காகபுசுண்டர் என்னும் சித்தரின் கருத்தாகும். பரம்பொருளினை அடைவதே அனைவரது முழுமுதற் கொள்கை என்பதை வலியுறுத்துகிறார். யோகநிஷ்டை என்பதே இவரது ஞானவேட்கையாகும் என்று காகபுசுண்டரின் பாடல்கள் தெரிவிக்கின்றன. மூச்சை அடக்கி மூலப்பொருளைக் காணவும், பேச்சை ஒடுக்கி பிரம்மத்தை அடையவும் கற்றுத்தருவதே காகபுசுண்டரின் குறிக்கோளாகும். காகபுசுண்டரின் பிறப்பு பற்றி போகரின் சப்தகாண்டம் கூறுகிற கருத்தினைப் பற்றிப் பின்வருமாறு அறிவோம்:
“காகபுசுண்டர் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழித்ததையும் எத்தனையோ பிரம்மாக்கள் எத்தனையோ விஷ்ணுக்கள், எத்தனையோ சிவன்கள், அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்குப் பின்பும், உயிர்கள் புதிது புதிதாக உண்டாவதையும் பார்த்ததாகக் கூறியுள்ளார்கள். காகபுசுண்டர் பல யுகங்கள் உயிரோடு இருந்ததாகக் கூறுகின்றார்கள்.”
ஒரு சமயம் சக்தி கணங்கள் மது அருந்தி நடனமாடிக் களித்திருந்தனர். அப்போது சிந்திய மது கலந்த தண்ணீரை அன்னங்கள் அருந்திப் போதைக் களிப்பால் நடனமாடின. இதை சிவனும், பார்வதியும் கண்டு களித்தனர். அதனால் உண்டான சிவகணங்களை காகத்தின் வடிவில் அன்னத்தோடு சேர்ந்தார். அப்போதே அன்னம் கருவுற்று முட்டைகளை இட்டது. 20 முட்டைகள் அன்னக்குஞ்சுகளாகப் பொரிந்தது. 21வது முட்டையில் காகம் பொரிந்து வெளிவந்ததாம். அந்த காகமே காகபுசுண்டர்.


அந்த 20 அன்னங்களும் அநேக நாள் இருந்து முக்தி அடைந்தன. சிவகலையின் தாக்கத்தால் வலுவான காகபுசுண்டர் தன் தவவலிமையால் என்றும் உயிரோடு இருக்கும் ஆற்றலைப் பெற்றார். காகபுசுண்டர் பலநூறு பிறவிகள் எடுத்தவர். இருந்தாலும் முந்தைய பிறவிகளின் நினைவுகளை மறக்காதவர். அவர் காக வடிவிலான சித்தராய் காகபுசுண்டராய் உருவெடுத்ததன் காரணத்தை அவர் கூறுவதாலேயே நாம் அறிவோம்.


“இந்த காகவடிவத்தில் தான் நான் இராமனிடம் பக்தி கொண்டேன். அவனுடைய அருள் இந்த உடலில் தான் எனக்குக் கிட்டியது. அதனால் தான் இந்த உடல்மீது எனக்கு வெறுப்பு இல்லை. நான் விரும்பினால் எனக்கு மரணம் வரும். இருந்தாலும் நான் காக வடிவத்தை விட்டுவிட மாட்டேன்.”
காகபுசுண்டருக்கு முற்பிறவி ஞாபகம் வந்து அலைமோதிய எத்தனை பிறவி எடுத்த போதிலும் அவர் அனுபவித்த பிராமணன் பிறவிதான் அவருக்கு மிகவும் அற்புதமான பிறவியாகத் தோன்றியது. அங்ஙனம், பிராமணனின் மகனாக இருந்தபோது குருகுலவாசமாக லோமச முனிவரின் ஆசிரமம் சென்றார். காகபுசுண்டருக்கு ஸ்ரீராமபிரானின் திருவடித்தாமரைகளை ரசிப்பதை தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். ஆனால், லோமச முனிவரின் அறிவுரையை அலட்சியம் செய்தார். இதனை அறிந்த முனிவர் காகபுசுண்டரிடம், “நான் கூறும் உபதேசத்தை ஏற்க மறுக்கிறாய். இது உனக்கு நல்லதல்ல. எதற்கெடுத்தாலும் பய உணர்வு உன்னிடம் தலைகாட்டுகிறது. எனவே, உன்னைக் காகமாக உருவெடுக்க சபிக்கிறேன்,” என்று சாபமிட்டார்.


பின்னர், சிறிது காலத்திற்குப் பின்பு காகபுசுண்டரின் குறிக்கோளை அறிந்த லோமச முனிவர் அவருக்கு தேவரகஸ்யமான இராமசரிதத்தை எடுத்து வைத்தார். அவருக்கு சகலசித்திகளும் கிடைக்க, அவர் விரும்புகிறபோது மரணம் சம்பவிக்கும் என்றும் ஆசீர்வதித்தார். மேலும், மாயை, யோகம், காலம், கர்வம் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்கள் காகபுசுண்டரை அணுகாது என்று ஆசிர்வதித்தார்.


காகபுசுண்டர் தாம் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ பிரம்மாக்கள், எத்தனையோ விஷ்ணுக்கள் சிவன்கள் அழிந்து போனதைப் பார்த்ததாகவும், ஒவ்வொரு பிரளயத்திற்கு பிறகும் உலகம் சிருஷ்டிக்கப்பட்டதைப் பார்த்ததாகவும் அவர் கூறினார். இத்தகைய நிகழ்வுகள் பற்றி காகபுசுண்டர் துணைக்காவியத்தில் விளக்கமாகக் கூறப்படுகிறது. (வாசியோகம், நெற்றிக்கண் திறத்தல், தனிப்பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.)


காகபுசுண்டர் அருளிய நூல்கள்:
காகபுசுண்டர் வைத்தியப்பெருங்குறள் காகபுசுண்டர் நாடிசோதிடம் காகபுசுண்டர் ஞானம் 80 காகபுசுண்டர் உபரிடதம் 31 காகபுசுண்டர் காவியம் 33 காகபுசுண்டர் குறள் 16 காகபுசுண்டர் பெரு நூல் 1000 
சித்தர்களின் ஞானமும், ஆழமும், சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாதவை. வசிட்ட முனிவருக்கே உபதேசம் செய்யக்கூடிய அளவு தகுதி பெற்றவர் காகபுசுண்டர். போலி சித்தர்களையும், சாதுக்களையும் மிகக்கடுமையாக விமர்சிக்கிறார். காகபுசுண்டர் உள்ளொளி காணும்வரை யோக சாதனைகளை விடாமல் செய்ய வேண்டும் என்கிறார். இவர் திருச்சி வரையூரில் வாழ்ந்து அங்கேயே சமாதி அடைந்ததாக ஆய்வு நூல்கள் கூறுகின்றன.


கோரக்கர்


மனித வாழ்வில் ஏற்படும் முதுமைக்கும் உடலின் தளர்ச்சிக்கும் எது காரணம் என ஆராய்ந்து உடம்பினை என்றும் இளமையாய் அழகாய் இருக்க உதவும் காய கல்பத்தைக் கண்டு பிடித்தவர். கோரக்கர் 80 வயது வரை வாழ்ந்த வட இந்தியர் என கூறப்படுகிறது. கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரம் 2ம் மாதத்தில் பிறந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாட்டின் தென் வட மாநிலங்களிலும், சீன நாடு முதலிய கீழ் நாடுகளிலும் கோரக்கர் வரலாறு அறியப்பட்டுள்ளது.


பதினெண் சித்தர்களில் 16வது இடத்தில் உள்ளவர் கோரக்கர் சித்தர் ஆவார். மச்சேந்திர சித்தரின் மாணாக்கர் கோரக்கர் என்று கூடச் சொல்லலாம். மச்சோந்திரரிடம் இலக்கணங்களோடு ஞான நெறியும் கற்று குருகுலவாசம் இருந்தவர். நாகப்பட்டினம் அருகே வடக்கு பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் ஆலயம் உள்ளது. நாள்தோரும் 3 காலபூசைகள் இந்த ஆலயத்தில் நடந்து வருகின்றன. நாள்தோரும் ஒவ்வொரு சித்தராக ஆண்டு முழுவதும் தொடர்ந்து சித்தர் பலர் இவ்விடம் வந்து கோரக்கரை வழிபட்டுச் செல்வதாக மரபு உள்ளது.


கோரக்கர் எழுதிய நூல்கள்:
நமநாசத்திறவு கோல் முக்திநெறி பிரம்மஞானம் மலைவாகடம் கற்பம் அட்டகர்மம் சந்திரரேகை வகாரசூத்திரம் கண்டகம் ஞான சோதி கற்பசூத்திரம் கல்ப போதம் ரச மேகலை மரளி வாதம் மூலிகை முத்தாரம் காளிமேகம்
கோரக்கர் பொய்கை நல்லூரில் சமாதி கூடியகாலம் கி.பி. 1233ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்குப் பின்னும் வாழ்ந்திருந்தார் எனக்கூறப்படுகிறது.


கோரக்கரின் ஜீவசமாதி இடங்கள்:
1. பொதிய மலை 
2. ஆனை மலை 
3. கோரக் நாத்திடல் (பாண்டிய நாடு) 
4. வடக்கு பொய்கை நல்லூர் 
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு) 
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி) 
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்) 
8. கோரக்பூர் (வட நாடு)


இவற்றில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். பொதிய மலை ஆனைமலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக்நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் என்ற இடத்திலுள்ளது. அங்குள்ள கோரக்கர் சமாதிக்கு சித்ரா பௌர்ணமியன்று பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி பௌர்ணமி நாளில் சமாதி கூடிய இவர் அன்றைய தினம் வழிபடுபவர்க்கு (வடக்கு பொய்கை நல்லூரில்) இன்றும் வரம்பல அருளும் பேரருளாளர்.


கோம்பைச்சித்தர்


முற்றும் துறந்தவர்களாக, ஆடைஅணியும் ஆர்வமில்லாதர்களாக ஆகாயம் போன்று எங்கும் பறந்து செல்லும் தன்மையுடையவர்களாக, பிள்ளைகளையும் பித்தர்களையும் பேய்களையும் போலக்கட்டுப்பாடில்லாமல், புவியில் திரிவார்கள் பூரண ஞானிகளாகிய “சிவன் முக்தர்கள்” என பகவான் சங்கரர் விவேக சூடாமணி என்னும் நூலில் கூறியுள்ளார். இந்த அருளுரையின்படி வாழ்வாங்கு வாழ்ந்து திகழ்ந்தவர் அருள் ஞானி கோம்பை சுவாமிகள்.


மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கோம்பை என்னும் ஊரில் சமதளவாய் என்பவர் ஜமீந்தாராக வாழ்ந்தவர். அவருக்கு மகனாகத் தோன்றியவரே வேலு தளவாய். இளமைப் பருவத்தில் இறைவன் இவர் முன் தோன்றி அருள்பாலிக்க, வேலு தளவாய் பந்த பாசம் என்னும் மாயையை விலக்கி லௌகீக வாழ்க்கையில் பற்றில்லாதவராக பரமஞானம் பெற்றார். கி.பி. 1865 ம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி) அருகே உள்ள வடசேரிக்கு வந்தருளினார்.


சித்தர் அம்சம் பெற்ற சுவாமிகள் நீராடும் வழக்கமுடையவர் அல்ல. அவரது உடலிலிருந்து துர்நாற்றம் வந்ததில்லை. எந்தக்காலக்கட்டத்திலும் ஆடையில்லாமலும் கைகளில் குப்பைக்கூளங்களையும் எச்சில் இலைகளையும் சுமந்து அலைவார். இருந்த இடத்திலிருந்து திடீரென மறைந்து விடுவதும், அதே சமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சி தருவதும் தமது உடலைப் பல்வேறு கண்டங்களாக பிரிப்பதும் அவற்றைச் சேர்ப்பதும் அவர் செய்த சித்து விளையாட்டு.
கி.பி. 1914ல் நாகர் கோயிலுக்கு வந்த திருவிதாங்கூர் மன்னர் (ஸ்ரீமூலம் திருநாள்) முன்னிலையில் கோம்பை சுவாமிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் அவரை வடசேரி சந்தையில் காவலில் வைத்தனர். ஆனால் காவல் துறைக் கட்டுப்பாட்டையும் மீறி மன்னர் முன் தோன்றினார். மன்னன் வணங்கி, புத்தாடை அணிவித்தார். அப்போதே சித்தர் ஆடையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு மறைந்து விட்டார். இதைக் கண்ட மக்கள் பெரும் வியப்பிலாழ்ந்தனர். இவர் பல அற்புதங்கள் செய்துள்ளார்.


தென்காசியைச் சேர்ந்த துறவி ஒருவர் நீண்ட காலமாக அனுபவித்து வந்த குன்மநோயை கொஞ்சம் மணலை அள்ளி அவர் வயிற்றில் தேய்த்ததன் மூலம் குணமடையச் செய்தார். இருந்த இடத்திலிருந்து திடீரென மறைந்து விடுவதும், அதே சமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சி தருவதும் தமது உடலைப் பல்வேறு கண்டங்களாகப் பிரிப்பதும் அவற்றைச் சேர்ப்பதும் அவர் செய்த சித்து விளையாட்டு. ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஸ்ரீநாராயணகுருசுவாமிகள் கோம்பை சுவாமிகளிடத்தில் அளவற்ற பக்தியும் பாசமும் கொண்டிருந்தார்கள்.


எல்லோருடைய வணக்கத்திற்கும் உரியவராக விளங்கிய சுவாமிகள் 18-2-1925 அன்று புதன்கிழமை இரவு சுமார் 8.00 மணிக்கு ஏகாதசி திதியில் அண்மையில் யாருமில்லாத சமயத்தில் தம் இகிலோக வாழ்வை நீத்து சமாதி அடைந்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் திரளாகக் கூடினர். சமாதிச்சடங்குகள் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கேரளாவில் ஆரண்முளையைச் சேர்ந்த தவத்திரு சுவாமி சுயம்பர்ணானந்தா ஈத்தா மொழி வந்து சேர்ந்தார். அவரது முன்னிலையில் மகாசமாதி சடங்குகள் சிறப்பாக நடந்தன. இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும், நாட்டின் பல பாகங்களிருந்தும் பக்தர்கள் அங்கு வந்து வணங்கி, அருள் பெற்றுச் செல்கின்றனர்.

 

 

இந்த வரலாற்று ஆய்வுக் குறிப்பில் உள்ள சித்தர் ஸ்ரீகாகபுசுண்டர் அருளிய “ஞானயோக திரட்டு” ஓலைச்சுவடி நூலின் சாராம்சத்தை எனது ஆய்வுக் குறிப்பின் கையெழுத்துப் பிரதியுடைய ஜெராக்ஸ் பகுதிகளை (முக்கிய ஆய்வு ரகசியங்கள்) இதனுடன் தனிப்பகுதிகளாக இணைத்தனுப்புகிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard