New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாரதியின் மரபும் மரபு மாற்றமும் - ச. மகாதேவன்


Guru

Status: Offline
Posts: 24459
Date:
பாரதியின் மரபும் மரபு மாற்றமும் - ச. மகாதேவன்
Permalink  
 


பாரதியின் மரபும் மரபு மாற்றமும்

E-mailPrintPDF

முன்னுரை

மகாகவி பாரதிபேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்நூற்றாண்டுகள் வாழும் வரங்கேட்ட மகாகவி பாரதி, இம்மண்ணில் வாழ்ந்தது 39 ஆண்டுகளே! புதுக்கவிதையின் பிதாமகனாக, 24 வயதில் அரசியல் பார்வைகொண்ட பத்திரிகையாளராக, சமுதாய மாற்றம் கண்ட சமூக சீர்த்திருத்தப் போராளியாக மகாகவி பாரதி திகழ்ந்தார்.  பிராமண சமுதாய மரபுக்கு உட்பட்டு ஏழுவயதில் (1889) உபநயனம் மேற்கொண்டு, 14½ வயதில் அச்சமுதாய மரபுக்கு உட்பட்டு 7 வயதுச் செல்லம்மாவைப் பால்ய திருமணம் செய்து கொண்ட பாரதியின் வாழ்வில் 1898ஆம் ஆண்டு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது.  அவ்வாண்டின் ஜீன் மாதத்தில் பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் இறப்பைத் தழுவ, பாரதி காசிக்குக் கிளம்புகிறான்.  அத்தை குப்பம்மாளுடன் காசியில் வசித்த பாரதி, அலகாபாத் சர்வகலா சாலையில் பிரவேசத்தேர்வில் தேர்வாகி, காசி இந்து கலாசாலையில் சமஸ்கிருதம், இந்தி மொழிகள் பயின்றார்.  1898 – 1902 வரை நான்கு ஆண்டுகள் காசியில் வசித்த பாரதி, மரபு மாற்றவாதியாக உருமாறினான்.  கம்பீரமான தலைப்பாகை அணிந்தான்.  திறந்த மார்பும் பூணூலோடும் இருப்பதற்குப்பதில் பஞ்சகச்சமும், கோட்டும் அணிந்தான், மழித்த மீசையோடிருக்க வேண்டிய முகத்தில் கம்பீரமான மீசை வைத்தான்.  1882 – 1901  வரை முதல் 20 ஆண்டுகள் பாரதி மரபு சார்ந்து வாழ்ந்ததாகவும், 1902 – 1921 வரை 19 ஆண்டுகள் அனைத்து மரபுகளையும் மாற்றி புதிய மரபு அமைத்ததாகவும் பாரதியைப் பகுத்துப் பார்க்கலாம்.  இக்கட்டுரை பாரதி கட்டிக்காத்த மரபையும் மரபு மாற்றத்தையும் விளக்க முயல்கிறது.

விதியை மதியா வீரன் பாரதி

 இந்தியச் சாத்திர மரபைப் பாரதி கடுமையாகச் சாடுகிறான்.  “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்“ என்று கூறிய பாரதி, இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்ட சாத்திரங்களைப் பொய்ச்சாத்திரங்கள் என்றான்.  உடன் வாழும் மக்களின் இயல்பைத் தன் சுயசரிதையில் பாரதி தருகிறான்.

 “தாழுமுள்ளத்தர், சோர்வினர், ஆடுபோல் தாவித்தாவிப் பலபொருள் 
நாடுவோர்   
 வீழுமோரிடை யுற்றினுக்குக் கஞ்சுவோர், விரும்பும் யாவும் பெறாரிவர் 
தாமன்றே.
 விதியை நோவர், தம் நண்பரைத் தூற்றுவர், வெகுளி பொங்கிப் 
பகைவரை நிந்திப்பர். 
 சதிகள் செய்வர், பொய்ச் சாத்திரம் பேசுவர், சாதகங்கள் புரட்டுவர்.”

என்று கூறிய பாரதி, முன்னோர் கூறியதைக் கண்ணெனப் போற்றும் பழைய மரபிலிருந்து மாறுகிறார்.  பொய்ச் சாத்திரங்களை, பொய் மனிதர்களைச் சாடிய பாரதி, வீரதேவியான காளியைப் போற்றிப் புகழ்கிறான்.  காளியைப் போற்றும் கலிங்கத்துப்பரணி மரபைப் பாரதி தொடர்கிறான்.  கம்யுனிச நாடான ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டு ஜார்மன்னன் இறந்ததை “இரணியன் போல் அரசாண்ட கொடுங்கோலன் ஜாரெனும் பேரிசைந்த பாவி இமயமலை விழ்ந்தது போல் வீழ்ந்துவிட்டான்.“

 “மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்,
 அங்கே, ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
 கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்“

 சரஸ்வதி, விநாயகர், கண்ணன், இலக்குமி, கோமதி, கோவிந்தன், முருகன், சிவன், சிவசக்தி, பராசக்தி, பூலோக குமாரி, சக்தி, உஜ்ஜைனி மாகாளி, முத்துமாரி, இராதை, என இந்துக் கடவுளர்களை முன்நிறுத்தி 76 தெய்வப் பாடல்கள் பாடினார். கடவுளர்களைப் போற்றுவதைப் பாரதியின் வாழ்வியல் மரபாகவும், பொய்சாத்திரங்களைச் சாடுதல் அவரது மரபு மாற்றமாகவும், கொள்ளலாம்.  இந்திய புராண மரபில் கட்டமைக்கப்பட்டுள்ள “எமன்“ பாத்திரத்தைக் கண்டு பாரதி எள்ளி நகையாடுகிறான்.  அவனைக் காலிலிட்டு மிதிக்க எண்ணுகிறான்.  “காலனுக்கு உரைத்தல்“ எனும் பாடலில்.

 “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன், என்றன்
 காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்“
 
என்று பாடினான்.  “யோக சித்தி“ எனும் கவிதையில் காளியிடம் வரங்கேட்கும் மகாகவி பாரதி

 “தேடிச் சோறு நிதந் தின்று – பல
 சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
 வாடித் துன்பமிக உழன்று – பிறர் 
 வாடப் பலசெயல்கள் செய்து – நரை
 கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
 கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
 வேடிக்கை மனிதரைப் போலே – நான்
 வீழ்வேனென்று நினைத்தாயோ?
 நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
 நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
 முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும் 
 மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி
 என்னைப் புதியவுயிராக்கி – எனக்
 கேதுங் கவலையறச் செய்து – மதி
 தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும்
 சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்“

(பாரதியார் கவிதைகள், தெய்வப் பாடல்கள், பக். 119 – 120)

 இந்தியத் தெய்வங்களை நம்புவது, குறிப்பாக வீரம் தரும் பராசக்தியைத் தனக்குச் சக்திதரும் பேராற்றலாகக் கருதுவது, நல்வினை தீ வினைகளை நம்புவது ஆகியன குடும்ப மரபிலிருந்து வந்த மரபியல் பார்வையாகப் பாரதியிடம் காணமுடிகிறது.
 
 “காரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்
 காளி நீ காத்தருள் செய்யே,
 மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்,
 மாரவெம் பேயினை அஞ்சேன்,
 இரண்டுஞ் சுகமும், பழியுநற் புகழும்
 யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்,
 சரணமென்றுனது பதமலர் பணிந்தேன்.
 தாயெனைக் காத்தலுன் கடனே“

 பாரதியின் தெய்வப் பாடல்களில் 70 சதவீதம் காளிகுறித்த பாடல்கள் இருப்பதையும், தன் துன்பங்களை எல்லாம் நீக்கப் பாரதி காளியிடம் வரங்கேட்டலையும், வழிவழி வந்த அவரது குடும்ப மரபுப் பார்வையெனக் கொள்ளலாம்.
பாரதியின் மரபு மாற்றம்

 “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
 சொல்வதிலோர் மகிமையில்லை“

என்று பேசிய பாரதி, பல இடங்களில் மரபை மீறி மாற்றங்களைச் சிந்தித்துள்ளார்.
 
 “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
 இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்
 பயிற்றிப் பலகல்வி தந்து – இந்தப்
 பாரை உயர்த்திட வேண்டும்.“

என்று வாழ்வுக்கு வரையறை செய்த பாரதி, தான் பிறந்த சமுதாயத் தளையிலிருந்து முற்றிலும் விடுபட்டார்.

 “பாரதியாரும் வேதங்களும்“ எனும் கட்டுரையில் ஆய்வாளர் மு.ஸ்ரீனிவாசன், பாரதியின் வேத நம்பிக்கையை நிறுவுகிறார்.  “பாரதியார் வேதங்களை முழுமையாக நம்பினார்.  வேதங்களைப் பயின்றார்.  வேதங்களுக்கு விளக்கம் தந்தார்.  வேதரிஷிகளின் கவிதைகளை மொழிபெயர்த்தார்.  வேத இலக்கியம் என்பவற்றுள் காலப்போக்கில் கலந்துவிட்ட குப்பைக் கூளங்களைத் திறமையாக ஆராய்ச்சி செய்து அவற்றை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.  பாரதியின் கட்டுரையில் “ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான்.  அங்ஙனம் பிராமணன் என்பது அவனுடைய ஜீவனையா? தேகத்தையா? பிறப்பையா? அறிவையா? செய்கையையா? தர்ம குணத்தையா? என்று கேட்கும் பாரதி, “எவனொருவன் இரண்டற்றதும் பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும், அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், லோபம் முதலிய குற்றங்களை இல்லாதவனாய் பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கினவனாய் நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ, இங்ஙனம் கூறப்பட்ட இலக்கண முடியவனே பிராமணன் என்பது சுருதி, ஸ்மிருதி, புராண, இதிகாச என்பவனற்றின் அபிப்பிராயமாகும்.  மற்றபடி ஒருவனுக்குப் பிராமணத்துவம் சித்தியாகாது என்பது உபநிஷத்து, எனவே நிலைமையைப் பெற முயற்சி செய்யக்கடவர்“ என்று “பிராமணன்“ என்ற சொல்லுக்கு மரபிலிருந்து முற்றிலும் மாறிப் புதிய பொருள் தந்த மகாகவி, “சுதந்திரப் பள்ளு“ எனும் பாடலில் “பார்ப்பானை ஐயரென்றகாலமும் போச்சே“ என்று பாடுகிறார்.

 புதுமையில் பாரதி வசித்த போது, கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த இளைஞனுக்கு வ.ரா., சுப்பிரமணிய அய்யர் ஆகியோர் முன்னிலையில் தம் இல்லத்தில் பூணூல் அணிவித்தார் என்ற செய்தியை “மகாகவி பாரதியார்“ எனும் நூலில் வ.ரா. குறிப்பிடுகிறார்.

 “எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  இந்த நிகழ்ச்சிக்குச் சில மாதங்களுக்கு முன்புதான், என் பூணூலை எடுத்து விடும்படி பாரதியார் எனக்குச் சொன்னார்.  அவரே, வெகு காலத்துக்கு முன்னமேயே பூணூலை எடுத்துவிட்டார்.  மௌனமாக உட்காந்திருந்தேன்.  பாரதியார் நான் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை.  மந்திரோபதேசமெல்லாம் முடிந்த பிறகு “கனகலிங்கம்! நீ இன்றையிலிருந்து பிராமணன்.  எதற்கும் அஞ்சாதே, யாரைக் கண்டும் பயப்படாதே.  யார் உனக்குப் பூணூல் போட்டுவைக்கத் துணிந்தது என்று உன்னை யாராவது கேட்டால், பாரதி போட்டுவைத்தான் என்று அதட்டியே பதில் சொல்.  எது நேர்ந்தாலும் சரி, இந்தப் பூணூலை மட்டும் எடுத்து விடாதே என்று அவனுக்கு வேறுவகையில் உபதேசம் செய்தார்.“

 தான் விரும்பிய மாற்றத்தைத் தன்னிலிருந்தே செயல்படுத்திய பாரதியின் “புதுமரபுக் கொள்கையை“ அக்காலச்சூழலோடு ஒப்பிட்டு ஆய்ந்தால் புதுமை புலப்படும்.

யாப்பிலிருந்து மாற்றம்

 யாப்பெனும் மரபை உடைத்து, “காட்சி” கவிதை மூலம் பாரதி தமிழில் வசன கவிதை மரபைத் தொடங்கி வைக்கிறார்.  மன்னரையும், தெய்வத்தையும் மட்டுமே பாடிய இலக்கிய மரபினை மாற்றிச் சக மனிதர்களின் துயரத்தை அடிமைத்தனத்தை அறியாமையைப் பாரதி பாடுகிறார்.  பண்டித மொழியைப் பாமர மொழியாக்கி மக்களிடம் கொண்டு செல்கிறான்.

 “தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப்பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கு“ பாஞ்சாலி சபத்தைப் பாதகாணிக்கையாக்கிய பாரதி, “எளிய பதங்கள், எளியநடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினை யுடைய காவியமென்று தற்காலத்திலே செய்துதருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்.  ஓரிண்டு வருடத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்திற்குள்ளே நயங்கள் குறைபடாமல் நடத்தல் வேண்டும்“.  என்கிறார்.  (பாஞ்சாலிசபத முகவுரை, பக்.307)

முடிவுரை

 பாரதி தீர்க்கத்தரிசனமுள்ள ஒப்பற்ற யுகக்கவிஞர்.  இந்திய மரபை வேராகக் கொண்டு உலகளாவிய அளவில் தமிழைக் கொண்டு சென்ற அற்புதச் சிந்தனையாளர்.  சாதிய விடுலை, பெண் சுதந்திரம், மூடத்தனத்திலிருந்து மீளுதல், தேசவிடுதலை போன்றவற்றிற்காகத் தேவையான மரபுகளைக் கைவிடாது, தேவையற்ற மரபுகளைத் தூரவீசிப் புதுமரபு கண்ட புது யுகப்படைப்பாளராக மகாகவி பாரதி திகழ்கிறார்.

mahabarathi1974@gmail.com__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard