உலகப் பெருங்காப்பியங்களுள் சிறந்த ஒன்றாகத் திகழ்வது மகாபாரதம் ஆகும். இவை “தமிழ்நாட்டில் பாரதம் மட்டுமே புனித நூலாக மதிக்கப்பெற்று உலகறிந்த நூலாகப் வழங்கப்பெறுகிறது”1 என்று எம்.சீனிவாச அய்யங்கார் சுட்டுவார். இக்காப்பியம் மனிதன் வாழ்க்கையோடு ஒன்றி நிற்கின்றன. அவை நீதிக்களஞ்சியம், மெய்ப்பொருட் சுரங்கம், உயிர்க்கும் உலகியலுக்கும் வழிகாட்டும் பனுவல், வீரர்கள், வீரப்பெண்டிர்களின் வரலாற்றுநூல், இந்தியாவிற்கேயன்றி எல்லா நாட்டிற்கும் வழிகாட்டத் தக்க காப்பியம்; சமுதாய நீதிகளில் தன்னகத்தே கொண்டது என எழுத்தாளர்களாலும் மக்களாலும் போற்றி வணங்கப் பெறுவதை அறிகின்றோம்.
“அறம், பொருள், இன்பம், வீடுகளைப் பற்றி இதில் உள்ளது தான் மற்றதிலும் இருக்கின்றது - இதில் இல்லாதது ஓரிடத்திலும் இல்லை”2 என்ற வியாசரின் கூற்றும் நிலைத்ததாகும். தாவரங்கள், காடுகள், கடல்கள், நதிகள் பற்றியும், உலக மக்களைச் சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் இக்காப்பியத்தின் மூலம் விலகும் என்று கூறுவர். இக்காப்பியத்தில் முதலில் பாண்டவர்களின் முன்னோர்களைப் பற்றி குறிப்பிட்டாலும் பிற்பகுதில் மிகுதியாகப் பாண்டவர்களைப் பற்றியே பேசப்படுகிறது. அப்படிப்பட்ட பாண்டவர்களின் பிறப்பு, உறவுமுறை, நட்சத்திரம், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மகாபாரதத்தில் வரும் பாண்டு மன்னனின் மனைவிகளான குந்தி, மாத்தி, இவர்களுக்கு பிறந்தவர்களே பாண்டவர்கள். அவர்களைப் பற்றி பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
பாண்டு / குந்தி ----> தர்மன், பீமன். அர்ச்சுனன்
பாண்டு / மாத்திரி ----> நகுலன், சகாதேவன்
குந்தி: பாண்டுவின் மனைவி. கர்ணணுக்கும் (கன்னன்) பாண்டவர்க்குத் தாய். துர்வாசமுனிவர் அருளிய மந்திரத்தைப் பயன்படுத்திக் குழந்தைகளைப் பெற்றாள்.
மாத்திரி: பாண்டுவின் மனைவி. சல்லியனின் தங்கை. நகுலன், சகாதேவனைப் பெற்றவள். பாண்டு இறந்தமையினால் உடன்கட்டை ஏறினாள்.
பாண்டு: அம்பாலிகை வியாசர் தொடர்பால் பிறந்தவன். பாண்டவர்களின் தந்தை ஆவர்.
பண்டவர் ஐவர் – இவர்களின் மூத்தவனான தர்மனை ஆலமரத்திற்கு உவமைப்படுத்தலாம்.
1. தர்மதேவன் - தர்மன் (யுதிஷ்டிரன்)-தர்மமே உருக்கொண்டவன் (ஆலமரம்).
2. வாயு பகவான் - பீமன் (கிளைகள்)
3. இந்திரன் - அர்ச்சுனன் (அடிமரம்)
4. அஸ்வனி தேவர்கள் - நகுலன், சகாதேவன் (மரத்தின் இலைகள்)
தர்மன் (யுதிஷ்டிரன்)
குந்தி பருவக்காலம் வந்தபொழுது தூய்மையான தண்ணிரில் நீராடி, வெண்ணிற ஆடையை அணிந்துக்கொண்டாள்; அப்பொழுது அறக்கடவுளான தர்மதேவனை நினைத்து ஆவலுடன் கூடிப் புத்திரப் பேற்றைக் கொடுத்ததன் மூலம் அழகான மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள் அவன் தான் தர்மன்.
“சூரியன் துவாதிசியில் இருந்த நேரத்தில் நல்ல அழகான பூரண திதியாகிய பஞ்சமியில், கேட்டை நச்சத்திரத்தில் சந்திரனோடு சர்ந்திருக்கையில்; ‘அபிஜித்து’ என்கிறது, சொல்லப்பட்ட எட்டாவது முகூர்த்தத்தில் முதல் மகனாக தர்மன் பிறக்கிறான்”3 என்று இவன் பொறுமையின் வடிவம், சூதாடியதால் அனைத்தும் இழந்தவன், துரோணன் காதுபட அசுவத்தாமன் இறந்தான் என்றுரைத்தவன். சல்லியனை மாய்த்தவன். பாண்டவர்களின் குடும்பத்தலைவன். “அறத்தின் மைந்தன்” (2:386) “தனத்தான் மிஞ்சிய தருமன்” (2:7) “மெய்ப்பு இறப்பற்ற நீதித் தருமன்” (2:177) “வேள்வியால் மிக்கோன்” (4:12) தர்மவானாக விளங்கியதாலும், அதர்மத்தை நாடமாட்டான், அறநெறிபிறழாமல் வாழ்ந்ததால் ‘தர்மன்’ என்று அழைத்தனர்.
பீமன்
குந்தி ‘எனக்குப் பலமுள்ள மகன் ஒருவன் தங்களின் மூலம் பிறக்க வேண்டும்’ என்று கூறினாள்;. ‘அவ்வாறே ஆகட்டும்’ என்று கூறிய வாயு பகவான் அவளை அக்கணமே அணைத்துக் தழுவிக் கொண்டான். அதன் பயனாய் குந்தி கர்ப்பம் அடைந்தாள். பின்னால் வாயு பகவான் தேவலோகம் சென்றான். பலம் மிக்க மகனாக ஒருவனைக் குந்தி பெற்றெடுத்தாள். “சிம்மத்தில் குரு, துலாத்தில் சூரியனுடன் மகா நட்சத்திரத்தில் சூரியனும் சேர்ந்தபோது சுபமான திரயோதசியில் பிதுர்க்களின் முகூர்த்தத்தில் பிறந்தான் அவனே பீமன். அப்பொழுது வானத்தில் இருந்து ஒலித்த குரல் ‘இவன் பலசாலி எல்லோரிலும் மேம்பட்டவன்’ என்று கூறி மறைந்தது. எல்லோருக்கும் பயப்படும் படியான தோற்றத்துடன் பிறந்ததால் பீமன்”4 என அழைத்தார்கள்.
பதினோராயிரம் யானைகளின் பலமுடையவன். பாரதப் போரில் துச்சாதனை வீழ்த்தியவன். இறுதி நாளில் கதைப் போரில் துரியோதனை வென்றவன். “வெஞ்சின வீமன்” (1: 321), “கறுத்தவர் உயிர் கவர் காளை” (1: 433), பீமன் பிறந்த நாளில் துரியோதனன் பிறந்தான். பின்னர் தொடர்ந்து தினம் ஒருவராக நூறு குழந்தைகள் பிறந்தார்கள் என்று அறிய முடிகிறது.
அர்ச்சுனன்
பாண்டு தவத்தின் மூலம் இந்திரனை அழைத்தான் மறுகனேமே தோன்றி ‘பாண்டு உனக்கு மூன்று உலகங்களிலும் புகழ்பெறப் போகிற புதல்வன் ஒருவனைத் தரப்போகிறேன், அவன் தன் சுற்றத்தாரை மகிழ்விப்பான்; பகைவர்களை அழிப்பான். எல்லோரையும் விட மேம்பட்டு விளங்குவான்’ என்று பாண்டுவிடம் கூறினான். இதனைப் பாண்டு தன் மனைவியான குந்தியிடம் கூறினான். துர்வாசரின் மந்திர பலத்தினால் அவளும் இந்திரனை அழைத்தாள். உடனே இந்திரன் குந்தியுடன் புணர்ந்து அழகான ஆண் மகனான அர்ச்சுனனைப் பெற்றெடுக்கிறாள். கண்ணனின் தோழன்; பாரதவெற்றிக்கு அடிப்படையானவன் விசயன், பார்த்தன், பர்குணன், சவ்வியாசாசி, கிரிடி, கரியோன், தனஞ்சயன், சுவேதவாகனன், அருச்சுனன், பாகசாதனி என்ற பத்துப் பெயர்களை உடையவன். “பக்திக்கு வரம்பாகிய பார்த்தன்” (1: 643) “விசைய வெம்பகழி விசயன்” (2: 45) எனப் பெயர்க்கொண்டவன்.
“பூர நட்சத்திரமும், உத்திர நட்சத்திரமும் சேர்ந்த பகல் பொழுதில் பங்குனி மாதத்தில் அவன் பிறந்தான். அப்போழுது அசரீரி தோன்றி, ‘குந்தியே! உனக்குப் பிறந்துள்ள இக்குழந்தை கார்த்த வீரியனைப் போன்றவன்; சிவபெருமானுக்கு ஓப்பானவன்; இவன் பல நாட்டு மன்னர்களை வெற்றி கொள்வான்; இவன் தன் சகோதரர்களுடன் சேர்ந்து மூன்று அசுவமேதயாகங்களை நடத்தப் போகிறான். பாசுபதம் என்னும் அஸ்திரத்தைச் சிவன் மூலம் அடையப் போகிறேன்”5 என்று கூறியதும் குந்தி மிகவும் மகிழ்ந்தாள்.
இதனை அறிந்த சதநிருங்க மலையில் வசிக்கும் ரிஷிகளும், தவசிகளும், இந்திராதி தேவர்களும் மகிழ்ந்தனர். ஆகாயத்தில் துந்துபி (இசைக்கருவி) வாத்தியங்கள் முழங்க பூமாரிப் பொழிந்தது. ரிசிகளும், தவசிகளும், தேவர் கூட்டமும் அர்ச்சுனனுக்குப் பெரிதும் மரியாதைச் செய்தனர்.
நகுலன், சகாதேவன் குந்தி மாத்திரியை அழைத்து துர்வாசர் கூறிய அம் மந்திரத்தை உபதேசித்தாள். இந்த மந்திரத்தை உச்சரித்து ஏதேனும் ஒரு தேவதையை மனத்தில் எண்ணிக் கொள்; உனக்கு தகுதியான புதல்வன் பிறப்பான்; நீ உடனே தியானம் செய், என்று கூறினாள் குந்தி. மாத்திரியும் அம்மந்திரத்தைக் கற்றுக்கொண்டள். பாண்டுவின் சொல்படி மாத்திரி ருது (பருவக் காலம்) வந்ததும் நன்றாக நீராடித் தூய்மையான கவர்ச்சியான ஆடைகளை உடுத்திக்கொண்டு படுக்கையில் அமர்ந்து படுத்துக் கொண்டாள். தன் மனத்தில் பலவாறு ஆராய்ந்து அஸ்வினி தேவர்களை எண்ணினாள். அவர்கள் இருவரும் அவள்; முன் தோன்றினர். பின்னர் தனித்தனியே அவளுடன் கூடி இரண்டு பிள்ளைகளை உருவாக கரு வளரச்செய்தனர். பின்னர் தேவலோகம் சென்று விட்டனர்.
அக்குழந்தைகள் பிறந்தபோது முன் போலவே வானத்தில் தோன்றி “இவர்கள் அஸ்வினி தேவர்களுக்கும் மேம்பட்டவர்கள். தருமம், ஓழுக்கம், குலம், கல்வி, பலம், அழகு ஆகியவற்றில் மேம்பட்டவர்களாக திகழ்வார்கள்”6 என்று கூறியது. அவ்விருவர்கள் தான் நகுலன், சகாதேவன் என்றும் பெயரிட்டனர். நகுலன் - பாரதப்போரில் சகுனியின் மகன் சௌபாலனைக் கொன்று சகுனி குடும்பத்தை வேரறுத்தான். சகாதேவன் - பாண்டவர்களில் இறுதியானவன், அனைத்துக் கலைகளிலும் வல்லவன். கண்ணனைத் மனத்தால் கட்டியதால் போர்க் காட்சி காணும் பேறுபெற்றவன். பாரதப் போரில் சகுனியைக் கொன்றவன்.
இவர்கள் ஐவரும் பாண்டவர்கள் என்றும், தர்மனை மூத்தவன் என்று அழைக்கப்பட்டனா;. தர்மனை விட ஓராண்டு இளையவன் பீமன்; இவனுக்கு ஓராண்டு இளையவன் அர்ச்சுனன்; நகுலனும், சகாதேவனனும் அர்ச்சுனனுக்கு ஓராண்டு இளையவர்கள். தர்மன் பிறந்து ஓராண்டு சென்றபின் பிறந்தவன் துரியோதனன். அதாவது பீமன் பிறந்த நாளில் துரியோதனன் பிறந்தான். எனவே பீமனும் துரியோதனனும் சமவயதுடையவர்கள். துரியோதனன் பிறந்த பின்னர் நாளும் ஒவ்வோரு குழந்தையாகப் பிறந்தனா;. ஆகவே சரியாக நூறு நாட்களில் நூறு பேர் பிறந்து விட்டனர். கடைசியாக துச்சலை பிறந்தாள். எனவே கௌரவர்களின் பிறப்பும் பீமனின் பிறப்பிற்குப் பின் நூறு நாட்களில் முடிந்து விட்டது. ஆயின் அர்ச்சுனன் பீமன் பிறந்து ஓராண்டு சென்ற பின்னரே பிறந்தான். ஆகவே துரியோதனன் மட்டும் பீமன் வயதுக்குச் சமமானவன். மற்றவர்கள் பீமனுக்குப் பின் பிறந்தவர்கள். இவர்கள் அர்ச்சுனனை விட மூத்தவர்கள். இருப்பினும் துச்சலை போன்றவர்கள் அர்ச்சுனனின் தங்கை என்றே கூறப்படுகிறது.
நிறைவாக,
இம்மகாபார காப்பியத்தில் பல இடங்களில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்குத் துச்சலை சகோதரி என்று கூறப்பட்டாலும் பல இடங்களில் அர்ச்சுனனின் தங்கை என்றே பேசப்படுகின்றன. பின்னர் வரும் அஸ்வமேதிக பருவத்தில் அர்ச்சுனனைப் பல முறை ‘அண்ணா’ என்றே துச்சலை அழைக்கிறாள். எனவே குந்தி, மாத்திரிக்கும் கடவுள் என்ற ஆடவனுக்கே பிறந்தவர்களே பாண்டவர்கள். இவர்கள் பாண்டுவிற்கு மனைவிகள் என்ற உறவு முறையே தவிர பாண்டவர்கள் பாண்டுவிற்கு பிறந்தவர்கள் அல்ல என்றும், கித்தமன் என்ற முனிவரின் சாபத்தினால் ஆண்மை இருந்தும் ஆண்மையற்றவர் என்றே ஆராயமுடிகிறது. வாரிசு, குடும்ப விருத்தி பெறும் காரணத்திற்காகவே பிறந்தவர்கள் பாண்டவர்கள் என்று இக்கட்டுரையின் மூலம் அறியமுடிந்தது.
துணை நின்றவை
1. Tamilstudies, P.52
2. வியாச பாரதம் – சொர்க்காரோகணப் பருவம், ப. 159-160
3. வியாச பாரதம் - ஆதி பருவம், ப. 186
மின்னஞ்சல்: muthuselvam8122@gmail.com