New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம் - க.விஜயராகவன்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம் - க.விஜயராகவன்
Permalink  
 


கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்

E-mailPrintPDF

ஆய்வு: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்பண்பாட்டுக் கூறுகளுள் பழக்கவழக்கம் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கும் பாங்குடையது. பழக்கவழக்கம் என்பது வட்டாரத் தன்மையுடையது. ஒரு குடும்பம் அல்லது குழு அல்லது தனிமனிதர் ஆகியோருக்கு உரியதாய் மரபு சார்ந்தும் புதுமை மிக்கதுமாய் மாறி மாறி வரும் தன்மையுடையது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தனக்குரிய வாழ்வியல் முறைக்கு கட்டுப்பட்டு நடக்கவும், மக்களிடம் உள்ள உறவு முறைகளைப் பலப்படுத்தவும், முன்னேற்றங்களை மதிக்கவும் பழக்க வழக்கங்கள் தோன்றின என்றே கூறலாம். இக்கருத்தை, “ மனித சமூக வாழ்க்கையில் பழக்கவழக்கமே முதல் கட்டுப்பாடாகும். மக்கள் எல்லோரும் ஒன்றுபடவும் சாதிப் பஞ்சாயத்து நடவடிக்கைகளை ஒத்த தன்மை பெறச் செய்யவும் சுய எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், ஆட்படாதவர்களை ஒதுக்கித் தள்ளவும், இப்பழக்கவழக்கங்கள் தோன்றின..... ”  என்று பழக்கவழக்கம் தோற்றம் பெற்றதற்குரிய காரணத்தை வரையறுக்கிறார் டாக்டர்  அ. தட்ஷிணாமூர்த்தி அவர்கள். பழக்கவழக்கம் தொடர்பாக தமிழர்கள் கொண்டிருந்த ஒழுக்க நெறிகள் பல கலித்தொகையில் பண்பாட்டின் சுவடுகளாய் விரவிக் கிடக்கின்றன. அவை பின்வருமாறு வரிசைபடுத்தப்பட்டு வெளிக் கொணரப்படுகிறது.

 தலைவன் பழக்கம் :

 தலைவன் பொருள் தேடச் செல்லும் பொழுது, பகைவர் மற்றும் விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு வில், அம்பு, திகிரி, போன்ற கருவிகளை தன்னுடன் எடுத்துச் செல்வது பழக்கம் எனும் கருத்தினை,

 “ நீயே செய்வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழநின்
  கைபுனை வல்வில் ஞாண் உளர்தீயே 
  புனைமாண் மரீஇ அம்பு தெரிதியே
  வலம்படு திகிரி வாய் நீவுதியே ” (கலி. 7)

எனும் வரிகள் உணர்த்துகின்றன.

 ஆறலைக் கள்வர் :

 ஆறலைக் கள்வர், ஆற்றிடை வருவோரிடம் உள்ள பொருள்களைக் கொள்ளை அடிக்கும் பழக்கம் உள்ளவராகவும், தங்களுக்கு வேண்டிய பொருள் வருவோரிடத்து இல்லாவிடினும் அவர்களைக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாகவும், தங்களிடமுள்ள கூரிய அம்புகளினால் அவர்களை துன்புறுத்தும் பண்பினை உடையவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் கலித்தொகையில்,

 “ அற்றம் பார்த்து அழகும் கடுங்கண் மறவர்தாம் 
  கொள்ளும் பொருள்இலம் ஆயினும் வம்பலர் 
  துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து உயிர் வெளவலின் ” (கலி.4)

எனும் வரிகளின் மூலம் அறியலாம். மேலும், ஆறலைக் கள்வர் என்போர் தமது வில்லால் வழிச் செல்வோரைக் கொல்வர். பின்பு கொல்லப்பட்டவரின் உடல்களை இலைக் குவியல்களைக் கொண்டு மறைக்கும் பழக்கம் கொண்டிருந்தனர் என்பதை,

 “ இருமுள் நெடுவேலி போல கொலைவர் 
  கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த ” (கலி.12)

எனும் வரிகளின் வாயிலாக ஆறலைக் கள்வர்களின் செயல்பாடுகளையும், அவர்தம் பழக்கவழக்கங்கள் பற்றியும் அறியலாம். இக்கருத்து அகநானூறிலும் பின்வருமாறு உணர்த்தப்பட்டுள்ளது.

 “ கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
  கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர் 
  படுகளைத் துயரத்த மயிர்த்தலை பதுக்கை ” அகநா-231

எனும் வரிகள் மூலம் அறியலாம்.
 பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் பழக்கம் :
 பகைவேந்தனோடு போரிட்டு வெற்றி பெற்ற பின்னர் பகை வேந்தனின் ஊரையும் நாட்டையும் தீயிட்டு அழிக்கும் பழக்கம் இருந்ததை, 

“ செருமிகு சினவேந்தன் சிவந்து இறுத்த புலம் 
   எரிமேய்ந்த கரி வறல்வாய் ” கலி-13

எனும் வரிகள் சுட்டிக் காட்டுகிறது.

 மறவர் பழக்கம் :

 “ அரிமான் இடித்தன்ன அம்சிலை வல்வில் 
  புரிநாண் புடையின் புறங்காண்டல் அல்லால் 
  இணைப் படைத்தானை அரசோடு உறினும் 
  கணைத் தொடை நாணும் கடுந்துடி ஆர்ப்பின் ” கலி-15

எனும் வரிகள் அம்பு விடுத்தலையே இழுக்கெனக் கருதிய மறவர்கள் நாண் ஒலி எழுப்பியே பகைவர்களை ஓடச் செய்யக் கூடிய பழக்கம் உடையவர்களாக, திறம் மிக்கவர்களாக இருந்தனர் என்பதை உணர்த்துகின்றன.

 மடலேறும் பழக்கம் :

 பண்டையத் தமிழரின் வாழ்வியல் கூறுகளில் மடலேறுதல் என்பதும் ஒன்றாகும். இது களவு கற்பாக மாறுவதற்கான ஒரு அரிய நிகழ்வாகும். தலைவன் தான் விரும்பிய தலைவியை மணந்து அடைய முடியாத நிலையில் மடல் ஏறுவான். இது காதல் வாழ்வில் உள்ள ஒருவகையான உத்தியாகும்.

 கலித்தொகையில் ஏழுப் பாடல்களில் மடல் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. குறிஞ்சிக் கலியில் கபிலர் இயற்றியுள்ள (பா.எண்:58, 61) இரு பாடல்களும், நெய்தல் கலியில் (138, 139, 140, 141, 147) ஐந்து பாடல்களும் மடலேறுதல் பற்றிய செய்திகளை உரைக்கின்றன.

 “ மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை 
  அணிப்பூவை ஆவிரை எருக்கொடு பிணிந்து யாத்த 
  மல்லல் ஊர்மறுக்கின்ற கண்இவட் பாடும் 
  இஃது ஒத்தன் எல்லீரும் கேன்மின் என்று 
  படரும் பனைஈன்ற மாவும் சுடர்இழை நல்கியாள் ” கலி-138

எனும் வரிகள் பனங்கருக்களால் செய்த குதிரை மீது அமர்ந்து, தலைவியின் உருவத்தைக் கிழியிலே வரைந்து கைப்பிடித்து, பல்லோர் அறிய ஊர் நடுவே நாற்சந்தியில் தலைவன் ஆவாரம்பூ, பனைப்பூ, எருக்கம்பூ போன்ற பூக்களால் தொடுத்த மாலையை அணிந்து நிற்பான் என்பதனை தெளிவுபடுத்துகின்றன.

 தலைவன் மடலூர்தல் கண்டு அஞ்சி தலைவியைக் கொண்டு வந்து தலைவனுக்கு மனம் செய்துக் கொடுத்ததை,

 “ வருந்தமா ஊர்ந்து மறுகின் கண்பாடத் 
  திருந்திழைக் கொத்தக் கிழவி கேட்டாங்கே 
  பொருந்தாதார் போர்வல் வழுதிக்கு அருந்திறை 
  போலக் கொடுத்தார் தமர் ” கலி-141:22-25

எனும் கலித்தொகைப் பாடலால் அறிய முடிகிறது. கண்டவர் வருந்துமாறு தலைவன் மடலேறி பாட, அதனைப் பெண்ணைப் பெற்றோர் கேட்டு, போர்த் தொழிலில் சிறந்த பாண்டியனுக்குப் பயந்து பகைவர் கப்பம் கட்டுவதைப் போல, அவர்கள் தம் குலப் பெருமைக்கு இழிவு என அஞ்சி மகளைத் திருமணம் செய்து கொடுத்தனர் என விவரித்துக் கூறுகிறது.

 தலைவி தலைவனது விருப்பத்திற்கு இணங்காத நிலையில் மடலேறுதல் என்பது ஒருதலைக் காதலாகிய கைக்கிளையாக அமைகிறது என்பதனை,

 “ ஒறுப்பின் யான்ஒறுப்பது நுமரை யான்மற்று இந்நோய் 
  பொறுக்கலாம் வரைந்து அன்றி பெரிதாயின் பொலங்குழாய்
  மறுத்து இவ்வூர் மன்றத்து மடல்ஏறி
  நிறுக்குவென் போல்வல் யான்நீ படுபழியே ”கலி-58

தலைவன் மடலேருவதற்கு காரணம் தலைவியே என்று ஊர்மக்கள் தூற்றுவார்கள். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தித் தலைவியை அடையலாம் என்ற தலைவனின் மன நிலையினை இப்பாடல் வழி அறியலாம்.

 “ பல்லார் நமக்கு மடல்மா ஏறி 
  மல்லல் ஊர் ஆங்கண் படுமே ” கலி-61

தலைவி தலைவனின் குறையினைத் தீர்க்காவிட்டால் மடலேறுவேன் என்று தலைவன் தோழியிடம் கூறுவதாக மற்றொரு பாடல் சுட்டுகின்றது.

 தலைவியை விரும்பியத் தலைவன் தன் நாணத்தை இழந்து ஊரார் முன் புலம்புவதையும், தலைவன் முன் படும் பாட்டையும் கலித்தொகைப் பாடல் அழகாக விளக்கிக் காட்டுகிறது.

 “ மாஎன்று உணர்மின் மடல்அன்று மற்றுஇவை 
  பூஅல்ல பூளை உழிஞையோடு யாத்த 
  புனவரை இட்ட வயங்கு தார்ப் பீலி ” கலி-140

மடலேறுவேன் என்ற தலைவன் தன்னைச் சுற்றி நின்ற மக்களைப் பார்த்து, நீ ஒன்று ‘பாடு’ என்று கூறுவீர்கள் ஆயின், எப்பாடியாயினும் சிறிது பாடவும் வல்லேன். ‘அம்மடன்மா மீதிருந்து ஆடுக’ என்று கூறுவீர்கள், ஆயின் ஆடவும் செய்வேன். ஏனென்றால் இது மடல் அன்று குதிரை என்று உணருங்கள். தலையிலும், மார்பிலும் கிடக்கின்ற இவையெல்லாம் பூவல்ல, யான் விரும்பி அணிந்திருக்கும் பூமாலை என்று கூறும் தலைவனின் மன உணர்வினை இக்கலித்தொகைப் பாடல் வரிகள் படம்பிடித்துக் காட்டுகின்றது.

சுடர்கின்ற இழையினை உடைய என்னால் விரும்பப்பட்டவள் என்னைக் காதலித்து தந்தவை வருத்தமும், பனை ஈன்ற மடலால் செய்த குதிரையும், பூளைப்பூவும், பொன் போன்ற ஆவிரம் பூவும் தான் என்று தலைவி தந்த பரிசாக தலைவன் உரைக்கிறான்.

“ படரும் பனை ஈன்ற மாவும் 
  சுடர்இழை நல்கியாள் நல்கியவை ” கலி-138

என்றும்,

 “ அணிஅலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் 
  பிணையல் அம்கண்ணி மிலைந்து மணியார்ப்ப 
  ஓங்கு இரும்பெண்ணை மடல் ஊர்ந்து ” கலி-139

எனும் வரிகள் உணர்த்துகின்றன. சங்க காலத்தில் நிலவிய ஒரு பண்பாட்டு மரபாகிய மடலேறுதலின் மாண்பை இக்கலித்தொகை வரிகள் சுட்டுகின்றன. வள்ளுவரும் இதனை,

 “ தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு 
  மாலை உழக்கும் துயர் ” குறள்-1135

மடலேறுதலோடு, மாலைக் காலத்தில் வருத்தும் துயரத்தை மலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்குத் தந்தாள் என்று கூறும் தலைவனின் எண்ண வெளிப்பாட்டையும் இங்கு காணலாம்.

  தலைவன் மடலூர்ந்து வந்து தன்னைப் பெறுதல் வேண்டுமென்று தலைவியே கூறுவதாக,

 “ பனைஈன்ற மாஊர்ந்து அவன்வர காமன் 
  கணை இரப்பேன் ” கலி-147

எனும் கலித்தொகைப் பாடல் தலைவன் தலைவியை மடல் ஏறிப் பெறும் வழக்கம் பண்டு நிலவியதையும், தலைவி இவ்வாறு இல்லத்தைக் கடந்து வந்து ஊரில் உள்ளாரை விளித்துக் கூறும் விதமாக அமையும் பாடல் ஐந்திணை நெறிபிறந்து விளங்குவதால் இது பெருந்திணை நெறியாகக் கருதப்படுகிறது.

 காதல் எல்லை மீறும்போது தலைவியே தலைவன் மடலூர்ந்து தன்னை அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டும் தன்மையும், அதனால் இது பெருந்திணை நெறிக்கு சான்றாக மாறும் நிலையும் உணர்த்தப்பட்டது. தலைவி தலைவனை விரும்பாத நிலையிலும் ஒரு தலைக் காதல் கொண்ட தலைவன் அவளை அச்சுறுத்தி மணக்கும் விதமாகக் கைக்கிளை மடலேறுதல் அமைவதையும் அறிய முடிகிறது.  

தமர் மறுத்தல், திருமணத்திற்குத் தடை முதலிய காரணங்களால் காதல் நிறைவேறாது போகும் நிலையில் தலைவன் மடல் ஏறுகிறான் என்பது இங்கு புலப்படுத்தப்படுகிறது. தலைவன் தன்னை வருத்திக் கொள்வதன் மூலம் தன்னுடைய நாணத்தையும், ஆண்மையையும் மறந்து தன் காதலின் ஆழத்தை ஊரில் உள்ளோர்க்கு அறிவித்து அவர்களின் அனுதாபத்தினைப் பெற்று தலைவியை மணம் புரியும் உத்தியாகவும் மடலேறுதல் திகழ்கிறது.

 பறையறைந்து தெரிவிக்கும் பழக்கம் :

 ‘பறை’ என்பது தகவல்களை மக்களுக்கு அறிவிக்கும் ஓர் கருவியாக பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. பல்வேறு விழாக்களின் போதும், போர் நிகழ்வுகளின் போதும், அவசர நிலைகளின் போதும் பறையறிவிப்பது வழக்கமாகும். பறை அறிவிக்கும் பழக்கம் சங்ககாலத்தில் இருந்துள்ளதை கலித்தொகை சுட்டிக் காட்டுகிறது.

 “ நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு 
  பறையறைந் தல்லது செல்லற்க ” கலி-56

மதம் கொண்ட யானையை நீராட்டுவதற்கு வெளியே கொணரும்போது அதனை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு பறையறிவித்து மக்களை ‘வெளியே வராதீர்கள்’ எனச் சொல்லும் பழக்கம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

 “ பறையறைந் தல்லது செல்லற்க வெரூஉப்பறை 
  நுவலும் பரூஉப் பெருந்தடக்கை வெருவெரு
  செலைன் வெகுளி வேழம் ” பொருநரா-171-173

எனும் வரிகள் கலித்தொகை உணர்த்திய அதே கருத்தினை வழிமொழிந்து நிற்பதையும் இங்கு கண்ணுரத்தக்கது.

 காமனுக்கு விழா எடுக்கும் பழக்கம் :

 இளவேனிற் காலத்தில்  காமனுக்கு விழா எடுத்து வழிபடும் பழக்கம் பழந்தமிழரிடையே வழக்கத்தில் இருந்த ஒன்றாகும். இதனை கலித்தொகையும் சில இடங்களில் சுட்டிக் காட்ட தவறவில்லை.

 “ நடுக்கம் செய்பொழு தாயின் 
  காமவேள் விழவாயின் கலங்குவள் பெரிதே ” கலி-27

என்றும்,
 “ உறல்பாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள் 
  விறல்இழை யவரோடு விளையாடுவான் மன்னே ” கலி-30

என்றும் காமவேளுக்கு விழாவெடுக்கும் பழக்கம் குறித்து கலித்தொகை கூறுகிறது. காமன் விழாவில் தலைவன் தன் மனைவியான தலைவியை விட்டுப் பிரிந்து, பரத்தையோடு ஆடிப்பாடி விளையாடி மகிழும் பழக்கம் உடையவனாக இருந்துள்ளதை இவ்வரிகள் நமக்கு புலப்படுத்திக் காட்டுகின்றன.

 பிறர் வருத்தம் போக்கும் வழக்கம் :

 “ வாரணவாசிப் பதம் பெயர்தல் ஏதில 
  நீநின்மேல் கொள்வது எவன் ? ” கலி-60-13-14

எனும் வரிகளின் வாயிலாக காசியில் உள்ளவர்கள் பிறரின் வருத்தத்தை தனது வருத்தமாகக் கொண்டு ஒழுகும் தன்மை உடையவர்களாக விளங்கியதை அறிய முடிகிறது.

 தொய்யில் எழுதும் வழக்கம் :
 “ என்தோள் எழுதிய தொய்யிலும் யாழநின் ” கலி-18-3

 என்ற பாலைக்கலியின் பாடல் வரிகள் மூலம் தலைவனைப் பிரிந்த தலைவி, தலைவனின் நினைவாகத் தொய்யில் வரைந்து கொள்வதனை வழக்கமாக கொண்டிருந்தாள் என்பதை அறியலாம்.

 இயற்கையுடன் பேசும் பழக்கம் :

 தனது இன்பத்தை பிறருடன் பகிர்ந்து கொண்டு வாழும் மாண்புடையவர்களாக சங்ககாலத் தமிழ் மக்கள் வாழ்ந்ததை கலித்தொகை சுட்டிக் காட்டுகிறது. தன் இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள இயற்கையை அழைத்துப் பேசுவதும் மக்களின் பழக்கவழக்கமாகவே இருந்துள்ளதை,

 “ ஐயதிங்கட் குழவி வருக எனயான் நின்னை

  அம்புலி காட்டல் இனிது மற்றுஇன்னாதே ” கலி-80-18-19

எனும் பாடல் வரிகளின் மூலம் சங்ககாலத்தில் அம்புலியை அழைத்து தன் இன்பத்தை வெளிப்படுத்தும் பழந்தமிழரின் வாழ்வியல் பாங்கை காண முடிகிறது.

 தமிழர் பண்பாட்டின் அடயாளமான பழக்கவழக்கம் குறித்து கலித்தொகை தெளிவுடன் மொழிகிறது. தங்களது தலைமுறை தவறாது ஒழுகிய, பண்பாட்டின் எச்சமாக விட்டுச் சென்ற மிகச்சிறந்த நற்பண்புகளை பின்வரும் தலைமுறையினர் நன்முறையில் பின்பற்றும் வகையில் கலித்தொகை தொகுத்துரைத்திருக்கும் பாங்கு மேன்மையுடையது! போற்றுதலுக்குரியது!

vmkvragavan@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard