New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர் - பா.பிரபு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர் - பா.பிரபு
Permalink  
 


மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்

E-mailPrintPDF

ஆய்வு: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்இயற்கை, இயற்கைச் சார்ந்த புற உலகில் மாந்தன் நொடியொரு பொழுதும் பல்வேறு விதமானப் போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டே வந்ததை வரலாறு மெய்ப்பிக்கின்றது. இத்தகு போராட்டங்கள் முதலில் உணவுக்காகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான போராட்டமாகத் தொடங்கி பின்னர் செல்வ பெருக்கத்திற்கும், சிலர் அதிகாரத்தினை நிலைநிறுத்துவதற்கான போராட்டமாகவே பெரும் போர்கள் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன. அப்போர் நிகழ்வுகளில் மலையும், மலையைச் சார்ந்து வாழ்ந்த மக்களுக்கிடையே ஆநிரைகளைக் கவர்தலும் அதனை மீட்டலுக்குமான போர்கள் நிகழ்ந்திருக்கின்றன.

உணவுக்கானத் தேடலில் இருந்த மனிதன் தம் தேவைக்கும் மிகுதியான உணவுப் பொருட்களையும், விலங்குகளையும் சேமிக்கும் நிலையைக் கொண்டான். அச்சேமிப்பில் விலங்குகளை பழக்கப்படுத்தினான். தேவை ஏற்படும்போது அதனை உணவாக்கியும் உட்கொண்டான். இதுவே ஆநிரைகளை பாதுகாத்து வளர்ப்பதற்கான சூழலைத் தோற்றுவித்தது. இச்சூழல் மலையும், மலை சார்ந்த பகுதியிலேயே நிகழ்ந்திருக்கிறது. ஆநிரைகளே மலைப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு முதன்மை செல்வமாகக் கருதப்பட்ட சூழலில் இனக்குழுக்களுக்கிடையே ஓயாது சண்டைகள் நிகழ்ந்தன. அச்சண்டைகள் அடிப்படையில் ஆநிரைகளை கைப்பற்றும் நோக்கிலே நிகழ்ந்திருக்கிறது. இது அடிமை சமூகம், தோன்றிய காலந்தொட்டும் மன்னர் உடைமை சமூகத்திய காலத்திலும் நிகழ்ந்திருக்கிறது. இத்தகைய போர்களை ‘தொல்காப்பியம்’ எனும் நூலில் தெளிவுபட காணலாம். இதன் வழியாக தொல்காப்பியர் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுமார் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலும், அதற்கு முன்னரும் இத்தகைய போர்கள் நிகழ்ந்ததை தெளிவுற அறிய முடிகிறது. இது மட்டுமின்றி கல்வெட்டின் வழியாகவும் கள ஆய்வின் வழியாகவும் ஆநிரை கவர்தல் மீட்டலுக்கான போர் நிகழ்ந்ததை அறிய முடிகிறது.

தொல்காப்பியர் விளக்கும் மலைசார்ந்தமக்களின் போர் முறைகள்
“வெட்சி தானே குறிஞ்சியது புறனே
 உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே” 
                    (தொல்காப்பியம், தி.சு.பாலசுந்தரம் உரை, நூ. 1002)

என்று வெட்சியை குறிஞ்சிக்கு புறனாக அமைந்ததென்றும் அது ஈரேழ் துறையாக வருமெனவும் முதலில் சுட்டுகின்றார். பின்னர் இப்போர் நிகழ்விற்கு இலக்கணமாக,

“வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்து ஒம்பல் மேவற் றாகும்”
                      (தொல்காப்பியம், தி.சு.பாலசுந்தரம் உரை, நூ. 1003)

என்கிறார். அதாவது, வேந்தனால் ஏவப்பட்ட முனைப்புலத்து காவலர்கள் அரசரின் ஆணைப்படி வேற்று புலத்தில் களவின்(திருடுதல்) மூலம் ஆநிரைகளைக் கைப்பற்றி பாதுகாத்தலாகும் என்றுரைக்கின்றார். இப்போர் நிகழும் முறைகளை தொல்காப்பியர் ‘புறத்திணையியலில்’ பின்வருமாறு விளக்குகின்றார்.

“படையியங்கு அரவம், பாக்கத்து விரிச்சி
…………………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………………..
தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடையென
வந்த ஈரேழ் வகையிற்றாகும்”                             
                 (தொல்காப்பியம், தி.சு.பாலசுந்தரம் உரை, நூ. 1004) என்கிறார்.

ஆநிரைகளைக் கைப்பற்றுதல்
 அவையாவன, 1.ஆநிரைகளைக் கைப்பற்றுவதற்காக படைவீரர்கள் ஆராவாரத்துடன் செல்வர். 2.அப்படி செல்லுகையில் முன்னோரிடத்தோ, பெரியோரிடத்தோ வெற்றி பெறுதல் வேண்டி நற்சொல் கேட்பர். 3.பின்னர் வேற்றுப் புலத்திலுள்ளோருக்குத் தெரியாதவாறு (குறிப்பாக ஒற்றர்களுக்குத் தெரியாமலும்) செல்வர். 4.தம் ஒற்றர்களிடம் வேற்று புலத்தின் சூழலை கேட்டறிவர். 5.வேற்றுப்புலத்தை முற்றுகையிடும் பொருட்டு பகை நாட்டில் சென்று தங்குவர். 6.பகைபுறத்தை வளைத்துக் கொண்ட பின்னர் அவர்களை பின்பற்றி வரும் வேற்றுப்புலத்தாரோடு போர் புரிவர். 
7.அதன் பின்னர் எதிர்த்த எதிர்ப்படையினரை, கொலை செய்வர். 8.பகை புலத்தினரின் ஆநிரைகளைக் கைப்பற்றுவர். 9.ஆநிரைகளைக் கைப்பற்றி வரும்போதும் எதிர் படையினர் பூசல் செய்ய அவர்களிடம் போரிட்டுக் கொண்டு தம் இடம் நோக்கி வருவர். 10.ஆநிரைகளைக் கவர்ந்தவர்கள் அதற்கு துன்பம் ஏதும் நிகழாதவாறு கொண்டு வருவர். 11.தம் புலத்திற்கு வந்தபோது தம் குடும்பத்திலுள்ளோர், ஊரார் மகிழ்ந்து பேசுவதற்கு ஏதுவாக தாம் கொண்டு வந்த ஆநிரைகளை ஓர் பொது இடத்தில் நிறுத்துவர். 12.பின்னர் ஆநிரைகளை படைவீரர்கள் அனைவரும் பங்கிட்டுக் கொள்வர். 13.பங்கிட்டப் பின்னர் மகிழ்ச்சியாய் ‘கள்’ உண்டு இன்புறுவர். 14.அதன் பின்னர் மகிழ்ச்சியால் சுற்றத்தார், ஊரார் அனைவருக்கும் ஆநிரைகளை கொடுத்து மகிழ்வர் என்று தொல்காப்பியர் ஆநிரை கவர்தலின் போது நிகழும் போர் நிகழ்வுகளை விளக்குகின்றார். இதன் வழியாக பண்டைய காலத்தில் ஆநிரைக் கவர்தலை ஓர் போர்த் தொழிலாகவே கொண்டமை நன்கு புலனாகிறது.

 ஆநிரைகளை இழந்தவர்கள் கோபம் கொண்டு ஆநிரைகளை மீட்கும் பொருட்டு உடனே போர் புரிதலும் நிகழ்ந்திருக்கிறது. இதனை ‘வெட்சி’ என்னும் துறைக்குள் உட்துறையாக ‘கரந்தை’ துறை என்று குறிப்பிடுகின்றார்.

ஆநிரை மீட்டல்
 மலையும், மலை சார்ந்த நிலப் பகுதி மக்கள் தெய்வமாக வணங்கும் வேலனை எண்ணி ஆநிரையை மீட்க செல்வர். அதாவது, 1.உயிர்கொலை கூறும் கொடுமைமிக்க வாயினையுடைய வேலனை எண்ணி காந்தள் பூவை சூடிக் கொண்டு வெறியாட்டம் ஆடுவர். 2.அதன் பின்னர் படை வீரர்கள் அனைவரும் அவர்களது வேந்தனின் அடையாளம் தெரிய வேண்டி வேம்பு பூவினைச் சூடிக் கொள்வர். 3.பெரும் தானைப் படையாய் ஒன்றுதிரண்டு அவர்கள் அணிந்தப் பூக்களோடு செல்லும் போது பூவின் சிறப்பையும் எடுத்துரைப்பர். 4.பின்னர் வெற்றியைக் கருதி முருகனையும் அவன் மனைவியான வள்ளியையும் எண்ணி பெண்கள் வள்ளிக் கூத்தை நிகழ்த்துவர்.

“இவ்வள்ளிக் கூத்தை ‘கருங்கூத்து’ என்பர். இழிந்தோர் காணும் கூத்து என்பர் நச்சர். மேற்கண்ட வேலன் ஆடும் தெய்வாட்டத்தை உயர்ந்த சாதியினர் பார்க்க மாட்டார். இவ்வழக்கம் இன்றும் கேரளத்தில் உள்ளது” (தொல்காப்பியர் கால தமிழர், புலவர் குழந்தை, ப.126) குறிப்பிடுவார்.

 5.படைவீரர்களோ காலில் வீரக்கழலை அணிந்து வீரக்கழல் கூத்து நிகழ்த்துவர். 6.அதன் பின்னர் உன்னம் எனும் ஒருவகையான மரத்தை நிமித்தம் பார்ப்பர். “உன்னம் என்பது ஒருவகை மரம். நல்லதாயின் தளிர்த்தும், தீயதாயின் உலறியும் அது நிமித்தங் காட்டும்” (தொல்காப்பியம், தி.சு.பாலசுந்தரம் உரை, ப.235) என்பர்.

ஆதலால் அம்மரத்தினை அணுகி நல்லவை நிகழுமா என ஆராய்வர். 7.பூவைப் பூவின் மலர்ச்சிக் கண்டு, இது திருமாலின் நிலையோடு ஒத்தது என்று புகழ்ந்துரைப்பர். 8. பின்னர் பகைப்புலத்து ஊரினுள் புகுந்து ஆநிரைகளைக் கவர்ந்தவர்களை எதிர்த்துப் போரிட்டு தடுப்போர் அனைவரையும் தோற்றோடச் செய்வர். 9.அதற்கு பின்னர் ஆநிரைகளைக் கைப்பற்றி தம் படைவீரர்களிடம் ஒப்படைப்பர். 10.ஆநிரைகளை மீட்ட பின்பு வேந்தனின் புகழை உரைப்பர். 11.அரிய போரை நிகழ்த்தும்போது சூளுரைகள் செய்வர். 12.கரந்தைப் பூவை சூடிய கொடி ஏந்திய படையில் எதிர்த்து வரும் பகைப்படையினரை ஒரு வீரனே தனித்து நின்று எதிர்ப்பதும், வாளினால் எதிர்ப்படையினரைக் கொன்று தானும் வீரமரணம் அடைவதுமுண்டு. 13.அந்நிலையில் தான் ஒருவனே எதிர்த்து நின்று போரிட்டதனால் அவ்வீரனின் புகழை போற்றுவர்.

14.அதன் பின்னர் வீரமரணம் அடைந்த மாவீரனுக்கு நடுகல் அமைக்கும் பொருட்டு ஓர் கல்லைத் தேர்ந்தெடுத்து, அக்கல்லைத் தூய்மையாக நீராட்டி, அக்கல்லை நட்டும், கோட்டம் அமைத்தும், அக்கல்லையே தெய்வமாகக் கருதி புகழ்ந்துரைப்பர். இறுதியாக நடுகல்லிற்கு பெரும்படையலிட்டு வாழ்த்தி வழிபாடு செய்வர். இவை யாவும் ஆநிரைகளை மீட்கும் பொருட்டு நிகழும் செயல்களாகுமென உரைக்கின்றார் தொல்காப்பியர்.

 “இருளர்கள் தமிழகப் பழங்குடியினர். அவர்கள் தற்போது வடார்க்காடு மாவட்டம் நவிர மலைக் காடுகளில் வாழுகின்றனர். இவர்கள் இக்காலத்தும் மாடுகளைத் திருடிக் காட்டிற்குக் கொண்டு சென்று விடுகின்றனர். இச்செய்தி பழைய ஆநிரைக் களவின் எச்சமாகும்”(அற்றை நாட் காதலும் வீரமும், க.ப.அறவாணன் ப.:229) என்பர்.

இதன் வழி இப்போர் நிகழ்வுகள் நிகழ்ந்ததை கள ஆய்வின் வழியும் உறுதி செய்துள்ளனர். மேலும்,
“பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) பதினெட்டாம் ஆட்சி ஆண்டில் நடந்த நிகழ்ச்சியைத் தண்டம்பட்டு கல்வெட்டு உணர்த்தும். வேணாட்டு ஆந்தைபாடி ஈசை பெருமாண் அரசரின் மருமக்கள் பொற்சேந்தியார். சேந்தியார்தம் சேவகர் பொல்லாத கள்வர். அவர்கள் ஆநிரைகளைக் கவர்ந்து விடுகின்றனர். ஆநிரைகளின் உரிமையாளராகிய நந்தியார் வெட்சியாரை எதிர்த்துப் பொருகின்றனர். மாடுகளை மீட்டு விடுகின்றனர். எனினும் வெட்சியரால் கொல்லப்படுகின்றார். இதனை கல்வெட்டு ‘பொற்சேந்தியாஞ் சேவகருதொறுக் கொண்ட ஞான்று மீட்டு பட்டாண் வேணாட்டு நந்தி (1971-77) என்கிறது”    (அற்றை நாட் காதலும் வீரமும், க.ப.அறவாணன் ப-ள்:226-227)

என்று கல்வெட்டின் கூற்றின் வழியும் இப்போர் நிகழ்வை உறுதி செய்யலாம். மேலும், ஆநிரைகளை கவர்ந்த பின்னர் அதை மீட்கும் படையினரை அழித்து நிரையைக் கவர்ந்தவர்களை எதிர்த்து ஆநிரையை இழந்தவர்கள் பகைபுலத்து சென்று போரிடும்போது, அவர்களே அழிவுக்குள்ளாகுவது போரின் நிகழ்வாயும் அமையும். இப்போர் முறை தனித்தனிக் குழுவாய் வாழ்ந்த மலைவாழ் மக்களிடமே பெரும்பகுதி நிகழ்ந்திருக்கிறது எனலாம்.

 எந்நிலப்பகுதியாயினும் அந்நிலப் பகுதியின் செல்வமாக கருதப்பட்ட பொருட்களையோ அல்லது உயிரினங்களையோ கைப்பற்றி தம் தேவைக்காகவும், தம் குழுவின் தேவைக்காகவும் போரிடுதலே இனக்குழு சமூகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிப் போக்காகும். இத்தகு நிகழ்வுகள் மனித இனம் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட போதும் நிகழ்ந்திருக்கின்றது. மேலும், மலைவாழ் மக்களின் வாழ்வில் முதன்மைச் செல்வமாய் கால்நடைகளே இருந்துள்ளன. இம்மக்கள் வாழ்வில் ‘அரசு’ என்ற நிறுவனம் நன்கு வேறூன்றுவதற்கு முன்னர் நிகழ்ந்த மனிதகுல போர்களுள் முதன்மைப் போராக உலகின் தொடக்கக் கால மனித வாழ்வில் இருந்துள்ளது. மேலும், மனித குலம் உருவான நிலப்பகுதிகள் எங்கும் இப்போர் முறைகளே நிகழ்ந்திருக்கிறது என கருதலாம்.

  இப்போர் அடிப்படையில் உணவுக்கானப் போராட்டமே ஆகும். இது பின்னர் மரபாகவே மாறியிருக்கின்றது. இது தொல் தமிழகத்தில் முதன்மைப் போராகவும் கருத இடமுண்டு. மேலும், தமிழகத்தில் அக்காலத்தில் சமவெளி பகுதியில் ‘அரசு’ நிறுவனம் வேறூன்றினாலும் விவசாயத்திற்கான உற்பத்திப் பொருளாக கால்நடைகள் இருந்திருக்கின்றன. பிற்காலத்தில், இதனாலும் இப்போர் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றது.

 குறிப்பாக பண்டைய இந்தியாவின் சிந்து சமவெளி நாகரீக காலக் கட்டத்திற்கு முன்னரும் கூட இப்போர் நிகழ்ந்திருக்கின்றது என கருத முடியும். ஏனெனில் நாடோடி வாழ்க்கைக்குப் பின்னர் கால்நடை வளர்ப்பும், விவசாய உற்பத்தி ஆகியவற்றையே மனித குலம்  முதன்மை தொழிலாகக் கொண்டிருந்தது. சமூக அறிவியலாளர்களின் கருத்திற்கு ஏற்ப, ஆராய்கையில் கட்டிடக் கலை வளர்ச்சிப் பெற்ற உலக நாகரீகங்களில் ‘சிந்து சமவெளி நாகரீகம்’ இருக்கையில் அதன் கால எல்லை என்று சுமார் கி.மு. 28 ஆம் நூற்றாண்டு என்று வரையறை செய்கையில் அதற்கு பல்லாண்டுக்கு முன்னரே இப்போர் நிகழ்ந்திருக்கின்றன என்றே கருதலாம்.

 சமவெளியின் உற்பத்தி உறவுக்கே முன்னர் நிகழ்ந்த போராதலாலும் ‘அரசு’ கட்டமைப்பு மக்களிடத்தில் முழுமையும் வேறூன்றாத காலக்கட்டத்திலேயே உருவான போராய் இருப்பதாலும், மனிதகுல வரலாற்றில் பண்டைய தமிழகத்தில் நிகழ்ந்த இப்போர், உலக வரலாற்றின் தொடக்கத்திற்கே நம்மை கொண்டு செல்ல இவ்வாய்வு துணை புரியலாம்.

baluprabhu777@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard