சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும் சதுக்க பூதம்--அக்னி ருத்ரனே!
மோசடி முனைவர் அ.பத்மாவதி
முசுகுந்தன் என்ற சோழ மன்னனுக்கு அசுரர்களால் ஏற்படும் இடையூற்றை ஒழிப்பதற்காக இந்திரனின் ஏவல்படி தேவருலகினின்றும் புகார் நகரம் வந்து அங்குள்ள சதுக்கத்தில் தங்கியிருந்த பூதமே சதுக்கப் பூதமாகும்.
இப்பூதத்தை இந்திரன் முசுகுந்த சோழனுக்கு அளித்ததற்குக் காரணம், ஒரு சமயம் இந்திரன் அசுரர்களோடு போர் புரியச் சென்றிருந்த போது அவன் பொருட்டு அமராவதி நகரைக்காவல் காத்தவன் முசுகுந்த சோழன். அதற்குக் கைம்மாறாக வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கென தேவர் கோமான் இந்திரன் பூதத்திற்கு ஏவலிட்டான் என்று கூறப்படுகிறது.
மருவூர்ப் பாக்கத்தையும் பட்டினப் பாக்கத்தையும் சேர்ந்த வீரர்கள், நாட்டில் வசியும் வளனும் சுரக்கவேண்டும் என்றும், வெந்திறல் மன்னவற்கு நேரும் துன்பங்களை ஒழிக்க வேண்டும் என்றும், கரிகால் சோழன் வடநாடு நோக்கிப் படை எடுத்துச் சென்ற போது அப்பூதத்தின் முன்னுள்ள முழுப்பலி பீடிகையில் தங்கள் தலையை அறுத்து வைத்து வேண்டினர் என்கிறது சிலப்பதிகாரம்.
புலிக்கணம் போன்ற வீரர்கள் கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்கென பூதச் சதுக்கத்தில் பலி செய்த ஓசை பெரிதாகக் கேட்டதை மணிமேகலையும் கூறுகிறது.
எனவே இந்த சதுக்கப் பூதம் மன்னவர்களுக்கு நேரும் துன்பத்தை எல்லாம் துடைத்து அவர்களுக்குப் போரில் வெற்றியைத் தேடித்தரும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளதை அறியலாம். அதுமட்டுமின்றி இத்தெய்வம் நீதி தெய்வமாகவும் விளங்கியதை சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்றன.
நீதி தெய்வமாகக் காட்சியளிக்கும் இத்தெய்வம் ஏன் பூதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது இவ்வாறு அழைக்கப்பட்டதற்கு சமய, சமுக, தத்துவ, வரலாற்றுப் பின்னணி இருத்தல் வேண்டுமல்லவா? இப்பூதம் பற்றிக் கூறும் சிலப்பதிகாரம்,
தவமறைந்தொழுகும் தன்மையிலாளர்
அவமறைந்தொழுகும் அவலப் பெண்டிர்
அறை போகமைச்சர் பிறர் மனை நயப்போர்
பொய்க்கரியாளர் புறங்கூற்றாளரென
கைக்கொள் பாசத்து கைப்படுவோரெனக்
காத நான்கும்கடுங்குரலெழுப்பிப்
பூதம் புடைத்துணும் பூதச் சதுக்கமும்1
என்கிறது. இந்த சதுக்க பூதமானது, பொய்த்துறவியர், தீய நெறியில் ஒழுகும் பெண்டிர், தீய எண்ணங்கள் கொண்ட அமைச்சர், பிறர் மனைவியை விரும்புவோர், பொய் சாட்சி கூறுவோர், புறங்கூறுவோர் இவர்களையெல்லாம் தண்டிக்கும், தன்மை வாய்ந்தது என்பதையே மேற்கூறிய புகார்க் காண்ட வரிகள் கூறுகின்றன.
மணிமேகலையிலும் புகார் நகரிலுள்ள இதே சதுக்கப் பூதம் பற்றிப் பேசப்படுகிறது. அத்துடன் அப்பூதத்தின் உருவ அமைதியும் கூறப்பட்டுள்ளது. அதாவது இப்பூதம் மடித்த செவ்வாயையும் வலிய பற்களையும் பாசக்கயிற்றைக் கையில் உடையது என்றும் நகரிலுள்ள நரகர்களைப் புடைத்து உண்ணும் தன்மையுடையது என்றும் கூறப்பட்டிருப்பதைக் காண்க. (மணி. 1:21--24)
புகாரில் சதுக்கப் பூதம் இருந்தது போலவே காஞ்சியிலும் இருந்தது. இச்சதுக்கம் இருந்த இடம் பற்றிக் கூறுகின்றபோது பூமலர்ச் சோலை, மாதவர் இடங்கள், மன்றம் பொதியில் ஆகிய இடங்களுக்கருகில் இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது. (மணி. 20: வரி 29)
தீயவர்களைத் தண்டிக்கும் சதுக்கப் பூதம் நீதியினின்றும் சிறிதும் வழுவாத தன்மையுடையது. சிலம்பில் பத்தினிப் பெண் ஒருத்தி பற்றி அறிவில்லா ஒருவன், அவள் கணவனிடம் பொய் கூறி அவளைத் துன்பத்திற்கு ஆளாக்கிய காரணத்தினால் அவன் சதுக்கப் பூதத்திடம் அகப்ப்ட்டுக் கொண்டபோது, அவன் தாய் பட்ட துயர் கண்டு பொறாத கோவலன் பூதத்திடம் சென்று "என்னுயிர் கொண்டு அவனுயிர் தா" எனக் கூறியபோது,
நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதியிழக்கும் பண்பீங்கில்லை
எனக்கூறி விடுகிறது பூதம்.
மணிமேகலையில், பார்ப்பினி ஒருத்தியைத் தவறான நோக்கில் ஒருவன் பார்த்த காரணத்திற்காகவே, அப்பெண் பூதத்திடம் முறையிடுகிறாள். அப்போது அப்பூதம், அப்பெண்ணானவள் பொய்க்கதைகளைக் கேட்டு, விழாக்களை விரும்பி வாழ்ந்ததால் இவ்வாறு நிகழ்ந்தது என்றும், இனிமேல் இவற்றைத் தவிர்த்து வாழும்படி வழியும் கூறுகிறது காஞ்சி நகர்ப்பூதம். 2
புலிக்கணம் போன்ற வீரர்கள் தங்கள் மன்னவனுக்கு வெற்றி உண்டாகும் பொருட்டு மிகுந்த ஆரவாரத்துடன் சதுக்கப் பூதத்திற்கு பலி கொடுத்த செய்தியினின்றும் அப்பூதம் வெற்றிதரும் தெய்வமாகவும் கொண்டாடப்பட்டதை மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கூறுகின்றன.
இப்பூதம் நிற்கும் இடம் சதுக்கம் என்று அழைக்கப்பட்டது. இதனை நாற்சந்தியும் கூடுமிடம் என்கிறார் உ.வே.சா. பழைய உரையும் அவ்வாறே கூறுகிறது. எனவே நாற்சந்தியில் நின்று கொண்டு தீயவர்களைத் தண்டிக்கும் பண்புடையது சதுக்கப்பூதம் எனக் கூறப்பட்டிருப்பது தெரிகிறது.
ஆனால் இவ்விரு இலக்கியங்களிலும் கூறப்படும் நீதி தெய்வம் என்ற தன்மையுடன் கூடிய இக்கடவுளை, இன்றைய வழக்கில் நாம் எங்கும் காண முடியவில்லை, என்றாலும் காவல் தெய்வமாக சேத்ரபாலர் என்ற தெய்வம் மிகவும் புகழ் பெற்று விளங்கியதை சோழர் பாண்டியர் காலங்களில் காண முடிகிறது. இத்தெய்வம் வாஸ்து சாஸ்திர முறைப்படி ஊரின் தென்கிழக்கு மூலையில் ஆலயம் அமைத்து வழிபடப்படும். பூம்புகாரில் மண்ணுள் புதைந்து கிடந்த இவ்வுருவத்தைத் தான் தமிழ், வரலாறு ஆகியவற்றில் புலமை படைத்த ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் சதுக்கப் பூதம் என்று கூறினார்கள். 3
பதிற்றுப் பத்தில்
சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திலும் பதிற்றுப் பத்தின் ஒன்பதாம் பத்தியிலும், இளஞ்சேரலிரும்பொறை என்ற சேர மன்னன், சதுக்க பூதரை வஞ்சியுள் தந்ததாகக் கூறப்பட்டிருக்கிறான். வஞ்சியுள் சதுக்கப் பூதம் வருவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பதால் இது தமிழ் நாட்டிற்கு உரிய தெய்வம் இல்லையா? வெளியிலிருந்து வந்தவரா என்ற கேள்வி எழுகிறது. இப்பூதம் புகார், காஞ்சி நகர்களில் மட்டுமின்றி வஞ்சியுள்ளும் இருந்தது என்பதற்கு பதிற்றுப் பத்து தவிர மற்றோர் சான்றும் உள்ளது. "கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூத நாயனார்"--என்றொரு புலவர் வாழ்ந்ததைப் புறநானூற்றுப் பாடலொன்றால் அறியலாம். கருவூரே வஞ்சி என்பதை அறிஞர்கள் அறிவர்.
பிராம்மண நூல்களில்
பிராம்மண நூல்களாகிய அய்த்ரேய பிராம்மணமும், பஞ்சவிம்ச பிராம்மணமும், சதபத பிராம்மணமும் தவறு செய்த பிரஜாபதியைத் தண்டிப்பதற்கு தேவர்கள் ருத்ரனை நாடியதாகவும், ருத்ரன் பூதவுரு எடுத்துப் பிரஜாபதியைத் தண்டித்ததாகவும் கூறுகின்றன. இந்நூல்கள் எழுந்த கால கட்டத்தில் ருத்ரன் கொடியவர்களைத் தண்டிக்கத்தக்க கடவுளாக விளங்கினான். அதுபோல காக்கும் கடவுளாகவும் வணங்கப்பட்டிருக்கிறான். எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பதற்கும் அக்கால மக்கள் ருத்ரனை நாடினர். அதர்வ வேதமக்கள் ருத்ரனைப் பார்த்து, "உன் வஜ்ராயுதத்தால் பூதங்களை நசுக்கு" என வேண்டினர். பூதங்களை நசுக்கி, அடக்கி அவற்றிற்குத் தலைவனாக விளங்கினான் என்பதால் ருத்ரன், "பூதாநாமதிபதி" என்று, அதாவது பூதங்களுக்கெல்லாம் அதிபதி என்று அழைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் குற்றம் செய்த கொடியவர்களைத் தண்டிக்கும் ருத்ரன் பூதவுரு எடுத்துத் தண்டித்தான் என பிராம்மண நூல்கள் கூறுகின்றன என்று கொள்ளலாம்.
ருத்ரனின் இருப்பிடம்....
வேத நூல்கள் ருத்ரனின் இருப்பிடமாம் வழித்தடங்கள், சாலைகள், மலையடிவாரங்கள், நீர் நிலைகள் ஆகிய இடங்களைக் கூறுகின்றன. ஆனால் பிராம்மண நூல்களோ ருத்ரனைத் தீய சக்தியாக வர்ணித்து அவனுக்கு பலி கொடுக்கும்போது சாலைகளிலும் குறுக்குச் சாலைகளிலும் கொடுக்க வேண்டும் எனக் கூறுகின்றன. பிராம்மண நூல்களுக்குப் பின்னர் எழுந்த உபநிஷதங்களில் ருத்ரன் மிகவும் சிறப்புடன் போற்றப்படும் தெய்வமாக உயர்த்தப் பட்டிருப்பதை அறியலாம். குடிமல்லத்திலும் இயற்கை எழில் கொஞ்சும் சுவர்ணமுகி ஆற்றங்கரையில் மரங்களும், செடி கொடிகளும் அமைந்துள்ள பகுதியிலேயே அமைந்திருக்கிறது.
சதுக்கப் பூதம்...வேத நூல்களில்....
வேத நூல்களில் மிகவும் சக்தி வாய்ந்த, பூதவுருக் கொண்டு குற்றவாளிகளைத் தண்டிக்கும் குணமுள்ள ருத்ரனாகவும், பிராம்மணங்களின் காலங்களில் குறுக்குச் சாலைகளில் பலி கொடுக்கப்படும் தன்மையுடன் கூடிய அச்சம் தரும் ருத்ரனாகவும், உபநிஷத நூல்கள் எழுந்த காலங்களில் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டும், நீதிக்கு அதிபதி என்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட ருத்ரனாகவும் விளங்கியதைக் காணலாம். எனவே உபநிஷத நூல்கள் எழுந்த காலத்திற்கு முன்னர் உள்ள ருத்ரனே சிலம்பிலும் மணிமேகலையிலும் பாராட்டப்பட்டவள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
யக்சா---சாதம்
ரிக் வேதத்தில் யக்சர்களாகிய பூதங்களுக்கு யக்சா--சாதம் என்ற சதுர வடிவ மேடைக்கோயில் மரத்தடியில் எடுக்கப்பட்டிருந்த செய்தி உள்ளது. இதில் லிங்கம் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பூதங்களுக்குத் தலைவனாகிய ருத்ரனே லிங்க வடிவில் யக்சா--சாதம் எனப்படுகின்ற சதுர வடிவ மேடைக்கோயிலில் அதாவது சதுக்கத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டிருக்கிறான்.4
சிற்பம் மற்றும் நாணயங்களில்........
கி.மு. 2--ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1--ஆம் நூற்றாண்டு வரை உள்ள மதுரா சிற்பங்களில் மரத்தினடியில் உள்ள சதுர வடிவக் கோயிலில் லிங்கங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தக்ச சீலம், உஜ்ஜயினி போன்ற இடங்களில் கிடைத்துள்ள நாணயங்களிலும் லிங்கங்கள் காணப்படுகின்றன. அந்த லிங்கங்கள் மரத்தினடியில் உயரமான சதுர வடிவிலுள்ள திறந்தவெளியாக உள்ள மேடையில் வேலியின் நடுவே காணப்படுகின்றன. இந்நாணயங்களின் காலம் கி.மு. மூன்று, இரண்டாம் நூற்றாண்டுகளாகும் என்று கருத்துத் தெரிவிக்கிறார் I.K. சர்மா அவர்கள் தமது மேற்கண்ட நூலில். எனவே மரத்தினடியில் திறந்த வெளியில் சதுர வடிவ மேடையில் ருத்ரனை லிங்கமாக அமைத்து வழிபடப் பட்டது பரவலான வழக்கமாகவே இருந்திருக்கிறது.
குடிமல்லம் திறந்த வெளியில்....
திருப்பதிக்கு மிக அருகில் சுவர்ணமுகி நதிக்கரையில் உள்ள குடிமல்லம் என்ற ஊரிலுள்ள பரசு ராமேஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கம் தனித்தன்மை வாய்ந்தது. திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த இந்த லிங்கத்தை மையமாகக் கொண்டு பிற்காலத்தில் எடுக்கப்பட்ட கோயிலே பரசுராமேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்த லிங்கமானது சதுரமாக அமைக்கப்பட்ட கல்வேலியின் நடுவே அமைந்துள்ளது. அந்த லிங்கம் சுமார் 8,9 அடி உயரமுடையது. அந்த லிங்கத்தின் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு உருவம் அற்புதமாகத் திகழ்கின்றது. அவ்வுருவம் தனது இடது கையில் தண்ணீர்ப்பானையுடன் காணப்படுகிறது. இடது தோளில் நீண்ட தண்டின் நுனியில் பொருத்தப்பட்ட கோடரியைச் சாத்தியும், வலது கையில் தலைகீழாகத் தொங்க விடப்பட்ட ஆட்டுடனும் நடை போடுகிறது அந்த உருவம். ருத்ரன் விசஸ்ய பாத்திரமாகியத் தண்ணீர்ப் பானையை வைத்திருப்பது பற்றிக் கூறுகிறது ரிக்வேதம்.
வேதங்களும் புராணங்களும் கூறுகின்ற வகையில் இந்த உருவம் ஊமத்தம்பூவுடனும் நிர்வாணக் கோலத்துடனும் காணப்படுகிறது. யூபத்தம்பத்திலிருந்து தோன்றியவன் அக்னிருத்ரன் என வேதங்கள் கூறுகின்றன. அக்னியிலிருந்து தோண்றியவன் ருத்ரன் என்கிறது அதர்வ வேதம். அது போலவே குடிமல்ல ருத்ரன் பலி ஆட்டுடனும் விசஸ்ய பாத்திரத்தினுடனும் லிங்கத்திலிருந்து தோன்றுகிறான்.
குடிமல்லம்...அகழ்வாராய்ச்சியில்....
குடிமல்லம் லிங்கம் அமைந்திருக்கும் பகுதியில் மத்திய தொல்லியல் துறையினரால் திரு I.K. சர்மா அவர்கள் தலைமையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ருத்ரனின் உருவம் பொறிக்கப்பட்ட இப்பிரம்மாண்டமான லிங்கமானது, யக்சா--சாதம் எனக் கூறப்படுகின்ற சதுர வடிவ மேடைக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்தது என்ற உண்மையை அங்கு நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சி வெளிக் கொணர்ந்தது. இந்த யக்சா--சாதமும் நாம் முன்னர் குறிப்பிட்டபடி மேற்கூரையின்றி திறந்த வெளியுடன் கூடியதாகவே அமைக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் தான் லிங்கத்தை மையமாகக் கொண்டதொரு கோயில் கட்டப்பட்டது. இந்த் அகழ்வாராய்ச்சியில் இந்த லிங்கத்தின் காலம் கி.மு. 3,2-ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.5
படைத்தலைவன் ருத்ரன்....
புலிக்கணத்தனோர் பூதசதுக்கத்துக்
கொடித்தேர் வேந்தன் கொற்றங் கொள்கென
இடிக்குரல் முழக்கத் திடும்பலியோதையும்
என புலிக்கணம் போன்ற வீரர்கள் தங்கள் மன்னனின் வெற்றிக்காக இப்பூதத்திற்கு பலியிடுகிற காட்சியால் இத்தெய்வம் நீதிக்கடவுள் மட்டுமல்ல, வெற்றிக் கடவுளாகவும் திகழ்ந்ததை மணிமேகலை சுட்டிக்காட்டுகிறது. இச்செய்தியோடு மீண்டும் குடிமல்லம் ருத்ரனை ஒப்பிட்டுப் பார்ப்போம். குடிமல்லம் என்ற ஊரின் பெயரே பொருள் பொதிந்த ஒன்றாகத் திகழ்கிறது.
குடி--என்றால்---கோயில் என்று பொருள்
மல்லம்--என்பது--மல்லன் என்பதன் திரிபு
மல்லன் --என்றால்--வீரன்; போர் புரிபவன் என்று பொருள்
அவன் தோள்களில் தாங்கிய பரசு என்ற கோடரி அதை மெய்ப்பிக்கின்றது.
சதருத்ரீய பிராம்மணம்--ருத்ரனைப் படைகளின் தளபதி, வீரர்களின் தலைவன், முற்றுகையிடுபவன், அழிப்பவன், கொள்ளையடிப்பவர்களின் தெய்வம், என்றெல்லாம் கூறுகிறது. 5
எனவே தான் மணிமேகலையில் கூறியவாறு, வெற்றிக்காக, வெற்றி வேண்டும் என்று பலி கொடுத்து ருத்ரனை வீரர்கள் வணங்கினர் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
குடிமல்லம் அகழ்வாராய்ச்சியின் போது அங்கு ஆடு, பன்றி ஆகிய மிருகங்களின் எலும்புகள் கிடைத்துள்ளன. அந்த எலும்புகள் எரிக்கப்படாதவை என பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதால் மணிமேகலை கூறுவது போன்று பலி கொடுக்கப்பட்ட் மிருகங்களின் எலும்புகளே அவை எனக் கருத இடமளிக்கிறது.
அதர்வ வேத மக்கள், "பூதங்களை நசுக்கு", என வேண்டினர் என்று பார்த்தோம் பிராம்மணங்களில் பூதவுரு எடுத்து ருத்ரன் தண்டனை வழங்கினான் என்றும் பார்த்தோம். அதுப்போல இங்குள்ள ருத்ரன் ஒரு பூதத்தின் இரு தோள்களிலும்தன் இரு பாதங்களையும் பதித்து ஊன்றியவாறு நிற்கிறான். சுமை தாங்க மாட்டாத பூதம் தன் தோள்கள் நெரிய, தோள்களை ஒட்டிய தலையுடனும் பிதுங்கிய விழிகளுடனும் நசுக்கப்பட்ட நிலையினைத் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகிறது அப்பூதத்தின் சிற்பம். பூதங்களை எல்லாம் அடிபணிய வைத்து பூதானாமதிபதி எனக் கூறப்படுகின்ற ருத்ரன் நிற்கும் இந்த இடம் யக்சா--சாதமே என்பது உறுதியாகிறது.
யக்சன் -என்றால்--பூதம்
சாதம் --என்றால் உறைவிடமாகிய சதுக்கம்.
எனவே யக்சா சாதமே--பூதச் சதுக்கம் ஆகும்.
கண்ணகியும் ருத்ரனும்
கண்ணகி பாண்டிய மன்னன் அவையில் வழக்குரைத்து, அவன் இறந்த பின் மன்னனை மட்டுமல்ல மதுரையையும் அழிப்பேன் என சூளுரைக்கும்போது, அவள் முன்னர் ஒரு தெய்வம் தோன்றி மதுரையை எரிப்பதற்கு ஒரு ஏவல் முன்பே உள்ளது என்று கூறுகிறது.
அத்தெய்வம்--நீல நிறமானது.
சிவந்த சடைமுடியை உடையது.
வெண்மை நிறப்பற்களை உடையது.
எனக்கூறுகிறர் இளங்கோ. இப்போது நமக்கு வெளிப்படையாகத் தெரிகிறது அத்தெய்வம் யாரென்று. சிவன் என்றும் ருத்ரன் என்றும் கூறப்படும் தெய்வத்தின் உருவமே அவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது. சிவன் என்றால் காக்கும் தன்மையை உடையவன் என்று பொருள். ருத்ரன் என்றால் அழிக்கும் தன்மையை உடையவன் என்று பொருள். வேத உபநிஷதங்களில் இத்தன்மைகள், 'பவ-சர்வ' என்று கூறப்படுகிறது. வேதகால மக்கள் ருத்ரனுக்கு அஞ்சினர். எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்று, எதிரியின் உணவை அழியச் செய், என்றெல்லாம் வேண்டிய அவர்களைக் காப்பதால் சிவன் --என்றும் எதிரிகளை அழிப்பதால் ருத்ரன் என்றும் வர்ணிக்கப்பட்டான்.
எரிக்க வந்தவன் என்றாலும் அக்னி கேட்கிறான் கண்ணகியிடம், 'யார் பிழைப்பார் ஈங்கு' என்று, அதாவது யார் யார் பிழைக்க வேண்டும் எனக் கேட்கிறான். கண்ணகி கூறுகிறார்.
"பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டு
தீத்திறத்தோர் பக்கமே சேர்க" --என்று"
அது போல மேற்கூறிய நல்லவர்களை விட்டுவிட்டுக் கெட்டவர்களையே அழிக்கத் துணிகிறான். காரணம் அவன் சதுக்கத்தில் பூதமாக நின்று தீயவர்களை மட்டுமே தண்டிக்கும் இயல்புடையவன் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
சேர, சோழர் தலை நகர்களிலும், காஞ்சியிலும் சதுக்க பூதம் இருந்தது பற்றி நேரிடையாகவே கூறப்பட்டிருக்க பாண்டியன் தலைநகரம் மதுரையில் சதுக்க பூதம் இருந்ததை நேரிடையாகக் கூறாவிட்டாலும் கண்ணகியின் கட்டளைப்படி தீயவர்களைத் தண்டித்த அக்னியின் செயலும், உருவ அமைதியும், மதுரையிலும் சதுக்கபூதம் வழிபடப்பட்டு வந்தது என்பதும், அவன் சிவனின் ஒரு அம்சமாகிய அக்னி ருத்ரன் என்பதும் உறுதிப்படுகிறது.
முசுகுந்தச் சோழன் இந்திரனுக்காக அமராவதி நகரைக் காத்ததால் இந்திரன் பூதத்தை சோழனுக்குக் காவலாக அனுப்பினான் என்று பார்த்தோம். அது போல வஞ்சிக்காண்டத்திலும் பதிற்றுப் பத்து ஒன்பதாம் பத்திலும் இளஞ்சேரலிரும்பொறை என்ற சேர மன்னன் சதுக்க பூதரை வஞ்சியுள் தந்ததாகக் கூறப்பட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது. எனவே சதுக்க பூதம் அமராவதி நகரிலிருந்து தமிழகத்திற்கு வந்தது என்று கொள்ள இடமளிக்கிறது. இந்த நகர் வேறெதுவுமல்ல, ஆந்திர மாநிலத்தின் மிகச் சிறந்த பெளத்த மையமாகிய அமராவதி நகரேயாகும். எனவே சதுக்க பூதம் என்ற ருத்ரன் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டவர் என்பது தெளிவாகிறது. எனவே தமிழகத்தில் ருத்ரன் பூத வடிவில் நுழைவதற்கு முன்பே ஆந்திராவிலுள்ள பெளத்த நகரமாகிய அமராவதியில் பெளத்தர்களால் அறிமுகப் படுத்தப்பட்டு விட்டான் என்பது தெரிகிறது. திரு ஜே. எம். சோமசுந்தரம் பிள்ளையவர்களால் சதுக்கப் பூதம் என்ற தெய்வத்தை சேத்ர பாலருடன் இனங்கண்டதைக் குறிப்பிட்டோம். ஊர்க்காவல் என்ற முறையிலும், உருவ அமைதியிலும், சேத்ர பாலருடன், இனங்கண்டது மிகச் சரியான கருத்தேயாகும். சேத்ர பாலரை சில கல்வெட்டுகள் 'வடுகப் பிள்ளையார்' என்றே கூறுகின்றன. இவர் ஆந்திரமாநில அமராவதிலிருந்து வந்தவர் என்ற கருத்தும் வடுகப் பிள்ளையார் என்ற பெயரும் ஒத்து வருகின்றன. திருவள்ளூர் அருகேயுள்ள திருக்காரிக்கரையிலுள்ள சேத்ரபாலர் வடுகப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.
சேத்ர பாலரின் மகுடம் தீச்சுவாலையால் ஆன மகுடமாகும். மடித்த உதடுகளையும் கோரைப்பற்களையும் உடையவர். அக்னியிலிருந்து தோன்றிய ருத்ரனின் அம்சமானவர் என்பதால் தீச்சுவாலை மகுட மணிந்திருப்பவராக இவரது உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அக்னி வடிவமாக வந்த ருத்ரன், சேத்ரபாலர் அல்லது பைரவர் சதுக்க பூதத்தின் உருவ அமைதியிலேயே கூறுகிறது சிலப்பதிகாரம். பைரவரின் உருவமும் கையில் பாசக்கயிற்றைத் தாங்கியிருக்கும். அது போல சதுக்கப் பூதமும் பாசக்கயிற்றை உடையது என்பதைச் சிலம்பு தெளிவாக்கியிருக்கிறது.
எனவே ருத்ரனே அக்னி தேவன், சதுக்க பூதமே ருத்ரன் என்பது இங்கு பெறப்படுகிறது. இன்றும் சிவன் கோயில்களில் கபோதத்தில் பூதவரிகள் அமைக்கப்பட்டிருப்பதையும் திருச்சுற்றில் வடகிழக்கு மூலையில் பைரவர் சிலை அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். ருத்ரன் பூதானாம் அதிபதியல்லவா! (பைரவரும் சேத்ரபாலரும் ஒரே உருவ அமைதி உடையவரே) பைரவர் நாயுடன் காட்சியளிப்பார், சேத்ரபாலர் அப்படியல்லர். இந்த ஒரே வேறுபாடுதான் இவர்களிடையே உள்ளது.
இலங்கையில்.... இலங்கையில் பொது இடங்களில் உள்ள சதுக்கங்கள் இந்தியாவிலுள்ள பொது சதுக்கங்களைப் போலக் காணப்படுகிறது. பூம்புகாரில் உள்ள பூதச் சதுக்கம் போன்று அங்கு நாக சதுக்கம் என்ற பெயரில் பொது இடத்திலோ உள்ள சதுக்கங்கள் அழைக்கப்படுகின்றன.7
பெளத்த இலக்கியங்களில் ருத்ரன் போற்றப்படக் காரணம் என்ன?
ருத்ரன் ஆரியர்களுக்கும் வேத யாகங்களுக்கும் எதிரிதான். ருத்ரனை ரிக்வேதம் வேதநிந்தஹா என்கிறது. யாகத்தை அழிப்பவன் ருத்ரன். பிரஜாபதியைத் தண்டிக்க ஆரியர்கள் ருத்ரனை அனுப்புகின்றனர். குற்றவாளியைத் தண்டிக்கச் செல்லும் ருத்ரன் பூதவுரு எடுத்துச் சென்றான் என்கிறது ரிக்வேதம்.
பூதவுருவெடுத்த ருத்ரனை--பெளத்த நூல்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் போற்றுவது ஏன் என்ற வினா எழும்.
ஒரு மதம் தான் புதிதாக ஒரு பகுதியில் வேரூன்றுகிறபோது அப்பகுதியில் ஏற்கெனவே வழிபடப்பட்டு வந்த தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் தன்னுள் கிரகித்துக் கொள்ளும். அவ்வாறு கிரகித்துக் கொள்கிறபோது அத்தெய்வங்கள் தங்கள் மதக்கடவுள்களுக்கு அடுத்த நிலையில் (Pantheon Deity) வைத்து வணங்கப்படும்.
பெளத்தம் தோன்றி வளர்ந்து ஆதிக்க நிலையை அடைந்த போது புகழ்பெற்ற வேதக்கடவுளாகிய இந்திரனை தங்கள் மதக்கடவுளாக்கிக் கொண்டது. வட இந்திய மதுராவில் இந்திரன் புத்தரை வழிபடுவதாக அமைந்துள்ள சிற்பங்கள் உள்ளன. பெளத்தக் குகைக் கோயில்களில், இந்திரன் புத்தரைக் காண யானையின் மீது அமர்ந்து வரும் காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன். பெளத்தம் பிற மதங்களை வீழ்த்தி செல்வாக்குப் பெற்றிருந்தபோது இவ்வாறு இந்திரன் பெளத்த மதத்தினுள் கொண்டு வரப்பட்டிருந்ததின் காரணமாகத் தான் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழா பற்றிச் சிறப்பாகக் கூறின. பெளத்தம் வேதகால ஆரியர்களின் புகழ் பெற்ற தெய்வமாகிய இந்திரனை எடுத்துக் கொண்டதைப்போல, ஆரியரல்லாத பழங்குடியினரின் தெய்வமாகிய அச்சம் தரும் ருத்ரனையும் தங்கள் மதத்தின் துணை நிலைக்கடவுளாக பெளத்தம் ஏற்றுக் கொன்டிருந்தது. அதனால் பூதவுருவிலுள்ள ருத்ரனை யக்சா--சாதத்தில் அதாவது சதுக்கத்தில் நிற்க வைத்தனர். ருத்ரன் -- படைத்தலைவன். வெற்றி வீரன், வணங்குபவர்களைக்
காப்பவன் குற்றம் செய்பவர்களைத் தண்டிப்பவன் என்றெல்லாம் மணிமேகலையிலும் சிலம்பிலும் கூறப்படுவதற்குக் காரணம் மேற்கூறிய செய்திகள்தான்.
எனவே சதுக்க பூதம் என்பது ரிக்வேதம் உள்ளிட்ட நான்கு வேதங்களிலும் ஆரியரல்லாத இனக்குழு மக்களின் கடவுளாக விளங்கி, பின்னர் உபநிஷத காலங்களில் வேத ஆரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்ட ருத்ரசிவனே--என்பது தெளிவாகிறது. வேத ஆரியர்களை எதிர்த்துத் தோன்றிய பெளத்தம்--பிற மதங்களின் செல்வாக்கினைக் குறைத்துத் தான் மேலோங்கும்போது அம்மதங்களில் போற்றப்பட்ட கடவுள்களைத் தங்கள் மதத்தில் இணைத்துக் கொள்ளும் பணிகளைச் செய்திருக்கிறது. அவ்வாறு தான் ஆரிய இனக்குழுக்கடவுள் இந்திரனையும், ஆரியரல்லாத இனக்குழுக்கடவுள் ருத்ரனையும் தங்கள் மதத்தில் இணைத்துக் கொண்டு மிக்க செல்வாக்குடன் வளர்ந்தது பெளத்தம். அச்செல்வாக்கின் வளர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட காப்பியங்கள் தாம் மணிமேகலையும் சிலப்பதிகாரமும்.
பெளத்தச் செல்வாக்கின் காரணமாக அமைந்த பெளத்தராட்சியில் சோழநாட்டு பெளத்த மையங்களாகிய பூதலூரும், பூதமங்கலமும் பூதத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. பெளத்தராட்சியில் தனி மனித ஒழுக்கத்தையும் நேர்மையையும், அரசியல் நீதியையும் சட்டதிட்டங்களையும் செவ்வனே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் கொள்கையைப் பின்பற்றுவதற்கு வேதங்களில் கூறப்பட்ட அக்னி ருத்ரனை சதுக்கத்தில் நிறுத்தினர். சதுக்க பூதம் நாட்டின் மொத்த நலனிலும் அரசர்க்கு உறுதுணையாக நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க உதவிற்று எனில் அது மிகையன்று.
அடிக்குறிப்புகள்
1. சிலப்பதிகாரம்--புகார்க்காண்டம் வரி. 130-137
2. மணிமேகலை 20: 50--56
3. J.M. Somasundaram--A History of Tamil Literature with texts and translations--(1967)
4. I.K. Sharma--The Development of early Art and Architecture (1982)
5. Ibid
6. N.N. Bhattacharya--A History of Tantric Religion