New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பதிற்றுப்பத்தில் மானமும் வீரமும் - துரை.மணிகண்டன்


Guru

Status: Offline
Posts: 24625
Date:
பதிற்றுப்பத்தில் மானமும் வீரமும் - துரை.மணிகண்டன்
Permalink  
 


பதிற்றுப்பத்தில் மானமும் வீரமும்

E-mailPrintPDF

முன்னுரை
manikandan_cd.jpg - 22.36 Kbதமிழின் உயர்வை உலகறியச்செய்த இலக்கியங்களுள் சங்க இலக்கியம் முதன்மையான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. அத்தகு சிறப்புப்பொருந்திய சங்க இலக்கியத்தில், எட்டுத்தொகை நூல்களில் புறம் பற்றி பாடப்பட்டுள்ள இரண்டு நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்தாகும். இந்நூல் சேர அரசர்களின் வாழ்வியல் பண்புகளை எடுத்தோதும் ஒப்பற்ற இலக்கியம். இதனை கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியை திருமதி காஞ்சனா அவர்களால் எளிய மலையாலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது சிறப்பான ஒன்று.

நூல் அமைப்பு
பாடாண் தினையில் அமைந்த 80 பாடல்களைக் கொண்டது. இதில் எட்டு சேர வேந்தர்களைப் பற்றி குமட்டூர்க் கண்ணனார், பாலைக்கவுதமனார், காப்பியாற்றுக்காப்பியனார், பரணர், காக்கைப்பாடினியார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் என எட்டு புலவர்கள் பாடியுள்ளனர். 

நூலில் கூறப்பட்டச் செய்திகள்
சேரவேந்தர்களின் கல்வித்திறம், மனத்திண்மை, புகழ்நோக்கு, ஈகைத்திறம், ஆகிய பெருமிதப் பண்புகளையும் படைவன்மை, போர்த்திறம், பொருள்செயல்வகை, குடியோம்பல், ஆட்சித்திறன் போன்றவை நயம்பெற விளக்கப்பெற்றுள்ளன. இவையாவும் புறநானூற்றுப் பாடல்களைப் போன்று புறத்திணையைப் பொருளாகக் கொண்டு பாடப்பெற்றுள்ளது. இத்தகு சிறப்பு பெற்ற இந்நூலில் மானமும் வீரமும் இடம்பெற்றுள்ளதை நாம் காணலாம்.

மானம்
கற்பு, பெருமை, புலவி, வலிமை, சபதம், கணிப்பி, அளவுகருவி. மாற்றாணி, ஒப்புமை, அன்பு, அவமானம் என்ற பொருள்களில் குறிப்பிடப் படுகிறது. ( தமிழ் விக்கிப்பீடியா)
 ”தன்னிலை மாறாமல் எவனொருவன் வாழ்கின்றானோ” அவனே மானத்துடன் வாழ்வதாக விவேகசிந்தாமணி கூறுகிறது.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்  (திருக்குறள் 969)
 கவரிமான் உடலிலிருந்து ஒரு உரோமம் கீழே விழுந்தாலும் அது உயிர் வாழாது. அதுபோல மனிதன் தன் நிலையிலிருந்து மாறிவிட்டால் அவன் உயிர்விட்டுவிடுவான்
எ.கா: பாண்டிய நெடுஞ்செழியன், சாக்ரடிஸ், கனைக்கால் இரும்பொறை

பதிற்றுப்பத்தில் மானம்
 பதிற்றுப்பத்தில் இடம்பெற்று இருக்கும் 80 பாடல்களில் மானம் குறித்த செய்தியாக ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பத்தில் குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்ப நெடுஞ்சேரலாதனைக் குறிப்பிடும்பொழுது கண்களில் மகிழ்ச்சிக் காட்டி நெஞ்சில் பகை உணர்வை பகைவரிடத்தே வெளிப்படுத்த தெரியாதவன். கனவிலும் கூட பொய் கூறாதவன் என்று வேந்தனின் இயல்பான குணத்திலிருந்து எந்த நேரத்திலும் மாறதவன் என்பதை,

” ……… .   நெஞ்சுஅவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்புஅறி யலனெ
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து……”
 என்ற பாடல் வரியின் மூலம் நாம் காணலாம்.

அடுத்து நான்காம் பத்தில் காப்பியாற்றுக் காப்பியனாரின் பாடலில் களங்காய் கண்ணி நார்முடி சேரலாதனின் படைவீரர்களின் செயல்களாகக் குறிப்பிடுகிற போக்கு வியக்கத்தக்கதாக உள்ளது.
எதிரி நாட்டு படைவீரர்கள் புறமுதுகிட்டு ஓடும் போது பனம்பூ மாலையை அணிந்த உன் படைவீரர்கள் முதுகில் படைகளைச் செலுத்தமாட்டார்கள் என்பதனை,
 
“ஒடுங்காத் தெவ்வர் ஊக்குஅறக் கடைஇ
புறக்கொடை எறியார் நின் மறப்படை கொள்ளுநர்..” (பதிற்றுப்பத்து:31 ஆம் பாடல்)

என்று அரசனின் மான உணர்வையும்; அவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு போர் செய்யும் வீரர்களையும் இதில் காணமுடிகின்றது.

அடுத்து கபிலரின் மானத்தை பார்ப்போம். கபிலர் பாரியின் உற்ற நண்பர்;அவரின்றி இவரில்லை, இவரன்றி அவர் இல்லை. அதுபோல வாழ்ந்த இருவரில் பாரி இறந்துபோக கபிலர் தனியே பாரியின் மகளுடன் பரம்பு மலையை விட்டு வெளியேறுகிறார். அவ்வாறு நாட்டைவிட்டு வந்தவர் நேரே செல்வகடுங்கோ வாழியாதன் என்ற சேர மன்னனைக் காண வருகின்றார்.

அவ்வாறு வந்த கபிலர் சேர மன்னனிடம் பாரியின் புகழையும் அவனது பரம்பு மலையின் அழகையும் எடுத்துக் கூறுகிறார். பாரி இரவலர்கள் மிகுந்த துன்பம் அடைய வேண்டும் என்பதற்காகவே மேலுலகம் சென்றுவிட்டான். அதனால் எம்மை பாதுகாக்க வேண்டும் என்று இரந்து வேண்டி நான் இங்கு வரவில்லை. உண்மையன்றி எதனையும் மிகைப்படுத்திக் கூறமாட்டேன் என்று சேர அரசனிடம் கூறும் தன்மானத்தை நாம் என்னவென்று கூறுவது. உண்மையில் அந்தக் காலத்துப் புலவர்கள் தன்மானத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பது இதன் மூலம் அறிய முடிகின்றது.

“பொன்னின் அன்ன பூவின் சிறியிலை
புன்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ
புலர்ந்த சாந்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழுவுமண் புலர இரவலர் இனைய
வாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்க என
இரக்குவாரேன் எஞ்சிக் கூறேன்” (பதிற்றுப்பத்து பாடல்- 61)

கபிலர் செல்வக்கடுங்கோ வாழியாதனின் புகழைக் கூறும்போது அவர்களின் முன்னோர்களின் மான உணர்வை எடுத்து காட்டுகின்றார். அது எவ்வாறு என்றால் சிறப்பாக ஆட்சி செயத உமது முன்னோர்கள் உன்னைப் போல் தெளிவாக மாறாத கொள்கையுடையவர்களாக இருந்துள்ளனர். அதனால்தால் நீயும் அதிலிருந்து மாறாமல் ஆட்சிசெய்து வருகின்றாய் என்பதை,

”ஆய்ந்த தெரிந்த புகழ்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே…” (பதிற்றுப்பத்து பாடல்- 69)

 என்ற குறிப்பிடுவதால் சேரவேந்தனின் குடிபிறப்பு மாறமல் நல்ல முறையில் ஆட்சியை மானத்துடன் நடத்தியவன் என்பது புலனாகிறது.

வீரம்
வலிமை வீரநோய் வெகுளி (சீவக.2771) என்று சீவகசிந்தாமணி கூறுகிறது. வீரம் என்றால் வலிமை, மனத்தின்மை என்பவையாகும். இதை அடியொற்றி பதிற்றுப்பத்தில் நாம் வீரச் செயல்பாட்டினைக் காணலாம்.
பதிற்றுப்பத்தில் உள்ள 80 பாடல்களில் 32 பாடல்களில் வீரம் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரண்டாம் பத்தில் நான்கு பாடல்கள் வீரம் பற்றியச் செய்தியைப் பற்றி எடுத்தியம்புகிறது.
அவற்றில் சில இமயவரம்ப நெடுஞ்சேரல் இரும்பொறையின் வீரத்தை அருகில் அரணமனையில் வாழும்  அரசர்கள் உறக்கம் வராமல் உன்னை நினைத்து நெஞ்சம் நடுங்குகிறார்கள். அவ்வாறு நடுங்குவதற்குரிய  காரணம் உன்னுடைய வீரம்தான். இதனைக் கேட்பதற்கு எங்களுக்கு மிகவும் இனிமையாக உள்ளது. உனது புகழ் வளர்க என்று ,

”தொடுகொள் இனநிரை நெஞ்சுஅதிரந் தாங்கு
முரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்
கேட்டாற்கு இனிது-நின் செல்வம் கேட்டொறும்…” (பதிற்றுப்பத்து பாடல்- 12)

என்று குமட்டூர் கண்ணனார்  சேரனின் வீரத்தை இப்பாடலில் பதிவுசெய்துள்ளார்.

மூன்றாம் பத்தில் ஐந்து பாடல்கள் வீரத்தைப்பற்றி குறிப்பிடுகிறது. பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் வீரத்தை அகப்பா என்ற அரணானது கணைய மரங்களை வாயிலின் முகப்பில் வைத்துள்ளனர். அதனைச் சுற்றி காவல்படை உள்ளது. ஆழ்ந்த அகழி மற்றும் பெரிய மதில்களையும் உடைய அந்த அரணை குட்டுவனின் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நான்கு வகைப் படைகளும் சேர்ந்து சென்று அழித்தன. எவ்வாறு என்றால் உழிஞை மாலை சூடி சென்று அழித்தனர். இதனை ஆசிரியர் பாலைக் கவுதமனார் சேரனை கூற்றுவன் சென்று அழித்ததுபோல உள்ளது என்று மன்னனின் வீரத்தைக் குறிப்பிடுகிறார். (பதிற்றுப்பத்து பாடல்- 22) எதிரி நாட்டில் நடந்த போரினால் குதிரைகள் சென்று போர்புரிந்ததால் பகைவர் நாட்டு வயல்வெளிகள் கலப்பைகள் கொண்டு உழ இயலாதவை ஆயின என்று,

“நின்படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ உடன்றோர் மனெயில் தோட்டி வையா..” (பதிற்றுப்பத்து பாடல்- 25)

ஆசிரியர் சேரனின் வீரத்தைக் குறிப்பிடுகிறார்.

நான்காம் பத்தில் ஆறு பாடல்கள் வீரத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. களங்காய் கண்ணி நார்முடிசேரலாதனின் வெற்றியையும் வீரத்தையும் பலவாறு குறிப்பிட்டுள்ளார்.
நார்முடி சேரலாதன் கூற்றுவன் போல போர்திறம் பெற்றவன். தும்பை மாலை சூடி சினந்து வந்த பகைவர்களை அஞ்சத்தக்க வகையில் போரில் அலறும்படி உன்னுடைய பெரிய முரசு முழங்கிக்கொண்டே இருக்கும். முரசுகள் முழங்கினால் பகைவர்களில் அரண்கள் அழிவது உறுதி என்று,

“எடுத்துஎறிந்து இரங்கும் ஏவல் வியன்பனை
உரும் என அதிர்பட்டு முழங்கி செருமிக்கு
அடங்கார் ஆர அரண் வாடச் செல்லும்
காலன் அனைய கடுஞ்சின முன்ப” (பதிற்றுப்பத்து பாடல்- 39)

என்ற பாடலில் அரசனது வீரத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐந்தாம் பத்தில் மூன்று பாடல்களில் வீரத்தைப்பற்றி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் கடல் போரில் வல்லவன். நல்ல வீரம் நிறைந்தவன். இவனது போர்ச்சிறப்பும் வீரச்சிறப்பும் மற்றவர்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டவை. வலிமைமிக்க போரில் எதிரியை வஞ்சிக்காமல் நேர் எதிரே நின்று போரிட்டு வெற்றிப் பெறுபவன்தான் இந்த சேரமன்னன் என்று,

“அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ
மைந்துடை நல அமர்க் கடந்து வலம்தரீஇ” (பதிற்றுப்பத்து பாடல்- 42)
என்ற பாடலில் பரணர் மன்னனின் வீரத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆறாம் பத்திலும் மூன்று பாடல்கள் வீரம் பற்றியவையாகும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் விரச்சிறப்பை மிக அழகாக உவமையோடு குறிப்பிடும் காட்சி நம்மை அச்சத்தில் ஆழ்த்துகிறது. ஆம் செரவேந்தன் போர் புரியும்போது சேரனின் தலையில் அணிந்திருந்த பனந்தோடினால் செய்யப்பெற்ற  கண்ணியில் போரிட்டபொழுது எதிரிப்படைவீரகளின் இரத்தம் பட்டைமையால் செந்நிரமாகிய இறைச்சி போலக் காணப்பெறுகிறது என்பதை,

“மறம்கெழு போந்தை வெந்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப..” (பதிற்றுப்பத்து பாடல்- 51)

என்று இறைச்சியென பருந்துகள் அரசனின் தலையைச் சுற்றுகின்றன என்று விரத்தை காக்கைப்பாடினியார் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாம்பத்தில் நான்கு பாடல்கள் வீரத்தைப் பற்றிக்குறிப்பிடுகின்றன. செல்வக்கடுங்கோ வாழியாதன் சிறந்த தலைமைப் பண்புகொண்டவன். வீரர்களை வழிநடத்துவதில் வல்லவன். போர்க்களத்தில் வெட்டுண்டு கிடக்கும் பிணங்களை இடறுவதால் குதிரையின் குழம்புகள் செந்நிறம் அடைந்துள்ளன. அத்தகைய பகைவர்களின் வீரத்தை அழித்த போர்வீரர்களில் தலைவனே விற்படை வீரர்களுக்கு கவசம் போன்றவன் என்பதனை,

“எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின்
பரியுடை நல்மா விரிஉளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறம்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும..” (பதிற்றுப்பத்து பாடல்- 65)

என்ற பாஅடல் வரியினால் கபிலர் பாடி சிறப்பித்துள்ளார்.

எட்டாம்பத்தில் நான்கு பாடல்கள் வீரம்பற்றி பேசுவதாக ஆசிரியர் பாடியுள்ளார்.
தகடூர் எறிந்த பெறுஞ்சேரல் இரும்பொறையின் வீரச்சிறப்பை பகை வீரர்கள் அஞ்சி ஓடுகிறார்கள். பகை நாட்டு அரசர்கள் போர்க்களத்தில் இறந்துபோகின்றனர். இறந்த மன்னனை சுற்றி சேர வீரர்கள் துணங்கை
கூத்தை ஆடுகின்றனர். அத்தகைய போர் வீரர்களையுடையவன்தான் இந்த சேரமன்னன்,

“மன்பதை பெயர அரசுகளத்து ஒழிய
கொன்றுதோள் ஓச்சிய வென்றுஆடு துணங்கை..” (பதிற்றுப்பத்து பாடல்- 77)

என்று அரிசில்கிழார் பாடுகின்றார்.

ஒன்பதாம்பத்தில் ஐந்து பாடல்கள் வீரத்தைக் குறிக்கின்றன. இளஞ்சேரலிரும்பொறையின் வீரம் பகைவர்கள் அச்சம் அடைய போர்க்களத்தில் சிந்திய குருதி மிகுதியானது. அதனால் போர்க்களம் புலால் நாற்றம் வீசுகின்றது. கையில் வேலுடன் காட்சித்தரும் சேரனை பொறையன் என்று பலரும் கூறி வாழ்த்தினர். அத்தகு சிறப்புப் பொருந்திய வீரன் என்று,
 
“உறல் உரு குருதிச் செருக்களம் புலவக்
கொன்று அமர்க் கடந்த வெந்திறல் தடக்கை
வென்வேல் பொறையன் என்றலின் வெருவர..” (பதிற்றுப்பத்து பாடல்- 86)

என்று பெறுங்குன்றூர்க்கிழார் இளஞ்சேரனைக் கொடுமைமிக்கவன் அனைவரும் கூறினர். அதனைக்கேட்ட புலவரும் உண்மையென நம்பினர்.ஆனால் அவன் மிக நல்லவன் என்று தற்பொழுது புரிந்தது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

முடிவுரை
பதிற்றுப்பத்தில் மானமும் வீரமும் என்ற இக்கட்டுரையில் மானம் பற்றிய பாடல்களின் எண்ணிக்கையும் அதில் இடம்பெற்றிருந்த கருத்துக்களையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்து வீரம் பற்றிய பாடல்கள் எவை?எவை என சுட்டிக்காட்டப்பட்டு அவற்றில் பயன்படுத்தப்பட்ட செய்திகளை சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்தில் அக்கால போர் நெறிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டன, போரில் வெற்றிப்பெற்ற அரசன்  தான் மட்டுமே பொருள்களை வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு வாரி வழங்கியுள்ள திறம் இதில் புலனாகிறது. பாடிய புலவர்களுக்கு இன்றி மக்களுக்கும் கொடுத்துள்ளார்கள். மானத்துடனும், நேர்மையான வீரத்துடனும் போர் நெறிமுறைகள் அக்காலத்தில் பின்பற்றப் பட்டிருக்கின்றன என்பதை இந்த பதிற்றுப்பத்தின் மூலம் நாம் கண்டு கேட்டு உணர்ந்துகொள்ளலாம்.

ஆய்வுக்கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள்
1.மது.ச.விமாலநந்தம், இலக்கிய வரலாற்றுக்களஞ்சியம்
2. மதுரை இளங்குமரனார், திருக்குறள் மூலமும் உரையும்
3. அறிஞர் ச.வே.சுப்பிரமணியன், பதிற்றுப்பத்து தெளிவுரை.
4. அவ்வை சு.துரைசாமிபிள்ளை, பதிற்றுப்பத்தி மூலமும் உரையும்.
5. விவேகசிந்தாமணி
6. www.tamilwikipedia.org.

(இக்கட்டுரை 30-01-2014 அன்று பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரித் தமிழ்த்துறையும் செம்மொழி மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய பதிற்றுபத்து – மானிடவியல் சிந்தனைகள் என்ற கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கட்டுரை.)

mkduraimani@gmail.com

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard